pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 14

14

சாத்தப்படும் கதவுகளுக்குப் பின்னாலும்

துடித்துக் கொண்டிருக்கலாம் சில இதயங்கள்,

அவையும்

ரத்தநாளங்களால் செய்யப்பட்டவைதான் ,

நிராகரிப்பின் பெருவலியை 

தின்று ஜீரணிக்க 

முயன்று கொண்டிருப்பவை அவை .




” சந்திரசேகரை உனக்காகத்தான் வரச் சொல்லியிருந்தேன் ஏஞ்சல் ”  ரிஷிதரனின் விளக்கத்திற்கு தலை உயர்த்தாமல் குனிந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி.

” உன்னுடைய படிப்பு விபரம் நான் பேசிவிட்டேன். நீ இன்னமும் இரண்டு நாட்களில் திருச்சியில் இருக்கும் அவருடைய கோச்சிங் சென்டரில் சேர்ந்து கொள்ளலாம். சென்டரிலேயே தங்கும் வசதியும் இருக்கிறது. எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து விட்டேன் .நீ கிளம்புகிறாயா ? ” 

ரிஷிதரனின் இந்த ஏற்பாடு தேவயானி எதிர்பார்த்ததுதான். என்று இந்த வேலை நீ செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்று முகம் சுழித்தானோ அன்றே இதைப்போல ஒரு எதிர்வினையை அவனிடமிருந்து எதிர்பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் .ரிஷிதரன் இதனை செய்வது முழுக்க முழுக்க தனது எதிர்காலத்திற்காக தான் என்பதில் தேவயானிக்கு எந்த சந்தேகமும் இல்லை .ஆனால் இப்போது இதனை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது.




” இல்லை சார் அது முடியாது ” அழுத்தமாக தனது மறுப்பை சொன்னாள்

” ஏன் …? ஏன் முடியாது ? “படபடத்தான் ரிஷிதரன்.

” எனக்கு இப்போது படிப்பதில் சுவாரஸ்யம் போய்விட்டது ” விட்டேத்தியாக பதில் சொன்னாள் தேவயானி.

” உளறாதே தேவயானி ”  அதட்டலாக அவன் குரல் ஒலிக்க இரு விழிகளையும் அகலத் திறந்து அவனைப் பார்த்து வியந்தாள் அவள்.

” என் பெயர் உங்களுக்கு தெரியுமா சார் ?  யார் சொன்னார்கள் ? ”  அளவுக்கு அதிகமாக ஆச்சரியப்பட்டாள் .

பெரும் சலிப்பு தெரிந்தது அவனிடம் .” இப்போது உன் பெயர் முக்கியமில்லை .நான் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் தான் முக்கியம் .பேச்சை மாற்றாதே .ஏன் படிக்க மாட்டேன் என்கிறாய் ? ” 

” முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கும்போது பேச்சை மாற்றும் உத்தியை நான் சமீபத்தில் தான் சார் ஒருவரிடமிருந்து கற்றுக்கொண்டேன் ” குறும்பாய் பேசியவளை வெறித்துப் பார்த்தான்.

” ஏன் தேவயானி நான் சொல்கிறேன் என்பதினாலா ?  படிப்பு முக்கியம் இல்லையா ? ” இப்போது தயவாய் கேட்டான்.




” எனக்கு எது நன்மை தருமோ அதனை தயங்காமல் ஏற்றுக் கொள்வேன் சார் .யாருக்காகவும் தவிர்க்க பார்க்க மாட்டேன் ” 

” இந்தப் படிப்பு உனக்கு தேவையான விஷயம் தானே ?நன்மை தரக்கூடியது தானே? ” 

” ஆமாம்.  ஆனால் தற்சமயத்துக்கு என் படிப்பை விட வேறு அத்தியாவசியங்கள் எனக்கு இருக்கின்றன. அவற்றை என்னால் தவிர்க்க முடியாது ” 

” அது என்ன தேவயானி ? ” 

” என் குடும்ப விஷயங்களை நான் அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதில்லை ” முகத்தில் அடித்தாற்  போல் வந்த இந்த பதிலில் ரிஷிதரனின் முகம் மிகுந்த சோர்வை காட்டியது. பதிலேதும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.

அவன் காயங்களுக்கு மருந்து தடவி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்த தேவயானி தளர்ந்திருந்த அவன் முகத்தைப் பார்த்து கொஞ்சம் இரக்கம் கொண்டாள்.

