Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 2

2

அரியலூரில் இறங்கி ஜெயங்கொண்டானுக்கு பஸ் பிடித்தனர் .

” உங்க அப்பாவிற்கு சொல்லியிருந்தால் கார் எடுத்துட்டு வந்திருப்பார்க்கா .நீங்க ஏன் பஸ்ஸில் ஏறி கஷ்டப்படனும் …? ” ஜெயந்தியின் கேள்வியில் உண்மையான அக்கறை .

” நிஜத்தில் அந்த கார் பயணம்தான் என்னை கஷ்டப்படுத்தும் ஜெய் …” ஜீவிதா டிக்கெட் எடுத்தாள் .

” நீங்க உங்க மனதை மாற்றிக்கனும்கா….அம்மாவும் , அப்பாவும் பாவம் “

” ம் …முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன் …” மௌனமாகிவிட்ட ஜீவிதாவை கலைக்க விரும்பவில்லை ஜெயந்தி .

————-




பிரம்மாண்ட காம்பவுண்டிற்குள் இரட்டையாக பெரிதாக அமைந்திருந்தன அந்த வீடுகள் .ஆட்டோவை தன் வீட்டு வாசலில் நிறுத்தி இறங்கினாலும் பார்வை ஜிவிதாவிற்கு பக்கத்து வீட்டு மேல் போனது .காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு மெல்ல உள்ளே நடந்தாள் .கண்கள் இரு வீட்டிற்கும் நடுவில் நெடுக ஓடிய குறுக்குச்சுவர் மேல் தத்தி படிந்து நகர்ந்த்து .சித்தப்பா இருந்த போது ஒரு ஆள் உயரத்திற்கு இருந்த சுவர் .இப்போது மூன்று ஆள் உயரத்திற்கு உயர்த்தி கட்டப்பட்டிருந்த்து .மதில் போல் உயர்ந்திருந்த இடைச்சுவர் மூலம் எங்களை யாரும் அணுக முடியாதென அடுத்த வீட்டின் ஆட்கள் சொல்லாமல் சொல்வதாய் உணர்ந்தாள் .

ம் …பங்காளிகள் …பகையாளிகள் .அண்ணன் தம்பியின் பாகப்ரிவினை பிரச்சனை உயர்ந்து வளர்ந்து இரு குடும்பத்தற்குமிடையே நிற்கிறது …இதோ இந்த நெடிதுயர்ந்த மதில் போல .

” பாப்பு ….கண்ணா …நீயாடா …? செல்லம் …தங்கம் …கண்ணம்மா …” சபாபதியின் குரல் நடுங்கியது .

கையிலிருந்த பேப்பர் நழுவ எழுந்து வந்தவரின் நடை தடுமாற கை பெட்டியை கீழே வைத்து விட்டு வேகமாக போய் தந்தையை தாங்கினாள் .

” மெல்ல அப்பா .ஏன் இவ்வளவு பதட்டம் …? “

” நான்கு வருசமாச்சேடா …உன்னை பார்த்து .எங்களையும் வரக்கூடாது என்றுவிட்டாய் .இப்போது திடீரென …” மேலே பேச அவரால் முடியவில்லை .

உணர்ச்சி வசப்பட்ட தந்தையின் நிலையை உணர்ந்தவள் அவர் கைகளை பிடித்தபடி உள்ளே அழைத்து போனாள் .

” எப்படிடா பாப்பு இருக்கிறாய் …? ரொம்ப மெலிந்து விட்டாயேடா …? ” பரிவாய் தலை வருடினார் .

” அதெல்லாம் ஒன்றும் இல்லைப்பா .நான் எப்போதும் போலத்தான் …” பேசிக் கொண்டிருக்கையிலேயே உள்ளறையிலிருந்து சர சர சத்தமும் ஓடி வரும் ஓசையும் கேட்டது .ஜீவிதா உதட்டைக் கடித்துக் கொண்டாள் .அவளது நடையும் கூட நின்றுவிட்டது .

” பாப்பு ….” தடுமாறிய குரலுடன் அழைத்தபடி அறை வாசலில் நின்றிருந்தாள் சௌதாமினி .ஓடித்தான் வந்திருக்கிறாளென அ வளது ஏறியிறங்கும் நெஞ்சம் சொல்ல , அவள் மூக்குத்தியின் வைர மினுங்கலுக்கு ஈடாக அவள் கண்களின் நீரும் பளமளத்துக் கொண்டிருந்தன .




