karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 12

12

“இதோ இந்த முக்காலியில் உங்கள் கால்களை நீட்டி வைத்துக் கொள்ளுங்கள் தாத்தா..” மூட்டு வலியால் தரையில் அமர முடியாமல் மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பரமசிவத்திற்கு காலடியில் முக்காலியை கொண்டு வந்து போட்டதோடு, அவரது கால்களை முக்காலி மேல் தூக்கியும் வைத்தாள் ஆராத்யா..
“இப்படி நீட்டினாற் போல் வைத்துக் கொண்டால் மூட்டு மடங்கி வலிக்காது..” அக்கறை காட்டிய பேத்தியை தவிர்க்க முடியாமல் தவித்தார் பரமசிவம்..
அவர் இன்னமும் தன் மகளிடமோ, பேத்தியிடமோ நேருக்கு நேர் நின்று பேசவேயில்லை.. ஆவலுடன் அருகே வரும் மகளை பார்வையாலேயே தள்ளி நிற்க வைத்துக் கொண்டிருந்தார்.. இப்போது அன்புடன் கால் பற்றிக் கொண்டிருக்கும் பேத்தியை அவரால் ஒதுக்க முடியவில்லை..
“சரி.. சரி.. நீ போய் சாப்பிடு..” மெல்லிய குரலில் முணுமுணுத்தார் கவனமாக பேத்தியின் முகம் பார்ப்பதை தவிர்த்தார்..
“நீங்கள் பெரியவர்கள் முதலில் சாப்பிடுங்கள் தாத்தா.. பிறகு நான் சாப்பிடுகிறேன்..” பணிவையும், பாசத்தையும் ஒன்றாகக் கூட்டி தாத்தாவின் தலை மேல குவித்தாள் ஆராத்யா..
“உங்களுக்கு கோதுமை கஞ்சியா..? இதுதான் தினமும் சாப்பிடுவீர்களா தாத்தா..?” மேலே மேலே அவரை தன்னிடம் பேசத் தூண்டினாள்..
பரமசிவம் தனக்கு பதில் சொல்ல உதவிக்கு யாராவது வருவார்களா என அடிக்கண்ணால் சுற்றிலும் பார்த்தார்.. ம்ஹீம் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வேலையில் பிசியாக இருப்பது போலவும், இவர்கள் பேச்சைக் கவனிக்காதது போலவும் காட்டிக் கொண்டனர்..
“சுகர் இருக்கிறது.. காலையில் கஞ்சிதான்..” யாரும் தனக்கு உதவ வரமாட்டார்கள் எனத் தெரிந்து கொண்டு தானே பதிலளித்தார்..
“ஓ.. அது கஷ்டம்தான் தாத்தா.. இன்று ஒரு நாள் மட்டும் என்னோடு சேர்ந்து இட்லி சாப்பிடுகிறீர்களா..?” கொஞ்சலாய் தாத்தாவிடம் கேட்டாள்.
“இன்று காலை டிபன் இட்லி கிடையாது.. இதுதான்.. உனக்காகத்தான் எடுத்து வந்தேன்.. சாப்பிடு ஆராத்யா..” சொன்னபடி ஒரு தட்டோடு அங்கே வந்தான் ஆர்யன்..அவன் கொண்டு வந்த தட்டில் சிறுகுன்றாக பணியாரமும், பெரிய அடுக்காக போளியும் இருந்தன..




“நெய் அப்பமும், சர்க்கரை போளியும், சாப்பிடு ஆராத்யா..” அவள் முகத்தின் முன்பு தட்டை நீட்டினான்..
இவன் இப்போது திடீரென இங்கே ஏன் வந்தான் ஆராத்யா விழித்தாள்.. அவன் கொண்டு வந்து கொடுத்த டிபன் வேறு அவளுக்கு வெறுப்பேற்படுத்தியது..
அவள் கையைப் பிடித்து அதில் தட்டை வைத்தவன், அவளை பரமசிவத்தின் அருகிலிருந்து கொஞ்சம் தள்ளினான்..
“எனக்கும் தாத்தாவிற்கும் இடையே வர முயலாதே..” மெல்ல அவளுக்கு மட்டும் உதடசைத்தான்..
ஆராத்யா அந்த நொடியிலேயே ஆணித்தரமாக முடிவெடுத்தாள்.. இவன் சுயரூபத்தை வெளிக்காட்டி, தாத்தாவை விட்டு இவனை விலக்கியே ஆக வேண்டும்.
