maya nathi onru Serial Stories

Maya Nathi Onru – 1

பத்மா கிரகதுரை 

எழுதிய

மாய நதி ஒன்று 

                                           கதைக்குள் நுழைவதற்கு முன்  …                                             

முன்னுரை ;

அது 1775 வது வருடம் .

நம் நாட்டில் மன்னர்கள் ஆடசி மறைந்து கொண்டிருந்த காலகட்டம் .மன்னர்களின் கீழ் கட்டுப்பட்டு இருந்த குறுநில மன்னர்கள் காணாமல் போய் , பாளையக்கார்ர்களாகி பின் அவர்களது அதிகாரங்களும் குறைந்து ஜமீன்தார்ர்களாகி தங்களது பழைய அரச குல மதிப்புகளையும் , மரியாதைகளையும் , சுக போகங்களையும் கை நழுவ விட மனமின்றி , பழைய ராஜ நினைப்புடன் ஆங்காங்கே தங்களுக்கு கீழ் இருந்த நிலபுலனகளை நிர்வகித்தபடி ஒரு குறு நில மன்னனின் தோரணையுடன் ஜமீன்தாராக மீசை முறுக்கியபடி வலம் வந்த காலம் .

மன்னர்கள் ஆடசிக் காலத்தில் அவர்களுக்கு பரிசாக கிடைத்த நிலங்கள் ஏன் சிலருக்கு கிடைத்த ஊர்களை கூட தங்கள் கைப்பிடியின் கீழ் வைத்துக் கொண்டு தங்களை இன்னமும் மன்னர்களாகவே பாவித்துக் கொண்டு நடமாடி வந்தனர் அந்த பெரும் நிலக் கிழார்கள் .

தாங்கள் இழந்து கொண்டு வந்த அரச மரியாதைகள் அவர்களுக்குள் ஒரு வித வஞ்சத்தை உண்டாக்க , தங்களது இயலாமையை அப்பாவி மக்கள் மீது பிரயோகிப்பவர்களாக அவர்கள் இருந்தனர் .தங்கள் நிலங்களில் கூலி வேலை செய்யும் குடியானவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்தனர் .குடிக்க நீரும் , உண்ண உணவும் கொடுத்தால் போதும ..நீ எங்களது அடிமையாக காலடியில் கிடக்க வேண்டும் .இரவும் , பகலும் எங்களுக்கு உழைத்து ஓடாகத் தேய வேண்டும் எனபது போன்ற வரையப்படாத சட்டங்களை அந்த அப்பாவி மக்கள் மேல் செலுத்தினர் .

தங்கள் குல பிள்ளைகளை வெளிநாட்டிறகு அனுப்பி ஆங்கிலம் போன்ற பிற மொழிகளையும் கற்க வைத்த ஜமீன்தார்கள் , தங்கள் நிலப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு படிப்பையே மறுத்து வந்தனர் .” ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது ” ” படித்தவன் பாட்டை கெடுப்பான் ” என்பது போன்ற பழமொழிகளெ சொல்லி படிப்பவன் மடையன் எனபது போன்றதோர் உணர்வுகளை  அப் பாமர மக்களிடம் தோற்றுவித்தபடி இருந்தனர் .

எல்லா சமஸ்தானங்களும் இப்படித்தான் …எல்லா ராஜாக்களும் இப்படித்தான் என நினைத்து விட வேண்டாம் .அச் ஜமீன் சமூகத்திறகடையே சில நல்ல அரசர்களும் , அறபுத அரசாட்சியும் இருக்கத்தான் செய்தனர் .

ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்குள் பரவலாக தங்கள் ஆடசியை விரித்து விட்ட காலகட்டம் அது .முழுவதுமாக நாட்டை தங்கள் வசப்படுத்த ஆங்கிலேய பிரபுக்கள் முதலில் செய்த காரியங்கள அப்பகுதி நிலச்சுவான்தார்கள்ளை தங்கள் வசம் இழுக்க முயறசிப்பதுதான் .அப்போது ஆண்ட ஜமீன்தார்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் .

ஒன்று ஆங்கிலேயர்களுக்கு பயந்து அவர்களுக்கு மண்டியிட்டு வரி செலுத்தியவர்கள் .இரண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர முழக்கமிட்டு வரி செலுத்த மறுத்தவர்கள் .

அப்படிப்பட்ட  சில ஜமீன் அரசமைப்புகளை கறபனையாய் கூறும் கதை இது .

இக்கதை   நல்லவர்களும் , கெட்டவர்களும் கலந்து ராஜ்யமாண்ட ஒரு சிறு ஜமீன் சாம்ராஜ்யத்தை பற்றியது .இது நான் இது வரை படித்த கேள்விப்பட்ட சில ஜமீன் அரசாங்கங்களை அடிப்படையாக வைத்து  முழுக்க முழுக்க என் கறபனையில் உருவான கதை . இதில் வரும் கதாபாத்திரங்கள் , சம்பவங்கள் அனைத்தும் கறபனையே …எந்த ஜமீனையோ …ஜமீன்தாரையோ குறிப்பது அல்ல.




   1

மாயன்

நன்றாக கெட்டியான நீள செம்மண் சாலை அது .அதன் இரு புறமும் வரிசையாக சரக்கொன்றை மரங்கள் இருந்தன. அது வெயில் காலமாதலால் அந்த மரங்கள் மலர்களை பூத்து சொறிந்து கொண்டிருந்தன.  சரம் சரமாய் தொங்கிய மலர்கள் நீளமாக வடிந்து தங்க மணி ஆரம் போல் தொங்கிக் கொண்டிருந்தன .நிறைய மலர்கள் சாலையில் உதிர்ந்தும் கிடந்தன. அவை பொற் பூக்கள் தரையில் சிதறிக் கிடப்பதை போன்று காட்சியளித்தன .மொத்தத்தில் அந்த இடம் ஒரு தங்க நகரம் போன்ற பிரமையை அளித்தது .

அந்த சாலையில் ஒரு பல்லக்கு வந்து கொண்டிருந்த்து . மேக வர்ண பட்டுத் துணியிட்டு அது மூடப்பட்டு இருந்த்து . அதற்கு காவலாக பின்புறம் உயரமும் ஆகிருதியுமான ஒரு வீரன் குதிரையில் பின்னால் வர , முன்னால் சிறு குதிரை ஒன்றில் ஒரு சிறுவன் வந்து கொண்டிருந்தான் .

பார்கத்தான் அவன் சிறுவன் போல் தோன்றினானே ஒழிய  மிகப் பெரிய வீரனாக அவன் தன்னை பாவித்துக் கொண்டிருந்த்து தெரிந்த்து .தலையை விழுங்கி நெற்றியை மறைக்கும் பெரிய தலைப்பாகை ஒன்றை அவன் அணிந்து கொண்டிருந்தான் .திடுமென அது கண்கள் வரை இறங்கி மறைக்க , அடிக்கடி அதனை கையால் தூக்கி விட்டுக் கொண்டான் .இன்னமும் வராத மீசையை அடிக்கடி நீவி விட்டுக் கொண்டான் . சுற்றும் முற்றும் தனது தலையை திருப்பியபடியே வந்தான் .

அவனது உயரம் கருதி அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த குட்டிக் குதிரையை , ஏதோ பாரசீகத்து கம்பீர குதிரை போன்ற பாவனையோடு லகானை இழுத்து பிடித்து ஓட்டினான் . அந்த பல்லக்கு நபருக்கான பாதுகாப்பு தானே என செயல் அறிவித்தபடி வந்து கொண்டிருந்தான் .

” சங்கராபுரி ஜமீன் ” ஆரம்பம் என்ற அறிவிப்பு பலகை கடந்து போனது .

” கிருஷ்ணா நமது ஊருக்குள் நுழைந்து விட்டோம் ” அறிவித்தலாய் பல்லக்கு பக்கம் திரும்பி சொன்னான் .

