Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

தவிக்குது தயங்குது ஒரு மனது – 2

 

எஸ்.எஸ் ஹாஸ்பிடல்  – வெயிலில் மின்னிய பெயர் பலகையை பார்த்தபடி அப் பிரமாண்ட மருத்துவமனையினுள்  நுழைந்தாள் சுகந்தி .ஷ்யாம் – ஸ்வேதா , மருத்துவமனை பெயரை மனதினுள்  விரிவு  செய்தபடி தனது வருகையை வாட்சில் நேரம் பார்த்து பதிவு செய்துவிட்டு உள்ளே நடந்தாள் .மணிகளை கணக்கு வைத்துத்தான் இங்கே சம்பளம் .

 

சுகந்தியால் ஏற்றுக் கொள்ள முடியாத ஏற்பாடு இது .துடித்துக் கொண்டிருக்கும் உயிரை காக்கும் நேரத்தில் இங்குள்ள மருத்துவர்கள் யாரும் கை மணிக்கட்டை திருப்பிப் பார்ப்பதில்லையே ! பிறகேன் இந்த பணக்கணக்கு ? அந்த மருத்துவமனை நிறுவனர்கள் மேல் இப்போதும் அவளுக்கு மனத்தாங்கலே ! இங்கே வேலைக்கு சேர்ந்த புதிதில் தனதிந்த  மனக்குறையை அவள் வெளிக்காட்டியும் விட்டாள் .நேரிடையாக அல்ல , மறைமுகமாகத்தான் .ஆனாலும் அதனை புரிந்து கொண்ட ஸ்வேதா நிதானமாக அவளை கண்களால் அளந்து , தனது உதட்டு லிப்ஸ்டிக்கை நாசூக்காக டிஷ்யூ வைத்து துடைத்தபடி புன்னகைத்தாள் .

 




” இந்த ஹாஸ்பிடலை இந்த அளவு கொண்டு வர நானும் ஷியாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் தெரியுமா ? இங்கே நாங்கள் போட்டுள்ள பணத்தின் அளவு தெரியுமா உனக்கு ? ”

 

எனக்கெதற்கு அந்தக் கணக்கு ? மனதிற்குள் நினைத்தபடி அசையாமல் நின்றாலும் விழிகளை தனது எம்.டியின் முகத்திலிருந்து அகற்றவில்லை சுகந்தி .

 

” கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் கம்பௌன்டராக இருந்து ரிட்டயர்ட் ஆனவர்களுக்கு இதெல்லாம் புரியாது ” சுகந்தியின் நிமிர்வை சிதைத்து விடும் வேகம் ஸ்வேதாவிற்கு .




ஆனால் சுகந்தியின் தலை இன்னமும் நிமிர்ந்தது. ” என் அப்பாவின் ,எளிய ஏழைகளுக்கு பணமின்றி வைத்தியம் பார்க்கும் அரசாங்க மருத்துவமனை அட்டென்டர் வேலைதான் இந்த மகாப் பெரிய கார்ப்பரேட் கம்பெனி வேலையை எனக்கு வாங்கித் தந்திருக்கிறது மேடம் .”

 

கார்ப்பரேட் கம்பெனியா ? ஸ்வேதாவின் முகம் கறுத்தது. இந்த மருத்துவமனையின் பங்குதாரரில் முக்கியமானவரான சேதுபதி ஐயாவின் சிபாரிசு இந்த சுகந்தி . சட்டென அவளை வேலையை விட்டு விலக்க முடியாத தனது நிலையில் ஸ்வேதாவிற்கு கோபம் வந்தது. சேதுபதியை நிச்சயம் அவர்களால் பகைத்துக் கொள்ள முடியாது .

 

” நான் என் டூட்டிக்கு போகிறேன் மேடம் ” கம்பீரமாய் அறிவித்து நடந்தவளை வெறித்தாள் .ஒரு நாள் இவளை தோற்கடிக்க வேண்டும் …ஏனோ ஒரு வஞ்சம் புள்ளியாய் ஸ்வேதாவின் மனதில் வந்தமர்ந்து விட்டது .அதற்கான வாய்ப்பும் ஸ்வேதாவிற்கு வெகு விரைவிலேயே கிடைத்தது. மிக அழகாகவே அவள் தன் வஞ்சத்தை தீர்த்தும் கொண்டாள் .




