Serial Stories சிகப்பு கல்லு மூக்குத்தி

சிகப்பு கல்லு மூக்குத்தி-1

1

“அம்மா நிறைய பச்சை கலர் மஞ்ச கலர் சிகப்பு கலர் ஃப்ரூட்ஸ் எல்லாம் போடலாமா? ரொம்ப டேஸ்டா இருக்கும்” அக்ஷயா கேட்கும் போதே நாக்கை சுழற்றி சொட்டா போட குழந்தையின் ஆசையை உணர்ந்த மதுராட்சி புன்னகைத்தபடி தனது லேப்டாப்பில் 

ஏ.ஐ இமேஜை அந்த போஸ்டரின் மேல் ஒட்ட முயன்றாள். 

“அது… ஃப்ரூட்ஸ்லாம் வேண்டாம்மா. அது டேஸ்ட்டாக இருக்காது. இதோ கிஸ்மிஸ் இருக்கிறது, இதை மட்டும் தூவிக் கொள்ளலாம்” சசிகலாவின் குரல் வறட்சியாய் ஒலிக்க மவுசை அசைத்துக் கொண்டிருந்த மதுராட்சியின் கை ஒரு நிமிடம் நின்று பிறகு மீண்டும் இயங்கியது.

” ஃப்ரூட்ஸ்லாம் போட்டு ஃப்ரூட்ஸ் கேசரி செய்தால் டேஸ்ட் குறைவாக இருக்குமா? ஏண்டி இப்படி பொய் சொல்லி பிள்ளையை வேதனைப்படுத்துகிறாய்?” முத்தழகியின் குரல் அடுப்படிக்குள் இருந்து கணீரென்று ஒலித்தது.

” அம்மா நீங்கள் கொஞ்சம் சும்மா இருங்கள்” சசிகலா தாயை அதட்டுவது மெல்லியதாய் கேட்டது.

” நான் ஏன்டி சும்மா இருக்கனும்? அப்படி நிறைய பழங்களை போட்டு செய்வதற்கு என்னிடம் பழங்கள் இல்லை, கடையில் போய் வாங்குவதற்கு கையில் காசும் இல்லை, காசு கொண்டு வந்து கொடுப்பதற்கு இந்த வீட்டு ஆண் பிள்ளைக்கு வக்கும் இல்லைன்னு உன் பிள்ளையிடம் சொல்லேண்டி”

” அம்மா நீங்கள் கிளம்புங்கள்” சசிகலாவின் குரல் உயர்ந்தது.

” வீடு இருக்கிறது, கடை இருக்கிறது, வருமானம் இருக்கிறதுன்னு பொய் சொல்லி என் மகளை கல்யாணம் முடித்து கூட்டி வந்து இப்படி சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறார்களே” முத்தழகி ஒப்பாரி போல் இழுத்து பேச சசிகலா உண்மையாகவே அவள் தோள் பற்றி அடுப்படியை விட்டு வெளியே தள்ளினாள்.

” நீ போம்மா. நான் பிறகு வருகிறேன்”

” எதற்காகடி என்னை விரட்டுகிறாய்? பிறந்தநாள் என்று நீ தானே வர சொன்னாய்?”

” நாங்கள் பிறந்தநாள் கொண்டாடப் போவதில்லை. நீ கிளம்பு” கையோடு தாயைப் பிடித்து வாசல் வரை கொண்டு போய் விட்ட பிறகு உள்ளே திரும்பினாள் சசிகலா. 

மதுராட்சி லேப்டாப்பை சட் டவுன் செய்ய எண்ணிய போது அதுவாகவே ஆப் ஆனது. அரை மணி நேரமாக அவள் பார்த்து வைத்த வேலைகள் எல்லாம் போய்விட்டது. லேப்டாப்பிற்கு வேறு பேட்டரி மாற்ற வேண்டும். பெருமூச்சுடன் எழுந்து தன் பர்சை எடுத்துக்கொண்டு “அண்ணி கொஞ்சம் வெளியில் போய்விட்டு வருகிறேன்” என்று கிளம்பினாள்.

