Serial Stories vanavil devathai வானவில் தேவதை

வானவில்  தேவதை – 3

மூன்று

 

பெருந்தேவியிடம் கோபமாக பேசி விட்ட போதும் அறைக்குள் நுழைந்து கதவடைத்ததும் பெரிய கேவல் எழுந்தது சபர்மதியிடமிருந்து .

 

படுக்கையில் குப்புற விழுந்து விசும்பியபடி இருந்தாள் .சிறு வயதில் தன் தாயுடன் கழித்த இன்ப நினைவுகள் பனி மூட்டத்திற்குள் மலரும் ரோஜா போல் மனதிற்குள் வலம் வந்தன .

 

ரோஜாவின் வடிவெடுத்து அங்கே நின்றவள் அவள் அன்னை தமயந்தியே .பதினைந்து வருடங்களாக அந்த அடுப்படியிலேயே வெந்து கொண்டிருந்த போதும் தமயந்தியின் வனப்பு மட்டும் சிறிதும் குறைந்ததில்லை .

 




சபர்மதி அழகில் அப்படியே தனது அன்னையை கொண்டிருந்தாள் .

அந்த பெரிய ஐந்து கட்டு வீட்டின் பின்பற புழக்கடைதான் தாயுக்கும் ,மகளுக்குமான இருப்பிடம் .

 

அன்னை சிறிது நேரம் ஓய்ந்து அமர்ந்து சபர்மதி பார்த்ததில்லை.அதிகாலை ஐந்து மணிக்கு போடப்படும் அந்த வீட்டு அடுப்பின் விசை அமர்த்தப்படுவது பதினோரு மணிக்குதான் .

 

அடுப்பின் முன் நின்றபடியே சதா எதையாவது கிளறிக்கொண்டோ ,வறுத்துக்கொண்டோ இருப்பாள் அன்னை .அடுப்படி இல்லையென்றால் கிணற்றடியில் குவிந்து கிடக்கும் பாத்திரத்தோடோ ,துணிகளோடோ …

 

“அம்மா “

 

“என்னடா கண்ணா “

 

“உங்களுக்கு பாட தெரியுமா …?”

 

…………

 

“நல்லா பரதநாட்டியமாடுவீங்களாமே…?”

 




பதிலே வராமல் போக அன்னையை நெருங்கி பின்னாலிருந்து கட்டியபடி ,சொல்லுங்கம்மா ” கொஞ்சுகிறாள் .

 

அடுப்பை அணைத்து விட்டு திரும்பிய தமயந்தி மகளிடம் “யாருடா இதெல்லாம் சொன்னா ..?”

என்றாள் நிதானமாக .

 

“என் ப்ரெண்ட் மேகலாதான் சொன்னாம்மா .அவளுக்கு அவுங்க அம்மா சொன்னாங்களாம் .உங்க அம்மா நடனப்பள்ளி தொடங்கினா நல்லா ஓடும் .நாங்க எல்லோரும் படிக்க வர்றோம் .போய் சொல்றியான்னு கேட்டாள் .சொல்லுங்கம்மா நீங்க நடனம் சொல்லித்தர்றீங்களா …?”

 

நமக்கு அவுங்கள்லாம் நிறைய பணம் தருவாங்க .நீங்க இந்த மாதிரி கஷ்டப்பட்டு வேலை பார்க்க வேணாம் .நாம தனியா வேற வீடு பார்த்து போயிடலாம் “

 

பிஞ்சு மனம் தன் நெஞ்ச ஆசை கூறியது .

 

பதில் சொல்லாது அடுப்பை ஆன் செய்து வேலையை தொடர்ந்தாள் தமயந்தி .

 

“அம்ம்…மா .. “

 

“இல்லடா அது சரி வராது “

 




“ஏம்மா ‘”

 

கிளறுவதை நிறுத்தி விட்டு அருகிலிருந்த சுவரில் சாய்ந்தபடி விட்டத்தை வெறித்து  சொன்னாள் தமயந்தி .

 

 

 

 

வெல்வெட்டினால் ஆன சிறகுகள்

 

எனக்கு

 

பெண்ணாக பிறந்தது காரணம்

 

அதற்கு

 

பரந்து விரிந்த வானத்தின்

 

பரப்பை அறியும் ஆசை மொட்டு விரிக்க

 

பறக்க உதவா வெல்வெட்டுகளை

 

வீதியில் வீசி விட்டு

 

பெயர் தெரியா பறவை ஒன்றின்

 

சிறகுகளை கடன் வாங்கி

 

வானம் ஏறினேன்

 

ஊர்க்குருவி ஒன்று பருந்தானது

 

சுதந்திரக் காற்றை சுவைத்து

 




சுவாசித்தேன்

 

சுதந்திரம் அளவு மீறி வீசிய போது

 

மூச்சு முட்டியது

 

வட்டமிட்ட வல்லூறுகள்

 

