Serial Stories புதுச்சுடர் பொழிந்ததே

புதுச்சுடர் பொழிந்ததே – 16( நிறைவு)

16

 

 


பத்மினி அறைக்கதவை திறந்து விட்டதும் வேகமாக வெளியே வந்த சுடரொளி முதலில் வெளி இருளுக்கு கண்களை சுருக்கி விழித்து பின் கணவனை கண்டு கொண்டு வேகமாக ஓடி வந்து அவன் கை வளைவில் ஒன்றிக் கொண்டாள் .

” உள்ளே லைட்டையெல்லாம் ஆப் பண்ணி …ஒரே இருட்டு .வெளிச்சத்திற்கு வந்ததும் கண்ணெல்லாம் கூசி …” திணறிப் பேசியவளை தன் கைப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டான் .

மாடியிலிருந்து இறங்கி வந்து ஓரமாக தலை குனிந்து நின்றிருந்தவர்களை முறைத்தபடி அவன் நின்றிருந்த போது , ராஜா உள்ளே வந்தான் .

” நான் கம்ப்ளைன்ட் செய்திருந்தேனே ! இதோ இவர்கள்தான் சார் .அரசு அங்கீகாரம் இல்லாமல் இங்கே இவர்கள் வீட்டையே தங்கும் விடுதியாக்கி நடத்தி வருகிறார்கள் .அநியாய வாடகை வசூலிக்கிறார்கள் .அத்தோடு காட்டிற்குள்ளும் மரங்களின் மீது வீடு கட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர் .இவை எதற்குமே அங்கீகாரம் கிடையாது .அப்படி இவர்களது மரக்குடிலில் தங்கியிருந்தவர்கள் தாம் போன மாதம் யானைக்குட்டியின் வாலில் தீ வைத்தவர்கள் .இவர்களை அரெஸ்ட் செய்ய இந்தக் காரணங்கள் போதும்தானே ? “

அரசு ஊழியரான ரேஞ்சர் ராஜாவின் சாட்சி பக்காவாக இருக்க பத்மினியின் கணவரும் , மாமனாரும் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டனர் .

” அண்ணா ! அவர்களை காப்பாற்றுங்கள் அண்ணா ” மீண்டும் காலில் விழ வந்த பத்மினியை சீ என ஒதுக்கினான் ஆனந்தபாலன் .




” உனக்காக பாவம் பார்த்துத்தான் அன்றே அவர்களை எச்சரிக்கை மட்டும் செய்து விட்டேன் .ஆனால் என் தலையிலேயே கை வைக்க துணிந்து விட்டார்கள். நீயும் அவர்களோடு சேர்ந்து கொண்டாயில்லையா ? இனி உங்களுக்கு மன்னிப்பு கிடையாது .வீட்டிற்கு வந்து உன் பிள்ளையை மட்டும் தூக்கிக் கொண்டு போ …இல்லையில்லை பிள்ளையை செங்காந்தளிடம் கொடுத்து விடுகிறேன் .அதற்காக கூட என் வீட்டு வாசலை மிதிக்காதே ! “

சத்தமிட்டு அழுத பத்மினியை கண்டு கொள்ளாமல் சுடரொளியை அழைத்துக் கொண்டு வெளியேறினான் .

” பத்மினிக்காகவாவது …அ…அவர்களை விட்டு விடலாமே …ப்ளீஸ் ” சுடரொளியின் பேச்சு அவன் காதிலேயே விழுந்தாற் போலில்லை .

” உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி ” ராஜாவிடமும் ,செங்காந்தளிடமும் நன்றி சொன்னான் .

” இதில் எனது சுயநலமும் இருக்கிறது சார் .இனி எனது வனவிலங்குகளுக்கும் , வனத்திற்கும் ஆபத்து வராதே ” ராஜாவும் , செங்காந்தளும்  புன்னகைத்து விடை பெற்றனர் .