ஸ்வேதாவை , அவள் தனக்கு ஏற்படுத்திய  மனத்தாங்கலை , வலிக்கும் காயத்தை நாவால் அழுத்தி வருடி வலி அனுபவிக்கும் விலங்கென அசை போட்டபடி , அகன்ற படிகளில் ஏறினாள் சுகந்தி .

 

ஐந்து படிகளேறியதும் மாடிப்படி இரண்டு பக்கமாக  ஐசியு , ஆபரேசன் தியேட்டர் எனப் பிரிய , அந்தப் பிரிவின் சுவற்றில் பிரம்மாண்டமாக நின்றனர் ஷ்யாம் , ஸ்வேதா அவர்களுக்கு சற்றுப் பின் சாத்விக் .மூவரும் சிறிது தலை தாழ்த்தி இரு கைகளையும் விரித்து தயாரெனும் சைகையோடு யெஸ் …யெஸ் …யெஸ் எனும் வார்த்தைகளை உச்சரிப்பது போல் நின்றிருந்தனர் .அந்த மருத்துவமனையின் பெயர் விரிவாக்க எஸ் .எஸ் .இவர்களிடம் யெஸ் …யெஸ் ஆகியிருந்தது.

 

இந்த யெஸ் …யெஸ்ஸே அவர்கள் மருத்துவமனை அடையாள வார்த்தைகள் .எந்த மருத்துவ தேவையென்றாலும் அவர்கள் யெஸ் என்று ஏற்று செய்து முடிப்பார்களாம் .அது சரிதான்…ஆனால் அதற்கு முன் பேங்க் பேலன்சை கேட்டு விடுவார்கள் . கிண்டலாக நினைத்தபடி சில விநாடிகள் அங்கே நின்றுவிட்டாள் சுகந்தி .

 

இக்கால இளைஞர்களின் நாகரீகத்திற்கு ஏற்ப , கண்மையை அடர்த்தியாக அப்பியது போல் கருமை பூத்திருந்த தாடையும் , மெலிதான மீசையுமாக , படித்த வெளிநாட்டு படிப்பு உடலின் ஒவ்வொரு அணுவிலும் தெரிய தாய் , தந்தையின் பின் நின்றிருந்த சாத்விக்கின் மேல்  அவள் விழிகள் நிலைத்த சற்று அதிகப்படி விநாடிகளில் அவளது தோள் கிண்டலாக தட்டப்பட்டது .

 

” ஹலோ டாக்டர் , காலங்கார்த்தாலேயேவா ? ” மின்மினி . உடன் பணிபுரிபவள் .




” என்னது காலங்கார்த்தாலே ? ” சுகந்தி முறைக்க ,

 

” ஐயோ ஒண்ணுமில்லப்பா ,சாத்வீகம் …சாத்வீகம் …” தோழியை அமைதிப் படுத்துவது போன்ற பாவனையில் தன் கிண்டலை மேலும் தொடர்ந்தாள் .

 

” மினி வேண்டாம் ,காலங்கார்த்தாலே வம்பு பண்ணாதே ”

 

” அதையேதான் டாக்டர் நானும் சொன்னேன் .காலங்கார்த்தாலே என்ன இதுன்னு …? ”

 

” என்ன …? எது …? ” கேள்விகளை கேட்டுக் கொண்டு வந்து நின்றான் மாடசாமி .

 

” உங்களுக்கு என்ன வேண்டும் டாக்டர் ? ” மின்மினியிடம்  எரிச்சல் வந்திருந்தது.

 

” எனக்கொன்றும் வேண்டாம் .நீங்க இரண்டு பேரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்களே …அதைத்தான் …! ”

 

” மிஸ்டர் நாங்க லேடீஸ் ஏதாவது பேசிக்குவோம் .அதை உங்களிடம் விளக்கனும்னு என்ன அவசியம் ? ”

 

” மினி என்ன இது ? ” சுகந்திக்கு மாடசாமியின் வாடிய முகம் பொறுக்கவில்லை




.

