Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -1

‘தத்தித் தாவுது மனசு!’

(நாவல்)

   டெய்சி மாறன்

 

 அத்தியாயம்-1

 

அன்று காலை ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி கொடுத்துவிட்டு தன் அறைக்குள் வந்த சுபாஷினிக்கு இருக்கையில் அமர இடம் கொடாமல் மனம் உழன்றுக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் கடைசியா அந்த பெண் கேட்ட கேள்விதான்.

“மேடம்…ஒரு பர்ஸ்னல் கேள்வி நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா கேட்கலாமா…?”

“பரவாயில்லை கேளுங்க…?”

“எல்லோருக்கும் முதல் காதல் என்று ஒன்றிருக்கும் என்பார்கள். அந்த விதத்தில் உங்களுக்கும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருந்தால் அந்த காதல் அனுபவத்தை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா மேடம்?”

இப்படி ஒரு கேள்வி வருமென்று எதிர்ப்பார்க்காததால் சுபாஷினியின் முகம் வெளிறிப்போனது. தொண்டையை சரிசெய்து குரலை இயல்பாக்கி கொள்வதற்கே சில நொடிகள் பிடித்தது. அந்த கேள்விக்கு அவளால் பட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. எப்படியோ சமாளித்து பூசி மெழுகிவிட்டு அங்கிருந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சுபாஷினியின் பழைய ஞாபங்களை எல்லாம் அந்த கேள்வி தூண்டிவிட்டிருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை மனக்கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.

***


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் பனி படர்ந்த அதிகாலை நேரமது.

“ஏய்… சுபாஷினி உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்டீ…?” மூச்சிறைக்க ஓடி வந்தாள் ப்ரீத்தி.

இருபுறமும் தார்சாலைப்போல் மேலோங்கிருந்த கற்பாறைகளுக்கு இடையில் பூத்துக்குலுங்கி கொண்டிருந்த பெயர் தெரியாத வெண்ணிற மற்றும் செந்நிற மலர்களுக்கு இடையில் தானும் ஒரு மலராய் ஓடிக்கொண்டிருந்த சுபாஷினி, தோழியின் குரலைக்கேட்டு தன் ஓட்டத்தின் வேகத்தை மெல்ல குறைத்தாள்.

“நீ என்ன கேட்கப்போறேன்னு எனக்கு தெரியும் டீ…” என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்.

“நான் என்ன கேட்கப் போறேன்னு சொல்லு.. சொல்லு பாக்கலாம்…?நீ சொல்றது கரெக்ட்டா?ன்னு நானும் பார்க்கிறேன்…” என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு இணையாக ஓடி வந்தாள் பிரீத்தி.

“நேத்து காலையில போலோ கிரவுண்டுலே  நடந்த சம்பவத்தை தானே சொல்றே…?” என்றவள் போகிற போக்கில் இடதுப்புற பாறை இடுக்கில் குவிந்துகிடந்த பனிக்குவியலை விரல்களால் அசால்டாக  தட்டி விட்டப்படி ஓடினாள்.

“அது எப்படி… அது எப்படி…சுபாஷினி இவ்வளவு கரெக்டா சொல்றே…? அப்படின்னா  அது உன் மனசை  பாதிச்சிருக்கு அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறேன்னு  தானே அர்த்தம்? ஆனா ரொம்ப இயல்பா இருக்கிற மாதிரி காமிச்சிக்கிறாயே அது எப்படி டீ…??”

“ம்ம்……”

“ம்ன்னா என்ன அர்த்தம்…இதுவே வேற ஒருத்தியா இருந்தா ரெண்டு நாளைக்கு ரூமை விட்டு வெளியில் வர மாட்டாள். கவிழந்தடிச்சு படுத்து அழுதுக்கிட்டு இருப்பா!! நீயானால் எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா இருக்கிறீயே அதெப்படி டீ..,” எப்படியாவது அவள் வாயை கிளற வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்டாள் ப்ரீத்தி.




