Entertainment Short Stories sirukathai

மலரே முள்ளாகு! (சிறு கதை)




ஒரு அதிகாலை பொழுது அழகாக மலர்ந்திருந்தது. அது ‘திருச்சி’ ஜில்லாவில் உள்ள சின்னஞ்சிறிய மாஞ்சோலை கிராமம்!

கதிரவன் தன் ஒளிக்கற்றைகளை மெல்ல, மெல்ல பூமியின் மீது விரிக்கலானான். என்னற்ற மயில்கள் ஒரே நேரத்தில் தன் தோகையை விரித்து வர்ணஜாலம் காட்டியது போல் ஆயிரக்கணக்கான வண்ணங்களை பூமியின் மீது அள்ளி வீசினான்.
ஜல், ஜல் கொலுசு ஒலிக்க, அந்த வீட்டின் கதவு மெதுவாக திறந்தது. வீட்டின் உள்ளிருந்து நீலவேணி வெளிப்பட்டாள். பாவாடை தாவணியில் ரம்மியமான அழகுடன் அந்த அதிகாலை வேளையில் உதித்த நிலவு போல் அவள் இருந்தாள். அவளுடைய கையில் கோலப்பொடி இருந்தது. சாணம் வைத்து மொழுகி இருந்த வீட்டின் முற்றத்தில்அழகான சிறிய தொரு கோலத்தை தீற்றலானாள்.

ஏய் நீலவேணி உள்ள வாடி? வீட்டில் உள்ளே இருந்து வந்த அந்த சத்தத்திற்கு சொந்தக்காரன் தம்பி தனசேகரன் தான்.

வீட்டினுள் ஆவேசமாக நுழைந்த நீலவேணி கையிலிருந்த கோலப்பொடி கிண்ணத்தை தடாலென்று வைக்க, அதில் இருந்த பொடி இங்குமங்கும் சிதறியது.

டேய் நாயே நாக்கை இழுத்து வைத்துஅறுத்துருவேன் நான் உனக்கு அக்கா ‘டா.’

இருந்துட்டு போ அதுக்கு என்ன இப்போ?

இரு “டி “இன்னிக்கு சோறு எப்படிப் திங்கிறனு பார்க்கிறேன். நீ திங்கிற சோத்துல உப்பையோ மிளகாய்ப் பொடியையோ அள்ளித் தட்றேன்.

ஹி! ஹி!ஹி!ஹி” என்னக்கா இப்படி கோபப்படுற? காரணம் இல்லாம நான் உன்மேல கோபப்படுவேணா?

என்னடா உன் காரணம்? பெரிய புடலங்காய் காரணம்.

ஏய் நீலா? என்ன சத்தம் அங்க வரைக்கும் கேக்குது பொம்பளையா லட்சணமா இருக்க மாட்டியா?

சிடு சிடுத்த முகத்துடன் வந்த அண்ணன் அருணை பார்த்தவுடன் சிறுது பம்மினாள்.

பொம்பள பிள்ளைக்கு முதல்ல அடக்கம் வேணும். நான் வாசல்ல நிக்கிறேன். நீ பேசுற சத்தம் அங்க கேட்குது ரோட்ல போறவன் என்ன நினைப்பான். உன்னை எல்லாம்…
பல்லைக் கடித்தபடி அருண் வர, தன்னை தற்காத்துக்கொள்ள சிறிது பின்னால் நகர்ந்தாள் நீலவேணி.

அண்ணே எப்ப பாரு இந்த ‘குரங்கு’ என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்குதுன்னே.

தம்பி ‘தனசேகரன்’ கூற, அருண் நீலவேணி பக்கம் திரும்பி மேலும் வெறுப்பை உமிழலானான்.

ஆம்பள பையனுக்கு சரிக்கு சரியா பேசுனியா நீ!???

இல்லன்னா? அவன் தான் முதல்ல என்னைய “டி”போட்டு பேசினான்.

‘ஏய்’ உன்னைய எனக்கு நல்லா தெரியும். நீ ஏதாவது சேட்டை , பண்ணாம அவன் எந்த வம்பும் பண்ண மாட்டான்.

ஆமாண்ணே , இங்க பாரு என் பெட் சீட் எல்லாம் ஈரமா இருக்கு தண்ணீரில் நனைந்திருந்த தன் பெட்சீட்டை எடுத்தபடி அண்ணனிடம் புகார் அளித்தான் ‘தனசேகரன்’.

‘டேய் ‘ உன் பெட்சீட் ஈரமானா!! அதற்கு நான் என்னடா செய்ய முடியும்? வெகுண்ட நீலவேணியை பார்வையால் அடக்கினான் அருண்.

இல்லன்னா வாசல் தெழிக்க போறேன்னு சொல்லி தண்ணியை என் மேல ஊத்திட்டு இருக்காண்ணா  என்றான் தனசேகரன்.

‘டேய்’ நான் வேணும்னு உன் மேல தண்ணி ஊத்தல. நான் குடத்த தூக்கிட்டு போகும் போது தெரியாம ஏதாவது பட்டிருக்கும்.

‘சும்மா நடிக்காத” நான் தூங்குவது பொறுக்காமல் நீ வேணும் தான் என் மேல தண்ணி ஊத்துன.




வேணுமுன்னு ஊத்த நினைச்சுருந்தா உனக்கு இந்த தண்ணி ஊத்தி இருக்க மாட்டேன் “டா”. நல்லா கொதிக்க வச்சு அந்த தண்ணிய ஊத்தி இருப்பேன்.

‘ ஏய்’ உனக்கு வாய் அதிகம். அருணின் அந்தக் கத்தலுக்கு பாத்ரூமில் இருந்த ராஜசேகரன் அவசரம் அவசரமாக வெளியே வந்தார்.

டேய் அருண் என்னடா பிரச்சனை இங்க?

உங்க சீமந்த புத்திரி இவளையே கேளுங்கப்பா!

தந்தை ராஜசேகரிடம் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அருண்.

இங்க பாரு பொம்பளையா, லட்சணமா, அடக்க ஒடுக்கமா இருக்க பாரு தேவையில்லாத சத்தத்த வீட்டுக்குள்ள ஏற்படுத்தாத. இன்னொரு தடவை சத்தம் வந்தது தோல உரிச்சுடுவேன்.

நீலவேணிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது கண்ணில் துளிர்த்த அந்த நீரை வெளிக்காட்டி விட மனமில்லாமல் சட்டென சமையலறையில் புகுந்தாள்.

இது ஒன்றும் முதல் முறை அல்ல, இது போன்று பல முறைகள் எப்பொழுது பார்த்தாலும் இதே பதில் பொம்பள புள்ளையா இரு என்ன பதில் இது.

ஆணுக்குப் பெண் எந்த விதத்தில் குறைந்து விட்டாள். அண்ணனும் அப்பாவும் ஏன் தன்னை ஒரு மூன்றாந்தரராக நடத்துக்கின்றனர். தன் ரத்தத்தில் உதித்தவள் என்று ஒரு பொழுதும் தன் தந்தை தன்னை நினைத்தது இல்லையே? உடன் பிறந்தவள் என்ற பாசத்தில் ஒரு பொழுதும் அண்ணன் காட்டிக்கொண்டது இல்லையே? தனசேகரன் சிறுவன் விவரம் தெரியாதவன் அவனைச் சொல்லி குற்றமில்லை.

என்ன சிறுவன் கழுதை? பிளஸ் டூ எக்ஸாம் எழுத போறான்? இவன் வயசு பையன் அவங்க அக்கா தங்கையிடம் எப்படி அன்பை பொழிகிறார்கள்?.

என் வயதுப் பெண்கள் அனைவருக்கும் கிடைக்கும் தந்தை, சகோதர பாசம் எனக்கு மட்டும் ஏன் கிடைப்பதில்லை?

தாயின் பாசத்தையும் உணர முடியாதபடி இறைவன் என்னை தாயில்லாப் பிள்ளை ஆக்கினான்.

நீலவேணிக்கு தன்னிரக்கம் சுரக்க கொப்பளித்துக் கொண்டு வந்தது ‘கண்ணீர்’. ‘ஓ,’என்று கத்தி அழ வேண்டும் என தோன்றியது.

“கூடாது, கூடாது” சத்தமிட கூடாது சத்தமிட்டு அழக்கூட கூடாது. அதற்கும் நீ எல்லாம் பெண் பிள்ளையா என்று கேட்பார்கள்.

“ஏன் அழுதாய் என்று கேட்க மாட்டார்கள் ஏன் சத்தம் மிட்டாய்?’ என்றுதான் கேட்பார்கள்.

தன்னைச் சுற்றிலும் காய்ந்த மரங்களும் மொட்டை கிளைகளும் அழிந்து போன வனமும் இருப்பதாய் நீலவேணி உணர்ந்தாள். தன் தோழிகள் அனைவரும் அழகான சோலை வனத்தினுள் வசிப்பதாய் எண்ணம் கொண்டாள்.

வேணி சாப்பாடு எடுத்துவை? தந்தையின் குரலுக்கு அடுக்களையில் இருந்து சாப்பாட்டு பாத்திரங்களை ஹாலில் எடுத்து அடுக்கலானாள்.

