Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 34

34

” அடப் பரவாயில்லை அக்கா .இந்த சின்ன வேலையெல்லாம் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா …? நீங்கள் மாடியில் உங்கள் அறையில் போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் ” புவனா கை கரண்டியை பிடுங்கியபடி கனகம் குறிப்பிட்ட சின்ன வேலை அன்றைய தினத்திற்கான சமையல் .

” இருக்கட்டும் கனகம் .நீயாக தனியாக இத்தனை பேருக்கு சமைப்பாயா ? நானும் இருக்கிறேன் ” புவனா மறுத்துக் கொண்டிருந்தாள் .

இவர்களது சண்டையை கடந்து மாடியேறினாள் கமலினி. அங்கே மாடியிலிருந்த நான்கு அறைகளும் அவர்கள் குடும்பத்தினருக்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த்து. மாஸ்டர் பெட்ரூம் அம்மா , அப்பாவிற்கு .இரு சிறிய பெட்ரூம்கள் அவளுக்கும் , அண்ணன் வெற்றிவேலனுக்கும் .இப்படி மாடி முழுவதும் அவர்களுக்கென்பது  கமலினி விபரம் அறிந்த நாள் முதலாய் அவர்கள் வீட்டு வழக்கமாகவே இருந்து வந்திருந்த்து .




வேலாயுதம் தொழில் நசிந்து வீடு குணசீலன் கைக்கு மாறிய மறுநாளே ஆயிரத்தெட்டு  ஓட்டை  காரணங்களை சொல்லி கனகம் மாடி முழுவதையும் தங்கள் குடும்பத்தினருக்கென எடுத்துக் கொண்டு பத்துக்கு பதினாறு சிறிய அறையை மட்டுமே வேலாயுதம் குடும்பத்தினருக்கென ஒதுக்கினாள் . கடந்த ஆறு வருடங்களாக கமலினி குடும்பம்  நீட்டினால் தடுக்கும் …நிமிர்ந்தால் இடிக்கும் அந்த இடுக்கு அறையில்தான் இருந்து வந்தனர் வெற்றிவேலன் இங்கே வந்தால் இரவு தங்குவது இல்லை .வெளியே நண்பர்களுடனோ லாட்ஜில் ரூம் எடுத்தோ தங்கி கொள்வான் .அந்நேரங்களில் தாய் தந்தையின் முகத்தில் காணப்படும் சொல்லொணா வேதனையில் கமலினி யின் மனம் வாடும்.

இதோ இன்று அப்பா அம்மா விற்கான அறையை திறந்து பார்த்துவிட்டு , வலப்புறம் இருந்த அண்ணனின் அறையையும் பார்த்துவிட்டு இடப்புறம் இருந்த அவளது அறைக்கு வந்தாள். இந்த அறை அவள் பதிமூன்று வயதில் பெரிய மனுஷி ஆனபோது அவளுக்கென அம்மாவும் அப்பாவும் புதிதாக வடிவமைத்து கட்டில் ,பீரோ, அலமாரி என பார்த்து பார்த்து அலங்கரித்து ஒதுக்கிக் கொடுத்த அறை .இரண்டே வருடங்களில் கனகத்தினால் அவளிடமிருந்து பிடுங்கப்பட்டு சங்கவியிடம்  கொடுக்கப்பட்டிருந்தது .இன்றோ இதோ அவளது அறை மீண்டும் அவளுக்கே…

மன நிறைவுடன் அறை நடுவே நின்று தன்னைத் தானே ஒரு சுற்று சுற்றியவள் தனது கட்டிலில் மெல்ல  சரிந்தாள். ஒரே வாரத்தில் தலைகீழாக மாறி விட்ட தன் வீட்டின் நிலைமையை அவளால் நம்ப முடியவில்லை. இதன் காரணம் மிகவும் சிறியது தான் .வேலாயுதம் மீண்டும் தொழில் பார்க்க ஆரம்பித்து விட்டார் .அந்த தொழிலில் இருந்து அவருக்கு மிகக் கணிசமான தொகை ஒன்று மாதாமாதம் வரும் என்று அறிந்ததும் குணசீலன் கனகத்தின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியது.

கமலினியின் மனது விக்னேஸ்வரனுக்கு தாவியது. இதன் ஆதி காரணம் அவன் தான் . தனக்கு புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுத் தருவதற்கு என அவன் வேலாயுதத்திற்கு நவீனமான புது நகை பட்டறை ஒன்றை தனது கடையில் மாடியிலேயே அமைத்துக் கொடுத்து இருந்தான். தினசரி அவரிடம் அங்கே தொழில் படித்துக் கொண்டிருந்தான்.