“அவர் எனக்கும் தாத்தா.. நான் அவரை விட்டு நகரமாட்டேன்..” பதிலுக்கு முணுமுணுத்துவிட்டு..
“தாத்தா நான் இங்கே உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தே சாப்பிடவா..?” செல்லமாய் கேட்டாள்..
பரமசிவம் மெல்ல தலையசைக்க உற்சாகமாக அவரருகே அமர்ந்து கொண்டவள், தட்டிலிருந்ததை பிய்த்து வாயில் வைத்தாள்.. நெய் மணக்கும் அப்பமும், தித்திப்பான போளியும் உண்ண ருசியாகத்தான் இருந்தது.. ஆனால் எவ்வளவு சாப்பிட முடியும்.. வகைக்கு ஒன்று சாப்பிட்டு விட்டு மேலே சாப்பிட முடியாமல் விழித்தாள்..
“சூடாக இன்னமும் இரண்டு அப்பம் கொண்டு வரச் சொல்லவா..?” கரிசனமாய் கேட்டபடி தாத்தாவின் மறுபக்கம் அமர்ந்து கொண்டான் ஆர்யன்..
“நான் இதையே இன்னமும் சாப்பிடவில்லை..” ஆராத்யா பல்லைக் கடித்தாள்..
“அதேதான்மா நானும் சொல்றேன்.. சூடு ஆறிவிட்டதால் உன்னால் சாப்பிட முடியவில்லை.. சூடாக நான்கு கொண்டு வர சொல்கிறேன்.. அம்மா சூடாக நான்கு அப்பம்..” அடுப்படிக்கு குரல் கொடுத்தான்..
“எதையும் ஒதுக்காமல் சாப்பிட்டாத்தான் உடம்பு இப்படி குச்சி போல் இல்லாமல், கொஞ்சம் பூசிணாற் போல் வருவாய்..” சொன்னபடி தாத்தாவின் முன்னால் கை நீட்டி அவள் கன்னத்தை செல்லமாக தட்ட வேறு செய்தான்.
இ.. இவன் எப்படி என்னைத் தொடலாம்.. ஆராத்யாவிற்கு பொங்கிய ஆத்திரத்தில் வார்த்தையே வரவில்லை.. எப்படி இவனை வைவது என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது பரமசிவம் நன்கு திரும்பி பேத்தியைப் பார்த்தார்.. மெலிந்து பூங்கொடி போல் இருந்தவள் அவர் கண்களுக்கு குச்சியாய் நோஞ்சான் போல் தெரிந்தாள்..
“உன் அப்பா உனக்கு சாப்பாடு போட மாட்டானா..? பலநாள் பட்டினி கிடந்தவள் போல் இருக்கிறாயே.. இங்காவது நல்லா சாப்பிடு.. வரலட்சுமி இன்னமும் இரண்டு போளியும், அப்பமும் கொண்டு வா..” அவர் சொல்லி வாய் மூடிய மறுநொடி அவள் தட்டில் மேலும் அப்பங்களும், போளிகளும் வைக்கப்பட்டன..
ஆராத்யா திணறினாள்.. விழித்தாள், தாத்தாவின் மறுபக்கம் அமர்ந்திருந்த ஆர்யன் ஏதோ வினை முடித்தவன் போல் பீறிட்ட புன்னகையை அடக்கியபடி தன் மூக்கை ஆட்காட்டி விரலால் வருடிக் கொண்டான்.. எப்படி.. என புருவம் உயர்த்தி இவளைக் கேட்டான்..
“நா.. நான் உள்ளே போய் சாப்பிடுகிறேன் தாத்தா..” தாத்தா வீட்டை விட்டு வெளியே போகும் வரை அவருடனேயே இருக்க வேண்டும் என்ற தன் முடிவை மாற்றிக் கொண்டு தட்டைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்துவிட்டாள்..
விறகு சொருகிய அடுப்பாய் அவள் மனம் கனன்று கொண்டிருந்தது.. இவன் சரியான போக்கிரிப் பயலாக இருக்கிறானே.. எல்லோரையும் மயக்கி நம்ப வைத்துக் கொண்டிருக்கிறானே.. இவனது வில்லன் வேலைகளை எப்படி வெளிக் கொண்டு வரப் போகிறேன்.. தன் தட்டில் இருந்த பதார்த்தங்களை யாரும் அறியாமல் அடுப்படியில் அவைகள் இருந்த பாத்திரங்களுக்குள் சேர்த்து விட்டு மூளையைக் கசக்கி கொண்டிருந்தாள் ஆராத்யா..