“என்ன பண்ண சொல்றே?“ட்ரெயினர்”ன்னா அவருக்கு மதிப்பு கொடுக்கத்தானே வேணும்?…தப்பெல்லாம் என் மேலதான். வீணா அவரை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை அதனாலதான் பேசாம  இருக்கிறேன்…” என்று ஓடிக்கொண்டே சொன்ன சுபாஷினிக்கு அந்த அதிகாலை குளிரிலும் முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியது.

“நீ என்ன வேணா சொல்லு!! அவர் உங்கிட்ட அப்படி நடந்துக்ககூடாதுதான். ஒரு முறை இரண்டு முறை இல்லை பலமுறை பார்த்துட்டேன் அவர் உன்னையே கங்கணம் கட்டிக்கிட்டு பழிவாங்குறமாதிரி இருக்கு,.. நீ அதை ஈசியா எடுத்துக்கிறே ஆனா என்னால ஈசியா எடுத்துக்க முடியல. என்னதான் தப்பு பண்ணினாலும் ஒரு ‘ஐ.ஏ.எஸ்’ பாஸ் பண்ணி ட்ரெய்னிங் வந்த ஒரு பெண் ஆபீசரை ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் ஆபிசர் அடிக்க கை ஓங்கியிருக்கக் கூடாது. அது மிகப்பெரிய தப்புதான் அதுக்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகணும். இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். நீ வேணா பாரு இன்னைக்கு ஈவினிங்குள்ளே இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்னா? இல்லையா?ன்னு பொறுத்திருந்து பாரு…” என்று பேசிக்கொண்டே போனவளை தடுத்து நிறுத்தினாள் சுபாஷிணி.

“இதோ பாரு ப்ரீத்தி இந்த விஷயம் என்னுடைய பர்சனல் விஷயம். தேவைன்னா உன்கிட்ட உதவி கேட்கிறேன். இதை ஊதிப் பெருசாக்கி தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கிடாதே..இதை  இதோட விட்டுடு இப்பவே  மறந்துடு. இது வேற யாருக்கும் தெரியாது தெரியவும் வேணாம்,..” கோபத்துடன் சொல்லி விட்டு திரும்பி ஹாஸ்டலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்  சுபாஷினி.

முகத்தில் அறை வாங்கியது போலிருந்தது ப்ரீத்திக்கு.

“சுபாஷினி ஏன் இப்படி பண்றா?  இத்தனை மாதங்களாக சுபாஷினி கூட நெருக்கமா பழகின எங்கிட்டேயே மறைக்கிறாளே ஏன்? அப்படி என்ன அவர் பெரிய ஆபிஸர்?. ஆபிஸர் தப்பு செஞ்சா கேட்கக்கூடாதுன்னு சட்டமா இருக்கு? ‘சார் ஒரு ட்ரெய்னியை அடிக்க கை ஓங்கினீங்களே அப்படி என்னதான் தப்பு செஞ்சா?ன்னு நேர்ல போய் கேட்டா என்ன?’ நினைத்த மறுநிமிடமே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள் ப்ரீத்தி.




“வேணாம் வேணாம் நாம போய் கேட்டா, இவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் கிட்ட போய் ஏன் கேட்டேன்னு? சுபாஷினி நம்ம மேல கோபப்படுவாள். ஃப்ரெண்ட்ஷிப்குள்ளே ஏதாவது பிரச்சனை வந்துடும். ஆனாலும் அந்த ட்ரெயினர் முரளிதரன் இப்படி பண்ணிருக்கக்கூடாது ரொம்ப திமிர் பிடித்தவன். என்று பலவாறு நினைத்து குழம்பியவளுக்கு அந்த விஷயத்தை கடந்து செல்லவே முடியவில்லை.

சுபாஷினி பிரீத்தி இருவருக்கும் இடையில் இரண்டு மாத கால நட்புதான். ஆனாலும் இந்த இரண்டு மாதத்திலேயே ஒரு அன்யோன்யம் உருவாகி இருந்தது.

