Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

தவிக்குது தயங்குது ஒரு மனது – 3

3

 

சிவப்பு, மஞ்சள், நீலம்,  கருப்பு கூடைகளில் சேமிக்கப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள் சுகந்தி. அவற்றை உரிய முறையில் தொற்று நீக்கம் செய்த பின்பே குப்பைகளாக கழிக்க வேண்டும் .பொதுவாக இந்த வேலை மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளர்களாலோ அல்லது பொறுப்பான தாதிகளாலோதான் செய்விக்கப்படும் .ஆனால் இங்கே அவளுக்கான தண்டனையாக இந்த வேலை அவள் முதுகிலேற்றப்பட்டுள்ளது .

 

” ஐயே , டாக்டரம்மா நீங்க இன்னாத்துக்கு இங்கன வந்தீக ? ” அகல வட்டக் குங்குமும் , புகையிலை குதப்பிய வாயுமாக நின்றிருந்த முனியம்மா ஆச்சரியமாக  கேட்டாள் .

 




” நீங்கெல்லாம் எப்படி வேலை செய்றீங்கன்னு பார்க்கத்தான்கா ” சுகந்தி மனக்குறை மறைத்து புன்னகைத்தாள் .

 

” அட சே , ஸ்டெதாஸ்கோப்பு புடிக்குற கையில …என்னதிது ? ” சுகந்தி கையில் தொட்ட நீல வண்ணக் கூடையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் முனியம்மா.

 

” அந்தாக்கல வேல பாக்காம போயிடுவோமாக்கும் ? இப்ப இன்னாத்துக்கு ஒன்னய இங்கன இட்டாந்தாகளாம் ? ”

 

” சின்ன டாக்டரய்யாதான் இவுங்களுக்கு இன்னைக்கு இங்கதான் டியூட்டின்னு கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க ” தலைமை தொழிலாளி தகவல் தந்தார் .

 

முனியம்மா ஆச்சரியமாய் முகவாயில் கை வைத்தாள் . ” ஏனுங்கம்மா அப்படி ? ”

 

” இங்கே க்ளீனிங் செக்‌ஷன் சரியில்லையே அக்கா .அதை செக் செய்ய வேண்டாமா ? ”

 

” அதாரு அப்படி சொன்னது ? ” இடுப்பு சேலையை வரிந்து கட்டி சண்டைக்கு தயரானாள் முனியம்மா .

 

” நான்தான் ” டாக்டரம்மாவின் அழகான புன்னகையின் பின்  குற்றச்சாட்டினை மறுக்க முடியவில்லை அவளால் .

 

” சும்மா நின்னு சொல்லுங்கம்மா .நாங்க செய்யுறோம் ” குரலிறக்கி தழைந்தாள் .




” ம் …இப்போ சொல்லுங்க , இந்த மருந்தை ஊற்றி வைத்து எவ்வளவு நேரம் ஆயிற்று ? ” சிவப்பு நிறக் கூடையை காட்டிக் கேட்டாள் சுகந்தி .அவள் குறிப்பிட்ட மருந்து சோடியம் ஹைப்போ குளோரைட் .மருத்துவக் கழிவுகளை தொற்று நீக்கம் செய்ய இதனை பயன்படுத்துவர் .

 

” அது இப்போதாங்கம்மா …அரை அவர் இருக்கும் ” என்றபடி தலைமை துப்புரவாளரை பார்க்க அவர் அவசரமாக எழுந்து வந்து , சிகப்பு கூடையை சுத்தம் செய்ய முனைந்தார் .

 

” மூன்று மணி நேரங்கள் ஆச்சு …” முணுமுணுத்தார்.

 

” இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் ” கண்டிப்பான குரலில் உத்தரவிட்டவள் மற்ற கூடைகளையும் ஆராய்ந்து சரி செய்ய தொடங்கினாள் .

 

” நீங்களெல்லாம் இப்படி சரியாக வேலை செய்யாததால்தான் என்னை கவனிக்க சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் ” தொழிலாளர்கள் கவனமாக வேலைகளில் இறங்கினர்.

