Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 33

33

சேர்த்து வைத்த என் ஞாபகங்களுக்கும்
சொந்தம் கொண்டாடும் நீ
ஊசியிலை மரக்காடுகளாய்
எனை உயிர் வாதை செய்கிறாள்..




“மாமாவிற்கு உடம்பு சரியில்லாமல் இருந்த நேரம் அது மைதிலி.. அப்போது நான் சோகத்தில் இருந்த அத்தை, வந்தனாவின் மனதை நோகடிக்காமல் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்..”
முன்பு தான் பேசிய பேச்சுக்களுக்கு சமாதானமாக பேச வருபவனை அலட்சியப்படுத்தி, கண்களை இறுக மூடிப் படுத்திருந்தாள் மைதிலி..
“நீ ஏன் நமது கல்யாணத்திற்கு சம்மதித்தாய் மைதிலி..?” திடுமென பரசுராமன் கேட்க மைதிலி கண்களை திக்கென திறந்து பார்த்தாள் அரை இருளில் அறைக்குள் மெலிதாய் ஒலித்த பரசுராமனின் குரல் அவளை இம்சித்தது.. இப்போது இவனுக்கு அந்த விபரங்கள் எதற்காம்..?
“அது எதற்கு இப்போது..?”
“உன் அம்மா, அப்பாவிற்காகத்தானே..?”
மைதிலி மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.. சொல்ல மாட்டேன் போடா.. உதடுகளை சத்தமின்றி அசைத்துக் கொண்டாள்..
“அப்படித்தான் உன் அண்ணன் என்னிடம் கூறினார்..”
“என்ன..? அண்ணன் உங்களை சந்தித்தாரா..?” மைதிலி இப்போது பாயில் எழுந்து அமர்ந்திருந்தாள்..
“ஆமாம்.. நம் திருமணத்திற்கு முன் ஒருமுறை நம் கடைக்கு வந்தார்.. என்னை வெளியே பேச அழைத்தார்.. அப்போது கடை பிசியான நேரம்.. என்னால் வர முடியாது என்றேன்.. அங்கேயே என் பக்கத்தில் நின்றுகொண்டு உங்கள் வீட்டை பற்றிக் கூறினார்.. மைதிலிக்கு என்னைப் போல் படித்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறேன் என்றார்.. எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது..”
தங்களை ஒதுக்கிவிட்டான் என நினைத்த அண்ணன், தனக்காக திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டினரிடம் பேசி இருக்கிறான் என்பது மைதிலிக்கு நெகிழ்வாக இருந்தது.. அவள் அண்ணனின் நினைவில் இருந்த போது பரசுராமன் சொன்ன கோபம் அவளுக்கு எரிச்சல் மூட்ட..




