Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 4

                                               4

இதென்ன பெயர்கள் கிறிஸ்டி .. சங்கமித்ரா , சத்யமித்ரா …” லேசாக முகம் சுளித்தாள் அந்த அம்மா .

” நம் வீட்டை போலத்தான் அம்மா .அண்ணாவின் டேவிட் ஆடம்ஸ் போல் சங்கமித்ரா .எனது கிறிஸ்டியன் ஆடம்ஸ் போல் சத்யமித்ரா …” விளக்கினான் .

” ம் …டேவிட் எந்நேரமும் மித்ரா …மித்ரா என்றுதான் புலம்புவான் …” முணுமுணுத்தாள் அந்த அம்மா .

இருவரும் மலையாளத்திலேயே பேசிக் கொண்டாலும் சத்யமித்ராவிற்கு நன்றாகவே புரிந்த்து . தங்களது குடும்ப பெயர் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியில் எரிச்சலடைந்த அவள் முகம் சுருங்கியது .




” அம்மா இதோ உங்கள் பேரன் …” சத்யமித்ராவின் கையிலிருந்த சாந்தனுவை சுட்டிக் காட்டினான் .

ஆவலோடு குழந்தையை பார்த்தவள் ” குட்டிப்பையா பாட்டிகிட்ட வாடா …” கைகளை விரித்தாள் .சாந்தனு சத்யமித்ராவின் கழுத்தினை கட்டிக்கொண்டான் .

” அம்மா அவனுக்கு நம் மொழி தெரியாது .தமிழ்தான் பேசுவான் .புரிந்து கொள்வான்….,” என்றான் கிறிஸ்டியன் .

அவளின் முகம் சுருங்கியது .” பெயர் என்ன …? ” என்றாள் சத்யமித்ராவை பார்த்து .

யார் பெயரை கேட்கிறாளென அறியாது தடுமாறினாள் சத்யமித்ரா .

” அம்மா குட்டிப்பையன் பெயரை கேட்கிறார்கள் …” விளக்கினான் கிறிஸ்டியன் .

” சாந்தனு …” என்றாள் மெல்லிய குரலில் .ஆனால் தெளிவாக .

” அதென்ன பெயர் …? ” என்ற அவளது கேள்வியில் சத்யமித்ராவிற்கு எரிச்சல் வந்த்து .

” சாந்தனு என்றால் சாந்தமானவன் என்று அர்த்தம் .எடுத்தேன் …கவிழ்த்தேன் என எந்த விசயத்தையும் தடதடவென செய்துவிட்டு பிறகு விழிக்க கூடாது என யோசித்து இந்த பெயரை வைத்திருக்கிறேன் …” என்றாள் .

புரியாமல் அம்மா ,புரிந்து  மகனும்  மௌனமானார்கள் . அப்படியே புரிந்தாலும் எப்படி பேசுவார்கள் இது போல் யோசிக்காமல் எந்த காரியத்தையும் செய்வதுதான் இவர்கள் வீட்டு பழக்கமாயிற்றே ….

” என் பேரனுடன் நான் பேச வேண்டுமே .எப்படி பேசுவது …? ” பாட்டியாக அவள் குரலில் ஏக்கங்கள் தெரிய ,நெகிழந்த சத்யமித்ரா …

” கண்ணா …இவர்கள் உன் பாட்டி .நீ அவர்களிடம் பேசு செல்லம் …” என சாந்தனுவிடம் கூறிவிட்டு , அவனை அவள் மடியில் வைத்தாள் .

” நீங்கள் பேசுங்கள் .அவன் புரிந்துகொள்வான் …” என்றாள் .

தன் மடியிலிருந்த குழந்தையை நடுங்கும் விரல்களால் வருடி முத்தமிட்டவள் ” என் செல்லம் .உன் பெயர் என்ன ராஜா ..? ” என்றாள் .




