Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -3

அத்தியாயம்-3

லால்பகதூர் சாஸ்திரி ‘ஐ ஏ எஸ்’ பயிற்சி முகாம்.

காலை ஐந்துமணிக்கு அலாரம் ஒலிக்க, தூக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த சுபாஷினி பரபரப்பாக ரெடியாகி ஐந்து நாற்பதுக்கெல்லாம் கிரவுண்ட்டுக்கு கிளம்பினாள். சரியாக ஆறு மணிக்கெல்லாம் போலோ கிரவுண்டில் இருக்கவேண்டும். போலோ கிரவுண்டிற்கு செல்வதற்கே இருபது நிமிஷம் நடக்கணும். மலைப்பாதையில் சுற்றி சுற்றி கீழே இறங்கி செல்ல வேண்டும்.

உடற்பயிற்சி அனைத்தும் அங்கேதான் ப்ராக்டிஸ் பண்ண வேண்டும். என்னென்ன பயிற்சிகள் பண்ணவேண்டும் என்று அவர்கள் தான் சொல்லி கொடுப்பார்கள். ரன்னிங், பாஸ்கட் பால், குதிரை ஏற்றம் இப்படி எல்லாமே அங்கு இருக்கும். சரியான நேரத்திற்கு சென்று விடவேண்டும்  கால தாமதமாகி லேட்டா வந்தா கிரவுண்டை சுற்றி சுற்றி ஓட விடுவார்கள்.




ஏழு மணிக்கு உடற்பயிற்சி முடித்துக்கொண்டு கிரவுண்ட்ல இருந்து மேலேறி தங்கியிருக்கும் அறைக்குச் சென்று அங்கே குளித்து ரெடியாகி எட்டேகாலுக்கெல்லாம் மெஸ்சிலிருக்க வேண்டும். மெஸ்ல சுவையான சௌத்-இண்டியன் டிஷ் கிடைக்கும். பிரஸிடெண்ட் மெஸ் கமிட்டி என்ற அமைப்பு இருப்பதால் உணவில் ஏதாவது குறை என்றாலும் அவர்களிடம் சொல்லி நமக்கு தேவையானதை பெற்றுக் கொள்ளலாம்.

மெஸ்ஸிலிருந்து கிளாஸ் ரூமுக்கு போகும்போது விஸ்வநாதனிடமிருந்து கால் வந்தது. ‘இந்த நேரத்துக்கு அப்பா கால் பண்ணமாட்டாரே? என்ற  பதற்றத்தோடு போன்காலை அட்டன் பண்ணினாள்.

“ஹலோ அப்பா எப்படி இருக்கீங்க…? அம்மா எப்படி இருக்காங்க…?”

“நல்லா இருக்கேம்மா உங்க அம்மாவும் நல்லா இருக்கா…ஒரு விஷயம் பேசணும் ப்ரீயா இருக்கியா?”

“ம்ம் ப்ரீயா இருக்கேன் சொல்லுங்கப்பா?”

“மனோஜ்ன்னு ஒரு ‘ஐஎஃப்எஸ்’ ட்ரெயினி அங்கு இருக்காரும்மா, அவர்கிட்டே உன்னுடைய நம்பர் கொடுத்திருக்கேன். அதை சொல்லத்தான் கால் பண்ணேன்.”

“யாருப்பா அவர உங்களுக்கு எப்படி தெரியும்…?”




“அவரு வேற யாரும் இல்லைம்மா என்னுடைய  ஃபிரண்டோட பையன்தான். இப்பதான் ஃபிரெண்ட் பேசினார் உன்னுடைய நம்பர் கேட்டார் கொடுத்திருக்கிறேன் அந்த பையன் பேசினா பேசு…”

“ஓகே பா பேசுறேம்பா…அப்புறம் நெக்ஸ்ட் வீக்ல ஒரு டூ டேஸ் லீவு வருதுப்பா ஊருக்கு வந்தாலும் வருவேன்னு அம்மாகிட்ட சொல்லிடுங்க…”என்று அப்பாவிடம் பேசிவிட்டு வகுப்பறையை நோக்கி நடந்தாள்.