” சந்திரசேகர் சாருக்கு உங்களிடம் சரியான அர்ச்சனை போல. வெளியே வரும்போது அவர் முகம் விளக்கெண்ணை குடித்தது போல் இருந்தது ” மெல்லிய புன்னகையுடன் வேறு  பேசி அவன் மனக்கசப்பை மாற்ற  முயன்றாள்.

கொஞ்சமும் மாறாத முகத்துடன் மெல்ல தலையசைத்தான். ”  எங்கள் இருவருக்கும் இடையே வரும் வழக்கமான பிரச்சனைதான் ” அவள் முகம் பார்க்காமல் ஜன்னல்வழியாக அசைந்த மரங்களை பார்த்தபடி பேசினான்.

” அப்படி உங்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை சார்  ? ” யோசிக்காமல் டக்கென்று கேட்டுவிட்டு கேள்வி முடிவில் நாக்கை கடித்தாள்.

ரிஷிதரனின் பார்வை இப்போது அவள் முகத்திற்கு வந்திருந்தது .மெல்லிய புன்னகை அவன் கண்களில் தெரிந்தது .” என் குடும்ப விஷயம் ,  என் தொழில் விஷயம் இவைகளை நான் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வது இல்லை ” சற்று முந்தைய அவளைப்போலவே பேசி முடித்துவிட்டு நன்றாகவே இதழ் விரித்து புன்னகைத்தான்.

தேவயானி இதழ்களை கடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள் .இதனை  அவள் எதிர் பார்த்திருக்க வேண்டும் .தன்னைத்தானே நொந்தபடி இருந்தவளின் முகத்தின் முன்னால் இருவிரலால் சொடுக்கிட்டான் ரிஷிதரன்.

” இப்படி எல்லாம் மனம் போனபடி பேசி அக்கறை உள்ளவர்களை காயப்படுத்தும் பழக்கம் எனக்கு கிடையாது ஏஞ்சல்.  சில தொழில் விபரங்களில் என்னிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்ற பணி சந்திரசேகரிடம் என் வீட்டினரால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது .அதற்காக அலைந்து கொண்டிருக்கிறார் . எனக்கு பிடிக்காத விஷயம் இது . அதனால்

நான் கையெழுத்திடாமல் அவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறேன் .இதுதான் எங்கள் இருவருக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சனை ” 




ஒளிக்காமல் தங்கள் பிரச்சினைகளை கூறியவனை வியப்பாய் பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டாள் தேவயானி. இதழ்களையும் மடித்து வைத்துக் கொண்டாள் . ரிஷிதரனின் பார்வை உள் மடங்கிய அவள் இதழ்களில் நிலைத்தது.

” சரிதான் நான் சொன்னேன் என்பதற்காக நீயும் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது தானே  ” சொல்லிவிட்டு பெருமூச்சு ஒன்று விட்டுக்கொண்டான் ரிஷிதரன்.

வந்த சிரிப்பை மறைத்துக் கொண்ட தேவயானி ” தொழிலுக்காக கையெழுத்து கேட்டு அலைபவரை அலைகழிப்பது என்ன நியாயம் ? ” என்றாள்

” பெரிய நியாயவாதி தான். கையில் தராசு தட்டு இல்லாதது ஒன்றுதான் குறை ” அவள் கேட்ட  நியாயத்திற்கு எரிச்சலோடு ஒரு முணுமுணுப்பை தந்துவிட்டு சாய்ந்து படுக்கையில் சரிந்தான்.

”  நான் கொஞ்சம் தூங்குகிறேன் ” கண்களை மூடிக்கொண்டான்.

காயங்கள் அழுந்தாத  அளவு அவன் கை கால்களை சரி செய்துவிட்டு தேவயானி வெளியேறினாள்.  ரிஷிதரனின் கோபத்தை அவள் உணர்ந்திருந்தாலும் அதற்கு பதில் அளிக்கவும் சமாதானம் சொல்லவும் அவள் தயாராக இல்லை. நான் இப்படித்தான் …என்வழி என்னுடையதுதான் என்று தலை நிமிர்த்தி கர்வமாக தனக்குள் சொல்லிக் கொண்டாள்.




” ஏன் அக்கா படிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள்  ? ” கேள்வியோடு வந்து நின்ற மருதாணியை ஆச்சரியமாக பார்த்தாள் தேவயானி.

