pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 20

20

குச்சியில் சுற்றி தொட்டு இழுக்கும் 

சவ்வு மிட்டாயாக்குகிறாய் என்னை, 

 முகத்தில் ஒட்டும் மீசையோ

மணிக்கட்டை சுற்றும் கைக்கடிகாரமோ அல்ல நான், 

மன லாகிரிகளை நுரைக்க

கோப்பையில் ஏந்திக்கொள்ளும் 

நுண்மை கற்றவள் ,

விழுங்க  எத்தனிக்காதே… 

விலகிப் போ…







அறைக்குள் நுழைந்ததும் ரிஷிதரனை ஏறிட்டுப் பார்த்த தேவயானி இதழ்களை மடித்து கடித்துக்கொண்டாள். அடக்கிய புன்னகையை குவிந்த அவள் கன்னங்கள் சொல்ல ஆர்வமாய் அங்கே பதிந்தன ரிஷிதரனின் கண்கள்.

” ஏய் என்னை பார்த்தால் சிரிப்பு வருகிறதா உனக்கு ? ”  கோபம் போல் விழி் உருட்டிக் கொண்டான்.

” கோபம் எதற்கு ? இப்போதுதான் கொஞ்சம் பார்ப்பதுபோல் இருக்கிறீர்கள் ” 

” இவ்வளவு நாட்களாக வேறு வழி இல்லாமல் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாய் சரிதானே ? ” 

” போச்சுடா திரும்பவும் ஆரம்பித்துவிட்டீர்களா ? இங்கே பாருங்கள் காயங்களை விட உங்கள் மீசையும் ,தாடியும் , முடியும்தான் உங்களை ரொம்பவே கொடூரமாக காட்டிக்கொண்டிருந்தது. இப்போது கிட்டத்தட்ட பழைய மாதிரி மாறி விட்டீர்கள்  ” என்றபடி தன் கையில் கொண்டு வந்திருந்த கண்ணாடியை அவன் முன்னால் வைத்தாள்.

ரிஷிதரன் முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பி கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டான் ”  நீ சொல்வது சரிதான் ஏஞ்சல் .இப்போது கொஞ்சம் பெட்டராக தான் தெரிகிறேன் ” 

” நான் எப்போதும் சரியானதைத்தான் சொல்வேன் ” 

” யாருக்கு ? ” 

” எல்லோருக்குமே ” 




” இந்த வார்த்தைக்கு பின்னால் என்ன ஒளிந்திருக்கிறது ? ” 

” சாதாரணமாக சொல்வதற்கெல்லாம் கணக்கு கேட்பீர்களா நீங்கள் ? ” 

” சாதாரணமாக… நீ …என்னிடம்… நோ சான்ஸ் .என்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உனக்கு அர்த்தம் உண்டு .சொல்லு எது சரியானது ? ” 

” நீங்கள் சந்திரசேகர் சாருக்கு  தேவையான கையெழுத்துகளை போட்டு தருவது சரியானது ” 

” எனக்கு அது தவறானதாக படுகிறது ” ரிஷிதரனின் முகம் இலகிலிருந்து இறுக்கத்திற்கு போனது.

” ஒரு தொழில் என்பது உங்கள் ஒருவரை மட்டுமே நினைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது கிடையாது. ஒரு தொழிலில் நூற்றுக்கணக்கான ஏன் உங்களைப் போன்ற பெரிய தொழிலதிபர்களிடமெல்லாம்  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை அடங்கியிருக்கும் .உங்கள் ஒருவரின் வீம்புக்காக அத்தனை தொழிலாளர்களின் வாழ்க்கையும் முடக்க முடியாது ” 

 ” அடுத்தவர்களின் வாழ்க்கையை எல்லாம் நினைக்கும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் நல்லவன் கிடையாது ” 

” எருமை மாடு ”  என்று முணுமுணுத்தாள் .அவன் ” என்ன  ? ” எனவும் …

” அதுதான் எனக்கு தெரியுமே …மகிஷாசுரன் என்று ” என்றாள் .

