Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 12

12

நினைவுகளின் நிலவு பிசிறொன்று
உன் சட்டை பட்டனில் சுற்றிக் கொண்டிருக்கிறது
நகம் கடிக்கும் நியாயங்களில்லை
உன் உயிருறிஞ்சியே தீர வேண்டும்..

இரவு பால் தம்ளரோடு அறைக்குள் நுழைந்தவள் பரசுராமனைக் காணாமல் விழித்தாள்.. பின் பாத்ரூமுக்குள் சத்தம் கேட்க, அதனருகே போய் நின்றபடி எப்படி கேட்க.. என யோசித்து நின்றாள்..
உங்கள் தம்பிக்கு வேர்ல்டு டூர் போக.. ரவீந்தருக்கு நண்பர்களோடு சுற்றுலா போக.. அடுத்து காலேஜ் சேரும் வரை சும்மா இருப்பதற்கு பதில் ஜாலியாக.. இப்படி விதம் விதமாக வாக்கியங்களை மனதிற்குள் அமைத்து பார்த்துக் கொண்டிருந்தவள் திடுமென பாத்ரூம் கதவு திறக்கவும் திடுக்கிட்டாள்..
சின்னதாய் ஒரு குளியல் முடித்து இடுப்பில் ஒரு துண்டுடன் நின்ற பரசுராமன் பாத்ரூம் முன் நின்றவளை புருவம் சுருக்கி பார்த்தான்.. மைதிலி அவசரமாக நகர்ந்து போய் கட்டிலருகே நின்று கொண்டாள்.. அவன் கண்ணாடி அருகே போய் ஈரத்தலையை வாறத் துவங்கினான்..
மைதிலி இப்போது சுண்டுவிரல் நகம் கடித்தாள்.. எப்படி கேட்க..? பாவி ஏதாவது பேச்சை ஆரம்பிக்கிறானா பார்.. படுக்கப் போகும் நேரத்தில் எதற்கு குளியலும் தலை சீவலும்.. பெரிய மன்மதன் இவன்.. மனதிற்குள்ளாக கணவனை திட்டும் போதே, இரவு குளியலுக்கு பின் வியர்வை வாடை போய் இதமான சோப்பு மணத்துடனும், பவுடர் வாசத்துடன் அதிரடியாய் தன்னை அணுகும் கணவனின் அருகாமை நினைவு வர, மின்சக்தி சுமந்து ஓர் ஒளி மின்னல் அவள் உடலெங்கும் ஓடியது..
கூடவே அதற்காகத்தான் இந்த நேரத்தில் இத்தனை அலங்காரமா..? எனும் கசப்பும் மனதில் எழாமல் இல்லை..
“என்னடி விசயம்..?” கண்ணாடியில் இவளை பார்த்துக் கேட்டான்.. அவன் இப்போது உடம்பில் பவுடர் போட ஆரம்பித்திருந்தான்..
“வ.. வந்து..” மைதிலிக்கு வார்த்தைகள் வரவில்லை.. 
“பரவாயில்லை தைரியமாக சொல்லு.. பாவம் மதியத்திலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறாய்..”
“அப்போது நான் மதியமே உங்களிடம் பேச நினைத்தது தெரியுமா..?”
“தெரியுமே..”
அடப்பாவி எல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அமுக்கினி பயல் மாதிரி இருந்திருக்கிறானே..
“அப்போதே ஏன் என்னிடம் விபரம் கேட்கவில்லை.”
“அப்போது கேட்டிருந்தால்..” கண்ணாடியை விட்டு நகர்ந்தவன் அவளருகே வந்து இரு கைகளாலும் அவள் இடையை பிடித்து அழுத்தியபடி..
“இப்படி அணைத்துக் கொண்டு கேட்டிருக்க முடியாதே..” என்றான்.
“ஓ.. உங்களுக்கு பொண்டாட்டி கூட பேச வேண்டுமென்றாலே.. இ.. இப்படித்தான் பேச வேண்டுமா..?”




“பேச வேண்டும் என்பதற்காக இப்படி இருக்கக் கூடாது.. இப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே பேச வேண்டும்..”