” மருதாணி உன்னிடம் தூது அனுப்பினாரா  அவர் ? “

” அண்ணன் உங்களுக்கு நல்லதுதானே செய்கிறார் அக்கா. நீங்கள் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் ? ” 

” அதெல்லாம் உனக்கு புரியாது மருதாணி .விடு நான் இந்த வருடம் படிக்க வில்லை அடுத்த வருடம் படித்துக் கொள்கிறேன் ” 




” ஐயோ ஒரு வருடம் வீணாக்க போகிறீர்களா  ? ஏன் அக்கா ? படிப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது .படிப்பு தான் முக்கியம் .அதற்காக எவ்வளவு கஷ்டம் வேண்டுமானாலும் படலாம் என்று நீங்கள் தானே அக்கா எனக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் .இப்போது நீங்களே தானாக தேடிவரும் படிப்பை உதறுகிறீர்களே இது தவறில்லையா ? ” 

” ஏய் மருதாணி என்ன நீ பெரிய மனுஷி போல் பேசத் துவங்கி விட்டாய் ?

தேவயானிக்கு உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

” அக்கா நான் இன்னும் இரண்டு மாதங்களில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகிறேன் .நான் ஒன்றும் சின்ன பிள்ளை கிடையாது .நானும் பெரிய மனுஷி தான் .எனக்கும் எல்லா விவரமும் தெரியும் ” பெரியவள் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட சின்ன பெண்ணை அன்புடன் பார்த்தாள் தேவயானி.

“சரிதான் டியூசன் எல்லாம் எடுத்து அனுப்பி இருக்கிறார் போல உன் அண்ணா ”  ரிஷி தரன் இருந்த குடிலின் பக்கமாக கண்களை காட்டி கேட்டாள் .

” நீங்கள் படிக்க மாட்டேன் என்றதைத்தான் ரிஷி அண்ணா சொன்னார் .இதையெல்லாம் நானாகத்தான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் ” 

தேவயானி மௌனமாக மருதாணி விடாமல் அவளை

துலைத்து எடுத்தாள்.

” அக்கா ப்ளீஸ் சொல்லுங்கள். ஏற்கெனவே இரண்டு வருடங்கள் உங்கள் படிப்பை தள்ளி போட்டு விட்டீர்கள் .இப்போது திரும்பவும் ஒரு வருடம் போகட்டும் என்கிறீர்கள். கைக்கு வந்த வாய்ப்பை வேண்டாம் என்கிறீர்கள் .ஏன் அக்கா ?  என்ன காரணம் ? ” 

” தேவயானி இப்போது படிக்கவில்லை என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் மருதாணி ” சொன்னபடி அவர்கள் பேச்சில் இடையில் வந்தாள சுனந்தா.

இவர்கள் எப்போது வந்தார்கள் ? எதுவரை எங்கள் பேச்சை கவனித்தார்கள் ? தேவயானி கொஞ்சம் படபடப்போடு அவளைப் பார்க்க ,மருதாணி அது போன்ற பயம்  எதுவுமின்றி சுனந்தாவை  பார்த்தாள்.

” சுனந்தாக்கா எங்கள் அக்காவை நீங்கள்தான் படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா  ? ” நடு நெற்றியில் அடித்த கவண் கல்போல் வந்து விழுந்த மருதாணியின் கேள்வியில் திகைத்துப் போனாள் சுனந்தா.

” ஏய் மருதாணி என்ன இது மரியாதை இல்லாமல்  ? ” தேவயானி அவளை அதட்டினாள்.




” எனக்குத் தெரிந்து சுனந்தா அக்காவிற்கு தான் நீங்கள் படிப்பது அவ்வளவாக பிடிக்காது. அதனால்தான் நான் நேரடியாக அவர்களிடமே கேட்டேன் .சொல்லுங்க அக்கா , தேவயானி அக்கா படிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? ” 

” ஒரு பெண் பிள்ளைக்கு ஒரு அளவுக்கு மேல் படிப்பு எதற்கு ? தேவயானி  ஓரளவுக்கு நன்றாகவே படித்து விட்டாள் . அவளுக்கு நாங்கள் கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம் .அதனால்தான் படிப்பு வேண்டாம் என்று சொல்லியிருப்பாளாக இருக்கும் ” மருதாணியின் பேச்சினால் புகைந்து கொண்டிருக்கும் தன் மனதை வெளிக்காட்டாமல் சாதுவாக பேசினாள் சுனந்தா .

சரியான நேரத்தில் சரியான விளக்கத்தை சொருகிவிட்ட அண்ணியின் சாதுர்யத்தை தேவயானியால்  வியக்காமல் இருக்க முடியவில்லை.

” ஓ அக்காவிற்கு கல்யாண ஏற்பாடுகள் செய்கிறீர்களா ? ” மருதாணியின் முகத்தில் உற்சாகம் வந்து விட்டிருந்தது.

