mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 2

2

 

” எதற்காக காலங்கார்த்தாலே இப்படி கத்துகிறாய் ….? ” அதட்டியபடி வந்த பார்த்தசாரதி குளித்து முடித்து வெள்ளை வேட்டி சட்டையில் வெளியே கிளம்ப தயாராக இருந்தான் .

” அம்மா …என் முகத்தில் சுடுதண்ணீர் ஊற்றி எழுப்புறாங்கண்ணா ….” தமையனிடன் புகார் சொன்னாள் காவேரி

” அடியேய் இருடி நாளைக்கு நிச்சயமாக சுடுதண்ணீர்தான் ஊற்றுவேன் ….” காவேரியின் கன்னத்தை பிடித்து இழுத்தாள் மாதவி .

” அம்மா நீங்க உள்ளே போய் வேலையை பாருங்க .இவளை நான் பார்த்துக்கிறேன் ….,” தாயை உள்ளே அனுப்பினான் .

” இந்த செமஸ்டர் ரிசல்ட் வந்துடுச்சா …? ” இடுப்பில் கை வைத்து தங்கையை முறைத்தான் .

” இல்லையே …இப்போதானே அண்ணா எழுதுனேன் . அதற்குள் எப்படி வரும் …? “

பார்த்தசாரதியின் பார்வை மாறவில்லை .அகலாமல் தங்கையின் கண்களை ஊன்றியிருக்க …சரளமாக வந்து கொண்டிருந்த காவேரியின் வாய் வார்த்தைகள் திக்கி …திணறி நின்றன .

” இந்த தடவை எத்தனை …? “

” மூணு ….” தலை குனிந்து முணுமுணுத்தாள் .

” இப்படி எட்டு மணி வரை தூங்குறதுக்கு பதிலாக சீக்கிரம் எழுந்து அந்த சேர்த்து வச்சிருக்கிற அரியர்களை படிக்கலாமில்லையா ….? “

ம்க்கும்…அதுக்கு பயந்துதான் நான் தூங்குறதே …அண்ணனின் காதில் விழாமல் இதழ்களை மட்டும் அசைத்துக் கொண்டாள் .

” என்ன சொன்னாய் …? ” பார்த்தசாரதியின் குரலில் இப்போது சத்தம் உயர்ந்திருக்க , காவேரிக்கு உடல் உதற தொடங்கியது .




” நாளையிலிருந்து படிக்க ஆரம்பிச்சுடுறேன்னு சொன்னேன்ணா …”

” ஏன் இன்னைக்கு நல்ல நாளில்லையா …? “

” இன்னைக்கு …அது ..இப்போ குளிச்சு காலேஜ்கு கிளம்பத்தாண்ணா  நேரம் இருக்கும் …”

” ம் ….ம் …” புறங்கையை வேகமாக வீசி அவன் போவென சைகை சொல்லவும் விழுந்தடித்து அறைக்குள் ஓடிவிட்டாள் காவேரி .

” எட்டு  மணிக்கே என்ன அவசரம் யமுனா …? ” மாதவி மகள்  முன்னால் தட்டை வைத்து  வெந்து கொண்டிருந்த பானையிலிருந்து எடுத்து இரண்டு இட்லி வைத்தாள் .

” ஒரு அவசர ஆர்டர்மா .காலையில் ஒரு ஸ்பெசல் ஷிப்டாக நான்கு பேரை வரச் சொன்னேன் .நான் போய் பக்கத்தில் நின்றால்தான்  வேலை நடக்கும் .அதுதான் “

” இன்னும் சாம்பார் தயாராகவில்லை .சட்னி போட்டுக்கொள்.   ஐந்து நிமிடம் பொறு .வடை தட்டி போட்டு விடுகிறேன் …” அடுப்பு பக்கம் திரும்பிய அம்மாவிடம் கத்தினாள் யமுனா .

” வேண்டாம்மா எனக்கு இரண்டு இட்லி போதும் .நேரமாயிடுச்சு ….”

” இரண்டு இடலி எப்படி போதும் ….? வேலை பார்க்கனுமில்ல ….இன்னும் இரண்டு சாப்பிடு . கங்கா இங்கே வா ..அங்கே என்ன பராக்கு பார்த்துட்டு இருக்கிறாய் ….? இவளுக்கு .இன்னும் இரண்டு இடலி எடுத்து வை …அம்மா நீங்க வடையை கொண்டு வாங்கம்மா ….” இரண்டு தங்கைகளையும் ஒன்று போல் அதட்டியபடி பார்த்தசாரதி அடுப்படியினுள் வந்து நின்றான் .