தாத்தாவிடம் அப்பாவுக்கு வேறு வசவு வாங்கிக் கொடுத்திருக்கிறான்.. தாத்தா அப்பாவைப் பற்றி பேசியதை ஆராத்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரென்று இவருக்கு என்ன தெரியும்..? இவர் பேரனுக்கு என்ன தெரியும்.. பொருமினாள்..
“என்ன வயிறு நிறைந்ததா..?” பின்வாசலில் நின்று கொண்டிருந்தவளருகே வந்து கேட்டான் ஆர்யன்..
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக் கொண்டு ஸ்டைலாக வாசல் நிலையில் சாய்ந்து கொண்டான்.. பெரிய ஹீரோன்னு நினைப்பு.. போiஸ பாரு.. ஆராத்யாவிற்கு அங்கே கிடந்த கல்லை எடுத்து அவன் மண்டையில் போடும் வெறி வந்தது..
“அதெப்படி என் அப்பாவைப் பற்றி அப்படிப் பேசலாம்..?” எகிறினாள்..
“நானா..? உன் அப்பாவையா..? என்ன பேசினேன்..?”
“நீதான்.. தாத்தாவை என் அப்பாவைப் பற்றிப் பேச தூண்டினாய்..”
“தாத்தாவிற்கு இருக்கும் கோபத்திற்கு உன் அப்பாவை இந்த வார்த்தையோடு விட்டாரே என்று பார்.. இளநீர் சீவும் வெறியோடு உன் அப்பாவை நினைப்பில் வைத்திருக்கிறார் அவர்..” அலட்சியமாக கையசைத்தான்..
“அவர் அதுபோல் கோபத்தில் இருந்தால், அதனைக் குறைக்க வழி பார்க்காமல் இப்படிப் பேசி மேலும் அவரைத் தூண்டி விடுவீர்களாக்கும்..”
“என்ன தேவைக்கு..? உன் அப்பா மேல் இருக்கும் கோபத்தை மாற்ற நான் ஏன் முயலவேண்டும்.. எனக்கே அதைவிட அதிக கோபம் இருக்கிறதே.. நான் எப்படி தாத்தாவை சமாதானம் செய்வேன்..”
“படித்தவர் போன்ற பேசுகிறீர்கள்..? தாத்தாதான் படிக்காதவர்.. அப்படிப் பேசுகிறார்.. நீங்களுமா..?”

“அடி மன உணர்வுகள், உரிமைகளுக்கு படித்தவர், படிக்காதவர் என்ற பேதம் கிடையாது.. உப்பு போட்டு சோறு சாப்பிடும் மனிதர்கள் எல்லோருக்கும் சூடு, சொரணை உண்டு.. அதிலும் எங்கள் குடும்பத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு..”
“அப்போது நான் யார் குடும்பம்..?”
ஆராத்யாவின் கேள்விக்கு ஆர்யன் அமைதியானன், அவன் முகம் இறுகியிருந்தது..
“நான் பரமசிவத்தின் குடும்பத்து ஆளில்லையா..? என் உடம்பில் அவர்கள் குடும்ப ரத்தம் ஓடவில்லையா..?”
“இல்லை..” ஆர்யன் கிட்டத்தட்ட உறுமினான்.. “நீ எங்கள் குடும்பமில்லை உன் உடம்பில் மிஸ்டர் மாதவன் மற்றும் அவரது மனைவி மிஸஸ். மனோரமாவின் ரத்தம்தான் ஓடுகிறது.. நீ ஒரு நாளும் எங்க குடும்பமாக ஆக முடியாது..” போய்விட்டான்..
அவனது ஆவேசத்தில் ஆராத்யா அயர்ந்து விட்டாள்.. ஹப்பா என்ன ருத்ரம்..? வீட்டுப்பெண் விரும்பியவனுக்காக வீட்டை விட்டு போவது இந்த அளவிற்கா இவர்களை பாதிக்கும்..?
“நான் உள்ளே வரலாமா தாத்தா..?” பரமசிவத்தின் அறை வாயிலில் நின்று கேட்டாள் ஆராத்யா..