” அப்போது சரிதான் அக்கா. கல்யாணமும் வாழ்க்கையில் அத்தியாவசியமான விஷயம்தானே ? சீக்கிரமாகவே உங்கள் மனதுக்கு பிடித்தவரோடு திருமணம் உங்களுக்கு நடக்கட்டும் .பெஸ்ட் ஆஃப் லக் ” மருதாணி தேவயானியின் கைகளைப் பற்றி குலுக்கி விட்டு போய்விட்டாள்.

” என்னவாம் இந்த குட்டிக்கு திடீரென்று படி படி என்று உன்னை உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறாள் ? ” சுனந்தா காட்டமாக கேட்டாள்.

நல்ல வேலை அண்ணி ரிஷிதரன் படிக்கச் சொன்னதாக மருதாணி பேசியதை கேட்கவில்லை மனதிற்குள் ஆசுவாசப் பெருமூச்சு விட்ட தேவயானி ” விடுங்கள் அண்ணி அவள் சின்ன பிள்ளை .எதையாவது பேசுவாள் .நீங்கள்தான் அவள் இனிமேல் இதைப்பற்றி பேசாமல் இருக்கும்படி வாயை அடைத்து விட்டீர்களே ” என்றாள் .

” படிப்பு முடிந்தால் அடுத்து திருமணம்தானே  ? உன் விஷயத்திலும் நான் அதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் .என்னுடைய நல்ல மனது யாருக்கு இங்கே புரிகிறது ? ” முணுமுணுத்தபடி நகர்ந்து விட்டாள் சுனந்தா.

மறுநாள் சந்திரசேகர் மீண்டும் ரிஷிதரனை வந்து சந்தித்தான். முதல்நாள் போலவே தோல்வி கண்ட முகத்துடன் குடிலை விட்டு வெளியேறியவன் மருந்தும் உணவும் எடுத்துக் கொண்டு எதிரே வந்த தேவயானியை கண்டதும் நின்றான்.

” மேடம் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியுமா ? ” தயவாக கேட்டான்.

மேடம் …அவனுடைய மரியாதையை நம்ப முடியாமல் பார்த்தாள் தேவயானி. இதற்கு முன் அவன் கொடுத்த மரியாதையின் அளவை அனுபவித்தவள் ஆயிற்றே .தான் அன்று பட்ட காயத்தை இன்று மறக்காமல் அவன் மேல் காட்டினாள்.

” என்ன சார் ரொம்பவும் மரியாதை கொடுக்கிறீர்கள் ? என்னை மறந்து விட்டீர்களா ? நான் தேவயானி .அன்று உங்கள் கோச்சிங் சென்டரில் இடம் கேட்டு வந்தேனே …நீங்கள் வேறு யாரோ என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ” 




” ஐயோ மேடம் நான் மறக்கவில்லை .உங்களை நன்றாக தெரிகிறது .அன்று தெரியாமல் உங்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேன் .அதற்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ” சொன்னதோடு சற்றும் தயங்காமல் இரு கைகளை உயர்த்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்டதும் தேவயானிக்கு தான் தர்மசங்கடமாகி போனது.

” ஐயோ என்ன சார் இது ? நீங்கள் வயதில் பெரியவர் .என்னிடம் கை குவித்துக்கொண்டு… விடுங்கள் சார் ” 

” ம் … வயதிற்கு எல்லாம் இப்போது எங்கே மரியாதை கிடைக்கிறது மேடம் ? பணம் ஒன்றிற்கு தான் மரியாதை .பணம் இருப்பவர் பெரியவர். இல்லாதவர் சிறியவர். அவ்வளவுதான் ” சலித்துக்கொண்டான்  சந்திரசேகர்.

அவனது சலிப்பின் பின்னால் இருப்பவன் ரிஷிதரன்தான் என சந்தேகமற தெரிந்துகொண்ட தேவயானியின் மனம் சந்திரசேகர் மேல்  பரிதாபம் கொண்டது .ரிஷிதரன் இவனை நடத்திய விதத்தை நேரிடையாக கண்டவளாயிற்றே அவள் .

