Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 13

13

அழுதாயா என்ன.. கன்னம் தடவும் போது
தான் நினைவு வருகிறது..
பின் கழுத்து முடிவருடினாயே
அப்போதாய் இருக்கலாம்..

திருமணம் முடிந்து இந்த சில நாட்களில் கணவனின் பார்வைகளை நன்றாக இனமறிந்து வைத்திருந்தாள் மைதிலி.. இது.. இப்படி என்ற விளக்கங்களை தரும் உணர்வுகளை அவன் முகம் காட்டாவிட்டாலும், கணவனின் தேவைகளை அவளுக்கு தயங்காமல் உணர்த்தியபடி இருக்கும் அவன் கண்கள்..
ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும், அழைத்தல் களையும் தரும் அவனது பார்வைகளுக்கு பழகியிருந்த மைதிலி இன்று அவனது பார்வையில் குழம்பினாள்.. இதென்ன பார்வை..? ஏன் இப்படி பார்க்கிறான்..? குழம்பியபடி பால் தம்ளரை நீட்டினாள்.. அதனை வாங்கி பக்கத்தில் வைத்தவன், 
“வந்தனாவிடம் என்ன பேசினாய்..?” நேரடியாக கேட்டான்..
மைதிலி அதிர்ந்தாள்.. இ.. இவன் இப்போது எதற்கு வந்தனாவைப் பற்றி பேசுகிறான்..? எப்போது அவளிடம் பேசிய விபரங்கள் கேட்கிறான்..? மைதிலிக்கு தான் திருமணத்திற்கு முன்பே வந்தனாவுடன் பேசிய நாட்கள் நினைவு வர உடல் வியர்த்தது..
அந்த வந்தனா என்னென்ன சொல்லி வைத்திருக்கிறாளென தெரியவில்லையே.. அவள் மனம் தடதடத்தது..
“வந்தனாவை கண்டபடி பேசிவிட்டுத்தான் உன் மாமனாரிடம் பாராட்டு வாங்கிக் கொண்டாயாக்கும்.?”
கண்டபடி நான் பேசினேனா.. கணவனை வெறித்தாள் மைதிலி..
“இங்கே பார் வந்தனாவின் குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையே இப்போது கொஞ்சம் சண்டையாக இருக்கிறது.. ஆனால் எப்போதும் இப்படியே இருக்காது.. அப்பாவும், அத்தையும் விரைவில் சமாதானம் ஆகிவிடுவார்கள்.. நீ இடையில் புகுந்து வந்தனா மனம் நோகும்படி எதுவும் பேச வேண்டாம்.. வந்தனாவிடம் எப்போதும் ஆதரவும், பாசமுமாக பேசவேண்டும்..” உத்தரவு போல் பேசிவிட்டு படுத்துவிட்டான்..
மித மிஞ்சி தாக்கிய அதிர்ச்சியில மைதிலி தூக்கம் வராமல் விழித்துக் கிடந்தாள்.. இவன் இப்போது என்ன சொல்ல வருகிறான்..? அந்த வந்தனா பேசிய பேச்சுக்கள் இவனுக்கு தெரியுமா..? தெரிந்தாலும் இப்படியேதான் பேசுவானா..? எவ்வளவு ஆதரவு அவளுக்கு..
“நானும் பரசுவும் மனதாரக் காதலிக்கிறோம்..” என்ற வந்தனாவின் வார்த்தைகள் அவளுக்குள் வலியோடு வலம் வந்து கொண்டிருந்தன.. இன்னமும் இவர்கள் காதல் தொடர்கிறதா..? அதனால்தான் அன்று வந்தனா அவ்வளவு தைரியமாக பேசினாளா..?
பரசுராமன் அப்பாவிற்கு மரியாதை தரும் பையன்.. அவர்கள் தொழில், குடும்ப கௌரவத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன் அதையெல்லாம் கூட ஒதுக்கி விட்டு நியாயமற்ற முறையில் அவளுக்கு பரிந்து பேசுகிறானென்றால் அவன் மனதில் வந்தனா எந்த அளவு ஆழமாக பதிந்திருக்க வேண்டும்..?
ஆமாம் அப்படித்தான்.. இன்று வரை மனைவி என்ற எண்ணமின்றி ஒரு பெண் என்ற உணர்வுடன் மட்டும் அவளுடன் உடலோடு உறவாடியவன், இன்று அந்த வந்தனாவிற்காக என் பக்கமே திரும்பாமல் படுத்துக் கொண்டுள்ளானே.. திரும்பி படுத்திருந்த கணவனின் முதுகை வெறித்தாள் மைதிலி.. திருமணம் முடித்த இந்த இரண்டு மாதங்களில் அவளை தொடாமல் அவன் தள்ளியிருந்த நாள் இதுதான்.. அப்படியா இவன் மனதில் அந்த வந்தனாவின் ஆதிக்கம் இருக்கிறது..?




