Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 15

15

 

 

 

ஒன்று …இரண்டு , ஏழு …எட்டு …பத்து மொத்தத்தில் பத்து தப்படி இருக்கலாம் , இங்கிருந்து அந்த கதவிற்கு போக …இரண்டு நிமிடங்கள் ஆகலாம் .கதவை திறக்க ஐம்பது விநாடிகள் …அதிகபட்சம் ஐந்து நிமிடங்களில் இங்கிருந்து ஓடிவிடலாம் .ஆனால் இவன் மட்டும் கொஞ்சம் நகர்ந்து நிற்கவேண்டும் ….ஆனால் அப்படி எண்ணமெதுவும் இவனுக்கு இருப்பது போலில்லையே …

அண்ணாந்து சிவபாலனை பார்த்த ஜீவிதா பொருமினாள் .நிற்கிறான் பார் …பாதி வழியை அடைத்துக்கொண்டு .வேகமாக இவனைக் கடந்து போகும் போது ,இவனை உரச வேண்டி வந்து விடுமோ ….அல்லது  அப்படி போகும் போது கையை பிடித்து இழுத்து விட்டானானால் …நரம்புகளில் ரத்த ஓட்டம் வேகமெடுக்க …உயரமும் , அகலமுமாக ஆகிருதியாய் நின்றவனை நிமிர்ந்து பார்த்து எச்சில் விழுங்கினாள் .




” உனக்கு என்ன பிரச்சனை ஜீவா …? “

நீதான்டா பிரச்சனை .அடிக்கடி இப்படி நீ முன்னால் வந்து நிறபதுதான் பிரச்சனை – தனக்குள் பேசிக்கொண்டாள் .

” அந்த கைலாஷ் உன் ப்ரெண்டா ஜீவா …? அவன் பேச்சே சரியில்லையே …? “

இவன் யாரை பற்றி பேசுகிறான் …மசமசத்த மூளையை தேய்த்து அங்கே மூலையில் கிடந்த கைலாஷை நினைவுக்கு கொண்டு வந்தாள் .

” நமது சொத்து விசயங்களில் கூட அந்த கைலாஷ் அநாவசியமாக தலையிடுகிறானே …உனக்கு உறுத்தவில்லையா …? “

ஜீவிதாவின் இப்போதைய உறுத்தல் இவனை தாண்டி எப்படி வெளியே போவது என்பதாகத்தான் இருந்த்து .அதிக டென்சனில் கட்டை விரல் நகம் கடிக்க ஆரம்பித்தாள் .

” நகம் ….கடிக்காதே …டாக்டர் …உனக்கு நான் சொல்ல வேண்டுமா …? ” அருகே வந்து குனிந்தவன் அவள் கையை எடுத்து விட்டான் .பின் நிமிராமல் அப்படியே அவள் முகத்தருகிலேயே குனிந்தபடி …

” அந்த கைலாஷுக்கும் …உனக்குமிடையே என்ன ஜீவா …? ” மென்மையாக கேட்டான் .அவனது அந்த கேள்வி  கோபமூட்ட 




தன் முகமருகே குனிந்திருந்த அவன் முகத்தில் தன் கையை வைத்து தள்ளினாள் .

” தள்ளி நில்லுங்கள் …” வேகமாக வாசலுக்கு நடந்தாள் .வாசல் வரை போனவளை பற்றினான் சிவபாலன் .” எனக்கு பதில் சொல்லிவிட்டு போ …”

ஜீவிதா அன்று சேலை கட்டியிருந்தாள் .அகலமாய் வெட்டப்பட்டிருந்த ப்ளவுசின் முதுகின் வெற்றிடத்தில் பதிந்திருந்த்து  வேகமாய் வீசி பற்றியிருந்த அவன் கை .கதகதப்பும் , மதமதப்புமாய் தன் மேலிருந்த அவன் கையில் தடுமாறி , பின் சுதாரித்து அவன் கையை தட்டி விட்டாள் .

” என்ன கண்றாவி நினைப்பை உங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள் …? எந்த உரிமையில்  என்னை தொடுகிறீர்கள் ….? வீட்டில் ஒரு மனைவி இருக்கும் போது இப்படி என்னை தொட்டால் …அதற்கு என்ன அர்த்தம் . சுகன்யா உங்கள் மனைவி என்றால் ….நான் …எனக்கு என்ன பெயர் …? தங்கையை மனைவியாகவும் , அக்காவை சும்மாவும் வைத்துக் கொண்டு எங்கள் குடும்ப சொத்துக்கள் அத்தனையையும் அபகரிக்க நினைக்கிறீர்களா …? “

சிவபாலனின் சிறு தீண்டல் தனக்குள் உண்டாக்கியிருந்த பலவீனத்தை மறைக்க ஜீவிதா படபடவென பேசினாள் .ஆனால் பாதி பேச்சிலேயே சிவபாலனின் கைகள் அழுத்தமாக அவள் கன்னத்தில் பதிந்தன .

