Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 5

5

முகம் தூக்கிக் கொண்டிருந்தாக
வேண்டும் நான்..
முத்தங்கள் மட்டும்
கேட்டு விடாதே..

“அண்ணி, இந்த நகையையும் சேர்த்து போட்டுட்டு வரச் சொன்னாங்க அம்மா..”
அருணாச்சலம் வீட்டின் ஒரே செல்லப் பெண்ணான சித்ரலேகா ஒரு நகை பெட்டியை கொண்டு வந்து மைதிலி அருகில் வைத்து விட்டு போனாள்..
மைதிலியை முந்திக் கொண்டு, கிரிஜா அதை முதலில் திறந்து பார்த்தாள்.. அவள் விழிகள் தெறித்து விடும் போல் விரிந்தன.. அந்த பெட்டியில் காசுமாலை, மாங்காய்மாலை, அட்டிகை இழைக்கம்மல் என பழைய மாடல் நகைகள் இருந்தன.. இவையெல்லாம் என்ன நகைகள்.. மைதிலி புரியாமல் அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கிரிஜா அவற்றை எடுத்து தன் கழுத்தில் காதில் என வைத்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
“எத்தனை கனம்.. என்ன வேலைப்பாடு.. இவைகளே நூறுபவுன் இருக்கும் போலவே..” என முணுமுணுத்தாள்.
“அந்த நகைகள் என் மாமியாருடையது.. ரொம்ப ராசியானது.. அதனால் அவற்றை எனக்கு வரப்போகும் மருமகள் போட்டுக் கொண்டு கல்யாண மேடைக்கு வரனும்னு கொடுத்து விட்டேன்..” சொன்னபடி மணமகள் அறையினுள் வந்தாள் மகாராணி..
மாங்காய் மாலையை மேலே வைத்துப் பார்த்து திருப்தி இன்றி அதன் கொக்கியை சுழற்றி கழுத்தில் அணிந்து பார்த்து விடும் தீர்மானத்தில் இருந்த கிரிஜா திருதிருவென கையில் மாலையோடு விழித்தாள்.. நான் கழுத்தில் போட போனதை இந்த அம்மா பார்த்து விட்டாரோ..?
“போட்டு விடுங்கள் அண்ணி..” அவள் தனக்கு போடுவதற்காக அந்த நகையின் கொக்கியை சுழட்டியபடி இருந்தாள் என மகாராணி பார்வைக்கு தெரியும்படி தனது கழுத்தை நீட்டி பின்னலை உயர்த்தினாள் மைதிலி..
மகாராணி கிரிஜா கையிலிருந்த மாலையை வாங்கி தானே மைதிலி கழுத்தில் போட்டுவிட்டாள்.. பெட்டியினுள் இருந்த இன்னும் சில நகைகளை போட்டு விட்டு, மீதி இருந்தவற்றை பெட்டியை இறுக மூடி பத்திரப்படுத்தினாள்..
“நம் பாரம்பரிய நகைகள்.. வேறு யாருக்கும் கொடுத்துவிடக் கூடாது.. பத்திரம்..” சொல்லிவிட்டு கிரிஜாவை ஓரக்கண்ணால் ஒரு மாதிரி பார்த்து விட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
வெளிறிப் போய் கிடந்த அண்ணியின் முகத்தை சிறு சிரிப்போடு பார்த்து விட்டு கண்ணாடிக்கு திரும்பிக் கொண்டாள் மைதிலி.. முதலில் மிக திருப்தியோடு இருந்த இந்த கல்யாணம் இப்போது கிரிஜாவிற்கு அவ்வளவாக பிடிக்காம போய்விட்டதை மைதிலி உணர்ந்தே இருந்தாள்.. இந்த அளவு செல்வ செழிப்பை கிரிஜா அருணாச்சலம் குடும்பத்தினரிடமிருந்து எதிர்பார்க்க வில்லை..
பூவைத்து திருமண முடிவு செய்த நாளுக்கு திருமண நாளுக்கும் இடைப்பட்ட மூன்று மாதங்களில் பெண்ணை பார்க்கவென அடிக்கடி அவர்கள் வீட்டாட்கள் அடிக்கடி மடை போல் திரண்டு வந்து கொண்டே இருந்தனர்.. பட்டிக்காட்டு கும்பல் என் பேச தோதாக இதில் கிரிஜாவிற்கு பரம திருப்தி என்றாலும், அவ்வாறு வரும் ஒவ்வொரு முறையும் அவர்கள் பட்டும், நகையுமாக வந்து நின்றதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை..
