karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 37

     37

நிரப்பி நிரப்பி எனை வைக்க 
உறிஞ்சிக்கொண்டே நலம் விசாரிக்கிறாயே
முழுதுமாய் கவிழ்த்துவிடுகிறேன் 
கசடற்று தின்று தொலைத்துவிடு 
சாகாமல் பிழைத்து போகிறேன்

குளிரில் காதடைத்து , கன்னம் சிவந்து , மூக்கு நுனி எரிய …உடலெல்லாம் விரைக்க ஆரம்பிக்க அந்த ஜில்லென்ற தரையில் கால்களை கட்டி , முட்டி மேல் தலையை சாய்த்தபடி வீம்பாய் அமர்ந்திருந்தாள் சாத்விகா .

” இன்னும் எவ்வளவு நேரம் இப்படி பிடிவாதமாக உட்கார்ந்திருக்க போகிறாய் …? ” அவள் எதிரில் இருந்த சுவரில் முதுகை சாய்த்து ஒற்றைக் காலை மடித்து ஊன்றி , கைகளை கட்டிக்கொண்டு நிதானமாக அவளை பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தவனை வெறியோடு நோக்கினாள் .அவர்கள் இருவரும் மொட்டை மாடியில் இருந்தனர் .

சை ….இவனெல்லாம் ஒரு புருசன் .தாலி கட்டிய பொண்டாட்டியை அம்மாவை அடிக்க விட்டுக்கொண்டு …பார்த்து ரசித்துக்கொண்டு ….எந்த தூற்றலையும் மனதிற்கு வைத்துக்கொள்ளும் பழக்கமில்லாதவளாத்தால் பட்டென கேட்டாள் .

” வெட்கமாயில்லை உங்களுக்கு ….? உங்களை வைத்துக்கொண்டு என்னை கை நீட்டி அடிக்கிறார்கள் உங்கள் அம்மா .நீங்கள் பேசாமல் அதை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் ….என்ன மனிதன் நீங்கள் …? “

” சும்மா எங்கே இருந்தேன் …? ரொம்ப திருப்தியாக உணர்ந்து கொண்டிருந்தேன் .என்னால் முடியாத ஒன்றை என் அம்மா செய்து கொண்டிருந்தார்களே .எப்படி தடுப்பேன் ….? “

அவனது சாதாரண பதிலில் கோபம் கொளுந்து விட ,வேகமாக எழுந்தவள் அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள் .” எவ்வளவு கொழுப்பு உனக்கு …? என்னை யாராவது அறைந்தால் உனக்கு சந்தோசமா ….? “

” ம் …நியாயமாக அப்படி சந்தோச படக்கூடாது .ஆனால் அது போன்ற சூழ்நிலைகளை நீதான் உருவாக்கி கொள்கிறாய் .எத்தனையோ முறை உன்னை அறைவதற்காக உயர்த்திய கையை உன் பிள்ளை முகம் பார்த்து கீழே இறக்கிக் கொண்டிருக்கிறேன் ்என் அளவு பொறுமை அம்மாவிற்கு இல்லை …அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை ….” நிதானமாக அவள் கைகளிலிருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டான் .




சந்திரிகா தன்னை அறைந்தபோது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்த வீரேந்தரின் தோற்றம் இப்போதும் ஆணியடித்தது போல் சாத்விகாவின் மனதில் பதிந்திருந்த்து . சந்திரிகாவின் அறையை விட வீரேந்தரின் அந்த எனக்கென்ன என்ற பாவம்தான் சாத்விகாவை அதிகமாக பாதித்தது .மனம் முழுவதும் வெறுமை பரவ சுரந்து விட்ட கண்களை மறைக்க இந்த மொட்டைமாடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அப்போதும் உடனே சமாதனானம் செய்யவென வீரேந்தர் வந்துவிடவில்லை . ஒரு மணி நேரம் அவள் இந்த குளிரில் கிடந்து விரைக்கவும் , இதோ இப்போதுதான் நதானமாக வந்து நின்று கொண்டு அவளிடம் விளக்கம் கேட்டு கொண்டிருக்கிறான் .

” நீதானே என்னை காதலிப்பதாக …என்னை உயிராய் நேசிப்பதாக பக்கம் பக்கமாய் வசனம் பேசினாய் .அதற்காகத்தான் என் கழுத்தில் தாலி கட்டியதாய் சூடம் அணைத்தாய் . இப்போது உன் அம்மாவை விட்டு என்னை அடிக்க வைக்கிறாயே …ஒரு காதல் கணவன் இது போலெல்லாம் செய்வானா ….? “

” ஆமாம் உன்னை காதலிக்கிறேன் .எங்கள் மனதை அளவில்லாமல் புண்படுத்தியபடியே நீ இருந்த போதும் உன்னை இன்னமும் காதலிக்கிறேன் .அதற்காக என் அம்மாவை உன்னிடம் விட்டுக் கொடுக்க வேண்டுமென என்ன கட்டாயம் ….? அதுவும் நீ அவர்களை புண்படுத்தி கொண்டிருக்கும்போது ….”