வருவாயா …சிறு தயக்கத்துடனேயே முழுதாக இல்லாமல் சிறு மடங்கலுடனேயே அவள் பக்கம் நீண்டது அவளது வலக்கை . ஆவலுடன் அவள் பக்கம் நீண்ட அந்த கரங்களில் முந்தைய பளபளப்பு மங்கி சிறு சுருக்கம் காணப்பட , அது சௌதாமினியின் தளர்வை ஜீவிதாவிற்கு உணர்த்தியது . கொஞ்சம் மனம் நெகிழ வலக்கையை நீட்டி அந்த விரல்களை மட்டும் பற்றிக் கொண்டாள் .

” நன்றாக இருக்கிறீர்களா அம்மா …? “

அந்த அம்மா என்ற ஒரு சொல்லே சௌதாமினியை அசைத்து விட , ஆசையுடன் நகர்ந்து ஜீவிதாவை அணைத்துக் கொண்டாள் .

” எப்படி இருக்கிறாய் பாப்பு …? “

” இருக்கிறேன்மா …நீங்கள் …? “

” ம் …இருக்கிறேன் .இன்னமும் குற்றவாளியாகத்தான் …” கனம் சுமந்து வந்த்து சௌதாமினியின் குரல் .ஆனால் இதை சொல்லும் போது தன் தாய் சுதாரித்து விட்டதை , அவளது குரலின் ஆரம்ப நெகிழ்வு குறைந்து விட்டதை உணர்ந்தாள் ஜீவிதா .

” ஏன்டா பாப்பு இத்தனை நாட்களாக எங்களை கண்ணால் கூட பார்க்காமல் உன்னால் எப்படியடா இருக்க முடிந்த்து …? ” சபாபதி வருத்தமாக கேட்டார் .

அப்பாவிற்கு பதில் சொல்லமுடியாமல் திணறிய மகளை கண்டு கொண்ட சௌதாமினி ” நீ போய் குளித்து விட்டு வாம்மா .சாப்பிட்டு பிறகு பேசலாம் ….” மகளை சொல்வது போல் கணவனுக்கும் சொன்னாள் .

நான்கு வருடங்களாக கணவனும் , மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை .மிகுந்த அவசியம் ஏற்பட்டால் இடையில் யாரையாவது நிறுத்தி பேசிக் கொள்வார்கள் .

” என்னோட ரூம் …? “

” சுத்தமாக , தயாராக உனக்காகவே காத்துட்டு இருக்கு .நான்கு வருடங்களாக …எங்களை போலவே ….”

இயலாமை , ஏக்கம் , கோபம் எல்லாம் கலந்த தாயின் பார்வையை சந்திக்க முடியாமல் சுழன்று செல்லும்  அந்தமரப்படிகளில் ஏறி மாடி வந்தாள் ஜீவிதா . எங்கேயும் துளி தூசியை பார்க்க முடியவில்லை .அந்த காலை நேரத்திலேயே அவ்வளவு பெரிய வீடு முழுவதையும் இத்தனை சுத்தமாக பெருக்கி துடைத்து வைத்திருக்க முடியுமானால் தன் தாயின் ஆளுமையை ஜீவிதாவால் உணர முடிந்த்து ., வேலைக்கு ஆட்கள் இருந்தாலுமே அவர்களை செய்ய  வைக்க வேண்டுமே .தன் தாயளவு தனக்கு ஊக்கம் கிடையாது என்பதை எப்போதும் போல் இப்போதும் உணர்ந்தாள் ஜீவிதா .




தன் அறைக்கதவை திறந்தாள் . பளபள சுத்தத்துடன் இதமான மணத்துடன் …நான்கு வருடத்திற்கு முன்பு அவள் விட்டு போன அதே நிலைமையில் அவளை வரவேற்றது அறை .அதோ …அந்த டேபிள் லேம்ப் கூட அவள் வைத்து விட்டு போன அதே இடத்தில் அதே நிலை மாறாமல் அப்படியே இருந்த்து .

எத்தனைக்கெத்தனை இத்த்தை தந்த்தோ அத்தனைக்கத்தனை துயரையும் தந்த்து அந்த அறை .பெருமூச்சுடன் சுவரில் பதிந்திருந்த மர அலமாரியை திறந்து தனது உடைகளை பார்த்தாள் .தாவணி , சுடிதார் , சேலையென அவள் உடைகள் நேர்த்தி மாறாமல் அடுக்கப்பட்டிருந்தன .அவற்றின் வரிசையை கூட சௌதாமினி மாற்றவில்லை என்றாலும் , அடிக்கடி வெளியே எடுத்து உதறி மாற்றி மடித்து பத்திரப்படுத்தியிருந்த்து தெரிந்த்து .

