Sprituality

ஐயப்பனின் காதல்

பிரம்மச்சாரி ஐயப்பன் மீது காதல் கொண்ட மகிஷி… வாக்கு கொடுத்த ஐயப்பன்

சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது காரணம் அவர் பிரம்மச்சாரி என்று பக்தர்கள் கூறுகின்றனர். அந்த பிரம்மச்சாரி ஐயப்பனிடம் மையல் கொண்ட மகிஷி தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டி நின்ற புராண கதை தெரியுமா?




என்னை மணந்துகொள்ளுங்கள் என்று வேண்டி நின்ற மாளிகைப்புரத்து அம்மனிடம், நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாகவே சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை மீற முடியாது என்று ஐயப்பன் கூறினார். அதற்கு அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, ஐயப்பனும், நான் வீற்றிருக்கும் மலையிலேயே நீயும் அமர்ந்திரு. என்றைக்காவது ஒரு கன்னி சாமியாவது என்னைக் காண வராமல் இருக்கிறாரோ அன்றைக்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். மற்ற நாட்களில் சூரியன் முகத்தில் அறையும் வரையில் தூக்கம் போடும் பழக்கம் உள்ளவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டாலே, தன்னுடைய பழக்கவழக்கத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டு, தினமும் விடியற்காலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து பூஜை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிடுவார்கள். அதோடு தவறாமல் காலை, மாலை என இரண்டு வேலைகளும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருவார்கள்.




வரம் கேட்ட மகிஷி

மகிஷாசுரன் எப்படி தன்னுடைய மரணம், ஒரு பெண்ணால் ஏற்படவேண்டுமென்று வரம் பெற்றிருந்தானோ, அதுபோலவே, மகிஷியும், தன்னுடைய மரணம் என்பது எம்பெருமான் ஈசனுக்கும் காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள். குறிப்பாக அந்த குழந்தை 12 வயது பாலகனாக வரும் சமயத்தில் தான் நடக்கவேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள். ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி குழந்தை பிறக்கும் என்ற அகங்காரத்தில் தனக்கு அழிவே கிடையாது என்று நினைத்தே தேவர்களையும் முனிவர்களையும் இம்சித்து வந்தாள்.




புலி வாகனன் ஐயப்பன்

ஆனால், நடப்பது எல்லாமே ஈசனின் திருவிளையாடல் என்பது மகிஷிக்கு தெரியாமல் போய்விட்டது. மகிஷியின் கொடுமை அளவுக்கு மீறிச் சென்றபோது, மஹாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து, ஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்தது. அதன் பின்பு நடந்தது நம் அனைவரும் அறிந்ததே. 12 வயது நிரம்பிய பாலகனான ஐயப்பன், தன்னுடைய தாயாரின் தலைவலி தீர புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு புறப்பட்டார். அங்கு ஐயனின் வரவிற்காக காத்திருந்த தேவர்கள், பொன்னம்பல மேட்டில் ஐயனை சந்தித்து அரக்கியான மகிஷியால் தாங்கள் படும் துயரங்களை எடுத்துக் கூறி தங்களை காத்தருள வேண்டி நின்றனர்.




வதம் செய்ய ஐயப்பன் தேவர்களின் கோரிக்கையை ஏற்று, 12 வயது பாலகனான ஐயப்பன் தேவலோகம் சென்று அரக்கி மகிஷியுடன் போரிட்டு வென்று அவளை பூலோகத்தில் தூக்கி எறிந்தார். அவள் வந்து விழுந்த இடமே அழுதா நதிக்கரையாகும். அரக்கி மகிஷி வதம் செய்யப்பட்ட உடனேயே, அவளது அரக்கி உருவம் மறைந்து லீலா என்ற அழகான பெண்ணொருத்தி தோன்றினாள். பின்னர் அந்த பெண் ஐயப்பனை வணங்கி நின்று, நான் உங்களால் தான் சாபவிமோசனம் பெற்றேன். என்னுடைய சாபம் நீங்கப்பெற காரணமாக இருந்த நீங்கள் தான் என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினாள்.




ஐயப்பன் வாக்குறுதி ஐயப்பன், நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாக இருப்பதாகவே சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை மீற முடியாது என்று கூறினார். அதற்கு அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தவே, ஐயப்பனும், நான் வீற்றிருக்கும் மலையிலேயே நீயும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்திரு. என்றைக்காவது ஒரு கன்னி சாமியாவது என்னைக் காண வராமல் இருக்கிறாரோ அன்றைக்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

சன்னதியில் இடம் இவை எல்லாமே ஐயப்பனின் அவதார நோக்கத்திற்காக நடைபெற்றது என்பதை பந்தள மன்னனுக்கு எடுத்துரைத்த ஐயப்பன், தான் அமைதியான சூழலில் தியானம் செய்யப் போவதாக சொல்லி, தனக்கு ஒரு ஆலயம் எழுப்பும்படி மன்னனுக்கு சொன்னார். அதோடு, ஒரு அம்பை மலை மீது எய்து, அந்த அம்பு விழும் இடத்தில் தனக்கும், மாளிகைப்புரத்தம்மனுக்கும் ஆலயம் அமைக்குமாறு கூறிவிட்டு மறைந்தார். ஐயப்பன் சன்னிதிக்கு இடது புறத்தில் சுமார் 300 அடி உயரத்தில் மாளிகைப்புரத்து அம்மனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.




கன்னிச்சாமி அன்றிலிருந்து இன்று வரையிலும், நாள்தோறும் சபரிமலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு, கண்டிப்பாக மாளிகைப்புரத்து அம்மனையும் வணங்கி விட்டு தான் திரும்பி செல்கின்றனர். ஆனால் எந்த ஒரு கன்னி சாமியும் ஐயப்பனை தரிசிக்க வராமல் இல்லை. மாளிகைப்புறத்தம்மன் ஐயப்பனை மணக்க ஆவலோடு காத்திருக்கிறார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!