Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 12

12TH CHAPTER


கருஞ்சிவப்பு நிறத்தில் வெண்ணிற பூக்கள் தெளித்த பருத்தி புடவையும் அதற்கேற்றாப் போல் சிகப்புநிற சோளியும் அணிந்திருந்தாள் உத்ரா. அலைகடலுக்கு சவால் விடும் வகையில் அவளின் கூந்தல் ஒன்றோடு ஒன்று கன்னங்களுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தது. ராஸ்தீவை இன்னும் பத்துநிமிடங்களில் அடைந்துவிடுவோம் என்று கப்பலின் பொதுவான அறிவிப்பு வெளியே வந்ததும், சற்றே தள்ளி இந்தியப் பெருங்கடல் மறந்துவிட்ட ஒரு பகுதியாய், மனிதர்கள் ஓரிடத்தைவிட்டு நீண்டகாலம் இல்லாமல் இருந்தால் அவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை கண்கூடாக காணப்போகிறோம் என்ற ஆவல் அவளிடம் தோன்றியது.

 

யாரை அப்படி முறைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்கிறே ?

 

என்னடா தனியா நிக்கிறோமே இன்னமும் வரலையேன்னு பார்த்தேன். உத்ரா கிண்டல் தொனியில் பரத்தைப் பார்த்து பேசிவிட்டு, அதான் உங்க பிரண்டு பத்மினி வந்தாச்சு மறுபடியும் என்னையே சுற்றுவானேன்.

 

வந்து நின்று இரண்டு முழுநிமிடங்கள் முடிந்துவிட்டதே இன்னும் என்னையும் பத்மினியையும் குறைபேச காணுமேன்னு பார்த்தேன் கரெக்டா ஆரம்பிச்சிட்டே வரவர நீ சண்டைக் கோழியாயிட்டே ?

 

ஆமாம் ! நான் சண்டைக்கோழிதான், இப்போ என்ன வேணும் உங்களுக்கு ?!




ஒண்ணும் வேண்டாம் தாயே ?! உனக்கு இந்த பேய்பிசாசு மேல நம்பிக்கையிருக்கா உத்ரா.

 

எதுக்கு இப்போ இந்த சம்பந்தமில்லாத கேள்வி, நானென்ன தமிழ்பட ஹீரோயின்னு நினைச்சீங்களா கரப்பான் பூச்சிக்கும் பேய்ன்னு சொன்னதும் பயந்து உடனே உங்களைக் கட்டிப்பேன்னு நான் தைரியமான பொண்ணு, பொண்ணுன்னா பேயும் இறங்குன்னு ஒரு பழமொழி இருக்கு உங்களுக்குத் தெரியாதா ?

 

ம்..நல்லாய் தெரியும் நானே ஒரு மோகினி பின்னாலேதானே அலையறேன் பரத் தன்னைத்தான் மோகினி என்று சொல்கிறான் என்று உணர்ந்தாலும் மீண்டும் வம்பைத் துவக்காமல் கடலுக்கு வெகு அருகில் தெரியும் தீவினைக் கண்இமைக்காமல் பார்த்தாள்.

 

நானொருத்தன் உன்னையே பார்க்குறேன் நீயென்ன என்ன அப்படிப்பாக்குறே ?

 

வந்ததில் இருந்து உங்களையே பார்த்து போரடிச்சுப் போச்சு அதான் யாராவது வேற்று மனிதர்கள் தென்படறாங்களான்னு பார்த்தேன். ஆனா பாருங்க என் கெட்ட நேரம் எல்லாம் அப்படியாரும் இல்லை.

 

ராஸ்தீவில் பிரிட்டிஷ் காலத்தில் மாளிகைகளும், தேவாலயன்னு ஒரே கூத்தும் கும்மாளமும் இருக்குமாம். அந்தமானில் இருக்கும் அநேக தீவுகளிலேயே ராஸ் தீவுதான் தண்ணீரும் காற்றும் மனிதர்கள் வாழ ஏதுவானது. கால்பட்ட இடமெல்லாம் காடா இருந்தது, அதையெல்லாம் சரிசெய்தது நம்முடைய இந்தியர்கள்.