இவர்கள் குடும்பத்தில் அப்படி எவ்வளவுதான் பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள்..? பேசாமல் ஐ.டி டிபார்ட்மென்டுக்கு ஒரு கம்ப்ளைன்ட் எழுதி போடுவோமா.. என நினைக்கும் அளவிற்கு போனாள் கிரிஜா.. அப்படி இதுபோல் கொண்டு வந்து நகைகள் போதாதென பாரம்பரிய நகைகள் என்ற பெயரில் இதோ இவைகள் வேறு.. விடிந்தால் திருமணம்.. மதுரையின் மிகப்பெரிய கல்யாண மண்டபம் ஆடம்பரமான அலங்காரங்களுடன் இவர்கள் திருமணத்திற்கு தயாராக இருந்தது.. இப்போது சற்று முன்தான் நிச்சயதார்த்தம் முடிந்தது..
மைதிலி தன் மோதிரவிரலில் மின்னிய வைர மோதிரத்தை தொட்டு பார்த்தாள்.. அது பரசுராமன் அவளுக்கு அணிவித்த நிச்சய மோதிரம்.. அந்த மோதிரத்தை போடும் போதாவது அவன் தன் முகத்தை பார்த்தானா.. மூளையை கசக்கி யோசித்து பார்த்தாள்.. 




அது போலொரு சம்பவம் அவளுக்கு நினைவு வரவில்லை.. அவன் மண்டபத்தினுள் புதுமாப்பிள்ளை தோரனையுடனேயே எங்கேயும் அவள் கண்ணில்பட வில்லை..
மண்டபத்திற்கு காலையில் வந்ததிலிருந்து அவள் பார்வையில் அவன் பட்டுக் கொண்டுதான் இருந்தான்.. ஆனால் மணமகனாக இல்லை.. யார் கல்யாண வீட்டிலோ கல்யாண வேலைகளை எடுத்துச் செய்யும் ஒரு உறவின ஆளாக, எப்போதும் ஏதோ ஓர் வேலையுடன் ஓடியபடி இருந்தான்.. ஒருநேரம் மேடை அலங்காரத்தை பார்வையிட்டான்.. மறு நிமிடமே வாசல் அலங்காரத்தை கவனித்தபடி இருந்தான்.. ஐந்தாவது நிமிடம் சமையல் கட்டில் இருந்தான்.. மடித்து கட்டிய வேட்டியுடன் மண்டபம் முழுவதும் ஏதோ ஓர் வேலையை செய்தபடி அல்லது கண்காணித்தபடி இருந்தான்.
“அதோ வாழையிலைக் கட்டை தோளில் தூக்கிட்டு போறார் பாருங்க.. அவர்தான் மாப்பிள்ளை..” கிரிஜா குரலில் ஒரு துள்ளலோடு அவர்கள் பக்கத்து உறவினர் ஒருவருக்கு சுட்டிக்காட்டினாள்.. அந்த உறவினரின் முகம் அதிருப்தியில் சுருங்கியது.. கிரிஜாவின் முகம் மிக திருப்தியானது..
நிச்சயதார்த்த மோதிரம் போட மாப்பிள்ளையை கூப்பிட்டுங்க என சொல்லப்பட, பரசுராமன் மண்டபம் முழுவதும் தேடப்பட்டு இறுதியில் கல்யாண சாப்பாட்டிற்கான மளிகை சாமான்களை சரி பார்த்துக் கொண்டிருந்த குடோனிலிருந்து அழைத்துக் கொண்டு வரப்பட்டான்.. வியர்க்க விறுவிறுக்க மேடை ஏறியவன், பாக்கெட்டிலிருந்து மோதிரத்தை எடுத்து அவள் கைகளில் சொருகிவிட்டு கடமைக்கு போட்டோ, வீடியோவிற்கு போஸ் கொடுத்து விட்டு இறங்கி போய்விட்டான்..
“மைதிலி என்னடி இவர் இப்படி இருக்கிறாரு..?” சுமதியின் குரலில் எரிச்சல் வெளிப்படையாக தெரிந்தது..