இன்னைக்கு என்னம்மா டிபன் பண்ணி இருக்க?கேட்ட அருணுக்கு பூரி பண்ணி இருக்கேன்ணா.குருமாவும் வெச்சிருக்கேன் பதில் சொன்னாள் நீலவேணி.

தட்டில் பூரியை எடுத்து பரப்பியபடி தந்தையும் மகனும் சாப்பிட ஆரம்பித்தனர். பூரியை பிய்த்து குருமாவில் தொட்டு முதல் வில்லையை வாயில் போட்ட அருண் உடனே முகத்தை சுளித்தான்.

‘ஏய் என்ன குருமா இது?சுத்தமா உரைப்பே இல்ல இதை எப்படி சாப்பிடுவது?’

நீதானே அண்ணா நேத்து காரம் ஜாஸ்தியா இருக்கு உரைப்ப குறைச்சுக்கோ அப்படின்னு சொன்னீயே அண்ணா?




குறைக்க தான் சொன்னேன் ஒன்னுமே இல்லாம வைக்க சொல்லலையே?

நீலவேணி ருசிபார்த்த வரை அதில் உப்பு காரம் அனைத்தும் சரியாக இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது.

நீ நாளையில இருந்து முதல்ல லேட்டா எந்திரிக்கிற பழக்கத்தை விடு. லேட்டா எந்திரிக்க வேண்டியது காலேஜுக்கு போகணும் அப்படி இப்படின்னு அவசரஅவசரமாக என்னத்தையாவது செஞ்சு போடவேண்டியது.

காலை 5 மணிக்கு எழுந்திருப்பது லேட்டாக எந்திரிப்பாதா? சொல்ல துடித்த நாவை மடித்து உதட்டைக் கடித்துக் கொண்டாள் நீலவேணி. அருணுடைய எந்த ஒரு பேச்சிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் பூரியுடன் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தார் ராஜசேகர்.

அவர் எப்போதும் அப்படிதான் அருணும் தனசேகரனும் என்ன சொன்னாலும் சரி தான்.

மணி காலை 8 தொட்டிருந்தது. அப்பொழுதுதான் வாயில் பிரஸை வைத்தபடி பல் துலக்க தயாராகிக் கொண்டிருந்தான் தனசேகரன்.

அப்பா நாளைக்கு நான் கராத்தே கிளாசுக்கு பணம் கட்டணும் அதுக்கு எனக்கு ஒரு ஆயிரம் ரூபா வேணும்.

திக்கித் திணறி தந்தையிடம் தன் தேவையை வெளிப்படுத்தினாள் நீலவேணி.

நீலவேணி அதைக் கேட்கவும் ராஜசேகருக்கு பொறை ஏறவும் சரியாக இருந்தது.

தலையை தன் கையால் தானே தட்டி விட்டுக் கொண்டு டம்ளரில் இருந்த தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டார்.

எதுக்கு உனக்கு இப்ப ஆயிரம் ரூபா? விட்டேரியாக வந்தது அருணின் குரல்.

நான் ஏற்கனவே அப்பாகிட்ட சொல்லிட்டேண்ணா.

சொன்னா பரவாயில்ல இப்ப திரும்ப என்கிட்ட சொல்லு?

நீலவேணி சிறிது சலிப்புடன் சொல்ல ஆரம்பித்தாள். அது ஒன்னும் இல்லண்ணா நாங்க எங்க கராத்தே ஸ்கூல்ல இருந்து சில சாகசங்களை செய்கிறதா இருக்கிறோம்.
நாங்க எல்லாரும் ஒரு டூர் ப்ரோக்ராம் மாதிரி அரேஞ்ச் பண்ணி கோழிக்கோடு போறோம் அங்க இருக்கிற களரில எங்களுடைய திறமையை செய்து காட்ட போறோம். அங்க நாங்க மட்டும் இல்ல வேற நிறைய கராத்தே ஸ்கூல்ல இருந்தும் பிள்ளைங்க வாராங்க. . அங்க நம்ம திறமையை நிரூபிச்சா ரொம்ப பெருமையா இருக்கும். அதுக்கு போக்குவரத்து செலவுக்காக தான் அப்பாகிட்ட ஆயிரம் ரூபா கேட்டேன்.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அருண்

” கிளிச்ச”. என்ற ஒற்றை வார்த்தையை பதிலாக கொடுத்தான்.

வாடிய பூ முகத்தோடு நின்றாள் நீலவேணி.

குபீர் சிரிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினான் தனசேகரன் .

கண்களின் ஓரம் இதோ வந்துவிட்டேன் என்று கூறிய கண்ணீரைத் தடுத்து நிறுத்திவிட்டு
அருணிடம் பேசலானாள்.

‘அண்ணா ப்ளீஸ் அண்ணா’ என்று கெஞ்சலாக கேட்டாள்.
இங்க பார் உனக்கு காசு கொடுக்குறத பத்தி எனக்கு ஒன்னும் இல்ல. நீ எப்ப பார்த்தாலும் பெண் பிள்ளையா நடந்துகிட்ட மாட்டேங்குற. எப்பவுமே ஒரு திமிரோடு தெனாவட்டா நடந்துக்கிற.முதல்ல நான் உன்னை என்ன சொன்னேன். ஹோம் சயின்ஸ் எடுத்து படிக்க சொன்னேன்ல நீ கேட்டியா? இன்ஜினியரிங் தான் போவேனு சொன்ன அதுவும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்… யாராவது பெண் பிள்ளைங்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போவாங்களா? பத்தாததற்க்கு கராத்தே கிளாஸ் வேறு..இதற்கு அப்பா உனக்கு சப்போர்ட்.

அண்ணா என்னோடு காலேஜ்ல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிற பிள்ளைங்க மட்டும் மொத்தம் 100 பேருக்கு மேலேயே இருப்போம்.

இது தான் இந்த திமிர் தான் எனக்கு உன் மேல எரிச்சலை உண்டாக்குது. நீ உன்னைய ரொம்ப பெரியவாள நினைக்கிற எல்லாம் தெரிந்த மாதிரி நடந்துக்குற, பொம்பளையா நடந்துகிட மொதல்ல பாரு.

ராஜசேகரன் நடக்கும் விசயம் எதிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல் பூரியுடனான யுத்தத்தை முடித்து விட்டு கைகழுவி இருந்தார்.

‘அப்பா….. ப்ளீஸ் பா’.. கெஞ்சலான தன்னுடைய விண்ணப்பத்தை தந்தைக்கு மாற்றினாள் நீலவேணி.




இங்க பாரு வேணி அண்ணன் உனக்கு ஏதாவது தப்பான விசயம் சொல்லுவான்னு நீ நினைக்கிறாயா? அவன் எது சொன்னாலும் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவான்.

நீ இப்போ கராத்தே படிச்சி யாருக்கு என்ன ஆகப்போகுது?.

அதுக்கு பதில் நீ இப்போ சமையலோ, ஹோம் மேக்கர் சம்பந்தமாகவோ எந்த விசயமானாலும் நீ காசு கேளு அண்ணணே கொடுப்பான். அண்ணே உன்கிட்ட அதைத்தான் எதிர்பார்க்கிறான்.

அப்பா அதெல்லாம் மேட்டரே இல்லப்பா நான் வானத்தில் பறக்க ஆசைப்படுகிறேன் நீங்க என்னைய வீட்டுக்குள்ள போட்டு பூட்ட நினைக்கிறீர்களா?

இங்க பார் சும்மா நிற்காம ஆகுற வேலைய பாரு.  எங்களுக்கு வேலைக்கு நேரம் ஆயிருச்சு என்று கூறியபடி யூனிபார்மை எடுத்து அணிய தயாரானான் அருண்.

அவன் தன்னுடைய சீருடையில் மூன்று ஸ்டார்களை தாங்கியிருந்தான்.
ராஜசேகரும் வெள்ளை கோட்டை மாட்டியபடி ஹாஸ்பிடலுக்கு செல்ல தயாரானார்.

காவலருக்கான சீருடையை அணிந்து உடனேயே அருணின் முகத்தில் அந்த மிடுக்கும், அந்த கலையும் வந்து அமர்ந்திருந்தது. இப்பொழுது அவனை பார்க்கும் யாரும் அவ்வளவு எளிதில் எந்த விசயத்தையும் அருணிடம் பேசி விட யோசிப்பார்கள். இன்ஸ்பெக்டர் பதவி என்பது சும்மாவா?

இவ்வளவு தூரம் படிப்பறிவு உள்ள குடும்பத்தில் தான் இப்படி ஒரு பிற்போக்கான சிந்தனை. ஆம்! நீலவேணியின் தந்தை ராஜசேகர் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். அண்ணன் அருண் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.

தந்தை, அண்ணன் இருவரும் படித்தவர்களாக இருந்தும் ஏன் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பது நீலவேணிக்கு புரியாத விசயமாகவே இருந்தது.

