காதல் இளவரசி

காதல் இளவரசி – 1

லதா சரவணன்
எழுதும்
காதல் இளவரசி

1st CHAPTER….!

 

அதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா பாத்திரங்களைக் கழுவி நீர் பிடித்துக் கொண்டு இருந்தாள். நீர் நிறைந்து கொண்டிருந்த குடத்தில் தளும்பும் நீரின் வேகம் குறைந்து கொண்டே வந்தது, அச்சச்சோ இன்னும் எவ்வளவு நேரம் தண்ணீர் வருமோ என்று எல்லார் மனதிலும் இலேசான கலக்கம். மாலையில் அண்ணன் தம்பியாய் உறவாடுபவர்கள் கூட காலையில் இந்நேரம் எதிரியினைப் போலத்தான் நடந்து கொள்வார்கள். வீட்டுக்குள்ளேயே இப்படி நாட்டுநிலைமையைக் கேட்கவா வேண்டும் ? அதுதான் தினமும் செய்திகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே ?!

நகரும்மா நாங்கயெல்லாம் தண்ணீ பிடிக்கவேண்டாமா ? குழாயடிக்கிட்டே நின்னு என்ன கனவு காண்றே ? கட்டைக் குரலில் பக்கத்துவீட்டு பரதேவதை அரட்டிட நகர்ந்தாள் இந்திரா இப்போது ஆரம்பித்தால்தானே தம்பி, தங்கையை பள்ளிக்கு அனுப்ப முடியும். விருந்து சமையல் இல்லையென்றாலும், மாதம் முதல் பத்து நாட்களுக்கு சாதத்தோடு குழம்பும் ஒற்றைக் காய்கறியும் சமைத்துவிடலாமே ?! மாதக் கடைசியில் ரசமும், மோரும் அத்தோடு துவையலும் காலைச் சமையலுக்கு மாதத்தின் வாரக் கடைசியாகையில் இட்லிக்கு ரேஷன் அரிசி ஒரு குண்டுமணி கூட இல்லாத நிலையில் வரகு அரிசிக் கஞ்சியும், வெள்ளை வெங்காயமும்தான் ! சிலசமயம் சின்னது இரண்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாலும், தங்கை உத்ரா எப்போதுமே எதையும் கேட்பதில்லை குடும்ப நிலைமையினை அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.




அத்தனை கஷ்டப்பட்ட குடும்பம் இல்லையென்றாலும் அப்பாவின் மறைவிற்கு பிறகு சராசரிக்கும் சற்று கீழிறங்கிதான் போனது அவர்களின் நிலை ! அதிலும் அம்மாவிற்கு எதிர்பாராவிதமாய் வந்துவிட்ட முடக்குவாதம் அப்போது கைகொடுத்தது இந்திராவின் தையல்கலைதான் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மிஷினில் உட்கார்ந்தால் நேரம் காலம் பார்ப்பது இல்லை. ஏதோ மனதின் விரக்தியில் இன்றே எல்லாம் முடிந்துவிட்டதைப் போன்று ஆவேசமாய் அவள் தைப்பதைப் பார்க்கும் போது உத்ராவிற்கு மனதிற்கு சற்றே வலிக்கும் எந்தப் பாவத்தை தீர்க்க இவள் தன்னையே செருப்பாய் தைத்து உழைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று தோன்றும். காலம்தான் சிலரை எப்படி மாற்றிவிடுகிறது இன்று பொறுப்பான அக்காவாய் தாய்க்கு பணி செய்யும் மகளாய், இருக்கும் இந்திரா ஆறுவருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாள். அந்த மதர்ப்பும் திமிரும் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதே ?! அந்த ரணங்களோடு வந்தவளை அரவணைத்து கொண்டாலும் இந்நாள் வரையில் தங்கையோ தாயோ ஏன் பொடிசுகள் கூட கீறிக் காட்டவில்லையே ?! இதற்கெல்லாம் காரணம் இளையவள் உத்ராதான்.