“சுமதி அவர் உழைப்பாளிடி.. முதலாளிங்கறி பந்தா, தோரணை எதுவும் இல்லாமல் எப்படி இறங்கி வேலை பார்க்கிறார் பாரேன்.. அதுவும் இன்றைக்கு, அவரது கல்யாண நாளன்றைக்கு கூட, இவர் மட்டும் இல்லைடி இவரது தம்பிகளும் அப்படித்தான் பரபரன்னு வேலை பார்த்துட்டே இருக்காங்க.. இந்த உழைப்புதான் அவுங்க குடும்பத்தை இதுபோல் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது..”
சௌமியா, சுமதிக்கான பதிலை சொன்னாள்.. ஆதரவாக மைதிலியின் தோளை அழுத்தினாள்.. அவளுக்கு அருணாச்சலம் குடும்பத்தாரின் மேலுள்ள பிரேமை போகவில்லை.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே போனது..
அவளுக்கு நேரெதிராக சுமதிக்கு அதிருப்தி அதிகரித்துக் கொண்டே போனது.. வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு அதனை கூட அனுபவிக்காமல் அப்படி என்ன வேலை..? என்ற வாதம் அவளுடையது..
தோழிகள் இருவரின் பேச்சுக்கள் எதிலும் மைதிலி கலந்து கொள்ளவில்லை.. அவள் தாழ்த்திய விழிகளுடன் தன் வேலையை பார்த்தபடி இருந்தாள்.. மிக அமைதி போல், பெரிய திருப்தி போல் காட்டிக் கொண்டிருந்த அவள் முகத்தின் பின்னே எரிமலையாய் கொதிக்கும் இன்னொரு முகம் இருந்தது.. அந்த முகத்தின் கொதிபபில் வந்தனா இருந்தாள்… நானும் பரசுராமுவும் காதலிக்கிறோம் என்றாள்..
அப்படி காதலிக்கும் முகமா இது.. மைதிலி மெல்ல மணமகள் அறையை விட்டு வெளியே வந்து கீழே பார்த்தாள்.. மாடியில் அவளது அறை.. கீழே நடப்பவை எல்லாம் அங்கிருந்தே பார்க்க முடிந்தது.. மணமேடையில் வைப்பதற்காக வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு பெரிய வெள்ளிக் குத்துவிளக்குகளை நகர்த்த கூட முடியாமல் விழித்து நின்ற தங்கை சித்ரலேகாவை நகர்த்தி விட்டு கைக்கு ஒன்றாக அந்த அரை ஆள் உயர விளக்குகளை எளிதாக தூக்கிக் கொண்டு மண்டப வாசலில் இருந்து மணமேடை நோக்கி வந்து கொண்டிருந்தான் பரசுராமன்.. தூக்கியிருந்த கனத்தினால் திரண்டிருந்த அவன் புஜங்கள் சட்டையை மீறி வெளியே தெரிந்தன..
தங்கைக்கென பாரம் சுமந்தாலும் அப்போது அவன் முகத்தில் பாசத்தின் பரிவோ, அன்பின் நெகிழ்வோ இல்லை.. இதை முடித்து விட்டு அடுத்த வேலை எனும் பரபரப்போடு கூடிய வேகம் மட்டுமே இருந்தது.. உணர்வுகள் ஏதுமற்ற மரக்கட்டை முகம், இந்த இரும்பு மனிதனுக்கு காதல் வந்திருக்குமா..? இவன் ஒரு பெண்ணை காதலித்திருப்பானா..? மைதிலியால் வந்தனாவை நம்ப முடியாமல் போனது..
அவள் அதன்பிறகு வந்தனாவை சந்திக்கவே யில்லை.. அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்ளவில்லை.. தந்தையிடம் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன நாளிலிருந்தே அவள் வீட்டில் கல்யாண பரபரப்பு ஆரம்பமாகி விட்டது.. நகை எடுக்க, உடைகள் வாங்க பாத்திரங்கள் சேர்க்க.. என தாயும் தந்தையும் வேலைகளில் இறங்க தனது கடைசி பரீட்சையை முடித்து விட்ட மைதிலி வீட்டிற்குள் முடங்கிக்கொண்டாள்.. யாரையும் பார்க்கும் எண்ணம் அவளுக்கு வரவில்லை.. வந்தனா அவளை சந்திக்க முடியாமல் தவித்திருப்பாள் என அவளுக்கு தெரியும்.. இன்னமும் அவளிடம் பேச வேண்டுமென்ற ஆவலுடன் இருந்த ரவீந்தரையுமே அவள் சந்திக்கவில்லை.. அவனாக முயன்ற ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களையும் கூட தட்டிவிட்டு விட்டாள்..