கிருஷ்ணா என்றால் ஆண் பெயரல்லவா …? ஓரு ஆணையா இப்படி பல்லக்குக்குள் வைத்து பாதுகாப்பாக கூட்டி போகிறான் இந்த சிறுவன் …பின்னால் வந்த குதிரைக்காரன் குழம்பினான் .அவனுக்கு இடப்பட்டிருந்த கட்டளை இந்த பல்லக்கை பத்திரமாக கொண்டு போய் சங்கராபுரி சமஸ்தானத்தின் கோட்டைக்குள் , பெரும் வணிகர் திருமால்வளவர் வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே .உள்ளே யார் இருக்கிறார்கள் என அவன் அறிய மாட்டான் .

உதடுகளை பிதுக்கிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தான் அவன் .உள்ளே இருப்பது யாரானால் என்ன …? பேசிய தொகை கைக்கு வந்து சேர்ந்தால் சரிதான் …என நினைத்துக்கொண்டான் .

” கிருஷ்ணா உன்னை வரவேற்பதற்காகவே நம் நாட்டு மரங்கள் தங்கமாய் பூத்து தள்ளுகிறது பாரேன் ” அச்சிறுவன் சொல்ல , பல்லக்கின் பட்டு திரை சிறிது விலகியது . உள்ளிருப்பவர் வெளியை பார்க்கிறாரென அந்த குதிரைக்காரன் உணர்ந்தான் .மனித மனதின் இயல் ஆசை உந்த பக்கவாட்டில் போய் அந்த பல்லக்கு முகத்தை தரிசனம் செய்ய நினைத்து குதிரையை வேகமாக செலுத்தி பக்கவாட்டிற்கு வர , அதறகுள் திரை மீண்டும் மூடப்பட்டு விட்டது .

” ம் ” என்ற சலித்தலுடன் மீண்டும் பின்வாங்கனான் அவன் .இப்போது சாலையின் மறு முனையில் ஒரு புழுதிப் படலம் தெரிய , பல்லக்கு தூக்ககளும் , சிறுவனும் , குதிரைக்காரனும் பயப்பட தொடங்கனர் .

” ஏய் குதிரைக்காரா உனக்கு வாள் சுற்ற தெரியுமா …? ” அந்த சறுவன் கேட்டான் .

” ஒருவர் , இருவரென்றால் சமாளித்து சுழற்றுவேன் .இது பெரிய கும்பல் போல் அல்லவா தெரிகறது .” நெருங்கி வரும் புழுதி படலத்தை பார்த்து பயந்தபடி சொன்னான் .சிறுவன் பல்லக்கு தூக்கிகளை பார்க்க , அவர்கள் தொங்கிய தோளகளும் ,தளர்ந்த தேகமுமாக பரிதாபமாக இருந்தனர் .

” சை …இங்கே நான் மட்டும்தான் வீரனா …? ” சலித்தபடி தன் சிறிய உடைவாளை உறுவிய சிறுவனை முட்டாளே பார்வை பார்த்தான் குதிரைக்காரன் .

” தம்பி இக்கட்டான நேரத்தில் வேகத்தை விட விவேகமே சிறந்த்து . அதோ அங்கே புழுதி கிளப்பிக் கொண்டு வருவது நிச்சயம் கொள்ளையர் கூட்டம்தான் .அவர்கள் குறைந்த்து இருபது பேராவது இருப்பார்கள் . நம் நால்வரால் அவர்களை எதிர்த்து சண்டையிட முடியாது .அதனால் நாம் பணிந்து போய் விடுவதே நல்லது “

அவன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்த சிறுவன் பாவமாக விழித்தான் .

” ஆனால் கிருஷ்ணாவை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே “

” கிருஷ்ணா யார் …? உன் தம்பியா …? ” எனக் கேட்டு விட்டு சிறுவன் முறைக்கவும் ” அண்ணனா …? ” எனக் கேள்வியை மாற்றினான் .திரும்ப முறைத்தல் வாங்கினான் .

” அது என் அக்கா .உள்ளே இருக்கிறாள் ” பல்லக்கை காட்டினான் சிறுவன் .

” உன் அக்காவின் பெயர் கிருஷ்ணாவா …?

” கிருஷ்ணரூபா .நாங்கள் கிருஷ்ணா என்று அழைப்போம் “

” ஓ …நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேள் .உன் அக்காவை இதோ இந்த அடர்ந்த சரக்கொன்றை மரங்களின் மேல் மறைந்து கொள்ள சொல்லலாம் .கொள்ளையர் கண்களில் பெண்ணை காண்பிக்க வேண்டாம் .நாம் முடிந்த வரை அவர்களுடன் போராடி பார்ப்போம் .கொஞ்ச நேரம் சண்டையை நீட்டித்தால் அரசாங்க உதவி எதுவும் கிடைக்கிறதா எனப் பார்க்கலாம் “

இது நியாயமான யோசனையாகவே அச சிறுவனுக்கு பட அவன. பல்லக்கு அருகே போய் பேசினான் .

” கிருஷ்ணா நாங்கள் பேசியதை கேட்டாய் தானே …? வெளியே வந்து மரத்தின் மேல் மறைந்து கொள்கிறாயா ..? “

” சரி தம்பி ” வீணையின் தந்தி மேல் அமர்ந்து குயில் ஒன று பாடுவது போல் அக்குரல் குதிரைக்காரனுக்கு தோன்றியது . அவன் அந்த குரலின் சொந்த முகத்தை பார்க்க விழைந்தான் .

பல்லக்கை விட்டு வெளியே வந்த பெண் உருவம் , அவனது எதிர்பார்ப்பற்கு மிகுந்த பொருத்தமாக இருந்த்து .

அந்த பெண் …இல்லையில்லை அவள் இன்னமும் பெண்ணென்று பெரிதுபடுத்தி சொல்லும் பருவத்தை அடைந்திருக்கவில்லை .சிறுமி பிராயத்தோடு தாராளமாக அவளை சேர்க்கலாம் .அதிகம் போனால் பதினாறு வயதிருக்கும் அவளுக்கு .

தீச்சுடர் போன்ற ஆரஞ்சு நிற பட்டுப் பாவாடை சட்டை அணிந்திருந்தாள் .அதன் சரிகை கரை அடர் பச்சை வண்ணத்தில் இருந்த்து .வழுவழுவென நீளமாய் பின்னலிட்டு நுனியில் குஞ்சலம் வைத்து முடிந்திருந்தாள் . கைகள் , கழுத்து , காதுகள்  என மேனி முழுவதும் பொன் ஆபரணங்களை அணிந்திருந்தாள் . கைகளும் , கால்களும் மருதாணி சிவப்போடு இருந்தன . மானாய் விழிகள் மிரள , படபட இமைகளோடு சுற்றிலும் பார த்தபடி நின்றிருந்தாள் அவள் .

” தம்பி உன் அக்கா மிகவும் அழகான சிறு பெண் .இவள் நிச்சயம் அந்த கொள்ளையர்கள் பார்வையில் படக் கூடாது .்அவளை சீக்கிரம் மறைத்து வை “

சிறுவன் அவசராமாக தன் தமக்கையின் கை பிடித்து இழுத்துப் போய் , அவள் மரமேற உதவி செய்தான் . மஞ்சள் பூக்களும் , பச்சை இலைகளுமாக அந்த சரக்கொன்றை மரம் கிருஷ்ணரூபாவின் உடைகளோடு ஒத்துப் போய் , அவள் மறைந்து கொள்ள உதவியது .

குதிரைக்காரனும் , சிறுவனும் வாள்களை எடுத்துக் கொண்டு தயார் நிலையில் நிற்கும் போது அந்தக் கொள்ளை கும்பல் அவர்களுருகே வந்து விட்டது .தடித் தடியாக பத்து பேர்கள் இருந்த அந்தக் கொள்ளை கும்பலுக்கு இந்த இருவரை வீழ்த்த இரண்டே நிமிடங்கள் போதுமானதாக இருந்த்து .பல்லக்கு தூக்கிகள் தாமாகவே மண்டியிட்டு விட்டனர் .