அவளது சித்தி சசிகலாவிற்கு வீட்டை பராமரிப்பதில் இத்தனை நேர்த்தி கிடையாது .பொறுமையும் கிடையாது .வேலையாட்களை ஏவிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள்.பாட்டி சௌந்தரம் எப்போதும் இளைய மருமகளை குறை கூறிக் கொண்டிருப்பாள் .இப்போது அவர்கள் சித்தப்பா சேதுபதியின் …இதோ இந்த பக்கத்து வீடு எப்படி இருக்கிறதோ …? பாட்டி இருந்தவரை சலிக்காமல் இரு வீட்டிற்குமிடையே நடந்து கொண்டிருப்பார் .இப்போது அவர் இல்லை .சேதுபதியையோ , சசிகலாவையோ கேட்க ஆள் இல்லை .

ம் …அதனால்தான் இருவருமாக தான் தோன்றித்தனமாக முடிவெடுத்து …நண்டின் கால்களாக தன்னை பற்றிய பழைய நினைவுகளை வலுக்கட்டாயமாக உதறினாள் .தாயின் பாசத்தை ஒவ்வொரு அங்குலத்திலும் சொல்லிக் கொண்டிருந்த அந்த அறை அதன் கூடவே ஜீவிதாவின்  இழப்பையும் சேர்த்தே சொன்னது .பெருமூச்சோடு மாற்று உடைகளோடு அறையோடு இருந்த அட்டாச்டு பாத்ரூமினுள் நுழைந்தாள் .

பளபளவென டைல்ஸும் , பீங்கானுமாக பளபளத்த அந்த பாதரூம் மேலும் அவளது நினைவுகளை பின்னோக்கி தள்ளியது .

” வயதுப்பெண் …குளித்துவிட்டு அரை குறை உடையுடன் பாத்ரூமிலிருந்து அறை வரை நடந்து வந்தால் நன்றாகவா இருக்கறது …? அவள் அறைக்கிள்ளேயே அட்டாச்டு பாத்ரூம் கட்டிக் கொடுத்து விட்டால் …”

” இல்லை இந்த வீட்டை மாற்ற முடியாது .இதன் ஒவ்வொரு சுவரையும் நான் பார்த்து பார்த்து பராமரித்து வருகிறேன் ்அதனை இடித்து , உடைத்து வேறு மாதிரி மாற்ற முடியாது …” சௌதாமினி திட்டவட்டமாக அறிவித்தாள் .

ஆனால் …அன்று அவன் அதை நிறைவேற்றிக் கொண்டான் .பாட்டியின் , அப்பாவின் உதவியோடு .அன்று கணவரையும் , மாமியாரையும் மீற முடியவில்லை சௌதாமினியால்  . ஆனால் இது போன்ற சிறு சிறு நிகழ்வுகள் அவள் அடி மனதில் வஞ்சமாய் பதிந்து விட்டனவோ …? அவள் மகளுக்கான கவனிப்புதானென்றால் அவள் மனதில் வரைந்து வைத்திருக்கும் வரைவுகளை மாற்ற யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை சௌதாமினி .

மேனி முழுவதும் இதமான வெந்நீரில் அமிழ்ந்திருந்த போது , ஜீவிதாவின் மனம் அவள் அனுமதியின்றியே பால்யத்திற்கு பயணப்பட துவங்கியது .இது போன்ற கொல்லும் நினைவுகளுக்கு பயந்தே அவள் நான்கு வருடங்களாக இந்த ஊரை …இந்த வீட்டை …பெற்றவர்களை ஒதுக்கி வைத்திருந்தாள் .

சுருள் சுருளாய் இடை வரை தொங்கியபடி பம்மென அடர்ந்திருந்த தனது முடியை துண்டினால் அழுத்தி துடைத்தபடி பால்கனி கதவை திறந்தவளின் பார்வை தானாகவே பக்கத்து வீட்டின் மேல் விழுந்த்து .சிறு திகைப்பு வந்த்து .பளபளவென கிரானைட்டும் , டைல்சுமாக நவீன மாடலுடன் மின்னிக் கொண்டிருந்த்து சித்தப்பா சேதுபதியின் வீடு .




சபாபதி , சேதுபதி இருவரின் வீடும் ஒரே அளவு …ஒரே மாடல்தான் .சற்று தள்ளியருந்து பார்த்தால் அரண்மனையோ என பிரமிப்பூட்டக் கூடியது இரண்டு வீடுகளுமே .சபாபதியின் வீடுகாரை ஓடுகளும் , மரசன்னல்களும் , சிவப்பு சிமெண்ட் தரையுமாக பழமையான ஜமீன்தார் மாளிகைகளை நினைவுபடுத்த …இதே போலிருந்த சேதுபதியின் வீடு இப்போது கிரானைட்டும் , கண்ணாடி சன்னலும, புல்தரையுமாக மல்ட்டி மில்லியனர் ஒருவரின் பங்களாவை நினைவுபடுத்தியது .