 

ம்…..நான் போய் மற்றவர்களை இறங்கத்தாயாராக சொல்லுகிறேன்

 

அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். நான் உன்னிடம் இன்னமும் நிறைய பேசவேண்டியது இருக்கிறது. நீ பேசாமல் என் பக்கத்திலேயே இரு

 

பரத் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் நான் வந்தது

 

வேலை செய்ய ? உன் குடும்பத்தின் பொருளாதார நிலைமைக்காக நீ இங்கே பணிபுரிய வந்திருக்கிறாய் வேறு எதற்கும் இல்லை எனக்கும் இதெல்லாம் தெரியும்

 

அதுமட்டுமில்லை என்னைப் பற்றிய தவறான பேச்சு எழும்படி நான் நடந்து கொண்டது இல்லை,

 

ம்கள்ளக்காதலுக்காக ஒருத்தி பெத்த பிள்ளைகளையே கொல்லுறா ? முறைதவறிய உறவு தவறில்லை சட்டம் வருது, நீயென்னடான்னா பேசினாலே ஒழுக்கம் கெட்டுப்போகுது பேர் கெட்டுப் போகுதுன்னு பேசுறே ?




சுயகட்டுப்பாடு எல்லாத்துக்கும் முக்கியம் பரத், ஒழுக்கம் என்பது மனித இனத்திற்குள் மட்டும்தானே இருக்கு, புன்னகை அழுகை இதைப்போல ஒழுக்கமும் ஒரு உணர்வு அதை விலங்குகளுக்கு கடவுள் கொடுக்கலை, அப்படியிருந்தும் தன் குட்டியைக் காப்பாற்ற அது எத்தனை கஷ்டப்படுது. சின்ன கூடு வெளியே வராத குஞ்சுக்காக அந்த மரத்துப் பக்கம் போனாக் கூட காக்கா நம்மை குத்துவது இல்லை, தாய்மையையும் தாய் பாசத்தையும் இன்னும் எவ்வளவோ உதாரணம் தரலாம். வெறும் உடல் சுகத்திற்காக பெற்ற பிள்ளைகளே கொன்ற அவளை பற்றியெல்லாம் பேசுவது கூட பாவம், ஒருமுறை தான் கலந்து கொடுத்த பாலில் சக்கரையில்லைன்னு எங்கம்மா சுவையாய் இல்லையே சொல்லலாமேடா என் தம்பியைக் கேட்டாங்க அவன் என்ன சொன்னான் தெரியுமா ?

 

அம்மா கையால விஷத்தைக் கொடுத்தாலும் அமிர்தம்தான் இது சக்கரையில்லா காப்பிதானே ?! அவள் கொடுத்த பாலைக் குடிக்கும் போது அதே நம்பிக்கையில்தானே அந்த பிஞ்சுகளும் குடித்திருக்கும். சுயகட்டுப்பாடு முக்கியம்ன்னு சொல்லும் போதே நாட்டில் இத்தனை சிக்கல்கள் நடக்குது. இதிலே தகாத உறவுகள் திருமணத்திற்குப் பிறகும் தவறுஇல்லைன்னு சட்டம் சொன்னா என்ன அபத்தம் இது.

 

தாலிகட்டிய பொண்டாட்டிக்கு முன்னாடி புருஷனும், புருஷனுக்கு முன்னாடி விருப்பப்படற ஆணோட பேச முடியுமா பெத்த பிள்ளைங்க யாரோ ஒருத்தங்களோட கொஞ்சரதை தப்புன்னு தெரிந்தும் சட்டம் அனுமதிக்குதுன்னு ஒப்புக்க முடியுமா ? நாம 21ம் நூற்றாண்டிலே வாழறோம், அதுக்காக முறைதவறி வாழணுமா ? இவ்வளவு பேசறீங்களே நீங்க விரும்பற உங்களை கல்யாணம் செய்துக்கப்போற பொண்ணு இன்னொருத்தரோட இருந்தா உங்களால தாங்கிக்க முடியுமா ?! சட்டங்கிறது யாரையும் பாதிக்கவும் கூடாது அதேநேரத்திலே பாதுகாப்பாகவும் இருக்கும். யாரும் வரமாட்டாங்கிற தைரியத்திலேதானே ஸார் கதவைத் தாளிட்டுட்டு வீட்டுக்குள்ளே இருக்கிறோம். அவ யாருக்கு பொண்டாட்டியா இருந்தா என்ன எனக்குப் பிடிச்சிருக்குன்னு அத்துமீறி வீட்டுக்குள்ள நுழைய வக்கணையான சட்டம் போட்டு இருக்காங்க இதை என்னால ஒப்புக்க முடியாது அப்படி வாழ்வதுதான் வாழ்க்கைன்னா நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். இந்த மாதிரி மட்டமான பேச்சுகளை இத்தோடு நிறுத்திக்கோங்க. நான் போறேன் உத்ரா போட்டை விட்டு இறக்கத் தயாரான கூட்டத்தினரோடு போய் நின்றுகொள்ள, அங்கிருந்த பத்மினி பரத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