சாந்தனு மௌனமாக இருக்க அவனுக்கு விளக்க வந்த சத்யமித்ராவை தான் பார்த்துக் கொள்வதாக தடுத்த கிறிஸ்டியன் தாயின் அருகே அமர்ந்து கொண்டு ” கண்ணா பாட்டி உன் பெயர் என்னவென்று கேட்கிறார்கள் …” என்றான் தமிழில் .

” என் பெயர் சாந்தனு .உங்கள் பெயர் என்ன …? ” சுட்டியாய் திரும்ப கேட்டான் குழந்தை .

இதில் மகிழ்ந்தவள் அவன் கன்னத்தை வருடி முத்தமிட்டு ஆரத்தழுவிக்கொண்டாள் .கர்த்தரே என சேவித்து குழந்தையின் நெற்றியில் சிலுவை வரைந்தாள் .

” என் பெயர் ஜெபசீலி செல்லம் .இது யார் தெரியுமா ..? உன் சித்தப்பா .பெயர் கிறிஸ்டியன் ஆடம்ஸ் .உன் தாத்தா பெயர் தெரியுமா …வில்லியம் ஆடம்ஸ் .உன் அப்பா பெயர் டேவிட் ஆடம்ஸ் .இது போல் உன் பெயரையும் மாற்றிவிடலாமா …? “என்றாள் .

சத்யமித்ராவிற்கு சுரீரென்றது .அக்கா குழந்தை .அவன் மேல் தனக்கு அதிக உரிமை கிடையாது என  ஆரம்பத்தில் அவள் நினைவு வைத்திருந்தாலும் சாந்தனு வளர வளர அவளிடம் காட்டிய ஒட்டுதலில் அவனை தனது குழந்தையாகவே எண்ணத்தொடங்கியிருந்தாள் .

இப்போதோ சந்தித்த மறுநிமிடமே …உனது பெயரை மாற்றிவிடலாமா …என அவன் பாட்டி கேட்டவிதம் அவளுடைய உரிமையின்மையை எடுத்துக்காட்டியது .எவ்வளவு ஆசையாக அவள் இந்த பெயரை வைத்தாள் .ஐந்தே நிமிடங்களில் மாற்றுகின்றனரே …

ஜேம்ஸ் , மைக்கேல் , வின்சென்ட்….. என ஜெபசீலி பெயர்களை யோசிக்க தொடங்க , அவளை நிறுத்தினான் கிறிஸ்டியன் .

” இதெல்லாம் இப்போதே எதற்கம்மா .பிறகு மெதுவாக பார்த்துக் கொள்ளலாமே …”

” ஆனால் அது வரை குழந்தையை என்ன பெயர் சொல்லி அழைப்பது கிறிஸ்டி …? “

” அம்மா இவன் வந்து இறங்கியதும் அப்படியே ராஜா போல் இருந்தானா ..அதனால் நான் அப்போதே இவனுக்கு செல்லமாக ஒரு பெயர் வைத்துவிட்டேன் .ப்ரின்ஸ் .இந்த பெயர் நன்றாக இருக்கிறதுதானே .இப்போதைக்கு இந்த பெயரிலேயே அழைக்கலாம் அம்மா …”

” ஆஹா …அழகான பெயர் என் ராஜாவிற்கு பொருத்தமான பெயரும் கூட .என் செல்லக்குட்டி ப்ரின்ஸ் …” என ஜெபசீலி பேரனை கொஞ்ச தொடங்கினாள் .

இந்த பெயர் சத்யமித்ராவிற்கும் திருப்தியளிக்க நன்றி சொல்லும் விதமாக அவள் கிறிஸ்டியனை பார்க்க ,அவன் “என்ன சரிதானே …? ” என இவளிடம் உதட்டை மட்டும் அசைத்துக் கேட்டான் .

முதலில் இந்த ஜாடைக் கேள்வியில் திகைத்தவள் பிறகு தலையசைத்து அவன் கேள்விக்கு ஒப்புதல் தந்தாள் .மென்மையாய் ஒரு இதம் பரவியது அவள் மனதில் .