அவனது விவரித்தல் சிறிது நேரம் கழித்தே மைதிலிக்கு புரிய, இயற்கையாய் கன்னம் சிவந்து விட அமைதியாள்.. மனைவியிடம் இவனது தேவையெல்லாம் ‘அது’ ஒன்று மட்டும்தான்.. கடுப்பாக நினைத்தாள்..
“சொல்லுடி..” அவள் தோளில் முகம் பதித்தான்.
“நம் ரவி இருக்கிறான்ல..”
“யார்..?” நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்..
“உங்கள் தம்பி ரவீந்தர் இருக்காருல்ல, அவர் ப்ரெண்ட்ஸ் உடன் வேர்ல்டு டூர் ஒன்று போக நினைக்கிறார்.. அதற்கு உங்கள் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கி..” மைதிலிக்கு விவரித்துக் கொண்டிருக்கும் போதே அந்த சந்தேகம் வர பேச்சை நிறுத்தினாள்..
“நான் சொல்வதை கவனிக்கிறீர்களா..?”
“ம் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறேன்..” சொக்கலாய் ஒலித்த அவன் குரலும், பார்வையும் அவளுள் ரசவாதத்தை உண்டாக்க இடையில் ஊர்ந்த அவன் கரங்களில் பேச்சு நின்று ஊமையானாள்..
தொண்டையை செறுமி தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் பேச்சை தொடர வாயை திறந்த போது, பரசுராமனின் குரல் உற்சாக தேங்கலாய் ஒலித்தது..
“ஹேய் இங்கே பாருடி.. உன் இடுப்பு என் இரு கைகளுக்கிடையில் அடங்கி விட்டது..” அவள் இடையை தன் இரு கைகளுக்குள் சிறை செய்திருந்தான்..
நொட்டென்று அவன் தலையில் ஒன்று போடும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கி, அவனை முறைத்தாள்..
“நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் என்ன..” அவளது பேச்சு அந்தரத்தில் நிற்க, அப்படியே இடையை பிடித்து அவளை தூக்கியிருந்தான் பரசுராமன்.
“எவ்வளவு மெல்லிசாக கொடி போல் இருக்கிறாயடி..” என்ற சிலாகிப்போடு, அவளைக் கட்டிலில் கிடத்தினான்.
“நான் உங்களுடன் பேச வேண்டும்..” துடித்து எழ முயன்றவளின் தோள்களை அழுத்தி படுக்க வைத்தான்.
“அப்புறம் பேசிக்கலாம்..” கண்களை சிமிட்டி விட்டு அவள் மேல் அப்பினான்..
எப்போதும் போல் இப்போதும் அவமானமாய் தோற்ற உணர்வு மைதிலியினுள் பரவியது..
“விஷ்” என்ற சத்தத்தோடு எழுந்த குக்கர் விசிலின் தலையில் கரண்டியால் எரிச்சலோடு நொட்டென்று போட்டாள்..
“இது வேற உயிரை வாங்கிக்கிட்டு…” முணுமுணுத்தாள்.. அவள் மீண்டும் மீண்டும் முயன்றும் இரவு முழுவதும் பரசுராமன் அவளை பேச அனுமதிக்கவே இல்லை..
“பேசுவதாக இருந்தால் நான் நினைப்பதை பேசடி..” என அவன் சொன்ன பேச்சுக்களில் மைதிலியின் காதுகள் கூச காதுகளை இறுக்க மூடிக் கொண்டாள்..
சை.. எப்படி பேசுகிறான் பார்.. இந்த பேச்சுக்காக அவனிடம் தனியாக ஒரு சண்டை போடலாம்.. ஆனால் என் பெண்டாட்டி கிட்டதானேடி நான் பேசுகிறேன்.. என்பான்.. பொண்டாட்டிகிட்ட இப்படியெல்லாம் பேசாமல் இருப்பதுதான்டி தப்பு என்று நியாயம் சொல்வான்.. மீண்டும் அவள்தான் அமைதியாகி விட வேண்டியதுருக்கும்..