இந்த தனசேகரன் எந்த ஒரு வகுப்பிலும் ஒழுங்காக படித்ததாக சரித்திரமில்லை அனைத்திலும் முட்டை வாங்குவதில் அவனை மிஞ்ச ஆளே கிடையாது.
ஆனால் அவனுக்கு லட்சக்கணக்கில் பணத்தை டொனேசனாக கொடுத்து சிட்டியின் மிக பெரிய பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதற்கான வாய்ப்பை வாங்கித் தந்திருக்கின்றனர்.

ஆனால் இந்த பொறியியல் படிப்பில் சேருவதற்காக நீலவேணி எடுத்துக்கொண்ட போராட்டத்தையும், உண்ணாவிரதத்தையும் எண்ணி பார்க்கையில் அப்பப்பா!!! எவ்வளவு பெரிய கொடுமை அது.

ஆரம்பத்திலிருந்தே தன் தந்தையின் குணம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் டாக்டருக்கு படித்த தன் தந்தை பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த தன் தாயை மணந்து இருக்க முடியுமா?

பெண் என்பவள் ஆணை பார்த்துக் கொள்வதற்காகவும் அவனை பராமரிப்பதற்கும் படைக்கப்பட்டவள். அவள் தந்தை, சகோதரன், கணவன் என்று ஏதோ ஒரு ஆணை சார்ந்தே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியவள். தனித்து செயல்படும் திறன் இல்லாதவள் அல்லது செயல்பட இயலாதவள் அல்லது செயல்பட கூடாதவள்.

இது தன் தந்தையின் எண்ணமாய் இருந்து. அது அவரிடமிருந்தே தன் அண்ணனுக்கும் பிரதிபளிக்க பட்டு அப்படியே உருவாகி இருக்கிறான். அவனும் இப்பொழுது அப்பாவைப் போல் பத்தாம் வகுப்பு கூட தாண்டாத பெண்னையே திருமணம் செய்ய விரும்புகிறான்.

என்றோ எங்கேயோ எப்போதோ பார்த்தது போல் அவ்வப்பொழுது தன் தாயின் முகம் வந்து போகும். தனசேகரன் பிறந்த பின் வெகுகாலம் அவள் உயிரோடு இல்லை.
தாய்க்கு தன் தந்தையுடனான வாழ்வு எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் அவ்வப்போது தாயின் அந்த மலர்ந்த முகமும் ‘நீலு’ என்று அவள் அழைக்கும் அந்த செல்லமும் நினைவலைகளில் வந்து மோதி தொண்டையில் துக்கப் பந்தை அடைத்து வைக்கும்.

குழப்பத்துடன் நீலவேணி நின்று கொண்டிருக்கும்போதே ராஜசேகரும், அருணும் வேலைக்கு கிளம்பி போய்விட்டார்கள்.




இப்பொழுது தனசேகர் மெல்ல நீலவேணி அருகில் வந்து தன்
தன் இடுப்பால் அவள் மீது மோதி உதட்டை குவித்து வவ்வவ்வ்வவ என்று அழகு காட்டினான்.

நீலவேணி பேசா திருக்கவே ஏய் கோண மூஞ்சி என்ன ஊத்திக்கிச்சா?என்று வெறுப்பு ஏற்றினான்.

ஆத்திரத்தில் கையில் கிடைத்ததை நீலவேணி எடுக்க உடனே அம்பேல் ஆனான்.

அனைவரும் சென்ற பிறகு வீட்டிலுள்ள பிற வேலைகளை ஒதுங்க செய்துவிட்டு கல்லூரியை நோக்கி கிளம்பலானாள் நீலவேணி.

வீட்டில் இருந்து கல்லூரிக்கு வெளியேறினாள் தன்னுடைய ஸ்கூட்டியை கல்லூரி செல்லும் பாதையில் செலுத்தும் பொழுது அவளது சிந்தனை கராத்தே பள்ளியிலேயே இருந்தது. என்ன பதில் சொல்வது. இந்த கராத்தே பள்ளியில் அவர்கள் என்னை கோழிக்கோடு வராமல் விட போவது இல்லை.

சரி மீண்டும் ஒருமுறை அப்பா அண்ணனை முட்டி பார்க்கலாம் எப்படியும் கோழிக்கோடு போயே ஆக வேண்டும். முடிவெடுத்த பின் கல்லூரிக்குள் நுழைந்தாள்.

கல்லூரி முழுவதும் ஏதோ தீப்பற்றியது போன்ற ஒரு பரபரப்பு. மாணவ மாணவிகள் எவரும் வகுப்பறைக்குள் இல்லை. இயல்பான நிலையில் கல்லூரி வளாகமும் இல்லை. ஏதோ ஒரு பெரிய யுத்தத்திற்கு தயாரானது போல் கல்லூரி வளாகம் இருந்தது.

என்ன பிரச்சனை இங்கே? அறிந்து கொள்ளும் ஆவலுடன் தன் தோழியரை கண்களால் துழாவ ஆரம்பித்தாள் நீலவேணி.

அதோ, அந்த உசிலை மரத்தின் அடியில் அவள் தோழிகள் அனைவரும் கும்பலாய் நின்றிருந்தனர்.

ஸ்கூட்டியை அதற்குண்டான இடத்தில் நிறுத்திவிட்டு தன் தோழியரை நோக்கி விரைவாக அடிகளை எடுத்து வைத்தாள்.

அந்த கூட்டத்தை நெருங்கியவுடன் தன் தோழி பவித்ராவின் தோளை பற்றியபடி ‘ஏய்’ பவி’! என்னடி பிரச்சனை இங்க? என்று கேட்க பவி என்று அழைக்கப்பட்ட பவித்ரா ஏய் மரமண்டை உனக்கு விசயமே தெரியாதா?

இன்று ஊர் முழுக்க நம்ம காலேஜ் பத்தின பேச்சு தான் அதாவது தெரியுமா?என்றாள் பவி.

இடை புகுந்த மணிமேகலை பத்து நிமிஷத்துக்கு முன்னாடி சன் டிவில கூட பிளாஷ் நியூஸ் ஓடுச்சிடி என்றாள்.

‘ஏய் ‘நம்ம நிலா மேடம் நியூஸ் சேனல் எல்லாம் பார்க்க மாட்டாங்க “டி ஒன்லி கராத்தே, குங்பூ இந்த மாதிரி ஆக்சன் சேனல் மட்டும் தான் டி”, என கலாய்ப்பில் இறங்கினாள் மேகலா.

ஏய் வேண்டாண்டி ஓட்டாதே! விசயத்தைச் சொல்லு
என்றாள் நீலவேணி.

என்னத்த டி விசயத்தைச் சொல்ல சொல்ற என்றாள் மேகலா.

நீ முதல்ல விசயத்தை சொல்லுடி என்று அதட்டினாள் நீலவேணி.

‘நாங்க எல்லாம் சினிமாவுக்கு போனா நீ வர மாட்ட, வீட்ல டிவி பாக்க மாட்ட, அப்படி என்னடி நீ உங்க வீட்டில நல்ல பிள்ளை வேஷம் போடுறியா?’ இது அபர்ணா.

“ஓ ஓ”!…! நான் சினிமா பார்த்திட வேண்டியது தான். எங்க வீட்டுல ஓடுற சினிமாவே பெரிய சினிமாவா இருக்கு இதுல இது ஒண்ணுதான் குறைச்சல். வெறுப்பேத்தாத விசயத்தைச் சொல்லடி கருவாச்சி என சற்றே கனத்த குரலில் கேட்டாள் நீலவேணி.

அபர்ணா??நீலவேணியுடன் ஒரு நேரடி யுத்தத்திற்கு தயாராக அவளை தடுத்தபடி பேசலானாள் பவித்ரா

அடியே இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம காலேஜ்க்கு அனேகமா போலீஸ் வருவாங்க.

பவித்ரா பேச ஆரம்பிக்கவும் கல்லூரி வளாகத்தில் இருந்த ஸ்பீக்கர்கள் கரகரத்த கொண்டு ஒளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

ஹலோ! பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எல்லாரும் அவங்க அவங்க கிளாஸ் ரூமுக்கு போங்க இங்க யாரும் கிரவுண்ட்ல நிக்க கூடாது என்று கல்லூரி முதல்வரின் குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்க இதர ஆசிரியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி மாணவ, மாணவிகளை வகுப்பறைக்குச் செல்ல சொல்லும் பணியை மேற்கொண்டனர்.

ஐந்தே நிமிடத்தில் அந்த மைதானம் காலியாக இருந்தது. மாணவர்கள் அனைவரும் தம் வகுப்பறைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் வகுப்பு எடுக்க ஆசிரியர்கள் எவரும் வருவதாய் இல்லை.

‘சொல்லுடி? என்ன விசயம் அருகிலிருந்த பவித்ராவை மிரட்ட ஆரம்பித்தாள் நீலவேணி’.

அது ஒன்னும் இல்லடி அந்த பைனல் இயர் குரங்கு இருக்குல்ல?

நம்ம காலேஜ்ல பைனல் இயர்ல நிறைய குரங்கு இருக்கு, நீ எந்த குரங்க சொல்றேன்னு எனக்கு எப்படி தெரியும்?




அடியே நான் சொல்ற குரங்கு சிவில் டிபார்ட்மெண்ட்ல இருக்குதுடி மண்டு!

