Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 6

                                                        

  6

அடர் சிவப்பு ஜாமின் மேல் வைக்கப்பட்ட வெண்ணிற சீஸ் , அழகானதொரு தோற்றத்தோடு உண்ணும் ஆர்வத்தையும் உண்டாக்க , குற்றவாளியாய் தனை நிறுத்தியிருக்கும் சுற்றிலுமுள்ள யாரையும் பார்க்க பிடிக்காது அந்த பிரட்டிலேயே பார்வையை பதித்திருந்தாள் சத்யமித்ரா .

” இதையெல்லாம் நீ பார்த்திருக்கவே மாட்டாயென நினைக்கிறேன் ….பாவம் உன் குடும்பமே மாத சம்பளம் வாங்குபவர் கள்தானே …” கரோலின் நான்கு பிரட்டுகளை ஒன்றாக அடுக்கி தனது வாய்க்குள் திணித்து கடித்துக்கொண்டே கூறினாள் .

” இதைப் போன்ற சுடிதார்களெல்லாம் நீ எங்கே வாங்குவாய் ….? ஏதாவது டிஸ்கவுன்ட் சேலிலா …? ” ஷீபாவின் குரலில் இகழ்ச்சி .




” அவள் அப்பாவின் ஏதாவது  போனஸ் பணத்தில் சேர்த்து வைத்து வாங்கியிருப்பாளாயிருக்கும் ….” ரேச்சல் .

” சத்யமித்ராவின் அப்பா மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார் .அம்மாவிற்கு எழுபதாயிரம் சம்பளம் . அண்ணி நாற்பதாயிரமும் சம்பளம் வாங்கினார் .சத்யாவின் படிப்பிற்கும்  எளிதாக நாற்பதினாயிரம் சம்பளம் கிடைக்கும் .அவள்தான் எளிமையாக அந்த கிராமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் …..” அவளை மட்டம் தட்டி கேலி பேசும் இவர்களின் மொழியை புரிந்து கொண்டு , சத்யா பதிலளிக்கு முன் கிறிஸ்டியன்   முந்தியிருந்தான் .

கண்களில் நன்றியுடன் சத்யா அவனை நோக்கியபோது நானிருக்கிறேனென இமைகளை மூடித்திறந்தான் .இந்த பார்வை பரிமாற்றத்தில் ரேச்சல் முகம் கடுத்தாள் .

” இந்த சுடிதாரின் விலை ஐய்யாயிரத்து ஐநூறு .உயர்தர காட்டன் .பார்க்க சாதாரணமாக தோன்றும் , ஆனால் அணிவதற்கு இலகுவான இது போன்ற உடைகளைத்தான் நான் எப்போதும் தேர்ந்தெடுப்பது .காடியாக பார்க்க பளபளவென இருக்கும் உடைகள் இருக்கும் நமது அழகையும் குறைத்து காட்டிவிடும் …”

சத்யா இதை சொன்னது ஷீபாவிற்காகவும் , ரேச்சலுக்காகவுமேதான் .ஏனெனில் அவர்கள் இருவரும்தான் வெல்வெட்டும் , ஸ்டோனும் தங்கள் உடைகளில் மின்ன , ஏதோ பார்ட்டிக்கு வந்திருப்பவர்கள் போன்ற உடையில் இருந்தனர் .

சொந்த தாய்மாமன் வீட்டிற்கு இரவு நேர டின்னருக்கு வருபவர்களுக்கு எதற்காக இந்த ஆடம்பர உடை …? இது சத்யாவின் எண்ணம் .

” அப்போது எங்கள் உடை அலட்டலாக இருக்கிறது என்கிறாயா …? ” ஷீபா நேரிடையாகவே மோத தயாரானாள் .

” சத்யா ..ப்ரின்ஸை கவனி …” இடையிட்ட கிறிஸ்டியனின் குரலை கவனியாமல் …

” நானில்லை ஷீபா மேடம் .நீங்கள்தான் உங்களை அப்படி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் ….” என்றாள் .

” பாருங்கள் மாமா ….இவள் எங்களை என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாளென ….? ” புகாரை தலை நிமிர்த்தாமல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வில்லியம்ஸிடம் கொண்டு சென்றாள் ஷீபா .

