Sprituality

திருவெம்பாவை பாடல் -20 

திருவெம்பாவையின்  பாடல்களும் பொருளும்

 


திருவெம்பாவை பாடல் 20 

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர்  எம்பாவாய்.

  – மாணிக்கவாசகர்

சொற்பொருள்:

ஆதி – முதல்; அந்தம் – முடிவு;

போகம் – இன்பம்;

ஈறு – இறுதி;

புண்டரீகம் – தாமரை;

உய்ய – உருப்பட.

பொருள் விளக்கம்:




  முதலும் முடிவுமாய் விளங்கும் சிவபெருமானே! நினது மலர் பாதங்கள் போற்றுகிறோம். அருள்வாயாக. நீயே எல்லா உயிர்களின் பிறப்புக்கும் காரணமாகிறாய். உன் பொற்பாதங்கள் போற்றுகிறோம். உலகின் எல்லா உயிர்களும் இன்பத்தில் திளைத்திடச் செய்கிறாய். உன் பூ போன்ற பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களும் வாழ்வாங்கு வாழ்ந்த பின் அவர்களுக்கு முடிவைத் தருகிறாய். உன் இணையடிகளைப் போற்றுகிறோம். நான்முகனாலும் தேடிக் காணக் கிடைக்காத உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகிறோம். நாங்கள் கடைத்தேற்றம் பெறக் காரணமாயிருக்கும் உன் பொன்மலர் பாதங்களைப் போற்றுகிறோம். உன் பொன்னார் திருவடிகளே சரணம் என்று சொல்லியவாறு மார்கழி நீராடி பாவை நோன்பு நோற்கின்றோம்.

தத்துவ விளக்கம்:

  இறைவனின் திருவடிகளை சிக்கெனப் பிடித்து சரணடைந்தால் நாம் பிறவித் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறலாம் என்பது இப்பாடல் மூலம் அறியக் கூடிய நுட்பமான செய்தியாகும்.

       திருவெம்பாவை உரை நிறைவுற்றது.




What’s your Reaction?
+1
2
+1
4
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!