Sprituality

இருமுடி தத்துவம்

சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா?- இருமுடி தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தேங்காய்க்குள் நெய்யை ஊற்றி அதை இருமுடி கட்டி எடுத்துக்கொண்டு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பாடிக்கொண்டு சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். நெய்யபிஷேகம் பிரியா ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் என்றும் நெய் அபிஷேகம் எப்போது இருந்து செய்யப்படுகிறது என்றும் பார்க்கலாம். சபரிமலை ஐயப்பன் சிவன் விஷ்ணுவின் அம்சம்தான். இதனை அனைவரும் உணரும் வகையிலேயே முக்கண் கொண்ட சிவ அம்சமான தேங்காயில் விஷ்ணுவின் அம்சமான பசு நெய் ஊற்றி எடுத்துச்செல்லப்படுகிறது. இருமுடியை முதன் முதலில் தலையில் ஏற்றியது ஐயப்பன் என்று புராணம் கூறுகிறது.





ஐயப்பன் அவதாரம் சிவனுக்கும் மோகினி ரூபமான விஷ்ணுவுக்கும் மகனாக அவதரித்தவர் ஐயப்பன். பம்பா நதிக்கரையில் பந்தள அரசன் ராஜசேகரனால் கண்டெடுக்கப்பட்டார். பிள்ளை இல்லாத தனக்கு கடவுள்  கொடுத்த பிள்ளை என்று மகிழ்ந்தார் பந்தள மன்னன். கழுத்தில் மணியுடன் பிறந்தவருக்கு மணிகண்டன் என்று பெயர்சூட்டி வளர்த்தார் பந்தள மன்னன். மணிகண்டன் வந்த நேரம் செல்வ செழிப்பு அதிகரித்தது, பந்தள ராணிக்கும் குழந்தை பிறந்தது. நாட்கள் செல்லச் செல்ல விதி அரசி ரூபத்தில் விளையாடியது. தனது மகனை அரசனாக்க வேண்டும் என்பதற்காக மணிகண்டனை தவிர்த்து வந்தாள் அரசி. தலைவலியால் அவதிப்படுவதாக பொய்யாக கூறி நடித்தாள். அரசவை வைத்தியரை கைக்குள் போட்டுக்கொண்டு தலைவலிக்கு புலிப்பால் குடித்தால் மட்டுமே நோய் தீரும் எனக் கூற வைத்தாள்.




புலிப்பால் தேடி புறப்பட்ட மணிகண்டன் தாயின் நோய் தீர புலிப்பால் கொண்டு வர வனத்திற்கு புறப்பட்டார் சிறுவனாக இருந்த மணிகண்டன். தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்ண எடுத்துச் செல்லும் உணவுகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாக கட்டினார். முக்கண்ணனான சிவனின் அம்சம் போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் கட்டிக் கொடுத்தார். இருமுடி களையும் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் சென்றார்.

புலி மீது வந்த ஐயப்பன் காட்டுக்கு செல்லும் வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுத்தாள். வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலிகளாக புடை சூழ புலி மேல் ஏறி பந்தள நாட்டுக்குச் சென்றார் ஐயப்பன். புலிமேல் வந்த மணிகண்டனை கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள். ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.அவதார நாயகன் தர்ம சாஸ்தா அய்யன், தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவம் இருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டும் என்றால் அங்கு வருமாறு கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் ஐயப்பன்.





பந்தள மகாராஜாவின் இருமுடி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தள மன்னன் செல்லும் போது ஐயப்பனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்வார். நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. தேங்காய்க்குள் நெய் ஊற்றிக் கொண்டு சென்றால் பல நாள் கெடாமல் இருக்கும். பந்தள மன்னன், ஐயப்பனை காண நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும். எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் போது நெய் தேங்காய் கொண்டு செல்வது முக்கியமான ஒன்றாகிவிட்டது. நெய் தேங்காய் கொண்டு போய் அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து விட்டு அதை பிரசாதமாக வீட்டிற்குக் கொண்டு செல்கின்றனர்.

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் சபரிமலை ஐயப்பன் சிலை கடந்த 1800ஆம் ஆண்டு வரை மரத்தால் செய்யப்பட்ட தாரு சிலை ஆக தான் இருந்தது. அதன் காரணமாக அப்போது வரை சுவாமிக்கு நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தது. இதனால் ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லக்கூடிய நெய் அங்குள்ள நெய்த்தோணியில் கொட்டிவிட்டு வரும் பழக்கம் இருந்தது. இப்போதும் கூட பழைய முறையைப் பின்பற்றக் கூடிய கேரள ஐயப்ப பக்தர்கள் சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யாமல், நெய் தோணியில் கொட்டிவிட்டு, அதிலிருந்து சிறிது நெய் பிரசாதம் கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. தற்போது நேரடியாக ஐயப்ப சாமி சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பிரசாதத்தை பக்தர்கள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.





இருமுடி உணர்த்தும் தத்துவம் சபரிமலை யாத்திரை புறப்படும் பக்தர்கள் இருமுடி கட்டி புறப்படுவார்கள். இவற்றுள் ஒரு முடியில் சாமிக்கு உரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். மற்றொன்றில் அவர்கள் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். மலையை நோக்கி அவர்கள் செல்லச் செல்ல உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னிதானத்திற்கு செல்லும் போது அவர்களின் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமிக்கு அரிய பொருட்கள் அடங்கிய முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும்.

இது ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துகிறது. மானிடராய் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடன் தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீக பற்று குறைந்து மறைந்து போகிறது. இறை பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது. இதுவே இருமுடி உணர்த்தும் தத்துவமாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!