 

உபயோகித்த ஊசி குழல்கள், பிளாஸ்டிக் ஐ.வி.குழாய்கள். பிளாஸ்டிக் கேதிட்டர்கள், பிளாஸ்டிக் சிறுநீர் பைகள், பிளாஸ்டிக் ரைல்ஸ் டியுப்ஸ். பிளாஸ்டிக் ஐ. வி பைகள் போன்ற மருத்துவ கழிவுகள் மிகவும் ஆபத்தானவை .அவைகளை உரிய முறையில் தொற்றுக்களை நீக்கி அப்புறப்படுத்த வேண்டும் .பெரும்பான்மையான மருத்துவமனைகளில் இவைகளை சரி வர பராமரிப்பதில்லை .அப்படியே குப்பையில் போட்டு விடுவர் .

 

இங்கேயும் அதே நிலைமை இருப்பதை சில நாட்களுக்கு முன் கண்டு கொண்ட சுகந்தி உடனே மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக நியாயக்குரல் எழுப்ப , அப்போது நீயே இதனை கவனியேன் என ஏதோ ஒரு முன்பகையை பின் வைத்து தாய் , மகனால் இங்கே அனுப்பப் பட்டுள்ளாள் .




” மஞ்சள் கூடையில் நஞ்சுக்கொடியை போடுங்க , அந்த வெட்டுப்பட்ட விரலும் இங்கேதான் . பஞ்சு , பிளாஸ்டர் , க்ளவ்ஸ் , மாஸ்கெல்லாம் சிவப்புகூடை , ட்ரிப்ஸ் ட்யூப் , இன்ஜெக்சன் ட்யூப் எல்லாம் ஊதா கூடை .ம் ..சரியா பிரிச்சு போடுங்க .ஊதா கூடையில் சோடியம் ஊத்தி வைங்க …குப்பை வர வர இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை சோடியத்தை மாற்றனும் ”

 

ஏழு அடுக்கு கொண்ட பல்வேறு விசேச சிகிச்சை வசதிகளடங்கிய மிகப் பெரிய மருத்துவமனை அது .ஒவ்வொரு தளத்திலும் இருந்து மருத்துவக் குப்பைகள் ஓயாமல் வந்து கொண்டே இருந்தன .அங்குமிங்கும் நடந்தபடி ஓய்வின்றி அவற்றைக் கண்காணித்தபடி நின்று கொண்டே ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள் சுகந்தி .

 

இடையில் ஒரு முறை அங்கே வந்து பார்த்த ஸ்வேதா திருப்தியான தலையசைவுடன் சென்றாள் .திருப்தி இங்கே நடந்து கொண்டிருந்த வேலைகளுக்காகவா அல்லது இதோ இப்படி மருத்துவமனையின் கடைநிலை ஊழியங்களை பார்த்துக் கொண்டிருக்கும் தனக்காகவா ? யோசித்துவிட்டு தோள்களை குலுக்கிக் கொண்டாள் சுகந்தி .

 

எப்படியாயினும் இருக்கட்டும் .ஒரு பரபரப்பான மருத்துவமனையின் முக்கியமான வேலைகள் இவை .ஒரு மருத்துவராக இவற்றை ஒழுங்குபடுத்துவதில்  தவறில்லை .சுகந்தியின் வேலைகள் மதிய உணவு நேரத்திலும் தொடர்ந்தன .

 

” நீங்க சாப்பிட போங்க டாக்டரம்மா .இனி நாங்க சரியாக பார்த்துக்குவோம் ” உறுதி போல் தலைமை துப்புரவாளர் சொல்ல ,சுகந்தி மணியை பார்த்தாள் .

 

மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. அன்று காலை அவள் அன்னை தாமதமாக எழுந்ததால் மருத்துவமனை கேன்டீனில் சாப்பிட்டுக் கொள்வதாக வந்திருந்தாள் .இப்போது கேன்டீனில் உண்ண எதுவும் கிடைக்காது .ப்ச் …ஏதாவது ஜூஸ் குடித்துக் கொள்ளலாம் .அன்றைய துப்புரவு வேலை விபரங்களை வரிசைப்படுத்தி எழுதி பைலாக்கி , தலைமை மருத்துவர் ஷியாமிடம் ஒப்படைக்க அவர் பகுதிக்கு சென்றாள் .

 

எத்தனையோ மருத்துவ வேலைகள் இருந்தாலும் , பொறுப்பான நிர்வாகியாக மருத்துவமனையின் இந்தக் கடைநிலை வேலைகளையும் தினமும் மேற்பார்வையிட வேண்டும் என்பது அவள் ஸ்வேதாவிடம் வாதாடிய விசயங்களில் ஒன்று .அதனை வலியுறுத்த அன்றைய வேலை விபரங்களுடன் நிர்வாகிகளின் பகுதிக்கு சென்ற போது , அவர்கள் மதிய உணவு முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தனர் .