ரிஷிதரன் புன்னகையோடு தனது தலையை தடவிப் பார்த்துக் கொண்டான் .” எருமைக்கு கொம்பு இருக்கிறதா ஏஞ்சல் ? ” 

” அது எதற்கு  ? உங்கள் நாக்கு போதாதா  ? குத்திக் கிழிப்பதற்கு…” 

” என்னை சொல்லி விட்டு , நீ தான் அந்த குத்திக் கிழிக்கும்  வேலை செய்து கொண்டிருக்கிறாய் ” 

” அதெல்லாம் அரக்கர்களுக்கு மட்டுமே உரியது ” 

” சில நேரங்களில் தேவதைகளும் கூட அந்த வேலையை செய்கிறார்கள் ” 

” யாராவது அரக்கனுடனான சகவாச தோசத்தினாலாயிருக்கலாம் ” 

” தேவயானி , ப்ளீஸ் நாம் வேறு விஷயம் பேசலாமே… இதோ பார் என் மீசையை எடுத்த பிறகு நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன் ? ” 




” எனக்கு தெரியாது ” தேவயானி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

” சில நேரம் சிறுபிள்ளை போல் அடம் பிடிக்கிறாய் ” 

” நானா…?  நீங்களா…? ” 




” உப்…. ” என்று வாயை குவித்து மூச்சை வெளியேற்றினான் ரிஷிதரன். ” சரி . நமக்குள் ஒரு டீல் வைத்துக்கொள்வோம் .நான் சந்திரசேகர் கேட்கும் கையெழுத்துகளை  போட்டுத் தருகிறேன் .நீ ஐஏஎஸ் கோச்சிங்கில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் ” 

” முடியாது ” ரிஷிதரன் சொல்லி வாய் மூடும் முன் தேவயானியின் மறுப்பு தெறித்து வந்து விழுந்தது.

” ஏன் தேவயானி ..இது உனக்கு நல்ல வாய்ப்பு இல்லையா ?  சொல்வது நான் என்பதால் மறுக்கிறாயா ?  ” 

” இல்லை எனக்கு படிப்பதில் அவ்வளவு இன்ட்ரஸ்ட்  இல்லை ” 

” பொய் சொல்லாதே .அந்தப் படிப்பை நீ எந்த அளவு விரும்புகிறாய் என்று எனக்கு தெரியும் .எனக்கு சரியான காரணம் சொல் தேவயானி. முடிந்தால் சரி செய்ய முயற்சிக்கிறேன் ” 

” அது உங்களால் முடியாது ” முணுமுணுத்தாள்

” முயற்சிக்கிறேன் .சொல் என்ன பிரச்சனை ?  ” 

” அன்று ஹோட்டலில் சந்திரசேகர் எனக்கு கோச்சிங் சென்டரில் இடம் கொடுத்திருப்பதாக சொன்ன அப்ளிகேஷனை எடுத்துக்கொண்டு மறுநாளே அந்த கோச்சிங் சென்டர் போனேன். அங்கே அப்ளிகேசனை வாங்கிக்கொண்டு பணம் கட்ட சொன்னார்கள் . திரும்ப வந்துவிட்டேன்  ” 

” அன்று அந்த சந்திரசேகர் செய்தது கண்துடைப்பு வேலைதான். அது எனக்கு தெரியும் ” 

” ஆனால் நான் அன்று அப்படி நினைக்கவில்லை .சந்திரசேகருக்கு என்று தனியாக கோட்டா போல் இருக்கலாம் என்று நினைத்தேன். அங்கே அப்படியெல்லாம் எதுவும் கிடையாது .பணம் இல்லாவிட்டால் இங்கே எதுவுமே நடக்காது என்று சொல்லி விட்டார்கள் .இப்போது அங்கே சேர்வது என்றால் எனக்கு பணம் கட்டியது யார்  ? ” தேவயானியின் பார்வை கூர்மையாக ரிஷிதரனை துளைத்தது.

