Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -2

அத்தியாயம்-2

அன்றைய அதிகாலையின் பனிப்பொழிவு அடர்வனத்தின் விடியலை முற்றிலும் மறைத்திருந்தது. இருப்பினும் ஆறு பத்துக்கெல்லாம் பிஸிக்கல் ட்ரெய்னிங்காக  கிரவுண்டில் எல்லா ட்ரெயினிகளும் ஆஜராகிவிட வேண்டும். இது அங்கு எழுதப்பட்ட சட்டம் என்றே சொல்லலாம். அப்படி குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த போலோ கிரவுண்டில் இல்லையென்றால் அந்த கிரவுண்டை மூன்று முறை சுற்றி வரவேண்டும். இதற்கு பயந்தே ட்ரெயினியாக வந்த அனைவரும் ஆறு மணிக்கெல்லாம் ஆஜராகி விடுவார்கள். சுமார் முக்கால் மணி நேர உடற்பயிற்சி முடித்த பிறகு மலையேறி தாங்கள் தங்கியிருக்கும் அறைக்குச் செல்லவேண்டும். மேலே சென்று குளியல் அதன்பிறகு டைனிங் ஹாலில் காலை உணவை முடித்துக்கொண்டு சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வகுப்பறையில் இருக்க வேண்டும்.




வாரத்தில் மூன்று நாட்களுக்கு முரளிதரனின் கிளாஸ் இருக்கும். அதாவது திங்கள், புதன், வெள்ளி அந்த மூன்று நாட்களும் மூன்று யுகங்களாக செல்லும். ஏண்டா இந்த நாட்கள் வருகிறது என்றிருக்கும் சுபாஷினிக்கு. நம்முடன் பழகுகிறவர்கள் என்னதான் நல்லவர்களாக இருந்தாலும் முதல் பார்வையில் பிடிக்கவில்லை என்றால் கடைசிவரை அவர்களை பிடிக்காமலே போவதுண்டு. அப்படித்தான் முரளிதரனும், அவன் சொல்லித்தரும் வகுப்பை புறக்கணிக்கவும் முடியாமல் தொடர்ந்து  கவனிக்கவும்  முடியாமல் அல்லல் படுவாள் சுபாஷினி.

அவன் மேல் எப்போதுமே சிறு கோபம் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும் முக பாவனையை மாற்றி இயல்பாக வைத்துக்கொள்ள முனைந்தாள்.

பாட சம்மந்தமாக எழும் சந்தேகங்களை கேட்கக்கூட  தயக்கமாக இருந்தது. நாம் எதையாவது கேட்டு அவன் அதற்கு ஏதாவது ஒரு பதிலை சொல்லி எதற்கு வீண் வம்பு? என்று தன்னையே ஒருநிலைப்படுத்திக் கொள்வாள். ஆனால் அவனோ அவளை விடுவதாக இல்லை. இதற்கு முதல் வகுப்பில் என்ன நடத்தினேன் என்று பிரசன்டேஷன் பண்ணுமாறு திரும்ப திரும்ப அவளையே  அழைத்தான்.

அவள் தத்துபித்தென்று உளறிக்கொட்டி கிளறி மூடுவாள். கடந்த வகுப்பறையில் கவனிக்காத அவளுடைய கவனக்குறைவை சுட்டிக்காட்டி குறிப்பாக அவள் மனதை கஷ்டப்படுத்தும் விதத்தில் சிரித்துக்கொண்டே குத்தலோடு சொல்லிவிட்டு செல்வான். இவளை அவ்வப்போது அவமானப்படுத்தி கொண்டிருந்த அந்த முரளிதரனின் செயல்கள் யாருக்கு புரிந்ததோ இல்லையோ ப்ரீத்திக்கு நன்றாகவே புரிந்தது. தன் மனதில் உள்ளதை சுபாஷினியிடம் கேட்கவும் செய்தாள். அப்படி அவள் கேட்டபோதுதான் அவன் தன்னிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை மற்றவர்களும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்தாள் சுபாஷினி.




