Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 30

30

 

 

 

 

திடுமென தன் கைகளுக்குள்ளிருந்து போய் விட்ட சஸாக்கியின் இருப்பின்மை பாலகுமரனை உறுத்தியபடி இருக்க, திவாகரின் ஆர்வமான தொடர் தொழில் பேச்சுக்களை சிறிது ஒத்தி வைத்தவன், ஆர்வமுடன் அவளை தேடி மீண்டும் அவள் அறைக்கு வந்தான்..
கதவுகள் விரிய திறந்து கிடக்க சஸாக்கியை காணவில்லை.. சட்டென துணுக்குற்ற அவன் மனம் பரபரப்பாய் அவளை தேடியது.. ஐந்து நிமிடங்களில் வீட்டினுள் எங்கேயும், அவளும் சசிரூபனும் இல்லையென்ற தகவல் தெரிய வர வீட்டினர் அனைவரும் பதறினர்.
இடிந்து போய் கட்டிலில் அமர்ந்து விட்ட பாலகுமரனை அதட்டி உலுக்கினான் திவாகர்..
“டேய் மச்சான் என்ன இது இதற்கெல்லாம் இப்படி கலங்கி உட்கார்ந்து கொண்டு.. எழுந்திரி வா..” அவனை இழுத்துக் கொண்டு வீடு முழுவதும் பொருத்தியிருந்த மொத்த கேமராக்களின் ரிக்கார்டிங் இருந்த அறைக்கு அழைத்து சென்றான்..




ஒவ்வொரு அறையின் கேமராவாக செக் செய்து முதலில் சரண்யா சசிரூபனுடன் வெளியே போனது, பின் சஸாக்கி பரபரப்பாய் வெளியே போனது எல்லாவற்றையும் பார்த்தனர்..
காம்பவுண்ட் வாசலில் பொருத்தியிருந்த கேமரா மூலம் அவர்கள் இருவரும் போன ஆட்டோ நம்பரை கூட தெரிந்து கொண்டனர்.. பிறகு.. போலிஸீன் துணையோடு..
இரண்டு மணி நேர நரக தேடலுக்கு பின் சென்னையின் ஒதுக்குபுற வீடொன்றில் மயக்க நிலையில் இருந்த சஸாக்கியையும், சசிரூபனையும் மீட்டனர்..
சட்டென முகத்தில் தெளித்த நீரின் வேகத்தில் சஸாக்கி விழி திறந்து பார்த்த போது பாலகுமரன் பளாரென்ற சத்தத்துடன் சரண்யாவின் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தான்.. திவாகர் சாரங்கனின் சட்டையை பிடித்து உலுக்கியபடி இருந்தான்..
“சீ.. தெரு நாய்கள்.. இவர்கள் முகத்தில் விழிக்க கூட நான் விரும்பவில்லை.. இவர்கள் பெயர் கூட என் காதில் விழாத தூரத்திற்கு எங்கேயாவது இவர்களை தூரமாக கூட்டிப்போய் அடைத்து விடுங்கள் இன்ஸ்பெக்டர்..” பாலகுமரன் வெறுப்புடன் கூற..
“இருங்க பாலா.. எனக்கு இவர்களிடமிருந்து நிறைய விபரங்கள் வேண்டும்..” சஸாக்கி வேகமாக எழுந்து வந்தாள்..
“என்ன கண்றாவி விபரங்கள்..? எல்லாம் நானே சொல்கிறேன்.. நீ என்னுடன் வா..” அவள் கை பற்றி இழுத்தான்..
“இல்லை.. எனக்கு இவள் வாயால் கேட்க வேண்டும்.. ஏய் சொல்லுடி.. ஜப்பானில் என்னை என்ன செய்தாய்..?”
கேட்டவளை முறைத்து நின்ற சரண்யாவின் கன்னத்தில் இடியாக இறங்கியது அந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் கை..




