Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 22

    22

உன் இதயத்தினுள் எனக்கான
இடத்தை நானே வரைய
விரல்களை சொடுக்கி கொண்டிருந்தேன்
அனுமாரின் நெஞ்சல்ல
என்னுடையதென்றாய்
காதலின் ஒற்றைப்புள்ளியை
ஒற்றிக்கொண்டிருக்கையில்
எனது உடலை சிறிது சிறிதாய்
தின்று கொண்டிருந்தாய்
பெண்மையின் நாணத்தை
விழுங்கி விட்டு
ஆணுமற்ற பெண்ணுமற்றதுமான
ஏகாந்த நேரமொன்றில்
உன்னால் மினுங்கிக் கொண்டிருந்தேன்
வரிவரியாய் எனை எழுதி விட்டு
உன்னுள் முழுமையாய் நானென்றாய்
என்னை உனை கொண்டு
செதுக்கியபடி
நீ வாங்கி வராத பூவை
மறந்தே போனேன் .




” மலேசியாக்காரங்க வீட்டில் பாதி வேலை முடிந்து விட்டது .நீங்கள் பார்க்க வருகிறீர்களா சாம்பவி …? ” ஷ்ராவத் கேட்டான் .

சாம்பவிக்கும் பார்க்கும் ஆவல்தான் .ரிஷிதரனை திரும்பி பார்க்க அவன் , தலையை நிமிராமல் லேப்டாபினுள் தொலைந்து போயிருந்தான் .அன்று குடோனினுள் நடந்த சம்பவத்திற்கு பிறகே இப்படித்தான் இருந்தான் .எதிலும் கலந்து கொள்ளாமல் , பட்டுக்கொள்ளாமல் …ஆனால் அதனை மற்றவர்கள் கண்டு கொள்ள முடியாதபடி சாமர்த்தியமாக நடந்து கொண்டிருந்தான் .

ஆனால் சாம்பவி அவனை முழுவதுமாக அறிவாளல்லவா …? ரிஷியின் விலகலை அவள் பூரணமாக உணர்ந்தாள் .குறிப்பாக சாம்பவியிடம் ….அவள் இருக்குமிடத்தில் இருப்பதில.லை , அவள் அருகே அமர்வதில்லை , அவள் பக்கமே திரும்புவது கூட இல்லை .அப்படியும் பேச நேர்ந்துவிட்டால் நூறு மேடம் , ஆயிரம் வாங்க..போங்க …

“இந்த கண்றாவிக்கு பேசாமலேயே இருந்து தொலைந்து விடலாம் …”  அவன் காதில் விழட்டுமென்றே கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்து பார்த்தாள் .

அவனோ தீவிரமாக சன்னல் வழியாக வெளியே ஆராய்ந்தான் .

“மழை பெய்கிறதா என்ன …? என்று வேறு கேட்டு வைத்தான் ..

” வெளியே வெயில்தான் ..அனலாக காய்கிறது ….” எரிச்சலாக சொன்னாள் .

” ஓஹோ …” என்று மீண்டும் லேப்டாபினுள் நுழைந்து கொண்டான் .

” எதற்கு இப்போது இரண்டு பேரும் மாறி மாறி வானிலை அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் …? ” சஹானா இடையில் புகுந்து கலைத்தாள் .

” மேடத்தை கேள் சஹி .அவர்கள்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் …” தலையை நிமிர்த்தாமலேயே சாம்பவியின் புறம் கையை நீட்டினான் .

நறுக்கென இவனை கிள்ளி வைத்தால் என்ன …என்ற யோசனையில் சாம்பவி இறங்கியபோது ,ரிஷிதரன் தனது இருக்கையை நகர்த்தி ஷ்ராவத்தை ஒட்டி போட்டுக் கொண்டான் .

” என்னடா …? ” என்றவனுக்கு பதிலாக ..

” ஒரு பாதுகாப்பிற்காகத்தான் ….” என்றான் .அப்போதும் சாம்பவியின் பக்கம் திரும்பவில்லை .

சாம்பவிக்கு மிகஙும் பிடித்த வேலை இந்த வீட்டு ஆல்ட்ரேசன் . முதலில் இருந்தே சஹானாவிற்கு இது பிடிக்காத வேலை .அதனால் அவள் வரமாட்டாள் .சாம்பவிதான் ரிஷிதரனுடனோ …ஷ்ராவத்துடனோ அடிக்கடி போய் பார்த்து அந்த வேலை சம்பந்தமாக ஐடியாக்களை சொல்லிக்கொண்டிருந்தாள். இப்போது கொஞ்ச நாட்களாக அவளுடன் ரிஷிதரன் வருவதில்லை .