 

உத்ராவின் பேச்சும் சிந்தனையும், அவளின் பண்பாடும் என ஒவ்வொன்றாய் பரத்தைக் கவர்ந்து கொண்டு இருந்ததை அவனால் உணர முடிந்தது அவள் மேல் தன்னையும் அறியாமல் படர்ந்து கொண்டிருக்கும் நேசத்தை இந்த டிரிப் முடிவதற்குள் சொல்லிவிட வேண்டும் அங்கிருந்த கூட்டத்தினரோடு அவனும் தன்னை இணைத்துக் கொண்டான்.

 

ராஸ்தீவு இயற்கையின் கைப் பொம்மையைப் போல தன்னை ஆக்கிக்கொண்டது, அற்புதமான அந்த அமானுஷ்ய அழகு பயம், ரசனை, ஆச்சரியம் என்று பல்வேறு வகையான எண்ணங்களைக் கொடுத்தது. வண்ண மான்களும், முயல்களும் வந்திறங்கியவர்களை கண்டு பயந்து தங்கள் அணிவகுப்பைக் கலைத்து கொண்டு பறந்துவிட பழைய தேவாலயத்தின் அருகில் சற்றே புணரமைக்கப்பட்ட விடுதியில் தங்கும் பணியை மேற்கொண்டார்கள் மற்றவர்கள். உத்ராவின் கண்கள் பரத்தைத் தேடின. அவன் எங்கிலும் தட்டுப்படவில்லை, ப்ரியனும் பத்மினியும் மற்றவர்களை ஒருங்கிணைத்து கொண்டிருக்க உத்ரா ப்ரியனிடம் சென்றாள்.

 

அடுத்ததாத செயற்கை பவளத்திட்டுக்கள் அமைக்கும் பணி துவங்கிவிடவேண்டியதுதானே !

 

ஆமாம் மேடம் ஏற்கனவே இங்கே இருக்கும் பழங்குடியினர் சிலர் மூலம் தேவையான இடத்தில் முன்னேற்பாடுகளை எல்லாம் செய்தாகிவிட்டது. மதிய உணவிற்குப் பிறகு நம்ம வேலையை ஆரம்பிக்கவேண்டியதுதான். இரண்டு நாட்கள் இங்கே அடித்தளத்தை அமைத்துவிட்டு ஒரு சின்ன சைட் சீயிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

ஏன் இந்தமாதிரி பயணங்கள் வேலையை கெடுக்குமே ?!

 

நாமென்ன வயல்வேளைக்கா வந்திருக்கும் நாள்தோறும் உழுவதும், களையெடுப்பதும் என்றிருக்க, சிமெண்ட் தட்டுகள் அமைத்து அதன் ஆழம் பவளத் திட்டுகளை வளர எடுக்கும் நேரம் என்று எல்லாவற்றிக்கும் ஏற்றாற்போலத்தான் இந்த மாற்று ஏற்பாடு, மனதிற்கும் சற்று இதமாய் இருக்கும். தவிரவும் இம்மாதிரி இடங்களை மறுபடியும் வந்து நம்மால் பார்க்க இயலாது, அப்படியே வந்தாலும் லயிப்பு இருக்காது என்று விளக்கம் கொடுத்த பரத் முழு நீச்சல் உடையில் இருந்தான். ராஸ் கடற்கரையில் நீந்துவது கொஞ்சம் ஆபத்துதான் என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள் மதிய விருந்தில் கலந்துகொள்கிறேன். மேற்கொண்டு யாரிடம் பேச்சு கொடுக்காமல் ஒரு சின்ன தலையசைப்புடன் வெகு லாவகமாக நீரை நோக்கி சென்றான்.

 

இதென்ன…? என்பதைப்போன்ற இருபெண்களின் பார்வைக்கு சிரிப்பினை மட்டும் பதிலாய் தந்துவிட்டு அவர்களை அழைத்துச் சென்றான் ப்ரியன். ராஸ்தீவு கடற்கரையில் நீந்துவது கொஞ்சம் ஆபத்து என்ற வார்த்தை மட்டும் உத்ராவின் காதில் மீண்டும் ஒலித்தது. தன்னையும் அறியாமல் கடலை திரும்பிப்பார்த்தாள் உத்ரா.




What’s your Reaction?
+1
14
+1
13
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!