 

” என்ன டாக்டர் இது ? கொஞ்சம் கூட டீசன்சி இல்லாமல் ! இவர் கூடவெல்லாம் உங்களுக்கு ப்ரெண்ட்ஷிப் ! சை …” மின்மினி அளவற்ற வெறுப்புடன் அகன்று விட கண் கலங்கி நின்ற மாடசாமியை பார்த்து மல்லிகையாய் புன்னகைத்தாள் சுகந்தி .

 

” என்ன டாக்டர் இது ?  …ம் ? கண்ணை துடைங்க ” உரிமையாய் அதட்டினாள் .

 

” சாரி டாக்டர் , நாலு பேர் நடமாடும் இடத்தில்  பெண்கள் இருவர் தனியாக நின்று பேசி சிரித்தால் , சுற்றியிருப்பவர்கள் கண்ணில் விவகாரமாக படும் .அதனால்தான் உங்களுக்கு ஆண் துணையாக நான் பக்கத்தில் வந்து நின்றேன் ” மூக்குறிஞ்சி பேசி , பாக்கெட்டில் இருக்கும் கர்ச்சீப் நினைவின்றி புறங்கையால் அழுத்தி இரு கண்களையும் துடைத்த மாடசாமி , அவளுக்கு தன் சிறு வயதில் தெருவோர விளையாட்டுத் தோழனாக இருந்த சுப்பிரமணியின் நினைவைக் கொண்டு வந்தான் .

 

மாடசாமி இப்படித்தான் , இன்னமும் நாற்பது வருடங்களுக்கு முற்பட்ட அவனது கிராமத்து கலாசாரத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன்.ப்ச் …அப்பாவி ! மனதிற்குள் உச்சுக் கொட்டிக் கொண்டு , அழகிய புன்னகை ஒன்றுடன் தனது ஹேன்ட்பேக்கிலிருந்து  ஒரு கர்ச்சீப்பை எடுத்து நீட்டினாள் .மலர்ந்த முகத்துடன் அதனை வாங்கி முகம் பதித்துக் கொண்டான் அவன் .

 

” நான்கு பேர் நடமாடும் இடத்தில் நின்று கொண்டு …என்ன இது ?” கடூரமான கேள்வி பின்னிருந்து வர விதிர்த்து இருவரும் திரும்பி பார்த்தனர் .சாத்விக் நின்றிருந்தான் .கண்களில் கோபக்கனல்.

 

” சா…சாரி டாக்டர் .நாங்க சும்மா …பேசிக் …” தடுமாறி நாவில் தந்தியடித்த மாடசாமியை கையமர்த்தினாள் .

 

சற்றுமுன் மாடசாமி சொன்ன நான்கு பேர் நடமாடும் இடத்திற்கும் , இதோ இப்போது இவன் சொல்வதற்கும் என்ன பெரிய வித்தியாசம் ? முன்னது கிராமத்து தமிழிலும் , பின்னது அமெரிக்கன் ஆங்கிலத்திலும் சொல்லப்பட்டது என்பதைத் தவிர …




” உங்களுக்கு என்ன விளக்கங்கள் தேவை டாக்டர் ? ” அமெரிக்க ஆங்கிலத்திற்கு சளைத்ததில்லை எங்கள் இந்திய ஆங்கிலம் என்ற திமிர் சுகந்தியின் வார்த்தைகளில் .

 

வேலை பார்க்க வந்துவிட்டு வேலையை மட்டும் பார்க்க வேண்டும் .அதை விட்டு நாற்சந்தியில் நின்று கொண்டு என்ன விளையாட்டு ? பொறுப்பான மருத்துவர்கள் செய்யும் வேலையா இது ? இது போன்ற விளையாட்டுத்தனத்திற்கு அவர்கள் மருத்துவமனை இடமில்லை .படபடவென தனது இலக்கியத்தன்மையை பறையடித்த அமெரிக்க ஆங்கிலத்தில் மாடசாமியின் தொண்டை உலர்ந்தது .

 

அவனுக்கு சத்தியமாக ஒரு வார்த்தை புரியவில்லை .” சாரி டாக்டர் …சாரி டாக்டர் … சுகந்தியும் , மின்மினியும் உங்க போட்டோ பார்த்து ஏதோ சிரிச்சு  பேசிட்டு இருந்தாங்க .நான் என்னன்னு கேட்டு …சாரி …சாரி ” உளறலாய்  குழறலாய் மன்னிப்பு கேட்டு நின்றான் .