அன்றைய தினம் இயல்புக்கு மாறாக மிக இனிமையாகவே கழிந்தது.

அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்து உடை மாற்றிக்கொண்டு இருபது  நிமிட நடை பயணத்திற்கு பிறகு  போலோ கிரவுண்டை வந்தடைந்தாள் சுபாஷினி.

அப்போது…

“ஹலோ…ஹாய்!…ஐஆம் மனோஜ்!!, எங்க பாதர் உங்க நம்பரை கொடுத்து பேசச்சொன்னார்…” என்று ஒரு இளைஞன் அவளருகில் வந்து கை குலுக்கினான்.

ஒரு தர்மசங்கடத்தோடு கை குலுக்கும் போதுதான் அப்பா சொன்ன அந்த மனோஜ் என்ற பெயர் நினைவுக்கு வந்தது. ஓ!..  அப்பா சொன்ன அந்த மனோஜ் இவர்தானா!! என்று மனதிற்குள் வியந்தபடி, ஐ அம் சுபாஷினி ஐ.ஏ.எஸ் ட்ரெய்னி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத்தொடங்கினாள்.

“லேட்டா வந்தா போலோ கிரவுண்டை மூன்று முறை சுற்றி வரணும் அது தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இங்கே வந்து டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடாது. அவங்க அவங்க பிசிக்கல் ஆக்டிவிட்டீஸ் முடிச்சுட்டு கிளம்புங்க…முக்கால் மணி நேரம்தான் டைம். என்று கமெண்ட் பண்ணி கொண்டிருந்தார் ஒரு  சீனியர் ஆபீசர். உடனே தங்களை சுதாரித்துக்கொண்டு பிசிக்கல் எக்ஸ்சசைஸ் பண்ண தொடங்கினர்.




அன்று மனோஜோடு ஒரு அறிமுகம்தான் என்றாலும் அதன் பிறகு மனோஜ் அடிக்கடி அவளுடைய கண்களில் பட்டுக்கொண்டே இருந்தான். அதுமட்டுமின்றி மனோஜ் யார்கிட்டேயும் அதிகமா பேசுற மாதிரி தெரியல. அமைதியா தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருந்த மனோஜ் மற்றவர்களின் மத்தியில் ரொம்பவே வித்தியாசமானவனாய் இவளுக்கு தோன்றியது.

இங்கு வந்த இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட கண்ணில் படாத மனோஜ் இப்போ கண்ணில் பட்டு கருத்திலும் நிறைந்தான். நல்ல பையன் ஓவரா யார்கிட்டயும் வழியாமல் லிமிட்டா பேசுறான். அடுத்த முறை அப்பா பேசும் போது நீங்க சொன்ன பையன் ரொம்ப ஸ்மார்ட்டான பையன்பா அப்படின்னு மனோஜ் பத்தி இரண்டு வார்த்தை சொல்லணும் என்று முடிவு செய்து கொண்டாள் சுபாஷினி.

அன்று வகுப்பறைக்குள் வந்த முரளிதரனின் முகம் கடுகடுவென்று இருந்தது. என்னதான் சின்சியராக வகுப்பு எடுத்தாலும் அவனின் முக அமைப்பு முரண்பட்டிருந்தது. தன்னுடைய பிரச்சனையை மூடி மறைத்து பேசுவது போல் அவனுடைய செயல்பாடுகள் உணர்த்தியது.

அதைக் கண்டும் காணாமல் பாடத்தில் கவனம் செலுத்துவது போல் இவளும் நடந்து கொண்டாள். வகுப்பு முடிந்தவுடன் அடுத்து மதிய உணவுக்காக மெஸ்ஸிக்கு போகும் வழியில் அவனை நேருக்கு நேராக சந்திக்கும் சூழ்நிலை உருவானது.