மைதிலியின் தலையனை இன்றும் ஈரமாகத்தான் இருந்தது..
ரவீந்தர் வெளிநாடு கிளம்பிப் போய்விட, வீடு ஒருவகை எந்திரமாய் இயங்குவதாக மைதிலிக்கு தோன்றியது.. அவன் இருந்தாலாவது அடிக்கடி ஏதாவது சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருப்பான்.. வீட்டின் மற்ற ஆண்கள் வீட்டிற்குள் வருவதும் தெரியாது.. போவதும் தெரியாது..
மதிய சமையலில் மந்தமாக இயங்கிக் கொண்டிருந்த அடுப்படியினுள் தரையில் அமர்ந்து மாவு சலித்துக் கொண்டிருந்த கௌரிம்மாவிடம் சென்று உட்கார்ந்தாள் மைதிலி..
“மாமாவிற்கும் அவர் தங்கை வீட்டிற்கும் இடையே என்ன சண்டை மாம்டாக்கா..?”
“உனக்கு தெரியாதா..? உன் புருசன் சொல்ல வில்லையா..?” கௌரிம்மாவின் குரலில் ஆச்சரியம்..
“ம்ஹீம்..” தலையசைத்தவளை கொஞ்சம் பரிதாபமாக பார்த்தாள்..
“அருணாச்சலம் அண்ணாவும், ஈஸ்வரி சுந்தரேசனும் இரண்டு வருசத்து முன்னாடி வரை மாப்பிள்ளை, மச்சான்னு தோள்ல கை போட்டுட்டுத்தான் திரிஞ்சாங்க.. சுந்தரேசன் ஊரில் விவசாயம் பார்த்துட்டு இருந்தவன்.. அருணாச்சலம்தான் அவனை மதுரைக்கு கூட்டி வந்து தன்னோட கடையில் கொஞ்ச நாள் வச்சிருந்து தொழில் சொல்லிக் கொடுத்து, அவன் கடைக்கு எதிரில் இன்னொரு கடையும் ஆரம்பித்துக் கொடுத்து சுந்தரேசனை வியாபாரியாக்கினார் அருணாச்சலம்..
எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருந்தது.. தன் வீட்டிற்கு எதிரேயே தங்கைக்கும் வீடு கட்டிக் கொடுத்தார்.. இரண்டு குடும்பங்களும் நெருக்கமாக பழகினார்கள்.. இன்னமும் அந்நியோன்யமாக என்ன வழி என்று யோசித்து சம்பந்திகளாவது என்ற முடிவெடுத்தார்கள்.. பரசுராமனுக்கும், வந்தானவிற்கும் திருமணம் பேசினார்கள்.. சுந்தரேசனுக்கு வந்தனா ஒரே பெண்.. ஈஸ்வரிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடுத்து அவளால் குழந்தை பெற முடியவில்லை.. தனது ஒரே மகளை பத்திரமாக அண்ணன் வீட்டில் ஒப்படைக்கும் எண்ணம் அவளுக்கு.. தனது வளர்ந்து வரும் தொழிலை தன் மச்சான் குடும்பத்திடமே ஒப்படைக்கும் எண்ணம் சுந்தரேசனுக்கு.. அதனால் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி..”
“இரண்டு பேருக்கும் நிச்சயம் பண்ணிவிட்டார்களா..?” மைதிலி படபடப்பாய் இடையிட கௌரிம்மா அவள் தலையை ஆதரவாக வருடினாள்..
“நீ பயப்படுவது போல் இந்த கல்யாண பேச்சில் எந்த சங்கடமும் கிடையாதும்மா.. சும்மா இந்த வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து இரண்டு பேருக்கும் மணம் முடித்தால் 
எப்படி இருக்குமென்று பேசிக் கொண்டார்கள்.. அந்த சம்பந்தத்தால் தங்கள் வீடுகளுக்கு, தொழில்களுக்கு வரப்போகும் நன்மைகள் குறித்து விவாதித்துக் கொண்டார்கள்.. ஒரு வியாபார ஒப்பந்தம் போல் அது இருந்தது அவ்வளவுதான்..”
மைதிலியின் மூச்சோட்டம் கொஞ்சம் சீரானது..
“ம்.. சரி.. அப்புறம் என்னாச்சு..?”
