Serial Stories

உடலென நான் உயிரென நீ-19

19

சூரியனின் கதிர் முகத்தின் மேல் சுளீரென்று வந்து விழுந்த பின்பே கண் விழித்தாள் மதுரவல்லி.  மனதின் சோர்வு உடலை பாதித்ததாலோ என்னவோ அவளுக்கு உடலெங்கும் வலிப்பது போல் தோன்றியது .ஏனோ யாருமற்ற அநாதையாக நிற்பது போலொரு உணர்வு உண்டானது .

நேற்று என்னை பற்றிய எல்லா விசயங்களையும் தெரிந்து கொண்டு போன பாட்டி அதன் பிறகு வரவே இல்லையே .அப்படியானால் தாத்தாவோ , மாமாக்களோ என்னை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்ற அர்த்தம்தானே ? இதை எதிர்பார்த்துத்தான் டாக்டர் என்னை அங்கே விட மறுத்தார் போல …

கணநாதன் நினைவு வந்ததும் அவள் மனபாரம் குறைந்தாற் போலிருந்தது .இதோ இப்படியே அவனை அழைத்து அவன் வந்ததும் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டால் இந்த பாரம் குறையுமே எனத் தோன்ற , உடனே அவனை அழைத்தும் விட்டாள்.

” மாமா …”

தன் குரல் தன் காதிலேயே விழுந்ததும் தான் தனது அழைத்தலை உணர்ந்தாள் அவள் .விருக்கென எழுந்து அமர்ந்தாள் .என்ன சொல்லி அழைத்தாள் ? மா…மா …அப்படியா …அது எப்படி அவளை அறியாமல் அவள் வாயிலிருந்து வந்தது ? மீண்டும் ஒரு முறை அழைத்தாள்.




” மாமா …” தன் உடல் சிலிர்த்து அடங்குவதை உணர்ந்தாள் .

இதற்கு முன்பும் அவள் கணநாதனை இப்படி அழைத்திருக்கிறாள் தான் .ஆனால் அப்படி அழைக்க வேண்டுமென மனதில் பாடம் செய்து கொண்டு பின் அவள் நாவசையும் …குரல் வெளி வரும் .ஆனால் இப்போதோ …அவளறியாமலேயே அவள் வாயிலிருந்து இந்த உரிமை அழைத்தல் .

முன்பு டாக்டர் என்று அழைத்து அவனை தள்ளி நிறுத்த விரும்பாது உறவினனாக நிறுத்தவே அப்படி அழைக்க நினைத்தாள் . ஆனால் இப்போது அவள் மனம் முழுவதும் அவன் அவளது உரிமையானவனாக நிரம்பியிருந்தான். அந்த உணர்வே அவளறியாமல் அவள் நா உச்சரித்த இந்த அழைப்பு .

என்னவன் …எனக்கு உரிமையானவன் …என் மாமன் …மதுரவல்லியின் மனம் கொண்டாடியது அவள் கணவனை. இவனை முன்பெல்லாம் எப்படி வெறுத்தேன் ..இவனை பார்த்தாலே எனக்கு எவ்வளவு கோபம் வரும் …?  இவனோடு திருமணமென்றதும் அன்றைய என் பாதுகாப்புதானே என் மனதில் நின்றது . அத்தோடு அம்மாவின் வலியுறுத்தலும் , தவிர கணநாதன் ரூபா ஆன்ட்டியின் மகன் என்பதும் ….இவைகள் தான் அன்று எங்களது திருமணத்திற்கான காரணங்கள் தவிர வேறில்லை .

இன்றோ….எங்கே …எந்த தருணத்தில் என் மனம் மாறியது …? எப்போது அவன் பின் போனது ? என்னை மறந்து அவனில் என் மனம் தஞ்சம் புகுந்தது எப்போது ,?  வரையறுத்து சொல்ல முடியாத குழப்ப நிமிடங்கள் ஊர்தியாய் அவளுள். ரயில் பூச்சியை கையில் பிடித்து சிலிர்த்து நெளியும் சிறு பிள்ளையாய் அவள் மனம் .

மதுரவல்லியின் பார்வை படுக்கையின் எதிரே இருக்கும் கண்ணாடியில் விழுந்த போது தான் அவள் அதனை உணர்ந்தாள். அவள் தாழ்ந்த விழியும் , சிவந்த கன்னங்களுமாக நகம் கடித்துக் கொண்டிருந்தாள் .  கட்டிலில் அமர்ந்து கீழே தொங்க விட்டிருந்த கால் கட்டைவிரல் தரையை தேய்த்துக் கொண்டிருந்தது. முன்னொரு நாள் ராஜத்தை பார்த்து அவள் பாடம் செய்ய முயன்ற வெட்கப்படும் முறை .இயல்பாகவே அவளிடம் அப்போது வந்து விட்டிருந்தது .

மதுரவல்லி சட்டென எழுந்து நின்று கண்ணாடியில் தன்னை பார்த்தாள்.  முன்னெப்போதும் இல்லாமல் தான் மிக அழகாகி விட்டதாக உணர்ந்தாள் . ஏய் …மதுரா நீ காதலிக்கிறாயடி …அதுவும் அந்த உர்ராங்குட்டானை …அவள் மனம் பறையடித்தது . களுக்கென்ற சிரிப்புடன் முகத்தை மூடிக் கொண்டவள் தன்னை தானே ஒரு சுற்று சுற்றினாள் . அவள் விழிகள் பரபரவென அவளவனை தேடின .

