Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 25

25

 

 

 

“அம்மா நான் போயிட்டு வர்றேம்மா..” சஸாக்கி வேலைக்கு கிளம்பிவிட்டாள்..
அன்னத்திற்குத்தான் மிகுந்த கவலை.. மகள் எப்படி வேலைக்கு போக போகிறாளோ என்று பயந்து கொண்டே இருந்தாள்.. ஆனால் திவாகரன் சொன்னதை அன்னம் அவளிடம் சொன்னவுடனேயே சஸாக்கி சம்மதமாக தலையசைத்து விட்டாள்..
இதில் அவளுக்கு சிறு நிம்மதி கூடவோ.. என்ற சந்தேகம் அன்னத்திற்கு வந்தது..
“ஆம்ம்மா.. நமக்கு நிறைய வசதிகளை கார்த்திகா ஹஸ்பென்ட் செய்து கொடுத்திருக்கிறார்.. அதையெல்லாம் நாம் சும்மா வாங்கிக் கொள்ளலாமா..? உழைக்காமல் சாப்பிடும் சாப்பாடு உடம்போடு ஒட்டுமா..”
“அவர்கள் உன் உறவினர்கள் சஸி.. உனக்கு செய்யும் உரிமை உள்ளவர்கள்..”




“அந்த உறவையும், உரிமையையும் அவர்களல்லவா ஒத்துக் கொள்ள வேண்டும்மா.. நீங்களும் நானும் சொல்லிக் கொள்வதில் என்ன இருக்கிறது..?”
அடுத்த வாரம் சஸாக்கி மிகுந்த நிறைவோடு வேலைக்கு கிளம்பி விட்டாள்..
“தலைவலி இப்போது எப்படி இருக்கிறது சஸி..?”
வீட்டு வாசல்படி இறங்கும் போது அகல்யா கேட்டாள்..
“உங்கள் ட்ரீட்மென்டுக்கு பிறகு நன்றாக குறைந்திருக்கிறது அக்கா.. உங்களுக்கு நன்றி..”
“நன்றில்லாம் வேண்டாம்மா.. எனக்கு ஆபிசிலிருந்து வரும் போது இரண்டு காய் மட்டும் வாங்கிட்டு வந்துடுறியா..?”
இரண்டு எனக் குறிப்பிட்டு அவள் நீட்டிய பேப்பரை நான்காக மடித்துத்தான் பேக்கில் வைக்க வேண்டியிருந்தது..
“உங்களுக்கு தமிழ் தெரியுமா.. தெரியாதா..?” அவள் டைப் பண்ணி கொண்டு வந்திருந்த பேப்பர்களை டேபிள் மேல் தூக்கி போட்டான் திவாகர்..
அதனை அவள் முகத்தில்தான் போடும் எண்ணம் அவனுக்கு இருந்தது.. தெளிவாக தெரிந்தது.. ஆனாலும் கொஞ்சம் டீசென்ஸி பார்த்து டேபிளில் போட்டான்..
“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜப்பானில்தான்.. அங்கே பள்ளியில் தமிழ் கிடையாது.. தமிழ் அம்மா சொல்லி தந்ததுதான்..” மெல்ல சொன்னாள்..
“அப்போ முதலில் நாம் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிப்போமா..? அ, ஆ.. என்று..”
“சாரி.. நான் இனிமேல் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்..”
“வரிக்கு நாலு எழுத்து பிழை.. முதலில் தமிழை நன்றாக படியுங்கள்.. பிறகு மற்றதை பார்க்கலாம்..”
“தமிழ் டியூசன் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து விடேன் மாப்பிள்ளை..” பின்னாலிருந்து கேட்ட சத்தத்தில் சஸாக்கியின் உடல் விரைத்தது..