மகனை ஆரத் தழுவி நின்றிருந்த மனைவியை பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தான் ஆனந்தபாலன் .அவன் ஒருவன் இருப்பதையே மறந்து தாயும் , மகனும் கொஞ்சியபடி இருந்தனர் .மகனுடன் கதை பேசி உண்ண வைத்து , உறங்க வைத்து விட்டு சுடரொளி நிமிர்ந்த போது ஆனந்தபாலன் அவளெதிரே நின்றான் .

” பத்மினிக்காக …” என அவள் ஆரம்பிக்க , இரு கைகளையும் விரித்தான் .” முதலில் இங்கே வா .பிறகு பேசலாம் “

தயக்கமின்றி தன்னில் சரணடைந்தவளின் தலையை வருடியபடி இருந்தவன் , ” இப்போது பிள்ளை மேல் இருக்கும் இந்தப் பாசம் ஐந்து வருடங்களாக எங்கே போனது சுடர் ? ” என்றான் .

சுடரொளி திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் .” எனக்கு குழந்தை இருப்பது தெரியாது பாலா .”

” ஆனால் நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூட நினைக்கவில்லைதானே ? “

” பாலா யோசித்து பேசுங்கள் .குழந்தை பிறந்ததும் இ…இறந்து…அ…அப்படி என்னிடம் கூறி விட்டார்கள் .பிறகெதனை நான் தெரிந்து கொள்ள ?”




” என்னை தெரிந்து கொள்ள வேண்டாமா ? என்னைப் பற்றிய நினைவுகள் கூட உனக்கு வரவில்லைதானே ? “

” உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதாக சொன்னார்கள் .நீங்களும்தான் என்னை தொடர்பு கொள்ளவேயில்லையே ? “

” உன் அப்பாவும் ,சித்தப்பாவும் என்னை எப்படி அவமானப்படுத்தினார்கள் தெரியுமா ? அப்பன் பெயர் தெரியாதவன் என்று …” மேலே பேச முடியாமல் அவன் குரல் திணறியது .

அவன் கை மேல் ஆதரவாக தன் கை வைத்தாள் ” அந்த அப்பாவைத்தான் நீங்கள் என் சித்தப்பாவிடமிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறீர்கள் .அது ஏன் பாலா ? “

” என்ன செய்வது ..ஏதேதோ வில்லத்தனம் செய்தாலும் என் மாமனாராய் போய்விட்டாரே …ஏய் இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் ? “

” எனக்கும் அங்கே ஆட்கள் இருக்கமாட்டார்களா ? நான்காவது வீட்டு காயத்ரி மாமி என் நலம் விரும்பி .உன் சித்தி ,சித்தப்பாவை ரொம்ப நம்பாதே என்று என்னை எச்சரித்துக் கொண்டே இருப்பார் .நான் இங்கே வரும் முன் என் வீட்டின் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள் மாமி என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன் .அவர்தான் என் அப்பா விசயம் சொன்னார் “

” பிறகும் உன் அப்பாவை போய் பார்க்க வேண்டுமென்று நினைக்கவில்லையா ? “

” எனக்கு அவர் மேல் மிகுந்த கோபம் பாலா .நம்மை பிரித்ததற்காக இல்லை .அவர்தான் பிரித்தாரென்று எனக்குத் தெரியாதே …நமது திருமணத்தை மதிக்காது எனக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தே தீருவேனென்று நின்றார் .அதனை தடுப்பதற்குள் நான் பட்ட பாடு …அப்பப்பா …”

” அதுதான் ஔவையாராகி நின்றாயே …”

” அது மட்டுமல்லை பாலா , ஒரு நாள் அம்மா வைத்திருந்த தூக்க மாத்திரையை எடுத்து விழுங்கி விட்டேன் .அதற்குப் பிறகுதான் …”

” என்ன …? ” ஆனந்தபாலன் அவளை இழுத்து அணைத்திருந்தான் .பட் பட்டென்று தன் நெஞ்சுக்குள் துடித்த அவன் இதய ஓசையை உணர்ந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள் .