“ஸ்ஸ்..  ஓ ஓ ‘அடட…! அந்த குரங்கா அது ஸ்பெஷல் குரங்கு ஆச்சே. மத்ததெல்லாம் பிறக்கும்போது மனிதனாகத்தான் பிறந்தது. பெறவு பையப்பைய குரங்கா மாறினது. இது பேஷிக்கவே குரங்கு தானடி.

‘ஆங் ‘….அதே குரங்கு தான் அது பண்ணின வில்லத்தனம் தான் இப்ப நடந்துகிட்டு இருக்கிற பிரச்சனை என்றாள் பவி.

என்ன பவி சொல்ற புதுசா? என்னடி பண்ணி தொலைச்சிச்சி அந்த குரங்கு?!

மீண்டும் வகுப்பறையில் இருந்த ஒலி பெருக்கி கரகரத்தது. அதில் இருந்து முதல்வரின் குரல்!

“ஆல் ஸ்டுடென்ட்ஸ் கீப் சைலன்ஸ், யுவர் புரபசர் வில் கம் டு யுவர் கிளாஸ், பிளீஸ் பி கொய்ட்” .

முதல்வரின் இந்த அறிவிப்பு ஒலிக்கவும் கல்லூரி வளாகத்திற்குள் காவல் வாகனம் நுழையவும் சரியாக இருந்தது.

கல்லூரி வளாகத்தில் நுழைந்த அந்த பொலிரோ ஜீப்பில் இருந்து தோலில் மின்னிய மூன்று நட்சத்திரங்களுடன் மிடுக்காக இறங்கினான் அருண்.

போலீஸ் ஜீப் வந்தவுடனேயே கல்லூரி வளாகத்தில் மீண்டும் பரபரப்பு மாணவர்களின் பேச்சு சத்தத்தால் எழுந்த சலசலப்பு.

அருணுடன் வந்திருந்த நான்கு ஐந்து காவலர்கள் சப் இன்ஸ்பெக்டர் உட்பட அனைவரும் ஜீப்பிலேயே இருக்க அருண் மட்டும் கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றான்.

அண்ணன் இறங்குவதையும் அவன் பிரின்ஸ்பல் ரூம் பக்கம் போவதையும் கவனித்தபடி இருந்த நீலவேணிக்கு அண்ணன் ஏன் வந்திருக்கிறான்? என்று குழப்பம் இருந்தது.

அருண் பிரின்ஸ்பல் அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலே கல்லூரியில் வகுப்பறையில் இருந்த அனைத்து ஸ்பீக்கர்கள் மீண்டும் ஒருமுறை தொண்டையை கனைத்துக் கொண்டன.

இப்பொழுது அந்த ஒலிபெருக்கிகள் தங்களுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத புதியதான ஒரு குரலை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க தயாராயின.

ஒலிபெருக்கியின் வழியாக அருணின் கம்பீரக் குரல் வெளியே வந்தது.

ஹாய் பிரண்ட்ஸ் அட்டகாசமாக பேச்சை ஆரம்பித்தான் அருண்.

உங்க எல்லாருக்கும் விசயம் தெரிந்திருக்கும். இருந்தாலும், சொல்ல வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். எனக்கு உதவ வேண்டிய இடத்துல நீங்க இருக்கீங்க. ‘சோ’, காவல்துறை உங்கள் நண்பன். நண்பனுக்கு உங்கள் உதவி அவசியம் நண்பர்களே.

‘ரைட்’ ஓகே! நான் முதல்ல விசயத்தை சொல்லிடுறேன் உங்க காலேஜ்ல சிவில் டிபார்ட்மெண்ட்ல சேகர், பிரவீன், பிரசன்னா, விமல், மற்றும் மாரிச்சாமி இவங்க எல்லாரும் போலீஸாரால் கிரிமினல் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு கொண்டு இருக்காங்க. இதில மாரிச்சாமி போலீஸ்ல மாட்டிகிட்டான். மீதம் இருக்கிற 4 பேரை போலீஸ் ரொம்ப தீவிரமா தேடிக்கிட்டு இருக்கு.

ஏய் ஒரு குரங்கு என்று சொன்ன குரங்கு கூட்டத்தையே போலீஸ் தேடுது போலையே பவித்ராவின் காதை கடித்தாள் நீலவேணி.

இவங்க மேல என்ன கேஸ் அப்படிங்கறது உங்க எல்லாருக்குமே ‘மே பி’ தெரிஞ்சுக்கலாம். இருந்தாலும் நானும் சொல்றேன். இவங்க ஐந்து பேரும் சேர்ந்து இவங்க தெருவுல இருக்கக்கூடிய 14 வயது சிறுமி ஒருத்திய பாலியல் சீண்டல் செய்திருக்காங்க.

இவங்க செஞ்ச இந்தக் கிரிமினல் வேலை வெளிய தெரிஞ்சு, போலீஸ் இவங்க செல்போன சோதனை பண்ணினப்போ அதுல ஏகப்பட்ட பெண்களோட புகைப்படங்கள் மற்றும் வீடியோ அவ்வளவும் ‘ஆபாசம், ஆபாசம், ஆபாசம்’.

இந்த காலேஜ்ல படிக்க கூடிய சில பெண்களுடைய வீடியோஸ் கூட அதில் இருக்கலாம். இப்போ நான் இந்த காலேஜ்ல ஸ்போர்ட்ஸ் ரூம்ல நான் மட்டும் இருப்பேன். நீங்கள் எல்லோரும் தனியா என் கிட்ட வரலாம், வந்து அந்த கிரிமினல்ச பாத்தின தகவல் தெரிந்திருந்தா சொல்லலாம்.

பிரண்ட்ஸ் நல்லா கவனிங்க நீங்க இதெல்லாம் ஒரு மேட்டரா? அப்படின்னு நினைக்க கூடிய ஒரு விசயம் கூட போலீசுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கும். அதனால, தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ஸ்டூடண்ட்ஸ் அதாவது இந்த காலேஜ்ல இருக்கக்கூடிய ஆயிரம் ஸ்டூடண்ட்சும் என்ன செய்யணும்னா,நீங்க என்கிட்ட தனியா பேசனும்.

நீங்க என்ன விசயம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்க தான் சொன்னீங்க என்பதை வெளியே வராமல் பாதுகாப்பா வைக்கிறது என் பொறுப்பு.

புரிஞ்சிக்கிட்டிங்கலா பிரண்ட்ஸ், நீங்க விரும்பினா தனியாவும், இல்லேன்னா இரண்டு, மூன்று பேர் சேர்ந்து என்னை பாருங்கள்.




எனக்குத் தேவை எல்லாம் அந்த கிரிமினல்ஸ் பத்தின தகவல் உங்கள பத்தின வீடியோஸ் இருந்தா அத டெலிட் பண்ணிடலாம் வெளியே தெரியாது.

நான் இந்த விசயத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறது காரணம் அவங்க இந்த பாலியல் குற்றச்சாட்டு மட்டும் இல்ல தேச விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சோ, இதுக்குமேல நான் எந்த விளக்கமும் தர போறது இல்ல. நான் ஸ்போர்ட்ஸ் ரூம்ல வெயிட் பண்றேன் நீங்க ஒவ்வொருத்தரா விரும்பினால் இரண்டு, மூன்று பேரும் சேர்ந்து என்னை பார்க்கலாம்.

ஒலிபெருக்கி தன் சத்தத்தை நிறுத்திக்கொண்டது. மாணவர்கள் வகுப்பு வாரியாக தங்கள் வகுப்பு ஆசிரியர்களால் அருணை பார்க்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேரம் பையப்பைய நழுவ ஆரம்பித்தது. அருணை பார்த்து விட்டு வெளியே வந்த பல்வேறு பெண்களின் முகத்தில் நிம்மதி, பெருமூச்சு, அமைதியும் தவழ்ந்தது.

பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சில பேர் தங்கள் இருதய பாரத்தை இறக்கி வைத்த ரீதியிலேயே இருந்தனர்.

இப்பொழுது நீலவேணியின் முறை. பையப்பைய நடுக்கத்துடன் அண்ணனை பார்க்க சென்றாள்.

காலேஜில் வைத்தும் இவன் நம்மை திட்டுவானோ என்ற எண்ணம் நீலவேணியின் மனதில் இருந்தது.

நீலவேணி அறைக்குள் வந்தவுடன். அருண் அவளைப் பார்த்து பெண்கள் ஏன் பெண்களாய் இருக்க வேண்டும்னு சொன்னேன் என்று புரிகிறதா உனக்கு? என்றான்.

உன் கல்லூரியில் உள்ள எத்தனையோ பெண்கள் இன்று என்னிடம் கதறி அழுது இருக்கின்றனர். இது போன்ற இழிநிலை வரக்கூடாது என்று தான் உன்னை பெண்ணாய் இருக்கச் சொல்கிறேன். புரிந்து கொள்,! நீ போ அவளிடம் எந்த கேள்வியையும், பதிலையும் எதிர்பார்க்காமல் ஆணையிட்டு வெளியே துரத்தினான்.

மேலும் பல மாணவ மாணவியர்களை சந்தித்த பிறகு தன்னுடைய ஜீப்பில் ஏறி தன்னுடைய அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தான்.

உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தாள் நீலவேணி.

அருண் காலேஜ் விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே கல்லூரி முடிந்ததற்கான மணி அடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அருணின் வரவைப் பற்றி பேசிய வண்ணம் தங்கள் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தனர்.

நீலவேணி மட்டும் வீட்டிற்கு செல்லும் எண்ணமில்லாமல் அருகில் இருந்த காமராஜர் பூங்காவிற்கு சென்றாள்.

பூங்காவில் தான் எப்பவும் அமரும் அந்த மகிழ மரத்தின் அடியில் உள்ள சிவப்பும் ஊதாவுமான வண்ணமுடைய கல் பெஞ்சில் அமர்ந்தாள். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு இருந்தாள்.

என்ன பேச்சு இந்த அண்ணனுடையது எத்தனையோ பெண்கள் அவனிடம் கதறி அழுதால், கோபம் அந்த காமாந்தகாரனின் மேல் அல்லவா வரவேண்டும். அதைவிடுத்து அதைக் காரணம் காட்டி பெண்ணாய் நடந்துகொள் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இதுபோன்ற பொறுக்கிகளுக்காக பெண்கள் தங்கள் சுதந்திரத்தை தொலைத்து அடிமைத்தனமாய் அடைந்து கிடக்க வேண்டுமா?

ஏதேதோ குழப்பமான சிந்தனையுடன் அமர்ந்திருந்த நீலவேணி நேரம் செல்வதை கவனிக்கவில்லை. அருகில் இருந்த செல்போன் ஒலித்த உடன் தான் சுயநினைவிற்கு வந்தாள்.

செல்போனின் டிஸ்பிளேயில் ராஜசேகரன் சிரிப்புடன் நின்றிருந்தார். அந்த தொடுதிரை நேரம் மாலை ஏழை தாண்டிவிட்டது நினைவுபடுத்தியது.

ஓஹோ கையை உதறிக் கொண்டாள் நீலவேணி. மணி ஏழு ஆயிருச்சா அதுதான் அப்பா போன் போடுறார். இன்னைக்கு திரும்பவும் அபிஷேகம் தான். பரபரப்பாக போனை கையில் எடுத்தாள்.




நீலா எங்கமா இருக்க? எதிர்முனையில் ராஜசேகரின் குரல் ஒலித்தது.

சாரிப்பா நான் இங்க பக்கத்துல பார்க்குக்கு வந்தேன். நேரத்தை கவனிக்காம விட்டுட்டேன்.

அண்ணன் அங்கே இருக்கானாம்மா  ?என்றார்.

அண்ணனா ..!… !? அண்ணன் எங்க இருக்கான்? ஏம்பா என்ன விசயம்?.

அது ஒன்னும் இல்லம்மா உங்க காலேஜ்ல இருந்து வெளியேறி அதுக்கு அப்புறம் அவன் போலீஸ் ஸ்டேஷன்ல பெர்மிஷன் போட்டிருக்கிறான். எங்கேயோ அண் யுனிபாம்ல வெளியே போய் இருக்கிறான். இப்போ எங்க போனான்னு தெரியலை இப்போ ஸ்டேஷனிலிருந்து உடனடியா அவன பாக்கணும்னு சொல்றாங்க. அவங்களுக்கும் அவன் எங்க போனான்னு தெரியலை. அவனுக்கு கால் பண்ணா போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு. ஒரு வேலை அவன் உன்கூட எங்கயாவது வந்திருப்பானு தான் உன் உன் நம்பருக்கு கூப்பிட்டேன்.

இல்லப்பா அண்ணே காலேஜ்ல இருந்து கிளம்பி போனதுக்கப்புறம் தான் நான் வெளியே வந்தேன்.

ஓ அப்படியா? இல்லம்மா அப்பாவுக்கு மனசு ஏதோ பண்ற மாதிரி இருக்கு. அண்ணே எத்தனையோ தடவை எவ்வளவோ வேலையா வெளிய போய்விட்டு வீட்டுக்கு வராம கூட இருந்திருக்கான். அப்பல்லாம் எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனா இப்ப என்னவோ சொல்ல தெரியலம்மா அப்பாவுக்கு!..

அப்பா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்தில அண்ணன் வீட்டுக்கு வந்துடுவான். அண்ணே எங்க போய் இருக்கானு நானும் பார்க்கிறேன்.

சொல்லியவுடன் ராஜசேகரின் பதிலை எதிர்பார்க்காமல் போனில் தொடர்பை துண்டித்தாள் நீலவேணி.

ஏனென்றால் அந்த செய்தியை கேட்கும் பொழுது யாரோ அவளுடைய இருதயத்தை கைகளால் பிசையும் போது ஏற்படும் ஒரு வேதனை ஏற்பட்டது. அதை தந்தையிடம் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் அவள் தொடர்பை துண்டித்தாள்.

அவள் உள்ளுணர்வு அவளுக்கு ஒன்றை கூறிக்கொண்டே இருந்தது அது உன் அண்ணன் ஆபத்தில் இருக்கிறார் என்று.

தலையை உழுக்கி சிந்தையை தெளிவாக்கிக் கொண்டாள் நீலவேணி.

அண்ணன் எங்கே போயிருப்பான் அவனுக்கு என்ன பிரச்சனை?

இன்னைக்கு காலேஜ்ல சொன்னானே அந்த பிரச்சனையாதான் இருக்கணும். மாரிச்சாமியை அரஸ்ட் பண்றதும், புல்லபூச்சியை நசுக்குவதும் ஒன்னு அது ஒரு டம்மி பீசு. மித்த நாலு எருமைகள் இருக்குல்ல அதுனால அண்ணனுக்கு ஏதாவது…

இந்த எண்ணம் மனதில் வந்தவுடனேயே சிந்தனைகளை வேறு பக்கம் திருப்பினாள். இந்த நாய்களை அவளுக்கு நன்றாகவே தெரியும் எத்தனையோ முறை நீலவேணி இடம் வாலாட்ட பார்த்து மூக்கையும் சேர்த்து வெட்டி இருக்கிறாள்.

இதுங்க எங்க இருப்பானுங்க இதுங்களோட மறைவிடம் எது? எல்லாமே நீலவேணிக்கு ஓரளவு தெரியும். மாரிச்சாமி அவ்வப் பொழுது உளறும் உளறல் இவை.

தேச விரோதிகளாய் அவர்கள் மாறி இருப்பதாய்ச் சொன்னானே. அவர்கள் அவ்வளவு தூரத்திற்கு ஒர்த் இல்லையே.ம். ம். செய்வானுங்க செய்வானுங்க அந்த நாய்கள் எல்லா வேலையும் செய்வானுங்க.

இந்த எண்ணம் மனதில் தோன்றியவுடன் நீலவேணிக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவள் உடனே எழுந்துகொண்டாள். அவள் சிந்தனையில் அவர்கள் இருப்பதற்கு உண்டான வாய்ப்பு உள்ள இடங்கள் விரிய ஆரம்பித்தன.

ஸ்கூட்டியை பட்டனை அழுத்தி கதறக் செய்தாள்.ஸ்கூட்டி சாலையில் வழுக்கிக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.




நீல வேணியின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அவள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை அவளால் நெருங்க முடிந்தது.

காவிரி ஆற்று படகையில் சகதிகள் நிறைந்து, இரண்டு மூன்று புதைகுழிகளை உள்ளடக்கி இருக்கும் அந்த இடம் சாதாரண பொதுமக்களை அச்சப்பட செய்வதாய் இருக்கும்.

ஆனால் இந்த எருமை மாடுகள் மனிதர்கள் லிஸ்டில் வராததால் இவை இங்கே அடிக்கடி சுற்றி கொண்டு அலையும்.

ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் சகதிகள் நிறைந்த அந்த பகுதியை கடந்து சென்றாள். இடதுபுறம் பனைமரங்கள் நிறைந்த ஒரு தோட்டம் ஆள் அரவமின்றி காணப்படும். அது யாரும் நட்டு வளர்த்து உருவாக்கிய தோட்டம் அல்ல காட்டான் போக்கில் தானாக வளர்ந்தது . அந்த இடம் ஊர் பண்ணையார் மாணிக்கவாசகருக்கு சொந்தமானது.

அவர்கள் யாரும் இந்த தோப்பு பக்கம் வருவதில்லை. சகதிகள் சூழ்ந்திருக்க நடுவில் மேடான இடத்தில் அமைந்திருந்த இந்தத் தோப்புக்கு பாதை கிடையாது.

அதனாலேயே இங்கு எவரும் வருவதில்லை.ஆனால் சுற்றியிருக்கும் சகதி காட்டையும் புதைகுழிகளையும் கடந்து உள்ளே வந்தால் அந்த சின்னஞ்சிறிய பனந்தோப்பு. அது ஒரு ரம்யமான இடமே.

இப்பொழுது அந்த பனந் தோப்பு இருக்கும் சகதி அருகிலே நீலவேணி தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.

கரையை சுற்றிலும் உற்று நோக்கிய போது படகு ஒன்று தோப்பு கரையில் இருப்பதை கண்டாள்.