இதற்கென வேலாயுதத்திற்கு மாதாமாதம் ஒரு பெருந்தொகை அவனால் வழங்கப்பட்டது இதனை முதலில் வேலாயுதம் மறுத்தபோது அவர் கற்றுக்கொண்டிருந்த அரிய கலைக்கு விலை மதிப்பு கிடையாது. இதனை அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தார் என்பது அவருக்கே தெரியும் .அதனை அவன் மிகவும் எளிதாக அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறான். இதனை முன்னிட்டு இந்த தொகையை அவர் வாங்கிக் கொண்டே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான். கூடவே அவரிடம் தனது கற்றல்கள் முடிந்த பிறகு தேவா நகைகளுக்கு என அவருக்கு அவனது கடைக்கு அருகிலேயே ஒரு கடை ஆரம்பித்து கொடுக்கும் எண்ணத்தில் இருந்தான். இந்த விபரங்களை அவன் இங்கே வீட்டினர் அனைவரின் முன்பும் பகிர்ந்து கொண்டான்.

ஒரே வாரத்தில் தேவா நகைகளுக்கான ஸ்பெஷல் பட்டறை உருவாகிவிட வேலாயுதம் தினமும் அங்கே செல்லலானார். கூடவே அவருக்கான தனி கடைக்கான விபரங்களும் அவ்வப்போது அங்கே பேசப்பட இரண்டே நாட்களில் கனகம் வீட்டை பழைய மாதிரி கொண்டு வந்து விட்டாள். இந்த வீடு தன்னிடம் அடமானத்தில் இருக்கிறது என்பதனை குணசீலன் அடியோடு மறந்து போனார் .அண்ணன் தொழிலில் சம்பாதிக்க , தான் அரசாங்க வேலை செய்யும்  தம்பியாக… அண்ணனின் கவனிப்பில் இருக்கும் பழைய தம்பியாக நிமிடத்தில் மாறிப்போனார்.

அதெப்படி மனிதர்களால் இவ்வளவு இலகுவாக தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ள முடிகிறது என்று கமலிக்கு புரியவே இல்லை .அன்பும் அக்கறையும் பாசமுமாக மாறிப்போன சித்தியை அவள் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் .வேலாயுதத்திற்கு புவனாவிற்கு இந்த கனகமும் குணசீலனும் புதிதானவர்கள் அல்ல .ஆரம்பகாலத்தில் அவர்களுக்கு காட்சியளித்த  தம்பியும் தம்பி மனைவியும் தான் .எனவே இந்த மாற்றத்தை அவர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட தனது பருவ வயது முழுவதும் அராஜகமான சித்தி சித்தப்பாவையே பார்த்து வந்த கமலினிக்குத்தான்  இந்த திடீர் மாற்றத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.

” இப்போது உங்கள் வீடு பழைய மாதிரி ஆகிவிட்டது தானே கமலினி ? ” கூர் பார்வையோடு கேட்ட விஸ்வேஸ்வரனுக்கு பதிலின்றி தலைகுனிந்து மேஜையை கீறினாள் .இவன் என் குடும்ப உறவினர்களின் லட்சணங்களை முன்பே அறிந்திருக்கிறான் .இதனை கமலினியால்  முழுதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது குடும்ப அவலங்களை அவள் பிறரிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை .

 ” இதற்காகத்தான் இத்தனை ஏற்பாடுகளா ? ” 

விஸ்வேஸ்வரன் அவளை கூர்ந்தான் ” உனக்காகத்தானே என்று கேட்கிறாயா ? ” 

கமலினி பதிலின்றி அவனை பார்க்க தோள்களை குலுக்கினான். ” அந்த “தேவா”  வுக்காக .அதனை நான் கற்றுக் கொண்டு நகைகளை வடிவமைக்க ஆரம்பித்தால் எனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா ? அத்தோடு  …” அவனது கண்கள் மின்னின

இது கமலினிக்கும் தெரியும் .விஸ்வேஸ்வரன் இப்போது செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுகள் ஒருவகையில் அவனுக்கு இன்னொரு தொழிலுக்கான முதலீடுகள் .ஒரு தேர்ந்த பிசினஸ்மேன் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பற்றிக் கொள்வான் .அதைத்தான் இப்போது இவன் செய்து கொண்டிருக்கிறான். ஆனால்….

“அப்பாவிற்கு என தனியாக தொழில் ஆரம்பித்து கொடுப்பதன் காரணம் ? “

” எனது தொழில் கமலினி .இந்த தேவா கலையை அவர் வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கப் போவதில்லை .என்னிடமும் மிகவும் நம்பும் உறவினர் தவிர வேறு யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என உறுதி வாங்கிக் கொண்டு விட்டார் .இப்போது இதன் நுணுக்கங்களை தொடர்ந்து செய்வதற்கு நானும் அவரும் மட்டுமே இருக்கின்றோம் .உன் அப்பாவை நான் எப்படி வெளியில் விட முடியும் ? தேவையான முதலீடு அளித்து அவரது வேலையை நானே பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன் .இதுதான் முதல் காரணம் .அத்தோடு ….” அவன் பேச்சு நின்றது.கண்களில் கனவு மிதந்த்து.