சிவந்து காந்திய கன்னத்தை தொட்டு பார்த்தவள் ” அடித்தீர்களா …? ” நம்பமுடியாமல் கேட்டாள் .

அறைக்கதவை திறந்து அவளை வெளியே தள்ளினான் …” போடி என் மூஞ்சியில் முழிக்காதே …”

” அது எப்படி என்னை அடிக்கலாம் …? ” ஜீவிதா எகிறினாள் .

மீண்டும் அடிப்பது போல் தானும் எகிறி வந்த சிவபாலன் ” இப்படியெல்லாம் பேசுற அளவு பெரிய மனுசியாயிட்டியாடி நீ …..? “




”  பின்னே  இன்னமும் சின்னப்பொண்ணா நான் .நான் இப்போ டாக்டராக்கும் . எனக்கு நியாயம்னு பட டதை அப்படித்தான் பேசுவேன் .. .அதுக்காக அடிப்பீங்களா …? என் அம்மா , அப்பாவே என்னை அடித்ததில்லை …” ஆத்திரத்துடன் கையை அவன் மேல் வீசினாள் .

” ஆமாம் …கண்ணு …பாப்புன்னு எந்நேரமும் செல்லம் கொஞ்சி …கொஞ்சி உன்னைக் கெடுத்து வச்சிருக்காங்க உன் அம்மாவும் , அப்பாவும் …” தன் மேல் வீசப்பட்ட அவள் கைகளை பற்றி கோர்த்து அவளை தள்ளினான் .

” என் வீடு …என் குடும்பம் …என் அம்மா , அப்பா …நீங்க யார் இதில் தலையிட …”

” அப்போ நான் உன் குடும்பமில்லையா …? உன்னை விட இந்த குடும்பத்தின் மீது எனக்குத்தான் அக்கறை அதிகம் …கொஞ்சம் முன்னால் என் குடும்பத்து பெண்களை பற்றி தப்பாக பேசினாயே .அதனை கடுமையாக கண்டிக்கிறேன்  … “

” ஓஹோ உங்கள் பொண்டாட்டியை பற்றி தப்பாக பேசினேன்னுதான் இவ்வளவு கோபமோ ….? “

” ஏய் லூசு ….சுகன்யாவை பற்றி மட்டுமா பேசினாய் .நிதானமாக யோசி …” இப்போது அவன் குரல் ஆக்ரோசம் குறைந்து மெலிந்து ஒலித்தது .

ஒருவர்  கையோடு ஒருவர்  கைகளை கோர்த்துக் கொண்டு மல்லுச்சண்டை போல் ,ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் .




சிவபாலன் இதை சொல்லும் போது தனது தள்ளலை குறைத்து, கோர்த்திருந்தகையை  இறக்கி அவள் முகம் பார்த்தான் .

” எனக்கு நீயும் சுகன்யாவும் ஒன்றுதான் .உடனே தவறாக நினைத்து திரும்ப மலையேறாதே .இரண்டு பேருமே என் மாமா மகள்கள் .உங்கள் இருவரின் நன்மை , தீமைகளில் எனக்கு பெரிய பொறுப்பு உண்டு .என் வீட்டு பெண்களை பற்றி தவறான ஒரு வார்த்தையும் பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன் .ஏன் …அவர்களுக்கே கூட தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளும் உரிமை கிடையாது .”

ஜீவிதாவின் எதிர்ப்பு முற்றிலும் குறைந்திருக்க , இன்னமும் குறையாத வீம்புடன் அவனை முறைத்தாள் .

” பார்த்தேனே உங்க அக்கறையை … எனக்கு தெரியும் உங்கள் பொறுப்பை பற்றி ….” இறங்கிய குரலென்றாலும் கோபம் குறையாமல்தான் இருந்தாள் .

” என் மேல் உள்ள கோபத்தில் உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளலாமா ஜீவி …? ம் …அப்படி திருமணமான ஒருவனுடன் தவறாக பழகுமளவு மோசமானவளா நீ …”

மென்மையாகி குழைந்த குரலுடன் லேசாக புன்னகைத்த சிவபாலனின் இதழ்களால் , அழகாக குழிந்தன அவன் கன்னங்கள் .அடர்ந்திருந்த தாடிக்குள் மறைந்து கொண்டாலும் மிக அருகிருந்ததால் அவனது கன்னத்து குழியை உணர முடிந்த்து  ஜீவிதாவால் .எப்போதும் போல் அதனை தொட்டுப் பார்க்க தூண்டிய தன் உணர்வுகளை மறைக்க முடியாமல் விழிகளை திருப்பி தரையில் பதித்தாள் .

