Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -4

அத்தியாயம்-4

வெயில் தீவிரம் கொண்டிருந்த மதியவேளை நேரம்.

மும்பை மாநகரை விட்டு சற்று தள்ளியிருந்தது அந்த ஊர். கிராமம் நகரம் என பிரித்தறியாத நடுநிலையான  ஊர். அந்த ஊரில் நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளம்பெண் பிரியங்கா. பிரியங்காவை பொறுத்தவரை கவலை கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்கை வெளியில் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கும் பெண்.

பிரியங்கா பிறந்து வளர்ந்ததெல்லாம் அதே ஊரில்தான். வீட்டிற்கு செல்லப்பிள்ளை, படிப்பில் கெட்டிக்காரி, அதைத்தவிர சமையல், ஆர்ட், பரதநாட்டியம்,கர்நாடகஇசை பாடல், என்று எதையும் விட்டுவைக்காமல் கற்றுத்தேர்ந்திருந்தாள்.




இவ்வளவு திறமைகளையும் கொடுத்த ஆண்டவன் அழகை மட்டும் இரண்டு மடங்கு அள்ளிக்கொடுத்திருந்தான். ஒருமுறை பார்த்தவர்கள் திரும்பி பார்க்காமல் கடந்துச்செல்ல முடியாது. அந்த அளவுக்கு அழகில் வானலோக தேவதையாய் ஜொலித்தாள்.

பிரியங்கா கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். அன்று கல்லூரிக்கு வந்ததிலிருந்தே பாடத்தில் கவனம் செல்லாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மதியம் உணவுக்கு பிறகு அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. காரணம் நாளைக்கு மறுநாள் பள்ளித்தோழி வினிக்கு திருமணம். அந்த திருமணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஒண்ணுவிட்ட பெரியப்பா மகள் திருமணத்திற்காக சேலம் போகவேண்டும். அதற்காக இன்றே கொடைக்கானல் அருகே இருக்கும் அந்த மலை கிராமத்துக்கு சென்று வினியின் திருமணத்தை முடித்துவிட்டு பிறகு உடனே சேலம் கிளம்ப வேண்டிய கட்டாயம்.

‘காலேஜ் முடிஞ்ச உடனே வந்துடு!! ஊருக்கு போறதுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கணும்.’ என்று தாத்தாவும் பாட்டியும் மாறி மாறி சொல்லி அனுப்பியது நினைவில் வந்துப்போனது. வினியும் இவளும் சிறுவயதிலிருந்தே ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். வினியோட வீடு பிரியங்கா வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்ததால் பிரியங்கா வினியோட வீட்டிற்கு சென்று அங்கிருந்து இருவரும் இணைந்து பள்ளிக்கு செல்வார்கள். அப்பா இல்லாத பிள்ளை என்று அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிரியங்கா மேல் தனி பிரியம். ஒண்ணாகவே வளர்ந்தவர்களுக்கு வினியின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகவே கொடைக்கானல் போக வேண்டிய சுழ்நிலை. அதனால் வினி கொடைக்கானல் கல்லூரியிலும் பிரியங்கா மும்பை கல்லூரியிலும் படிப்பை தொடர்ந்தார்கள்,

பிரியங்கா ஐந்தாவது முறையாக தன் இடது கை மணிக்கட்டை திருப்பிப்பார்த்து உச்சுக்கொட்டினாள். பாடங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. போனமுறை கொடைக்கானல் போனபோது ஊரும் அதில் சுற்றி திரிந்த நினைவுகளும் கண்முன் அழகிய காட்சிகளாய் விரிந்தது.




தண்ணீர் பளிங்கு மாதிரி குதித்தோடியது. நடைபாதையின் இருபுறமும் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் காட்சி  மகிழ்வூட்டியது. கண்களுக்கு விருந்தாக ஆங்காங்கே மரவீடுகள் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த கிராமத்தில் சிமெண்ட், கான்க்ரீட் வீடுகள் மிகக்குறைவு. பழைமை மாறாத மண்வீடுகளையும், மூங்கில் வீடுகளையுமே அங்கு வாழும் மக்கள் அதிக அளவில்  பயன்படுத்துகின்றனர். ஊருக்குள் பல நூற்றாண்டு கால பழைமையான ஆலமரத்தின் விழுதுகளால் ஆன இயற்கைப் பாலம் ஒன்றிருந்தது. அது இந்த கிராமத்தையும், அருகிலிருக்கும் கிராமங்களையும் இணைக்கிறது., அந்த பாலத்தில் நடந்து செல்லும் போது ஊஞ்சல் ஆடுவது போன்ற சுகத்தை தருகிறது.

விவசாயம்தான் அங்கு முக்கியத் தொழில். மிளகு, பெர்ரி பழங்கள், வெற்றிலை பறித்தல் ஆகியவை அதிகமாக காணப்படும். ஆரஞ்சும், எலுமிச்சையும், அன்னாசியும் துளிக்கூட இடைவெளிவிடாமல் வளர்ந்து படர்ந்து பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் வண்ணமிருக்கும். இதையெல்லாம் நினைத்த மாத்திரமே அந்த ஊருக்கே சென்றதுப்போல் ஒரு பரவசத்தை உணர்ந்தாள் பிரியங்கா.