“சுந்தரேசனுக்கும், ஈஸ்வரிக்கும் இப்போதே இந்த திருமணம் நடந்து முடித்து விட்ட உணர்வு வந்துவிட்டது.. அதனால் சுந்தரேசன் தொழிலும், ஈஸ்வரி இங்கே வீட்டிலும் தங்கள் உரிமையை அதிகாரமாக காட்ட ஆரம்பித்தார்கள்.. என் மகளுக்கேற்றாற் போல் இந்த வீட்டையே மாற்றப் போகிறேனென ஈஸ்வரி சொல்ல, என் மகளின் வருங்கால கடை.. எனக்கும் இங்கே முதலாளி அந்தஸ்து வேண்டும் என சொல்லாமல் சொல்லி சுந்தேரசன் கல்லாவில் உட்கார முயல அருணாச்சலத்திற்கு கோபம் வரத் துவங்கியது..”
“இந்த தொழில் அருணாச்சலம் பத்து வயதிலிருந்து உயிரைக் கொடுத்து வளர்த்து வந்தது.. அதனை அவனுக்கு மட்டுமே உரிமையாக நினைத்தார்.. கடையின் கல்லாவில் அவர் இதுவரை தன்மகன்களையே அமர விட்டதில்லை.. தான் மட்டுமே அதில் உட்கார நினைப்பார்.. இப்போது சுந்தரேசன்.. கல்லாவில் உட்கார்ந்து காலாட்டியபடி இருக்க, அருணாச்சலத்தின் ரத்தம் கொதித்தது..
அத்தோடு சுந்தரேசன் அவர்கள் வியாபாரத் தொடர்புடைய இடங்களிலும் தானே கடை உரிமையாளன் போல் பேசத் துவங்க அருணாச்சலம் யோசிக்க தொடங்கினார்.. திருமணத்திற்கு முன்பே இப்படி என்றால்.. திருமணம் முடிந்த பிறகு..”
“எழுந்துருங்க மாப்பிள்ளை…” கல்லாவில் உட்கார்ந்திருந்த சுந்தரேசனிடம் அருணாச்சலம் கையாட்ட சுந்தரேசனின் முகம் மாறியது..
“இது எப்போதும் என் இடம்.. என்னைத் தவிர வேறு யாருக்கும் இங்கு இடமில்லை..” அழுத்தமாக அமர்ந்தார்.
“எத்தனை நாளைக்கு மச்சான்.. பரசுவுக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் ஆன பிறகு இது என் மகளின் இடம் தானே..?”
“அது எப்படி..?”
“உங்களுக்கு பிறகு இந்த இடம் பரசுவுக்கு.. அவன் சொத்தில் அவன் மனைவிக்கு உரிமை கிடையாதா..?”
“இதோ இப்போது என் இடத்தை என் மனைவிக்கு கொடுத்திருக்கிறேனா.. என்ன..?”
சுந்தரேசன் திகைத்து நின்றார்..
“நல்லா கேட்டுக்கோங்க மச்சான்.. இது நான் பத்து வயதிலிருந்து உயிரைக் கொடுத்து வளர்த்த தொழில்.. இதில் முழு உரிமையும் எனக்கு மட்டும்தான்.. மனைவி, பிள்ளைகள் எல்லாம் எனது தொழிலுக்கு பிறகுதான்.. என் தொழில் உரிமையும் நான் பார்த்து யாருக்கும் கொடுத்தால்தான்… என் மகன்களுக்கே அதை இன்னமும் நான் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை.. நீங்களெல்லாம்..”
அருணாச்சலம் பார்த்த துச்ச பார்வை சுந்தரேசனை ஆத்திரம் கொள்ள வைத்தது..
“இப்படி சுயநலம் பிடித்த உன் வீட்டில் நான் எப்படி என் ஒரே பெண்ணைக் கொடுப்பேன்..?”
“நானா கேட்டேன்..? நீயாகத்தான் என் மகளை மருமகளாக்கிக்கோன்னு கெஞ்சினாய்..”
“நான் கெஞ்சினேனா.. உன்னிடம் கெஞ்சி கேட்டு உன் வீட்டிற்கு அனுப்பும் அளவு என் மகளின் நிலைமை இருக்கிறதா..?”
“பின்னே இல்லையா..? சாதாரண சுந்தரேசனின் மகள் அருணாச்சலம் அண்ணாச்சியின் மருமகளாவது என்றால் சாதாரண விசயமா..?”
அருணாச்சலம் மீசை முறுக்க சுந்தரேசனின் கண்கள் சிவந்தது..