ஆனால் வேறு வேலை விசயமாக போகும் போது அவன் மட்டும் தனியாக போய் இந்த வீட்டு வேலையை கவனித்து வருகிறான் என்பதை அவள் அறிவாள் .சாம்பவிக்கு ரிஷி வராமல் அந்த வீட்டிற்கு போக பிடிக்காமல் போனது .இப்போது அவன் வருவானா …என்ற எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க …அவன் …

” எனக்கு வேலை இருக்கிறதுடா ஷ்ரத் .நீங்கள் போய் வாருங்கள் …” என்றான் தலையை நிமிர்த்தாமல் …




பெரிய வேலை ….இவன் பெரிய ப்ரைம்மினிஸ்டர் …நாட்டு வேலை பூராவும் இவன் டேபிளில்தான் குவிந்து கிடக்கிறது …பந்தாவை பார் …மனதிற்குள் அவனை வைதபடி …

” ஷ்ரத் …நரேந்திரமோடி கூட பிரதமர் அலுவலகத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியில் …அதாவது நாடு நாடாக ஜாலியாக சுற்றுகிறார் ….உங்களுக்கு தெரியுமில்லையா …? ” என்றாள் .

சாம்பவியின் சம்பந்தமில்லாத இந்த திடீர் பேச்சில் விழித்தான் ஷ்ராவத் .பிறகு சாம்பவியை தொடர்ந்து அவன் பார்வை ரிஷிதரனை அடைய மெல்ல புன்னகத்தபடி தோள்களை குலுக்கியவன் …

” சாம்பவி ..ஐ ஆம் கான் ….” என போய்விட்டான் .அந்த வானிலை அறிக்கை பேச்சில் நொந்துபோய் சஹானா முன்பே போயிருந்தாள் .

சாம்பவி கொஞ்ச நேரம் ரிஷிதரன் நிமிர்ந்து பார்ப்பானா …என அங்கேயே நின்று பார்த்தாள் .அவனுக்கு அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லாத்து உறுதியாகி விட ,

” சரிதான் போடா புருசா …” என இதழ்களை மட்டும் அசைத்து விட்டு ஸ்டாக்குகளை பார்க்க குடோனிற்குள் நுழைந்து கொண்டாள் .

அவள் போனதும் மெல்ல வாய்விட்டு சிரித்துக் கொண்டான் ரிஷிதரன் .

” ரிஷி …ஷோரூமின் வெளியே ..ரைட் கார்னரில் ஒரு டியூப்லைட் மாட்டினால் நன்றாக இருக்காது …? ” அபிப்ராயம் கேட்டபடி வந்தாள் சஹானா .

அவளுடன் வெளியே வந்து அவள் காட்டிய மூலையை பார்த்த ரிஷிதரன் …” நாட் எ பேட் ஐடியா சஹி .பட் அதை விட இந்த இடத்தில் உயரமாக நம் கம்பெனி போர்டு வைத்தால் எப்படி இருக்கும் …? போர்டை சுற்றிலும் லைட் டெகரேசன் பண்ணிவிட்டால் , தூரத்தில் வரும்போதே எல்லா வெகிகிள்சும் நம் போர்டை பார்த்து படிக்கும் வாய்ப்பிருக்கிறதே ….”

” யா …இட்ஸ் எ நைஸ் ஐடியா …இது நமக்கு ஒரு அட்வர்டைஸ்மென்ட் மாதிரியும் ஆகிவிடும் ….” சஹானா தலையை ஆட்டி ஒத்துக்கொண்டிருந்தாள் .

அப்போது வேகமாக அங்கே ஓடி வந்த சாம்பவி ,” கார் …ஆஸ்பிடல் …என துண்டு …துண்டாக உளறிவிட்டு …சஹி ..உன் கார் கீ …கொடு …” என்றாள் .

” அது உள்ளே ..எதற்கு சாம்பவி ….”




” ஏங்க உங்க கார் கீ தாங்க …” என்றவள் ரிஷிதரன் தன் பாக்கெட்டிலிருந்து அதனை எடுக்கும் வரை கூட பொறுமையின்றி வேகமாக தானே அவன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்தாள் .

” ரிலாக்ஸ் சாம்பவி ..வாட் ஹேப்பன்ட் …? ” ரிஷி கவலையுடன் கேட்டபோது …அவள் சாவியுடன் பின்புறம் குடோனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள் .

” சின்ராசு மேலே கல் சரிந்து ….” அரைகுறையாக தகவலை சொல்லியபடி ஓடினாள் .