மைதிலியின் கண்கள் கலங்கியது.. அவள் வெங்காயத்தை கையில் எடுத்து உரிக்க ஆரம்பித்தாள்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரவீந்தர் வந்து கேட்பான்.. அண்ணனிடம் பேசினாயா.. என்று கேட்பான்.. அவளால் வாய் திறக்க முடியாது..
“இரண்டு வெங்காயம் உரிக்க முடியாது உன்னால்.. பொல பொலன்னு தண்ணீர் கொட்டும்.. அதை என்கிட்ட கொடு நீ போய் மூஞ்சியை கழுவு..” மகாராணி அவள் கையிலிருந்த வெங்காயத்தை பிடுங்கினாள்..
மைதிலி மூக்கை உறிஞ்சியபடி பின்பக்கம் வர, “மைதிலி.. அண்ணி..” மாறி மாறி அழைத்தபடி அவளைத் தேடி புழக்கடைக்கே வந்து விட்டான் ரவீந்தர்.. அவனுக்கு முகம் காட்டும் தைரியமின்றி தண்ணீரை முகத்தில் வாரி இறைத்தாள்..
“என்ன ரவீந்தர்..?” தலை நிமிராமல் குனிந்தே பேசினாள்..
“ரொம்ப தேங்கஸ் மைதிலி..” அவள் கையை இழுத்து குலுக்கினான்..
“அப்பா ரொம்ப யோசித்தார்.. மூன்று மாதங்கள் என்னை எப்படி தனியாக அனுப்புவது என்று நிறைய தயங்கினார்.. அண்ணாதான் அப்பாவிற்கு தைரியம் சொன்னார்.. எனக்கு சப்போர்ட் செய்தார்.. கடைசியாக அப்பாவும் தலையாட்டி விட்டார்..”
“நிஜம்மாகவா..” அவனது உற்சாகம் அவளுக்கும் தொற்றிக் கொள்ள தானும் அவன் கைகளை குலுக்கினாள்.
“நீ இதை செய்து முடித்து விடுவாய்னு எனக்கு தெரியும் மைதிலி.. நீ சொன்ன பிறகும் அண்ணன் மறுப்பாரா..?”
ரவீந்தரின் குதூகலத்தில் மைதிலி விழித்தாள்… நான்தான் சொல்லவே இல்லையே.. என்னை சொல்ல அனுமதிக்கவே இல்லையே அவன்.. தொடர் நினைவுகளில் சிவந்து விட்ட கன்னங்களை தேய்த்து விட்டபடி வெறுமனே தலையசைத்தாள்..
வீட்டில் அனைவரும் ரவீந்தரின் உலக சுற்றுலா பற்றி பேச மைதிலியால் இன்னமும் நம்ப முடியவில்லை.. அவனது அண்ணிதான் அவனுக்காக பேசி அவனை சுற்றுலா அனுப்புவதாக ரவீந்தர் அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தான்.. அதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை..
இதுபற்றி நான் நேற்று ஏதாவது பேசினேனா என்ன..? மைதிலி முன்தின இரவை யோசிக்க, அவள் உடல் நடுங்கி சிலிர்த்தது.. அதெப்படி என அவள் மனம் ஆட்சேபிக்க இருபக்க பறையாய் கொட்டியது அவள் மனது.. இதற்குத்தான் கணவனுடனான தனிமையை அவள் பிறகு நினைத்துப் பார்ப்பதே இல்லை.. இன்று தன் வெட்கம், கூச்சம் ஒதுக்கி அவளாக ஞாபகத்தை துழாவிய போது ரவீந்தரைப் பற்றி ஏதோ அரை குறையாக கணவனிடம் சொன்ன ஞாபகம் வர, தலையசைத்துக் கொண்டாள்.. அரை குறையாக கேட்டாலும் மனைவிக்காகவோ தம்பிக்காகவோ அவன் இதனை செய்ய நினைத்திருக் கிறான்.. நிச்சயம் இதற்கு அவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.. மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள்..
“டேய் என்னடா வெளிநாடெல்லாம் சுற்றப் போறியாமே..?” கத்தலாய் கேட்டபடி வந்தாள் சித்ரலேகா.. அவள் விழிகள் விரிந்து மின்னின.
“ஆமாம்கா, நீயும் என்கூட வர்றியா..?” ரவீந்தர் அவளை வம்பிழுத்தான்..