” இந்த பல்லக்கில் வந்த்து யார் …? “

முகம் மறைத்து கறுப்பு துணி கட்டியிருந்த ஒருவன் தன் வாளை சிறுவனின் கழுத்தில் வைத்திருந்தான் .

” நா …நானதான் வந்தேன் ” சிறுவன் சொன்னான் .

” ஓய் …பொட்டைப் பயலாடா நீ …? எந்த பொட்டச்சியைடா கூட்டி வந்தீர்கள் .? இப்போது எங்கேயடா மறைத்து வைத்திருக்கறீர்கள் …? ” மற்றொருவன் கொச்சை மொழியில் உரக்க கத்தினான் .

அவர்கள் நால்வரும் பல்லக்கினுள்  யாரும் வரவில்லையென உறுதியாக சொல்ல …

” ஒருத்தன் தலையை சீவினால் அடுத்தவன் வாயிலிருந்து உண்மை வந்துவிடும் .இதோ …இவன் தான் இருப்பதில் சிறுவன் . இவன் கழுத்துதான் அறுக்க வசதியாக இளசாக இருக்கும் .இவனையே அறுத்து விடலாம் …” வேகமாக ஒருவன் வாளை ஓங்க …

” ஏன்டா பேடிப் பசங்களா …அறிவில்லையாடா உங்களுக்கு …? ” கனத்து …கம்பீரமாய் …கர்ஜனையாய் கேடடது ஒரு குரல் .

” டேய் …எவன்டா அவன் …யாருடா பேடி …வெளியே வாடா …யார் பேடின னு காட்டுறோம் …” ஆளுக்கு ஒன்றாக அனைவரும் கத்தனர் .

” இதோ வந்துவிட்டேன் …” சொன்னபடி சாலை ஓர வாய்க்கால் பள்ளத்திலிருந்து ஒருவன் மேலேறி வந்தான் .

” கொஞ்சம் அசதியாக இருந்த்துன்னு இந்த வாய்காலுக்குள் படுத்திருந்தேன் …ஹா ..வ் …நல்ல தூக்கத்தை எழுப்பி விட்டார்கள் ” கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான் .

” டேய் யாருடா நீ ?”

” நான் சாதாரண வழிப்போக்கனுங்க .சும்மா ஒவ்வொரு தேசமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன் …”

” ஏன் எங்கள் வம்பிற்கு வருகிறாய் …? “

” ஓன்றுமறியாத சிறு பையனிடம் உங்கள வீரத்தைக் காட்டினால் ..பேடி என்றுதானேசொல்ல முடியும. ்? ” பேசியபடியே ஒருவனை அப்படியே தூககி தூரத்தில் எறிந்திருந்தான் .சிறுவன் கழுத்தில் கத்தி வைத்திருந்தவன் எறியப்பட்டவன் .

” டேய் ..” கத்தியபடி ஒரே நேரத்தில் மூன்று பேர் அடுத்து அவன் மேல் பாய , அரைநிமிடத்திறகு ஒருவனாய் அவர்களை சதிராடினான் அவன் .

” எங்களுக்கு பதில் சொல்லுடா …” நால்வர்  சுழலும் வாளுடன் அவனை நெருங்க அந்த புதியவன் கைக்கு எப்போது வாள் வந்த்து …எப்படி வந்த்து என தெரியவில்லை . அவன் கைகளில் சக்கரமாய் சுழன்று கொண்டிருந்த்து வாள் .

அந்த நால்வரை வீழ்த்த அவனுக்கு இரண்டு நிமிடங்கள் போதுமானதாக இருந்த்து . அடுத்தது யார் என வாளினை சுழற்றியபடி அவன் திரும்பி பார்க்க , எஞ்சியிருந்த இருவரும் சிறு பயத்துடன்தான் அவனை அணுகினர் .ஒரே நிமிடத்தில் இருவரது வாள்களையும் தூர விழ வைத்து , அவர்களை அடித்து தரையில் வீழ்த்தினான் .

இத்தனை நேரமும் கண்ணிற்கே தென்படாமல் சுற்றி சுழன்ற வாள் குறுகி , நீண்டு , கூர்மையாக இருந்த்து  இப்போது வெற்றி கொண்ட மமதையுடன் அந்த இளைஞனின் தோள் மீது ஒய்யாரமாக வீற்றிருந்த்து .. கிட்டதட்ட என் உயரம் இருக்கும் போலவே …இதனை எப்படி அவ்வளவு வேகமாக சுழற்ற முடிந்த்து …? சிறுவன் பயமும் ஆர்வமுமாக அந்த இளைஞனை நெருங்கி வாளை தொட்டு பார்த்தான் .

அந்த இளைஞன் அவனை திரும்பி பார்த்து புன்னகைத்தன் ….

” என்ன தம்பி வாள் வேண்டுமா …? சுற்றுகிறாயா …? “

” ஆசையாகத்தான் இருக்கறது .ஆனால் பயமாகவும் இருக்கிறது . எனக்கு இது போல் வாள் சுற்ற சொல்லி தருகறீர்களா …? “

” ஓ …சொல்லித் தருகிறேனே …நாளை மாலை ஆற்றங்கரை சங்கு மண்டபத்துக்கு வா .உனக்கு வாள் பயிற்சி தருகிறேன் .இப்போது இந்த பல்லக்குக்கு உரியவரை கூப்பிடுங்கள் .அவரை அழைத்துக் கொண்டு ஊருக்குள் புறப்படுங்கள் “

” அப்படி யாரும் பல்லக்கில் வரவில்லையே …நான்தான் வந்தேன் .நீங்கள் கிளம்புங்கள் .நாங்கள் போய் கொளவோம் .” அறிமுகமற்ற அந்நிய ஆணின் முன்னால் தன் சகோதரியை காட்ட விருப்பமில்லை சிறுவனுக்கு .

” அட அப்படியா …நீங்கள்தான் பல்லக்கில் வந்தீர்களா தலைவா …? ” மந்தகாச புன னகையோடு கிண்டலாய் கேட்டான் .

பேசியபடியே மெல்ல நடந்து கொன்றை மரத்தினடிக்கு போனவன் , தனது வலது உள்ளங்கையை விரித்து ஓங்கி மரத்தின் மேல் அறைந்தான் .பொல பொலவென கொன்றை மலர்கள. உதிர்ந்தன.அவற்றோடு சேர்ந்து தாமரை போல் கிருஷ்ணரூபாவும் உதிர்ந்தாள் .

கொன்றை மலர்களை தலையிலும் , கிருஷ்ணரூபாவை கைகளிலும் ஏந்திக் கொண்டான் அவன் .கடகடவென சிரித்தான் .

” என்னை ஏமாற்ற முடியாது தம்பி …”

” சரி …சரி .ஏமாற்றவில்லை .அவள் என் அக்கா .அவளை கீழே விடுங்கள் ” வேகமாக முன் வந்து அந்த இளைஞனின் பிடியிலிருந்து தன் சகோதரியை விடுவிக்க முன்றான் .

திடுமென உடலை தாக்கிய நடுக்கத்தில்  , கீழே விழுந்த அதிர்வில் துவண்ட உடலுடன் அவன் கைகளில் கிடந்த கிருஷ்ணரூபாவால் அந்த வழிப்போக்கனை மிக அருகில் நன்றாக பார்க்க முடிந்த்து .ஏனோ அவள் உடல் முழுவதும் ஒரு வகை மின்னல் சிலிர்த்து ஓடியது .