“மைதிலி மண்டபத்திற்குள் வரும்போது பார்த்தேன்டி.. நம்ம ரவி வாசலில் நின்னுட்டிருந்தான்.. வெள்ளை வேட்டி சட்டை போட்டு பெரிய மனுசன் 
மாதிரி நின்னாண்டி.. என்ன அழகாக இருந்தான் தெரியுமா..?” சௌமியா வழக்கம் போல் ஜொள் ஊத்திக் கொண்டிருந்தாள்..
ரவீந்தர் வந்துவிட்டானா..? ஒருவேளை இங்கேயே வந்து விடுவானோ..? மைதிலி டென்சனுடன் நகம் கடிக்க ஆரம்பித்தாள்..
“உனக்கு வேறு வேலை இல்லடி.. எப்போ பார்த்தாலும் அவனை சைட் அடிச்சிட்டு..” சுமதி சௌமியாவை சலித்தாள்..
“சைட் அடிக்கிற மாதிரி இருக்கிறான் அடிக்கிறேன்.. உனக்கென்னடி..? நான் வெளிப்படையாக சொல்லிடுறேன்.. நீ அமுக்கினி மாதிரி உள்ளுக்குள்ளேயே வச்சுக்கிட்டு திருட்டுத்தனமாக பார்ப்பாய்..”
“என்னடி சொன்ன..?” தோழிகள் இருவரும் ஒரு செல்ல சண்டையை ஆரம்பித்தனர்.. மைதிலி புன்னகையுடன் அவர்களை வேடிக்கை பார்த்தாள்..




இரவு உணவு முடிந்ததும் எல்லோரும் ஆங்காங்கே படுத்து உறங்க தொடங்கிவிட, இதமான ஏசி குளிர் பொழிந்து மணமகள் அறையினுள்ளும் தூக்கம் வராமல் புரண்டபடி இருந்தாள் மைதிலி.. ஏனோ அவள் மனம் அதிகாலை திருமணத்தை நினைத்து திக் திக்கென அடித்துக் கொண்டிருந்தது.. இது சரியா.. தவறான முடிவெடுத்து விட்டேனா..? குழம்பியபடியே இருந்தாள்..
மணப்பெண்ணென அவளுக்கு படுக்க வசதியாக கட்டிலை ஒதுக்கி விட்டாலும், அறையின் தரை முழுவதும் விருந்தினர்கள் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.. இந்த செயற்கை காற்றை விட்டு விட்டு, கொஞ்சம் காற்றாட வெளியே போய் நின்றால் இந்த மன இறுக்கம் குறையுமென தோன்ற படுக்கையை விட்டு எழுந்தாள்.. மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள்..
குனிந்து தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள், மாலை நிச்சயதார்த்தம் முடிந்ததும் கனத்து உடல் மேல் கிடந்த பட்டுச் சேலை, நகைகளை கழட்டி வைத்து விட்டு நைட்டியை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் இருந்த போது, மகாராணி அறையினுள் வந்தாள்..
“எல்லா நகைகளையும் கழட்டி வச்சிடாதே ஒன்றிரண்டு இருக்கட்டும்.. இந்தா இந்த சேலையை கட்டிக்கிட்டு பட்டை மாத்திக்கோ..” தயாராக கையில் கொண்டு வந்த காட்டன் சேலையை கொடுத்தாள்..
என்ன இது நான் தூங்கும் போது போட்டுக் கொள்ளும் உடைகளை கூட இவர்கள் தீர்மானிக் கிறார்களே, சிறு குறைபாட்டுடன்தான் வந்த சேலையை வாங்கினாள் மைதிலி..
ஆரஞ்சு வண்ணத்தில் ஓரங்களில் தங்கசரிகை ஓடிய அந்த சேலையை தொட்டுப் பார்த்த கிரிஜா.. “சந்தேரிகாட்டன்” என முணுமுணுத்தாள்.. அந்த வகை காட்டன் சேலைகளின் விலை அவளுக்கு தெரியும்.. இரவு படுத்து உறங்க இந்த அளவு விலை உயர்ந்த சேலையா.. பூகம்பம் பொங்கியது கிரிஜாவினுள்..
