Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 34

34

தவறவிட்ட நுணுக்கமொன்று
என் பெருவிரல் ரேகைக்குள்
ஒத்தியெடுக்க எத்தனிக்கையில்
விரியத் தொடங்குகின்றன
என் சிப்பிக் கனவுகள்..




“தவறான எண்ணத்தில் இல்லை மைதிலி.. உண்மையாகவே வந்தனாவிற்கு உணர்த்துவதற்காகத்தான்..” இரவில் அவளிடம் சமாதானமாக பேசினான் பரசுராமன்..
“நாங்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தீர்களா..?”
“ஆமாம்.. திடீரென்று இந்த யோசனை வந்தது.. முன்பு வந்தனா இப்படி நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருந்தாளா..?”
“ம்..”
“இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லவில்லை மைதிலி..?”
“சொல்லிவிட்டு இன்னும் இரண்டு அறை சேர்த்து வாங்கவா..?”
அடுத்து பரசுராமனிடமிருந்து பேச்சில்லை.. அறை மௌனமும் இருளுமாக இருந்தது..
“நான் உன்னை மிகவும் நோகடித்திருக்கிறேன் மைதிலி.. சாரிம்மா..” மெல்லிய குரலில் இறைஞ்சலாக பேசினான்..
“ஒரே ஒரு சாரி எல்லாவற்றையும் சரி செய்து விடுமா..?”
“இல்லைதான்.. ஆனால் இது என் திருப்திக்காக மைதிலி..” திடுமென மைதிலி விசும்பினாள்..
“அ.. அப்போது என்னை நீங்கள் எவ்வளவு கேவலமாக நினைத்திருந்திருக்கிறீர்கள்.. எவ்வளவு அசிங்கமாக கணித்து வைத்திருக்கிறீர்கள்..?”
விசும்பல் அதிகமாகி அழுகையாக, சத்தம் வெளி வராமலிருக்க தலையணைல் முகத்தைப் புதைத்துக் கொண்டு தேம்பினாள்.. ஐந்து நிமிடங்கள் அவளை அழ விட்டவன் பின் மெல்ல எழுந்து அருகே வந்தான்..




“நீ நினைப்பது போல் இல்லை மைதிலி, உன் வாழ்க்கையையே கெடுக்க நினைத்தாள் வந்தனா.. ஆனால் நீ அவளுடைய வாழ்க்கைக்காக உருகிக் கொண்டிருக்கிறாய்.. அதற்காக என்னிடம் அத்தனை அடி வாங்கினாய்.. எவ்வளவு உயர்ந்த பெண் நீ.. உன்னை அது போன்ற கேவலமானவளெனும் வார்த்தைக்குள் கூட பொருத்த முடியுமா..? பளபளவென துலக்கி வைத்த குத்து விளக்காக நீ ஜொலித்துக் கொண்டிருந்தாய்.. உன்னை எனக்கு மட்டுமே உரியவளாக்கிக் கொள்ளும் வேகம்தான் எனக்கு.. பாசமோ பரிவோ, நட்போ எதுவானாலும் உனக்கு நான் மட்டுமே தரவேண்டும் என்ற அதிகாரம் எனக்கு.. அதுதானே தவிர நான் உன்னை ஒரு நாளும் கீழாக நினைத்ததில்லை..”
பேசியபடி அவளருகே அமர்ந்தவன் அவள் தலையை தலையணை மேலிருந்து எடுத்து தன் மடியில் வைத்துக் கொள்ள முயன்றான்.. மைதிலி விருட்டென எழுந்தாள்.. அவனைத் தள்ளிவிட்டு பின்னால் நகர்ந்து போய் சுவற்றில் சாய்ந்தாள்..
“என்னைத் தொடாதீர்கள்.. உடம்பெல்லாம் எரிகிறது எனக்கு..”
“மைதிலி..” கையை அவள்புறம் நீட்ட, அவள் மேலும் அலறினாள்..
“இல்லை.. வேண்டாம்.. நான் உங்களை வெறுக்கிறேன்.. உங்களோடு வாழத் தயாராக இல்லை..” கத்தியபடி எழுந்து அறைக்கதவை திறந்து வெளியே ஓடினாள்..
அவளுக்கு அப்போது பரசுராமனின் தொடுகையில் சிலிர்த்துக் கொண்டிருந்த தன் உடலுக்கு தண்டனை கொடுத்தாக வேண்டும்.. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது.. அதை குறியாக வைத்து வேகமாக ஓடி பின் வாசல் கதவை திறந்த மைதிலி திகைத்து அங்கேயே நின்று விட்டாள்.. அவளுக்கு தன் வேதனை மறந்து விட்டது..
மைதிலியின் திடீர் செய்கைகளில் அதிர்ந்த பரசுராமன் வேகமாக அவள் பின்னேயே வந்தான்.. வாசல்படியில் நின்றவளின் தோள்களை பற்றி உலுக்கினான்..