கீழிருந்து பார்த்த போது பார்வைக்கு கிடைக்காத வீட்டின் அமைப்பு இப்போது மாடியிலிருந்து பார்த்த போது தெளிவாக தெரிந்த்து . இது போலெல்லாம் இந்த வீட்டை மாற்ற வேண்டுமென்பது அவனது ஆசை .அதை …இதோ நிறைவேற்றி வைத்திருக்கிறான் .

” இன்ஜினியர் , சிமெண்ட் கம்பெனி ஓனர் …அதை வீட்டில் காட்டியிருக்கிறார் ….” கோபமாக கேட்ட சௌதாமினியன் குரலில் திரும்பி அன்னையை முறைத்தாள்.

” சாப்பிடும் முன் அரைக்கிளாஸ் காபி குடிக்கிறாயா …? ” சட்டென பேச்சை மாற்றினாள் அவள் கையில் காபி வைத்திருந்தாள் .

ஜீவிதா மௌனமாக காபியை வாங்கிக் கொண்டாள் .அவள் கையிலிருந்த துண்டை வாங்கி மகளின் தலையை துவட்ட ஆரம்பித்தாள் சௌதாமினி .துண்டை நகர்த்தி விட்டு அவளது கைகள் அடிக்கடி மகளின் தலையை , நெற்றியை வருடியது .அதில் தெரிந்த வாத்சல்யத்தில்  நெகிழ்ந்த் தன் மனதை மறைத்தபடி வெளியே பார்வையை அலைய விட்டாள் ஜீவிதா .

” தலையை ஒழுங்கா சிக்கெடுக்கிறதில்லையா …? ” தாயாய் அதட்டியபடி துண்டை போட்டுவிட்டு அவளது ஒவ்வொரு முடிக்குள்ளும் தன் விரல்களை விட்டு மென்மையாக சிடுக்கெடுக்க ஆரம்பித்தாள் .மறுக்க நினைத்தவளுக்கு தாய்மை பொருந்திய விரல்கள் இதம் தர அப்படியே அமர்ந்து கொண்டாள் .எப்போதுமே அடர்ந்து , சுருண்டிருக்கும் தனது முடியை சிக்கெடுக்கும் முன் தவித்து போவாள் ஜீவிதா .இப்போது அந்த வேலையை இதமாக அன்னையின் கைகள் செய்ய கண்களை சுகமாக மூடிக் கொண்டாள் .

” நான்கு வருட சிக்கு போல ….” முணுமுணுத்தபடி மகளின் தலையை மெல்ல தன் மார்போடு சாய்த்துக் கொண்டாள் .தன்னை அணைத்துக் கொள்ள துடிக்கும் அன்னையின் பாசத்தை உணர்ந்தும் அதனை ஏற்க மனமின்றி மரக்கட்டையாக விரைப்பாக அமர்ந்திருந்தாள் ஜீவிதா .

ஒரு சிறு கொத்தாக சேர்ந்து விட்டிருந்த முடிகளை சிறு வேகத்துடன் சௌதாமினி இழுத்து விட , அது சுரீரென ஜிவிதாவின் உச்சந்தலையை தாக்கியது .




” சிவ …சிவா ..பார்த்தும்மா …ஏன் இப்படி இழுக்குறீங்க ..? ” கத்திவிட்டு நாக்கு நுனியை கடித்துக் கொண்டாள் .

ஒரு நிமிடம் உறைந்து நின்று விட்ட சௌதாமினியின் கைகள் பிறகு மெல்ல மீண்டும் வேலையை தொடர்ந்த்து .

” இன்னமும் இந்த பழக்கத்தை விடவில்லையா நீ …? “

” சிறு வயது பழக்கம் …” முணுமுணுத்தாள் .

” சீக்கிரம் விட்டு விடு பாப்பு …” சௌதாமினியின் குரல் ஆணை போல் ஒலித்தது .

தன் முடியை அவள் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு காபி கிளாசை கைகளில் திணித்தாள் .” போங்க ..  தலை பின்னிட்டு.சாப்பிட வருகிறேன் …” மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

” வணக்கம் மாமா .என் பெயர் சிவபாலன் ….” கை கூப்பியபடி வந்து நின்ற அந்த சிறுவனை பால்சாதம் நிரம்பியிருந்த வாயை மூடாமல் நிமிர்ந்து பார்த்தபடி இருந்தாள் சிறுமி ஜீவிதா .

What’s your Reaction?
+1
8
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!