” அது வந்து ….நான்தான் என்று வைத்துக்கொள்ளேன் .ஏன் நான் கட்டக் கூடாதா ? நீ எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாய் ? இந்த சின்ன விஷயம் நான் செய்யக் கூடாதா ? ” 

” உங்களுக்காக நான் செய்தவை எல்லாவற்றிற்கும் எங்களுக்கு பணம் வந்து விடும் .சொல்லப்போனால் வந்துவிட்டது  .நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே …பிறகும் இது எதற்கு ? ” 

” இது என் மன திருப்திக்காக …நான் தருவது என்று வைத்துக் கொள் ” 

” இது போன்ற வேலைகளுக்கு பணம் வாங்குவதே தவறு .அதுவே எனது மனதிற்கு பிடிக்காத விஷயம். இதில் மேலும் மேலும் பணத்தை தூக்கி எறிந்து என்னை இன்னமும் நோகடிக்காதீர்கள் ” 

ரிஷிதரன் பெருமூச்சுவிட்டான் ” உனக்கென்று தனியாக நியாயங்கள் …சட்டதிட்டங்கள் …உன் உலகமே வேறாக இருக்கிறது தேவயானி ” 

” ஆமாம் என் உலகம் தனி தான் .அதில் யாராலும் நுழைய முடியாது ” 

” சில யுவராஜாக்கள் மட்டும் நுழையலாமோ ? ” தேவயானி அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

” முகத்தில் காயத்தை மிக ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டிய நேரத்தில் அந்த இளவரசன் பின்னால் போயாயிற்று ” குற்றம் சாட்டினான் .




” அம்மாவும் அண்ணனும் கவனித்துக் கொண்டு பக்கத்தில் தானே இருந்தார்கள் ” 

” ஆனால் நீ  இருக்கும் தைரியத்தில் தான் இதற்கெல்லாம் ஒத்துக் கொண்டேன் ”  தன் தாடையை தடவி காண்பித்தான்.

” இது என்ன பேச்சு சார் ? ஒரு முக்கியமான விஷயம் சொல்வதற்காக யுவராஜ் கூப்பிட்டார் .போனேன்  ” சொல்லிக்கொண்டிருந்தவள்  சந்தேகமாய் அவனைப் பார்த்தாள் .” உங்களுக்கு எப்படி தெரியும் ? ” 

” என் கை கண்ணாடி பின்னாடி காட்டியது .நிறைய நேரங்களில் நம் முதுகுக்கு பின்னால் தான் நம்மால் நம்ப முடியாத விஷயங்கள் நடக்கின்றன .ஒரு பத்து நிமிடம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்படி என்ன முக்கியமான விஷயம் ? ” 

”  அது எதற்கு உங்களுக்கு ? ” 

” அந்த யுவராஜ் உன்னை எதற்காகவாது மிரட்டுகிறானா  தேவயானி ? ” 

தேவயானி அவனை திடுக்கிட்டு பார்த்தாள்.

” எனக்கு அப்படித்தான் தோன்றியது ” 

ரிஷிதரனின் கணிப்பில் தேவயானிக்கு  மெல்லிய புன்னகை வந்தது .அப்போது யுவராஜ் அதைத்தான் செய்துகொண்டிருந்தான் .கிட்டத்தட்ட அவளை மிரட்டிக் கொண்டிருந்தான். அது என்ன யாரோ ஒரு பொம்பளை பொறுக்கி்க்கு  இப்படி குடும்பத்தோடு சுற்றி நின்று உபச்சாரம் செய்துகொண்டு இருக்கிறீர்கள் ..என்பது அவனது நம்ப முடியாத குற்றச்சாட்டு.

” இதெல்லாம் நன்றாக இல்லை .உன்னை அவனை பார்க்க கூடாதென்று சொல்லி வைத்திருக்கிறேன். பிறகும் அவன் மூஞ்சிக்கு முன்னால் போய் போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறாய் .இப்படியே சொல்பேச்சு கேட்காமல் உன் இஷ்டப்படி நடந்தாயானால் பிறகு ….” இந்த ரீதியில் அவனுடைய பேச்சு தொடர்ந்தது.

அவனது மிரட்டலுக்கு ஏற்ற பதிலை அங்கேயே கொடுத்து விட்டதனால் இப்போது ரிஷிதரனின் கணிப்பிற்கு தேவயானியால்  புன்னகைக்க முடிந்தது.

” உங்கள் மனதிற்கு பிடித்தவைகளை கற்பனைசெய்து கொள்வீர்கள் போல ? ” சூழலை இலகுவாக்க முயன்றாள்.

