Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 6

6

” கமலிம்மா …இந்த பேன்சி சேலையை மெசின்ல போட முடியாது .சோப்பு தண்ணியில ஊற வைத்தேன் .லேசாக அலசி போட்டு விடுகிறாயா ..? ” கனகம்  குரலிலேயே பாசம் பொழிந்தாள் .

கமலினி அன்று வெளியே போகும் எண்ணமின்றி வீட்டில் இருப்பது கனகத்திற்கு மிகுந்த ஆனந்தமாக இருந்த்து .இது போல் மச்சினர் மனைவியோடு , மகளையும் வீட்டோடு நிறுத்தி வைத்து வீட்டு வேலைகள் செய்ய வைக்க வேண்டிமென்பது அவளது நெடு நாள் கனவு .அது தன் கை கூடி வருகிறதென்ற  சந்தோசம் அவளை இப்படி பாசம் ஒழுக  பேச வைத்தது .

அடுத்த நாள் காலை கொஞ்சம் தாமதமாகவே கண் விழித்திருந்தாள்  கமலினி .ஏனோ அவளுக்குள் ஒரு மதக்க நிலை .வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது பஸ்ஸை பிடிக்க  எட்டு மணிக்கெல்லாம் வெளியே போய்விடுவாள் .வேலை போன பின்பு வேலை தேட ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு  கிளம்பி விடுவாள் .இன்றோ வீட்டை விட்டு வெளியேறும் எண்ணமின்றி ஏழு மணி வரை தூங்கி எழுந்து இப்போதுதான் காபி குடித்து விட்டு குளிக்க போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தாள் .அதற்குள் கனகம் அவள் தலையில் வேலையை சுமத்த வந்துவிட்டாள் .

” அவளுக்கு புடவையை துவைக்கும் பக்குவமெல்லாம் தெரியாது கனகம் .நானே அலசி போடுகிறேன் …” என்று போன புவனாவின் கையை பிடித்து தடுத்தாள் கமலினி .

” அம்மா நீங்க இருங்க .நானே சாப்பிட்டுட்டு பார்க்கிறேன் …,” கனகத்திற்கு கமலினியின் வெறுப்பான பார்வையில் கவலை இல்லை .அவளது லட்சியம் இன்று கமலினியை புடவை தோய்க்க வைக்க வேண்டும் .அது நிறைவேறி விட்டது .திருப்தியுடன் போய் டிவி முன் உட்கார்ந்து கொண்டாள்.




வேதனையாக பாரத்த தாயை கமலினி சமாதானப்படுத்தினாள் .” நீங்கள் செய்யும் போது இந்த வேலைகளை நான் செய்யக் கூடாதாம்மா ..? இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு ..? இந்த வீட்டை மீட்கும் வரைதானே ..? அதன் பிறகு நம் வீடு நம் இஷ்டம் …” நடக்கவே போவதில்லை என அவள் நம்பிய விசயத்திற்கான நம்பிக்கையை தாய்க்கு கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

அப்போது அவளது போன் ஒலித்தது .பேசியது ஸ்வர்ண கமலம் ஜுவல்லழியிலிருந்து  சதாசிவம் . ” கமலினி உங்களை  செலக்ட் செய்தாயிற்று . வந்து இன்றே  வேலையில்சேர்ந்து கொள்ளுங்கள் “

கமலினிக்கு அதிர்ச்சி . ” என்ன சார் சொல்கிறீர்கள் …? என்னை வேலைக்கு செலக்ட் செய்து விட்டார்களா …? “

” ஆமாம்மா .இன்றே நீங்கள் ஜாய்ன்ட் பண்ண வேண்டும் .உடனே கிளம்பி வாருங்கள். ” சதாசிவம் போனை கட் செய்துவிட்டார் .

