Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 3

3

அன்று முழு நிலா காலம் .பால் போல் அவர்கள் வீட்டு தோட்டம் முழுவதும் வெண்மையால் மெழுகியிருந்த ஒளியை பார்த்தபடி , ஒற்றைக்கண் அரக்கன் கதை ஒன்றை பாட்டியிடம் கேட்டபடி ,அன்னையிடம்  பால்சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஜீவிதா .




காம்பவுண்ட் கேட் திறந்து உள்ளே வந்தார்கள் அவர்கள் இருவரும் . அம்மாவும் , மகனும் .நீலவேணியும் , சிவபாலனும் . சபாபதி , சேதுபதியின் உடன் பிறந்த தங்கை நீலவேணி .அழுகையுடன்  விவரித்த அவள் சொந்த கதையில் பாட்டியின் அரக்கன் கதை நின்று போனது .பாட்டி மகளை அணைத்து விசும்ப தொடங்க பக்கத்து விட்டிலிருந்து வந்த சேதுபதியும் ,சபாபதியும் தங்கையின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள …விட்டேத்தியாய் தள்ளி நின்றிருந்தனர் சௌதாமினியும் , சசிகலாவும்.

தங்கள் பேச்சை கேட்காமல் அவர்கள் அந்தஸ்திறகு குறைந்த ஒருவனை அடம் பிடித்து மணம் முடித்து போன நாத்தனார் , இப்போது கணவனை இழந்து அடைக்கலமாக அண்ணன்களிடம் வந்த போது அவளை ஏற்கும் பக்குவம் இருவருக்குமே இல்லை .

” பாட்டி கதை …” சிணுங்கி பால் சாத்த்தை மறுத்த ஜீவிதாவை ” அங்கே பார் கதை கதையாய் வெடித்து வருது ” நீலவேணியை காட்டியபடி நக்கல் பேசி மகளின் வாயில் சாதம் திணித்த சௌதாமினியை அவன் திரும்பி முறைத்தான் .

அடப்பார்றா …இந்த சின்னப்பயலுக்கு வர்ற கோபத்தை .அலட்சியமாக அவனை அளவிட்டாள் சௌதாமினி .அவனது பதினாறு வயதுக்கு அதிகமான உயரத்துடனும் , பொறுப்பு சுமந்த முகத்துடனும் நின்றிருந்தான் அவன் .சிறுவயதிலேயே பட்டு விடும் கஷ்டங்கள் சில மனிதர்களுக்கும் பொறுப்பையும் , பக்குவத்தையும்    கொ டுத்து விடுகன்றன .அது அவன் முகத்தில் தெளிவாக தெரிந்த்து .

” தம்பி மாமாவிற்கு வணக்கம் சொல்லுடா ” கம்மிய குரலில் மகனை ஏவினாள் நீலவேணி .

” வணக்கம் மாமா .நான் சிவபாலன் ” இரண்டு மாமாவிற்கும் வணக்கம் சொன்னான் அவன் .

தங்கை மகனை தாய்மாமன்கள் ஆதரவாக அணைத்துக் கொள்ள அதை திருப்தியாக பார்த்தார் சௌந்தரம் .

” உனக்கு மலை மாதிரி இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள் நீலா .நீ கலங்காதே .கண்ணை துடைத்து விட்டு உள்ளே போ …” சௌந்தரம் சொல்ல , உள்ளே நுழைந்தவர்களை விருப்பமின்றி பார்த்தாள் சௌதாமினி .

பாதியில் நின்று விட்ட கதைக்கும் , உணவுக்கும் கவலைப்பட்டபடி உள்ளே போனாள் ஜீவிதா .தாயின் முந்தானையை பிடித்தபடி வீட்டிற்கு புதிதாக வந்த விருந்தாட்களை பார்த்தபடி தூணுக்கு பின்னால் நின்றிருந்தாள் அவள் .




” சுகன்யாவை எங்கே சேது …? ” சௌந்தரம் இளைய மகனிடம் விசாரிக்க , ” அவள் தூங்கிட்டாள் …” பதில் சொன்னவள் சசிகலா .அவளுக்கு உடனடியாக தன் மகளை இவர்களுக்கு அறிமுகம் செய்விப்பதில் விருப்பமில்லை .

” பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . ” சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் .

” உங்க பேர் என்ன …? ” தன் பாட்டியின் அருகில்  உரிமையோடு அமர்ந்திருந்தவனை கொஞ்சம் விருப்பமில்லாமல் பார்த்தபடி கேட்டாள் ஜீவிதா .