” அன்றைக்கே …உன் அண்ணன் நம்மை விட்டு போன அன்றே , உன் அப்பா அங்கே போனாரே அப்போதே என் ப்ரின்ஸை இங்கே கூட்டி வந்திருக்கலாம் .அவனும் நம் வீட்டு பிள்ளையாய் நம் பழக்கவழக்கங்களோடு வளர்ந்திருப்பான் .இப்போது பார் அவனுடன் பேசக் கூட முடியவில்லை .யாரோ போல் தள்ளி நிற்கிறான் ….”
உங்களை யார் கூட்டிப்போக வேண்டாமென சொன்னது …? செல்வராஜ் அங்கிள் கூட  உங்கள் பேரனையும் கூட்டிப் போங்கள் என்றுதானே சொன்னார் .உங்கள் கணவர்தானே …அன்று …

சத்யமித்ராவின் நினைவில் கொடூரமான அந்த நாள் நினைவு வந்த்து .அன்று ஆஸ்பத்திரியில் தலை தூக்காத பச்சைக் குழந்தை பசியில் வீல் வீலென்று கதற , அவனை தேற்றும் வகை தெரியாமல் கண் முன் பொட்டலமாக கிடந்த தன் சொந்தங்களை வெறித்தபடி நின்றிருந்த சத்யமித்ராவை …ஒரு அற்ப புழுவை போல் பார்த்த அந்த ஆடம்ஸ் ….

கைகளை கோட் பாக்கெட்டிற்குள் விட்டபடி நிமிர்ந்து நின்று சிவந்த கண்களை உருட்டி விழித்து ” என் வீட்டில் கண்டவைகளுக்கும் இடமில்லை ….” என இரக்கமின்றி சொன்னாரே அவர் …இதோ இந்த கிறிஸ்டியனின் அப்பா .

இப்போது மனைவிக்காக என்றதும அந்த கண்டவைகள் பேரனாகிவிட்டது .நேரடியாக வந்து பேச வேண்டுமென்று கூட தோன்றவில்லை .வக்கீல் மூலமாக உருட்டி , மிரட்டி நோட்டீஸ் அனுப்பி தனது தேவைகளை தீர்த்தாயிற்று .

” அம்மா பழையவற்றை விடுங்கள் .இப்போதுதான் ப்ரின்ஸ் நம்மிடம் வந்துவிட்டானே …”

” அதெப்படிடா விட முடியும் …? இங்கே பாரேன் யாரோ போல் என் மடியில் உட்கார பிடிக்காமல் உட்கார்ந்திருக்கிறானே …என் மனது வலிக்கிறதே .ஏம்மா நீயாவது முதலிலேயே எங்கள் குழந்தையை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கலாமே …”

கூர்ந்து கவனித்து ஜெபசீலி கேட்டதை புரிந்து கொண்டு ” கண்டது என உதறிவிட்டு வந்த்தை எடுத்துக்கொண்டு திரும்ப உங்களிடம் வந்து எப்படி நிற்கமுடியும் அம்மா ..? ” என்றாள் .எவ்வளவோ மறைக்க முயன்றும் அவள் குரலில் கோபம் தெரிந்துவிட்டது .

புரியாமல் தன்னை பார்த்த தாய்க்கு ” அவள் அன்று அப்பா ப்ரின்ஸை விட்டு வந்த்தை பற்றி சொல்கிறாள் அம்மா …” என விளக்கிவிட்டு இப்படி பேசாதே என்பது போல் சத்யமித்ராவிற்கு ஜாடை காட்டினான் .

” அது ஆரம்ப கோபத்தில் , டேவிட்டை பறிகொடுத்த ஆத்திரத்தில் சொன்னது .அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து , நீ குழந்தையோடு வந்து அவரை சமாதானப்படுத்தியிருக்கலாமே ….”