கமலினியினுள் எரிச்சல் மண்டியது . இது எப்படி நடந்த்து …? ம்ஹூம் இந்த வேலை எனக்கு வேண்டாம் …இந்த முடிவை அவள் எடுத்துக் கொண்டிருந்த போது …

” கமலி யாரும்மா போனில் …? வேலை கிடைச்சுடுச்சுன்னு சொல்றாங்களா …? ” புவனா ஆர்வமுடன் அவளருகே வந்தாள் .” வேலை கிடைத்து நீ இங்கிருந்து வெளியே போவதாக இருந்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்மா …”

அம்மாவின் சந்தோசத்தை உடனடியாக கெடுக்க கமலினிக்கு மனம் வரவில்லை .அவள் புன்னகைத்து சமாளித்தாள் .” சரியாக தெரியவில்லை அம்மா .நேராக போனால்தான் முழு விபரங்கள் தெரியும்.நான் போய் கேட்டு விட்டு வருகிறேன. …” அம்மாவை சமாளித்து விட்டு மாற்றுடையுடன் குளியலறைக்கிள் நுழைந்தாள் .

ஸ்வர்ண கமலத்தை அடையும் வரை அவள் மனதில் கோபம் , குழப்பம் , ஏமாற்றம் என பல உணர்வுகள் .நான் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் பாரிஜாதம் என்னையே  எப்படி இந்த வேலைக்கு செலக்ட் செய்வார்கள்…? என்னை என்னவென்று நினைத்தார்கள் ..? அவள் மன ஓட்டங்களில் மாறி மாறி பாரிஜாதம் , ராஜசுலோச்சனா , விஸ்வேஸ்வரன் சுழன்று கொண்டிருந்தனர் .

விஸ்வேஸ்வரனுக்கு முதல் நாளிலிருந்தே அவளை சுத்தமாக பிடிக்கவில்லை . இவள் வேலைக்கு வேண்டாமென முகத்திற்கு நேராகவே சொல்லியவன் . அதனால் இந்த வேலைக்கான் உத்தரவை அவன் போட்டிருக்க மாட்டான் .அவர்கள் கடை வேலைக்காக வந்த பெண் எனவுமே ராஜசுலோச்சனா அம்மாவின் தோரணை மாறிவிட்டது . அதனால் இந்த வேலையில் அவரது பங்கும் நிச்சயம் இருக்காது .எஞ்சியவள் பாரிஜாதம் மட்டுமே .அவளுக்குத்தான் இந்த வேலையை எனக்கு கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது .




ஆனால் நேற்று நான் அந்த அளவு விளக்கம் கொடுத்த பின்னும் இன்று வேலை உத்தரவை போட்டிருக்கிறாளென்றால் …கமலினி பல்லைக் கடித்தாள் .அந்த பாரிஜாத்த்தை நேரிலேயே போய் பார்த்துக் கொள்கிறேன் .அன்று பஸ் மிகவும் மெதுவாக செல்வது போல் அவளுக்கு தோன்றியது .ஒரு வழியாக ஸ்வர்ணகமலத்தை அடைந்த்தும் கண்ணாடி கதவை தள்ளி உள்ளே நுழைந்தவளை எதிர் கொண்டவர் சதாசிவம் .

” வாம்மா . நான் சொன்ன மாதிரியே உனக்கு வேலை வாங்கி தந்துட்டேன் .  நீ இப்போதே ஜாயின்ட் பண்ணிக்கலாம் ….” பெருமிதம் வழிந்த அவர் குரலில் வெறுத்து போய் பார்த்தாள் .

என்னென்னவோ நடந்துட்டு இருக்குது …இதில் இவர் வேற .. அவரது உலகத்தை தோளில் தாங்கி நிறகும் ஹெர்குலிஸ் பாவனையை புறந்தள்ளி ” நான் மேடத்தை பார்க்கனும் சார் .உடனடியாக …” என்றாள் .

” மேடம் இன்னமும் வரலைம்மா .அவுங்க வர்றதுக்குள்ளே நீ யூனிபார்ம் மாற்றிக் கொண்டு …”

” இல்லை சார் .மேடத்திடம் பேசி விட்டுத்தான் நான் இங்கே ஜாயின்ட் பண்ணுவதை பற்றி முடிவு செய்ய வேண்டும் ” படபடத்தவளை லூசா பார்வை பார்த்தபடி கடந்தார் சதாசிவம் .
கமலினி காத்திருக்க தொடங்கினாள் .அவள் மனதற்குள் முன் தின நிகழ்வுகள் .