மாதவி வடையை தட்டிப் போட , கங்கா மேகத்தை பார்வையிடுவதை நிறுத்தி விட்டு அவசரமாக உள்ளே வந்து தங்கைக்கு இட்லி எடுத்து வைக்க தொடங்கினாள் .

பார்த்தசாரதியின் உயர்ந்த குரல் பரிமாறிய  கைகளுக்கு லேசான நடுக்கத்தை கொடுத்திருந்த அதே நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கும் அதே நடுக்கத்தை தந்திருந்த்து .

”  என்ன ஆர்டர் …? எங்கிருந்து …? எவ்வளவு ….? “

” குற்றாலத்திலிருந்து ….குறிஞ்சி பார்ம் ஹவுசிற்காக மொத்தமாக நூறு பாக்கெட்டுகள் கேட்டிருக்கிறார்கள் அண்ணா .நேற்று சாயந்தரம் திடீரென கேட்டார்கள். சரக்கு தயாராக இருக்கிறது .பாக்கெட் போடும் வேலை மட்டும்தான் ….காலையில் நான்கு பேரை வரச் சொன்னேன் …” குரலை இழுத்தவள் , அவளை பார்த்தபடி இருந்த அண்ணனை கண்டதும் ….

” நேற்று இரவு நீங்க வீட்டுக்கு வரவே பதினோரு மணியாயிடுச்சு . நான் தூங்கிட்டேன் .இப்போவும் சீக்கிரம் போக வேண்டுயதிருப்பதால் ….”

பார்த்தசாரதி இன்னமும் பார்வையை அகற்றாமல் இருப்பதை காணவும் ….

” சாரிண்ணா இனி எல்லா ஆர்டர்களையும் எந்த நேரமாக இருந்தாலும் உடனே உங்களிடம் தெரிவித்து விடுகிறேன் …” குறைந்த குரலில் சொன்னாள் .

” குட் இப்போது கிளம்பு …” என்றவன் அவள் வேகமாக எழவும் , ” அந்த வடையை சாப்பிட்டு விட்டு …” என்று கட்டளையாக கூறிவிட்டு நடந்தான் .

” என் வயிற்றுக்கு சாப்பிடக் கூட இவர்தான் கணக்கு சொல்லவேண்டுமா …?” அண்ணனை மு ணுமுணுத்தபடி தட்டில் வைத்த வடையை வேண்டாவெறுப்பாக கடித்தாள் யமுனா .

அவர்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் ஒன்று இருந்த்து .யமுனா படித்து முடிக்கவும் சென்னைக்கு போய் வேலை பார்க்க போவதாக கூற , மாதவி அதனை மறுக்க , என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது என அவள் வாதிட திருமணம் நிச்சயிக்கும்  வரை இந்த மண்புழு உர  தொழிலை அவள்க வனித்து வரட்டுமென  பார்த்தசாரதி முடித்துவிட்டான்.

முழுக்க முழுக்க பெண்களை வைத்து நடத்தும் தொழிலென்பதால் மாதவியும் சம்மதிக்க , யமுனா மண்புழு உரத் தயாரிப்பு தொழிலை கவனித்து வந்தாள் .

” தம்பி நீ சாப்பிட்டு விடுகிறாயா …? ” மாதவியின் அக்கறை மகளிலிருந்து மகனுக்கு மாறியது .

” முழு சமையலையும் முடிங்கம்மா .நான் வாசலில் காத்திருப்பவர்களுடன் பேசிவிட்டு வந்து விடுகிறேன் …” வீட்டு வாசலுக்கு நடந்தான் .

வாசல் திண்ணையில் அவனுக்காக காத்திருந்தவர்கள் எழுந்து கை கூப்பி வணக்கம் சொன்னார்கள் .

” வாங்க , வணக்கம் .சொல்லுங்க என்ன விசயம் …? “

கோவில் கும்பாபிசேக நன்கொடை , சாதி சண்டை , அண்ணன் – தம்பி சொத்து பிரச்சினை , ஊருக்குள் கட்ட இருக்கும் புது பூங்கா என பலதரப்பட்ட ஊர் விசயங்களை பேசி முடித்து , அவர்களை அனுப்பி விட்டு பார்த்தசாரதி திரும்பவும் வீட்டினுள் வரும்போது மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது .

” எல்லோரும்  சாப்பிட்டாச்சாம்மா …? ” அப்போதும் சூடாக இலையில் விழுந்த இட்லிகளை சாப்பிட்டபடி கேட்டான் .

” ஆச்சுப்பா …இந்த ஊர் பஞ்சாயத்தையெல்லாம் குறைத்துக் கொண்டு நீயும் கொஞ்சம் சீக்கிரம் சாப்பிட வரக்கூடாதா …? “

” ம்…ம் ….” என்றபடி எழுந்தான் .

வடகம் போடுவதற்கு மாவு கிண்டிக்கொண்டிருந்த கங்காவை பார்த்தபடி  கை கழுவினான் .

” காவேரியை  காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிக்க வைக்கலாமேம்மா …? “

” சொல்லிட்டேதாம்பா இருக்கிறேன் .அவள் தான் ….”

” நீங்க போய் எழுப்பி விடுங்க .படிக்கிற பிள்ளை காலையில் எழுந்து படிக்க வேண்டாமா …? அப்புறம் இந்த யமுனாகிட்ட என்ன செய்கிறாள் …ஏது செய்கிறாள்னு …என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ய சொல்லுங்க . அவள் பாட்டுக்கு தன்னிச்சையாக முடிவெடுத்துட்டு இருக்கிறாள் .அப்புறம் கங்காவை ….” என ஆரம்பித்தவன் அடுப்பில் நின்ற தங்கையை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டு எழுந்து கொண்டான் .




புல்லட்டை எடுத்துக்கொண்டு பார்த்தசாரதி போனதும் , மாதவி கங்காவை பார்க்க ,அவள் வடக மாவு சட்டியுயை இறக்கி வைத்துவிட்டு ஓலைப்பாயை எடுத்துக் கொண்டிருந்தாள் .

ஆறு மாதத்திற்கு முன்பிருந்த நிறம் இப்போது கங்காவிடம் இல்லை .பொன் சருமம் நிறம் குறைந்து பழுத்திருந்த்து .காலையிலிருந்து ஏதேனும் வேலை செய்தபடியே இருந்த் களைப்பை முகம் அப்பட்டமாக காட்டியது .

நினைவுகளை கொல்வதற்கு உடலை அலுப்பு படுத்துவது ஒரு யுக்திதானே …மாதவி அறியாத்தல்லவே இது …

” ஏன்மா கங்கா இந்த வெயிலுக்குள் நீ மாடியேறி வடகம் போட போகனுமா …? “

” பொழுது போகனும்லம்மா …? ” அம்மா முகம் பார்க்காமலேயே நடந்தாள் .

” மாதவி …” வாசலில் குரல் கேடக இருவரும் திரும்பினர் .

” எப்படி இருக்கிறாய் ….? ” கேட்டபடி உள்ளே வந்தார் வனக்கொடி .மாதவிக்கு தூரத்து சொந்தம் .

” வாங்க பெரியம்மா .கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சா …? “

” இன்னைக்கு அதிகாலையில் வந்துட்டேன்மா .நாலு நாளா பத்து கோவில் .திருப்தியான தரிசனம் . எனக்கு வேண்டிக்கிட்டதை விட உனக்கும் உன் குடும்பத்திற்கும் வேண்டிக் கிட்டதுதான் அதிகம் .உனக்கு பிரசாத்த்தை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் . சந்திரா நீ இரண்டு பேருக்கும் கொடும்மா ….” உடன் வந்த தன் பேத்தியை ஏவினார் .

சந்திரா எதார்த்தமாக குங்கும பொட்டலத்தை பிரித்து இருவரிடமும் நீட்ட , தயங்கி அதை பார்த்தபடி அம்மாவும் , மகளும் நின்றனர் .

” ஏய் மூதேவி அறிவிருக்கிறதாடி உனக்கு …? புருசனில்லாதவுங்க குங்குமம்  வச்சிகுவாங்களா …? இரண்டு பேருக்கும்  திருநீறு கொடுடி …” பேத்தியின் தலையில் தட்டினாள் .

மனம்  நைய தங்கள் முன் நீட்டப்பட்ட திருநீறை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டனர் மாதவியும் , கங்காவும் .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!