எதிரும் புதிருமாக இருவரும் சந்தித்துக்கொள்ள அவனைப் பார்த்த தடுமாற்றத்தில் கால்கள் பின்னி மேற்கொண்டு நடக்க முடியாமல் இவள் தயங்கி நின்றபோதுதான் தற்செயலாக அங்கு வந்த மனோஜ்குமார் இவள் அருகில் வந்து இவளிடம் பேச்சுக்கொடுத்தான்.

“ஹலோ சுபாஷினி என்ன இங்கே நிக்கிறீங்க? ஆல்ரெடி லஞ்க்கு  லேட் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் வாங்க போகலாம்…”என்று சொல்லிவிட்டு தலையை சாய்த்து சிரித்த அவனுடைய சிரிப்பை ரசிக்கும் மனநிலையில் சுபாஷினி இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி அவனோடு இயல்பாகப் பேசுவது போல் அந்த இடத்திலிருந்து நகர முயன்றாள்.




“சுபாஷினி ஒரு நிமிஷம் நில்லுங்க உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்…” என்று அவளை போக விடாமல் தடுத்து நிறுத்தினான் முரளிதரன்.

அப்போதுதான் பார்ப்பது போல் முரளிதரனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த சுபாஷினி மனோஜ் பக்கம் திரும்பி,

“நீங்க போயிட்டே இருங்க மனோஜ் நான் பின்னாடி வரேன்…” என்றபடி,

“சொல்லுங்க சார் என்ன விஷயம்…?” என்று மெல்லிய குரலில் வினாவினாள்.

“வகுப்பறையில் உங்களுடைய கவனமெல்லாம் வேற எங்கேயோ இருக்குற மாதிரி இருந்துச்சு. அதாவது எதையோ தீவிரமாக யோசிச்சிகிட்டு இருக்கிற மாதிரி தோனுச்சு. இப்படி எல்லாம் படிச்சா பாடம்  எப்படி மனசுல நிக்கும்? கண்டதையும் போட்டு குழப்பிக்காமல் வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்கணும் புரியுதா…”

அவன் பேசியதை கேட்ட மறுநிமிடம் சுள்ளென்று கோபம் வந்தது சுபாஷினிக்கு. பாடத்தை கவனிக்குறோம் கவனிக்காமல் இருக்கிறோம் அது என்னுடைய பிரச்சினை. இவனுக்கு என்ன வந்துச்சு? ஏதோ ஒண்ணாவது ரெண்டாவது படிக்கற பசங்க கிட்ட பேசுற மாதிரி நிக்க வச்சு பேசிக்கிட்டு இருக்கான். என்ன ஒரு திமிர்? வகுப்பறையிலேயே  வச்சு கேட்டிருக்கலாம். இப்படி தனியாக ஒரு இடத்தில் வழிமறித்து கேட்கிறது என்ன நாகரீகம்? இந்த ஒரு டீசன்ட் கூட இல்லாத இவனெல்லாம் ஐ.ஏ.எஸ் ஆபிஸர் என்று சொல்லிக்கிட்டு திரிகிறான் என்று மனசு குமுறியது.

இதே போன்று இன்னொரு சம்பவமும் நடந்தது. அதாவது  ஒரு நாள் ஹார்ஸ் ரைடு சென்றபோது குதிரை ரொம்பவும் முரண்டு பிடித்தது. இதற்காக பழகி வைத்திருந்த குதிரை தான் என்றாலும் பின்னால் வந்த ஒரு குதிரையின் கணைப்பால் சுபாஷினி சென்ற குதிரையின் வேகம் அதிகரித்தது. ஹார்ஸ் ரைடிங் செல்லும்போது குதிரை ஸ்ட்ராங்கா இல்லேன்னா கீழே தள்ளி விட்டுவிடும். குதிரை ஓட தொடங்கியது. அந்த மலைச்சரிவில் ஒழுங்கற்ற பாதையிலும் அது ஓடுவதை பார்த்து குலை நடுங்கிப் போனாள் சுபாஷினி.