” என் மனது புண்ணாயிருப்பது உங்களுக்கு தெரியவில்லை .உங்கள் அம்மாதான் உயர்ந்தவர்களாக போய்விட்டார்களா …? ” அவள் முகத்தை பற்றி நிமிர்த்தியவன் …

” உண்மையை சொல் சாத்விகா .நீ அங்கே பேசியதெல்லாம் நியாயமா ….? ” அவள் கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான் .

பிணம் எரியும் மயானம் என்ற அவளது சொல்லை தாயின் காதுக்கு சென்றுவிடாமல் தடுக்க தொண்டையை செறுமி , உணவு பாத்திரங்களை நகர்த்தி சத்தங்களை உண்டாக்கி முயன்றான் வீரேந்தர் .ஆனால் அந்த முயற்சியெதுவும் சாத்விகாவிற்கு இல்லையல்லவா ….அதனால் அவள் சொற்கள் எளிதாக சந்திரிகாவின் காதுகளை அடைந்து அவளை கொதிக்க வைத்தன.

” நீங்கள் நர்ஸா மேடம் ….? ” என்ற கேள்வியை போட்டு அந்த கொதிப்பை யாக தீயாக்கினாள் சாத்விகா .

” அந்த பஸ்ட்டி கிராம ஆஸ்பத்திரியில் தான் வேலை பார்த்தீர்களா ….? “

” அங்கே நிறைய பிரசவம் பார்த்தீர்களோ …? “

” உங்களுக்கு அந்த ஆயா ரேணுகாதேவிதான் பிரசவ சமயங்களில் உதவுவார்களா ….? “

” மனநிலை தவறிய பெண்களுக்கு அவர்கள் பெற்றோர் அனுமநியின்றி பிரசவம் பார்ப்பது சட்டவிரோதமல்லவா …? இது போன்ற சட்ட விரோத காரியங்களை உங்கள் கணவர் இருக்கும் தைரியத்தில் செய்தீர்களோ …? “

உன் கணவரின் ராணுவ பதவி அதிகாரத்தை காட்டி சட்ட விரோத காரியங்களை செய்தாயா …என கேளாமல் கேட்டாள் .பார்வையை எகத்தாளமாக சக்கரவர்த்தியின் மீதும் போட்டாள் .நீயும் இதற்கு உடந்தையோ …என்பது போல் .முகம் இறுக தன் கண்களை இறுக மூடித் திறந்து தன்னை கட்டுப்படுத்திய சக்கரவர்த்தி கைகயை உதறியபடி பாதி சாப்பாட்டில் எழுந்து போனார் .

சாத்விகா கேட்ட இத்தனை கேள்விகளிலும் எந்த அளவு உண்மை இருக்குமென அவளுக்கு தெரியாது .சும்மா நடந்திருந்த சம்பவங்களின் மனக்கோர்வையில் அவளாகவே அனுமானித்து கேட்டவைகள்தாம் இவை .ஆனால் அதில் நிறைய உண்மை இருந்த்தோ …இல்லை இவளின் கேள்வி தொனி ஏற்படுத்திய ஆத்திரமோ , கணவர் சாப்பிடாமல் எழுந்து போன கோபமோ சந்திரிகா முகம் சிவக்க எழுந்தாள் .

” ஏய் ஏன்டி இப்படி எல்லோரையும் படுத்துற …? உனக்கு என்னதான்டி வேணும் …? ” அவள் தோள்களை உலுக்கினாள் .

” உண்மை வேண்டும் .நீங்கள் எல்லோரும் சேர்ந்து மறைக்கும் உண்மை வேண்டும் .என்னை பெற்றவளை பற்றிய உண்மை .தெரியாதென்காதீர்கள் .உங்களுக்கு தெரியும் .அதை நானும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டேன்  ….”

” ஏன்டி உனக்கென்ன பயமா …உன்னிடமிருந்து மறைக்க …ஆமான்டி உன் பிறப்பை நான்தான் பிரசவம் பார்த்தேன் .அந்த ஆஸ்பத்திரியில் அந்த ஆயா ரேணுகாதேவியை துணைக்கு வைத்துக்கொண்டு பார்த்தேன் .நீ பிறந்த உடனேயே குப்பைகூடை குப்பைடா இது என்று சொல்லி பிரசவ அறைக்கு வெளியே நின்ற என் பையன் கையில் நான்தான் கொடுத்தேன் .சண்முகபாண்டியன் சார்தான் குப்பையான உன்னை கீழே போடாமல் கையில் வாங்கினார் .அதனால்தான் நீ இப்போது இங்கே வந்து எங்கள் தலைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு சனியனாய் உயிரை வாங்கி கொண்டிருக்கிறாய் .நான் அன்றே என் கணவரிடம் சொன்னேன் உன்னை முளையிலேயே கிள்ளிவிட சொன்னேன் .ஆனால் அவர்தான் …ப்ம்ச் …” வெறுப்பில் …வேகத்தில் மகனின் இடையீட்டை அலட்சியப்படுத்தி மன வார்த்தைகளை கொட்டினாள் சந்திரிகா .