இவன் எதற்கு இங்கே வருகிறான்..? திரும்பாமல் நின்றாள்.. அவனது வருகை அவளுக்கு பிடிக்காததை போல் திவாகருக்கும் பிடிக்கவில்லை என்பதனை அவன் முகம் சொல்லியது..
“என்ன விசயம் மச்சான்..?” வரவேற்பு போல் இருந்த அவனது குரலின் பின்ணியில் “வராதே போடா” இருந்தது..
பாலகுமரன் அதனை உணர்ந்தானோ இல்லையோ.. இயல்பாக உள்ளே வந்து திவாகர் அருகே சேரை இழுத்து போட்டு நேரடியாக சஸாக்கியை பார்த்தபடி அமர்ந்தான்..
சஸாக்கியின் விழிகள் படபடத்தன.. இவனை பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.. இதோ இங்கேதான் பக்கத்தில்தான் இருக்கிறான்.. ஆனால் அவளால் பார்க்க முடியவில்லை.. எழுந்த ஏக்கத்தை மன அடி தள்ளி இழுத்து பூட்டினாள்..
“திடீரென எங்கே இந்த பக்கம் எனக் கேட்டேன்..?” திவாகர் குரலில் மறைக்காத எரிச்சல்..
“சும்மா மாப்பிள்ளை இந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.. பார்த்து ரொம்ப நாளாச்சே.. பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..” பாலகுமரனின் கண்கள் தயக்கமின்றி சஸாக்கியை துளைத்தன..
பனி நுனி கொண்ட கூர் ஊசி ஒன்று தொண்டையில் சொருகியது போல் உணர்ந்தாள் சஸாக்கி.. இவன் எதற்காக இப்படி பார்க்கிறான்..?
“நேற்று நைட்தானே ஒரு பார்ட்டியில் பார்த்தோம்.. அதற்குள் ரொம்ப நாளாகிவிட்டதா..?”
“ஓ.. ஆமாமில்ல.. பார்த்தோமோ.. மறந்துடுச்சு மாப்பிள்ளை..”




“நேற்று நைட் நடந்தது இன்று மறந்துடுச்சா..? சரிதான்.. நீ உருப்பட மாட்டாய்.. போதும் கிளம்பு மச்சான்..”
“நிறைய விசயங்கள் மறந்தாலும், சில விசயங்கள் மட்டும் மறக்க நினைத்தாலும் மறக்க முடியறதில்லை மாப்பிள்ளை.. அது ஏதோ ஒர் மயக்கம் போல் எப்போதும் நம்மை சூழ்ந்து கொள்கிறது..” பாலகுமரனின் வசனங்கள் சஸாக்கியினுள் வீணையின் ஸ்வரங்களை மீட்டியபடி இருக்க அவள் உடல் நடுங்கியது..
“மச்சான்.. உளறாமல் எழுந்து போ..” திவாகர் பல்லை கடித்தான்..
அவனது கோபத்தை அலட்சியப்படுத்தி…“ சசிரூபன் எப்படி இருக்கிறான் சஸாக்கி..?” நேரடியாகவே கேட்டான்.
திடுமென அவன் இப்படி தன்னிடமே பேசுவானென எதிர் பார்க்காத சஸாக்கி விழித்தாள்.. சட்டென விழியுயர்த்தி அவன் பார்வையை சந்தித்தாள்..
“பாலா.. கார்த்திகா உன்னிடம் ஏதோ பேச வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. நீ
அவளை போய் பார்..” திவாகர் வேறு வழியின்றி கார்த்திகாவின் பெயரை சொல்லி பாலகுமரனை அவனது மயக்கத்திலிருந்து மீட்க நினைத்தபோது,
“அவனை பற்றி உங்களுக்கு என்ன..?” படாரென கேட்டாள் சஸாக்கி பாலகுமரன் திகைத்தான்..
“அவன்.. என் மகன் சஸாக்கி.. அவனை பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா..?”
“இல்லை.. அவன் என் மகன் அவனை நான் மட்டுமே தெரிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு அதில் உரிமை இல்லை..”
“அட, கொஞ்ச நாள் முன்பு வரை அவனை எனக்கு கொடுக்க தயாராக இருந்தாயே..?”
“அது தவறுதான்.. சசிரூபன் என் மகன்.. அவன் எனக்கு வேண்டும்..”
“உன் மகன்..? இதனை என்னால் உடைத்துக் காட்ட முடியும்..? காட்டட்டுமா..?”
“செய்யுங்களேன் அதையும் பார்க்கிறேன்..” தைரியமாக நிமிர்ந்து நின்றாள்.. நேரடியாக அவன் கண்களை பார்த்தாள்..
“வேண்டாம் சஸாக்கி.. இந்த அசட்டு துணிச்சல் உனக்கு நல்லது இல்லை.. என்னிடம் மோதாதே..”
“மோதவில்லையே.. ஒதுங்கித்தானே நிற்கிறேன்.. என் பாதையில் குறுக்கிடாதீர்கள்..”
“உனக்கு பாதை போட்டு தரப் போவதே நான்தான் நானில்லாமல் உன்னால் எதுவுமே செய்ய முடியாது..”
“அதையும் பார்க்கலாம்..”
இருவரும் ஒருவரையொருவர் முறைத்து நின்றனர்.. பாலகுமரன் எரிச்சலோடு பார்வையை திருப்பியபோது திவாகர் சுவராஸ்யமாக இருவரையும் பார்த்து இருந்தான்..
இவனை.. இவ்வளவு நேரமாக குறுக்கே குறுக்கே பேசிக்கொண்டிருந்தான்.. இப்போது சண்டை போட ஆரம்பிக்கவும்.. சத்தமில்லாமல் அடங்கிவிட்டானே.. பாலகுமரன் திவாகரை முறைக்க அவன் என்னடா அவ்வளவுதானா..? என்ற ஏமாற்ற பார்வை பார்த்தான்..