சாப்பிடும் அறையினுள் நுழைந்த்துமே கிறிஸ்டியன் அனைவருக்கும் சத்யமித்ராவையும் , சாந்தனுவையும் அறிமுகப்படுத்த முயன்றான் .

” வந்திருப்பவர்கள்  எவ்வளவு பெரியவர்களென இங்கே எல்லோருக்கும் தெரியும் கிறிஸ்டி .அறிமுகங்கள் தேவையில்லை .எல்லோரும் சாப்பிடலாம் ….” என அமர்ந்துவிட்டார் வில்லியம்ஸ் .

சற்று வாடிய முகத்துடன் கிறிஸ்டியும் அமர்ந்து கொண்டான் .

என் அறிமுகம்தான் தேவையில்லை .உங்கள் பேரன் அறிமுகமும் வேண்டாமா ….? சத்யாவிற்கு இருந்த வேகத்திற்கு இதனை சுள்ளென்று வில்லிம்ஸிடம் கேட்டிருப்பாள் .ஆனால் அவருடைய வயது அதை தடுத்தது .மேலும் இறுக்கமான , கடினமான அவரது தோற்றம் அவளது தைரியத்தை குறைத்தது .

கூடவே கிறிஸ்டியன் வேறு வேண்டாம் விட்டுவிடு என அவளிடம் பார்வையால் வேண்டிக் கொண்டிருந்தான் .

போனால் போகிறதென பேசாமல் இருந்தால் இவர்கள் இருக்க விட மாட்டார்கள் போலவே …பற்களை கடித்தவள் …

” ப்ரின்ஸிற்கு இரவு சாப்பிட  என்ன கொடுப்பாய் சத்யா …? அவனுக்கு பிரட் , சப்பாத்தி பிடிக்கவில்லை போலிருக்கிறதே ….” அவளது கவனத்தை மீண்டும் குழந்தையிடம் திருப்ப முயன்றான் .

” விடும்மா …அவர்கள் குடும்ப பழக்கம் அதுவாக இருக்கலாம் ….” நிதானமான வில்லியம்ஸின் பதிலில் கிறிஸ்டியனின் முயற்சியை மறந்து …..

” எதை சொல்கிறீர்கள் …? ” நேரடியாக வில்லியம்ஸையே பார்த்து கேட்டாள் .




” உங்களது இந்த  உடையை …..” வில்லியம்ஸின் கண்கள் சாந்தனுவின் உடையின் மீதிருந்த்து .

” இது வீட்டிற்குள் இருக்கும் போது மட்டும் அணிவதற்காக எடுத்தது …ஆனாலும் ஆயிரம் ருபாய் ….” பெருமையாக சொன்னாள்.

” ஆயிரம் ருபாய் ….ம் ….” பெரிதாக புருவம் உயர்த்தியவர் …

” இதனை எடுத்துக் கொடுத்தது யார் ….? ” நிதானமாக கேட்டார் .

குழம்பிய சத்யமித்ரா ” ஏன் …நான்தான் எடுத்துக் கொடுத்தேன் .என்னை போல நான் குழந்தைக்கு எளிமையை பார்ப்பதில்லை .அவனுக்கு எல்லாமே விலையுயர்ந்த்தாக , நல்லதாகத்தான் இதுவரை எடுத்து வந்திருக்கிறேன் ….” என்றாள் .

” இந்த ஆயிரம் ருபாய் இரவு உடை எங்களுக்கு ஒரு மேட்டரில்லை .அதை விடு இதை அவனுக்கு எடுத்து கொடுத்த நீ யார். ….? ” கூர்மையாக வந்த்து வில்லிம்ஸின் கேள்வி .

” நான் அவனுடைய அம்மா ….” தயங்காமல் சொன்னாள் .

” அவனுடைய அப்பா யார் ….அப்பாவை அவனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறாயா ..?  “சப்பாத்தியை முடித்துவிட்டு  நிதானமாக வாழைப்பழத்தை உரித்தபடி கேட்டார் .

படபடத்துக் கொண்டிருந்த சத்யா அமைதியானாள் .ஓரக்கண்ணால் கிறிஸ்டியனை பார்க்க அவன் இதற்குத்தான் பேசாமலிருக்க சொன்னேன் என்பது போல் பார்த்தான் .