கிட்டத்தட்ட தன் மனதில் வரைந்து வைத்திருந்த கோடுகள் அரை குறையாக உருவம் பெற்று முட்களாய் மேனி முழுவதும் குத்த , மனதில் பலமாக அடி வாங்கி துடித்தாள் சாத்விகா .தாய் சொன்னதே உண்மையென்பது போல் மௌனம் சாதித்த வீரேந்தரும் துயரத்தை அதிகப்படுத்த , சட்டென மூண்டுவிட்ட தனிமை சூழலில் உள்ளம் விட்டு விட எழுந்து நின்று சந்திரிகாவின் தோள்களை பற்றி உலுக்கலானாள் .

” சொல்லுங்க …என் அம்மா யாரு …? உங்களுக்கு சொந்தமா …? தெரிந்தவர்களா ….? ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு அநியாயத்தை செய்தீர்கள் …? சொல்லுங்க ….” கைகளை விலக்க முயன்ற சந்திரிகாவை விடாமல் பற்றி அவளை உலுக்க , பொறுத்து ..்பொறுத்து பார்த்த அவள் ,இறுதியில் தன் தோள்களில் படிந்திருந்த சாத்வகாவின் கைகளை பிடுங்கி எடுத்துவிட்டு பளாரென அவள் கன்னத்தில் அறைந்தாள் . 

” சொல்ல முடியாதுன்னா ….முடியாது .போடி ….என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ …” பேச்சோடு அவளை பிடித்து தள்ளி விட்டு போய்விட்டாள் .தடுமாறியவளை தாங்கிய வீரேந்தரை உதறிவிட்டு இதோ இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாள் சாத்விகா .

” அவர்கள் பேசியது மட்டும் சரியா ….? அ…அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையா வீரா ….? “

அண்ணாந்து தன் முகம் பார்த்து ஏக்கமும் , இயலாமையுமாக கேட்ட சாத்விகாவை பரிவோடு பார்த்தான் வீரேந்தர் .மெல்ல அவள் தலையை வருடியவன் ஆமாமென்பது போல் தலையசைக்க சாத்விகா தளர்ந்தாள் .

” என்னை பெற்றவளின் விபரங்கள் எதுவும் …யாரும் சொல்லமாட்டீர்களா ….? ” குரல் கம்ம அழுகையை வெளிக்காட்டாதிருக்க முயன்றபடி கேட்டாள் .

சற்று முன் பரிவில் இளகியிருந்த வீரேந்தர் முகம் இப்போது கடுத்து இறுகியது .” நிச்சயம் சொல்ல மாட்டோம் ….” இரும்பின் உறுதி குரலில் .

சட்டென அவனை விட்டு விலகியவள் கைப்பிடி சுவர்ருகே சென்று வெளியே பார்க்க ஆரம்பித்தாள் .தூரத்து மின்விளக்குகளை வெறித்தபடி தன் கண்ணீரை அடக்க முயன்றாள் .சிறிதுநேரம் அவள் முதுகை பார்த்திருந்த வீரேந்தர் பின் மெல்ல அவளை அணுகி பின்னிருந்து அணைத்துக்கொண்டான் .

” ரொம்ப குளிர்கிறது பேபி .வா உள்ளே போகலாம் ….” ஜில்லிட்டிருந்த அவள் கைகளை வருடி சூடேற்ற மியன்றபடி அழைத்தான் .

அந்த குளிருக்கு கணவனின் அணைப்பு மிகவும் சுகமாக கதகதவென இருந்த போதிலும் , அந்த அணைப்பில் பலவீனப்பட விரும்பாமல் அவன் கைகளை தள்ள முயன்றாள் சாத்விகா .

” ம்ஹூம் ….” என செல்லமாக அதட்டியபடி எப்போதும் போல் அவளை குனிந்து தன் கைகளில் தூக்கிக் கொண்டான் .

” உனக்குத்தான் வாழ்க்கை லட்சியம் .இதில் என்னையும் சேர்த்து ஏன் விரைக்க வைக்கிறாய் .தாலி கட்டிய புருசனை இப்படி தவிக்க விடுகிறாயே .இது நியாயமா ….? ” என்றபடி அவளை சுமந்துகொண்டு அறைக்கு நடந்தான் .