தாயும் பிள்ளையுமாய் இருந்தாலும் எல்லாருக்குள்ளேயும் ஒரு ரகசியம் ஒளிந்திருக்க வேண்டும் அதை கீறிப் பார்ப்பது இங்கிதம் இல்லை என்ற எண்ணம் உடையவள். அந்த வரையில் சிவகாமி அம்மாள் பெற்ற மூன்று பெண்களுமே அன்பில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை. தம்பி மணி இரண்டும் கெட்டான். 15வயது அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிப்பதைக் குறைத்துக் கொண்டாலும், தனக்கு மட்டும் எதுவும் கிடைப்பதில்லை என்று கழுத்து மட்டும் குறை பேசுபவன் இப்படிப்பட்ட குடும்பத்தின் இரண்டாவது மகள் தான் உத்ரா. ராஜயோகம் கொண்ட பெயர்தான் ஆனால் பெயரில் இருந்தது வாழ்வில் இல்லையே ? குடும்ப நிலையை யாரும் உரைக்காமலே அறிந்துகொண்டவள். 12வுடன் படிப்பை நிறுத்தி ஒரு துணிக்கடையில் வேலை செய்து கொண்டே படித்து பட்டம் பெற்றவள். இப்போதும் ஒரு வேலைக்கான அனுமதிகேட்டுதான் அவள் தாயிடம் வந்திருப்பதே. மற்றநேரங்களை விடவும், காலைவேளைகளில் அன்னை சிவகாமியின் கால்களுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் பண்ணும்போது தான் வேண்டிய விஷயங்களை விவாதிப்பது பிள்ளைகளின் வழக்கம்.

வீட்டின் நிர்வாகம் பிள்ளைகளின் கைகளில் விழுந்துவிட்டாலும், அன்னையுடன் சேர்ந்துதான் அவர்கள் எல்லாவற்றையும் விவாதிப்பது. சிறுவயதிலேயே வீட்டில் என்ன பேசினாலும் எதைப்பற்றி விவாதித்தாலும் பிள்ளைகளையும் சேர்த்துகொள்ளவேண்டும் குடும்ப நிலைமை அதன் நேர்த்தி பிள்ளைகளுக்கு தெரிந்தால் தான் தானும் இந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினன் என்ற ஒட்டுதல் இருக்கும் என்றெல்லாம் சிவகாமி பேசும்போது அதையே ரசித்துக்கொண்டு இருப்பாள் உத்ரா. எத்தனையோ நாள் தந்தையின் அரைவேக்காட்டுக் கத்தல்களையும், போதையின் கோபத்தையும்,காமத்தையும் தாங்கிக்கொள்வதை தன் பிள்ளைகளிடம் இருந்து மறைத்து விட்டாலும் அம்மாவின் வலி மிகுந்த வார்த்தைகளும், கண்களில் அதிகம் காய்ந்து போயிருக்காத கண்ணீர் கோடுகளும் அதை உரைத்துவிடும்.

உத்ரா நம்ம கோவிந்தன் மாமா ஒரு வரன் சொல்லிட்டு போயிருக்கார் ஒரே பையனாம் மளிகைகடை வைத்திருக்காராம். அவ்வளவா படிப்பில்லைன்னாலும் எந்த கெட்டபழக்கமும் இல்லைன்னார் வர்ற ஞாயிற்குகிழமை பெண் பார்க்க வர்றதாய் சொல்லியிருக்காங்க நீ என்ன சொல்றே ?

நம்ம குடும்பம் இப்போ இருக்கிற நிலைமைக்கு எனக்கு கல்யாணம் அவசியமாம்மா ? நீங்க புரிஞ்சிதான் பேசுறீங்களா ? ஏற்கனவே கல்யாணம் செய்திட்ட அக்காவோட நிலைமையை பார்த்தேயில்லை, இன்னும் எனக்கும் கல்யாணம் பண்ணி நானும் ஒரு பிள்ளையைச் சுமந்திட்டு வந்து நிக்கணுமா என்ன? இப்போதான் கமலி கல்யாணம் முடிவாயிருக்கு நம்ம கஷ்டம் உணர்ந்து என்னதான் நித்திலன் வீட்டில் ஏதும் வேண்டான்னு பெருந்தன்மையா சொன்னாலும் நாமும் கொஞ்சமாவது செய்ய வேண்டாமா எல்லாத்தையும் யோசிச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். முதல்ல தம்பி படிப்பு முடியட்டும், அவன் குடும்பத்தை தாங்குற சூழ்நிலை வந்தபிறகு நான் என் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறேன்.