அந்த பையனின் முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி  வந்த்து .” உன் பெயர் என்ன …? பாப்புவா …? “

” இல்லை .என் பெயர் ஜீவிதா …பாப்புன்னு கூப்பிடுவாங்க “

” என் பெயர் சிவபாலன் …சிவான்னு கூப்பிடுவாங்க …”

” ஓ …பாட்டி அடிக்கடி உங்களைத்தான் சொல்லிட்டே இருப்பாங்களா …? “

” என்னையா …அப்படியா பாட்டி …? “

” இல்லடா தம்பி .நான் அடிக்கடி சிவ ..சிவான்னு சொல்வேன்.அதை சொல்கிறாள் இவள்.என்னைப் பார்த்து இவளும் சிவ …சிவான்னு சொல்ல பழகி வைத்திருக்கிறாள் ….” தனது பழக்கமொன்றை பழகி வைத்திருந்த பேத்தியின் மேல் பெருமை சௌந்தரத்திற்கு   .

“பாப்பு நான் சொல்றது அந்த கடவுள் சிவனை .இவன் என் பேரன் சிவா .நீ இனிமேல் சிவ …சிவா சொல்லக் கூடாது தெரியுமா …? “

” எதற்கு பாட்டி …? “

” இங்கே பார் உன் அத்தானின் பெயரையே நீ சொன்னால் மரியாதையாக இருக்காதே .அவன் உன்னை விட ஆறு வயது பெரியவன் .”

இதை கேட்டதும் சிவபாலன் மென்மையாக புன்னகைக்க , அப்போது அவன் முகத்தை பார்த்த ஜீவிதா மலர்ந்தாள் .

” ஐ …நீங்க சிரிக்கும் போது இங்கே குழி விழுதே …” எட்டி அவன் கன்னத்து குழியை தொட்டாள் .

இதோ …இப்போதுதான் போல் தன் விரல் நுனியிலிருந்த அவன. கன்னத்து ஸ்பரிசத்தை இன்னமும் உதற முடியாமல் இருந்தாள் ஜீவிதா .

” இட்லியை சாம்பாரில் தொட்டு சாப்பிடு பாப்பு ….” கண்டிப்பாய் கேட்ட சௌதாமினியின் குரலை அலட்சியம் செய்து தட்டை நகர்த்தி விட்டு எழுந்தாள் ஜீவிதா .

” என்னடா பாப்பு …அதற்குள்ளே எழுந்துட்ட …? ” பதறிய தந்தைக்கு ” வயிறு நிறைஞ்சிடுச்சுப்பா ….” பதிலை கொடுத்து விட்டு குற்றம் சொன்ன அன்னையின் பார்வைக்கு அதையே திரும்ப தந்து விட்டு எழுந்து போய் சோபாவில் அமர்ந்தாள் .

” படிப்பு முடிஞ்சதுதானடா .இனி இங்கேதானே இருப்பாய் …? ”
இதையே சௌதாமினி கேட்டிருந்தால் இல்லை இரண்டே நாட்களில் கிளம்ப போகிறேன் என சும்மாவாவது சொல்லி அவள் மனதை உடைத்திருப்பாள் .ஆனால் அப்பாவிடம்அப்படி    பதில் சொல்ல முடியவில்லை அவளால் .வெறுமனே தலையசைத்து வைத்தாள் .

சௌதாமினி புத்திசாலி .மகளின் இந்த மனநிலைகளை ஊகித்தே அவள் இது போன்ற கேள்விகளை தவிர்த்து வருகிறாள் .




” நம்ம தோட்ட வீட்டை உனக்கு க்ளினிக்கா மாற்றலாமா …? ” வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மெல்ல கேட்டாள் சௌதாமினி .

நான் இங்கே இருக்க போகிறேனென சொன்னேனா …சிடுசிடுக்க ஜிவிதா வாயை திறக்கும் முன்பே ” இது நல்ல ஐடியாவாக இருக்கிறதேடா .அப்படியே செய்வோமே ….” சந்தோசமாய் குறுக்கிட்டார் சபாபதி .

தன் எண்ணத்தை தோணாமல் கணவனிடம் தள்ளி விட்டு , மௌனமாக சமைக்க போய்விட்டு தாயை வெறித்தாள் ஜீவிதா .இவள் எப்போதுமே இப்படித்தான் …தன் எண்ணங்களை மிக எளிதாக நிறைவேக்றிக் கொள்வாள் .பிறரறியாமல் சுளுவாகவும் .

” யோசித்து சொல்றேன்பா .இங்கே க்ளினிக் போட்டால் என் ப்ராக்டிஸ் என்ன ஆவது …? “

” ஆனால் நீ இங்கே ..நம் ஊருக்கு டாக்டராக வர வேண்டுமென்பதுதானே …” வேகத்துடன் சொல்லிக் கொண்டு போன சபாபதி நிறுத்திக் கொண்டார் .

இந்த இடத்தில் அவர் சிவபாலன்பெயரை உச்சரித்தாக வேண்டும் .அதறகு அவர் விரும்பாத்தால் வாக்கியத்தை பாதியிலேயே விட்டு விட்டார் .

” நீ மெடிக்கல் எடுத்து படி ஜீவா …” ப்ளஸ் டூ முடித்தவுடன் இவளிடம் சொன்ன சிவபாலன் கையில் மெடிக்கல. என்ட்ரன்சுக்கான புத்தகங்களுடன் இருந்தான் .

