Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 8

                                               8

பச்சை போர்வை ஒன்றை நீல கூரையின்  அடியில் விரித்து வைத்துவிட்டு , வா வந்து என் மீது படுத்துக்கொள் என்று அழைப்பது போலிருந்த்து அந்த இயற்கை .சில்லென்று கன்னங்களை சிவக்க வைத்த குளிர் காற்றை ஆசையுடன் நாசி நிறைய இழுத்து நெஞ்சில் நிரப்பினாள் சத்யமித்ரா.

ஒரு வாரமாக அவள் நெஞ்சில் நிரம்பியிருந்த வெறுப்பும் , வெறுமையும் தானாகவே வெளியேற முகம் தாமரையாக மலர்ந்து கனிந்த்து .

ஓடிக்கொண்டிருந்த காரின் கண்ணாடியை நன்கு திறந்து வைத்துக்கொண்டாள் .அவள் மடியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்து ….

” ரொம்ப குளிருதில்லம்மா ….” இதமாக அவளுடன் ஒட்டிக்கொண்டு கேட்டான் சாந்தனு .

” ஆனால் ரொம்ப நல்லாயிருக்கில்ல செல்லம் ..” அவன் மூக்கோடு மூக்குரசி கன்னங்களுடன் கன்னங்களை தேய்த்தபடி கேட்டாள் .

” ஆமாம் ரொம்ப …ரொம்ப ….” மழலை பிதற்றலுடன் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான் .




குழந்தையை இறுக்கியபடி திரும்பிய சத்யமித்ராவின் கன்னங்கள் குளிரைத் தாண்டி மேலும் சிவந்தன. இவளது பார்வையை சந்தித்ததும் தன் பார்வையை சாலைக்கு திருப்பிக் கொண்டான் கிறிஸ்டியன் ் .அவன் முகம் முழுவதும் புன்னகையால் நிரம்பியிருந்த்து .இன்னதென்று கண்டுபிடிக்க முடியாதொரு ரகசியத்தை உள்ளடக்கிய புன்னகை .

கடைவாயில் இனிப்பை ஒதுக்கிக்கொண்டு எதிரிலிருப்பவர் அறியாமல் அதனை தனக்குள்ளேயே அனுபவித்து  ருசித்தபடி இருப்பானே …அவனின் முகத்தில் தோன்றும் ரசிப்பான மதுரப்புன்னகை .அடக்கிய புன்னகையில் அடர்ந்த மீசைக்கடியில் அழகாய் துடித்த அவன் இதழ்களில் படிந்த தன் பார்வையை வலுக்கட்டாயமாக மீட்டுக் கொண்டாள் .

சொல்லாமல் கொள்ளாமல் ஆள் காணாமல் போய்விட வேண்டியது .கூட இருக்கும் நேரமும் அதை செய்யாதே …இதை செய்யாதே ..அப்படி பேசாதே ..இப்படி இரு என கட்டளையிட்டுக் கொண்டிருப்பது …இப்போது ஆளை விழுங்குவது போல் ஒரு பார்வை .காரணமில்லாமல் ஒரு இளிப்பு ….அவனை உள்ளூற வசவுகளால் குளிப்பாட்டியபடி ….

,”கொஞ்சநேரம் முன்பு எண்ணெயில்லாத வாணலி அடுப்பில் காஞ்சிக்கிட்டு இருந்த்து மாதிரி இருந்த்து உங்க மூஞ்சு .
இப்போது என்ன சிரிப்பு …? ” என்றாள் .

” என்ன …? எண்ணையில்லாத வாணலியா …நல்ல உவமை சத்யா .அப்படியா என் முகம் இருந்த்து …? “

” ஆமாம் அப்படியேதான் .சுருண்டு …சிவந்து…சுருங்கி ….” மூக்கை சுளித்த அவள் பாவனையில் மேலும் சிரித்தான் .

” பதில் சொல்லிவிட்டு சிரியுங்கள் .எதற்கு ஒரு வாரமாக ஆளே கண்ணில் படவில்லை .பார்க்கும் போதெல்லாம்  என் மீது அப்படி காய்ந்தீர்கள் …? “

” வெய்யில் அல்லது தீ தானே காயும் சத்யா .நானா …உன் மீது காய்ந்தேனா ..? சாரி சத்யா .இது போல் சில ரிஸ்கியான் தமிழ் வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை .”