மைதிலி அந்த சேலையைத்தான் இப்போது அணிந்திருந்தாள்.. கூடவே ஒன்றிரண்டு மயில் முகப்புடன் கூடிய மகாராணி அவள் கழுத்தில் விட்டிருந்த மயில் முகப்புடன் கூடிய அடுக்கடுக்கான நீள செயின்கள் தொங்கும் சந்திரஹாரம் வகை கழுத்தணி ஒன்றும் அவள் கழுத்தில் கிடந்தது.. நகைகளோடு வெளியே போவது சரியா என யோசித்து விட்டு மண்டபத்தில் பாதுகாப்பை நினைத்துக் கொண்டு துணிவுடன் வெளியே வந்தாள்..
கீழே நிச்சயதார்த்ததிற்கான மணமேடை அலங்காரம் மாற்றப்பட்டு, மறுநாள் திருமணத்திற்கு வேறு அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.. அதனை ஓரக்கண்ணால் பார்த்தபடி மாடியின் பின்புற பால்கனியில் வந்து நின்றாள்.. வெளிப்புற காற்று முகத்தில் குளிர்ச்சியாய் மோதி புத்துணர்ச்சியை தந்தது.. மண்டபத்தின் பின்புறம் இருளாய் தெரிய, ஏகாந்தத்தை விரும்பிய மைதிலியின் மனம் அந்த தனிமையை விரும்பி பால்கனியிலிருந்து கீழிறங்கிய மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்தாள்..
அப்படியே அந்த மாடிப்படி அடி இருளிலேயே நின்றபடி எதிரிலிருந்து இருளை வெறித்தபடி நின்றாள்.. அவள் மனதினுள் வந்தனாவை சந்தித்த பொழுதுகள் வலம் வந்தன, ஒருவேளை அவள் உண்மைதான் சொன்னாளோ.. கல்லெறிந்த குளமாய் குழம்பியது மைதிலியின் மனது.. நான் எங்கேயாவது தவறு செய்கிறேனோ.. தனக்கு தானே சுய அலசலில் இறங்கினாள்.. எத்தனை விதமான மன ஆராயச்சியில் இருந்தாலும் ஒரு விசயத்தில் மட்டும் அவள் அடிமனது உறுதியாக இருந்தது அது.. இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் மட்டும்..
“இந்த திருமணம் நடக்கவே கூடாது.. எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்..”
கேட்ட குரலில் அதிர்ந்தாள்.. மிக ரகசியமாக தாழ்ந்த குரலில் பேசப்பட்டதுதான்.. ஆனாலும் அந்த குரலில் தெரிந்த வன்மத்தில் மைதிலியின் உடல் நடுங்கியது.. யார் இவ்வளவு ஆவேசமாக பேசுவது..? இன்னமும் தன்னை இருளினுள் பதுக்கிக் கொண்டு கவனித்தாள்..
மாடிப்படியை ஒட்டி பெரிதாக வளர்ந்து நின்ற வேப்பமரத்தின் பருத்த கிளையின் நிழலில் மறைந்து நின்று இருளோடு இருளாக கலந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர்.. இருவர்.. இல்லை.. இல்லை.. மூவர்.. எண்ணிக்கை கணிக்க முடியாதபடி தரையில் விழுந்தன அவர்கள் நிழல்கள்..
மைதிலியின் இதயம் மூச்சுக்கு தவித்தது.. இல்லை.. இந்த திருமணம் நிற்க கூடாது.. யாரிடம் போய் என்ன சொல்வது.. விழிகளை பரபரப்பாக சுழற்றினாள்.. அப்படியே இருளிலேயே பதுங்கி நடந்து மண்டபத்தின் முன் பக்கம் வந்தாள்.. அங்கே சிறு சோம்பலுடன் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்த சிலர் கண்களில் பட, சல்லடையாய் அவர்களை சலித்தாள்.. ஓரிடத்தில் அவள் விழிகள் ஸ்தம்பித்தன..
அவன்.. ரவீந்தர்தானே..?
அவனேதான் யாரோ இருவருடன் பேசிக் கொண்டிருந்தான்.. மைதிலி ஒரே ஒரு நிமிடம்தான் யோசித்தாள் பிறகு “ரவி” என மெல்லிய குரலில் அழைத்து விட்டு சுவரின் பின்புறம் தலையை இழுத்துக் கொண்டாள்.. தன் பெயர் சொல்லி அழைத்தவரை காண ரவீந்தர் சுவற்றின் இருளான பகுதியை நோக்கி வர ஆரம்பித்தான்.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!