“ஏய் என்னடி முறைப்பு..? மேடம் கேட்கிறாங்கள்ள.. சொல்லுடி..”
சரண்யா அடி வாங்கியதால் கலங்கிய கண்களுடன் சொல்ல ஆரம்பித்தாள்..
“நீயும், பாலாவும் ஜப்பானில் சந்தித்த முதல் நாளே எங்களுக்கு தெரிந்துவிட்டது.. நீ கொஞ்சம் பலவீனமான பெண்ணாய் தெரிந்தாய்.. அதனால் உன் மனதை
சிறிது குழப்பி, பாலாவை விட்டு தள்ளி நிறுத்த நினைத்தோம்.. உனக்கு ஒரு சைக்ரியாட்டிக் ட்ரீட்மென்ட் கொடுத்தோம்..”
“என்ன.. எனக்கு தெரியாமல் எப்படி..?”
“நீ.. காதில் புண் என்று டாக்டரிடம் போனாய்.. அந்த டாக்டருக்கு பணம் கொடுத்து உன் காதில் சிறு மைக் ஒன்றை பொருத்தினோம்.. அது அங்கே உங்கள் நாட்டில் எங்களுக்கு எளிதாக கிடைத்தது.. பிறகு உன்னை மயக்கத்தில் ஆழ்த்தி என் குரலை உன் மூளையில் பதித்து அந்த குரலுக்கு பயப்படும்படி செய்தோம்.. உன் காதில் பொருந்திய மைக் மூலம் அடிக்கடி உன் மூளைக்குள் பேசி உன்னை குழப்பியடி இருந்தேன்.. பாலாவை மிக நெருங்காமல் பார்த்துக் கொள்வதுதான் எங்கள்
எண்ணம்.. வந்த வேலை முடிந்து நாங்கள் இந்தியா திரும்பி விட்டால் பாலா உன்னை மறந்து விடுவான் என நினைத்தோம்..”
“இதெல்லாம் முழுமையாக செய்து முடிக்க எங்களுக்கு ஒரு மாதம் ஆனது.. அதற்குள் எங்கள் முயற்சிகளையும் தாண்டி நீயும், பாலாவும் மிக நெருங்கி விட்டீர்கள்.. நாங்கள் கொஞ்சம் அசந்த நேரம் உன் கழுத்தில் தாலியும் கட்டிவிட்டான்..”
“அன்று நம் திருமணம் எப்படி நடந்தது பாலா..?” தன்னை அண்ணாந்து பார்த்து கேட்டவளை அணைத்துக் கொண்ட பாலகுமரன் அருகில் நின்ற சாரங்கனின் முகத்தில் இடித்தான்..
“ஏய் கேட்கிறாள்ல சொல்லுடா..”
“அகிரோட்டோவிடம் பாலாவை பற்றி கொஞ்சம் தப்பாக சொல்லி வைத்தோம்.. அவன் உமனைசர் என்பது போல் பெண்களின் பின்னால் சுற்றுபவன் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தினோம்.. அவன் சஸாக்கியோடு சுற்றுவதை முன்பே அவர் கவனித்திருந்திருக்கிறார்.. தன் நாட்டு பெண்ணிடமே வேலையை காட்டுகிறானா என்ற ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.. அது அப்போது எங்களுக்கு தெரியாது.. நாங்கள் பொதுவாக ஒரு பெண்ணை காதலிப்பதாக நடிக்கிறான்.. திருமணம் செய்ய மறுக்கிறான் என சொல்லி வைத்தோம்.. நீங்கள் திருமணத்தை நடத்தி வைத்தால் நல்லது என
அவரிடம் பேசி வைத்தோம்..