ரிஷியும் , சஹியும் பதட்டத்துடன் பின்பக்கத்தை அடைந்த போது சாம்பவி , கார் செட்டில் நிறுத்தியிருந்த ரிஷியின் பஜிரோவை …லாவகமாக ரிவர்ஸ் எடுத்து கொண்டு வந்து குடோனின் வாசலில் நிறுத்தியபடி இருந்தாள் .

குடோனின் உள்ளிருந்த கையில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கியிருந்த  சின்ராசை இருவர்
சேர்ந்து தூக்கிக்கொண்டு வர , அவர்களை காரின் பின்னால் ஏற்றிக் கொண்டவள் , ஸ்பீடாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் .இவர்கள் நின்றிருந்த இடத்தை கடக்கும் போது சிறிது வேகத்தை ஸ்லோ பண்ணி , ” ஹாஸ்பிடல் வந்திடுங்க …” என்றுவிட்டு போனாள் .

” ஐயோ ரிஷி ..என்னதிது அவள் பாட்டுக்கு போறா .அவளுக்கு காரெல்லாம் ஓட்ட வராது ….” பதறிய சஹானாவை …

” ரிலாக்ஸ் சஹி ..அவள் ரிவர்ஸ் எடுத்த மெச்சூரை பார்த்தாயல்லவா …? நிச்சயம் நன்றாக டிரைவ் பண்ணுவாள் .நீ போய் உன் கார் கீயை எடுத்து வா .நாம் ஹாஸ்பிடல் போகலாம் …” என்றான் .

இவர்கள் போன போது சாம்பவி ஆபரேசன் தியேட்டர் வெளியே உட்கார்ந்திருந்தாள் .உடன் வந்த வேலையாட்கள் தள்ளி நின்றிருந்தனர் .

” என்னாச்சு சாம்பவி …? ” சஹானா விசாரித்தாள் .

” ஆபரேசன் நடக்கிறது .இரண்டு விரல்கள் துண்டாகி விட்டது சஹி .வலது கையில் ….” சாம்பவியின் குரலில் கலக்கம் .

சஹானா ” மை காட் …” என …

ரிஷிதரன் ” முட்டாள் இந்த அளவு போகும் வரை என்ன செய்தான் அவன் …? ” என்றான் கோபமாக .

” அவன் விளையாட்டு பிள்ளைங்க முதலாளி .விளையாட்டுத்தனமா இங்கிருக்கிற கல்லை அங்கும் , அங்கே இருக்கிறதை இங்கேயும் தூக்கி வச்சி விளையாடிட்டு இருந்தான் .மேலே தூக்கி வைத்த கல்லை சரியாக வைக்காமல் அதை ஆட்டி …பார்த்து வேறு விளையண்டான் .நான் பார்த்து , ” டேய் சும்மாயிருடா …கையில் விழுந்திட போகுதுன்னு சொல்லும் போதே கல்லு கையில் விழுந்து விரலை நசுக்கிடுச்சு .விரல் துண்டாக போய்விட்டது .என் விரல் …என் விரல்னு கத்துறான் ….”என்றான்  மாடசாமி .உடன் வந்தவன் .

” இவனையெல்லாம் ….வேலை நேரத்தில் என்ன விளையாட்டு இவனுக்கு ….” ரிஷி பற்களை கடிக்க ,

” ஐயோ அப்போது அவனது விரல்கள் …” சஹானா கத்தினாள் .

” அதையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன் சஹி …ஒட்டிக் கொள்ள வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்…” என்றாள் சாம்பவி .

” ஆமாங்க , அந்த பரப ரப்பிலும் சாம்பவி மேடம் அந்த விரலை தேடி எடுத்துட்டு வந்து டாக்டர்கிட்ட கொடுத்திருக்காங்க …ஒட்ட வச்சிடலாமாமே ….” மாடசாமி




” எப்படி எடுத்து வந்தாய் ..? ரிஷிதரன் கேட்டான் .

” ப்ரிட்ஜிலிருந்து கொஞ்சம் ஐஸ்கட்டி எடுத்து , ஒரு கேரிபேக்கில் போட்டு , அதனுள் அந்த விரலையும் போட்டு எடுத்து வந்தேன் …ஆனாலும் பயமாக இருக்கிறது ….”

” இன்னமும் அதிக நேரம் ஆகிவிடவில்லை சாம்பவி .ஒட்டிக்கொண்டுவிடும் ….” ரிஷிதரன் ஆறுதலாக சொன்னான் .

ஆச்சரியமாக இவற்றை பார்த்த சஹானா ” சம்பா நிஜம்மாகவா …இப்படி துண்டான விரல்கள் ஒட்டிக் கொள்ளுமா ….? ” என்றாள் .

