Serial Stories Uncategorized

உடலென நான் உயிரென நீ -20

20

” ஹாய் உள்ளே வரலாமா ? ”  அறை வாசலில் குரல் கேட்டு சன்னல் வழியாக வானத்தை வெறித்துக்   கொண்டிருந்த   மதுரவல்லி திரும்பி பார்த்தாள்  .வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள் .கொஞ்சம் குள்ளமாக கொழு கொழு தேகத்துடன் இருந்தாள் .நல்ல வெள்ளையாக இருந்தாள் .அவள் முகம் …

” நான் பக்கத்து ரூமில்தான் இருக்கிறேன் .எனக்கு இங்கே ட்ரீட்மென்ட் போய் கொண்டிருக்கிறது ” ஆங்காங்கே தழும்புகளாக இருந்த தன் முகத்தை காட்டினாள் அவள் .

தன்னைப் போல் ஒருத்தி என்றோர் சிநேகம் உள்ளத்துள் உருவாக இதழ் பிரித்து சிரித்தாள் மதுரவல்லி . ” உள்ளே வாங்க “

” என் பெயர் தாரா .உங்க பெயர் சஷிஸாதானே …? கணா உங்களை பற்றி சொல்லியிருக்கிறார் “

” யார் கணா ? “

” கணா தெரியாதா …? நமக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர் .”

” ஓ …அவரா ? ” மதுரவல்லியினுள் ஒரு அலட்சியம்.  அப்போது அவளுக்கு டாக்டரின் பெயர் உண்மையாகவே தெரியாது .அப்படியே கேட்டிருந்தாலும் மனதில் தங்காத பெயர் அது .

சுடு சொற்களாலும் ,  முறைப்பான பார்வைகளாலும் அவளை குத்தியபடி அவளுக்கு சிகிச்சை தரும் அந்த டாக்டரின் பெயரை அவள் எப்படி நினைவில் வைத்திருப்பாள் ?

” சஷிஸா…சஷிஸா ..” தாரா மீண்டும் மீண்டும் அழைத்த பின்பே திரும்பினாள் .

” உங்க பெயர் சஷிஸாதானே …கூப்பிட கூப்பிட பேசாமல் இருக்கிறீர்கள் ? “

” ஹாங் …ஆ…ஆமாம் .என்னை உங்களுக்கு எப்படி தெரியும் ? “

” அதுதான் சொன்னேனே .கணா சொன்னாரென்று .அவர் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவார் ” பெருமிதம் வழிந்தது தாராவின் குரலில் .

” ஓ …உங்களுக்கு என்ன ஆயிற்று ? ” தாராவின் முகத்தை காட்டி கேட்டாள் .

” இது …ஒரு பயர் ஆக்சிடென்ட் .  பெரிய மாலில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் போது அங்கே திடீரென தீ பற்றிக் கொண்டது. நான் அதில் மாட்டிக் கொண்டேன். என் முகம் , கை , காலெல்லாம் கருகிவிட்டது . என் டாடி அமெரிக்கா கூட்டிப் போய் இதை சரி செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு ப்ரெண்ட் டாடியிடம் கணாவை பற்றி சொல்லி இங்கே கூட்டி வந்து விட்டார் . அந்த ப்ரெண்டுக்கு நான் மிகுந்த நன்றி சொல்ல வேண்டும் .அவர் இல்லையென்றால் நான் கணாவை மீட் செய்திருக்கவே முடியாதே …”

சிதைந்து கிடந்த தன் முகத்தை குணமாக்குகிறவன் என்பதை விட அந்த கணநாதனை பார்ப்பதே போதும் என்ற ரீதியில் பேசுபவளை வியப்பாக பார்த்தாள் மதுரவல்லி .

” நீங்கள் தமிழ்நாடா ? அழகாக தமிழ் பேசுகிறீர்களே ? “

” ஆமாம் நான் சென்னை .நீங்கள் …? “

” நான் தமிழ்நாட்டு பக்கமே வந்ததில்லை “

” ஆனால் எப்படி தமிழ் …? “

” என் அம்மா சொல்லி தந்தார்கள் .அம்மாவுடன் பேச மட்டுமே தமிழ். மற்றபடி படிப்பு எல்லாமே இந்தியில்தான் ….”

” ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். இங்கே என்ன சிகிச்சைக்காக வந்திருக்கிறீர்கள் ? “

” இன்னமும் அழகாக …என் அம்மாவை போல் மாற …” மதுரவல்லி தன் முகத்தை வருடிக் கொண்டாள் .

” உங்கள் அம்மா உங்களை விட அழகா ? “

” நீங்கள் என் அம்மாவை பார்த்ததில்லை. அவர் …'”வேகமாக ஆரம்பித்தவள் வாயை மூடிக் கொண்டாள் .இன்னாரென தாயை இனங்காட்டும் உரிமை அவளுக்கு கிடையாது .

அருகருகே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஒத்த வயதுப் பெண்கள் இருவரும் சீக்கிரமே சிநேகிதிகளாகி விட்டார்கள் .தங்களது சிகிச்சை நேரம் போக கிடைத்த நேரசங்களில் ஒரே அறையில் அரட்டை அடித்தனர் .




” க்ரே கலர் ஷர்ட்டுக்கு ப்ளாக் கலர் பேன்ட் ரொம்ப பொருத்தம் இல்லை …? ” தாரா திடுமென சம்பந்தமில்லாமல் கேட்க , மதுரவல்லி விழித்தாள் .

” இப்போது இது எதற்கு ? “

”  இன்று கணா  இந்த காம்பினேசனில்தான் டிரஸ் செய்து கொண்டு வந்திருந்தார்.காரிடாரில் நடந்து வரும் போது பார்க்க வேண்டுமே அவரை..அப்படியே ராஜநடைதான் ” தாராவின் கண்கள் சொக்கி  நிற்கும் .

மதுரவல்லி அப்படி கணநாதன் நடந்து வரும் போது எட்டிப் பார்ப்பாள்.  அவளுக்கு ஒன்றும் தோன்றாது .எப்போதும் போல் அவளை கடித்து குதற வரும் சிறுத்தை போலத்தான் கணநாதன் தெரிவான்.

” உடம்பில் புள்ளி இல்லை அவ்வளவுதான் .மற்றபடி சிறுத்தைதான் ” முணுமுணுப்பாள் .

” கரெக்ட் சஷிஸா .அப்படி சிறுத்தை மாதிரி ஒரு கம்பீரம் இல்ல …? ” தாராவின் வழிசல் நிற்காது .

” ஏய் எதற்கு இங்கே நின்று கொண்டிருக்கிறாய் ?  ட்ரீட்மென்டில் இருக்கும் போது இப்படி வெயில் வரும் இடத்தில் நின்றால் தோல் எப்படி வெளுக்கும் ? “

கணநாதன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வர வேண்டியவனில்லை.  ஆனால் இவர்களை பார்த்ததும் பாதை மாற்றிக் கொண்டு வந்து மெனக்கெட்டு திட்டுகிறான் .

” கணா …இப்போது இந்த தழும்புகள் மாறி விட்டனவா ..பாருங்களேன் ”  தாரா கொஞ்சலோடு அவன் முன் தன் கன்னத்தை திருப்பி காட்ட , அவன் பார்வை அவளிடம் மாறியது .

” நேற்றுத்தானே பார்த்தேன் .ஒரே நாளில் பெரிய மாற்றம் வந்து விடுமா என்ன ? ”  கேட்டபடி தாராவின்  முகம் தூக்கி ஆராய்ந்தான் . அவனது கவனம் இடம் மாறவும் மதுரவல்லி அவனை நோக்கி உதட்டை மடித்து ” வெவ்வெவ்வே ” காட்டினாள் .அவளை திட்டியதற்கான சிறு பழி வாங்கல் .

அவன் சட்டென திரும்பி பார்த்து விட்டான் .  மதுரவல்லி வேகமாக திரும்பி அறைக்குள் போய் கொள்ள  நினைத்த போது அவள் தோள்களை பற்றி நிறுத்தினான் .