அவர் அந்த பெண் யாரென கேட்கும் போது சரண்யாவை கை நீட்டி விட திட்டம் போட்டிருந்தோம்.. அகிரோட்டோ அப்போது அவளை திருமணம் முடிக்க அதட்டினால் தொழிலுக்காக வேறு வழியின்றி பாலா சம்மதித்து விடுவானென நினைத்தோம்.. அதற்காகவே தமிழ்முறைப்படி சேலை, வேஷ்டி, தாலி என எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து அவரிடம் கொடுத்து விட்டு அகிரோட்டோவை தயார் செய்து விட்டு காத்திருந்தால் பாலா இதுதான் என் காதலி என சஸாக்கியை அழைத்து வந்து நின்றான்..
அகிரோட்டோவும் உடனே சம்மதித்த பின்புதான் உங்களை அவர் முன்பே கண்காணித்திருக்கிறாரென தெரிந்தது.. பாலா உறவினர்கள் அருகில் இல்லாததால் திருமணத்தை மறுப்பானென நினைத்தால், அவன் உடனே சம்மதித்து தாலியும் கட்டிவிட்டான்.. அகிரோட்டோ வேறு உங்களை புது மணத்தம்பதி என முதலிரவு கொண்டாட அறைக்குள் அனுப்பி விட்டார்.. ரொம்ப நேரம் ஒன்றும் தோன்றாமல் பிறகு உன்னை பேசி வசியப்படுத்தி கழுத்து தாலியை கழட்டி வைத்துவிட்டு வெளியே வர வைத்தோம்.. எங்காவது தூரமாக கொண்டு போய் விட்டுடனும்னு நினைத்தோம்.. ஆனால் அந்த வேலை இல்லாமல் உனக்காக உன் அப்பாவே வந்து விட்டார்.. உன்னையும், உன் அம்மாவையும் அவர் கூட்டிக்கொண்டு டோக்கியோ போக கிளம்பவும், சரிதான் நமக்கு வேலை மிச்சமென விட்டு விட்டோம்..”
“பூகம்பம் வந்து உன் வீடு இருக்கும் இடமெல்லாம் அழிந்து போனாலும் பாலா மட்டும் நீ உயிரோடு எங்கேயோ இருப்பதாக நம்பியபடி இருந்தான்.. உன்னை தேடியபடி இருந்தான்.. எங்களை வேறு தேடச் சொன்னான்… நானும் அண்ணனும் அவன் மனதை மாற்ற பெரு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது சனியனாய் நீ மீண்டும் வந்து சேர்ந்தாய் அதுவும் குழந்தையோடு.. நல்லவேளை நீ இந்த வீட்டிலேயே தங்கியதால் நாங்களும் அருகிலேயே இருந்து மீண்டும் உன்னை மெஸ்மரிசம் செய்து குழப்ப முடிந்தது..”
“ஆனால் இந்த இடத்தில் நாங்கள் எங்கேயோ ஏதோ தவறு செய்துவிட்டோமென நினைக்கிறேன்.. எங்கள் திட்டத்தை தெரிந்து கொண்டார்களோ என்னவோ, பாலகுமரனும், அவன் குடும்பத்தினரும் வெட்டியாய் உன்னிடம் வம்பிழுத்து உன்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஒரு மாதம் திணறிவிட்டோம்..”
“எனக்காகத்தான் என்னுடன் சண்டையிட்டு வெளியேற்றினீர்களா அண்ணா..?” திவாகரனிடம் கண் கலங்க கேட்டாள் சஸாக்கி..




“ஆமாம் சஸாக்கி நீங்கள் ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிக்கப் பட்டிருப்பதாக பாலகுமரன் சொன்னான்.. அதனை சரி செய்வதற்காகத்தான் நான்.. கார்த்திகா.. அபிராமி அத்தை எல்லோரும் சேர்ந்து இப்படி செய்தோம்.. உங்களை வீட்டை விட்டு வெளியேற்றி யாருக்கும் தெரியாத இடத்தில் தங்க வைத்து, அகல்யா மூலமாக உங்களுக்கு மன பாதிப்பு குறைய ட்ரீட்மென்ட் கொடுத்தோம்..”
“உனக்கு நம் வீட்டிற்குள்ளேயேதான் ஏதோ நடக்கிறது என எனக்கு தோன்றியபிறகு நான் நம் வீட்டை தீவிரமாக கண்காணித்தேன் சகி இந்த சரண்யாவும், சாரங்கனும் மாட்டினார்கள்.. எனக்கு புரியாத பல முடிச்சுகள் அவிழ்ந்தாற் போலிருந்தது.. ஜப்பானில் நடந்த விசயத்தை முழுவதுமாக தெரிந்து கொள்ள அகிரோட்டோவுடன்
பேசி அவரை வர வைத்தேன்.. அவரை பார்த்ததுமே சரண்யாவும், சாரங்கனும் பயந்து குழம்பி இருந்தனர்..”
“அந்த குழப்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்.. மீண்டும் உன்னை வீட்டிற்குள் அழைத்து வந்தோம்.. அதனை எதிர்பார்க்காத.. தாங்க முடியாத சரண்யா உன்னோடு மோதினாள்.. நாம் அசந்த நேரம் குழந்தையை தூக்கிக் கொன்டு ஓடிவிட்டாள்.. குழந்தையை காட்டி உன்னை வர வைத்து உங்கள் இருவரையும் கொன்று எங்காவது போட்டு விடுவது அவர்கள் திட்டமாக இருந்திருக்கிறது.. பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து என்னை திருமணம் செய்வதும்..”
“இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் நீங்கள் செய்து வைத்திருக்கும் போதும் சரண்யா எப்படி நம் குழந்தையை தூக்கிப் போனாள் பாலா..?”
“அவளை பற்றி நமக்கு மட்டும்தானே தெரியும் சகி.. வீட்டு வேலையாட்களுக்கு தெரியாதே… நாம் அகிரோட்டோவுடன் விருந்தில் இருக்க குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கார பெண்ணிடமிருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு போயிருக்கிறாள்.. நாங்கள் வீடு முழுவதும் கேமராவை வைத்து இருப்பது அவளுக்கு தெரியாது.. அதனால் மாட்டினார்கள்..”
“சரி சரி போதும் விளக்கங்கள் இவர்களை இழுத்து போங்க..” இன்ஸ்பெக்டர் குரல் கொடுக்க அவர்கள் இருவரும் இழுத்து போகபட்டனர்.
“மன்னிச்சிடுங்க அத்தை..” காலில் விழுந்த சஸாக்கியை தூக்கி அனைத்துக் கொண்டாள் அபிராமி..
“மன்னிப்பு எதற்கும்மா.. என்மருமகளை நான் தவறாக நினைப்பேனா..?” சஸாக்கியின் வடிந்த கண்ணீரை துடைத்து விட்டாள்..
அடுத்து அருகிலிருந்த கார்த்திகாவை சஸாக்கி திரும்பி பார்க்க, அவள் அவசரமாக பக்கத்திலிருந்த சோபா மேல் ஏறி நின்று கொண்டாள்..