ம்.. அடி.. அப்படித்தான் என இருவரையும் விசிலடித்து உற்சாகப்படுத்துபவன் போல் இருந்தான்..
“ம் மேலே சொல்லுங்க சஸாக்கி..” அமைதியாகி நின்றவளை தூண்டி விட்டான்..
டேபிள் அடியில் தன் ஷூக்காலால் அவன் காலை மிதித்து நசுக்கியபடி பாலகுமரன்.. “மேலே பேசாதே நீ போகலாம்..” என்றான்..
சஸாக்கி அசையாமல் நின்றாள்.. தனது நேர் பார்வையை பாலகுமரனின் முகத்தில் இருந்து நகற்றவுமில்லை.. அந்த நிமிர்வில் பாலகுமரனுக்கே ஆச்சரியம் தோன்றியது..
“ம்.. ரொம்ப முன்னேற்றம்தான்.. நான் உன்னை போ என்று சொன்னேன்..”
“நான் இங்கே இந்த சாரிடம்தான் வேலை பார்க்கிறேன்.. சார் அவர்தான் எனக்கான உத்தரவுகளை செல்லவேண்டும்..” திவாகர் பக்கம் கை காட்டினாள்..
பாலகுமரன் முகம் மாற தன் காலுக்கடியில் இருந்த திவாகரின் கால் மீதான அழுத்தத்தை அதிகரித்தான்.. அந்த தாக்குதலின் விளைவுகளை தன் முகத்தில் காட்டாமல் மறைத்தபடி “நீ நீங்க.. போகலாம்..” சஸாக்கி கொண்டு வந்த பைலை அவளிடமே கொடுத்தான் திவாகர்..




“ம்..” என்றபடி அதே அலட்சிய பார்வையோடே சஸாக்கி வெளியேறவும் தன் காலை பாலகுமரனிடமிருந்து விடுவித்துக் கொண்ட திவாகர் படபடவென அவன் முதுகில் அறைந்தான்..
“பாவி காலை உடைச்சிடுவ போல..”
முதுகில் விழுந்த அடிகளின் வேகம் பாலகுமரனின் முகத்தில் இல்லை.. அவன் பிரமிப்பு மாறா பார்வையுடன்.. சஸாக்கி வெளியேறிய பின் அசைந்தபடி இருந்த அறைக்கதவை பார்த்தபடி இருந்தான்..
“டேய் பாலா போதும்.. இனி இங்கே வராதே..” வாசலை பார்த்தபடி இருந்தவனின் முகத்தை இடித்து திருப்பியபடி சொன்ன திவாகருக்கு..
“ம்ஹூம் இனிமேல் தான்டா மாப்பிள்ளை அடிக்கடி இங்கே வருவேன்..” என பதில் சொன்னான் பாலகுமரன்..

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Rajalakshmi puducherry
Rajalakshmi puducherry
3 years ago

சரணடைந்தேன் சகியே நாவல் அருமை மேம் அடுத்த பகுதி plz

5
4
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!