” மருத்துவகழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்யாத இடம் மருத்துவமனையே கிடையாது ….” லேசான இம்மலாக சார்த்தியிருந்த கண்ணாடிக் கதவின் இரு விரல்கடை இடைவெளி வழியாக உள்ளே ஸ்வேதா , அபிநயத்தோடு ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது தெரிந்தது.

 

சுகந்தியைத்தான் பிரதி எடுத்து கேலி செய்து கொண்டிருக்கிறாள் .நான்கு நாட்களுக்கு முன் சுகந்தி கூறிய வார்த்தைகள் இவை .தயங்கி நின்றாள் .

 

” அந்தப் பொண்ணுக்கு ரொம்ப திமிர் ஷியா . மற்றவர்களை போல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு பேசாமல் போக வேண்டியதுதானே ? ” கணவனிடம் நியாயம் கேட்டாள் ஸ்வேதா .

 

” நம்மிடம் சம்பளம் வாங்கும் பெண் அவள் .அவளுக்கு நீ ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாய் ஸ்வா ? ” மனைவிக்கு ஆதரவு குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் கணவர் .

 

” அதென்னவோ அவளுக்கும் , எனக்கும் ஏதோ ஒரு பனிப்போர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது ”

 

” இதில் சாத்விக்கிற்கு ஏதும் பங்கு இருக்கிறதா ? ” ஷியாமின் குரலில் கூர்மை வந்திருந்தது .

 

” சாத்விக்தான் இன்று அவளை அந்தக் குப்பைகளை பொறுக்க அனுப்பி வைத்தான் தெரியுமா ? ”

 

இவ்வளவு நேரம் உயர்ரக ஆங்கிலத்தில் ஒலித்த அவள் குரல் இப்போது லோக்கல் தமிழுக்கு இறங்கி குப்பை பற்றிய பேச்சில் குப்பையாக ஒலிப்பதை உணர்ந்தாள் சுகந்தி .




சை …இவர்களெல்லாம் உயிர் காக்கும் பொறுப்பில் இருக்கும் பெண்மணி , வெறுப்பு மண்ட திரும்ப எண்ணி எட்டு வைத்தவள் , உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாத்விக்கின் மேலான மோதலை கடைசி நொடி தவிர்த்து தள்ளி நின்றாள் .

 

” என்ன ? ”

 

” இன்றைய வேலை விபரம் கொடுக்க வந்தேன் டாக்டர்  ” பைலை காட்டினாள் .

 

” உள்ளே வாங்க  ” பைலுடன் அவர்கள் அறைக்குள் நுழைந்து தந்தை அருகே அமர்ந்தபடி பைலை புரட்டினான் .

 

ஸ்வேதா ஆவலுடன் பைலை வாங்கிப் பார்த்து ” குப்பைகளையெல்லாம் டிஸ்போஸ் செய்துவிட்டாயா ? ” என்றாள்

குப்பைக்கூடையை தலையில் சுமந்து போகும் பெண்ணை பார்க்கும் பார்வை பார்த்தாள் .

 

” ரத்தத்தை துடைத்து தூக்கி எறியும் பஞ்சை காற்றில் பறக்க விடுபவர் , ஒரு மருத்துவரே கிடையாது .நான் நிச்சயமாக சிறந்த மருத்துவர் .எனது கடமையை மிகச் சரியாக முடித்து விட்டே வந்திருக்கிறேன் டாக்டர் ” நிமிர்வாக பதிலளித்தாள்

 

ஸ்வேதாவின் முகம் சுருங்கியது .திமிர்…திமிர் …பல்லைக் கடித்தாள் .




” மிஸ் .சுகந்தி உங்கள் வேலை முடிந்ததுதானே ? நீங்கள் போகலாம் ” சாத்விக் இடையிட ,தாயைக் காக்கும் தனயனா நீ ! பார்வையை அவனுக்கு கொடுத்தபடி திரும்பினாள் .

 

” சாப்பிடு சாத்வி ” ஸ்வேதா மகனிடம் சொல்ல , ” மிஸ் .சுகந்தி ” இவளை அழைத்தான் அவன் .

 

” சாப்பிட்டீர்களா ? ” தன் அருகில் வந்து நின்று கேட்டவனை நம்ப முடியாமல் ஏறிட்டாள் சுகந்தி .

 

 

 

What’s your Reaction?
+1
6
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!