“அண்ணி வேண்டாம்.. இந்த கால்ல விழுற வேலையெல்லாம் அங்கேயோடு நிறுத்திக்கோங்க.. என் பக்கமும் வந்து என்னை கிழவியாக்க திட்டம் போடாதீங்க..” கார்த்திகா பாவனையோடு சொன்னது சிரிப்பை வர வைக்க சஸாக்கி அவளை பிடித்து கீழே இழுத்து அணைத்துக் கொண்டாள்..
“எனக்கு எப்போ..?” அவள் பின்னிருந்து முணுமுணுத்த பாலகுமரனுக்கான விடையை அன்று இரவு தனிமையில்தான் சஸாக்கியால் அளிக்க முடிந்தது..
திகட்ட திகட்ட தந்து விட்ட போதும் திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் அவளை அணுகினான் பாலகுமரன்.. எத்தனை நாட்கள் பிரிந்திருந்து விட்டோம்.. அதையெல்லாம் ஈடு செய்ய வேண்டாமா.. என்ற தாபக் குரலுடன் வேகத்துடன் அவன் அவளை அணுகிய போது சஸாக்கியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.. தன்னை முழுதுமாக அவனுக்கு ஒப்புக் கொடுப்பதை தவிர..
ஒரு வழியாக ஓரளவு திருப்தி பெற்று அவளை விட்டு சிறிது விலகியவனை..
“எப்படி என் தடுமாறும் மனதை தெரிந்து கொண்டீர்கள் பாலா..?” எனக் கேட்டாள்..
“நீ எப்போதும் என்னை விட்டு விலகியே இருந்தாய் சகி.. எதிரும் புதிருமாக பேசினாய்.. அருகில் வந்தால் அடிக்க கூட செய்தாய்..” தன் கன்னத்தை தடவினான்..
“அ.. அதெல்லாம் என் மனநிலையில் செய்ததில்லை பாலா.. சதா ஒரு குரல் என்னை இம்சித்தபடி இருந்தது.. அதனால் நான் குழம்பி ஏதேதோ..”
“ம் புரிந்து கொண்டேன் சகி.. உனக்கு என் மீதிருந்த காதலை நான் அறிவேன்.. ஆனால் அதற்கு சம்பந்தமற்று நீ செய்யும் செயல்கள் எனக்கு சந்தேகத்தை கொடுத்தது.. அன்று நீச்சல்குளத்தில் வைத்து நீ எனக்கு இணக்கமாக நடந்து கொண்டாயே.. அன்று என் சந்தேகம் தீர வழி கிடைத்தது..”
“அ.. அது அன்று என் மூளையில் எந்த குரலும் கேட்கவில்லை அமைதியாக இருந்தது..” சஸாக்கி கன்னங்கள் சிவக்க பதில் சொன்னாள்..
அந்த சிவந்த கன்னங்களில் ஆசையாக இதழ் பதித்தவன்.. “அன்று நீச்சல் குளத்தில் தண்ணீர் உன் காதிற்குள் போய்விட்டதால் உன் காது மைக் கொஞ்ச நேரம் வேலை செய்யவில்லை.. நீ கொஞ்ச நேரம் என் பழைய சஸாக்கியாக இருந்தாய்.. நானும் என் காரியம் சாதித்துக் கொண்டேன்..” காதலாய் கிசுகிசுக்க சஸாக்கி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்..
“ஏன்டி சரண்யா மிரட்டியதும் என்னிடம் சொல்லாமல் நீயாக ஏன் போனாய்..?” திடுமென கேட்டு மிரட்டினான்..
“நீ.. நீங்கள் திடீரென்று என்னை வீட்டிற்குள் வர வைத்திருந்தீர்கள்.. அது அகிரோட்டாவிற்காக.. அவருடனான உங்கள் தொழிலுக்காக என்று நினைத்தேன்.. அதனால்தான் உங்களிடம் சொல்லாமல் நானே நம் குழந்தையை பாதுகாக்க போனேன்..”
“ஏய்.. கடமைக்காக உன்னை அழைத்து வந்தது போன்றா உனக்கு தோன்றியது..?”
அவனது கேள்வியில் அன்றைய பாலகுமரனின் அணைப்பு நினைவு வர முகம் சிவந்தாள் சஸாக்கி..
“திடீரென அறை வாசலில் நிற்கிறீர்கள்.. விடாமல் இழுத்து இழுத்து அணைக்கிறீர்கள்.. முன்பெல்லாம் இப்படி இருந்ததில்லையே.. அதுதான் சந்தேகம்.. அகிரோட்டோவிற்காக.. அவரிடம் நான் நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு..”
“எப்போதுமே உன்னை அப்படியெல்லாம் செய்ய எனக்கு ஆசைதான் சகி.. ஆனால் எங்கே நீதான் தள்ளி தள்ளி போனாயே.. ஆனால் அன்று அப்படி நடந்து கொண்டதின் காரணம்.. இதோ இங்கே பார்..”
தனது போனை ஆன் செய்து அவளிடம் அந்த வீடியோவை காட்டினான்.. அதில் சஸாக்கி சரண்யாவை அறைக்குள் அடிப்பது, சுவரில் அழுத்துவது, அவளை மிரட்டுவது என அனைத்தும் பதிவாகியிருந்தது..
“அப்போது இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தீர்களா..?”
“பின்னே சரண்யாவால்தான் உனக்கு ஆபத்து என தெரிந்த பின்னும் அவளோடு உன்னை அலட்சியமாக தனித்து விடுவேனா சகி..? அவளது ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.. நீ அவளிடம் நடந்து கொண்ட முறை எனக்கு மிக சந்தோசமாக இருந்தது.. இப்படி ஒரு தைரியமான பெண்ணாகத்தான் உன்னை எதிர்பார்த்தேன் சகி.. அப்படியே நீ மாறிவிடவும் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. உடனே உன்னை பாராட்ட, கொஞ்ச ஓடி வந்தேன்..”