” என் கற்பனையா ?அவனது உத்தரவுப்படி நீ நடக்கவில்லை …?கடந்த மூன்று நாட்களை மறந்து விட்டாயா ? ” 

” யுவராஜ் சொன்னபடி செய்வது என்றால் இதோ இப்போது கூட நான் இங்கே வந்திருக்கக் கூடாது ” 

” ஓஹோ இந்த அளவு அவன் உன்னை கட்டுப்படுத்துகிறான் “







” கட்டுப்படவில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் ” தேவயானி கொஞ்சம் தலைநிமிர்ந்து தான் இதனை சொல்லிக்கொண்டிருந்தாள் .அந்த அவளது இயல்பான கர்வத்தை ரிஷிதரன்  மிக ரசித்தான்.

” ஏன் தேவயானி நீ அந்த யுவராஜனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா ? ” 

” அது வீட்டில் பெரியவர்களாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் ” 

” வாழ்க்கை உன்னுடையது. முடிவும் உன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும் ” 

” ம் நிச்சயம் என்னிடமும் அபிப்ராயம் கேட்கத்தான் செய்வார்கள் ” 

” உன்னுடைய அபிப்பிராயம் என்ன தேவயானி ? ” அளவில்லாத ஆர்வம் வழிந்தது அவன் குரலில்.

” என் உறவினர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வது ”  தேவயானியின் பதிலில் அவன் முகம் வாடியது.

” அகம்பாவம் “முணுமுணுத்தான்.

” அங்கே மட்டும் என்னவாம் ? குடும்பத்தினரின் கோடிக்கணக்கான  பணம் , தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ற கவலைகளற்ற தான் தோன்றித்தன அகம்பாவம் ” 

” ஷட் அப் ” அடிக்குரலில் உறுமினான் .

” யு ஷட் அப். ” தயக்கமற்ற எதிர் குரல் கொடுத்தாள் .

இருவரும் கொம்பு சீவிய காளைகளாக ஒருவரையொருவர் முறைத்து நின்ற போது …

” தேவயானி வாட் ஆர் யு டூயிங் ஹியர்  ? ” என்றபடி குடில் வாசலில் வந்து நின்றான் யுவராஜ்.

” நான் …இங்கே… வந்து…”  திடுமென அவனை எதிர்பார்க்காத தேவயானி தடுமாறினாள்.

” அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா சார் ? ” ரிஷிதரன் கேள்வி எழுப்பினான்.

என்னத்தை  செய்கிறாள்… சும்மா உன் மூஞ்சியைப் பார்த்துக்கொண்டு கதை அடித்துக் கொண்டிருக்கிறாள்  கடுப்புடன் இப்படி நினைத்தபடி தேவயானியிடமிருந்து திரும்பி ரிஷிதரனை பார்த்த யுவராஜ் திகைத்தான்.

இவன் என்ன இப்படி மாறி விட்டான் …கூத்தில் ஆடும் கோமாளி போல்தானே இருந்தான் …? இப்போது ஒரு ஸ்மார்ட் ஹீரோ போல் இப்படி மாறி விட்டானே…? 




கொத்தலும் குதறலுமாக முகத்தில் இருந்த முடிகள் முழுவதும் நீக்கப்பட்டு முகம் பளிங்காய் மின்ன , தீ விபத்தால் முகத்தின் ஒரு பக்கம் லேசாக படிந்திருந்த கருமை கூட ஒரு வித அழகு போல் ரிஷிதரன் முகத்தில் அமைந்திருந்தது. காயங்கள் ஓரளவு ஆறி விட்டதினால் வெற்று மேனியாக இல்லாமல் அவன் ஒரு மெலிதான கதர் சட்டையை அணிந்திருந்தான் .அந்த சட்டை அவனது பெருமளவு உடம்பு காயத்தை , தழும்புகளை மறைத்துவிட்டது .எனவே அவன் குறைகள் ஏதுமற்ற முழு மனிதனாக தோற்றமளித்தான்.

யுவராஜால்  ரிஷிதரனின் இந்த சட்டென்ற தோற்ற மாற்றத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை .தன் கண்களையே நம்பமுடியாமல் திகைத்து நின்றிருந்த அவனை பார்த்த ரிஷிதரன் புருவத்தை உயர்த்தினான் .