விஸ்வேஸ்வரன் போன்ற ஒரு தேர்ந்த தொழிலதிபர் செய்யும் ஞாயமான வேலை இதுவென கமலினிக்கு தெரியும் .எனவேதான் நடந்து கொண்டிருக்கும் இந்த ஏற்பாடுகள் எதனையும் அவள் தன் பொருட்டே என  எண்ணி தடுக்காமல் அனுமதித்துக்கொண்டிருந்தாள். ஆனால் இவன் கொசுறு போல் பின்னாலேயே சொருகும் அந்த “அத்தோடு ” களுக்கு என்ன காரணம் இருக்கக்கூடும் ? அதனை தெளிவாக கேட்க அவள் விரும்பவில்லை.

” சில நாட்களிலேயே எங்கள் குடும்ப நிலைமையை தலைகீழாக மாற்றி விட்டீர்கள் சார் . இதற்கு நான் உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும் ” 

” நன்றியை உன் தந்தைக்கு ,  அவரது தொழில் திறமைக்கு , வேலை அர்ப்பணிப்பிற்கு சொல் கமலினி .அதுதான் இப்போது உங்களை இந்த நிலைமைக்கு மீட்டு கொண்டு வந்திருக்கிறது” 

எழுத்துக்கள் மாற்றமின்றி இதில் மறுப்பதற்கு கமலினிக்கு ஏதுமில்லை .தந்தையைப் பற்றிய சிறு பெருமையும் , கர்வமுமுமாக கமலினி இதனை லேசான தலை அசைப்போடு ஏற்றுக் கொண்டாள்.

” ஞாயமான பாராட்டுக்களை லேசாக தலை அசைத்து ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் லேசாக ராஜகுமாரி களின் சாயல் …” கவிதை பேசுவதுபோல் கனிந்து ஒலித்தது அவன் குரல்.

” யாரைச் சொல்கிறீர்கள் ? ”  கமலினி முறைக்க…

”  இந்த தேவா நகைகளை முகலாய சாம்ராஜ்ய ராஜகுமாரிகள் விரும்பி அணிந்தார்களாம் .அவர்களது ஊக்குவிப்பால் தான் முகலாயர்கள் காலத்தில் இந்த தேவா கலை மிகவும் பெரிய வளர்ச்சி அடைந்த தாம். அதுபோல் ஒரு ராஜகுமாரியை பற்றி பேசினேன் ..” குறும்பு மின்னியது அவன் கண்களில்.

” பெரிய ராஜ குமாரிகள்… அப்போதும் இப்போதும் எப்போதும் பெண்களுக்கு அடிமை வாழ்வுதான் ”  சலித்துக்கொண்ட கமலினியின் குரலில் தெரிந்த உண்மையோடு கூடவே விஸ்வேஸ்வரனின் நினைவை திசைதிருப்பும் எண்ணமும் இருந்தது.

” கமலி திடீரென்று ஏன்டா இத்தனை சலிப்பு ..? உங்கள் சித்தி ,  வீட்டில் உன்னை சரியாகத்தானே நடத்துகிறார்கள் ? உனக்கு…. உன் அம்மாவிற்கு்… உரிய மரியாதை….? ”  சிறு படபடப்போடு கேட்டான் விஸ்வேஸ்வரன்

இவனையா சற்று முன் இவன் தொழிலுக்காகவே என் தந்தைக்கு இந்த வேலையை ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறான் என்று நினைத்தேன். கமலினி யின் மன எண்ணங்கள் வெவ்வேறு உருவம் கொண்டு நர்த்தனமாடின. அவை விக்னேஸ்வரனை சுற்றியும் பிணைந்தும் வளைந்தும் நெளிந்தும் அவளுக்கு மன சோதனையை கொடுத்தன.

“இவ்வளவு அரிய தெரிந்து கொள்ள வேண்டிய கலை. இதனை நான் எத்தனையோ முறை கேட்டும் எனக்கு அப்பா சொல்லித் தரவில்லை .அண்ணனுக்கு என்றால் ஓகேவாம் . எனக்கென்றால்  வேண்டாம் .இது என்ன நியாயம் ? ” அம்மாவைப் பற்றி அப்பாவிடம் புகார் அளிக்கும் குழந்தையாக மாறினாள் .விஸ்வேஸ்வரனின் முகத்தில் புன்னகை.