” இருக்கும் கோணல் போதாதென்று இன்னமும் உதடுகளை கோணிக் கொள்கிறாயாக்கும் ? ”  சுருக்கென ஊசியேறுவது போல் கேட்டதோடில்லாமல்  அவள் உதடுகளை இரு விரலால் சுண்ட வேறு செய்தான். கண்களை முட்டிய கண்ணீரை தாராவிற்கு காட்ட விரும்பாது அறைக்குள் ஓடி வந்துவிட்டாள் மதுரவல்லி .

இது போன்ற அவளது வேதனைகளை அவளுக்கு பகிர்ந்து கொள்ள ஆளிருந்ததில்லை.  இறந்து விட்ட அம்மாவையோ …எப்போதாவது வரும் அப்பாவையோ அவளால் ஆறுதலுக்காக நினைக்க கூட முடியாது. அவள்  ஓரளவு வேதனைகளை பகிர்ந்து கொள்வது  மிஸஸ் ரூபாவிடம்தான் . ஆனால் மகனை பற்றிய குறைபாடுகளை அன்னையிடமே எப்படி சொல்வது ? கங்குகளை விழுங்கிய அவஸ்தையுடன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள் அவள் .




” இப்போது கூட வேண்டாமென நிறுத்தி விடலாம் ”  அவள் கன்னத்து ஆபரேசனுக்காக அவளை தயார் செய்து கொண்டிருந்த போது சுற்றியிருந்த நர்சுகள் காதில் விழாது அவளுக்கு மட்டுமாக முணுமுணுத்தான் கணநாதன் .

என் அப்பாவும் நானுமாக முடிவு செய்த விசயம் .இவனுக்காக ஏன் மாற்ற வேண்டுமாம் …தன் கன்னத்தை வருடிப் பார்த்தபடி இருந்த அவன் கையை பிறரறியாமல் பட்டென தட்டி விட்டாள்.

” நான் ஆபரேசனுக்கு ரெடி டாக்டர் ”  தலைமை டாக்டர் குரியகோஸை பார்த்து குரல் கொடுத்தாள் .கணநாதனின் கண்கள் இடுங்கின .மெல்லிய தீப்பிளம்பு அக் கண்ணில் தெரிந்தது .அவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான் .

மதுரவல்லியின் ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது . ரூபா ஆபரேசனை மிக நேர்த்தியாக செய்து முடித்தாள் .

தன் முகத்தை விநோதமாக பார்த்த தாராவிடமிருந்து ஷாலை முகத்தை சுற்றி போட்டு கன்னங்களை  மறைத்துக் கொண்டாள் .தாரா தன்னுடனான பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதாக மதுரவல்லி உணர்ந்தாள் . இது நிச்சயமாக கணநாதனின் வேலைதானென முழுதாக நம்பினாள்

அவனுக்குத்தான் அவளுடன் யார் பேசினாலும் பிடிக்காது .அவளுடன் எப்போதும் கலகலப்பாக பேசும் வார்டுபாயை எதற்கென்றே தெரியாமல்   இரண்டு நாட்கள் முன்பு போட்டு அடி அடியென அடித்து நொறுக்கி விட்டான்.  அந்த வார்டுபாய் வேலையை விட்டே போய்விட்டான் .இப்போது இந்த தாராவையும் ஏதோ பேசி அவளை விட்டு விலக்கி நிறுத்துகிறான் .

” நீ கணாவை காதலிக்கிறாயா ? ” ஒரு மாதிரி குரோதத்துடன் கேட்டபடி தன் முன் வந்து நின்ற தாராவை ஆச்சரியமாக பார்த்தாள் மதுரவல்லி .

” நானா …? அந்த ஆளையா …? சான்ஸ்லெஸ் …”

” தேங்க் காட் .  நாங்கள் இருவரும் லவ் பண்ணுகிறோம் .என் ட்ரீட்மென்ட் முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் .உனக்கு நிச்சயம் பத்திரிக்கை அனுப்புவோம் .வந்து விடு ” அறிவித்து விட்டு துள்ளல் நடையுடன் அறையை விட்டு வெளியேறி போன தாராவை மதுரவல்லி அதன் பின் பார்க்கவில்லை .

இதோ இப்போதுதான் பார்க்கிறாள் .




What’s your Reaction?
+1
26
+1
12
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
23 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!