******

உத்தர்காண்ட்.

டேராடூன் லால்பகதூர் சாஸ்திரி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்.

சுபாஷினியும் ப்ரீத்தியும், ‘ஐஏஎஸ்’ தேர்வாகி  பயிற்சிக்காக  வந்திருந்தனர்.

சுபாஷினி சென்னையில் இருந்தும், ப்ரீத்தி சேலம் மாவட்டத்தில் இருந்தும் வந்திருந்தார்கள். வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

இருவரும் தங்களின் குழந்தைப்பருவம் பள்ளிப்பருவம் சிறுவயது அனுபவங்கள் என்று பல கதைகள் பேசி களித்தார்கள். இடையிடையே  வகுப்பறையில் அமைதியைக் கடைப்பிடித்து பாடத்தை கவனிக்கவும் செய்தார்கள். இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்ததுதான் இவர்களில் நெருக்கத்திற்கு காரணம். இருவரின் பேரண்ட்ஸ்சும் பிசினஸில் இருந்ததும் இருவரும் தங்கள் குடும்பத்திற்கு ஒரே பெண்ணாக இருந்ததும்தான்.




இவர்கள் வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் இவர்களுடைய பேட்ஜ் ட்ரெயினராக வந்தவன்தான் முரளிதரன். முரளிதரன் ‘ஐ.ஏ.எஸ்’ முடித்து பத்து வருடத்திற்கு மேல் எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால் அவனை இந்த சென்டரில் ட்ரெய்னராக  நியமித்திருந்தனர்.

இதற்கு முன் ஒரு மாதமாக நடந்த கிளாஸில் முரளிதரனை பார்த்ததே இல்லை. ஒரு மாதம் முடிந்து இரண்டாவது மாதத்தில் முதல் நாள் கிளாஸ் ஒன்பது மணிக்கு ஆரம்பித்தது. ஒன்பது மணி கிளாஸ் என்றால் அனைவரும் 8:50க்கே கிளாஸ் ரூமில் இருக்க வேண்டும் என்பதுதான் ரூல்ஸ். அதன்படி அனைவரும் கிளாஸ்க்கு சென்றுவிட சுபாஷினி மட்டும் டைனிங்ஹாலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். காரணம்?…சாப்பிட்டு முடித்துவிட்டு செல்போனை அங்கேயே விட்டு விட்டு வந்ததாக நினைவு. கிளாஸில் செல்போன் உபயோகிக்கக்கூடாது. ஆனாலும் பரிசாய் பெற்ற செல்போன் அதுவும் ஐ.ஏ.எஸ் பாஸ்சானவுடன் அப்பா அவளுக்காக வாங்கி கொடுத்த பரிசு அதை தவறவிட அவளுக்கு மனதில்லை.

டைனிங் ரூமுக்குள் சென்று செல்போனை தேடி எடுத்து சுவிட்ச் ஆப் பண்ணியபடி திரும்பவும் கிளாஸ் ரூமூக்கு வரும்போது பத்து நிமிடம் காலத் தாமதமாகியிருந்தது.

“எக்ஸ்க்யூஸ் மீ சார்…”

வகுப்பறையின் வாசலில் தயங்கி நின்றவளை பார்த்த மறுநிமிடம் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் அதிர்ச்சியலை வீசியது. நவரசங்கள் மாறி மாறி தோன்றியது. ஒருசில நொடிகளுக்கு பிறகு தன் முகத்தை இயல்பாக்கி கொண்டவன் அவளை உறுத்து விழித்தான்.