” என்ன சார் இப்படி அசந்து போய் நின்று விட்டீர்கள் ? கோமாளி எப்படி ஹீரோவானார் என்று யோசிக்கிறீர்களா ? ” நக்கலாக கேட்டான்.

” ஆமாம்… இல்லை… அது… வந்து… எப்படி இப்படி…”  யுவராஜ் தடுமாறிக் கொண்டிருக்க ரிஷிதரன் தேவயானியை பார்த்து அவனை பாரேன் எனும் விதமாக ஜாடை காட்டினான் .தேவயானி அதனை கவனிக்காது கையில் மருந்து கிண்ணத்தை எடுத்துக் கொண்டாள் .ஆனால் அதனை கவனித்து விட்ட யுவராஜின் முகம் குரோதம் சுமந்தது.அவளுக்கு ஜாடை காட்டுகிறாயா நீ உள்ளுக்குள் கனன்றான்.

” தேவயானி கம் , ஒன் இம்பார்ட்டென்ட்  திங்க் இஸ் டூ டால்க்  ” அதட்டலாக அழைத்தான்.

” பத்து நிமிடத்தில் வருகிறேன் .நீங்க போங்க ” அவன் பக்கம் திரும்பாமலே சொன்னவள் ” சட்டையை சுழற்றுங்கள் ” என்றாள் ரிஷிதரனிடம்.

அவனுக்கு மூலிகை எண்ணையை தடவியபடி ” உங்களைப் போக சொன்னேன் ”  என்றாள் அழுத்தமாக .யுவராஜ் கொதிக்கும் முகத்துடன் அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்றதும் கையிலிருந்த எண்ணெய் கிண்ணத்தை ‘ தட் ‘  என்ற சத்தத்துடன் கீழே வைத்தாள்.

” நீங்களே தடவிக் கொள்ளுங்கள் ” அலட்சியமாக கையசைத்தாள்.

” என்னது …நானேவா  ? அந்த ராஜகுமாரனை நீ பழிவாங்குவதற்கு நான்தான் கிடைத்தேனா ? இதெல்லாம் பெரிய அநியாயம் ஏஞ்சல்  ” அழுகை போல் கண்களை கசக்கிய ரிஷிதரனை  கண்டுகொள்ளாமல் தான் கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து உள்ளிருந்து சில பைல்களை எடுத்து  அவன் முன்னால் வைத்தாள்.

உவப்பும் , உற்சாகமுமாக இருந்த அவனது முகம் சுருங்கியது .” என்ன இது  ? ” கருங்கற்கள் கடூரமாய் உருண்டன அவன் குரலில்.

” நீங்கள் கையெழுத்துப் போட வேண்டிய ஃபைல்கள் .இங்கே வைத்துவிட்டு போகிறேன். சந்திரசேகர் சார் நாளை காலை வருவார் ” சொல்லிவிட்டு முறைத்துக் கொண்டிருந்த ரிஷிதரனின் பார்வையை சந்திக்காமல் வெளியேறினாள்.




அவள் வெளியேறிய அடுத்த நிமிடம் அந்த பைல்களை அள்ளி கோபத்துடன் தரையில் எறிந்தான் ரிஷிதரன் .அவை சுவரோரமாக இருந்த மர பீரோவிற்கு அடியில் போய் தஞ்சமடைந்தன .எரிச்சலுடன் பார்வையை திருப்பியவன் திகைத்தான் . குடில் வாசலில் கைகளை கட்டிக்கொண்டு நின்றபடி நிதானமாக அவனது எறிதலை பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி.

என்ன செய்வாய் …ரிஷிதரன் திமிர் பார்வை பார்க்க , தீவிரமாக அவன் முகத்தை பார்த்தபடியே உள்ளே வந்தவள் தனது பேக்கிலிருந்து பேனா ஒன்றினை எடுத்து அவன் அருகில் வைத்தாள் . ” இது கையெழுத்து போடுவதற்கு ” வலியுறுத்தலாய் சொல்லிவிட்டு போய்விட்டாள்.

ரிஷிதரனின் கோபத்திற்கு அடுத்த இலக்கு அந்தப் பேனா. அதுவும் அந்த பைல்களோடு துணை சேர்ந்தது.

What’s your Reaction?
+1
0
+1
6
+1
0
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!