“அருணாச்சலம்..” சுந்தரேசன் தன்னை மறந்து கர்ஜித்தார்..
“சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாதென்றுதான்.. என் மகளை உன் வீட்டில் கல்யாணம் முடிக்க நினைத்தேனே தவிர உன் சொத்துக்கள் மேல் ஆசைப்பட்டு இல்லை..”
“அட அப்படியா.. கொஞ்ச நேரம் முன்பு கல்லாவில் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டிருந்தது யாரோ..?”
“அருணாச்சலம் கையில் நாலு காசு வைத்திருக்கும் தைரியத்தில் ஆடாதே.. 
பணம் இன்றைக்கு வரும்.. நாளைக்கு போகும்.. உறவுகள்தான் என்றைக்கும் உடனிருப்பார்கள்..”
“அதனால் சம்பாதித்து சம்பாதித்து உறவுகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட வேண்டுமாக்கும்.. யோவ்.. போய்யா.. பேச வந்துட்டான்..”
“என்னடா சொன்ன.. உன் வீட்டில் வந்து சோற்றுக்கு நிற்கிறேனா நான்..?” ஆத்திரத்தில் சுந்தரேசன் அருணாச்சலத்தின் சட்டையை பிடித்தார்..
“பின்னே இல்லையா.. மழை இல்லை.. விவசாயம் ஒன்றும் சரியில்லை பிழைப்புக்கு வழி தெரியலைன்னு என் வீட்டு வாசலில் வந்து நீ நிற்கவில்லை..? தங்கையை உனக்கு திருமணம் முடித்துக் கொடுத்து விட்ட பாவத்திற்கு என் தொழிலை உனக்கு கற்றுக் கொடுத்து, புதிதாக அதே தொழிலை உனக்கு உருவாக்கியும் கொடுத்து இந்த மதுரையில் உன்னையும் ஒரு மனிதனாக நடக்க வைத்திருக்கிறேன்.. நீ இப்போது என் அடி மடியிலேயே கை வைக்கிறாயா..?”
அருணாச்சலம் சுட்டிய முன் வாழ்வு சுந்தரேசனுக்கு ஆக்ரோசம் தர, ஆத்திரத்தில் நிதானமிழந்து அருணாச்சலத்தை ஓங்கி அறைந்தார்..




“சீ மனுசனாடா நீ..? செய்தவற்றை சொல்லிக் காட்டுகிறாயே..”
“ஏய் என் மேலேயே கை வைக்கிறாயே..?” அருணாச்சலம் பதிலுக்கு கை நீட்ட.. அங்கே ஒரு கலாட்டா உருவாக, இருவருக்கும் அவரவர் பக்கத்துக்கு என சிலர் சேர்ந்து கொள்ள சாதாரண குடும்ப சண்டை பெரிய கலாட்டாவாக மாறி.. அவர்கள் கடை இருந்த இடமே கலவர பூமியானது.. போலீஸ் வந்து இருவரையும் ஸ்டேசன் கூட்டிப் போய் அங்கே வைத்து பஞ்சாயத்து பேசி.. இனி மாப்பிள்ளை-மச்சானிற்கிடையே எந்த உறவும் கிடையாது எனப் பேசி முடித்து அனுப்பி வைக்கப்பட்டனர்..
அதன் பிறகு சமாதானமாக பேச வந்த தன் தங்கை ஈஸ்வரியை வீட்டு வாசல் படி கூட ஏற அனுமதிக்கவில்லை அருணாச்சலம்.. இப்போது இரண்டு குடும்பங்களும் ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசக்கூட விரும்பாமல் பிரிந்து நிற்கிறார்கள்.. சும்மா பேசி வைத்த திருமணமும் நின்றுவிட்டது..
இப்போது கொஞ்ச நாட்களாக என் மகள் எப்படியும் என் அண்ணன் வீட்டு மருமகள்தான் என தங்கை ஈஸ்வரி பேசும் விபரம் அருணாச்சலத்தின் காதிற்கு வர, அவர் தன் மகனுக்கு அவசர அவசரமாக வெளியில் பெண் பார்த்து திருமணத்தை முடித்துவிட்டார்..
கௌரியம்மா சொல்லி முடித்த கதை மைதிலியின் மனதில் பாரமாக ஏறி அமர்ந்தது.. சூழ்நிலைகள் தான் நிகழ்வுகளை தீர்மானிக்கின்றன.. இங்கே இரு ஆண்களின் போலி கௌரவமும், தொழில கர்வமும் இரண்டு குடும்பங்களை பிரித்து விட்டது.. அத்தோடு காதல் கொண்டிருந்த இரு மனங்களையும் பிரித்து விட்டதே..