எவ்வளவோ ஸ்டெடியாக உட்கார்ந்திருந்த போதும் அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் முன்பின் முரணாக நழுவத்தொடங்கினாள். ஆனாலும் தான் பிடித்திருந்த பிடியை விடாமல் பற்றிக்கொண்டு கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டே வந்தவள் முன்பைவிட அதிக வேகத்தில் குதிரை ஓடுவதை உணர்ந்து பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். சில நொடிகளுக்கு பிறகு ஏதோ ஒரு இடத்தில் முட்டி மோதி சட்டென்று நின்றது. பயத்தின் மிகுதியால் இதயமே வெளியில் வந்து விடுவது போல் ஒரு உணர்வு தோன்றியது.

மெல்ல கண்களை திறந்து பார்த்தவளுக்கு எதிரில் மங்கலாக ஒரு உருவம் வெண்ணிற குதிரையில் அமர்ந்திருப்பது புலப்பட்டது. அப்பாடா என்று திரும்பவும் சோர்வோடு கண்களை மூடிக்கொண்டாள். அந்த உருவம் இவளை இரண்டு கைகளிலும் ஏந்தி தன்னுடைய குதிரையில் சாய்த்துக்கொண்டு சென்றபோது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வந்தாள். காப்பாற்றிய குதிரைப் பாகன் யார் என்று தெரியவில்லை. இவள் இறங்கியபோது இவளை மற்ற தோழிகள் ஓடிவந்து கைத்தாங்கலாக அணைத்து முதல் உதவி செய்தார்கள்.

அடுத்த நாள்தான் தெரிய வந்தது இவளை காப்பாற்றியது முரளிதரன்தான் என்று மற்ற தோழிகள் இவளிடம் சொல்லி ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்லாமல் கிண்டலும் கேலியும் செய்தபோது இவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. காரணம் தன் இடுப்பைபபற்றி தூக்கி கைகளால் வளைத்து அணைத்தபடி குதிரையில் வந்தது முரளிதரனா? நினைத்த மாத்திரம் அவள் உடல் மெல்ல நடுங்கியது. பாம்பு நெளிவது போல இருந்தது. ஆனாலும் தன்னுடைய உயிரைக் காப்பாற்றி இருக்கிறான் அந்த விதத்தில் அவனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். என்று மனதை தேற்றிக்கொண்டாள்.

மறுநாள் வகுப்பறையில் முரளிதரனை சந்தித்தபோது அவன் முகத்தை ஏறிட இவளுக்கு தயக்கமாக இருந்தது. சிவந்திருந்த இவளின் முகத்தின் மீது அவனுடைய பார்வை படிந்து மீளும்போதெல்லாம் அவனுடைய இதழோரமும் சிறு புன்னகை அரும்பி மலரத்தான் செய்தது.




தன்னை அழைத்து எதையாவது கேட்டுவிடுவானோ? என்ற தயக்கத்தில் இருந்தவளுக்கு, அது சம்பந்தமாக இவளிடம் அவன்  எதுவும் கேட்கவில்லை என்றபோது அப்பாடா என்று மனதுக்குள் நிம்மதியடைந்தாள். நாட்கள் மெல்ல நகர்ந்தது. அந்த பயிற்சி முகாமில் புதுப்புது அனுபவங்களும் புதிய நண்பர்களும் இவளுக்கு கிடைத்தார்கள். மற்ற மாநில நண்பர்களுடனான இணக்கமான நட்புறவும் உண்டானது. அவ்வப்போது தலைகாட்டி சென்ற மனோஜ் இவள் மனதை மகிழ்விக்கும் விதத்தில் அழகாகவே  பேசினான். முரளிதரனை தவிர மற்ற அனைவருமே இவள் கண்களுக்கு நண்பர்களாகத்தான்  தெரிந்தார்கள். காரணமே இல்லாமல் முரளிதரனை தவிர்க்கத் தொடங்கியது சுபாஷினியின் மனம்.

 


What’s your Reaction?
+1
18
+1
20
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!