அடடா!!… அந்தக் கழிசடைகள் இங்கதான் இருக்கு போல. இருள் கவிழத் தொடங்கியிருந்த அந்த வேளையிலே அந்த சகதி குழிக்குள் தன் அண்ணனின் புல்லட் வாகனம் கிடப்பதையும் கண்டாள்.

நெஞ்சம் லேசாக படபடக்க ஆரம்பித்தது. இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும் திரும்பிப் போக வேண்டுமா? உதவிக்கு யாரையும் அழைக்கலாமா? அல்லது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா?. என்ன செய்ய வேண்டும்.

தன் செல்போனை தேட அதை பார்க் பெஞ்சிலேயே வைத்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது. தன் மண்டையில் தானே கொட்டிக் கொண்டாள்.

இந்த இடத்தை சுற்றிலும் சுற்றிவர 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு மனித சஞ்சாரமும் கிடையாது.

நான் போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வருவதற்குள் அண்ணனுக்கு என்ன ஆகுமோ தெரியாது. நீலவேணி உடனடியாக அண்ணனின் முகத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சரி நாம் பனத் தோப்பிற்குள் நுழைய வேண்டியது தான். எப்படி போவது? சிந்திக்கலானாள் நீலவேணி்.

அப்பொழுது எதிரில் தோப்பில் இருந்து படகு கிளம்புவது தெரிந்தது. நீலவேணி அருகே இருந்த புதரில் தன்னை மறைத்துக் கொண்டாள். தன் ஸ்கூட்டியை திரும்பிப்பார்க்க யார் கண்ணிலும் நான் பட்டு விட மாட்டேன் நீ தைரியமாக இரு என்று சொல்வது போல் அவளுடைய கண்களுக்கே அது தெரியவில்லை.

இப்பொழுது துடுப்பு அசைக்கும் ஒலி கேட்க ஆரம்பித்தது. படகு பையப்பைய இந்தக் கரைக்கு வர ஆரம்பித்தது.

நீலவேணியின் கண்கள் கழுகின் கண்களை ஒத்து இருந்தது. அவள் தன் கண்களை விரித்துக்கொண்டு இருளில் துழாவினாள். ஆஹா வந்து கொண்டிருப்பவன் பிரவீன்.

‘ஐத்தலக்கடி’ வாராயா மகனே, “வா” நீலவேணி எந்த ஒரு சூழ்நிலைக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.

படகு கரையை அடைந்தது. பிரபலமான ஒரு தமிழ் படத்தின் பாடல் ஒன்றின் மெட்டை விசிலில் பொருத்தியபடி அசட்டையாக நடந்து வந்தான் பிரவீன்.

அங்கே மற்றொரு புதர் மறைவில் இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை வெளியில் எடுத்தான்.

அடடா! இந்தக் காட்டில் ஒவ்வொரு புதருக்கு பின்னாலும் ஒவ்வொரு வண்டி இருக்கும் போலவே மனதிற்குள் எண்ணமிட்டாள் நீலவேணி.
அவன் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்ய அந்த தருணத்திற்காக காத்திருந்த போது ஒரே பாய்ச்சல்ல்ல்….

அவனால் சரசரக்கும் ஒலியை கேட்பதற்கும் அது யாரென்று சிந்திப்பதற்கு ஒரு வினாடி நேரம் கூட அவனுக்கு கொடுக்க தயாராய் இல்லை நீலவேணி.




அது கொரில்லா தாக்குதலை ஒத்திருந்தது. அவன் கத்தும் இடமின்றி சரியாக அவனது கழுத்துப்பகுதியில் அந்த கராத்தே வெட்டை பதித்திருந்தாள் அந்த கராத்தே பெண்.

தாக்கியது யார்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்னரே சுயநினைவு இழந்து அறுந்த பட்டம் போல் கீழே விழுந்தான் பிரவீன்.கீழே விழுந்து கிடந்த பிரவீனின் முன்பு நின்று உதடுகளை குவித்து உச்சுக்கொட்டி தன் வருத்தத்தை வெளிப்படுத்தினாள்.

அருகில் இருந்த கொடிகளை எடுத்து அவன் கை, கால்களைக் கட்டி அதை கழுத்துடன் சேர்த்து சுற்றி வாயில் இலை தளைகளை திணித்து அடைத்து புதருக்குள் அவனை உருட்டித் தள்ளினாள்.

வாரேண்டா! பிரவீன்… பாம்பு எதுவும் புடுங்காமல் இருந்தால் நீ உயிரோட இருந்தா மீண்டும் பார்க்கலாம்.

பிரவீனிடம் விடைபெறும் பாவனையில் சொல்லிவிட்டு படகில் ஏறி அமர்ந்து படகை செலுத்த ஆயத்தமனாள்.

தண்ணீரில் படகு செல்லும்பொழுது எழுப்பும் ஒலியானது கிளிக்.. கிளிக்.. சலப்ப்ப்.. என்று சத்தம் இருக்கும். ஆனால் இந்த சகதி குழியில் படகை தள்ளும் போது ஏற்படும் ஒலி அது போல் இல்லை. இது சிறிது வித்தியாசமாக சதக் சதக் சதக் என்று கேட்டது.

அந்த சத்தம் அந்த இரவின் அமைதியை குலைப்பது போல் இருந்தது. அது அக்கறையில் இருப்பவர்களை உஷார் படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் நீலவேணி நிதானித்தாள்.

இப்பொழுது சகதிக்குள் இருந்து துடுப்பை வெளியே எடுக்காமல் துடுப்பை சாதிக்குள்ளேயே வைத்து அந்த சகதி பிடிப்பில் படகை முன்னோக்கித் தள்ளினாள். இந்த முறையில் படகு செல்வது மிகவும் மெதுவாகத்தான் இருந்தது ஆனால் முற்றிலும் சத்தமில்லாமல் படகு முன்னேற ஆரம்பித்தது.
இப்பொழுது படகு அக்கறையை நெருங்கியிருந்தது.
நீலவேணி கண்களை மிகவும் கூர்மையாக்கிக் கொண்டாள். சுற்றிலும் யார் கண்ணிலும் தான் பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

படகு கரையை தொட்டது. படகிலிருந்து தன் பாதம் தரையில் வைக்கும்பொழுது படகு, எந்தவித ஒலியையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நீலவேணி எச்சரிக்கையாய் இருந்தாள்.

கரையில் இருந்ததை விட இங்கு ஏகப்பட்ட புதர்கள் இருந்தன. பனைமரங்கள் அடியில் முழுவதுமே புதர்கள் மண்டிக் கிடந்தது. எதிரில் இருக்கும் ஆட்கள் கூட தெரியாத அளவிற்கு புதர்கள் உயரமாகவும் அகலமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்தன. இப்பொழுது நான் என்ன செய்வது எப்படி இந்த தோப்புக்குள் பிரவேசிப்பது இங்கு பாதை என்று ஒன்று இருப்பது பகலிலும் தெரியாது போலவே?என்று அவளுக்குள் பேசிக் கொண்டாள்.

இந்த அர்த்த ராத்திரியில் இந்த இடத்தில் வந்து தனியாக மாட்டிக் கொண்டோமோ! தவறுதலான முடிவை எடுத்துவிட்டோமோ?என நீலவேணி ஒருவினாடி திகைத்தாள்.
நீலவேணியின் அந்தத் திகைப்பு ஒரு வினாடி நேரம் தான். ஏதோ ஒரு சக்தி அவளை ஆட்கொள்ள டக் என்று தன்னை தேற்றிக் கொண்டாள். உடனடியாக முடிவு ஒன்றையும் எடுத்தாள்.

அங்கு இருந்த பணை மரமொன்றில் விறுவிறுவென்று தேர்ந்த மரம் ஏறுபவர்கள் போல் ஏறினாள்.




அவள் அவ்வாறு மரத்தில் ஏறும் பொழுது ஒரு அணில் மரத்தில் ஏறும் பொழுது என்ன ஓசை ஏற்படுமோ அதே ஓசை தான் ஏற்பட்டது.
இந்த கதையை வாசிக்கும் வாசகர்களின் சந்தேகத்திற்கு நீலவேணி நன்கு படித்த குடும்பத்தில் வந்திருந்தாலும் அவர்களுடைய பரம்பரை தொழில் பனை ஏறுவது. சிறுவயதில் அவர்களுடைய பூர்வீகமான நாகர்கோவில், கன்னியாகுமரி பக்கம் செல்லும்போது அங்கிருக்கும் பனைகளில் அசாத்தியமாக ஏறி, அங்கிருக்கும் அனைவரையும் அசர செய்வாள். அப்பொழுது அவளுக்கு வயது பத்து தான் இருக்கும். அது என்னவோ தெரியவில்லை பனை ஏறுவது அவளுக்கு கை வந்த கலை.

இப்பொழுது உயரமாய் வளர்ந்த அந்த பனை மரத்தின் உச்சியில் இருந்து அந்த தோப்பின் முழு பரப்பையும் பார்த்தாள்.

தோப்பின் மையப்பகுதியில் பற்ற வைத்திருந்த நெருப்பானது அந்த இடத்தில் மனிதர்கள் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தது.