அம்மா உன் கல்யாணப்பேச்சை இப்ப ஆரம்பிக்கறதுக்கு காரணமே நீ தேர்ந்தெடுக்கிற வேலைதான். அது வேணாம் உத்ரா இத்தனை ஆபத்தான வேலையை நீ கையிலெடுக்கணுமா உத்ரா., இன்னும் கொஞ்சநாள் இப்போ பார்க்கிற வேலையைப் பாரு, என்னோட தையல் தொழிலும் இப்போதான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு அதனால……..அம்மா சொல்றதுதான் எனக்கும் சரின்னு படுது, கொஞ்சம் யோசிச்சு செய்யுடி ? எத்தனையோ கஷ்டத்திலும் உடன்பிறந்தவ நீ ஒருத்தி கூட இருக்கிறங்க நிம்மதியும் எனக்கு கிடைக்காதா ?

அக்கா அம்மா பயப்படறதுல ஒரு நியாயம் இருக்கு, உனக்கு என்னைப் பற்றி நல்லாத்தெரியும். நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்னா அதுக்கு முன்னாடி எத்தனைதரம் யோசிச்சு இருந்திருப்பேன், நம்மோட தேவைக்கு இதுதான் சரியா இருக்கும். யார் எப்படி வேணுன்னா போங்கன்னு கல்யாணம் பண்ணிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாதுக்கா, எனக்கு நீயும் அம்மாவும் தம்பி எல்லாரும் முக்கியம், பக்கவாதத்தில் இருக்கிற அம்மா, இரண்டு கெட்டான் தம்பி, முதுகொடிய வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நீ இதையெல்லாம் பார்த்திட்டு நான் மட்டும் சந்தோஷமா வாழ முடியமா ? உறுத்தல் இல்லாத வாழ்க்கை எனக்கு வேணும் அக்கா. தயவுசெய்து என்னையாரும் கட்டுப்படுத்தாதீங்க என் மேல நம்பிக்கை வைச்சு அனுப்பிவையுங்க ஆபத்து எங்கேதாம்மா இல்லை. சாப்பிடும் விக்கி செத்தவங்க எத்தனை பேர். எனக்கு ஆயுள் கெட்டி, கவலைப்படாம அனுப்பி வைம்மா. மேலும் நான் போறதுன்னு முடிவு எடுத்தாச்சு இனிமேல இதைப் பத்தின விவாதம் வேண்டாம் அக்கா சாப்பாடு எடுத்து வை எனக்கு மெடிக்கல் செக்கப் இருக்கு சட்டென்று பேச்சைக் கத்தரித்துவிட்டு செல்லும் தங்கையை கலக்கத்துடன் பார்த்தவாறு அன்னையின் அருகில் சென்றாள் இந்திரா.

இத்தனைக்கும் தானும் ஒரு காரணம் என்று மனம் பதைத்தது. எனக்கு குடும்பம் முக்கியம் என் சுகம் முக்கியமில்லை என்று சொல்லும் அந்த இருபத்தியொரு வயது பெண்ணிடம் இருக்கும் நேர்த்தி மன உறுதி அன்று தனக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது. சம்பாதித்து போடாவிட்டாலும் வீட்டுக்கு ஒரு ஆண்மகன் தாயின் பொட்டிற்கு காவலாய் இருந்த தந்தையின் உயிருக்கு அல்லவா எமனாகிப்போனாள் அவள். கடந்த காலத்தை எண்ணியெண்ணி வேதனைப் படும் நிலைதானே அவளுக்கு, அதை மறக்கத்தானே அவள் தையல்வேலையில் மூழ்கியிருக்கிறாள். ஆனாலும் நடந்துவிட்ட தவற்றை இனி சரிசெய்ய இயலாது, அதற்கு பதில் தங்கையிடம் சற்று மனமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதுதான் என்று அமைதிகாத்தாள். நீங்க கவலைப்படாதீங்கம்மா உத்ரா என்னைவிட தெளிவான பொண்ணு அவளுக்குத் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெம்பு இருக்கு. இருந்தாலும் நான் மறுபடியும் பேசிப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கஞ்சியை அன்னைக்குப் புகட்டினாள் இந்திரா.




 

What’s your Reaction?
+1
18
+1
24
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!