இன்று இரவு குடும்பம் சகிதமாய் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டிற்கு போனவுடன் நாலு  நாட்களுக்கு தேவையான ட்ரெஸ்சை  எடுத்து பேக் பண்ணிக்கொண்டு கிளம்ப வேண்டும். அவ்வளவுதான் மீண்டும் ஒரு முறை இடதுகையைத் திருப்பி மணியைப்பார்த்தாள்.

“பிரியங்கா…உன்ன பிரின்ஸ்பால் கூப்பிடுறாங்களாம் போ…” கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த  புரபசர் ஹிந்தியில் இவளிடம் சொல்ல, இவள் நன்றி  ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினாள்,




“புக்ஸ்,பேக்எல்லாத்தையும்….எடுத்துட்டுவரசொன்னாங்க…எடுத்துட்டுப்போ”

“ஓகே மேம்…” அவசர அவசரமாக புத்தகங்களை அள்ளி பேக்கில் திணித்துக்கொண்டு திரும்பவும் ஒருமுறை நன்றியை உதிர்த்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியில் வந்தாள்.

“பிரின்ஸ்பாலே கால் பண்ணி அழைக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக மாமாதான் வந்திருக்க வேண்டும். ஊருக்கு போக நேரமாகிவிட்டது என்பதற்காக நேரில் அழைக்க வந்துவிட்டாரோ? என்ற யோசனையோடு பிரின்ஸ்பால் அறையை நோக்கி சென்றாள்.

ஆனால் அங்கு வந்திருந்தது இவளுடைய தாத்தா. அவரைப் பார்த்தவுடன் பளிச்சென்று முகம் மலர்ந்தாள். அதற்கு காரணம் அழுக்கு வேஷ்ட்டியும் கதர் சட்டையும் போட்டிருக்கும் தாத்தா தும்பைப்பூ நிறத்தில் உடையணிந்து பளிச்சென்று வந்திருந்தார்.

“தாத்தா…என்ன நீங்க வந்திருக்கீங்க?” கேட்டுக்கொண்டு அருகில் செல்ல அவர் பதில் பேசாமல் சிரிக்க முயன்று தோற்றுப்போய் தலை கவிழ்ந்து நின்றார். ஏதோ விஷயம் இருக்கிறது என்பது இவளுடைய உள்ளுணர்வுக்கு புலப்பட்டது.

“தாத்தா…” அழைத்துக்கொண்டே அவர் கையை பற்ற, வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்பதுபோல் கண் ஜாடை காட்டினார் இவளுடைய தாத்தா. அதற்குள் பிரின்ஸ்பால் “ஓகே சார் கூட்டிட்டு போங்க” என்று பர்மிஷன் கொடுத்தார்.

“தேங்க்யூ மேடம் இன்னொரு  முறை வரும் போது பேசுறேன் இப்ப கொஞ்சம் வேலை இருக்கு…” என்று ஒரு சாரியை தெரிவித்தார்.

தாத்தாவுக்கு பிரின்ஸ்பால் தெரிந்தவர். அதனால் இவள் அமைதியாக தாத்தாவுடன் கல்லூரியை விட்டு வெளியில் வந்தாள்.

“இப்ப சொல்லுங்க தாத்தா என்ன விஷயம்…?” அவர் சொல்லப்போகும் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள தன்னை தயார்படுத்திக்கொண்டு கேட்டாள் பிரியங்கா.




மற்ற நேரமாக இருந்தால் புத்திசாலி என்று இவளை மெச்சியிருப்பார் தாத்தா. ஆனால் அவர் இருந்த மனநிலையில் மீண்டும் ஒருமுறை கேட்டால் அழுது விடுவார் என்று தோன்றியது. அவராகவே சொல்லட்டும் திரும்பத் திரும்பக் கேட்டு அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக பின்தொடர்ந்தாள் பிரியங்கா.

சற்று தூரம் அமைதியாக சென்றவர் மரத்தடி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்கு அருகில் சென்றார். குழப்பமாக அவரை பின் தொடர்ந்து சென்றவள் காருக்குள் இருந்த நபர்களை பார்த்தவுடன் அதிர்ச்சியோடு அருகில் சென்றாள். என்ன இது ஒன்னுமே புரியலையே ஒரே குழப்பமா இருக்கே என்று மனம் சஞ்சலப்பட்டது.

காரணம் காருக்குள் இருந்தது பெரியம்மா மற்றும் பெரியப்பா இருவரும்தான். அடுத்த வாரம் மகளின் கல்யாணத்தை வைத்துக்கொண்டு மும்பை வர காரணம் என்ன? கல்யாண பெண் சுகந்தியை மட்டும் காணவில்லை.