” உன்னுடைய நாற்பதாயிரம் ருபாய் வருமானம் , உங்களது சொத்துக்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீ அந்த பட்டிக்காட்டில் போய் ஏன் ஒளிந்து கொண்டிருந்தாய் ….? ” வில்லியம்ஸ் எழுந்து போய் கை கழுவினார் .

டவலால் நாசுக்காக உதட்டை துடைத்தபடி ” சொல்லும்மா …” என்க …

” நமது சொத்துக்கள் அண்ணா .இந்த குழந்தை வளர்ந்து ஓரளவு பெரியவனானதும் , அவனை வைத்து நம் சொத்துக்களை அடைய இவள் போட்ட திட்டம் .அதனால்தான் அவனுடைய சொந்த அப்பா, அம்மாவை இவனுக்கு காட்டாமல் தானே கஷ்டப்பட்டு வளர்ப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள் .குழந்தையையும் அதனால்தான் நம் கண்ணில் காட்டவில்லை ….”  கரோலின் .

சத்யாவிற்கு புரிய வேண்டுமென்றோ என்னவோ …கரோலின் ஒவ்வொரு மலையாள வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி கூறினாள் .

இப்போது பேசினால் தவறாகத்தான் பேசிவிடுவோம் ….சத்யா உதடுகளை மடித்து அழுத்தி கடித்துக்கொண்டாள் .சட்டென எழுந்தவள் சத்யா என்ற கிறிஸ்டியனின் அழைப்பையும் மீறி சாந்தனுவை தூக்கிக் கொண்டு வெளியேறி தனக்கான அறைக்குள் முடங்கிக்கொண்டாள் .

” உன்னை விட பெரியவர்களிடம் இப்படித்தான் மரியாதையில்லாமல் பேசுவாயா …? ” கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த கிறிஸ்டியன்  கோபமாக கேட்ட போது இவனை அப்படியே அறைந்தால் என்ன …என்று அவளுக்கு தோன்றியது .

” அவர்கள் எப்படி பேசினார்கள் ..? நீங்களும் கேட்டுக்கொண்டுதானே இருந்தீர்கள் ….? ” கோபம் கொப்பளிக்க கேட்டாள் .

” அவர்களெல்லோரும் வேதனையில் இருப்பவர்கள் .பெரியவர்கள் நாம்தான் பொறுத்து போக வேண்டும் …,”

வேதனை அவர்களுக்கு மட்டும்தானா …? எனக்கில்லையா ….? “

” சத்யா நான் உன்னையும் , ப்ரின்சையும் நமது குடும்பத்தோடு சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் .நீ இப்படி எதையாவது பேசி அதை கெடுத்துவிடாதே …”

” ப்ரின்ஸ் சரி .நான் எதற்கு உங்கள் குடும்பத்திற்கு …? உங்கள் வீட்டு பிள்ளையை வாங்கிக்கொண்டு சீக்கிரமாக என்னை விடுவித்து விடுங்கள் ….நான் என் பாதையை பார்த்து போய் விடுகிறேன் .”

கிறிஸ்டியன் ஒரு நிமிடம் பேச்சின்றி திகைத்தாற் போல் நின்றான் .பிறகு மெல்ல தொண்டையை செருமிக் ்கொண்டு …

” அவர்கள் பேச்சு உன்னை நிறைய பாதித்துவிட்டது என நினைக்கிறேன் .நாம இப்போது எதுவும் பேச வேண்டாம் .நாளை பேசலாம் …”

பிறகும் ஏதோ பேச முயன்ற சத்யாவிற்கு முதுகு காட்டி திரும்பிக்கொண்டு , தான் வரும்போது கையில் கொண்டுவந்து வைத்த டிரேயை மூடியிருந்த தட்டை திறந்தான் .

” இதில் ப்ரின்ஸிற்கு பால்சாதமும் , உனக்கு சப்பாத்தியும் இருக்கிறது ்இரண்டு பேரும் கீழே சரியாக சாப்பிடவில்லையே .இப்போது நன்றாக சாப்பிட்டு விட்டு படுத்து உறங்குங்கள் ….”