“ஏய் ஏன்டி இப்படி செய்கிறாய்..? உனக்கு கொஞ்சமாவது என்னைப் புரிகிறதா..? நான் உன் மீது உயிரையே வைத்திருக்கிறேன்.. அதை எப்படி உனக்கு நிரூபிக்கட்டும்..?”
பரசுராமனின் பேச்சுக்கள் எதுவும் மைதிலியின் மூளையில் பதியவே இல்லை.. அவள் வெளியே மழைக்குள் கை நீட்டிக் காண்பித்தாள்.. பரசுராமன் திரும்பிப் பார்க்க அங்கே அடர்த்தியாக கொட்டிக் கொண்டிருந்த மழைக்குள் அசையாமல் நின்றிருந்தாள் வந்தனா..
“கடவுளே..” முனங்கலுடன் நெற்றியை பிடித்த பரசுராமன்,
“போ..” என மைதிலியை வந்தனா பக்கம் கை காட்டி விட்டு வீட்டிற்குள் போனான்.. தம்பியின் அறைக்கதவை தட்டினான்..
கதவை திறந்த கல்யாணசுந்தரம் அண்ணனை எதிர்பாராமல் திகைத்தான்..
“என்ன அண்ணா..?”
“என்னடா நடக்குது இங்கே..?”
“எ.. என்ன அண்ணா..?”
“அறைஞ்சேன்னா படவா.. பல்லெல்லாம் பேர்ந்துடும்.. உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் என்னடா பிரச்சினை.. அவளை எங்கேடா..?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா.. அவள் அங்கே ஹாலில்..” எட்டிப் பார்த்தவன் அங்கே சோபாவில் அவளைக் காணாது பதறி விழிகளை சுழற்றி பின்வாசல் பக்கமிருந்து சொட்ட சொட்ட நனைந்தபடி வரும் தன் மனைவியை பார்த்து திகைத்தான்.
“தள்ளி நில்லுடா..” வாசலை அடைத்து நின்றிருந்த தம்பியை பரசுராமன் தள்ள, மைதிலி வந்தனாவை அறைக்குள் அழைத்து வந்தாள்..
பரசுராமன் கல்யாணின் கையை பிடித்து இழுத்து ஹாலுக்கு கூட்டி வந்தான்..
“டேய் என்னடா இதெல்லாம்..?”
“அண்ணா அவளுக்கும் எனக்கும் சின்ன சண்டை.. அவள் கோபித்துக் கொண்டு வந்து சோபாவில் படுத்தாள்.. திடீரென எப்போது எதற்கு வெளியே போனாள்னு எனக்கு தெரியலை அண்ணா..”
திரும்ப திரும்ப கல்யாணசுந்தரம் இதனையே சொல்ல பரசுராமனுக்கு சலிப்பு வந்தது..
“டேய் உன் பொண்டாட்டி.. உன் பொறுப்பு.. நீ இன்னமும் சின்ன பையன் இல்லை.. இப்போது உனக்காக ஒரு குடும்பம் இருக்கிறது.. அந்த பொறுப்போடு நடந்து கொள்..”
மைதிலி கதவை திறந்து வந்தாள்..
“டிரஸ் மாற்றி படுக்க வைத்திருக்கிறேன்.. சூடுாக பால் கொண்டு வருகிறேன்..” அடுப்படிக்குள் போய் பாலை சுட வைத்து எடுத்து வந்தாள்.