” ஆமாம் …குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு வந்தால் ஒட்டிக்கொள்ளும் …” அவளுக்கு பதிலளித்துவிட்டு பதட்டமாக பார்த்தாள் சாம்பவி .அவர்கள் காத்திருக்க தொடங்கினார்கள் .

ஆபரேசன் தியேட்டரினுள்ளிருந்து வந்த டாக்டர் ” இனி பயப்பட வேண்டாம் .விரல்கள் ஒட்டிக்கொள்ள தொண்ணூற்றியெட்டு சதவிகித வாயப்பிருக்கிறது …” என்ற சொன்ன பிறகே அனைவர்க்கும் நிம்மதியானது .

டாக்டருடன் மீதி விபர்ங்கள் பேச அவரது அறைக்குள் சென்றான் ரிஷிதரன் . மாடசாமியும் , அவனது நண்பனும் டீ குடிக்க சென்றனர் .சஹானா பில் கட்டுவதற்கு போனாள் .சாம்பவி மயங்கியிருந்த சின்ராசுவை போய் பார்த்துவிட்டு வந்து அமர்ந்தாள் .

டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்த ரிஷிதரன் அவளை பார்த்து விட்டு ,அந்தப் பக்கம் கையில் மருந்து, பஞ்சு , பேன்டேஜ் துணிகளோடு இருந்த டிரேயோடு போன ஒரு நர்சை நிறுத்தினான் .அவள் கை டிரேயை வாங்கிக் கொண்டு வந்து சாம்பவியின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான் .

” இங்கே பார் …இதை பார்க்கவேயில்லையா நீ …? ” அதட்டலோடு கேட்டபடி அவளது கையை திருப்பி காட்டினான் .

சாம்பவியின் கையில் முழங்கையிலிருந்து கனுக்கை வரை ஒரு நீளமான கீறல் இருந்த்து ்ரத்தம் வழிந்து உறைந்து கருஞ்சிவப்பாக கெட்டித்திருந்த்து .

” இது …எப்போது பட்டது .நான் கவனிக்கவேயில்லையே …ஸ் …ஆ …எரிகிறது …” ரிஷிதரன் சாவ்லானை ஊற்றி துடைக்க மெல்ல கத்தினாள் .

” காயப்படும் போது தெரியாது .மருந்து போடும் போது வலிக்கிறதாக்கும் ….” என்றபடி மென்மையாக கெட்டித்திருந்த ரத்தத்தை துடைத்து எடுத்தான் .

நீ தொட்டதும் வலி போய்விட்டது …மனதிற்குள் நினைத்தபடி பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டு அவனுக்கு கைகளை மருந்திடுவதற்காக காட்டினாள் .

” அச்சச்சோ …நீயும் அடிபட்டுக் கொண்டாயா …? என்ன சம்பா இது ..? கவனமாக இருந்திருக்க கூடாதா …? சாம்பவியின் மறுபுறம் வந்து அமர்ந்து அவள் கைகளை பார்த்தாள் சஹானா .

” உன் ப்ரெண்ட் அந்த தொழிலாளியை காப்பாற்றுகிற வேகத்தில் இருந்திருக்கிறாள் .தன் உடம்பில் இவ்வளவு பெரிய கீறல் வந்த்து கூட தெரியவில்லை ….மனதிற்குள் பெரிய அன்னை தெரசான்னு நினைப்பு  …”




” இவள் எப்பவுமே இப்படித்தான் ரிஷி .சுற்றியிருப்பவர்களுக்காக நூறு பார்ப்பாள் .தனக்கென்றால் ஒரு கவலையும் தெரியாது ….ஸ் …இந்த புண் கொஞ்சம் ஆழமாகத்தானே தெரிகிறது .பேசாமல் ஒரு டிடி போட்டு விடுவோமா …? “

” இப்போது இந்த மருந்தை போடலாம். டாக்டர் வரவும் அவரிடம் காட்டி கேட்டு கொள்ளலாம் …”

தனக்கு இருபுறமும் அமர்ந்தபடி ஒரு சாதாரண கீறலுக்காக இந்த அளவு பதட்டபடும் தன் உறவுகளை பெருமிதம் கலந்த புன்னகையுடன் பார்த்தபடி இருந்தாள் சாம்பவி .

உனது கோபம் போய்விட்டதா …கண்ணால் கணவனிடம் கேட்டபடி இருந்தாள் அவள் .அவள் கேள்வியை உணர்ந்தும் …அறியாதவன் போல் காயத்திற்கு மருந்தட்டுக்கொண்டிருந்தான் அவன் .




What’s your Reaction?
+1
50
+1
28
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!