அதாவது இவர்கள் கௌரவம் போகாமல் உயர்ந்த இடத்தில் சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து கொள்வார்கள் .இவள் மட்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு வாங்கிக்கொள்ளுங்கள் , ஏற்றுக் கொள்ளுங்கள என இவர்கள் பின்னாலேயே வர வேண்டும் .

ஜெபசீலி சொன்ன நியாயத்தில் கோபமுற்ற சத்யமித்ரா கிறிஸ்டியனின் ஜாடையை கவனிக்காத்து போல் திரும்பிக் கொண்டு ” உங்கள் பேரன்தான் அம்மா .அவனை ஏதோ பிச்சை பொருள் போல் பேசுகிறீர்களே .இது உங்களுக்கும் சேர்த்துத்தானே அசிங்கம் ….” என்றாள் .

” போதும் இனி பேசாதே ….” தாழ்ந்த குரலில் தமிழில் இவளிடம் உறுமிவிட்டு …விளக்கத்திற்காக காத்திருந்த தன் தாயிடம் …

” அம்மா இவர்கள் இருவருக்கும் பயண அலுப்பு இன்னமும் போகவில்லையாம் .அதனால் இன்னும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்கிறாள் ” என மாற்றி சொன்னான் .

” அப்படியா சொன்னாள் …? ” ஜெபசீலி நம்பாமல் கேட்க …

” அப்படியேதான் ….” என்றபடி எழுந்தான் .

” போகலாம் .ப்ரின்ஸ் வருகிறாயா …? ” என கை நீட்டினான் .

அம்மாவின் முகத்தை பார்த்த குழந்தை அவள் தலையசைத்ததும் உற்சாகத்துடன் பாட்டி மடியிலிருந்து இறங்க தயாரானான் .அவனை விட மனமில்லாது அணைத்த ஜெபசீலி கன்னங்களில் ஆசையாக முத்தமிட்டாள் .பின் தனது பிடியை மனமில்லாமல் தளர்த்திக்கொண்டாள் .

அவள் விட்டதும் வேகமாக இறங்கிய சாந்தனு கிறிஸ்டியனின் நீட்டிய கைகளை தலையசைத்து மறுத்துவிட்டு , வேகமாக ஓடிப்போய் சத்யமித்ராவின் கால்களை கட்டிக்கொண்டு நிமிர்ந்து அவளை பார்த்து “போகலாம்மா …” என்றான் .

இவ்வளவு நேரமாக நீ சொன்னாயென்றுதான் அவர்கள் மடியில் உட்கார்ந்திருந்தேன் என சொல்லாமல் சொன்னான் .சத்யமித்ராவின் முகம் மலர , ஜெபசீலியின் முகம் கடுத்தது .




” பிள்ளையை நன்றாக பழக்கி வைத்திருக்கிறாள் ….” சாந்தனுவின் கையை பற்றியபடி வெளியேற போன சத்யமித்ராவின் காதுகளில் ஜெபசீலியின் இந்த முணுமுணுப்பு விழுந்த்து .

பழக்கிவைத்திருக்கிறேனா …நானா …அவனென்ன நாய்குட்டியா ..அவனை பழக்க …அப்படியே பழக்கியிருந்தாலும் உங்கள் எண்ணப்படி அது எதற்காக ..? என்ன தேவைக்கு உங்கள் பேரனை எனக்கு தோதாக நான் பழக்க வேண்டும் …?

உள்ளத்தில் உருவான இத்தனை வார்த்தைகளையும் மொத்தமாக கொட்டிவிட எண்ணி அவள் திரும்பியபோது ,அவளது தோள்கள் திரும்ப முடியாமல் அழுத்தி பற்றப்பட்டது .வாசலை நோக்கி நடக்கும் விதமாக அவளது உடல் இழுக்கப்பட்டது .