ராஜசுலோச்சனாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கமலினி திணறி நின்ற போது , ” கோவிலையும் , கடையையும் மறந்து விட்டு நம்மை போல்   இந்த பங்சனுக்கு வந்த ஒரு நட்பு என்று நினைத்துக் கொள்ளலாமே அம்மா …” விஸ்வேஸ்வரன் மென் குரலில் பேசினான் .

இது போல் குரலிலெல்லாம் பேசுவாயா நீ …?கமலினி அவனை நிமிரந்து பார்க்க அவனும் அந்நேரம் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் . இவள் பார்த்ததும் புருவம் உயர்த்தி என்னவென விசாரித்தான் .அதில் கமலினிக்கு குப்பென வியர்த்தது .

” அ…அப்படி இல்லை அம்மா .நான்  உங்கள் வீட்டினரில் முதலில் சந்தித்தது   சௌபர்ணிகாவைத்தான் . அதனால் கோவிலில் பார்த்த உங்கள் பேத்தியின் ப்ரெண்டாகவே என்னை பாருங்கள் …” சொன்ன அடுத்த நொடி கமலினியின் கை அழுத்தமாக பற்றப்பட்டது .பாரிஜாதம் இயல்பு போல் காட்டிக் கொண்டு அவள் கையை பற்றியிருந்தாள் .அந்த கையில் இருந்த நடுக்கம் அவள் பயந்திருக்கிறாளென சொன்னது .

” அட என் பேத்திக்கு இவ்வளவு அழகான ப்ரெண்டா …? ” ராஜசுலோச்சனா சிரிப்போடு கமலினியின் கன்னத்தை வருட , சௌபர்ணிகா குதித்தாள் .

” ஹை …பாட்டி .ஆமாம் …ஆமாம் .ஆன்ட்டி ரொம்ப அழகு .நான் கூட அதையேதான் சொன்னேன் …”

” இந்த சேலையும் , நகைகளும் உங்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது கமலினி.அழகாக இருக்கிறீர்கள்  .” பாரிஜாதம் புன்னகைத்து பேசினாலும் அவள் கையின் அழுத்தம் கமலினியின் கை மேல் அப்படியேதான் இருந்தது .

” ஐயோ மேடம் நீங்களுமா …? ” இலகுவாக சொன்னபடி தானும் பாரிஜாத்த்தின் கையை அழுத்திப் பிடித்தாள் கமலினி .

” இந்த ஜுவல்ஸ் எங்கே வாங்கினீர்கள் கமலினி …? ” விஸ்வேஸ்வரனின் கேள்வி அவள் நெஞ்சை வலியாய் துளைத்தது .பெரிய நகை கடை முதலாளி .நகைகளை தயாரிப்பவனும் கூட .அவனுக்கு தெரியாதா இவை போலி நகைகளென்று …விஸ்வேஸ்வரனின் இந்த கேள்வி   தன்னை கிண்டல் செய்யவே என வெகு நிச்சயமாக நினைத்தாள் கமலினி .எனவே தன் இதழ்களை இறுக்கிக் கொண்டு அவன் பக்கமே திரும்பாது …அவன் கேள்வியை கவனிக்காத்து போல் நின்றாள் .

” நெக்லஸ் டிசைன் கவனித்தீர்களா அம்மா …? பச்சையும் , வெள்ளையும் கலந்த கற்கள் ஓவல் ஓவலாக வரிசையாக அமைந்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது .கம்மல் பெரிய ஓவல் டிசைன் .இதே டிசைனை நாம் மரகதமும் , வைரமும் கலந்து பதித்து செய்தோமானால் நிச்சயம் எக்ஸ்க்ளூசிவாகும் .கமலினி நீங்கள் இந்த நகையை நாளை நம் கடைக்கு எடுத்து வருகிறீர்களா …? “

ஆக இவன் இவ்வளவு நேரமாக போலி நகையை ஒரிஜினலாக்கும் முறையை அதாவது அவனது தொழில் வகையைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தானா …கமலினி எண்ணமிட்ட போதே பாரிஜாதமும் அதனையே சலிப்பாய்  பிரதிபலித்தாள் .