“சீ.. அதற்காக இருக்கும் இடம் கூட உணராமல் அப்படியா..?” சஸாக்கி சிணுங்கினாள்..
“அது மட்டுமல்ல சகி அப்போது நீ சரண்யாவை நீ அடித்ததை மட்டுமில்லை.. அதன் பிறகு நீ டிரஸ் மாற்றியதை, அலங்கரித்து கொண்டதை கூட நான் கேமராவில் பார்த்துக் கொண்டே இருந்தேன்.. பிறகும் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது மிகக் கடினமாக..”
“சீ.. பொறுக்கி, கட்டின பொண்டாட்டியை இப்படி பார்ப்பாயாடா நீ..?” அவன் பேசி முடிக்கும் முன் அவனை முதுகில் மொத்தினாள் சஸாக்கி..
“அப்போது நீ என் எதிரில் இருக்கிறாய், நீ எனது மனைவி என்பது மட்டும்தான் சகி என் மூளையில் பட்டது.. மற்ற எதுவுமே பதியவில்லை.. என் மிக அருகே இருக்கும் உன்னை என் அழகான மனைவியை என்ன செய்வதென என் மூளை சொன்னதோ அதை செய்தேன்.. இதோ இப்படி..” சொன்னபடி பாலகுமரன் மோகம் கொப்பளிக்க அவளை நெருங்கிய போது தொட்டிலில் இருந்த சசிரூபன் குரல் கொடுத்தான்..




சட்டென பாலகுமரனை தள்ளி விட்டு போய் மகனை கைகளில் அள்ளிக் கொண்டாள் சஸாக்கி..
“இனி உங்களுக்கு இடமில்லை.. தள்ளிப் போங்கள்..” கிண்டலாக சொன்னபடி மகனை மடியில் வைத்துக் கொண்டாள்..
தலையசைத்து அவளை மறுத்த பாலகுமரன் அடாவடியாக அவளை நெருங்கி தானும் அவள் மடியில் தலை வைத்துக் கொண்டான்..
“எந்த நேரத்திலும் நீ என்னை விலக்க முடியாது சகி.. ஏனென்றால் நான் முழுக்க முழுக்க உன்னை சரண்டைந்து விட்டேன் சகியே..”
குழந்தையாய் கொஞ்சியவனை விலக்க மனமற்று இன்னொரு குழந்தையாய் அவனையும் தன் மடியேந்திக் கொண்டாள் சஸாக்கி..

– நிறைவு –

What’s your Reaction?
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!