மைதிலிக்கு பரசுராமன்-வந்தனா மேல் பரிதாபம் வந்தது.. பெரியவர்களின் கோபத்திற்கு சிறியவர்கள் என்ன செய்வார்கள்..? தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்களே.. இதில் தன்னுடைய பங்கும் இருப்பதை நினைத்த மைதிலி மனம் நொந்தாள்..
வந்தனா என்னிடம் வந்து சொன்ன போதே, நான் அவள் பேச்சை கேட்டிருக்க வேண்டுமோ..? என்னை என் குடும்பத்தை மட்டுமே யோசித்து விட்டேனோ.. மிகவும் சுயநலமாக இருந்து விட்டேனோ.. நிலையில்லாமல் தவிக்க தொடங்கியது மைதிலியின் மனது..
“ஏய் மைதிலி என்ன இது..? சொத்தை கத்தரிக்காயாக எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாய்..?” மகாராணியின் அதட்டலில் சுய உணர்விற்கு வந்த மைதிலி, “சாரி அத்தை.. ஏதோ ஞாபகத்தில்..” சொன்னபடி தன் முன்னிருந்த கூடையிலிருந்து நல்ல காய்களை எடுக்க தொடங்கினாள்..
மகாராணியும் அவளும் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட் வந்திருந்தனர்.. தேவையான காய்களை வாங்கி கூடையில் நிரப்பிக் கொண்டு இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர்.. கார் டிராபிக்கில் மெல்ல நீந்திக் கொண்டிருந்தது..
“பேசி வைத்த திருமணம் நின்றது உங்களுக்கு வருத்தமாக இல்லையா அத்தை..?” மைதிலி மெல்ல ஆரம்பித்தாள்..
“எந்த திருமணம்..?”
“உங்கள் நாத்தனார் பெண்ணுடன் பேசி வைத்த திருமணம்..”
“ம்.. வருத்தம்தான்.. ஈஸ்வரி ரொம்ப நல்ல பெண்.. வந்தனாவும் ரொம்ப மரியாதை தெரிந்த பெண்.. என் மனதுப்படி என்றால் அந்த திருமணம் நிற்க விட்டிருக்க மாட்டேன்.. ஆனால் என்ன செய்வது.. எதுவும் என் கையில் இல்லையே.. நம் வீட்டில் உன் மாமா சொல்வதுதான் சட்டம்.. அவர் திருமணம் என்றார்.. நாங்கள் சரி என்றோம்.. திருமணம் வேண்டாம் என்றார்.. அதற்கும் சரி என்றோம்.. என்னவோ போ.. இப்படி ஒரு வாழ்க்கை எங்களுக்கு..”
மகாராணியின் சலிப்பில் அவளது ஏமாற்றம் அப்பட்டமாக தெரிய மைதிலியின் மனம் நைந்தது..
“அ.. அவருக்கும் கஷ்டம்தான்.. இல்லையா அத்தை..?” 
“யாருக்கு..?”
“உ.. உங்க பிள்ளைக்கு.. அவரும் இந்த திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்திருப்பாரே..”
மகாராணி கூர்மையாக மருமகளை பார்த்தாள்..
“இங்கே பாரும்மா.. கிடைக்காமல் போய்விட்ட ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவன் இல்லை என் மகன்.. அப்படி ஒன்றும் அவன் மனக் கஷ்டப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.. இரு குடும்பங்களும் பிரிய வேண்டாம்பா என்று அவன் அப்பாவிடம் கொஞ்சம் பேசினான்தான்.. ஆனால் அவர் மறுக்கவும் விட்டு விட்டான்.. இப்போது அப்பாவிற்கேற்ற பிள்ளையாய் திருமணம் முடித்துக் கொண்டு நன்றாகவே வாழ்ந்து வருகிறான்.. நீ எதையாவது நினைத்து மனதைக் குழப்பிக் கொள்ளாதே..”
நன்றாக வாழ்ந்து வருகிறாரா.. அவரது வாழ்க்கை உங்களுக்கு தெரியாது அத்தை.. ஊருக்காக உறவுக்காக ஒப்புக்கு ஒரு போலி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர்..
கலங்கி விட்ட கண்களை மாமியாருக்கு காட்ட விரும்பாமல் பார்வையை காருக்கு வெளியே திருப்பிய மைதிலி அதிர்ந்தாள்..
அ.. அது பரசுராமன்தானே.. அவன் பக்கத்தில் இருப்பது.. வந்தனாவா..?

What’s your Reaction?
+1
5
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!