“இருபத்து நான்கு மணி நேரமும் வத்தலை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பீர்களோ..? அந்தக் காட்டத்தைத்தான் எல்லோர் மேலும் காட்டுவீர்களோ..?” எரிந்து விழுந்தாள்..
“என் இடத்தில் உன்னை வைத்துப் பார் மைதிலி, உன்னைவிட நல்ல மாப்பிள்ளையை என் தங்கைக்கு பார்க்கப் போகிறேன்.. அதனால் இந்த திருமணத்தை நிறுத்தி விடு என்று ஒருவர் வந்து சொல்லும் போது ஒரு சாதாரண மனிதனுக்கு கோபம் வராதா..?”
அவனது நியாயம் சரியாகப்பட மைதிலி மௌனமானாள்..
“உங்களது தங்கையையே திருமணத்தை நிறுத்தச் சொல்லுங்களேன் என்றேன்.. அவள் பெண்பிள்ளை.. அவளால் எப்படி அம்மா அப்பாவை எதிர்த்து பேச முடியும்.. என்று கேட்டார்.. எங்கள் வீட்டிலும் அப்படித்தான்.. ஆண், பெண் என எங்கள் பெற்றோர் எங்களை பிரித்துப் பார்ப்பதில்லை என்றேன்.. வருத்தத்தோடு போய்விட்டார்.”
ஆக இவனுக்கு அண்ணன் மீது, என் மீது என நிறைய அதிருப்தியும், கோபமும் இருந்திருக்கிறது.. அதுதான் அடிக்கடி என் மீது வெடித்திருக்கிறது.. நினைத்ததை கேட்டும் விட்டாள் மைதிலி..
“அந்த உங்களது வேகத்தைத்தான் என் மீது வெறுப்பாக காட்டினீர்களோ..?”
பரசுராமன் கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.. விடிவிளக்கின் ஒளியில் அரை குறையாக வரி வடிவமாக தெரிந்தவளை பார்த்தான்..
“எனது எந்த பேச்சுக்கும் இப்போது உன்னிடம் மதிப்பு இருக்காது எனத் தெரியும் மைதிலி.. இருந்தும் நான் இப்போது இதைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும்..” என்ன சொல்ல போகிறான்.. மைதிலியின் மனது படபடத்தது..
“நான் உன்னை மிக விரும்பி, ஆசைப்பட்டு, காதலித்து மணம் முடித்துக் கொண்டேன்.. என்று சொன்னால் நம்புவாயா..?”
“ஒரு பர்சென்ட் கூட நம்பமாட்டேன்..”
“ஏன்..?”
“ஒரு காதல் கணவன் மனைவியை நடத்தியது போன்றா என்னை நடத்தினீர்கள்..?”
“அது.. சூழ்நிலை..”
“நம் இருவரின் தனிமையில் கூடவா.. உங்களின் சூழ்நிலை..?”
“ஏன் இல்லாமல்..? இதோ இப்போது இல்லை.. இது போல் ஒரு குளிரான இரவில் தேவதை போன்ற மனைவியை தரையில் பாயில் படுக்க விட்டு விட்டு நான் தள்ளியிருந்து பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமென்ற சூழ்நிலை வரவில்லையா..?”




பரசுராமனின் ஏக்க குரலில் மைதிலிக்கு குளிரை தாண்டி உடல் வியர்த்துவிட்டது.. என்ன பேசிக் கொண்டிருக்கும் போது, எங்கே வந்து நிற்கிறான் பார்.. எமகாதகன்..
மைதிலி அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டாள்..
“என்ன மைதிலி பதிலையே காணோம்..?” சீண்டினான்..
மைதிலி கண்களோடு காதுகளையும் மூடிக்கொள்ள முயன்றாள்.. ஆனால் காதுகளுக்கு இமைகள் இல்லையே, இழுத்து மூடிக்கொள்ள, பக்கத்தில் வருவானோ.. அதிர்ந்த அவளது இதய ஓசைக்கு போட்டியாக கேட்டது அவனது காலடியோசை..
எதற்கு வருகிறான்..? வந்து என்ன செய்வான்..? எதிர்பார்ப்பு கலந்த திகில் அவள் உடல் முழுவதும் பரவியது.. குளிருக்கு இதமாக மென் வெப்பத்துடன் அவள் உடலை மூடியது ஒரு போர்வை..
“நல்லா போர்த்திட்டு நிம்மதியா தூங்குடி, யார் எப்படிப் போனா உனக்கென்ன கவலை..?” எரிச்சலான அவனது முணுமுணுப்பு..
மைதிலி கால் பெருவிரல் முதல் தலை வரை இறுக்கமாக இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.. அப்படியும் அவன் பார்வை போர்வையை தாண்டி அவள் உடல் முழுவதும் அலைவது போல் ஒரு பிரமை.. போர்வைக்குள் இன்னமும் தன்னைக் குறுக்கிக் கொண்டாள்..
“நேராகப் படு மைதிலி உடம்பு வலிக்க போகிறது..” அவன் அக்கறை காட்ட அவள் உடல் அதிர்ந்தது..
உடல் வலியை தொடர்ந்து அவனது காலமுக்கல் நினைவு வர, மைதிலி மனம் தத்தளித்தது.. அவளது தலைப்பகுதி போர்வை இழுக்க படவிடாமல் இறுக்கி பற்றினாள்..
“ஷ் மைதிலி என்ன இது.. விடு மூச்சு முட்டும்..” தலை மேல் இருந்த போர்வையை இழுத்து கழுத்து வரை விட்டான்.. மடித்து குறுக்கியிருந்த அவள் கால்களை அழுத்தி பற்றி நேராக இழுத்து நீட்டி படுக்க வைத்தான்.
“இப்படி நேராக படு.. கை கால்களை முறுக்காதே..” அக்கறையாய் அதட்டியவனை அரை இமை திறந்து அவள் பார்க்க அரை இருளில் கருணையாய் மின்னின அவள் பல்வரிசை..
இப்போது எதற்கு இளிக்கிறானாம்.. மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டு, மனதிற்குள் ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கினாள்.. பரசுராமன் அவளருகே குத்திட்டு அமர்ந்து அவள் முகம் நோக்கி குனிந்தான்..