அவன் …கரியை அரைத்து பூசியது போல் அட்டைக்கரி நிறத்தில் இருந்தான் .பெரிதான கிடா மீசை வைத்திருந்தான் .மேலுதட்டு முழுமையும் மறைத்து அவன் கன்னங்களில் பாதியை கபளீகரம் செய்திருந்த்து அந்த மீசை .கறுத்த தேகத்திற்கேற்ப இதழ்களும் கறுத்தே கிடந்தன .ஆனால் உயிர்ப்போடு பளபளப்பாக இருந்தன . உட்குழிந்து நீண்ட கண்கள் அவனுக்கு.இடுங்கலாய் இருந்தாலும்    அகல்விளக்கின் தூண்டி விட்ட சுடர் போல் அவன் விழிகள் மினுங்கிக் கொண்டிருந்தன .கண்ணோரம் துருத்தலாய் பெரிய மரு ஒன்று இருந்த்தோடு அவன் முகம் முழுவதுமே அம்மை தழும்புகள் மங்கலாக  தெனபட்டன .

அவனுக்கு மிக அருகே அவன் கைகளிலேயே ஊஞ்சல் ஆடிக் கிடந்த்தால் கிருஷ்ணரூபாவால் அவனை இந்த அளவு கவனிக்க முடிந்த்து .அந்த மனிதனை அழகனென்ற பட்டியலில் சேர்க்க முடியாவிட்டாலும் வசீகரமானவன் …என்ற எண்ணம் அவளுள் ஓடியது .அவளது கண்கள் தன் பாரம் தாங்கி நின்ற அவன் வலிய தோள்களின் தினவில் பரவி தடுமாறி நின்று படபடத்தது .

” அட …பட்டாம்பூச்சி சிறகடிப்பது போலுள்ளது பாப்பா …” என்றவனின் பார்வை இப்போது அவளை ஆராய்ந்த்து .

அவள் அவன் சொன்னது போல் பாப்பா பருவத்தில் இருப்பவள்தான் .ஆனால் பிறப்பிலிருந்து வசதியாக வளர்ந்த செல்வ செழிப்பு அவள் மேனியில் தாராளமாக படிந்திருக்க , அவள் ஓர் வளர்ந்த பெண்ணின் தோற்றத்தை தன் உடலில் கொண்டிருந்தாள் .சுருளென்றோ கோரையென்றோ பகுத்தறிய முடியா கேசம் .பின் சடை பின்னல் கோரையாய் நீண்டிருக்க முன் நெற்றி முடிகள் மட்டும் அழகாக சுருண்டிருந்தன .அவை அவளது வெண் மதி முகத்திற்கோர் மகுடம் போல் காட்சியளித்தன .

நீண்டு வளைந்த புருவங்களின் கீழ் கவிதை பேசும் துறுதுறு விழிகள் .பம்மென்று குவிந்து சிவந்த கன்னங்கள் .கன்னங்களுடன் கோபித்து முந்திரியாய் முன் நிற்கும் கூர் மூக்கு . சிம்னிக்குள் அடக்கமாய் அடங்கிக் கிடக்கும் சுடர் போன்ற அவள் சிறு முகத்திற்கு அந்த எடுப்பான மூக்கு கொஞ்சம் அதிகப்படியாகவே தெரிந்த்து .ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் அந்த அதிகப்படியே அவள் முகத்திற்கு அலாதியானதோர் கவர்ச்சியையும் அளித்துக் கொண்டருந்த்து .சட்டென தொட்டு கொஞ்ச தூண்டும் மோவாய் . அதில் அழகாய் ஓர் குழிவு .இத்தனை அம்சங்களும் தாண்டி ஓர் சிறப்பம்சமாய் அவள் இடது விழிக்கு கீழே அழகாய் அமைந்திருந்த சிவந்த மச்சம் ஒன்று . அவளது இத்தனை சிறப்புகள் வாய்ந்த முகத்திற்கோர் திருஷ்டி பொட்டு போலிருந்த்து அச் சிவந்த மச்சம் .

” அழகாக இருக்கிறாய் பாப்பா ” சிலாகித்தான் அவன் .

” போதும் அவளை கீழே விடுங்கள் ” அச் சிறுவனிடம் இப்போது கொஞ்சம் கோபம் .

” பொக்கிசங்களை தரையில் விடக்கூடாது தம்பி ” புன்னகைத்தபடி அவளை சுமந்து கொண்டே சென்று பல்லக்கினுள் அமர்த்தினான் அவன் .திரைச்சீலையை  இழுத்து மூடி அவளை மறைத்தான் .

” நீங்கள் எங்கே போகவேண்டும் …? உங்களுடன் நானும் வழித்துணையாக வருகறேன் “

” வணிகர் திருமால்வளவரின் பிள்ளைகள் நாங்கள் . பக்கத்து சமஸ்தானத்தில் எங்கள் தாத்தா வீட்டில் என் அக்கா இருந்தாள் .அவளை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு போகறேன் “

” அட வணிகரின் பிள்ளைகளா நீங்கள் …? நான் இந்த சங்கராபுரி சமஸ்தான இளவரசி , இளவரசனென நினைத்தேனே …? “

நடந்து போய் தன் குதிரையில் ஏற முயன்ற சிறுவன் நின்று முறைத்தான் .

” யோவ் வழிப்போக்கரே பகடி செய்கிறீரோ …? அரச குடும்பம் போல் இந்த பல்லக்கு பந்தா எதறகென்கிறீரோ …? “

” சே சே அப்படி இல்லை தம்பி .உன் தமக்கையை பார்த்தால் இளவரசிக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தி போகிறது .”

” அப்போது என்னை பார்த்தால் …? “

வழிப்போக்கனின் கரிய இதழ் பிரிந்து தெரிந்த பற்கள் மின்னலிட்டன .

” உன் பெயர் என்ன தம்பி ? “

” கண்ணபிரான் “

” தம்பி …கண்ணா …அரச குடும்பங்களையே ஒழித்து சாமானியர்களை செல்வாக்காக்க வேண்டுமென்பதே எனது குறக்கோள் .அரச குடும்பமல்லாத உங்களை தாழ்வாக நினைப்பேனா …? உங்களை போன்ற பண பலம் வாய்ந்த வணிகர்கள் ஏன் அரசர்களுக்கு ஈடாக வேண்டுமென்று விரும்புகிறீர்கள் …? மக்களில் ஒருவரல்லவா நீங்கள் …? எதற்கிந்த அரச குடும்ப பந்தாக்கள் …? “

” நாங்கள் அப்படித்தான் .எங்கள் தந்தையிடம் பெட்டி பெட்டியாக பணம. இருக்கிறது .அவர் இந்த சங்கராபுரி ஜமீனுக்கு ஈடான பணக்கார்ர் .அதனால் எங்களை இளவரசன் , இளவரசியாகத்தான் வளர்த்து வருகிறார் .எங்கள் குடும்பமும் அரச குடும்பம் போலத்தான் …”

” ம் …” என்ற ஓர் சலித்தல் பெருமூச்சுடன் கண்ணபிரானை குதிரை மேல் ஏறும்படி கையாட்டினான் அவன் .

” நீங்கள் எப்படி வருவீர்கள் …? “




கண்ணபிரானுக்கு பதிலாக தனது உதடுகளை குவித்து மெலிய ஆனால் அடர்த்தியானவோர் சீழ்கையொலி எழுப்பனான்.தடதடவென்ற குளம்பொலியுடன் இது வரை எங்கிருந்த்தோ எனும் ஆச்சரியத்துடன் வந்து நின்றது அந்தக் குதிரை .அந்த வழிப்போக்கனுடன் போட்டியிட்டோ என்னவோ அக்குதிரையும் அவன் நிறத்திலேயே இருந்த்து .யார் அடர்வென்று பார்ப்போம் என இருவரும் ஒருவருக்கொருவர் சவாலிட்டு கொள்வார்கள் போலிருந்தனர் .