அவன் பார்வையை பார்த்து அதிர்ந்துப்போனாலும் அவனுடைய தோற்றத்தையும் பார்த்து  குழம்பிப்போனாள்  சுபாஷினி. காரணம் பொதுவாக ட்ரெய்னராய் வர்றவங்கள் குறைந்தபட்சம் பதினைந்து வருடத்திற்கு மேல் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களாகத்தான் இருப்பார்கள். பெரும்பாலும் வயது அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இவனோ முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள்தான் இருந்தான்!!. அவனுடைய தோற்றம் இவளுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. ஒருவேளை இருபத்தி மூணு இருபத்தி நான்கு வயதிலேயே ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்றிருப்பானோ? அப்படித்தான் இருக்கும்.! என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

டெப்டி செக்கரட்டரி போஸ்டிங்கில் இருந்து இப்போது ட்ரெயினராக  வந்திருக்கலாம் என்றும் யூகித்தாள்.

தாமதமாக வந்த ஒரு காரணத்திற்காக வான் பண்ணலாம் அதை விட்டுவிட்டு குற்றவாளியைப்  பார்ப்பதுப்போல் இப்படி பார்க்கிறானே? என்ற உணர்வு மனதை சில்லிட வைத்தது. எதையாவது சொல்லி மனசை சங்கடப்படுத்தி விட்டான்னா நாற்பது பேருக்கு மத்தியில் அவமானப்பட வேண்டி வருமே?? என்ற உறுத்தல் அவளை மேலும் தோய்வடைய வைத்தது. கடவுளை வேண்டிக்கொண்டு கால் மாற்றி நின்றப்போது, ஆராய்ச்சு பார்வையோடு நோக்கியவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் கண்களை அழுத்த மூடி திறந்தான்.




“சாரி சார்…” என்று இவள் வார்த்தையை மென்று விழுங்க,

“யெஸ் கம் இன்…” என்று ஒற்றை வார்த்தையில் முகத்தை திருப்பிக்கொண்டான்.

அப்பாடா! என்ற நிம்மதியோடு வகுப்பறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தாள். அத்தோடு அந்த விஷயம் முடிவுக்கு வந்தது என்று எண்ணிக்கொண்டிருக்க வகுப்பு முடிவதற்கு முன் அவளுக்கு மெமோ ஒன்று அனுப்பப்பட்டது. அதை அனுப்பியது முரளிதரனேதான். தாமதமாக வந்ததற்காகவும்,  இனி தாமதமாக வர மாட்டேன் என்ற உறுதியளித்து கடிதம் ஒன்று மெயிலில் அனுப்பித் தரும்படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முகம் வெளிறிப்போன சுபாஷினி கோபத்தோடு அவனை ஏறிட்டபோது தனக்கு எதுவுமே தெரியாது தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதுப்போல் உதட்டோர ஏளன புன்னகையோடு வகுப்பறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான்.

முகத்துக்கு நேராகவே திட்டி இருக்கலாம். அதைவிடுத்து முதுகில் குத்துகிறானே? அதுவும் முதல் முறையாய் வகுப்பறைக்கு வந்திருக்கிறான் வந்தவுடன் மெமோ கொடுக்கிறானே? கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத மனுஷன் என்று வாய் வெறுப்போடு முணுமுணுத்தது.

“சுபாஷினி உன்னை கூப்பிட்டு விசாரித்து அதன் பிறகு கூட மெமோ கொடுத்திருக்கலாம். காலதாமதம் என்றால் என்ன ஏது என்று விசாரித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். எதையுமே விசாரிக்காமல் ஒருவர் மேல் குற்றம் சுமத்த நினைப்பதென்பது எந்த விதத்தில் நியாயம்?.” சக தோழி கோபப்பட்டப்போது பதில் சொல்ல தோன்றாமல் அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் சுபாஷினி.

‘இனிமேல் கிளாசுக்கு இப்படி தாமதமாக வரமாட்டேன்.’ என்ற உறுதியோடு அதற்கான கடிதத்தையும் இமெயிலில் அனுப்பி வைத்தாள். ஆனாலும் அத்தோடு அந்த பிரச்சனை முற்றுப்பெறவில்லை. அதற்கடுத்து அதற்கடுத்து அவளைத் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இது அவளுடைய கெட்ட நேரம் என்று தான் சொல்லவேண்டும்.




What’s your Reaction?
+1
24
+1
24
+1
2
+1
0
+1
0
+1
2
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!