“கடையில் சுற்றி வத்தல் மூட்டைகள் இருந்தாலும் நான் ஒரு நாளும் வத்தலை அள்ளி தின்றதில்லை மைதிலி.. முந்திரிப் பருப்பு தின்றிருக்கிறேன்.. கிஸ்மிஸ் பழம் தின்றிருக்கிறேன்.. கிஸ்மிஸ் தெரியும்தானே மைதிலி.. நீ சாப்பிட்டிருக்கிறாயா..? இனிப்பும் புளிப்புமாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும் உன் குணத்தை போன்ற சுவை அதற்கு மெல்ல மெல்ல அதிக ருசி கொடுக்கும்..” பேசியபடி அவன் நாவை சுவைத்து மெல்லிய சொட்டா போல் ஓசை எழுப்ப மைதிலியின் உடல் நடுங்கியது.
இவன் எதற்கு இந்த நடுராத்திரியில் கிஸ்மிஸ் பழத்தின் சுவையை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்..? அவள் தனது எண்களின் எண்ணிக்கை வேகத்தை அதிகரித்தாள்.. இருபத்தியிரண்டு, இருபத்தி மூன்று..
பரசுராமன் பக்கமிருந்து எந்தச் சத்தமும் இல்லாது போக, எழுந்து போய் விட்டானா என்ன.. கண்களைத் திறக்கலாமா என அவள் யோசித்துக் கொண்டிருந்த போது அவளது பெருமூச்சு கேட்டது.. தொடர்ந்து அவன் எழுந்து கொண்டான்..
“தூங்கு மைதிலி..” என்று விட்டு கட்டிலுக்கு நடந்தான்..
மைதிலி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. அப்போது முப்பத்தி ஏழு என்ற எண்ணிக்கையில் இருந்தாள்.. ஐம்பது வரை அவனது அருகாமையை சகித்துக் கொண்டு படுத்திருக்க வேண்டும்.. பிறகும் அவன் விலகிப் போசாவிட்டால் தான் எழுந்து அறையை விட்டு போய்விட வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தாள்.. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.. கண்களோடு ஆர்ப்பரிக்கும் மனதினையும் அடக்கியபடி தூங்க முயன்றாள்..
“மைதிலி சித்ரா உன்னிடம் என்ன சொல்லிவிட்டு போனாள்..?” வந்தனா திடுமென கேட்க மைதிலி யோசித்தாள்..
“எதைப் பற்றிக் கேட்கிறாய் வந்தனா..?”
“அதுதான் நம் பரம்பரை நகைகளை பற்றி ஏதாவது சொன்னாளா..? என்ன சொன்னாள்..?”
மைதிலி சலிப்புடன் வந்தனாவை முறைத்தாள்..
“சித்ராவிற்கு ரொம்ப நாட்களாகவே பாட்டியின் நகைகள் மீது ஒரு கண் மைதிலி.. நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அத்தைக்கு ஐஸ் வைத்து பேசி பாதி நகைகளை அடித்துக் கொண்டு போய்விடுவாள்..”
தீவிரமாக பேசியவளை வெறித்தாள்.. சித்ரலேகா போகும் முன், ‘அண்ணி கல்யாண அண்ணா – வந்தனா வாழ்க்கை விசயத்தில் கொஞ்சம் தடுமாற்றம் தெரியத்தான் செய்கிறது.. நீங்கள் கவனித்து சரிப்படுத்த முயற்சியுங்கள் எனது உதவி எதுவும் தேவைப்பட்டால் சொல்லுங்கள்..’ என்று சொல்லி விட்டு போயிருந்தாள்.. அப்படிப் பட்டவளை இவள் எப்படி பேசுகிறாள் பார்..
“இந்த நகைகளை உரிமை கொண்டாடத்தான் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னாயா வந்தனா..?”
“ம்.. அதற்காகவும் தான்.. உனக்காகவும் தான்..”
“எனக்காக.. நான் என்ன செய்தேன்..?”