” என்ன விஸ்வா இது …ஒரு பங்சனுக்கு வந்திருக்கும் போதும்   தொழில் பேச்சு .இந்த பேச்சை விடுங்களேன் “

விஸ்வேஸ்வரன் அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக் கொண்டான் .” சரிதான் .அப்போது வாங்க …வந்த வேலையை கவனிப்போம் …” இரு கைகளையும் சிறிது விரித்து உடன் வருமாறு  அவன் அழைத்த அவன் குடும்ப வளையத்தினுள் கமலினியும் இருந்தாள் .

” எங்கே கூப்பிடுகிறீர்கள் …? ” புருவம் சுருக்கி அவனை பார்த்தாள் .

” இங்கே எதற்காகம்மா வந்தோம் …இதறகுத்தானே …வாங்க அந்த வேலையை பார்ப்போம்னு சொன்னேன் …” சாப்பிடுவது போல் அவன் செய்கை காட்ட எல்லோருக்குமே சிரிப்பு வந்த்து .




” ஏன்டா சாப்பிடவா இங்கே வந்தோம் …? ” ராஜசுலோச்சனா மகனை செல்லமாக மிரட்டியபடி நடக்க …” நீங்க எப்படியோ …நான் அதறகுத்தான்மா வந்தேன். சமையல்காரை கூட விசாரித்து வைத்திருக்கிறேன் .தி பெஸ்ட் குக் அவர்   ” தாயிடம் கிண்டல் பேசியபடி விஸ்வேஸ்வரன் சௌபர்ணிகாவை கையில் தூக்கிக் கொண்டு முன்  நடக்க , பாரிஜாதம் சற்று பின்தங்கினாள் .உடனே கமலினியின் கையை இறுக பிடித்தாள் .

” கமலினி மலைக்கோட்டை கோவில் விசயம் எதுவும் அத்தைக்கோ , விஸ்வாவிற்கோ தெரியவேண்டாம் .மீண்டுமொரு முறை அதைப் பற்றி பேசாதே …” என்றாள் அவசரமாக .

கமலினி புரியாமல் அவளை பார்த்தாள் .அந்த பார்வையை பாரிஜாதம்  என்ன நினைத்தாளோ …? ” நான் அந்த வேலையை நாளையே நிச்சயம் உனக்கே தந்துவிடுகிறேன் ” என்றாள் .

கமலினக்கு சுரீரென்றது .இந்த வேலை அவளுக்கு எதற்காக கொடுக்கப்படுகறது …? அவள் அந்த நொடி தன்னைத் தானே கேவலமாக உணர்ந்தாள் .

” இப்படி ஒரு பய  எண்ணத்தோடு கொடுக்கப்படும் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம் மேடம் .இனி நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காத்தால் நீங்களும் எதற்கும் கவலைப்படாமல் தைரியமாகவே இருக்கலாம் …” உச்சி மண்டையில் நச்சென கொட்டுவது போல் வார்த்தைகளை விட்டவள் ,சட்டென அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி வந்துவிட்டாள் .பிறகு விழா முடிந்து வெளியேறும் நேரம் வரை அவர்கள் யார் பார்வையிலும் படாமல் மறைவாகவே இருந்து கொண்டாள் .

நேற்று அந்த அளவு தெளிவாக சொல்லிவிட்டு வந்த பிறகும் இன்று அவளுக்கு வேலை உத்தரவு வந்திருக்கிறதென்றால் …ஆ…அதோ …பாரிஜாதம் . கார் வந்து நின்று  அவள் இறங்கும் போதே வேகமாக போய் அவள் முன் நின்றாள் கமலினி .அவள் பக்கமே திரும்பாமல் எம்.டிக்கு உரிய அதிகார பார்வையுடன் அவளை கடந்து மாடியேறினாள் பாரிஜாதம் .

What’s your Reaction?
+1
23
+1
18
+1
3
+1
3
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!