” மெடிக்கலா …அந்த படிப்பு அம்மாவிற்கு பிடிக்காதே .உங்களையே வேண்டாமென்று சொன்னார்களே …”

” என்னைத்தான்  வேண்டாமென்பார்கள் .உன்னை சரியென்று விடுவார்கள் …” இறுக்கமான முகத்துடன் இதை சொன்ன சிவபாலன் அப்போது சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தான் .அவர்கள் ஊரிலிருந்த சிமெண்ட் பாக்டரி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான் .

அவன் சொன்னது போலவே …டாக்டராக போகிறேனென ஜீவிதா சொன்னதும் சௌதாமினி முகம் மலர தலையாட்டினாள் .மெடிக்கலுக்கு போதுமான மார்க் இல்லாத மகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி சீட் வாங்க தயங்கவில்லை அவள் .

அவளது படிப்பிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தவன் ” இந்த படிப்பு எனது லட்சியம் ஜீவா .ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை .உனக்கு கிடைத்திருக்கிறது .இந்த வாய்ப்பை  நீ உபயோகித்து நன்றாக படித்து நம் ஊருக்கே டாக்டராக வர வேண்டும் …”

வேகம் நிறைந்த அவனது குரல்தான் இன்ட்ரெஸ்ட் இல்லாத இந்த படிப்பை கூட அவளை படிக்க தூண்டியது .அவனுக்காகத்தான் இந்த படிப்பை படித்தாள் . இதே ஊருக்கு அவன் சொன்னது போன்றே டாக்டராக வர வேண்டிமென்றுதான் நினைத்திருந்தாள் .ஆனால் இப்போது …

அவன் சொன்னதற்காகவே இந்த ஊரில் டாக்டராக அமராமல் அவன் முகத்தின் முன்னாலேயே கையாட்டி விட்டு சென்னை போக வேண்டுமென்று தோன்றியது .

அப்படியே செய்தாலும் அது அவனை பாதிக்கவா போகிறது …? சனியன் ஒழிந்த்துன்னு நிம்மதியாக இருப்பான் .மனபாரம் அவள் விழிகளை மூட வைக்க ” நான் கொஞ்சம் படுக்கிறேன்பா …” மீண்டும் மாடியேறிக்  கொண்டாள் .

வரிசையாக நெடுக அமைந்திருந்த அறைகளினூடே மெல்ல நடந்தாள் .அதோ அந்த மூலையிலிருந்த குளியலறையிலிருந்து தான் குளித்து விட்டு மார்பு வரை ஏற்றிக் கட்டிய டவலுடன் அவள் ஓடி வந்தாள்.பன்னிரெண்டு வயது அவளுக்கு அப்போது. இன்னமும் மலராத சிறு பெண்தான் .  .

கைகளிலும் , தோள்களிலும் ஏதேதோ சாமான்களை சுமந்தபடி மாடியேறி வந்த சிவபாலன் மேல் மோதிக் கொண்டாள் .” பார்த்து வர மாட்டாயா …? ” கடிந்தபடி அவளை ஏறிட்டவனின் குரல் அவள் நின்றிருந்த தோற்றத்தில் இன்னமும் கோபம் கொண்டது .




” இப்படியே அங்கிருந்து இங்கே வரை வந்தாயா …? ” அதட்டியபடி தன் தோளில் கிடந்த துண்டினை எடுத்து அவள் வெற்று தோள்களை மூடிவிட்டான் .” போய் டிரஸ் மாத்திக்கோ …”

ஒரே வாரத்திலேயே அவளுக்கு அவளது அறைக்குள்ளேயே பாத்ரூம் ஏற்பாடு செய்து விட்டான் .அத்தை மகனென்ற உறவை தாண்டி நிறைய நேரங்கள் அவளுக்கு அன்னையாய் , தந்தையாய் , தோழனாகத்தான் இருந்திருக்கிறான் .

பரிவும் , பாசமும் , நட்பும் தெரியும் அவன் பார்வையில் என்றாவது காதல் தெரிந்திருக்கிறதா …? யோசித்து பார்த்து விட்டு இல்லையென்ற முடிவைத்தான் அவள் எடுக்க ஙேண்டியிருந்த்து .

” சகாயம் காரை எடு ….” பக்கத்து வீட்டிலிருந்து உரத்து ஒலித்த குரல் அவள் உடலில் மின்சாரத்தை பாய்ச்ச வேகமாக எழுந்து சன்னல் திரையை விலக்கி பார்த்தாள் .

சிவபாலன்தான் .சாம்பல் நிற புல்சூட்டில் நின்றபடி யாருக்கோ கைகளை ஆட்டியபடி ஏதோ உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் .அந்த உடையும் , அவனது தோரணையும் …சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னனை நினைவுறுத்த வேண்டாம் …தவறு …என எச்சரித்த உள் மனக்குரலை அலட்சியம் செய்து  தனை மறந்து அவனை பார்வையால் விழுங்கியபடி நின்றிருந்தாள் ஜீவிதா .

What’s your Reaction?
+1
6
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!