” ஒன்றுமில்லை பாலா .ரிலாக்ஸ் …”

” என்ன காரியம்டி செய்திருக்கிறாய் ? அப்படி செய்யும் முன் என்னை ஒரு தடவையாவது நினைத்துப் பார்த்தாயா ? “

” உங்களையே நினைத்துக் கொண்டிருந்ததால்தான் பாலா அப்படி செய்தேன் “

ஆனந்தபாலன் பதில் பேசாமல் அவளை இன்னமும் இறுக்கிக் கொண்டான் .” நான் முதலில் கேட்ட கேள்வி வாபஸ் சுடர் .உனக்கு திருமணமாகவில்லை என்று தெரிந்து கொண்டு என்றாவது …எப்படியாவது உன்னை  என்னிடம் கொண்டு வந்து விடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தேன் .என் துணைக்கு பிள்ளை வேறு .ஆனால் நீயோ இருவரையுமே இழந்தும் உன் காதலில் உறுதியாக இருந்திருக்கிறாய் .உண்மையில் என்னை நான் கேவலமாக உணர்கிறேன் “

” ப்ச் …என்ன பாலா இது ? சிறு பிள்ளை போல் ? என் மேல் இவ்வளவு மனக்குறை இருந்தும் என் அப்பாவை ,சொத்துக்களை இங்கிருந்தே காப்பாற்றி வந்திருக்கிறீர்களே ! அப்பா உங்கள் பார்வையின் கீழ் வந்த பின்பும் அவரை பார்க்கவென்று செல்வது கூட உங்கள் மேலிருந்த நம்பிக்கைக்கு துரோகம் என்றுதான் போக நினைக்கவில்லை .”

” ஆனால் நீ நிச்சயம் அவரை பார்க்க வேண்டும் .அவர் உன்னிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் நாம் இருவருமாகப் போய் அவரைப் பார்க்கலாம் .”

” சரி , சித்தி …சித்தப்பாவை …என்ன செய்யப் போகிறீர்கள் ? “

” தூக்கி வைத்துக் கொண்டாட சொல்கிறாயா ? உன் அப்பா , அம்மாவிடம் என்னைப் பற்றி கற்பனை கலந்து சொல்லி நம்மைப் பிரித்தவர்களே அவர்கள்தான் .காரணம் உங்கள் சொத்துக்கள். அதனை அவர்களை அனுபவிக்க விடுவேனா ? நான் மிரட்டிய மிரட்டலில் மீண்டும் கிராமத்திற்கே ஓடி விட்டனர் “

” பாவம் பாலா அவர்கள் .அங்கே அவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. இருந்த சொத்துக்களை தொலைத்து விட்டுத்தான் அப்பாவை தேடி இங்கே வந்தார்கள் .இப்போது…”

” அங்கே வயலில் கூலி வேலை செய்கிறார்கள் .உழைத்து உண்ணட்டும் .இனி அவர்கள் பேச்சு பேசாதே “

” அவர்களை விடுங்கள் பத்மினியை…”

” ஏய் என்னடி என்னைப் பார்த்தால் புத்தன் போல் தெரிகிறதா ? துரோகம் செய்பவர்களையெல்லாம் வரிசையாக மன்னிக்க சொல்கிறாய் ? “




” பத்மினி சூழ்நிலைக் கைதி .அவள் துரோகி இல்லை .அவள் என்னிடம் முதலிலேயே சொல்லிவிட்டாள் “

” என்ன சொன்னாள் ? “

” நான் காலையில் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது , அவள் வந்தாள். என்னிடம் ஒரு உதவி கேட்டாள் .அவள் கணவனும் , மாமனாரும் உங்கள் மேல் மிகவும் கோபமாக இருப்பதாகவும் , அவர்கள் மேல் நீங்கள் போட்ட  கேசை வாபஸ் வாங்க வைப்பதற்கு என்னையும் , குழந்தையையும் கடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறினாள் .இவள் தலையிட்டு குழந்தை வேண்டாம் பாவம் , சுடரொளியை மட்டும் கடத்தலாம் என ஐடியா சொல்லி , எங்கோ காட்டிற்குள் கொண்டு செல்ல வேண்டுமென்ற திட்டம் வைத்திருந்தவர்களை நயமாக பேசி வீட்டிலேயே அடைத்து வையுங்கள் , நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சம்மதிக்க வைத்திருக்கிறாள் .”