வன் பார்வை பார்த்தன

 

திருட்டு காக்கைகள் அலகுகளை

 

கூர்மையாக்கின

 

கட்டமிட்ட கழுகுகள் கவிழ்க்கப்

 

பார்த்தன

 

பகலவனின் கோபச் சிவப்பில்

 

கன்றிப் போனேன்

 

வெண்ணிலவின் குளிர் சிரிப்பில்

 

உறைந்து போனேன்

 

வசந்தம் தேடி வனப்புறம்

 

போனேன்

 

வராது வசந்தமென ரகசியம் சொல்லி

 




பறந்தது வரிக்குருவி

 

விடுதலை வேண்டாமென உதிர்த்தேன்

 

சிறகுகளை

 

சொந்த சிறகுகள் தேடி அலைகிறேன்

 

வீதிகளில்.

 

கவிதை சொன்னாள்

 

அளவற்ற விரக்தியும் ,ஏக்கமும் குரலில் .

 

“ஐ…நீங்க கவிதையெல்லாம் சொல்வீங்களாம்மா .சூப்பரா இருக்கும்மா …..அம்மா …”

 

மீண்டும் கொஞ்சினாள் சபர்மதி .

 

திரும்பி மகளை வாரி அணைத்த அன்னை “வேண்டாம்டா கண்ணா ,உடம்பு நொந்தாலும் இங்கே கண்ணியமா இருக்கேன் .வாசல்படி தாண்டினா ஆயிரம் கழுகும் ,காக்கையும் காத்துக்கிட்டு இருக்கும் சதையை தின்ன .அதுக்கு இப்படி  கடைசி வரை உழைப்பால் வாழ்ந்துட்டு போறேன் “

 

“ஆனா அம்மா இது மாமா வீடுதானே .உங்க அண்ணன் வீடுதானே .இங்கேயே ஏம்மா இப்படி ….”

 

வேலைக்காரியா …..என்ற வார்த்தையை உபயோகிக்க யோசித்து நிறுத்தினாள் சபர்மதி .

 

ஆனால் புரிந்து கொண்டாள் தமயந்தி .

 

“அம்மாவுக்கு கஷ்டமா இருக்கு இனிமே இப்படி கேட்காதடா செல்லம் “

தான் கேட்டதால் அம்மா கஷடப்படுகிறாள் என்றால் அதனை தான் ஏன் கேட்க வேண்டும் .

 

அந்த பேச்சை அன்று முதல் மீண்டும்  எடுத்ததில்லை சபர்மதி .

 




தாய் தன்னிடம் நிறைய மறைப்பதாக அவளுக்கு தோன்றும் .ஆனால் அவளிடம் விளக்கம் கேட்க அவள் துணியவில்லை .

 

தன் வாழ்க்கை ரகசியங்களை மட்டுமல்ல ,

 

தன் உள்ளுக்குள்ளேயே வளர்ந்து வந்த புற்றையும் சேர்த்தே அன்னை மறைக்கிறாள் என தெரியவில்லை அவளுக்கு .

 

தெரிந்திருந்தால் …

 

சபர்மதி நடந்து கொண்டிருக்கும் விபரீதங்களின் வால் நுனியை அறிய தொடங்கிய போது காலம் கடந்திருந்தது .

 

” எங்கே அந்த கழுதை ” முத்தையாவின் குரல் வெளியே ஓங்கி கேட்டது .

 

சபர்மதியின் உடல் தூக்கி போட்டது .

 

கடவுளே இனி இவன் வேற ஆரம்பிக்க போறானா ?…நடுக்கத்துடன் கதவை இடிக்கும் சப்தத்திற்காக காத்திருந்தாள் .

 

சில கசமுச ,குசு குசு சப்தங்களுக்கு பிறகு ஆழ்ந்த அமைதி .

 

சிறிது நேரத்தில் விளக்கணைக்க பட்டு வீடு உறக்கத்தில் ஆழ்ந்தது .

 

எப்படி இது …?

 




இன்று பெருந்தேவியிடம் அவ்வளவு பேசியிருக்கிறாள் .எப்படி அவளை சும்மா விட்டனர் .

 

நாளை காலை பார்த்துக்கொள்ளலாமென விட்டு விட்டார்கள் போல .நாளை அதிகாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு இருக்கிறது .

 

பெருந்தேவி வீட்டினருக்கு எட்டு மணிக்கு மேல்தான் பொழுது விடியும் .ஐந்து மணிக்கே எழுந்து கிளம்பி போய் விட வேண்டியதுதான்

எண்ணமிட்டபடியே கண்கள் சொருக தூங்கிப்போனாள் .

 

அதிகாலை ஐந்து மணிக்கு மாற்று உடுப்புகளுடன் குளிப்பதற்காக அறைக்கதவை திறந்தவள் அதிர்ந்தாள் .

 

What’s your Reaction?
+1
18
+1
28
+1
3
+1
0
+1
0
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!