     பிரியங்காவை பார்த்தவுடன் பெரியம்மா தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

“பெரியம்மா…..பெரியம்மா…..”

அருகில் சென்று மெல்ல அழைத்தாள். பெரியம்மாவிடமிருந்து மெல்லிய விசும்பல் சத்தம்.

“என்னாச்சு…யாராவதுசொல்லுங்களேன்?” பிரியங்காவுக்கு தலையே வெடித்து விடும் போலிருருந்தது.

“என்னத்த சொல்ல எல்லாம் நாசமா போயிடிச்சு..” பெரியப்பாதான் பதில் சொன்னார்.




“சுகந்தி…சுகந்திதான் பிரச்சனையா? அப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கேறேன் கரைட்டா பெரியப்பா? சொல்லுங்க பெரியப்பா?”

“நல்லா கேளு பிரியங்கா… ரெண்டு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டாளே? இத நான் எங்க போய் சொல்லுவேன்…” குலுங்கி குலுங்கி அழுத பெரியம்மாவை தேற்ற வழியின்றி விக்கித்துப்போய் நின்றாள்.

“அழாதப்பா…அக்கம் பக்கத்துல எல்லாரும் பார்க்குறாங்க பாரு…” என்றார் தாத்தா.

“பாக்கட்டுமே மாமா…இன்னும் ரெண்டு நாளுல ஊர் உலகமெல்லாம் சிரிக்கப்போவுது…அதை நெனச்சி நான் கவலைப்பட்டுகிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா யாரோ ரோட்டுல போற மூனாவது மனுஷங்க பார்க்குறாங்கன்னு கவலைப்படுறீங்க….”

“அ…அதுக்கில்லை காருக்குள்ள போய் உட்கார்ந்துப்பேசுலான்னு…”

“ஆமாம் பெரியப்பா உள்ள போய் பேசலாம் வாங்க…” சொன்னாளே தவிர கண்டிப்பாக பெரிய பிரச்சனைதான் என்பது பிரியங்காவுக்கு  திட்ட வட்டமாக தெரிந்துவிட்டது.

சுமார் அரைமணி நேர பேச்சு, வாக்குவாதம். சண்டை, அழுகைக்கு பிறகு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தார்கள்.

ஆனால்…

“அண்ணன் தம்பி இரு குடும்பத்துக்கும் சமாதானம் வேண்டுமென்றால் அது உன் கையில்தான் இருக்கிறது.” என்று கடைசியாக இவளிடம் கை ஏந்தினார்கள். அதிர்ச்சியில் பேச்சிழந்தாள் பிரியங்கா.

“ஆமாம்…பியங்கா உன் அக்கா இருந்த இடத்துல உன்னை வச்சி இந்த கல்யாணத்தை முடிச்சிடலாம் என்று உன் பெரியப்பா நினைக்கிறார்,…அதான் நாங்கள் எல்லாம் உன்னை தேடி வந்தோம்…” என்றாள் பெரியம்மா.




பிரியங்கா அதிர்ச்சியோடு தன்னுடைய தாத்தா பக்கம் திரும்பி என்னத்தாத்தா இதெல்லாம் என்பதுப்போல் பார்த்தாள். அவரோ பேத்தியின் பார்வையை சந்திக்க தைரியமின்றி தலையை தாழ்த்திக்கொண்டார்.

“பிரியங்கா பையன் கோடிஸ்வரன். அவனை நீ கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா வசதியான வாழ்க்கை வாழலாம் என்ன சொல்லுறே?” இது பெரியம்மா.

“பெரியம்மா தப்பா எடுத்துக்காதீங்க நான் மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். இது தாத்தாவுக்கே நல்லா தெரியுமே! தெரிஞ்சும் ஏன் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தாருன்னுதான் தெரியல…”




அவளின் அந்த பதில் மற்றவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. ‘நான்தான் அப்போவே சொன்னேனே நீங்கதான் கேட்கல…’ என்ற தாத்தாவின் முணுமுணுப்பு இவள் காதுகளில் நன்றாகவே விழுந்தது.

நம்ம குடும்பத்துக்காவும் நமக்காகவும் கஷ்டப்பட்டுப் படிச்சி ஒரு நல்ல வேலைக்குபோய் குடும்பத்தை காப்பாத்திகிட்டு இருக்குற மாமாவுக்காக அவருடைய ஆசைக்காக தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதுதான் பிரியங்காவின் எண்ணமாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருக்கும் அதே எண்ணம் இருப்பது இவளுக்கு நன்றாக தெரிந்த விஷயமே அப்படி இருக்கும்போது இந்த திடீர் பிரச்சனை எங்கிருந்து ஆரமித்திருக்கிறது? என்ற கேள்வியோடு தாத்தாவின் முகத்தை ஏறிட்டாள். தாத்தாவின் பார்வை பூமியை நோக்கி இருந்தது.




What’s your Reaction?
+1
18
+1
19
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!