” பதில் சொல்ல முடியவில்லையென்றால் இப்படி பாதியில் விட்டு விட்டு போய்விடுவீர்களா …? “

” பதில் சொல்ல முடியாமலில்லை .நன்றாக சொல்வேன் .ஆனால் இங்கே இவனை பார் .நாமிருவரும் சண்டை போடுவதாக நினைத்து பயந்து கொண்டு இருக்கிறான் ….நாம் நமது வாக்குவாதங்களை இவனில்லாத பொழுதுகளில் வைத்துக் கொள்ளலாம் ….ப்ரின்ஸ் பை .குட்நைட் ….” என்றவன் வெளியே நடந்தான் .

பின்னாலேயே போய் அறைக்கதவை பூட்டியவளிடம் ” கோபத்தில் சாப்பிடாமல் இருந்து விடாதே .என்னோடு சண்டை போடுவதற்காவது தெம்பு வேண்டும் பார் ….” என்றவன் அவள் முறைக்க தொடங்கவும் பளிச்சென சிரித்து குட்நைட் என்றுவிட்டு போனான் .

இவ்வளவு நேரமாக அவனது கோப முக பாவனைகள் மறந்து போய் இந்த சிரிப்பு மட்டும் சத்யமித்ராவின் மனதில் ஒட்டிக்கொண்டது .

பல்வேறு குழப்பங்களுடன் அரை குறை உறக்கத்துடன் படுக்கையில் வெகு நேரம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்த சத்யாவிற்கு அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட எழுந்து கொண்டாள் .நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாந்தனுவின் தலையை வருடி நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தாள் .

சன்னல் ஸ்கிரீனை விலக்கி பார்த்த போது வானம் இனித்தான் விடியப்போகிறேனென அறிவித்தபடி மெல்ல கருமையிழந்து கொண்டிருந்த்து . இருளும் , ஒளியும் கலந்த அந்த ஏகாந்த சூழல் மனதிற்கு புத்துணர்வை அளிக்க , முகத்தை கழுவிக்கொண்டு கீழேயிருந்த தோட்டத்திற்கு செல்வதற்காக அறையை விட்டு வெளியே வந்தாள் .

சாந்தனு விழித்துக் கொள்வானோ …வெளியே வந்த்தும் ….தயங்கி நின்ற போது அந்த ஹாலின் கடைசியில் இருந்த பால்கனி பார்வையில் பட ஆவலுடன் அதன் கண்ணாடி கதவை திறந்தபடி அதனுள் நுழைந்தாள் .அங்கிருந்த சூழல் சத்யமித்ராவிற்கு இன்பமாக மூச்சடைக்க வைத்தது .

அந்த பால்கனியே புல்தரை , சுற்றிலும் தொட்டிகளில் விதம் விதமான பூக்கள் என ஒரு மினி தோட்டமாக இருந்த்து .எதிரே வரிசையில் சென்ற மலைத்தொடர்களும் , மலையை மங்கச்செய்து பரவியிருந்த பனிப்படலங்களும் ….கீழே தோட்டத்தில் மலர்ந்திருந்த எண்ணற்ற பூக்களுமாக ஏதோ தோவலோகத்தில் இருப்பதை போன்ற உணர்வினை அவளுக்கு அளித்தது .




இப்போது சூடாக ஒரு டீ  குடித்தால் நன்றாக இருக்கும் .ஆனால் அதற்கு எங்கே போவது …?…ஆசையுடன் நினைத்தபடி இரண்டு கைகளையும் தேய்த்து குளிருக்கு இதமாக கன்னங்களில் வைத்துக்கொண்டாள் .

” என்ன ஒரு அழகான இடம் .இதைப்போன்ற இடம் உலகத்தில் வேறு எங்கும் இருக்காது ….,” மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள் .

” ஆமாம் சத்யா .இந்த வாகமண் ஆசியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகறது .நேசனல் ஜியாகிரபி டிராவலர் பத்திரிக்கை இந்தியாவில் பார்க்க வேண்டிய ஐம்பது முக்கிய இடங்களல் ஒன்றாக இதனையும் குறிப்பட்டுள்ளது ….” தகவல்களை வாரி வழங்கியபடி வந்து நின்றான் கிறிஸ்டியன் .