அந்த நெருப்பு தந்த வெளிச்சத்தில் அங்கு இருந்த நபர்களின் எண்ணிக்கையை ஊகிக்க முடிந்தது. அது தோராயமாக ஆறு பேர் இருக்கலாம் என்று தோன்றியது.
இப்பொழுது சட்டென்று தன் முடிவை எடுத்து எந்த வேகத்தில் மரத்தில் ஏறினாலோ அதனினும் இரு பங்கு வேகத்தில் மரத்தில் இருந்து இறங்கினாள்.

மரத்தின் மேலிருந்து தான் பார்த்ததை வைத்து திசையை உத்தேசித்து நடக்க ஆரம்பித்தாள்.அது வெறும் பனக் காடாக இருந்ததனால் காலின் அடியில் சருகுகள் மிதிபட்டு சத்தம் செய்யும் தொல்லை இல்லை.

இருப்பினும் காலின் அடியில் பாம்புகள் வருமோ என்ற பயம் அவள் மனதில் இருக்கத் தான் செய்தது.
ஆனால் அது எது குறித்தும் அவள் கவலைப்படவில்லை. அவளுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள்.

இதோ அந்த மையப்பகுதி. அதோ அந்த பனை மரத்தின் அருகில் இருப்பவர்களை அடையாளம் காண ஆரம்பித்தாள் நீலவேணி.

அதோ அவன் பிரசன்னா தானே, அது சேகர் அந்த மரத்தின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டிருப்பது தன் அண்ணன் அருண் தான். அது போக இன்னும் இருவர் , அவளுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தனர்.அவர்கள் கையில் ஒரு சூட்கேஸ் வைத்துக் கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
பதுங்கிப் பாயும் புலி என பையப்பைய இன்னும் சிறிது முன்னேறினாள் நீலவேணி. இப்பொழுது காட்சிகள் இன்னும் தெளிவாக தெரிந்தது.

அடடா!… தன் அண்ணன் மரத்தில் சாய்ந்து நிற்கவில்லை மரத்துடன் சேர்த்து வைத்து கட்டப்பட்டு இருக்கிறான்.

முதுகை காட்டிக்கொண்டு நின்ற அந்த மூதேவிகள் இருவரின் முகமும் புலனாயின.மூதேவி நம்பர் ஒன் நம்ம விமல். மூதேவி நம்பர் டூ இது யார்ரா இது புது மூதேவி?

இவன் என்ன வானத்தில் இருந்து குதித்த ஏலியனா? ரொம்ப பெக்கூழியராய் இருக்கானே?அவன் கையில் இருந்த பெட்டியை பார்த்துவிட்டு சத்தமில்லாமல் உள்ளுக்குள்ளேயே விசில் அடித்துக் கொண்டாள் நீலவேணி. அந்த பெட்டி முழுவதும் கற்றை கற்றையாக கரன்சிகள்.

ஆனால் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற சத்தம் தெளிவாக கேட்கவில்லை.

இப்பொழுது பிரசன்னா மெல்ல அந்த கூட்டத்திலிருந்து விலகி நடக்கலானான். அவன் நேராக நீலவேணி பதுங்கியிருந்த அந்த புதரை நோக்கி நடந்து வந்தான்.

அட நாயே நீ எதுக்குடா இங்க வர ஒரு வேளை இவன் நம்மள பார்த்திருப்பானோ? நீலவேணி தன் உடலை இன்னும் குறுக்கிக் கொண்டாள். அந்த புதரின் அருகே வந்த பிரசன்னா தன் பேண்ட் ஜிப்பில் கை வைக்க அட கருமம் பிடித்தவனே என தலையில் அடித்துக் கொண்டாள் நீலவேணி.

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் நீலவேணியின் புத்தியில் ஒரு சிறிய யோசனை தோன்றியது.

அது வேறு ஒன்றுமில்லை. அவன் எதிர்பாராத அந்தத் தருணத்தில் சட்டென்று அவன் முன்னால் நின்றாள். இதை சற்றும் எதிர்பாராத பிரசன்னா,வந்திருப்பது யார் ஏன் வந்திருக்கிறார்கள் என்று எதையும் உணர முடியாத சூழ்நிலையில் வாய் திறக்கவும் மறந்து ஒரு வினாடி திகைத்து நின்றான்.

நீலவேணிக்கு அந்த நேரம் போதுமானதாக இருந்தது. அவனுடைய அடிவயிற்றில் அண்டர் பஞ்ச் ஒன்றை செலுத்தினாள். அதன் வேதனை தாளாமல் அவன் முன்னோக்கி குனிந்து கத்த முயலும் முன் நீல வேணியின் மற்றொரு கை அவன் தாடையில் வெடித்தது ஹாக்க்…

வினோதமான ஒரு ஒலியை தொண்டைக்குழிக்குள் இருந்து வெளியேற்றியவன் சரிய நீலவேணியின் கை அவன் நெற்றிப் பொட்டை ஒற்றி எடுத்தது.
விழிகள் விரிய இமைகள் படபடக்க எதிரில் இருக்கும் நீலவேணியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு நினைவிழந்து சரிய ஆரம்பித்தான்.

அவன் என்ன வேலைக்காக புதர் அருகில் வந்து இருந்தானோ அந்த வேலையை முதல் குத்தை அவன் வயிற்றில் நீலவேணி செலுத்தியபோது அவன் பேண்டிலேயே முடித்திருந்தான்.

இப்பொழுது புதரின் அருகில் இருந்து எழுந்த அந்த சலசலப்பு அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி விட அங்கிருந்தோர் அனைவரும் புதரை நோக்கி வர ஆரம்பித்தனர்.

நீலவேணி மற்றொரு புதரின் பக்கம் பெரியதொரு கல்லை தூக்கி எறிந்து சத்தம் செய்தாள். தான் சப்தம் செய்த திசைக்கு நேர் எதிர் திசையில் சிறிதும் ஓசையின்றி நகர ஆரம்பித்தாள்.

தன் அண்ணன் அருகே சென்று அவன் கட்டுக்களை அவிழ்த்து விடுவது அவள் குறிக்கோளாய் இருந்தது.
அருண் ஒன்றும் லேசுப்பட்டவன் அல்ல அவன் கையிலே ஒரு முறை அடி வாங்கியவன் மறுமுறை மறந்தும் கூட அருண் பக்கம் வர மாட்டார்கள்.அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டால் போதும் அவனை தடுத்து நிறுத்த இந்த சொம்பைகளுக்கு முடியாது என நீலவேணி நினைத்தாள்.

நீலவேணி சரசரவென அருண் இருந்த மரத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தாள்.

நீலவேணி பிரசன்னாவின் அடிவயிற்றில் முதல் பஞ்சை வைக்கும்பொழுதே நீலவேணி வருகையை உணர்ந்து இருந்தான் அருண்.

இப்பொழுது தன்னை நோக்கி அவள் முன்னேறி வருவதையும் அறிந்தான். தன் கட்டுக்கள் விடுவிக்கப்படும் நேரத்திற்காக காத்திருந்தான்.
நீலவேணி அருணின் கட்டுகளை அவிழ்க்க நெருங்கிய போது அந்த வேற்று கிரகவாசி இரண்டு கால்களையும் அகல விரித்த வண்ணம் அவள் எதிரில் வந்து நின்றான்.

பிரண்ட்ஸ் கம் கியர் கூச்சலிட்டான்.




ஏன்டா வாயில் விளக்கெண்ணையை வைத்துக்கொண்டு பேசுகிறாய் என்று அவன் தலையில் கொட்டும் ஆவல் பிறந்தது நீலவேணிக்கு.

அடுத்த வினாடியே தன் நிலையை புரிந்து, தான் மறைந்து கொள்ள அடுத்த புதரை தேடலனாள்.ஆனால் அவள் செல்ல முடிவெடுத்த பக்கங்களிலிருந்து எல்லாம் சினிமா வில்லன்கள் போல் சேகரும், விமலும் முளைத்தனர்.

ஹொவ்வ்வ்!!! எ ஸ்வீட் கேர்ள்

விழித்தபடி அவளை நோக்கி நெருங்க ஆரம்பித்தது அந்த ஏலியன்.

அருணுக்கு பதட்டம் ஏற்பட ஆரம்பித்தது. ஆஹா இவளுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை இந்தப் பிரச்சனையை இப்பொழுது எப்படி சமாளிக்கப் போகிறேன் என யோசிக்க ஆரம்பித்தான்.

அருண் அவசரமாக சிந்திக்க அவர்கள் 3 பேரும் சுற்றிலும் நீலவேணியை நெருங்க ஆரம்பித்தனர். நீலவேணி எப்பொழுது குனிந்தாள், எப்பொழுது அவள் கைகளில் அந்த கல் வந்தது என்பது எவரும் உணரவில்லை. அந்த ஒரு வேகத்தில் அவள் கையில் முளைத்த அந்தக் கல் முன்னால்   வந்து கொண்டிருந்த சேகரின் மூக்கை குசலம் விசாரித்தது.