பரசுராமன் அவள் கையிலிருந்த தம்ளரை வாங்கி கல்யாணசுந்தரத்திடம் கொடுத்தான்.
“இந்தாடா போய் குடிக்க கொடுத்து தூங்க வை..”
“வந்தனா என்ன சொன்னாள் மைதிலி..?” தங்கள் அறைக்குள் நுழைந்ததுமே பரசுராமன் கேட்டான்.
“ம் எப்போதும் போல் பேசினாள்.. உன் வேலையை பார்த்துக் கொண்டு போ.. உனக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாள்.. உங்கள் தம்பி என்ன சொன்னார்..?”
“சின்ன சண்டை.. ஹால் சோபாவில் படுத்திருந்தாள்.. எப்போது மழைக்குள் போனாலென்று தெரியாது என்கிறான்..”
மைதிலி பெருமூச்சு விட்டாள்..
“இவர்களை எப்படி சரி பண்ண போகிறோம்..?”
“அதெல்லாம் சரி செய்து விடலாம் மைதிலி.. நீ கவலையில்லாமல் இப்போது தூங்கு..” சொன்னபடி பரசுராமன் கண்களை மூடிக் கொள்ள மைதிலியும் விழி மூடி உறங்க ஆரம்பித்தாள்..
சற்று முன் தங்கள் வாழ்க்கை பற்றிய கவலையில் இருந்த தம்பதிகள் இப்போது தங்கள் குடும்பத்தினரின் பிரச்சனையில் தங்களது பிரச்சனையையே மறந்து போயினர்..
“நேற்று உனக்கும் உன் புருசனுக்கும் என்ன சண்டை வந்தனா..?” மர மத்தால் கீரையை கற்சட்டியில் இட்டு கடைந்தபடி கொஞ்சம் தள்ளி மாவு சலித்துக் கொண்டிருந்த கௌரிம்மாவின் காதில் விழாமலிருக்க குரலை குறைத்துக் கேட்டாள் மைதிலி..
வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த வந்தனா.. மைதிலியை நிமிர்ந்து பார்த்து முறைத்துவிட்டு குனிந்து கொண்டாள்.. அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்தபடி இருந்தது..
“இது வெங்காய கண்ணீர் மட்டும்தானா வந்தனா..?”
வந்தனா கோபத்தில் வேகமாக கையை உதற அவள் கைபட்டு வெங்காய கூடை கவிழ வெங்காயம் அறை முழுவதும் சிதறி ஓடியது.. சரியாக அந்த நேரம் அடுப்படிக்குள் வந்தாள் மகாராணி.. அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது..
“என்ன செய்றீங்க இங்க..?” பல்லைக் கடித்தாள்..
“தெரியாமல் கை தட்டி விட்டது அத்தை..” வந்தனா முணுமுணுத்தாள்.. இப்படி ஒரு சிறு குரலில் அவள் இதற்கு முன் மகாராணியிடம் பேசியதில்லை.. அத்தை என்ற அதிகார அழைப்புடன் உரிமை தெறிக்க தேவைகளை அதிகாரமாகத்தான் மாமன் மனைவியிடம் சொல்வாள்..
இப்போதோ மகாராணி அத்தை என்ற பதவியில் இருந்து ஏதோ ஒரு புள்ளியில் மாமியாராகி மாறிப் போய்விட, முன் போல் அதிகாரம் காட்ட வந்தனாவால் முடியவில்லை.. அந்த வீட்டில் தனது நிலை மாறுதலை அவளால் ஒப்பவும் முடியவில்லை..
“இன்னமும் சின்னப்பிள்ளை மாதிரி தட்டி விட்டு விளையாண்டு கொண்டிருந்தால், வேலை ஆவது எப்போது..? ம் சீக்கிரம் சமையலை முடிங்க.. இன்று கல்யாணப் பத்திரிக்கை வைக்க இரண்டு உறவுக்காரங்க வருவாங்க.. அவுங்களுக்கு சாப்பாடு போட்டு விட்டுத்தான் அனுப்பனும்..”
உத்தரவிட்டு விட்டு போனாள்.. வந்தனா மகாராணி முதுகுக்கு வெவ்வெவ்வே என வக்கலம் காட்டினாள்.. கௌரிம்மா அவள் தலையில் கொட்டினார்..
“இதென்னம்மா பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாமல்..”
“ம்க்கும் உங்க அண்ணன் பொண்டாட்டிக்கு அதிகாரத்தை பார்த்தீங்களா கௌரிம்மா..?” வந்தனா குறைபட்டாள்..