” பல் சுளுக்கும் அளவு இப்போது சிரிக்க தெரிகிறது .உங்கள் வீட்டு ஆட்கள் யாரும் இருந்தார்களானால் மட்டும் எதற்கு அவ்வளவு கோபமாக இருந்தீர்கள் ..? “

” இவளை அழைத்துப் போய் நம் இடங்களை சுற்றிக்காட்டு .நமது நிலைமையை இவளுக்கு தெளிவாக விளக்கிவிட்டு , இங்கேயெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லிக்கொடு ,”

அன்று காலையில் ஆடம்ஸின் இந்த உத்தரவிற்கு உடனடி பதிலளிக்கும் விதமாக வேகமாக எழுந்த சத்யமித்ராவின் கையை பின்னால் இழுத்து அவளை அமர வைத்தவன் …

” ஓ.கே டாடி …” என்றுவிட்டு …

” வாயைத் திறந்தாயானால் தலையில் ஓங்கி கொட்டு வைப்பேன் ….” என தாழ்ந்த குரலில் இவளை அதட்டினான் .

ஆடம்ஸின் உத்தரவுப்படி , அமர்த்தப்பட்ட டிரைவர் ஒரு வாரமாக சத்யமித்ராவிற்கும் , சாந்தனுவிற்கும் ஊர் சுற்றிக் காட்டவதாக கூறி அவர்களது எஸ்டேட் , தொழிற்கூடம் ..என அனைத்தையும் சுற்றிக் காட்டினான் . அவர்களது சொத்துக்களையும் , ஆடம்ஸ் குடும்பத்தினரின் மரியாதையையும் பார்த்த சத்யாவிற்கு பிரமிப்போடு மனதில் சிறு கசப்பும் தோன்றியது .

” உங்கள் அப்பா என்னை …என் ஏழ்மையை சொல்லாமல் சொல்லி குத்திக்காட்டுவார் .உங்கள் அத்தையும் , அத்தை பெண்களும் அதையே நேரிடையாக சொல்லி குத்துவார்கள் .நான் புத்த மகாத்மா மாதிரி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா …? “

புன்னகை மாறி வாய் விட்டு சிரித்தவன் ,இடது கையை ஸ்டியரிங்கை விட்டு எடுத்து அவளது உச்சந்தலையில் வைத்து அவள் தலையை உலுக்கி ” ஓ….பேபி ….” என்றான் கொஞ்சலாக …

” நான் ஒன்றும் பேபி இல்லை .இப்படி கொஞ்சி என்னை மறக்க வைக்க முயற்சிக்க வேண்டாம் ….” எவ்வளவு மிடுக்கேற்றியும்  தனது குரலில் வெளிப்பட்ட கொஞ்சலை கண்டு திகைத்தாள் சத்யா .

அதையே தனது பார்வையாக அவள் மேல் போட்டான் கிறிஸ்டியன் .பார்த்தாயா உன் குழந்தைத்தனத்தை என்பது போன்ற அவன் பார்வையை கண்டவள் …

” உங்களது செல்வத்தையும் , செல்வாக்கையும் ..எனக்கு காட்டத்தானே இந்த பயணம் .இதையெல்லாம் பார்த்து நான் மிரளவேண்டும் .உங்கள் குடும்பத்தற்கு தகுதியற்ற குடும்பம் எங்களுடையது என்று ஒத்துக்கொண்டு சாந்தனுவை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு என் ஊருக்கு ஓடிவிட வேண்டும் .அதற்குத்தானே இந்த ஏற்பாடுகளெல்லாம் ….” படபடத்தாள் .

” உனது கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை …” ஸ்டியரிங்கை ஒடித்து திருப்பிக் கிறிஸ்டியனின் முகத்தில் புன்னகை மறைந்து இறுக்கமிருந்த்து .

” உங்களோடு வர வேண்டிய அவசியமெல்லாம் எனக்கு இல்லை .காரை நிறுத்துங்கள் ….”




அவன் நிறுத்தமாட்டானென எண்ணியதற்கு மாறாக சடனென ப்ரேக்கை மிதித்தவன் , மடியில் சாந்தனுவுடன் முன்னால் போய் முட்டிக்கொள்ள போன சத்யமித்ராவின் தோள்களை ஒரு கையால் அழுந்த பிடித்து சீட்டில் சாய்த்து அமர வைத்துவிட்டு , அவள் மடியிலிருந்த சாந்தனுவை தன் கைகளில் தூக்கிக்கொண்டான் .

” ப்ரின்ஸ் நாம் உள்ளே போகலாமா …? ” என்றபடி கீழே இறங்கினான் .