 ” செய்வதற்கு கடினமான இந்த கலையை  தேவா கலைஞர்கள் அவரவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொல்லிக் கொடுப்பார்கள்  அதிலும் அந்த குடும்பத்து ஆண் பிள்ளைக்கு மட்டும்தானாம்.  ஏனெனில் பெண் பிள்ளைகள் திருமணம் முடித்து அடுத்தவர் வீட்டிற்கு செல்பவர்கள் .இதனால் தங்கள் குடும்ப கலை அடுத்த வீட்டிற்கு சென்று விடும் என்று பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த கலை நுணுக்கம் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் நம் விஷயத்தில் இதுபோல் ஒரு கவலைக்கு இடம் வேண்டாம் அங்கிள் . கமலினிக்கு சொல்லித் தருவதால் நீங்கள் கவலைப்படுவது போல் எதுவும் நடந்து விடாது என்று உன் அப்பாவிடம் சொல்லி விடவா கமலி ? ”  ஆரம்ப விளக்கத்தில் உயர்ந்திருந்த அவன் குரல் இறுதி கேள்வியின் போது கிசுகிசுத்து ரகசியமாக ஒலித்தது.

இந்தக் கேள்வியின் அர்த்தம் என்ன கமலினி விழித்தாள் .சை… இதென்ன இவனிடம் எதை பேசவும் பயமாக இருக்கிறதே… ஒவ்வொன்றிலும் ஏதாவது பொடி வைக்கிறான்.. சலித்தது அவளுக்கு.

” பெண்களை அடிமைகளாக , கைப்பாவைகளாக  முகலாயர்கள் காலத்தில்  இருந்து மட்டுமல்லாது இப்போது வரை அப்படித்தான் வைத்திருக்கிறார்கள் .நிறைய குடும்பங்களில் இதனை நான் கண்கூடாக பார்த்து வருகிறேன் .”குற்றச்சாட்டு பார்வையை அவன் மீது போட்டாள்

” யாரைச் சொல்கிறாய் கமலினி ? ” விஸ்வேஸ்வரன் புருவம் சுருக்கினான்.

” உங்களைத்தான் …உங்கள் குடும்பத்தைத்தான் …” கமலினி தெளிவாக பேசினாள்.

” நானா….?  நாங்களா …?  யாரை….? “

“உங்கள் அண்ணியை நீங்கள் அடிமை போல் அடைத்து வைத்து இருக்கிறீர்கள் .கைபொம்மையாக ஆட்டி வைத்திருக்கிறீர்கள் “

” அண்ணியையா …?அது அவர்களது நன்மைக்காக …அவர்கள் எங்கள் குடும்பத்தோடு , வீட்டோடு ஒன்றி பழக வேண்டும் என்பதற்காகவே தொழிலில் அவர்களுக்கு பங்குகள் கொடுத்து அவர்களை முதலாளியாக்கி உட்கார வைத்து அவர்கள் பொறுப்புகளை உணர வைத்துக்கொண்டிருக்கிறேன். அதில் சில நேரம் கடுமைகள் இருக்கலாம் .அதற்காக இவ்வளவு பெரிய பேச்சு பேசுவாயா ? “:




” நீங்கள் செய்ய நினைப்பவை எல்லாம் அவருக்கு பிடிக்க வேண்டும் இல்லையா ?அவரது விருப்பம் அறிந்து தானே நீங்கள் அவர்களுக்கான செயல்களைச் செய்ய வேண்டும் ? ,” 

” அது …வந்து …அப்படி அண்ணியின் விருப்பம் தான் என்ன ,? ” 

” அவர்கள் உங்களை விட்டு உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் தனக்கென ஒரு தனி பாதை தனி வாழ்வு அமைத்துக் கொண்டு வாழ நினைக்கிறார்கள் ” 

” காட் இது எப்படி சாத்தியமாகும் ? 

 அண்ணி என் அண்ணனின் மனைவி .எங்கள் வீட்டு மருமகள் .அவர்கள் எப்படி எங்கள் குடும்பத்தை விட்டு பிரிய நினைக்க முடியும் ? ” 

” அவர்கள் வேறு ஒருவரை விரும்புகிறார்கள் .அவரை திருமணம் செய்து கொண்டு அவரோடு வாழ நினைக்கிறார்கள் ” தயங்கி சொன்னாலும் தெளிவாக திருத்தமாக சொன்னாள் கமலினி .

” ஏய்ய்ய்ய்….” கத்தலாக உயர்ந்த விஸ்வேஸ்வரனின் குரல் அறைச்சுவற்றில் மோதி பல மடங்காகி அறையெங்கும் வியாபித்தது .அதே வேகத்தோடு வெறி கொண்ட வேங்கையாக  எழுந்தவன் அவளது குரல்வளையை பற்றியிருந்தான் . சற்றும் இரக்கமின்றி கழுத்தை நெரிக்கவும் தொடங்கினான் .

What’s your Reaction?
+1
25
+1
19
+1
1
+1
2
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Anathikk sariyai sonnai Kamali.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!