” ம் …உண்மைதான் நம் நாட்டில் நிச்சயமாக பார்க்க வேண்டிய இடம் இது ….” சுற்றிலுமிருந்த இயற்கையிலிலுந்து கண்களை எடுக்க முடியாமல் , விழி விரித்து பார்த்தபடி சொன்னாள்.

” இதனை இந்த சூடான டீயுடன் ரசிக்கலாமே …” டீ கோப்பையை நீட்டினான் .

” இப்போதுதான் ஒரு டீ குடித்தால் நன்றாயிருக்குமென நினைத்தேன் ” டீயை வாங்கிக் கொண்டாள் .

” நீ நினைத்தாய் .நான் செயல்படுத்தி விட்டேன் …” புன்னகைத்தான் .

” தேங்க்ஸ் .நான் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லையே நீங்கள் …? “

” என்ன கேட்டாய் …? “

” அன்று எங்கள் வீட்டிற்கு வந்த போது தமிழே தெரியாதே உங்களுக்கு .தமிழில் பேசியதற்காக மச்சானை …ஐ மீன் உங்கள் அண்ணாவை எவ்வளவு கோபித்துக் கொண்டீர்கள் .இப்போது எப்படி இவ்வளவு அழகாக தமிழ். பேசுகிறீர.கள்..? “

” கற்றுக் கொண்டேன் சத்யா .ஒரு முக்கியமான காரியத்திற்காக கற்றுக் கொண்டேன் ….” அவன் விழிகள் சத்யாவை ஊடுறுவின.

” ஆனால் அப்போது உங்கள் அண்ணன் தமிழில் பேசியதே உங்களுக்கு பிடிக்கவில்லையே .பறகு 
நீங்கள் எப்படி …? “

” அப்போது பிடிக்கவில்லை . பிறகு பிடித்துவிட்டது …” அவன் விழகள் அவள் முகத்தை விட்டு அகலவில்லை .

அன்று பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்திருந்த தனது அண்ணனை பார்க்கவென்று வந்திருந்தான் கிறிஸ்டியன் .

சங்கமித்ராவிற்கும் , டேவிட்டிற்கும் திருமணம் முடித்து வைத்து , அவர்களை தாங்கள் இருந்த தெருவிற்கு பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் குடியமர்த்தி இருந்தனர் சத்யாவின் பெற்றோர்.

அக்காவை பார்க்கவென்று வந்த சத்யமித்ராவின் காதுகளில் கோபமாக மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு ஆண்குரல் விழுந்த்து .அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த டேவிட்டின் குரல் மிக தாழ்ந்து ஒலித்ததால் , வந்திருப்பது டேவிட்டின் வீட்டாள்கள் என உணர்ந்து கொண்ட சத்யமித்ரா , உள்ளே போவதா …வேண்டாமா …என குழம்பியபடி வாசலிலேயே நின்றாள் .

நேரம் செல்ல செல்ல வந்திருந்த ஆணின் குரல் உயர்ந்து கொண்டே செல்ல , டேவிட்டின் குரல் தேய்ந்த்து .அதில் லேசான குற்றவுணர்வும் கோடிட ஆரம்பிக்கவும் … சத்யாவினால் தாங்க முடியவில்லை .லேசாக உள்ளே எட்டிப் பார்க்க வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவன் ஒரு இளைஞன் என தெரிந்து கொண்டவளுக்கு பெரியவர்களை எதிர்த்து பேசவேண்டுமா என்ற தயக்கம் மறைந்த்து .

” அக்கா ….” என சத்தமாக அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் .

” மித்ரா பக்கத்து வீட்டு ஆன்ட்டி ஏதோ ஹெல்ப் கேட்டாங்கன்னு அங்கே போயிருக்கிறாள் சத்யா .இது கிறிஸ்டியன் என் தம்பி .கிறிஸ்டி இது சத்யமித்ரா .மித்ராவோட சிஸ்டர் ….”

அண்ணனின் அறிமுகத்திற்கு விருப்பமின்றி தலையை திருப்பிக்கொண்டான் அந்த கிறிஸ்டியன் .

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!