ஆர்யன் அவ்வளவு உறுதியோடு சொல்லிச் சென்ற பிறகு, மெல்ல நடந்த சம்பவங்களை அசை போட்டபடி இருந்தவளுக்கு, தாத்தாவின் பரிவு.. தந்தையை திட்டும் வகையிலாவது அவரின் அக்கறை தனக்கான பாசம் என்றே நினைத்தாள்..
அந்த பாசத்தை மேலும் வெளிக் கொணராமல் முட்டுக்கட்டை போடுபவன் ஆர்யனே என்று நினைத்தாள்.. எனவே அவனில்லாத நேரத்தில் தாத்தாவோடு பேச எண்ணி, அவன் வெளியே போனதும் தாத்தாவின் அறைக்குள் வந்தாள்..
கையில் பெரிதாக ஏதோ ஓர் புத்தகம் போன்றதை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம், ஆராத்யாவின் சத்தம் கேட்டதும் வேகமாக அதனை மூடினார்.. அவரது தலையணைக்கடியில் அதனை வைத்தார்..
“என்ன விசயம்..?” கடினமான குரலில் கேட்டார்..
அவர் எதையோ மறைப்பதாக ஆராத்யாவிற்கு தோன்றிவிட்டது.. அந்த புத்தகத்தைப் பார்த்தாக வேண்டுமே.. கண்களைப் படபடத்தபடி மெல்ல தானாகவே அறைக்குள் வந்தாள்..
“சும்மாதான் தாத்தா.. உங்களைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கலாமென வந்தேன்..” செல்லமாய் பேசியபடி உரிமையாக தாத்தாவின் அருகே அமர்ந்து கொண்டாள்..
“இப்படியெல்லாம் நைச்சியமாகப் பேசி பாசம் போல் நடித்துக் கொண்டிருங்கள்.. பிறகு நானும் வந்து சேர்ந்து கொள்கிறேன்னு சொல்லி அனுப்பி வைத்தானா உன் அப்பன்..?”
தாத்தாவின் கேள்வி அவளுள் அமிலமாய் இறங்கியது.. தண்ணீருக்குள் அழுக்கப்பட்டவனின் மூச்சாய் தவித்தன அவள் உணர்வுகள்.. முகம் சிவந்து கண்கள் கலங்கியது..
“என் அப்பா எதற்கு அப்படி சொல்ல வேண்டும்..?” தழுதழுத்த குரலில் தாத்தாவைக் கேட்டாள்..
“என் சொத்துக்களுக்காக, பணம், நகைகளுக்காக, முன்பு பொண்டாட்டி மூலம் வாங்க முடியாத சீர்களை இப்போது பேத்தியைக் காட்டி வாங்கிக் கொள்ளலாமென நினைத்திருப்பானாயிருக்கும்..?”
தாத்தாவின் அநியாய குற்றச்சாட்டை விழி மூடி தனக்குள் ஜீரணித்தவள் தளர்வாய் எழுந்து அறைக்கு வெளியே நடந்தாள்.. வாசலருகே போனதும் நின்று திரும்பினாள்..
“தக்கலை பரமசிவம் குடும்பத்து ஆண்கள் பெண்ணோடு வரும் சீர்வரிசைகளை கணக்கு பார்ப்பார்களாயிருக்கம்.. சென்னை மாதவன் குடும்பத்து ஆண்கள் வீட்டுப் பெண்களை படிக்க வைத்து உயர்த்தி ஒரு உயர்ந்த நிலையில் உட்கார வைப்பவர்கள்.. பட்டிக்காட்டு காட்டான்கள் இல்லை.. மிகுந்த நாகரீகமானவர்கள்..” மிகத் தெளிவாக சொல்லிவிட்டு தணல் எரிந்த தாத்தாவின் முகத்தை பார்க்க விரும்பாதவள் போல் அறைக்கதவை அடித்து பூட்டிவிட்டு தங்கள் அறைக்கு வந்து விட்டாள்..
அன்று மதிய உணவின் போது தன்முன் இருந்த உணவிலிருந்து ஒரு கவளம் கூட வாயில் எடுத்து வைக்க முடியாமல் தவித்தாள்.. அறுசுவையுடன் தலைவாழை இலை நிறைய பரிமாறப்பட்டிருந்த அந்த உணவு அவளுக்கு ஏனோ நரகல்லைப் போல் தோன்றியது.. அப்படியே இலையை மூடிவிட்டு எழுந்து விட்டாள்..
எதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்யன் அவள் செய்கையை கவனித்து விட்டு யோசனையில் புருவம் சுருக்கினான்.

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!