“என் தாய்மாமா வீடு.. இங்கு நீ எப்படி அதிகாரம் அதிகாரம் செய்யலாம்..?”
“இது எல்லாப் பெண்களுக்கும் வரும் உரிமை பிரச்சினைதான் வந்தனா.. அவர்கள் பிறந்த வீட்டிற்கு உரிமையானவளாக இன்னொரு வீட்டு பெண் வரும்போது, இதுவரை நான் உரிமையோடு வளைய வந்த வீட்டில் இப்போது இன்னொருத்தியா..? என்ற எரிச்சல் வரும்.. அதனால்தான் மதினி-நாத்தனார் சண்டைகளெல்லாம் வரும்.. ஆனால் நீ.. உன் விசயம் வேறாயிற்றே.. உனக்கு ஏன் இந்த பொறாமை வந்தது..? நீ இந்த வீட்டை உன் தாய் வீடாக நினைத்தாயா..?”
மைதிலியின் விசயக்கேள்வி வந்தனாவை குழப்பியது..
“ம்ஹூம் அதெப்படி.. என் அம்மா வீடு.. எதிர் வீடு.. இது என் மாமாவீடு..”
“ஓ.. அப்போது உன் பரசு அத்தான் மீது உனக்கு இருந்த உரிமை..? அது எந்த வகை..?”
“அ.. அது..” வந்தனா தடுமாறினாள்..
“நான் சொல்லவா..? அண்ணனுக்கு புதிதாக வந்த அண்ணி மீது வரும் பொறாமை உனக்கு என் மீது.. அதனாலேயே எங்களை.. எங்கள் நெருக்கத்தை நீ வெறுத்தாய் எங்களைக் கண்காணித்தாய்.. உன் உரிமையை நான் பறிக்க வந்தவள் போல் என்னை பார்த்தாய்.. கோபப்பட்டாய்.. இதனை நான் உனக்கு விளக்கும் முன்பு.. நீ உன் வாழ்க்கை விசயத்தில் தவறான முடிவு எடுத்து விட்டாய்..”
வந்தனா விழி விரித்து பார்த்தாள்.. அப்படியா எனும் சுய அலசலில் இறங்கினாள்.. மைதிலி அவளை யோசிக்க விட்டு நின்ற போது,
“மைதிலி..” பரசுராமனின் குரல் பின்வாசல் பக்கம் கேட்க, மைதிலி அங்கே போனாள்..
பின்வாசலுக்கும் அடுப்படிக்கும் இடையே ஒரு நீண்ட ரேழி.. அங்கே உரல், அம்மி, துணி துவைக்கம் கல், பாத்திரம் கழுவும் சிங்க் என இருக்கும்.. சன்னல்கள் இல்லாததால் அந்த இடத்தில் பகலிலும் வேலை செய்யும் போது விளக்கை போட வேண்டும்.. அந்த இடத்தை தாண்டும் போது மைதிலி பக்கவாட்டில் இழுத்துக் கொள்ளப்பட்டாள்..
முதலில் திடுக்கிட்டு வாய் திறந்து கத்த நினைத்தவள் இடை அழுத்திய கணவனின் கை ஸ்பரிசத்தை உணர்ந்து கத்தலை கைவிட்டாள்.. ஆனால் அரை இருளில் திண்ணென்ற மார்பின் மீது, சுருண்டிருந்த ரோமங்களின் மெத்தில் பதிந்து கிடந்த தன் கன்னம் உணர்ந்த இளஞ்சூட்டில் உடல் சொடுக்கிய ஓர் மின்னலை உணர்ந்தவள், வெகுண்டு அவனை தள்ள முயன்றாள்..
“ஷ் மைதிலி.. அப்படியே இரு.. வந்தனாவிற்கு ஒரு சின்ன டெஸ்ட்..” கிசுகிசுத்தான்..
மைதிலி உடன் தன் திமிறலை குறைத்துக் கொண்டாள்.. அவனை அண்ணாந்து பார்த்தாள்..
“நான் திரும்பிக் கொள்கிறேன்.. வந்தனா வருகிறாளா பார்..?” திரும்பி அவளை மறைத்து நின்று கொண்டு அணைத்தாற் போல் காட்டிக் கொண்டான்.. மைதிலி அவன் தோள்களை பற்றி எட்டி அவள் தோள்களுக்கு மேல் அரைக் கண் பார்வை பார்த்தாள்.. வந்தனா மைதிலி விட்ட இடத்திலேயே நின்றிருந்தாள்.. தீவிர யோசனையில் இருந்தாள்.. அவளது மனம் சுற்றுப்புற நிகழ்வுகளில் பதியவில்லை..
“ம்ஹூம் வந்தனா அங்கேயேதான் நிற்கிறாள்..” மகிழ்ச்சியாக சொன்னாள்..
நாங்கள் இருவரும் எங்கே போகிறோம், என்ன செய்கிறோம்.. என எந்நேரமும் கண்காணித்தபடி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தவள்.. இப்போது இத்தனை அருகில் ஒரு ஊடு சுவருக்கு அந்தப் பக்கம் அணைத்து நிற்பவர்களை உணரவில்லையென்றால், அவளது கவனிப்பு மாறிவிட்டது.. அவளது கண்காணிப்பு குறைந்து விட்டது என்ற அர்த்தம்தானே..