தரையில் கால்களை ஒரு உதை உதைத்தவன் மாயம் போல் காற்றில் உயர்ந்து அக் குதிரையின் முதுகிலேறி அமர்ந்திருந்தான் .கண்ணபிரானும் , குதிரைவீரனும்  கண் சிமிட்டாமல் அதை பார்த்தனர் .அந்தக் குதிரை பளபளப்பான உடலோடு மகா உயரத்துடன் இருந்த்து .இத்தனை உயரம் எப்படி ஏறினான் …கண்ணபிரானின் வாய் திறந்து கொண்டது .

” முன்னால் போ தம்பி .நான் பின்னால் வருகிறேன் ” பல்லக்கு தூக்கிகளுக்கு கையசைத்து சைகையால் பல்லக்கை தூக்க சொல்லிவிட்டு பல்லக்கின் பின்னால் போனான் .அவ்வளவு நேரமாக விலக்கி இருந்த திரை இப்போது மூடிக்கொண்டது .உள்ளிருந்து அவனது சாகசங்களை பார்த்துக் கொண்டருந்த கருஷ்ணரூபாவின் கண்கள் கடலாக விரிந்திருந்தன .

” எவ்வளவு பெரிய வீரன் இவன் …? அவள் மனம் மெச்சிக் கொண்டது .

குதிரைவீரன் தனது சாதா குதரையுடன் அந்த வழப்போக்கனருகே இணையாக வர கூச்சப்பட்டு சற்று பின்தங்கியே வந்தான் .

” நல்ல ஜாதிக் குதிரை …” அவன் விழிகள் பொறாமையுடன் அக் கருங்குதிரை மேல் படிந்த்து .

கிருஷ்ணரூபா மீண்டும் லேசாக திரையை விலக்கி தனது பக்கவாட்டில் இணையாக வந்து கொண்டிருந்தவனை ஏறிட்டாள் .அவன் பழுப்பேறிய ஓர் வேட்டி அணிந்திருந்தான் .அதனை தார்ப்பாச்சாக கட்டியிருந்தான் .மேலுடம்பில் ஆடையேதும் அணியாமல் ஒரு சிவப்பு துண்டினை கழுத்தை சுற்றி போட்டிருந்தான் .தலை முடியை வாரி பின்னால் குடுமியாக முடிந்திருந்தான் .நெற்றியில் திலகம் போல் சந்தனம் இட்டிருந்தான் .அதன் வாசனையோ  என்னவோ ஒருவகை  நறுமணம் அந்த இடத்தை சூழ்ந்திருப்பது போல் கிருஷ்ணரூபா உணர்ந்தாள் .

இவனது பெயர் என்னவாக இருக்கும் …கிருஷ்ணரூபாவின் மனம் அதனை அறிந்து கொள்ள விழைந்த்து .இப்போது அவர்கள் பயணம் ஊருக்குள் நுழைந்திருந்த்து .

எதிர்பட்ட சிலர் ” வணக்கம் ஐயா ” என கண்ணபிரானுக்கு வணக்கம் வைக்க அவன் பெருமிதமாக தலையசைத்தான் .அதனை பார்த்த அந்த வழிப்போக்கனின் முகத்தில் ஓர் இகழ்ச்சி புன்முறுவல் பரவியது .

” உங்கள் இடம் வந்துவிட்டது தம்பி .இனி நான் விலகிக் கொள்கிறேன் “

அவர்கள் அப்போது உயர்ந்து பரந்து கம்பீரமாக நின்றிருந்த அந்தக் கோட்டையின் முன் நின்றிருந்தனர் .

” இல்லத்திற்கு வாருங்களேன் .தந்தையிடம் உங்களை அறிமுகம் செய்விக்கிறேன் …”

” இந்தக் கோட்டைக்குள்ளா …இங்கே உங்களை போன்ற உயர்குடி ஆட்களுக்கு மட்டும்தானே அனுமதி …? நான் சாதாரண ஆளாயிற்றே …வருகிறேன் தம்பி .உன் அக்கா பத்திரம் “

குதிரையை அவன் பக்கவாட்டு வழியொன்றில் திருப்ப கிருஷ்ணரூபா வேகமாக பல்லக்கிலிருந்து தலையை வெளியே நீட்டினாள் .

” கண்ணா அவர் பெயரை கேளுடா “

” ஐயா வழிப்போகரே உமது பெயரை கூட சொல்லவில்லையே ..? “

ஓட ஆரம்பித்து விட்ட குதிரை மேலிருந்து திரும்பி புன்னகைத்து கூறினான் .

” மாயன் “

அந்த பெயரில் வியந்து அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு மீண்டும் அவன் போன இடத்தை பார்த்த போது , அங்கே அவனில்லை .அவனிருந்த தடம் கூட இல்லை .அந்த இடத்தில் இரண்டு வவ்வால்கள் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்தன .

திக்கென மனமதிர நின்றனர் உடன்பிறந்தவர்கள் இருவரும் .

,———————

மாயா 

முற்காலத்தில்   யானை கட்டி போரடித்த தஞ்சை நகரம் .இன்று தனது பொலிவிழந்து பசுமையிழந்து சோர்ந்து நெற் பதரென காடசியளிக்கிறது .விவசாயம் மரத்துப் போன அவ்வள பூமியில் அந்த இடத்தில் மட்டும் இன்னுமும் பழமையின் வள வாசனை .அது தஞ்சையின் அரண்மனை பகுதி. பழைய கம்பீரம் இன்னமும் குறையாமல் நிமிர்ந்து நின்றது தஞ்சை அரணமனை .எத்தனையோ மன்னர்களையும் , சம்ஸ்தானங்களையும் , ராஜ்ஜியங்களையும் கண்டது .இன்று அமைதியாக தன்னை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தபடி நின்று கொண்டிருக்கிறது .

அரண்மனையை காணும் ஆவலில் நீண்ட வரிசை ஒன்று டிக்கெட் எடுக்கும் கவுண்டர் முன்னால் நின்றிருக்க அவர்களை வேகமாக கடந்தபடி போனது ஒரு ஸ்கூட்டி .சர்ரென தங்களை கடந்து போன ஸ்கூட்டியில் கவரப்பட்டு திரும்பிய சிலர். அந்த அரண்மனையை காண வந்திருக்கும் இளைஞர் கூட்டம் .அவர்கள் ஆறு பேர் ஒரு குரூப்பாக வந்திருந்தனர் . ஸ்கூட்டி  மேலமர்ந்து போன பெண்ணை பார்த்ததும் விழிகளை விரித்தனர் .அவள் யாராக இருக்கும் …?

மிக அழகாக வடிவாக தெரிகிறாளே … ஏதோ பெரிய இடத்து பெண் போன்ற ஜாடை தெரிகிறதே…இப்படி அவர்கள் தங்களுக்குள் சந்தேகம் கேட்டு தெளிவித்தபடி இருந்த போது அந்த ஸ்கூட்டி தயக்கமோ , தடங்கலோ இன்றி அரணமனை வளாகத்திறகுள் நுழைந்த்து .

அந்தப் பெண் நிச்சயம் இந்த அரண்மனை இளவரசிதான் எனும் உறுதி முடிவுக்கு அந்த இளைஞர்கள் வந்தனர் .எப்போது வரிசை நகர்ந்து தங்கள் முறை வந்து தாங்கள் டிக்கெட் எடுத்து …உள்ளே போய் அந்தப் பெண்ணை பார்ப்பது …நத்தையாக நகரும் மனித வரிசை அவர்களுக்கு எரிச்சல் மூட்டியது .

ஒரு வழியாக அவர்கள் முறை வந்து டிக்கெட் எடுத்து அவர்கள் உள்ளே வந்த போது அந்த பெண்ணின் ஸ்கூட்டி அங்கேதான் ஓர் ஓரமாக பார்க் செய்யப் பட்டிருந்த்து .உற்சாகம் மீண்ட இளைஞர்கள் அவள் உள்ளேதான் இருக்கிறாள் . இரண்டு வார்த்தையாவது அவளோடு பேசி விட வேண்டுமென்ற உறுதியோடு அரண்மனையினுள் நுழைந்தனர் .