 தெருமுனையில் இருக்கும் சிறிய சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தவள் ட்டுட்டி ப்ரூட்டி பழங்களும் நெய் முந்திரி சீனி போன்றவைகளும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். அவள் நீட்டிய பொருட்களை பார்த்ததும் ஒரு நிமிடம் முகம் மலர்ந்த சசிகலா மறு நொடியே வாடினாள்.

” உனக்கு ஏன்மா கஷ்டம்? எங்கள் கஷ்டம் எங்களோடு” 




 “என்ன அண்ணி நானும் உங்களில் ஒருத்தி இல்லையா? ஏன் இப்படி பிரித்து பேசுகிறீர்கள்?”

” இன்னொரு வீட்டிற்கு திருமணமாகி போகப் போகிறவள், எங்களில் ஒருத்தியாக எப்படி நினைக்க முடியும்? இதையெல்லாம் உன் அண்ணனிடம் சொன்னால் என்னைத்தான் திட்டுவார்” தயக்கத்துடன் பொருட்களை வாங்காமல் நின்ற அண்ணியின் கைகளில் பையை திணித்துவிட்டு மீண்டும் தன் லேப்டாப் முன் அமர்ந்தாள் மதுராட்சி.

படித்து முடித்த பிறகு வீட்டை விட்டு வெளியே போய் அவள் வேலை பார்ப்பது அம்மா ராஜலட்சுமிக்கு பிடிக்காததால்,மிக சிரமப்பட்டு வீட்டிலிருந்தே பார்க்கும் இந்த வேலையை தேடிப் பிடித்திருந்தாள்.சொற்ப வருமானம்தான்.ஆனால் இன்று போல் சமயத்திற்கு உதவும்.

 “அம்மா இப்போ இந்த பழங்கள் எல்லாம் போடலாம்” அக்ஷயா குரல் கேட்க தொடர்ந்து சசிகலா அவளை திட்டும் சத்தமும் கேட்டது.

” சனியனே அதற்குள் பாதியை தின்று விட்டாயே! அப்படியா உனக்கு வாய் நம நமக்குது!”

 அக்ஷயாவின் ஓவென்ற அழுகையை கேட்ட மதுராட்சி பதறி எழுந்து உள்ளே போனால் மகளின் கன்னங்கள் இரண்டையும் பற்றி திருகியபடி இருந்தாள் சசிகலா.

” அண்ணி என்ன இது… விடுங்க. சின்ன பிள்ளை அவளுக்கு என்ன தெரியும்?” அண்ணியிடமிருந்து குழந்தையை விடுவித்து தன்னோடு அணைத்துக் கொண்டாள். 

“கொஞ்சமாவது வீட்டு நிலைமை  தெரியுதான்னு பாரேன், ஒரு மாதத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டிய சாமானை ஒரே நிமிடத்தில் தின்று தீர்த்து விட்டால் எப்படி?” சசிகலா ஆதங்கத்துடன் சொல்ல மதுராட்சி அண்ணியின் தோளை ஆதரவாக வருடி விட்டு அக்ஷயாவை தூக்கி தன் தோளில் போட்டபடி வீட்டு வாசலுக்கு வந்தாள்.

 “அத்தை அம்மா இப்போல்லாம் எப்ப பார்த்தாலும் கோபமாகவே இருக்கிறாங்க” விம்மல்களுக்கு இடையே தாயை குற்றம் சாட்டினாள் அக்ஷயா.

” அம்மாவுக்கு கொஞ்சம் பிரச்சனை செல்லம், சீக்கிரமே சரி ஆயிடுவாங்க” குழந்தையை சமாதானம் செய்த மதுராட்சியினுள் பிரச்சனை சரியாகிவிடுமா என்ற கேள்வி பூதாகரமாக எழுந்தது.

” அத்தை அப்பாவிற்கு கேக் வாங்கலாமா?” அக்ஷயா அடுத்த தேவைக்கு மாறினாள்.

” வாங்கலாம்மா, அத்தை வேலையை முடித்துவிட்டு போய் வாங்கி வருகிறேன். ஈவினிங் கட் பண்ணலாம்” 

அவ்வளவு நேரமாக வீட்டின் உட்புறம் இருந்த வெப்பம் வெளியே வரவும் குறைந்திருக்க சிலு சிலுவென்று வீசிய காற்று உடம்போடு சேர்த்து மனதையும் வருடியது. சாதாரணமாகவே தென்காசி கொஞ்சம் குளுமையான ஊர்தான். தற்போது குற்றால சீசன் நேரம் என்பதால் ஊர் முழுவதும் ஏசி போட்டாற் போல ஒரு இதமான குளுமை பரவியிருந்தது.