“அவளுக்கென்னம்மா ராஜாத்தி.. அவள் புருசன் அவளுக்கு ராச பதவி கொடுத்து அந்த உயரத்தில் வைத்திருக்கிறார்.. அவள் அதிகாரம் பண்ணுகிறாள்.. உங்களுக்கு ஏன் வேகுகிறது..?”
“ஓ அப்போ எங்க புருசனெல்லாம் எங்களை சமையல்காரி ரேஞ்சுக்கு வைத்திருக்கிறார்கள்னு சொல்றீங்களா மாம்டக்கா..” இதனை மைதிலி வந்தனாவோடு தனக்கும் சேர்த்தே கேட்டாள்.. ஏனெனில் அவளுக்கும் அந்தக் கேள்விக்கான பதில் தேவையாக இருந்தது..
“அதென்னம்மா அப்படிக் கேட்கிறாய்..? எல்லோரும் எடுத்த எடுப்பிலேயே ராணியாக ஆசைப்பட்டால் எப்படி..? மகாராணி பதினேழு வயதில் கல்யாணம் முடித்து இந்த வீட்டுக்கு வந்தாள்.. எந்நேரமும் சிட்டாக சுற்றி சுற்றி வேலை செய்வாள்.. ஒரு நேரம் சும்மா இருக்கமாட்டாள்.. இப்போதுதான் அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தக் கர்ப்பபை ஆபரேசன் செய்த பிறகுதான் வேலையிலிருந்து ஒதுங்கி ஓய்வாக இருக்கிறாள்.. அப்படி அவளை என் அண்ணன் வைத்திருக்கிறார்..”
“நீங்கள் சொல்வது சரிதான் மாம்டக்கா.. ஒரு பெண்ணிற்கு வரும் நன்மையும், தீமையும் அவள் கணவனை வைத்துத்தான் வருகிறது..”
மைதிலியின் பேச்சில் அசங்கிய வந்தனா அவளை நிமிர்ந்து பார்க்க.. “அப்படித்தானே வந்தனா..?” என அவளையும் தன் கூட்டுக்கு அழைத்துக் கொண்டாள்.
“உன் புருசனும் என் புருசனும் அம்மா அப்பாவிற்கு காலமுக்கி விட்டுக் கொண்டிருந்தால், நாம் எந்தக்காலம் மகாராணியாக வந்தனா..?” மெல்ல வந்தனாவை ஆழம் பார்த்தாள்..
“அப்படிங்கிற.. அப்போ என்ன செய்வது..?”
வந்தனாவை வாய் திறந்து தன்னுடன் இயல்பாக பேச வைக்கவே மைதிலி இம் முறையை கையாண்டாள்..
“பேசாமல் நாம் இருவரும் நம் புருசன்களை கூப்பிட்டுக் கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டால் என்ன..?” வந்தனாவின் ஐடியாவில் மைதிலிக்கு திக்கென்றது..
“போகலாம் வந்தனா.. ஆனால் பார் இந்த பரம்பரை நகைகள்.. இந்த பரம்பரை தொழில்கள் எல்லாம் என்ன ஆகும்..? அவையும் நம்மை விட்டு போய்விடுமே..”
“ஆமாமில்ல.. சரி வேண்டாம் இங்கேயே இருக்கலாம்..” மைதிலி வாஞ்சையாக அவளை பார்த்தாள்.




“நேற்று ஏன் மழையில் நனைந்தாய் வந்தனா..?” மெல்லக் கேட்டாள்..
சட்டென கை வேலையை விட்டு எழுந்தாள் வந்தனா..
“எனக்கு தலைவலிக்கிறது.. நான் போய் படுக்க போகிறேன்..” போய்விட்டாள்..
அதன் பிறகு அறையை விட்டு வெளியே வரவே இல்லை..
“என்ன ஏதாவது தகவல் கிடைத்ததா..?” கேட்ட பரசுராமனுக்கு மைதிலி உதட்டை பிதுக்கினாள்..
அன்று இரவு அவர்கள் அறைக்கதவு தட்டப்பட கதவை திறந்த மைதிலி வெளியே பதட்டத்துடன் நின்றிருந்த கல்யாண சுந்தரத்தை பார்த்ததும் பதறினாள்.

What’s your Reaction?
+1
8
+1
3
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!