மைதிலி உற்சாகத்துடன் தரையை விட்டு லேசாக எழுப்பி குதித்தாள்..
“வந்தனாவின் கவனத்தில் நாம் இல்லை.. அவள் தன்னயே நினைத்துக் கொள்கிறாள்..”
அவளது உற்சாகத்திற்கு பதிலாக பரசுராமனின் வேதனையான “ஆ” கேட்டது “அடிப்பாவி கிராதகி…” மெல்லமாய் முனங்கினான்..
“என்ன ஆச்சு..?” மைதிலி பதறினாள்..
“என் காலடி..”
“உங்க காலை ஏன் என் காலுக்கடியில் நீட்டினீர்கள்..?”
“நான் நீட்டினேனா.. நீ தாண்டி வந்தனாவை பார்னு சொன்னவுடனேயே ஸ்டூல் மேல் ஏறுவது போல் என் பாதம் மேல் ஏறிப் பார்க்கிறாய்.. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருக்கும் போது என் பாதங்களின் மேலேயே குதிக்கவேறு செய்கிறாய்..? இது நியாயமா..? என் பிஞ்சு உடம்பு உனது இந்த வன்முறையை தாங்குமா..?”
வலி போல் பேசியவனின் குரலில்தான் திணறல் இருந்தது.. அவனது முகத்திலோ டன் டன்னாக பரவசம் வடிந்தது.. மைதிலி சட்டென இன்னமும் தான் ஏறி நின்றிருந்த அவன் பாதங்கள் மேலிருந்து இறங்கினாள்.. தன் கைகள் வளைத்திருந்த அவன் தோள்களையும் விடுவித்தாள்..
சை.. எப்படி இது போல் சொரணை இல்லாமல் இவன் மேல் சாய்ந்து கிடந்தேன்..? அவள் முகத்தின் குருதி ஓட்டம் அந்த அரை இருளில் மாங்கனியாக மின்ன,
“அழகாக இருக்கிறாய் மைதிலி..” பரசுராமனின் மோகக் குரலில் அஞ்சியவள் அவனை உதறிவிட்டு, வேகமாக விலகி பின்னால் போய்விட்டாள்..

What’s your Reaction?
+1
10
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!