அவன் தடுமாறி நிற்க அவனுடைய மண்டை பகுதியில் அடுத்த தாக்குதலை செலுத்தினாள். தலையில் இருந்து ரத்தம் வழிய அவன் இந்த ஆட்டத்தில் இருந்து வாபஸ் வாங்கிக் கொண்டான்.

கன நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் தாக்கப்பட்ட மற்ற இருவரும் விரைவாய் நீலவேணியை விரட்ட ஆரம்பித்தனர். அவர்களுக்கு போக்குக் காட்டிய நீலவேணி அருகில் இருந்த பனை மரத்தில் சரசரவென ஏறினாள்.

‘இப்ப பிடிங்க டா பாப்போம்’?என மரத்தின் மேலிருந்து சத்தம் செய்தாள்.

இப்பொழுது அருணின் முகத்தில் நிம்மதி படர்ந்தது. தரையில் இருக்கும் பொழுதே தன் தங்கையை எவரும் தொட்டு விட முடியாது. அதிலும் அவள் தாய் வீடான பனைமரத்தில் அவள் ஏறிவிட்டால் அந்த ஆண்டவனே நினைத்தாலும் அவளை தொட முடியாது.

அவள் மரத்தில் ஏறும் அதே நேரத்தில், அவள் கையில் இருந்த அந்த கல்லானது வீசி எறியப்பட்டு அது சரியாக அந்த ஏலியன் மண்டையை பதம் பார்த்தது.

மண்டையில் சிறிதாக கசிந்த அந்த ரத்தத்தை துடைத்தபடி புரியாத ஏதோ ஒரு பாஷையில் ஏதேதோ உளற ஆரம்பித்தான் அவன்.

அவன் அருகில் வந்த விமல் நல்ல வேளை எந்த பெரிய காயமும் இல்லை. சார், ப்ளீஸ் டேக் கேர் அவளை நான் பார்த்துக்கொள்கிறேன்.

இப்பொழுது அந்த அன்னியன் தட்டுத்தடுமாறி தமிழ் பேச ஆரம்பித்தான்.

இல்லை அவளை நான் பார்ப்பேன் கொடூரமாக இழித்தபடி இடையிலிருந்த ரிவால்வரை கையில் எடுத்தான்.

ஆஹா இந்த பரதேசி ரிவால்வரை எடுத்து விட்டானே என்ன செய்வது?

முதலில் அருணின் கட்டுக்களை அவிழ்த்துவிட அவனை நெருங்கிய போது அது முடியாமல் போக தன் கையிலிருந்த சிறிய ரக பேனா கத்தியை எவரும் அறியாவண்ணம் அருண் வசம் வீசி இருந்தாள் நீலவேணி.

அருண் தனது கால்களினால் அந்த பேனா கத்தியை எடுத்து கால்களை பின்புறமாக வளைத்து கைகளுக்கு பேனா கத்தியை மாற்றி மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த கயிறை அறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

மேற்கூறிய இந்த வேலையை செய்வது அவ்வளவு இலகுவானதாக இல்லை எறும்பு ஊர்வது போல் மிக பையப்பைய அந்த செயலை நடத்தி கொண்டிருந்தான்.

எதிரியின் கையில் முளைத்திருந்த ரிவால்வர் அருணை நொறுக்கியது. “ஐயோ நீலா” வாய்விட்டு கத்தினான்.

தனக்காக பதட்டம் அடையும் அண்ணனின் அந்த ஒற்றை அன்புக் குரல் நீலவேணிக்கு ஆயிரம் மத யானைகளின் சக்தியை கொடுத்தது.

இப்பொழுது அந்த எமன் தன் கையிலிருந்த ரிவால்வரால் நீலவேணியை குறி வைத்தான். அவன் தோளில் கை வைத்த விமல் குறி எங்கே என்று கேட்டான்.

அதற்கு பதிலாக கேவலமாக இழித்தபடி உயிர் போகாது என்று கண் சிமிட்டினான் இருவரும் அட்டகாசமாக சிரித்துக் கொண்டார்கள்.




இப்பொழுது துப்பாக்கி டுப் என்ற அடக்கமான சத்தத்துடன் குண்டை துப்பியது.ஓ சைலன்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கி போலும்.
ஆனால் அந்த துப்பாக்கி குண்டுக்கு பேப்ப்ப பேபப்ப சொல்லியிருந்தாள் நீலவேணி.

ஆம் அந்த தோப்பில் பனை மரங்கள் நெருக்கமாக வளர்ந்து இருந்ததால் ஒரு பனையிலிருந்து அடுத்த பனைக்கு தாவி இருந்தாள். இது கீழ் இருந்த இருவரும் சற்றும் எதிர்பாராதது.

இப்போது அந்த அன்னியன் இன்ட்ரஸ்டிங் என்ற வார்த்தையை வெளியிட்டான்.

தன் தோள்களை ஒருமுறை குலுக்கி விட்டுக் கொண்டு கைகளால் ரிவால்வரை இருக்கி கொண்டு ஆழ்ந்து குறிவைக்க துவங்கினான்.

அதன் பிறகு மேலும் நான்கு முறை துப்பாக்கி தோட்டாவை துப்பிய பிறகும் நீலவேணி அகப்பட்டால் இல்லை.

அவள் எப்பொழுது ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவுவால் எந்த மரத்திற்கு தாவுவாள் என்பது அறிய முடியாத ஒன்றாக இருந்தது. அதனால் அவளை குறிவைப்பது விரையம் ஆனது என்று தோன்றியது.

அடுத்ததாக நீலவேணி தாவிய பனைமரத்தின் உச்சியில் எப்போதோ யாரோ வைத்துவிட்டுப் போன சிறிய ரக அரிவாள் ஒன்று இருந்தது.

ஆஹா இறைவன் என்னை கைவிடவில்லை. இது போன்ற சூழ்நிலையில் நிறைய நேரம் தாக்கு பிடிக்க முடியாது அண்ணனும் இன்னும் விடுபட்ட பாடில்லை.
இந்த அரிவாள் ஆண்டவன் எனக்கு காட்டியது. இட்டபடி எண்ணமிட்டபடி அந்த அரிவாளை கணநேரத்தில் சுடிதாரின் பின்புறம் தொங்க விட்டாள்

ஆனால் அவளது இந்த தாமதம் கீழிருந்து குறி பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது நீலவேணி அடுத்த மரத்திற்கு தாவ முடிவெடுத்ததும் துப்பாக்கி தோட்டாவை உமிலவும் சரியாக இருந்தது இந்த கணநேர தாமதத்தை ஈடு செய்ய சிறிது புலிப்பாய்ச்சல் ஆகவே நீலவேணி தாவி இருந்தாள்.

அந்த தாவலின் இடையே தன் சுடிதாரின் பின்புறம் சொருகி வைத்திருந்த அரிவாளை அந்தரத்தில் பறந்தபடி சரியான இலக்காக துப்பாக்கி வைத்திருந்தவனின் மணிக்கட்டை நோக்கி வீசினாள்.

துப்பாக்கியின் தோட்டா நீல வேணியின் தோள்பட்டையை உரச நீலவேணியின் அருவா துப்பாக்கி வைத்திருந்தவனின் மணிக்கட்டை துண்டாக வெட்ட கட்டியிருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டு அருண் விடுதலையாக அனைத்தும், அனைத்தும் ஒரே வினாடியில் சரியாக நடந்தது.

துப்பாக்கி குண்டு பட்ட இடம் தீ பட்டது போல் ஏறிய எப்படியாகினும் அடுத்த மரத்தை அடைந்து விடும் உத்வேகத்தில் அதை சென்றடைந்தாள். ஆனால் அந்த மரத்தை பிடித்துக் கொள்ளும் வழு இல்லாது கழண்டு விட்டது போன்று அவள் புஜம் வேதனை தந்தது.

ஒற்றை கையால் பனையை பிடித்த படி பையப்பைய சறுக்கியபடி மரத்தில் வழுக்கிக் கொண்டிருந்தாள் நீலவேணி.

தன் பிடரியில் பனைமரம் எதுவும் வேரோடு சாய்ந்து விட்டதோ? என்று பீதியுடன் திரும்பிப்பார்த்த விமல் பின்னால் அசுரன் போல் நின்றிருந்த அருணைக் கண்டவுடன் இரண்டு கைகளையும் தூக்கி தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டான்.

மரத்திலிருந்து சரிந்து கொண்டிருந்த நீலவேணியை ஓடிச் சென்று இருகைகளால் தாங்கினான். அருண் விழிகள் இருல மெல்லத் அண்ணனின் அணைப்பின் உள் அடங்கினாள் நீலவேணி.

மறுநாள் அது ஒரு பெரிய பொதுக்கூட்ட மேடை.

அங்கே பாரத தேசத்தின் கவர்னர் அவர்கள் சிறந்த பெண்ணிற்கான விருதை மகளிர் தினத்தன்று நம் நீலவேணிக்கு வழங்குவதற்காக வந்திருந்தார்.

ரேடியா, டிவி, நியூஸ் பேப்பர்,
வார இதழ்கள் தனியார் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான யூடியூப் சேனல்கள் என அனைத்திற்கும் மகளிர் தின ஹீரோயினாக மாறியிருந்தாள் நம் நீலவேணி!.

 




What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!