போயேன் .நீ மட்டுமே போ ..நான் வரமாட்டேன் . என் பிள்ளை எப்படி உன் கூட வர்றான்னு பார்க்கிறேன் …கோபத்துடன் பொருமியபடி சீட்டில் அழுத்தமாக சாய்ந்து அமர்ந்து கொண்ட சத்யமித்ராவின் பார்வை எதிரே விழுந்த்தும் அவள் முகம் மாறியது .

கோபம் மறைந்து மென்மையானது முகம் .கண்கள் பரவசத்துடன் பனித்தன. கால்கள் தானாக காரை விட்டிறங்கின.

அங்கிருந்த காற்றில் தெய்வீகம் நிறைந்திருந்த்து . அந்த பூமியில் கால்களை இருந்த ஊன்றி எதிரே பார்த்தபோது மனக்கிலேசங்களும் , கவலைகளும் காணாமல் போய் மனம் லேசாகி மிதந்த்து .

குடையப்பட்ட பாறையில் பாறைக்கோவிலாக அமைந்திருந்த்து அந்த கோவில் . மிகப் பழமையானதாக இருந்த்து.

” ப்ரின்ஸ் இது முருகன் கோவில் நாம் உள்ளே போய் சாமி கும்பிடலாமா ..? ” கேட்டுக்கொண்டிருந்த கிறிஸ்டியனின் அருகில் போய் நின்றாள் .

அவள் விழிகள் ஆவலுடன் அந்த கோவிலை நோக்கியே குவிந்திருந்தன.

” இது முருகன் பாறா கோவில் .இதன் காலம் , கட்டுவித்தவர் என எந்த தகவலும் தெரியவில்லை. கற்கால மனிதர்கள் மலையை குடைந்து கட்டிய கோவில் என இந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள் .இங்கே மூலதெய்வம் உங்கள் தமிழ் கடவுள் முருகன் …” விரிந்திருந்த அவள் விழிகளை பார்த்தபடி விபரங்கள் கூறினான் கிறிஸ்டியன் .

கற்கால மனிதர்கள் கட்டியது …நாகரீகமே வளராத காலத்தில் இது போல் மலையை குடைந்து கட்டுவதென்றால் …இந்த கோவில் எவ்வளவு தொன்மையானதாக இருக்க வேண்டும் ..!!!சத்யமித்ராவின் உடல் சிலிர்க்க கைகள் தானாக தெய்வத்தை நோக்கி குவிந்தன.

தோளில் பின் செய்திருந்த சாலை பிய்த்து எறிந்துவிட்டுத்தான் மறுவேலை என்பது போல் அந்த மலை உச்சியில் காற்று வீசிக்கொண்டிருந்த்து .தெய்வத்தின் தொழுகைக்கு பின் ஒரு இனம் புரியாத அமைதி சத்யாவின் உள்ளத்தில் நிறைந்திருக்க அவள் ஆக்ரோசமான அந்த காற்றையும் ரசித்தபடி நிச்சலமாய் அமர்ந்திருந்தாள் .

” உன்னையும் , ப்ரின்ஸையும் நான்தான் எல்லா இடங்களுக்கும் அழைத்து போக எண்ணியிருந்தேன் சத்யா .ஆனால் ஒரு வாரமாக எனக்கு நிறைய வேலைகள்மா .அதுதான் உங்களோடு வர முடியவில்லை …” அங்குமிங்கும் ஓடத் துடித்த ப்ரின்ஸை அடக்கி மடியில் வைத்தபடி கூறினான் .

” ம் …பரவாயில்லை .நீங்கள் வராமலேயே உங்கள் பெயரையும் , புகழையும் நான் அறிந்து கொண்டாயிற்று …”

” திரும்பவும் அதே பேச்சா ….? அப்பா இந்த ஏற்பாடு பண்ண காரணம் ப்ரின்ஸை இங்கு நம்மிடம் வேலை செய்பவர்கள் எல்லோர் கண்ணிலும் காட்டத்தான் .எனது பேரன் …டேவிட்டின் மகன் என சொல்லாமல் சொல்லி அறிமுகம் செய்வதற்காகத்தான் .நீ நினைத்த காரணம் நிச்சயம் கிடையாது …..”

சென்ற இடங்களில் எல்லாம் நேரிடையான விசாரணை இல்லாவிட்டாலும் அன்பாய் …ஆர்வமாய் சாந்தனுவை வருடிய பார்வைகள் நினைவு வர கிறிஸ்டியனை மறுக்க முடியாமல் மௌனமானாள் சத்யமித்ரா .