“ஏய் வர்றேன்னா கூட்டிட்டு போவாயாடா..”
“ஓ.. கூட்டிட்டு போவேனே, ஆனால் உன்னை மட்டும்தான்..”
“ஏய் ஏன்டா சாந்தினியும் நம்முடன் வரட்டுமே..” தன் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்..
“நான் போகிற ப்ளைட்ல பெரியவுங்களை மட்டும்தான் ஏற்றுவாங்க.. குழந்தைங்களுக்கு இடம் கிடையாது..”
“இதென்னடா கொடுமை அப்போ பிள்ளைங் கெல்லாம் என்ன செய்வாங்க..?”
தம்பி சொன்னதை உடனே நம்பிவிட்ட சித்ரலேகாவை வாஞ்சையாய் பார்த்த மைதிலி ரவீந்தரை முறைத்தாள்..
“ஏன் ரவி அண்ணியை ஏமாற்றுகிறாய்..?”
“நீ வேற மைதிலி.. சித்ராக்கா ஐடியாவே வேறு.. நான் வெளிநாடு போக எனக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்னு கணக்கு போட்டுட்டு, அந்த பணத்தை அப்பாகிட்ட இருந்து வாங்கிட்டு போக வந்திருக்கிறாள்.. உங்களுக்கு ஆம்பளை பையன்னா ஒரு மாதிரி.. பொம்பளை பிள்ளைன்னா வேறு மாதிரியான்னு சட்டம் பேசுவாள்.. கொஞ்ச நேரம் குழம்பிக்கிட்டே கிடக்கட்டும்..”
சித்ரலேகாவின் அப்பாவி தோற்றம் ரவீந்தரின் சொல்லுக்கு பொருந்தாமல் போக, அவன் சொல்லில் மைதிலிக்கு நம்பிக்கை வரவில்லை..




ஆனால் அதுதான் உண்மை.. அருணாச்சலம் இரவு கடையை மூடிவிட்டு வரவுமே சித்ரலேகா ஆரம்பித்து விட்டாள்.. ரவீந்தரின் வெளிநாட்டு பயணத்திற்கான பணத்தை எனக்கு கொடுங்க.. அல்லது என்னையும் குடும்பத்தோடு வெளிநாடு அனுப்புங்கள்.. இவைதான் சித்ரலேகாவின் கோரிக்கைகள்..
“தொழிலை விட்டு விட்டு உன் கணவர் உன்னோடு டூர் வருவாரா சித்ரா..?” பரசுராமன் தங்கை அருகே உட்கார்ந்து கொண்டு அவளை சீண்டிக் கொண்டிருந்தான்..
“அதெப்படி வருவார்..? தொழிலை யார் பார்ப்பது..? நீங்கள் எனக்கு பணமாக கொடுத்து விடுங்கள்..” வட்டிக்கடைக்காரன் போல் பேரம் பேசினான்..
ரவீந்தரின் வெளிநாட்டு சுற்றுலா செலவு டிக்கெட் பணத்திலிருந்து, தங்கும் செலவு பயண செலவு என ஓரளவு கணக்கு போடப்பட்டு எதற்கும் இருக்கட்டுமென ஒரு லட்சம் அதிகமாக வைத்து சித்ரலேகாவின் கணக்கில் பேங்கில் போடப் படுவதாக உறுதியளிக்கப் பட்டதும் தான் அவள் எழுந்து படுக்க போனாள்.. பிறகே அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.
நல்ல பெண்.. மனதிற்குள் சலித்தபடி தங்கள் அறைக்குள் நுழைந்த மைதிலியின் மனதில் தன் கணவனுக்கு நன்றி சொல்வதற்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது..
எத்தனையோ பயிற்சிகள் எடுத்து பாடங்கள் செய்து கொண்டிருந்தாலும் அறைக்குள் நுழைந்த உடனேயே கட்டிலில் அவளை எதிர்பார்த்து காத்திருந்த கணவனைக் கண்டதும்.. அவன் பார்வையைக் கண்டதும் அவளுக்கு எல்லாமே மறந்து போனது..

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!