 

” கொஞ்சம் அமைதியாக இருங்க சாமி .” அழுத்தமாய் பேசி அவனை அமைதியாக்கியவள் தனது கை மணிக்கட்டை சாத்விக்கின் முன் நீட்டி  ,” எங்களது வழக்கமான ரவுண்ட்சுக்கு கூட இன்னமும் கால்மணி நேரம் இருக்கிறது டாக்டர் .அத்தோடு அவசர சிகிச்சை நோயாளி கூட யாரும் இல்லை .கூடுதலாக ஒரு இரண்டே நிமிடங்கள் இங்கே நின்றதில் என்ன தவறு ? ”

 

தனது நேர விளக்கத்திற்கு மிகப் பெரிய அமெரிக்கன் சொற்பொழிவை எதிர்பார்த்திருந்தவள் , எதிர்புறம் சத்தமின்றி போக ஏறிட்டு பார்த்து லேசாக முகம் சிவந்தாள் .

 

சாத்விக்கின் கண்கள் தன் முன் நீண்டிருந்த மணிக்கட்டை தொடர்ந்து நீளக் கை , புஜம் , தோள் என , இரைந்து கிடந்த தானியங்களை பரக்க பரக்க  கொத்தும் சேவலென அலைந்து கொண்டிருந்தது.

 




” எங்களது வேலை நேரம் ஆரம்பித்துவிட்டது .வ…வருகிறோம் .வாங்க டாக்டர் ” லேசாக மாடசாமியின் கை பற்றி இழுத்தவாறு நடக்க ஆரம்பித்தவளை ,ஒரு சொடுக்கிட்டு நிறுத்தினான் .

 

” ஹலோ …உங்க பெயர் என்ன ? ” சுகந்தி புரியாத குழப்பத்துடன் அவனைப் பார்க்க மாடசாமி முந்தினான் .

 

” சுகந்தி டாக்டர் ” இது தெரியாதா உனக்கு என பாவனை காட்டி நின்றவனை பார்த்து ஒரு கோணல் புன்னகையை சிந்தியவன் ” உங்கள் வேலை நேரம் ஆரம்பித்தாகிவிட்டது மிஸ்டர் .மாடசாமி .நீங்கள் வார்டுக்கு போகிறீர்களா ? ” என்றான் .

 

” இ …இதோ டாக்டர் ” தடுக்கிய கால்களுடன் விரைந்தவனை பார்த்து நின்றவள் முன் மீண்டும் சொடுக்கிட்டான் .

 

” சுகந்திங்கிற டாக்டருக்கு இன்று வேலை வார்டில் கிடையாது .என் பின்னால் வாருங்கள் ”

 

உன் வீட்டு நாய்குட்டியாடா நான் ? முன்னால் சென்றவனின் பரந்த முதுகை பார்த்து பொறுமியபடி பின் தொடர்ந்தாள் .

 

சாத்விக் அவளை அழைத்துச் சென்ற இடம் அந்த மருத்துவமனையின் பின்பகுதி .குப்பைகள் , கழிவுகள் சேமிக்கப்படும் அந்தப் பகுதி குடோனிற்குள் அவளை அழைத்துப் போய் நிறுத்தியவன் ,

 

” கணக்கெல்லாம் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் ” என்றபடி அங்கே அமர்ந்திருந்த தலைமை துப்புரவு தொழிலாளி பக்கம் கை காட்டி விசமமாக  புருவம் உயர்த்தினான்.




அடி வாங்கிய தன்மானத்தை மறைத்தாள் ,” இந்த மருத்துவமனையின் ஒவ்வொரு செங்கலிலும் மிஸஸ்.ஷ்யாமின் ஆதிக்கம் இருப்பது தெரியும் .ஒவ்வொரு மனிதர்களிடமும் அவர்கள் ஆதிக்கம் உண்டென்பதை இப்போது தெரிந்து கொண்டேன் ”

 

புத்தர் பெருமானின் பொறுமையை தோற்றத்தில் கொண்டுவிட்டவளை பார்த்தபடி நின்றிருந்தான் சாத்விக் .

 

What’s your Reaction?
+1
5
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!