” நீங்கள் கேசை வாபஸ் வாங்கவும் என்னை விடுவித்து விடும் திட்டம் .இதையெல்லாம் என்னிடம் சொல்லி எனது ஒத்துழைப்பு வேண்டுமென்று கேட்டாள் ….”

” உனக்கும் என்னுடைய அன்பை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வேண்டியிருந்தது .நீ பத்மினியை உபநோகித்துக் கொண்டாய் .சரியா ? “

ஆனந்தபாலன் கேட்க கீழுதட்டைக் கடித்து மௌனமானாள் சுடரொளி .அவன் போனை எடுத்து தன் வக்கீலை அழைத்தான் .

”  சார் போலீஸ் ஸ்டேசன் போய் என் சார்பாக ஜாமீன் பணம் கட்டி அவர்களை விடுவித்து வாருங்கள் .ஆனால் இந்தக் கேஸ் முடியக்கூடாது .பத்து வருடங்களாவது இழுக்க வேண்டும் .இனியொரு முறை இந்த தவறை அவர்கள் செய்யக் கூடாது “

குற்றவாளிகளுக்கு கச்சிதமான தண்டனை வழங்கி விட்ட தன் கணவனை பார்த்தபடி இருந்த சுடரொளி அவன் தன்னைப் பார்க்கவும் மெல்ல ” உஷாந்தி ” என்றாள் .

அதே நேரம் தன் போனை டயல் செய்து அவளிடம் நீட்டி விட்டான் அவன் .

” என்ன பத்மினியை விசாரித்தீர்களா ? நானும் , அப்பாவும் வந்த அன்று அவள் ஒரு மாதிரி விழித்தபடி உங்கள் வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் ” எதிரில் உஷாந்தி பேசிக் கொண்டே போக …சுடரொளி மெல்ல அழைத்தாள் .

” உஷா …நான் வந்துவிட்டேன் “

” ஓவ் …ஒரு வார்த்தைதான் சொன்னேன் .அரை மணி நேரத்தில் பொண்டாட்டியை பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டாயிற்று .ம் …சரி…சரி .என்னவோ பண்ணுங்கள் ” போனை கட் செய்து விட ஆனந்தபாலனிடம் போனை நீட்டினாள் .அவன் பொறுக்குமாறு சைகை செய்ய , மீண்டும் போன் ஒலித்தது .உஷாந்திதான் .

” ஆனால் நான் உங்கள் இருவரையும் மன்னிக்க மாட்டேன் .ஆமாம் …” கட் செய்து விட்டாள் .

சுடரொளி பக்கென சிரித்து விட்டாள் .” இவள் பேச்சை நம்பி உன்னைக் குழப்பிக் கொண்டிருந்தாயா ? ” கணவனின் செல்லக் கோபத்தை கண்டு , கோர்த்திருந்த அவன் கைகளை பிரித்து அதனுள் தான் நுழைந்து கொண்டாள் சுடரொளி .




” பாவம் .அப்பாவி .இப்போது உணர்ந்து கொண்டேன் பாலா “

” ம் ..அவளை உபயோகித்துக் கொண்டதற்கு நானும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன் சுடர் ”  கைகளை மனைவியின் உடலில் படர விட்டான் .

” ம் .கரெக்ட் பாலா .இப்போது நான் புதிதாக பிறந்தாற் போல் உணர்கிறேன் “

” ஆமாம் .அந்த சூரியனின் அதிகாலை புதுச்சுடரை அனுபவித்திருக்கிறாயா ? குளிர்ச்சியும் , வெம்மையும் ஒன்றாக கலந்து நம் உள்ளம் , உடல் இரண்டையுமே உருக வைக்கும் .அது போல் நீ எனக்கு புதுச்சுடர் செல்லம் “

ஆனந்தபாலனின் சுடர் இளகி அவன் மேல் காதலாய் பொழிய ஆரம்பித்தது .

-நிறைவு –




What’s your Reaction?
+1
53
+1
14
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!