” நானே உங்களை அழைத்து செல்ல ஆசைப்பட்டதன் காரணமும் எங்கள் பெருமைகளை காட்டுவதற்கு இல்லை .முடிந்தவரை உங்கள் இருவருடனும் இருக்க ஆசைப்பட்டேன் .அவ்வளவுதான் ….” சிறு எரிச்சல் தொனித்த கிறிஸ்டியனின் குரலில் திருப்தியோடு கொஞ்சம் படபடப்பும் வந்த்து சத்யமித்ராவிற்கு .

எங்களுடன் இருக்க ஆசைப்பட்ட காரணம் என்ன …???கேட்க துடித்த நாவினை அடக்கி ,

” நீங்கள் கோவிலுக்கெல்லாம் வருவீர்களா …? ” என்றாள் .

” இல்லை .வாராவாரம் சர்ச்சுக்கு போவேன் .இந்த கோவிலை அதன் பழமைக்காக எனக்கு பிடிக்கும் .மனம் அமைதியற்ற நேரங்களில் இங்கு வந்தால் ஏதோ நிம்மதி கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன் .அதனால் அடிக்கடி வருவேன் .இதனை உனக்கும் உணர்த்த  வேண்டுமென்றுதான் அழைத்திவந்தேன் ….” என்றவன் தனது வலது மடியில் இருந்த சாத்தனுவை இடப்புறம் மாற்றிக்கொண்டு அவளருகில் நெருங்கி அமர்ந்து கைகளை பற்றிக் கொண்டான் .

” சத்யா அம்மா மிகவும் வருந்துகிறார்கள் . ப்ரின்ஸ் அவர்களுடன் ஒட்டவே மாட்டேனென்கிறான் என்று ரொம்பவே வருத்தம் .ப்ரின்ஸை அம்மாவுடன் கொஞ்சம் நெருக்கமாக பழக வைக்க வேண்டும் .இது உன்னால் மட்டும்தான் முடியும் .உனக்கு அம்மாவின் நிலைமை தெரியுமல்லவா …? அதனால் ப்ளீஸ் ….” மென்மையாக தன் கை விரல்களை வருடியபடியிருந்த அவன் கைகளை பார்த்தவள் ….

” இன்னமும் உங்கள் அம்மா என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் . நான் ஏன் அவர்களுக்காக இதனை செய்ய வேண்டும் ….? ” என நிறுத்தியவள் , அவனது இறைஞ்சும் பார்வையைக் கண்டு …

” ஆனால் எனக்காக கோவிலுக்கெல்லாம் அழைத்து வந்திருக்கிறீர்கள் .அதனால் ….போனால் போகிறதென இதனை உங்களுக்காக முயற்சிக்கிறேன் ….” விளையாட்டு போல் கூறிக்கொண்டு அவன் கைகளிலிருந்து தன் விரல்களை விடுவித்துக் கொண்டாள் .

” என்ன அழகாக படபடக்கிறது …!!! ” என்றபடி  இதழில் பதிந்த அவனின் பார்வையை பார்த்து முறைத்த போது …




” நான் உன் தோடுகளை சொன்னேன் …..இந்த காற்றிற்கு உன்னைப் போலவே அழகாக படபடக்கிறது ” விரலால் காது தோட்டினை சுண்டியவன் சாந்தனுவை தூக்கிக்கொண்டு எழுந்து அவள்  எழ கை நீட்டினான் .

கண் சிவப்பு மறைந்து கன்னச் சிவப்பேற அவன் கைகளை பற்றி எழுந்தாள் சத்யமித்ரா .

மறுநாள் காலை ஜெபசீலியிடம் ப்ரின்ஸை யும் , சத்யமித்ராவையும் தானே அழைத்து செல்ல எண்ணி கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பிக் கொண்டிருந்த கிறிஸ்டியனின் அறைக்கதவை தட்டிவிட்டு வந்து நின்றாள் ரோசி.ஜெபசீலியை கவனிக்க வைத்திருக்கும் நர்ஸ் .

” அந்த புதிதாக வந்திருக்கிற மேடம் அம்மா ரூமில் என்ன செய்கிறாரென்று வந்து பாருங்கள் .அம்மா ரொம்ப கோபமாக இருக்கிறார் ….”

வேகமாக அம்மாவின் அறைக்கு வந்த கிறிஸ்டியனுக்கு பிடிவாதமாக நிற்கும் சத்யமித்ராவை கண்டதும் அப்படியே அறைந்தால் என்ன ….எனத் தோன்றியது .

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!