Sprituality

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்..   

ஆருத்ரா தரிசனம் எப்போது நடந்தது தெரியுமா…?




பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபூஜை சிறப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக, மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அன்று சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடக்கும். அன்று பெண்கள் விரதம் இருந்து சிவனை வழிபடுவர். ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை  ஆனது.

ஆருத்ரா தரிசனம் தோன்ற காரணமாக இருந்த  பூரண கதை

ஒரு  காலத்தில் திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே  திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு  அவள் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்க சபதம் செய்தாள். அவளது சப்தத்தைக் கேட்டு அதிர்ந்து போன சிவன் உடனே எமலோகத்தை ஒரு  பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன் பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.




இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது. சேந்தனாருக்கு திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானின் நட்சத்திரமாக  அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

திருவாதிரை விரதம் இருப்பது எப்படி?

மார்கழி மாதம் என்றாலே இறைவனுக்கு உகந்த மாதமாகும். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த சிறப்பு மிகுந்த நாளாகும்.

அந்த திருவாதிரை நட்சத்திரத்தன்று திருமணமான பெண்கள் மாங்கல்ய நோன்பு இருப்பர். அன்று திருவாதிரை விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் தில்லை சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானை தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றது. அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். அன்று வீட்டில் முறைப்படி இறைவனை வழிபட்டு நைவேத்தியமாக களி படைக்க வேண்டும். முழு நிலவு இருக்கும் வேளையில், சிவபெருமானை வழிபட்டால் சிவ பார்வதியின் அருள் கிடைத்து, தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து தீர்காயுள் பெறுவார்கள். கன்னிப்பெண்கள் தனக்கு பிடித்தமான வரன் கிடைக்க வேண்டியும், திருமணமான பெண்கள் கரம் பிடித்த கணவன் நீண்ட ஆயுள் பெற வேண்டியும் இந்த பூஜையை செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்து, பதினெட்டு வகையான காய்கறிகளை சமைத்து படையல் போட வேண்டும்.

பூஜையில் குலதெய்வமும், சிவபெருமானும், முழு முதற்கடவுளான விநாயகரும் இடம் பெற்றிருப்பது அவசியமாகும். முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அருகம்புல் சாற்றி தயார் செய்து கொள்ளுங்கள். விநாயகரை வணங்கிய பின் தான் எந்த ஒரு பூஜையும் ஆரம்பிக்க வேண்டும்.

பூஜையில் மஞ்சள் தாலி சரடை வைத்து வழிபடுவார்கள். புதிதாக திருமணமான பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்து, உறவினர்களையும் அழைத்து திருவாதிரை விரதம் இருந்து பூஜை செய்து தாலி சரடு மாற்றுவார்கள். நோன்பிருக்கும் பெண்கள் திருவாதிரை அன்று அதிகாலை 5 மணிக்கு பட்டினி சோறு உண்டு ஆரம்பிப்பார். பகல் முடிந்து இரவு வந்ததும் பூஜைகள் ஆரம்பமாகும்.

திருவாதிரைக்கு பிரசித்தி பெற்ற களி, 18 வகை காய்கறி கூட்டு மற்றும் பச்சரிசி அடை அனைத்தும் நைவேத்தியமாக வைத்து படைத்து. பின்னர் சந்திரனை வழிபட்டு விரதம் முடிப்பர்.

பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் தாலியை கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு குடும்பத்துடன் அமர்ந்து படையலை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது உத்தமம். இதனால் இவர்களுக்குள் அன்னோன்யம் பெருகி ஒற்றுமை நிலைக்கும் என்பதாகும்.

 

திருவாதிரை களி வரலாறு

 


சேந்தன்  என்னும் ஏழை விறகு வெட்டி ஒரு பெரிய சிவபக்தன். சேந்தனார் சில சிவ பக்தர்களுக்கு உணவளித்த பின்னரே உணவு உண்பவர். ஒரு நாள் மோசமான வானிலை காரணமாக அவரால் சரியான உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேகரிக்க முடியவில்லை. அதனால் கேழ்வரகு களி தயாரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. சிவனடியாருக்கு உணவு தயாரித்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.

சிவபெருமான் அவனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டார். தன் பக்தன் தன்னிடம் எவ்வளவு நேர்மையானவன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் சிவபக்தர் போல் வேடமணிந்து சேந்தனாரின் குடிலுக்குச் சென்று அவருக்கு உணவாகக் கொடுத்ததை உண்டு மகிழ்ந்தார்.

 மறுநாள் காலை பிரமாண்டமான சிதம்பரம் நடராஜர் கோவில் திறக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள், களி வளாகம் எங்கும் சிதறியதைக் கண்டனர். இதுவரை இந்த உணவை இறைவனுக்கு படைத்ததே இல்லையே எப்படி இங்கு வந்தது என்று குழம்பிப் போனார்.

மன்னருக்கு செய்தி போனது, அன்று மன்னர் கனவில்,  நடராஜ பெருமான் சேந்தனின் பக்தியையும், களியின் ருசியையும் தெரிவித்தார். இவ்வாறு சேந்தனாரின் பக்தியைப் புரிந்துகொள்ள வழிவகுத்தன, அதன்பிறகு அவருக்கு அனைத்து மரியாதையும் வழங்கப்பட்டது. சேந்தனார் அவர் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். இந்த சம்பவம் மார்கழி திருவாதிரையில் நடந்துள்ளது. அதனால்தான் இந்த புனித நாளில் திருவாதிரை காளி ஒரு முக்கியமான பிரசாதமாக அமைகிறது.

திருவாதிரை களி நமது வீட்டில் எப்படி செய்வது என்பதனை தனி பதிவாக போட்டுள்ளோம்.வாசகர்கள் அதனை பார்த்து செய்து களி படைத்து சிவபெருமானின் அருளை பெறுக




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!