அது பெரிய அரண்மனைதான் .பல அடுக்குகள்தான் .ஆனாலும் ஆறு ஆரோக்கியமான இளைஞர்களால் முடியாதா என்ன …? ஒரு மணி நேரமாக அந்த அழகிய அரண்மனையின் இண்டு இடுக்கு விடாமல் தேடி விட்டனர் .ம்ஹூம் அவள் கணகளிலேயே படவில்லை .எங்கே போயிருபபாள் …ஒரு வேளை இந்த சுவர் ஓவியங்கள் எதற்குள்ளாவது மறைந்து போய்விட்டாளா …?

ஒருவன் நிஜம்மாகவே சுவரோவியத்தை வருடி பார்த்தான் .யடசிணியாக இருப்பாளோ …இன்னொருவன் சந்தேகம் சொல்ல …நீ அவள் முகத்தையே இன்னமும் பார்க்கவில்லை என நினைவுபடுத்தினான் அடுத்தவன் .ஆம் வேகமாக கடந்து போய் கொண்டிருந்தவளின் முதுகு மட்டுமே அவர்கள் கண்களில் பட்டது .அதிலேயே இப்படி பித்தேறிப் போய் பிதற்றிக் கொண்டிருந்தனர் .

இவர்கள் அனைவரின் மூளையை குழப்பிய அவள் சரஸ்வதி மகால் நூல் நிலையத்திற்குள் இருந்தாள் .மகாப்பெரிய அலமாரிகளில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை கவனித்து அவற்றின் குறிப்புகளை கையிலிருந்த நோட்டில் எழுதிக் கொண்டிருந்தாள் .அவள் அங்கேதான் வேலை பார்க்கிறாள் .

சரபோஜி மன்னரால் சுவடிகளுக்காக  துவங்கப்பட்டு ,பின்பு வந்த மன்னர்கள் , பிரபுக்களால் ஓலைச்சுவடிகளும் , அச்சுப் புத்தகங்களும் சேகரிக்கப்பட்டு கட்டி காக்கப்பட்டு வரும் நூற்றாண்டுகள் கடந்த அந்த நூலகத்தில் அவள் விரும்பித்தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள.சேர்ந்த நாள் முதல் மிகுந்த ஆர்வத்துடன் தனது வேலைகளையும் செய்து வருகிறாள் .

” மேடம் ஒரு நிமிடம் இங்கே வந்து இதை பாருங்களேன் ” தமிழ் துறையை கடக்கும் போது உள்ளிருந்து அழைப்பு வர அதனுள் நுழைந்தாள் .

பெரிய வட்ட மேசையில் நிறைய ஒலைச்சுவடிகள் சிதறிக் கிடந்தன .டேபிளை சுற்றி இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக அமர்ந்திருந்தனர் .ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர் .

” என்ன சார் …? ” தன்னை அழைத்தவரிடம் கேட்டாள் .

” இதனை ஒரு நிமிடம் பாருங்களேன் .என்ன எழுத்து இது …? ” தன் கையிலிருந்த ஓலைச்சுவடியை நீட்டினார. .

” வட்டெழுத்து சார. ” பார்த்த மறு நொடியே கூறினாள் .

” ஷூயர் …? “

” நோ டவுட் .ஸ்டராஙலி ஷ்யர…”

” ஆனால் சில எழுத்துக்களில் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே …? ” அவர் கேட்டபோது அவள் வாசல் தாண்டி விட்டாள் .

” அது ஏதாவது இலக்கணமாக இருக்கும் .கண்டுபிடியுங்கள் சார் ” போய்விட்டாள் .

” மேடம் எங்கே இவ்வளவு அவசரமாக போகிறார்கள் தெரியுமா ? “

” வேறெங்கே .அந்த பழங்கூடைக்குத்தான் “

” எப்படித்தான் மணிக்கணக்கில் அதனுள் அடைந்து கிடக்கிறார்களோ …? அப்படி என்னதான் படிப்பார்களோ …? “

” என்னத்தையும் படித்து எதையும் கிறுக்கி விட்டு போகிறார்கள் .நம் வேலையை நாம் பார்ப்போம் சார் ” ஒரு பெண் கூற அனைவரும் தங்கள் வேலையில் ஆழ்ந்தனர் .

அவர்கள் பேசிய அந்த பெண் பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ள அந்த அறைக்குள் நுழைந்தாள் .பார்வையாளர்களுக்கு அனுமதியற்ற பிரைவேட் பகுதி அது .அங்கு வேலை பார்ப்பவள் என்ற உரிமையோடு உள்ளே நுழைந்திருந்தாள் அவள் .

உள்ளே நுழைந்த்தும் அவள் விழிகள் பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்தன. கட்டி கட்டு அடுக்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருருந்த ஓலைச்சுவடிகளை தொட்டு தாகத்தோடு தடவின அவள் விழிகள் .முன்தினம் அவள் நிறுத்தி விட்டுப் போன இடத்தை கண்டு கொண்டு கண்கள விரிய வேகமாக அந்த இடத்தை அடைந்தாள் .ஆறு அடுக்குகளுக்கு மேலாக அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்த்து அது .அங்கிருந்த மர ஏணி ஒன்றை தூக்கி வந்து போட்டு அதில் ஏறினாள் .

முதல்நாள் வாசித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளிலிருந்து சில சுவடிகளை ஆராய்ந்து பார்த்து குறிப்பிட்ட கட்டொன்றை உருவினாள் .அதன் நுனிக் கயிற்றை நீக்கி ஓலைகளை தள்ளியபடி வந்தவள் ஓரிடத்தில் ” சங்கராபுரி ” எனும் பெயர் கண்ணில் பட நிறுத்தி அந்த ஓலையை படியில் நின்றபடியே .  ஆழ்ந்து பார்க்க தொடங்கினாள் .




” மேடம் ” அறைவாசலிலிருந்து பியூனின் குரல் .

” என்னண்ணா …? ” தலையை நிமிர்த்தி பார்த்தாள் .

” உங்களை பார்க்க ஒருவர் வந்திருக்கிறார் .”

” என்னையா …? என்ன விசயமாம் …? “

” ஏதோ ஓலைச்சுவடிகளை பற்றிய விபரங்கள் அவருக்கு வேண்டுமாம் “

” இன்னைக்கு முடியாதுண்ணா .அவரை அடுத்த வாரம் வரச் சொல்லுங்க “

” இல்லைங்க மேடம் .அவர் பாரினிலிருந்து வந்திருக்கிறார் .பெரிய இடத்து பர்மிசனோடு வந்திருக்கிறார் .அவரை அப்படி அனுப்பி விட முடியாது “

” ப்ச் …இந்த பெரிய இடத்துக்காரங்க தொல்லை தாங்க முடியலைப்பா …” அவளுக்கு மிகுந்த எரிச்சல் வந்த்து .

” என் டேபிளில் உட்கார வைங்க அண்ணா .பத்து நிமிடத்தில் வருகிறேன் ” ப்யூனை அனுப்பி விட்டு மீண்டும் அந்த ஓலைச்சுவடிகளில் ஆழ்ந்தாள் .

சங்கராபுரம் ஜமீனின் மகாராஜா ரகுநாதராயர் ஜமீனை அறுபது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி புரிந்தார் .இவரது மகனான விஜயரகுநாதரின் சரியற்ற நடவடிக்கைகளால் ஜமீனை அவரிடம் கொடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் தானே கைப்பற்றிக் கொண்டு தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தார் .எனவே இவரது ஆட்சிக்காலம் அறுபது ஆண்டுகளையும் தாண்டி நீண்டு கொண்டே போனது .எட்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒன்பதாவதாக பிறந்த தன் மகன் தங்கள் குலம் காப்பானென நினைக்க  இப்படி சீரழிந்து போனானே என்பதில் ரகுராமராயருக்கு மிகுந்த மனக்கவலை உண்டு .