” நானா ….? நானில்லை …நீங்கள்தான் எந்த விபரமும் சொல்லமாட்டேனென அடம்பிடித்து என்னை தவிக்க விடுகிறீர்கள் ….? ” கதகதப்பாய் கணவன் நெஞ்சுக்குள் சுருண்டபடி பேசினாள் .

” இல்லை நீதான் .எங்கே என் முகம் பார்த்து சொல்லு .என்னை தவிக்க விடவில்லை நீ …? ” கட்டிலில் அவளை மென்மையாக இறக்கி விட்டு விட்டு அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவள் கண்களுக்குள் பார்த்து கேட்டான் .

இவன் எதை கேட்கிறான் ….? எதை தவிப்பென்கிறான் …? சாத்விகாவின் சந்தேகத்தை வீரேந்தரின் பார்வை உறுதிப்படுத்தியது .தாபத்துடன் அவள் உடல் மீது அலைந்த்து அவன் பார்வை .

அலட்சியமாய் சரிந்திருந்த தனது தோற்றத்தை அவசரமாய் சீர் செய்து கொண்டு , நேராக அமர்ந்து கொண்டவள் ” உங்கள் அறைக்கு போங்க ….” முணுமுணுத்தாள் .

” நமக்கு திருமணம் முடிந்துவிட்டது பேபி .இன்னமும் நாம் ஏன் தனித்தனி அறைகளில் தூங்க வேண்டும் …? ” ஏக்கத்துடன் கேட்டபடி அவள் தோள்களில் இதழ் பதித்தவன் …

” இன்று வெளியே ரொம்ப குளிர் பேபி .அத்தோடு இவ்வளவு நேரம் மொட்டை மாடி குளிரில் நின்று உடலெல்லாம் மரத்துவிட்டது .இன்று கூட நாம் தனிதனியாகத்தான் தூங்க வேண்டுமா ….? ” கேட்டுவிட்டு , அது தேவையில்லை என்ற பதிலை தன் இதழொற்றல்கள் மூலம் சொல்ல தொடங்கினான் .விரல்கள் , கைகள் , தோள்கள் என பதிந்த அவனது இதழ்களி்ன் உஷ்ணத்தில் எரிந்த சாத்விகா , கழுத்தடியில் புதைந்த முத்தமொன்று கன்னத்திற்கு இடம் மாறியபோது விழித்து கொண்டாள் .

இந்த கன்னத்தில்தானே சற்று முன் அறை வாங்கினாள் .அந்த எரிச்சல் இன்னமும் இருக்கிறதே . எதற்கு வாங்கினாள் ….? இதமான கதகப்பில் உடல் ஆழ்ந்து கொண்டிருந்தாலும் மசமசப்பாக ஆரம்பித்து விட்ட மூளையை தட்டி எழுப்பி யோசித்தவள் அவள் மேல் சரிந்து கொண்டிருந்த வீரேந்தரை பிடித்து தள்ளினாள் .அவசரமாக கட்டிலிலிருந்து எழுந்து தள்ளி நின்றுகொண்டாள் .

” சை .எவ்வளவு மட்டமான காரியம் …? உங்கள் கை பொம்மை என்று நினைத்தீர்களா என்னை …? “




” பொண்டாட்டியை தொடுவது மட்டமான காரியமா …? ” கட்டிலில் இருந்து தானும் எழுந்து கொண்ட வீரேந்தரின் குரலிலும் கோபம் தெரிந்த்து .

” ஆமாம் …அவளுக்கு விருப்பமில்லாமல் தொடுவது மட்டமான காரியமதான் ….”

” என்ன உனக்கு விருப்பமில்லையா ….? ” கேலியான வீரேந்தரின் குரலில் ஆத்திரமானவள் அவன் ் கையை பிடித்து இழுத்து அறைக்கதவை நோக்கி தள்ளினாள் .

” போ …இங்கிருந்து போய்விடு .உன்னை பார்க்கவே …உன் முகத்தில் விழிக்கவே எனக்கு பிடிக்கவில்லை ….போ …”

அவள் தள்ளல்களை பொருட்படித்தாமல் அவள் முகத்தை பார்த்தபடி நின்றவன் , பிறகு தோள்களை குலுக்கி கொண்டு , அறை வாசலை நோக்கி நடக்கலானான் .

” தனிமையில் கிடந்து வேதனையில் தவிக்க வேண்டுமென்பது உன் தலையெழுத்தென்றால் அதை யாரால் மாற்றமுடியும் ….? ” அறைக்கதவை பட்டென அடித்து தன் கோபத்தை காட்டி விட்டு போய்விட்டான் .

எதற்கு அழுகிறோமென தெரியாமல் அழத்துவங்கனாள் சாத்விகா .

What’s your Reaction?
+1
12
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!