” சசி சாருடைய கம்பெனியின் திருச்சி கிளை மேனேஜர் நான் மேடம். அந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கே ரிஷிதரன் சாரிடம் கையெழுத்து வாங்குவதற்காக மன்றாடி கொண்டு இருக்கிறேன் ” 

” அது என்ன கையெழுத்து சார் ? ஏன் ரிஷிதரன் போட மாட்டேன் என்கிறார் ” 

” இவர்களுக்கு நிறைய தொழில்கள்  இருக்கின்றன மேடம் .திருச்சி, மதுரை ,சென்னை ,பெங்களூர், ஹைதராபாத் எல்லா இடங்களிலும் அந்த தொழில்களுக்கான கிளைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ரிஷிதரன் சாரின் பெயரில் வைத்திருக்கிறார்கள் .அது சம்பந்தமான கையெழுத்துக்களை போட மாட்டேன் என்று  சார் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அந்த தொழில்கள் அடுத்த கட்டத்திற்கு போக முடியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன ” 

“ஆனால் ஏன் இவர் இப்படி செய்கிறார் ? “

“அதெல்லாம் எனக்கு தெரியாது மேடம் .அண்ணன் தம்பிக்குள் தொழில் விஷயமாக ஏதோ பிரச்சனை போல. அதனால் கையெழுத்து போட மாட்டேன் என்று இவர் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார் .அங்கே அண்ணன் எப்படியாவது தம்பியிடம் கையெழுத்து வாங்கியே தீர வேண்டும் என்று என்னை விரட்டிக் கொண்டு இருக்கிறார் .இவர்கள் இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு நான் முழித்துக் கொண்டு இருக்கிறேன் ” 

இவன் ஏன் இப்படி செய்கிறான் …தேவயானி மனதினுள்  யோசனை ஓடியது

” மேடம் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ? ரிஷிதரன் சாரிடம் பேசி இந்த பைல்களில் கையெழுத்து வாங்கிக் கொடுங்களேன் ” 

சந்திரசேகரின் வேண்டலில் ஆச்சரியமானாள் தேவயானி.




” நானா …? அம்மா அண்ணன் இதோ உங்களைப்போன்ற ஊழியர்கள்  எல்லாம் சொல்லி கேட்காதவர் நான் சொல்லியா கேட்கப் போகிறார் ? “

” அது தெரியவில்லை மேடம். நீங்கள் சொன்னாலாவது கேட்பாரா என்று எனக்கு ஒரு நப்பாசை தான் .இதோ உங்கள் படிப்பு விஷயத்தில் கூட சார் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டார். அத்தோடு அன்று போல் உங்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார் .அதனால் தான் ஒருவேளை நீங்கள் சொன்னாலாவது கேட்பாரா என்று நினைத்தேன். உங்கள் கோச்சிங் விஷயத்தைப் பற்றி கூட இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை மேடம் .கோச்சிங் சென்டரில் உங்கள் அட்மிஷன் விபரங்கள் எல்லாம் தயாராக இருக்கிறது .உங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அன்று நீங்கள் அங்கே வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் .அடுத்த நிமிடமே சென்டரில் சேர்ந்துவிடலாம் “

” ரொம்ப நன்றி சார் .நான் யோசித்து சொல்கிறேன் ” 

“சரிங்க மேடம் . அப்புறம் இந்த கையெழுத்து ….? ” தன் கையிலிருந்த பைல்களை காட்டிக்கொண்டு தலையைச் சொறிந்தான் சந்திரசேகரன்.




” எனக்கு நம்பிக்கை இல்லை சார் .ஆனால் உங்களுக்காக முயன்று பார்க்கிறேன் .பைல்களை நீங்கள் இப்போது எடுத்துக்கொண்டு போங்கள் .நான் ரிஷிதரன் சாரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் ” உறுதியற்ற ஒப்புதல் தான் .ஆனால் அதற்கே சந்திரசேகரின் முகம் மலர்ந்து விட்டது.




” ரொம்ப நன்றி மேடம் .தேங்க்ஸ் மேடம். இதை மட்டும் நீங்கள் முடித்துக் கொடுத்து விட்டீர்களானால் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்படியாவது பார்த்து முடித்து கொடுத்துவிடுங்கள் மேடம் . நன்றி மேடம் .நான் வருகிறேன் மேடம்…. ” மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி கைகுவித்து கும்பிட்ட அவனை பார்த்ததும் கூழைக் கும்பிடு என்று தேவயானிக்கு தோன்றியது.

மறுநிமிடமே பாவம் அவர் எந்த அளவுக்கு ரிஷிதரனின் குடும்பத்தினரை  சார்ந்து  இருக்கிறாரோ என்று எண்ணிக்கொண்டாள். இப்போது பைல்களில் கையெழுத்து வேண்டும் என்று ரிஷிதரன் முன் போய் நிற்க வேண்டுமா  ?அந்த நினைப்பே அவளுக்கு பிடித்தமற்றதாக இருந்தது.

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Angel unakku kalayana news rishikku pots neratukum nee sign ketka pongum neratukum vegu porutam.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!