தனது மகனுக்கு ஆறு பெண் குழந்தைகளுக்கு இடையே பிறந்த தன் ஒரே பேரனை மிக கவனமாக வளர்க்க எண்ணினார் .அவன்தான் தனக்கு பிறகு இந்த ஜமீனை ஆள வேண்டுமென்பதினால் அவனது ஒழுக்கமான வளர்ப்பு அவருக்கு மிகத் தேவையாக இருந்த்து . .எனவே மகனை பின்பற்றி பேரனும் கெட்டுப் போய் விடாமலிருக்க இந்த ஜமீன் சூழலிலிருந்து அவனை பிரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி படிக்க வைத்தார் .அறிவும் , வனப்புமாக வெளிநாட்டு படிப்பை முடித்து திரும்பி வந்த பேரனை பெருமிதமாக வரவேற்றார் .

அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த்து . ஜமீன்தார்கள் சிலர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் , சிலர் அவர்களுக்கு எதிராகவும் இருந்தனர் .ரகுநாதராயர் அந்நியர்களை எதிர்ப்பதில் மிகத் தீவிரமாக இருந்தார் .அவரது சமஸ்தானத்தில் வெள்ளைக்கார்ர்கள் நுழையவே பயங்கர தடை இருந்த்து .இதே வகை ஆட்சியை தனது பேரனிடமும் எதிர்பார்த்து அவனிடம் ஆட்சியை ஒப்படைத்தார்

அவரது பேரன் வெளிநாட்டு படிப்பால் மிகுந்த அறிவானவாகத்தான் இருந்தான் .அத்தோடு கண்டவர் விழி விரிக்கும் கம்பீர அழகுடனும் இருந்தான் .இந்த புத்திசாலித்தனமும் , வனப்பும் அந்த சமஸ்தான மக்களை இவனே எங்கள் ராஜா என அவன் நாடு திரும்பிய நாள் முதல் கொண்டாட வைத்தது .அந்நியர்களிடம் பறி போய் கொண்டிருக்கும் தங்கள் உரிமையை தங்கள் ராஜா மீட்டுக் கொடுப்பானென மக்கள் நம்பினர்.

ஆனால் ….சிறு வயது முதலே அயல்நாட்டிலே படித்து வளர்ந்த்தாலோ என்னவோ … அந்நியர்களை அயலவர்களென தள்ளி நிறுத்த அவனுக்கு தோன்றவில்லை போலும் …இதனை வாசித்தபடி இருந்தவளின் முகத்தில் இகழ்ச்சி பரவியது .அந்நியனின் அடிமைப்பட நினைக்கும் அந்த ராஜா எப்பேர்பட்டவனாக இருந்திருப்பான் . பெரிய அழகனாமே …மன அழகல்லவோ மனிதர்களுக்கு முக்கியம் .அவள் இப்படி அந்த ஜமீன்தாரை இகழ்ச்சியாக நினைக்க காரணம் இருந்த்து .அந்த கட்டில் இனி எஞ்சியிருந்த ஓலைகள் முழுவதிலும் அந்த ஜமீன்தாரின் அழகே வர்ணிக்கப்பட்டிருந்த்து .

இப்படி உருகி உருகி இதனை எழுதியது யாராக இருக்கும் …? அந்த ஜமீனிடம் கை கட்டி சேவகம் செய்யும் எவனாவது இருக்கலாம் .அப்படி அலங்காரமாய் விவரிக்குமளவு அவன் எப்படி இருந்தானாம் …?

” மேடம் ” மீண்டும் வாசல் பக்கமிருந்து குரல் .

” இதோ பத்து நிமிடத்தில் வருகிறேனென சொல்லுங்கள் அண்ணா “

அவள் பார்வையை ஓலைச்சுவடியிலிருந்து உயர்த்தவில்லை .

” எத்தனை பத்து நிமிடம் …? “

இப்போதுதான் குரலில் வேறுபாட்டை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்க்க , அங்கே வாசலை அடைத்தபடி உயரமாய் அந்த உருவம் தெரிந்த்து .

ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருக்கும் அந்த அறைக்குள் சரியான மின் விளக்குகள் கிடையாது .இருக்கும் ஒன்றிரண்டும் எரிந்தாலும் சன்னல்கள் ஏதுமற்ற இருளாட்சி செய்து கொண்டிருந்த   குடோன் போன்ற அந்த அறைக்கேற்ற

வெளிச்சத்தை தரவில்லை .எனவே தன் கையோடு வைத்திருக்கும் சிறு டார்ச்சின் உதவியால்தான் அவள் ஓலைசுவடிகளை படித்தபடியிருந்தாள் .அறைக்கு வெளியே இருக்கும் வெளிச்சத்திற்கு மாறாக இருளிருந்த உட்புறம் அந்த வாசல் மனிதனை இருளில் நிறுத்தி வரி வடிவமாக காட்டியது .

ஆனால் உயரமும் உருண்டு திரண்ட உடலுமாக மதர்த்த யானையை ஒத்து இருந்த்து அவனது வடிவம் .இவனென்ன இப்படி இருக்கிறான் மல்யுத்த வீரனை போல் …ஒரு வேளை அந்த ஜமீன்தார் இப்படித்தான் இருந்திருப்பானோ …பட்டென நினைத்து விட்டு நொட்டென தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் . என்ன நினைப்பிது …தன்னைத்தானே அதட்டிக் கொண்டாள. .

அந்த இருள் மனிதன் இப்போது நகர்ந்து வெளிச்சத்திற்கு வந்தான் .இருள் காட்டிய வடிவை விட இச் சிறு ஓளி காட்டிய அவன் வடிவம் இன்னமும் அழகாக இருந்த்து .அவள் படித்துக் கொண்டிருந்த சம்பவங்களை பொருத்தி சும்மாதான் அவனை ராஜாவோ என நினைத்தாள் .ஆனால் அப்படியேதான் என சொல்வது போலொரு ராஜகளை அவன் முகத்தில் இருந்த்து .

” அண்ணனா நான் உனக்கு …ம் ..? ” அருகில் வந்து நின்று அவளை அண்ணாந்து பார்த்தபடி அவன் கேட்க , அவளது கை ஒலைச்சுவடி நழுவியது .அதனை பிடிக்கும் முயற்சியில் அவள் கைகளை நீட்ட சாய்ந்து நின்றிருந்த ஏணி சரியத் தொடங்க , உடன் அவளும் விழ ஆரம்பித்தாள் .

” ஓவ் …” என்ற மெலிதான அலறலுடன் கண்களை இறுக மூடிக்கொண்டு தரையை வலியோடு மோதப் போகும் விநாடியை எதிர்பார்த்திருந்தவள் , ஊஞ்சலில் ஆடும் உணர்வை அடைந்த தன் உடலில் குழம்பி விழி திறந்து பார்க்க , அவன் அவளை தன் இரு கைகளிலும் தாங்கியிருந்தான் .பெரிய மூச்சுக்களுடன் நெஞ்சிறைக்க தன் கைகளில் கிடந்தவளை அப்படியே ஏந்தி தன் முகத்தருகே அவளை கொண்டு வந்தான் .

ஏதோ அடையாளம் பார்ப்பவன் போல் அவள் முகத்தை உற்று பார்த்தான் .அவன் இதழ்கள் மெல்ல புன்னகைத்தன .

” இப்படியா விழுவாய் …கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டாமா ..? ” எந்த உரிமையில் இப்படி அதட்டுகிறானோ …அவள் அவனை முறைக்க முடிவெடுத்து விழி மலர்த்தி அவன் முகம் பார்த்த போது ” ஆவ் ” மீண்டும் அலறினாள் .பத்திரமாக கைகளுக்குள் கிடக்கும் போது மீண்டும் ஏனிந்த அலறல் அவன் புருவம் சுருக்கி எதிரே பார்த்துவிட்டு விரைந்து செயல்பட்டான் .தன் கால்களை உயர்த்தினான் .