ஒரு வாரத்திற்குப் பிறகு பயோமெட்ரிக் முடிந்து கிளாஸ் ரூமூக்கு சென்று அமர்ந்தவுடன் கெஸ்ட் ஸ்பீக்கர் ஒருவர் அதாவது சமூக சேவையில் ‘பத்மஸ்ரீ’ அவார்டு வாங்கிய பெண்மணி ஒருவர் கிளாசுக்கு வந்தார்கள். அவர்கள் எல்லா மொழியும் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக தமிழ் நன்றாக பேசக்கூடியவர் என்பதால் அவ்வப்போது தமிழிலும் பூந்து விளாசிக்கொண்டிருந்தார்கள். சுபாஷினி வகுப்பறையில் மெய்மறந்து பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

வகுப்பு முடிந்து அந்த பெண்மணி வெளியில் சென்றபோது சுபாஷினி ஓடிச்சென்று அவர்களோடு   ‘செல்பி’ எல்லாம் எடுத்துக்கொண்டாள். ஆனால் அந்த சந்தோஷம் சில நிமிடங்கள் தான் நிலைத்தது. சுபாஷினி லஞ்சை முடித்துக்கொண்டு காரிடரில் நடந்து வந்தபோது அந்த பத்மஸ்ரீ பெண்மணியின் கரத்தை பற்றியபடி மிக நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தான் முரளிதரன். அவன் பேசுவதை பார்த்தால் வெகுநாள் பழக்கம் அல்லது நெருக்கமான உறவு என்று தோன்றியது சுபாஷினிக்கு. அத்தோடு நின்றிருந்தால் இவளும் அதை பெருசாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டாள். அடுத்து அவன் நடந்துக்கொண்ட விதம்தான் இவளின் கோபத்தை அதிகப்படுத்தியது,

அதாவது சுபாஷினி அவர்களை கடக்க நினைத்த அந்த நொடியில் முரளிதரன் அந்த பெண்ணின் கைகளை பற்றி முத்தமிட்டான். நவநாகரிக உலகில் இதெல்லாம் சகஜம்தான் என்று சுபாஷியால் ஒதுக்கித்தள்ளிவிட்டு செல்ல முடியவில்லை. வெறுப்போடு அவனை கடந்து செல்கையில் இவளை பார்த்தும் பார்க்காததுபோல் சுவாரசியமாக அவர்களோடு பேசத் தொடங்கினான். வகுப்பு முடிந்து அறைக்கு வந்தபிறகும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சம்மந்தமே இல்லாமல் அந்த பத்மஸ்ரீ பெண்மணியின் மீது கோபம் கோபமாக வந்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

மூன்றாம் நாள் இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தப்போது அந்த கேள்வி அவள் மூளையை குடைந்தது. அதாவது யாரோ ஒரு பெண்ணோடு அவன் பேசிக்கொண்டுந்தால் என்ன? முத்தமிட்டால் நமக்கு என்ன வந்தது? நாம ஏன் அதை நினைத்து கவலைப்பட வேண்டும்?” என்று தன்னை தானே கேட்டுக்கொண்டபோது அதற்கான விடையை அவளால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.




அதன் பிறகு ஒருநாள் மசூரி பக்கத்தில் இருக்கிற லால்டிப்பா மலைக்கு ட்ரெக்கிங் போகும்போது அந்த சம்பவம் நடந்தது.

வாரத்தில் சனிக்கிழமை தோறும் ட்ரெக்கிங் போகும் தினம் என்பதால் அன்று அதிகாலையிலேயே தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு ட்ரெயினிஸ் எல்லாம் கிளம்பி விடுவார்கள். ட்ரெக்கிங் செல்பவர்கள் குழு குழுவாக பிரிந்துதான் செல்லவேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைமை இருக்கும். நார்த், சவுத், ஈஸ்ட், வெஸ்ட், என்று எல்லா ஊர்களைச் சார்ந்த பல டிபார்ட்மெண்ட் ட்ரெய்னீஸ்  வருவார்கள். தமிழ்நாடு மட்டுமே என்று தனித்து நிற்க முடியாத சூழ்நிலை. அப்படி தனியே இருந்தாலும் மற்றவர்கள் பிரித்து விடுவார்கள். எல்லா மாநிலத்தாரோடும் பழகும் பாசிட்டிவான வாய்ப்பாக அது  பார்க்கப்படுகிறது.

சுபாஷினியின் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் வெளிமாநிலத்தவர் என்பதால் அவர்களோடு இயல்பாக பழக முடியாமல் சற்று திணறினாள். ஆங்கிலத்தை தவிர்த்து ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டது இவளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது.