சில விநாடிகள் கழித்தே தன் தோள்களை கிறிஸ்டியன் அப்படி பிடித்திருந்த்தை உணர்ந்தாள் சத்யமித்ரா .வெளியே காட்டிக்கொள்ளாமல் திமிற முயன்றாள் .ம்ஹூம் சிறிது கூட அசைய முடியவில்லை .

அவளை தன்னோடு சேர்த்து இழுத்தபடி ” நீங்கள் ஓய்வெடுங்கள் அம்மா .நான் இவர்களை அப்பாவிடம் அறிமுகப்படுத்தி விட்டு , பிறகு உங்களிடம் அழைத்து வருகிறேன் …” என்றபடி பிடியை விடாமல் இழுத்து சென்றான் .குனிந்து வலது கையில் சாந்தனுவையும் தூக்கிக் கொண்டான் .

அறையை விட்டு வெளியே வந்து கதவை பூட்டியதும் தான் அவளை விடுவித்தான் .

” உடம்பு சரியில்லாத வயதான பெரியவரிடம் இப்படித்தான் பேசுவாயா  நீ …? ” கோபமாக கேட்டான் .

” நானாக பேசவில்லை .அவர்கள்தான் என்னை பேச வைத்தார்கள் .நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள் .எவ்வளவு மோசமாக பேசினார்கள் …? ” அவன் அழுத்தி பற்றியிருந்த்தால் வலித்த தனது தோள்பட்டையை தடவியபடி சொன்னாள் .

” அம்மாவின் துயரம் மிகவும் பெரியது சத்யா .நீ அதனை கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும் “

அவனது சத்யா என்ற அழைப்பு மனதில் பட்டாலும் அவன் சொன்ன பதில் மனதினை தாக்க ” ஆமாம் உங்கள் அம்மாவிற்குத்தானே பெரும் துயர் .நானெல்லாம் மூன்று வருடங்களாக அம்மா , அப்பா , அக்கா , அத்தான் என எல்லோரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்து விட்டு என்னவென்று கேட்க கூட ஆளில்லாமல்  சந்தோசமாக அல்லவா எனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன்….” கோபமாக சொல்ல நினைத்தாலும் முடிக்கும் போது அழுகை வந்துவிட , தனது குரல் மாற்றத்தை அவனிடம் காட்ட பிடிக்காமல் , அவன் கையிலிருந்த சாந்தனுவை இழுத்து பிடுங்கிக்கொண்டு தங்கள் அறையை அடைந்து கதவை பூட்டிக்கொண்டாள் .

ஐந்தே நிமிடங்களில் அவள் அறைக்கதவு தட்டப்பட , திறந்த போது கிறிஸ்டியன்தான் நின்று கொண்டிருந்தான் .

” சாரி சத்யா உனது கஷ்டமும் பெரியதுதான் .அதனை நானும் உணர்ந்திருக்கிறேன் .ஆனாலும் அம்மா இப்போது இருக்கும் நிலையில் நீ அவர்களிடம் இவ்வளவு வேகமாக பேசியது எனக்கு …என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை .அதனால்தான் உன்னிடம் கொஞ்சம் கடினமாக நடந்து கொண்டேன் …”

இவன் இப்படியெல்லாம் பேசுவானா …எப்போதும் அதிகாரமாக , அடமாக தலையை உயர்த்தி பேசித்தானே இவன் குடும்பத்தினருக்கு பழக்கம் இதில் சாரி வேறு.அவனது தாழ்வான குரலில் ஆச்சரியப்பட்டு அவனை பார்த்தாள் .

” உங்கள் அம்மா உடம்பிற்கு என்ன …? ” சமாதானமாகி விட்ட குரலில் கேட்டாள் .

ஒரு நிமிடம் அமைதியாக நின்றவன் ” அம்மாவிற்கு கேன்சர் ….” உலர்ந்த குரலில் கூறினான் .

சத்யமித்ரா அதிர்ந்து நின்றாள் .

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!