அவள் நின்று கொண்டிருந்த ஏணி சரிய ஆரம்பித்து விட்டு பாதி வழியில் அந்த அலமாரியின் ஏதோ ஓர் இடத்தில் தடை பட்டு நின்று விட அவள் மட்டுமே கீழே விழுந்திருந்தாள் .இப்போது ஏதோ அதிர்வில் அந்த ஏணி மீண்டும் சரிய ஆரம்பித்திருந்த்து .கைகளில் அவள் பாரம் தாங.கியபடியே அவன் தன் வலது காலை நீட்டி தங்கள் மேலேயே சரிந்து விழப் போன அந்த ஏணியை மெல்ல உதைத்து திசை திருப்பி தரையில் விழ வைத்தான் .

” உப் ” நிம்மதி மூச்சொன்றை வெளியேற்றியவள் ” இப்போது ஓ.கேவா …? ” என தன் முகமருகே குனிந்து கேட்ட அவன் முகத்தில் அதிர்ந்து , துள்ளி அவன் கைகளை விட்டு இறங்கினாள் .

” கூ ஆர் யு மிஸ்டர் …? ஹவ் டிட் யூ கம் ஹியர் ? திஸ் இஸ் எ ப்ரைவேட் ஏரியா .அவட்சைடர்ஸ் ஆர் நாட் அலவ்டு ஹியர் “

மெலிதான கூச்சலாக கேட்ட அவள் கேள்விக்கு அவன் நிதானமாக தலையசைத்தான் .

” ஆம் ஐ அவுட்சைடர் ? டோன்ட் வீ ஹேவ் ப்ரைவேட் திங்ஸ் பெட்வீன் அஸ் ? ” இந்த கேள்வியும் மிக நிதானமாகவே இருக்க ,

அவனது பதில் கேள்வியில் அதிர்ந்தவள் …ஓரெட்டு பின்னெடுத்து வைத்தாள் .

” வெளியே போங்க ” வாசலை கை காட்டினாள் .

” ரிலாக்ஸ் மேடம் .நான் சில ஓலைச்சுவடிகளின் விபரங்களுக்காக உங்களிடம் வந்தேன் “

” ஓ …அது நீங்கள் தானா …? உங்களை என் டேபிளருகேதானே காத்திருக்க சொன்னேன் .இங்கே ஏன் வந்தீர்கள் “

” ரொம்ப காலங்கள் காத்திருந்து விட்டேன் மேடம் . அதுதான் நானே தேடி வந்துவிட்டேன் ” விசித்திரமான முறுவல் ஒன்று அவன் இதழ்களின் வந்தமர்ந்து கொண்டது .

” என்ன உளறுகிறீர்கள் …? “

” ஒரு மணி நேரமாக உங்கள் டேபிளருகேதான் காத்திருந்தேன் மேடம் .நீங்கள் வருவதாக காணோம் .அதுதான் நானே உங்களை தேடி வந்துவிட்டேன் “

” உங்களை எப்படி உள்ளே விட்டார் ப்யூன் …? மாணிக்கம் அண்ணா …” அவள் வாசலை பார்த்து திரும்பி கத்தினாள் .

” ஓ அவர்தான் அண்ணாவா …நான் முதலில் பயந்தே போனேன் .அவரை டீ வாங்கி வர அனுப்பியிருக்கிறேன் . இப்போது வந்துவிடுவார் ,”

” யாருக்கு டீ …? ” பல்லை கடித்தாள் .

” உனக்கு …எனக்கு …நமக்கு …” சொனனபடியே இருவரையும் அவன் சைகையால் காட்ட , அவளுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது .இந்த மாணிக்கம் கண்ணில் ஒரு நூறு ருபாய் தாளை காட்டி விட்டால் போதுமே , யாராக இருந்தாலும் சல்யூட் வைப்பார. …நறநறத்த பறகளோடு ,

” முதல்ல நீங்க வெளியில் போங்க ” கிட்டதட்ட கத்தினாள் .

அவளை அவள் கத்தலை விநோதமாக பாரத்தபடி அவன் அந்த அறையை விட்டு வெளியேறினான் .அதன் பிறகுதான் அவளால் சுதந்திரமாக மூச்சு விட முடிந்த்து .ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் தானும் வெளியேறி தனது டேபிள் இருந்த இடத்திற்கு வந்தாள் .

நீள் செவ்வகமாய் இருந்த அவளது மர மேசை ஓலைச்சுவடிகளாலும் , குறிப்பு நோட்டுக்களாலும் நிறைந்து ஒழுங்கற்று கிடந்த்து .அதன் பின்புறமிருந்த்த தனது  மர நாற்காலியில் போய் அமர்ந்தாள் .டேபிளின் முன் கிடந்த இரு ஸ்டூல்களில் ஒன்றில் அவன் அமர்ந்திருந்தான் .அவனது ஆகிருதியான உடலுக்கு அந்த சிறிய ஸ்டூல் உட்கார பற்றவில்லை .ஆனாலும் அடங்கி ஒடுங்கி நல்லபிள்ளையாக அமர்ந்திருந்தான் .

” நீங்க அடுத்த வாரம் வாங்க .ஒரு வாரத்திற்கு நான் பிஸி ” இவன் கேட்டதை எடுத்து தரவே கூடாது என்ற உறுதியுடன் அவள் கூற , அவன் புன்னகைத்தான் .

” முதலில் டீ குடிங்க மேடம் ” அவன் கை காட்டிய அடுத்த நொடி அவள் முன்னால் டேபிளில் ஆவி பறக்க டபராவில் டீ வைக்கப்பட்டது .மாணிக்கம் இருவர் முன்பும் டீயை வைத்து விட்டு பவ்யமாக கை கட்டி நின்றான் .

இவ்வளவு பணிவு காட்டுகிறானே ….எத்தனை முழு தாள்கள் இவனடமிருந்து வாங்கியிருப்பான் அவள் கோபத்தோடு ப்யூனை பார்க்க , அவனோ அவள் பக்கமே திரும்பாது எதிரில் அமர்ந்திருந்தவனை பய பக்தியாய் பார்த்தபடி இருந்தான் .

” நீங்க போகலாம் மாணிக்கம் ” அவன் சொல்ல …

” சரிங்க சார் ” தலை குனிந்து மாணிக்கம் போக அவளுள் ஆத்திரம் பெருகியது .இவன் யாருடைய ப்யூன் எனக்கா …இவனுக்கா …?

” மிஸ்டர் நீங்கள் முதலில் கிளம்புங்க “

” ரிலாக்ஸ் மேடம் .இன்னமும் நாம் அறிமுகமாகிக் கொள்ளவேயில்லையே ..முதலில் அறிமுகமாவோம் … நான்  கிறிஸ்டோபர் . இங்கிலாந்தில் இருந்து வருகிறேன் …நீங்கள் …? ” புன்னகை மாறாமல் கை நீட்டினான் .

இதோ இந்த அறிமுகத்தின் பின் இவனை உடனடியாக இங்கிருந்து வெளியேற்றி விட வேண்டும் என்ற உள்ள உறுதியுடன் அவன் கை பற்றிக் குலுக்கினாள் அவள் .

” என் ஊர் இதே தஞ்சைதான் .நான் இங்கே ஓலைச்சுவடிகளைஆராய்ச்சி செய்யும் வேலையில் இருக்கிறேன் .என் பெயர் மாயா “

அவன் விழிகள் விரிந்தன .” மாயா ” என்று  அவன் உதடுகள் சத்தமன்றி  ஒரு முறை உச்சரித்தன .

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Padumanu
Padumanu
4 years ago

இயற்கை வர்ணிப்பு மிக அருமை

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!