அந்த ட்ரெக்கிங் குழுவோடு முரளிதரனும் வந்தான். பொதுவாக ட்ரெயினர்ஸ் யாரும் வரமாட்டார்கள். அப்படியிருக்கும்போது முரளிதரனைப் பார்த்ததும் சுபாஷினியின் முகம் நிறமிழந்தது. டாக்டர் ஒருவரிடம் மிகவும் சுவரசியமாக  பேசியபடி வந்தவன் இவர்கள் குழுவுக்கு அருகில் வந்தவுடன் இவளிடம் எதையோ சொல்ல நினைப்பது போல் தயங்கி நின்றான். பிறகு தோள்களைக் குலுக்கியப்படி அங்கிருந்து விலகிச்சென்றுவிட்டான். அவனுடைய அந்த செயல் கோபத்தைதான் உண்டாக்கியது.




மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து செல்லும் நபர் சிறு உரையாற்றி விட்டு முரளிதரனிடம் மலையேற்றத்தை பற்றிய உரையாற்றும் படி கூறினார்.

அவனோ தன் ஆறடி இரண்டு அங்குலம் உயரத்தை இன்னும் சற்று உயர்த்தி நின்று பேசத்தொடங்கினான்.

“நான் மிகவும் விரும்பி செல்லக்கூடிய இடம் எதுவென்றால் இந்த மலை ஏற்றம்தான் அதாவது ட்ரெக்கிங். இங்கு இருக்கும் ஐந்து சிறு மலைகளில் ஏறி இறங்குவது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்.”

என்று ஆரம்பித்தவன் ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்கினான். இடையிடையே ஹிந்தி, மராட்டி, தெலுங்கு என அவன் பேச்சில் பலவித மொழிகள் புகுந்து விளையாடியது. ஆனாலும் அவன் சொல்வதை  அங்கிருந்தவர்கள் இமைகாமல் கவனிக்கத் தொடங்கினார்கள்.

‘‘மலையேற்ற பயிற்சி என்பது ஜாலியா இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் நிகழ்வல்ல, என்பதை முதலில் நீங்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இப்போது பல இடங்களில் மலையேற்றத்தை ஜாலி டூராகவே கருதி செல்கிறார்கள். காட்டுப்பகுதியில் எதிர்பாராமல் நடக்கும் எதையும் சந்திக்கும் தைரியம், மன வலிமை மலையேற்ற குழுவினருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல நீங்கள் எல்லாரும் ஆபீசர்ஸ் அதாவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் என்று பல துறைகளை சார்ந்தவர்கள் இருக்கிறீர்கள். பிரச்சனைகளை  எளிய முறையில் சமாளிக்கக்கூடிய திறமையும் மன உறுதியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மலையேற்ற பயிற்சியை உங்களுக்கு கொடுக்கிறார்கள். எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தெரிந்திருக்க வேண்டும்”.




என்று சொல்லி விட்டு ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின் தொடர்ந்தான்.

“மலையேற்ற குழுவை வழிநடத்தி செல்பவரின் உத்தரவை மதித்து அவர் வழியை பின்பற்றி நடக்க வேண்டும். முக்கியமாக அனைவருக்கும் மன ஒற்றுமை இருக்க வேண்டும். மலையேற்ற பயிற்சியினால் உடலும், மனதும் ஒன்றாகிவிடும். உடலுக்கு நல்ல பயிற்சி கிடைப்பதோடு காட்டில் இருக்கும் நாட்களில் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். அது வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கவும் உதவும். மன அமைதி, ஒழுக்கம், பிறர் மீது அக்கறை கொள்ளுதல், தன்னம்பிக்கை உள்ளிட்ட அனைத்து குணங்களும் வந்து விடும். கரடு முரடான மலைப்பகுதிகளை கடந்து செல்பவர்கள் வாழ்க்கையின் கஷ்டமான பாதைகளையும் எளிதில் கடந்து சென்று விடுவார்கள். மலையேற்ற பயிற்சி அவர்களுக்கு கைகொடுக்கும்’’.

“சார்…ஒருவேளை வழிமாறி சென்றுவிட்டால் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கா?” மாணவர் ஒருவர் கேட்டார்.