” ஏய் மாமா நீ எங்கே இருக்கிறாய் …? ”  மென் குரலில் கேட்டபடி படுக்கையறையை விட்டு வெளியே வந்து கணநாதனை தேடினாள். .வீட்டில் அவன் இல்லை. வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஏதாவது அவசர நோயாளியை போய் பார்க்க வேண்டியிருந்தால் அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ ….தூங்கிக் கொண்டிருக்கும் போதோ கணநாதன் இப்படி வெளியே பூட்டிக் கொண்டு போவது வழக்கம்தான் என்பதால் சற்றே ஏமாந்த மனதினை சமாதானப்படுத்திக் கொண்டு தனது காலை வேலைகளை முடிக்க தொடங்கினாள் .




குளித்து முடித்து சுடிதார் வேண்டாமென முடிவெடுத்து  ஆரஞ்சு நிற சில்க் காட்டன் புடவையை பளிச்சென உடுத்தி , முதல் நாள் ராஜம் பறித்து  கட்டி ப்ரிட்ஜில் வைத்திருந்த கனகாம்பரத்தை தலை நிறைய சூடிக் கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு மிராசுதார் வீட்டு பெண்களின் ஜாடை அப்பட்டமாக தெரிந்தது .  உடன் தன்னை அவர்கள் நிராகரித்தது நினைவை தாக்க, ஒரே நிமிடம்தான் தலையை சிலுப்பிக் கொண்டாள்.

” போங்களேன் எனக்கு என் மாமா இருக்கிறார்”  தலைநிமிர்த்தி அறிவித்துக் கொண்டாள் .  ஹாலுக்கு வந்து மணி பார்க்க எட்டு என்றது சுவர் கடிகாரம் .இந்த ராஜத்தை எங்கே காணோம் …காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவாளே …யோசித்தபடி அடுப்படிக்குள் போனாள். காபி போடலாமா …டீ போடலாமா…பழக்கமற்ற இடத்தில் சிறு தடுமாற்றத்துடன் அலமாரி திறந்து மளிகை டப்பாக்களை ஆராய்ந்தபடி இருந்த போது வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது .உடன் மனம் துள்ள வாசலுக்கு ஓடினாள் .

கதவை திறந்ததும் கணநாதன் கண்ணில் படும் இடத்தில் நின்று கொண்டு தன் ஆடையை சரி்செய்து கொண்டாள் .இப்போதுதான் அவளுக்கு ஒரு புது குழப்பம் வந்தது .இந்த மாதிரி டிரஸ் செய்தால் அவனுக்கு பிடிக்குமா ?  ஒரு வேளை பட்டிக்காட்டுத்தனம் என்று விடுவானோ …அவள் மிக சிரமப்பட்டு சுகன்யாவிடம் சேலை கட்டும் முறையை படித்திருந்தாள்.

இங்கே இந்த ஊரில் அதிகமான பெண்களின் உடை சேலையாகவே இருந்தது.  தானும் அவர்களை போல் …என நினைத்து மதுரவல்லியும் சேலை கட்ட படித்து இரண்டு மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு சேலை கட்டினாள் .கால் தடுக்க …அடிக்கடி நெகிழும் உடையை சரி செய்ய என அவள் படும் சிரமத்தை கவனித்த கணநாதன் ” இத்தனை சிரமப்பட்டு ஒரு வேலையை செய்ய வேண்டியதில்லை பேபி .நம் மீதான மதிப்பு நம் உடையில் வருவது கிடையாது .நீ உனக்கு சௌகர்யமான உடையையே உடுத்திக் கொள் ” என்று அவளை சுடிதாருக்கே மாற்றி விட்டான் .

ஆனாலும் முதன் முதலில் அவளாக சேலை கட்டி நின்ற போது அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை நினைவு கூர்ந்தே  இன்று இந்த உடையை தேர்வு செய்தாள் .ஆனால் இப்போதோ திடீர் குழப்பம் அவளுள் ….

குழப்பத்தில் அவள் நகம் கடித்து நின்ற போது கதவை தள்ளி திறந்தபடி உள்ளே வந்த கணநாதன் …

” எதற்கு இப்படி நந்தி மாதிரி வாசலில் நிற்கிறாய் …? அந்தப் பக்கம் போ…” என்றான் எரிச்சல் குரலில் .  அவன் கண்களில் அவளது கவனமான அலங்காரம் பட்டது மாதிரியே தெரியவில்லை .

மதுரவல்லி திகைத்தாள் .இப்போது எதற்கிந்த கோபம் ? என் மீதா…? என் உடையின் மீதா …? எதனால் …?

இதனால்….என்ற பதில் வாசலில் இருந்தது .மதுரவல்லி மீது எரிந்து விழுந்து விட்டு ,  வாசலுக்கு திரும்பி அன்பொழுகும் குரலில் அழைத்தான் .

” உள்ளே வா தாரு “

கேல்வின் கெலின் வாசம் மணக்க உள்ளே நுழைந்தவள் தாரா .




What’s your Reaction?
+1
27
+1
16
+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
23 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!