 அக்ஷயாவை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.தெருமுனையில் குழந்தைவேலுவின் பைக் வருவது தெரிந்தது.அருகே வரவர அண்ணனின் முகத்தை உற்றுப் பார்த்த மதுராட்சியினுள் மிகுந்த சங்கடம் உருவானது. குழந்தைவேலுவின் முகமே சொல்லியது போன காரியம் முடியவில்லை என்பதை.

 பைக்கை நிறுத்தி இறங்கிய குழந்தைவேலு முகம் பார்த்தவள் “அண்ணா” என்றாள் கேள்விக்குறியாய்.

 தங்கையின் முகத்தை பார்க்காமலேயே கைநீட்டி அவளிடம் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டவன் மௌனமாக வீட்டிற்குள் சென்றான். கேள்விப் பார்வையுடன் எதிர்கொண்ட மனைவிக்கும் பதில் சொல்லவில்லை.

” முதலில் சாப்பிடலாம்,சாப்பாடு எடுத்து வையுங்கள் அண்ணி” மதுராட்சி சொல்ல சசிகலா தட்டுகளை டேபிளில் எடுத்து வைத்தாள்.

 சூடாக தட்டில் விழுந்த கேசரியை கண்டதும் கேள்வியாய் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் குழந்தைவேல். “ஹாப்பி பர்த்டே அப்பா” பக்கத்தில் உட்கார்ந்த அக்ஷயா தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

 மகளை அணைத்துக் கொண்ட தந்தையின் கண்களில் லேசான நீர்படலம். “தேங்க்ஸ் டா குட்டி” மகளின் தலையை வருடியவன் மனைவியை முறைத்தான்.

” இப்போது இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் தேவைதானா?” முணுமுணும்தான்.கலங்கிவிட்ட கண்களை மறைக்க சசிகலா அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.

” அண்ணா குழந்தை ஆசைப்படுகிறாளே அதற்காகத்தான்… கண்களைத் துடைங்க…” அண்ணனை அதட்டினாள் மதுராட்சி.

” ப்ச்…” என்ற சலிப்புடன் ஒரு விரலால் கேசரியை எடுத்து மகளின் வாயில் ஊட்டினான். பதிலுக்கு அக்ஷயா தந்தைக்கு ஊட்ட இருவரையும் கண் நிறைய பார்த்திருந்தாள் மதுராட்சி.

” நீயும் சாப்பிடும்மா”

“ம்,அம்மாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிடுகிறேன்ணா”




 தட்டில் ஒரு இட்லி எடுத்துக்கொண்டு உள்ளறையில் படுத்திருந்த தாயிடம் சென்றாள்.அம்மா ராஜலட்சுமி கடந்த ஒரு வருடங்களாக படுக்கையில்தான் இருக்கிறாள்.கணவரின் மறைவு… குறிப்பிட்டு சொல்ல முடியாமல் ஏதேதோ நோய்கள் என எல்லாம் சேர்ந்து ராஜலட்சுமியை படுக்கையில் தள்ளி விட்டது.

” வாயைத் திறங்கம்மா” தாயின் தலையை கொஞ்சம் உயர்த்தி வைத்துவிட்டு முதலில் ஒரு இணுக்கு கேசரியை வாயில் வைத்தாள். இனிப்பு சுவை பட்டதும் “என்னம்மா விசேஷம்?” கஷ்டப்பட்டு வார்த்தைகளை கோர்த்து பேசினாள் ராஜலட்சுமி.

” இன்னைக்கு அண்ணாவுக்கு பிறந்தநாள்மா” மகள் சொல்லவும் ராஜலட்சுமியின் கண்கள் சுவரில் இருந்த காலண்டர் மேல் படிந்து மீண்டது. விழிகளில் சிறு ஒளி. “கோயிலுக்கு போயி…” தொடர்ந்து பேச முடியாமல் மூச்சிரைக்க,அம்மாவின் தோள் தோட்டவள் “நிச்சயம் போய் அண்ணன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்துடுறோம்மா. நீங்க சாப்பிடுங்க”

 சாப்பாடு ஊட்டி முடித்துவிட்டு தாயின் வாயை துடைத்து மீண்டும் படுக்க வைத்தாள்.