“ம்ம்…அதாவது குழுவை வழிநடத்தி செல்பவர் இடும் கட்டளையை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். பெரும்பாலும் மலையேற்றம் என்றால் நடைபாதை போன்று ஒருவர் பின் ஒருவராக பின்தொடர்ந்து செல்ல நேரிடும். அந்த சமயத்தில் அனைவருக்கும் பொறுமை இருக்க வேண்டும். முன்னால் செல்பவர் திரும்பி பார்க்கும் போது கடைசி நபர் தெரியும் வரை அனைவரும் ஒருசேர பின் தொடர்ந்து செல்ல வேண்டும். மேலும் மலையேற்ற குழுவில் யார் மெதுவாக நடப்பவர் என்பதை அறிந்து அவரை முன்னால் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அவருக்கு பின்னால்தான் மற்றவர்கள் செல்ல வேண்டும். காட்டுக்குள் வழி தவறி சென்று விடக்கூடாது. அப்படி சென்றுவிட்டால் விலங்குகளால் உயிருக்கு ஆபத்து வரும்…”

“தேங்கீவ் சார்….”




“ஓகே…மலையேற்றம் செல்பவர்கள் கண்டிப்பாக முதலுதவிக்கான மருந்துகளை கைவசம் வைத்திருக்க வேண்டும். அது தவிர குடிநீர், டார்ச்லைட், எண்ணெய் இல்லாத உணவு வகைகளை எடுத்து செல்வது நல்லது. நம்ம மலையேற்ற குழுவினருடன் ஒரு டாக்டரும் இரண்டு டாக்டரும் வருகிறார்கள். திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சை செய்துக்கொள்ள டாக்டர்கள் இருக்கிறார்கள் அதனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை.

மலைப்பகுதியில் பயணிக்கும் போது அமைதியாக செல்ல வேண்டும். சத்தமிட்டுக்கொண்டு சென்றால் அரிய வகை உயிரினங்களை பார்க்க முடியாமல் போய்விடும். சிறிய பட்டாம்பூச்சி முதல் பல்வேறு வகையான காட்டு உயிரினங்களை பார்க்கும் வாய்ப்பை இழப்போம். மலையேற்றத்துக்கு அமைதிதான் அவசியமானது. மலைப்பகுதியில் தண்ணீர் தென்பட்டால் உடனே அதில் இறங்கி குளிக்க வேண்டுமென நினைக்கக்கூடாது.

அந்த இடத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. முதல் முதலில் மலையேற்றத்துக்கு சென்றபோது நானும் இப்படித்தான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன் அட்டை பூச்சிகள் எல்லாம் நிறைய இருக்கும் அது உடம்பில் தோலையே பிய்த்துவிடும். அதை நீக்க உப்பு தண்ணியை அதன் மேல் ஊற்றினால் போதும் அடுத்த நிமிடமே அது உதிர்ந்து கீழே விழுந்துவிடும். இதெல்லாம்கூட அப்போ எனக்கு தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கு மலையேற்றம் இல்லையென்றால் அந்த வாரத்தில் தூக்கமே வருவதில்லை அவ்வளவு விருப்பமான விஷயமாக இந்த மலையேற்றம் மாறிப்போனது.”

என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மாறி மாறி பேசி தன்னுடைய உரையை முடித்தான் முரளிதரன்.




அவன் பேசியதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட மும்பை பெண் ஒருத்தி அவன் கைகளைப்பற்றி குலுக்கி நன்றி தெரிவித்தாள். அதுதான் சந்தர்ப்பமென்று ட்ரக்கிங் முழுவதும் அவளோடு கதை அளந்துக்கொண்டே வந்தான் முரளிதரன். பொறுத்து பொறுத்துப்பார்த்த சுபாஷினி அவளை தன்னோடு வருமாறு அழைத்து தன் அருகில் இறுத்திக்கொண்டாள். அதன் பிறகுதான் சுபாஷினிக்கு நிம்மதியாக  இருந்தது. இவளின் மனநிலையை கண்டுபிடித்த முரளிதரன் தற்செயலாக அவள் அருகில் வருவதுப்போல் வந்து.

“யாருடைய மனதையும் யாராலும் கண்ரோல் பண்ணமுடியாது. அப்படி பண்ண நினைப்பவர்கள் தங்களுடைய மனநிலையைத்தான் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏன்னா விட்டுக்கொடுப்பது என்ற நிலை பொறாமையாக மாறிவிடும்…” என்றவனின் பார்வை சுபாஷியை ஊடுருவியப்படியே இருந்தது.




What’s your Reaction?
+1
19
+1
18
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!