” கையை விடுங்கள் …”




” விடுகிறேன் …உன்னுடன் பேச வேண்டும் ….” விடாமல் மேலும் பற்றி அவள் கைகளை இழுக்க , அவள் விடுபட முயல மீண்டும் ஒரு சிறுபிள்ளை விளையாட்டுத்தனம் இருவருக்குள்ளும் சுவாரஸ்யமாக தொடங்கியது .தற்போதைய தங்கள் பொறுப்புகளை மறந்து இருவரும் மீண்டும் தங்கள் குழந்தை பருவத்திற்கு போயிருந்தனர் .இப்படி விளையாடுவது அவர்கள் வழக்கம்தான் .ஆனால் முந்தைய இது போன்ற விளையாட்டிற்கும் இப்போதிற்கும் நிறைய வித்தியாசத்தை இருவருமே உணர்ந்தனர் .

அழுத்தி பிடித்திருந்த வலிய கைகள் கொஞ்சம் வலியை தந்தாலும் கூடவே உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பையும் அனுப்ப ,  முகத்தருகே நெருங்கியிருந்த அவன் முகம் மிகவும் தொல்லை செய்ய இதழகளை மடித்து கடித்தபடி தன் கைகளை விடுவிக்க போராடினாள் ஜீவிதா .

பஞ்சாய் தன் கையினுள் பொதிந்து கிடந்த கைகளின் மென்மை புத்தியை தடுமாற வைக்க ,மடிந்து கிடந்த  இதழ்களில்மீள முடியாமல்  தங்கி விட்ட தன் பார்வையுடன் வே ண்டாம் விலகு என ஆணையிட்ட மூளைக்கு அடங்காமல் தன் பிடியை மேலும் நெருக்கிக் கொண்டிருந்தான் சிவபாலன்

அப்போது ….

” பென்டாஸ்டிக் ….செம வ்யூ ….”ஒரு கை தட்டலுடன் உள்ளே நுழைந்தான் கைலாஷ் .

சட்டென நிகழ்வுக்கு வந்த இருவரும் தங்கள் கைகளை இறக்கிக. கொண்டனர் .

” பெரிய தொழிலதிபர் …பொறுப்பான டாக்டரம்மா …இரண்டு பேரும் இப்படியா சின்ன புள்ளையாக அடித்து விளையாடுவீர்கள் ….? ” இருவரையும் ஏற , இறங்க பார்த்தபடி கேட்டான் கைலாஷ் .

” திஸ் இஸ் நன் ஆப் யுவர் பிஸினஸ் …” சூடு பறந்த்து சிவபாலனின் குரல் .

” அப்படியா …ஆனால் எனக்கு சௌதாமினி ஆன்ட்டி சில வேலைகள் கொடுத்திருக்கிறார்கள் .அதில் ஒன்று ஜீவிதாவை பத்திரமாக பாதுகாப்பது .யாரிடமும் அடி வாங்காமல் ….” சொன்னபடி கைலாஷ் சிவபாலனின் கை தடமிருந்த ஜீவிதாவின் கன்னத்தை ஒற்றை விரலால் உயர்த்தி பார்த்தான் .பட்டென அவன் கையை தட்டினான் சிவபாலன் .

” வேண்டாம் டாக்டர் சார் .நீங்கள் வெளியே போங்க …”

” யார் உன்னை அடித்தது ஜீவிதா …? ” கைலாஷ் சிவபாலன் பக்கம் திரும்பவே இல்லை .




” கேள்வியை என்னிடம் கேளுங்கள் டாக்டர் “

” சூத்ரதாரியிடமேவா ….? அதில் என்ன பயனிருக்க போகிறது இன்ஞினியர் சார் ….? “

சிவபாலன் பற்களை நறநறப்பது ஜீவிதாவிற்கு கேட்டது .இருவருக்குமிடையே அவள் தவித்தபடி நின்றிருந்தாள் .சட்டென கைலாஷை விரட்டி பேச ,சிவபாலன் பக்கம் பேச  தான் நியாயமான காரியம் செய்யவில்லையே என்ற குற்றவுணர்ச்சி அவளுக்கிருந்த்து . 

ஆனால் சிவபாலனிடம் அது போன்ற உணர்வுகள் இல்லை , என் மாமா மகள் , நான் விளையாடுவேன் …அடிப்பேன் …உனக்கென்னடா …என்ற உரிமை பார்வை அவனிடம் இருந்த்து .ஆனால் சற்று முன்னான தீண்டல் மாமன் மகளுக்கானதாக மட்டுமில்லை என்ற நியாய புத்தியில் ஜீவிதாவின் மனம் குன்றியது .




” நாம் போகலாம் கைலாஷ் …” அவள் வெளியேற நடந்தாள் .

” ஆன்ட்டியிடம் …உன் அம்மாவிடம் …இதை என்ன சொல்லட்டும் ஜீவிதா ….” அவள் கன்னத்து தடத்தை காட்டி கேட்ட கைலாஷ் பேச்சில் , நிச்சயம் உன் அம்மாவிடம் போட்டுக் கொடுக்க போகிறேன் என்ற செய்தியிருக்க , சிவபாலன் கைகளை முறுக்கியபடி அவனை நெருங்கினான் .

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!