” மளிகை சாமான்கள் தீர்ந்து விட்டது என்று சொன்னாயே! இந்த கேசரி எப்படி…?” குழந்தைவேல் சசிகலாவிடம் கேட்டுக் கொண்டிருப்பது காதில் விழ “நான்தான் வாங்கி வந்தேன்ணா. எனக்கு கேசரி சாப்பிட வேண்டும் போலிருந்தது” என்றாள். 

சசிகலா நன்றியுடன் அவளைப் பார்க்க குழந்தைவேல் தங்கையை நம்பாமல் மனைவியை முறைத்தான்.

“அதை விடுங்கள் அண்ணா.போன காரியம்  என்னவாயிற்று,அதை சொல்லுங்கள்”

 வாய்க்குள் காற்றை இழுத்து உப் என்று வெளியேற்றினான் குழந்தைவேல். “இன்றும் பார்க்க முடியவில்லை. ரொம்ப பிசியாக இருக்கிறாராம்”

 மதுராட்சி திகைத்தாள். ஐந்தாவது முறையாக சந்திக்காமலேயே அண்ணன் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறான். ஏன் இப்படி செய்கிறார்கள்? அந்த அளவு பிசியான ஆளா? அவள் அறிந்த வரையில் அவன் ஓரளவு பிசியானவன்தான்.

 விவசாயம், டிராக்டர் கம்பெனி,குற்றாலத்தில் ரிசார்ட் போக இந்த வட்டிக்கு விடும் தொழிலும் கூட பார்க்கிறான். எந்நேரமும் ஊருக்குள் அங்கம் இங்குமாக பைக்கிலும் ஜீப்பிலுமாக பறந்து கொண்டிருப்பவன்.

வரும் எம்.எல்.ஏ எலெக்சனின் அவர்கள் தொகுதி சார்பாக அவன் நிற்கப் போவதாக கூட பேச்சு ஊருக்குள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

 ஊர் பெரிய மனிதனாக பிசியானவன்தான். ஆனாலும் அவனிடம் யாசகம் கேட்டு போகவில்லையே, இதுபோல் அவனிடம் வட்டிக்கு பணம் கேட்டு செல்பவர்கள் எல்லோரையும் இப்படியா அலைய வைக்கிறான்!

 அவள் கேள்விப்பட்ட வரை அப்படியில்லை. தேவையான நேரத்தில் கடனாக என்றாலும் பணம் கொடுத்து உதவினார் மகாராஜா என்றுதான் ஊருக்குள் அவனுக்கு பெயர் இருக்கிறது. ஆனால் அண்ணன் மட்டும் அலைக்களிக்கப்படுவதென்றால்… ஒரு வேளை முன் நாட்களில் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்திருக்கிறானோ?

 ஒரு நிமிடம் நினைத்து விட்டு மறு நிமிடமே தலையசைத்து தனக்குத்தானே மறுத்துக் கொண்டாள். அதற்கு வாய்ப்பில்லை. அதன் பிறகும் சில நேரங்களில் அவனை நேருக்கு நேரே சந்தித்திருக்கிறாள். ஒரே ஊருக்குள் அது தவிர்க்க முடியாதது. அந்நேரங்களில் எல்லாம் தெருவில் போகும் ஏதோ ஒன்றை போல் இவளை கடந்து போவதுதான் அவனுடைய வழக்கம்.

நல்ல வேளை இவனுக்கு எதுவும் நினைவில்லை என்றே மனதிற்குள் நிம்மதி பெருமூச்சு விட்டு மதுராட்சியும் அவனை கடப்பாள். ஆனால் இன்று நடக்கும் சம்பவங்களை பார்த்தால் அவளுக்கு சந்தேகமாக இருந்தது.

 மதுராட்சி ஒரு முடிவுக்கு வந்தாள். அன்று மாலை தானே நேரில் சென்று அவனை சந்திக்க முடிவு செய்தாள்.




What’s your Reaction?
+1
54
+1
33
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
20 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!