Serial Stories

உடலென நான் உயிரென நீ -18

18

” மதுரா என்னம்மா ஏன் அழுற ..? ” பேத்தியை மார்போடு அணைத்துக் கொண்டு கேட்டாள் சங்கரவல்லி .

” பாட்டி …அம்மா நம்மளை விட்டு போயிட்டாங்க பாட்டி .செத்து போயிட்டாங்க பாட்டி …”  கத்தலோடு வெளி வந்த மதுரவல்லியின் கூக்குரலில் சங்கரவல்லி பிரமை பிடித்து அமர்ந்து விட்டாள். தன் மடியில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருப்பவளின் பிரக்ஞை கூட அவளுக்கில்லை .

கணநாதன் அவள் தோள்களை தொட்டு அசைத்தான் .” அம்மா …அம்மா …”

” இ…இது …நி…நிஜமா தம்பி ? “

அளவில்லா வேதனையை விழிகள் பிரதிபலிக்க தலையசைத்தான் .சங்கரவல்லி வெடித்த அழுகையோடு தன் மடி கிடந்த மதுரவல்லியை வாரி அணைத்துக் கொண்டாள் .பெருமூச்சோடு அவர்களை பார்த்து விட்டு கணநாதன் எழுந்து உள்ளே போனான் .

சிறிது நேரம் கழித்து இரண்டு டம்ளர்களில் சூடான காபியுடனும் , ஈர டவலுடனும் வந்தான்.  இரண்டு பெண்களையும் அதட்டி அழுகையிலிருந்து மீட்டு டவலால் முகம் துடைத்து காபியை கைகளில் திணித்தான். மிரட்டலான குரலில் குடிக்க வைக்க முயற்சித்தான் .

” பூங்கொத்து போல வளர்த்த பிள்ளையை இப்படி பருந்துக்கு பறி கொடுத்துட்டேனே ”  புலம்பியவளை தோள் தட்டி அமர்த்தினான் .




” தேற்றிக் கொள்ளுங்கள் அம்மா .இதோ உங்கள் பேத்தியை பாருங்கள். எப்படி அழுது கொண்டிருக்கிறாள் ?  இவள் சின்ன வயதிலிருந்தே உறவினர்களை , பாசத்தை அறியாமலேயே வளர்ந்தவள். இவளுக்காகவாவது உங்களை தேற்றிக் கொள்ளக் கூடாதா ? ” கணநாதனின் சரியான கேள்வி சங்கரவல்லியின் பாச இதயத்தை துளைக்க அவள் வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள் .

 ” ஆமாம் …நான் அழமாட்டேன்.  அஜாக்கிரதையாக என் கண்ணை தவற விட்டு விட்டேன் .என் கண்மணியை அப்படி விடமாட்டேன். மதுராக்குட்டி நீ கிளம்புடா .நம்ம வீட்டுக்கு போகலாம் ” சங்கரவல்லி எழுந்து மதுரவல்லியின் கை பற்றிக் கொண்டு கிளம்ப முயன்றாள் .

கணநாதன் மதுரவல்லியின் தோளை அழுந்த பற்றி தன்னோடு அணைத்தபடி நின்றான்.  “இவள் இருக்கட்டும் அம்மா .நீங்கள் முதலில் உங்கள் குடும்பத்தாரிடம் போய் விசயத்தை சொல்லுங்கள் .நான் பிறகு இவளை அழைத்து வருகிறேன் …”

” சரிதான் தம்பி. நான் அவரிடமும் பிள்ளைகளிடமும் எல்லாவற்றையும் சொல்லி அவர்களையே இங்கே கூட்டி வருகிறேன் ” வயதை மறந்து ஓடினாள் சங்கரவல்லி .




இன்னமும் விம்மிக் கொண்டிருந்த மதுரவல்லியை தன்னோடு அணைத்துக் கொண்டான் கணநாதன் .” பேபி போதும்டா. அழுது அழுது குரலே மாறிவிட்டது பார் ” கண்டிப்போடு தலை வருடி உச்சியில் இதழ் பதித்தான் .

” நீங்கள் சொன்னதில் நிறைய விசயம் எனக்கே தெரியாது டாக்டர் .  அம்மாவை ரொம்பவே கொடுமை படுத்திவிட்டாரோ  அப்பா…சீச்சி அந்த ஆளை அப்பா என்று கூப்பிடவே நா கூசுகிறது “

” ம்கூம் மதுரா .உன் அம்மாவின் மானம் சம்பந்தப்பட்ட உறவு இது.  உன் அம்மா வேலை பார்க்கும் துறை …மிக எளிதில் அவர்களுக்கு தப்பான பட்டத்தை சூட்டிவிடும் சமுதாயம். வாழ்நாள் முழுவதும் ரணத்தையே அனுபவித்து மறைந்தவருக்கு நாம் காட்டும் மரியாதை இது அல்ல .நீ சந்திரலாலை நிச்சயம் அப்பா என்றுதான் அழைத்தாக வேண்டும் ” மெல்ல அவளை சோபாவில் அமர்த்தினான் .

சற்றே நின்றிருந்த மதுரவல்லியின் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தன .” இதனால்தானோ என்னவோ அம்மா ஒரு நாளும் அப்பாவை பற்றி என்னிடம் தவறாக ஒரு சொல் கூட சொன்னதில்லை டாக்டர் “

” ம் …அப்பா – மகள் உறவு சுமூகமாகவே போகட்டும் என்று உன் அம்மா நினைத்திருக்கலாம் ” கணநாதன் மெல்ல அங்குமிங்கும் நடந்தபடி இருந்தான்.

” இன்னமும் யாரை எதிர்பார்க்கிறீர்கள் டாக்டர் ? ” அவனது யோசனை நடையை பார்த்துக் கேட்டாள் .

” இந்த ஊர் மிராசுதாரை …உன் தாத்தாவை…அவரது கோபத்தை …”

” தா…த்…தா …” கொஞ்சம் பதட்டமாகவே உச்சரித்தாள் மதுரவல்லி.  இது வரை ஒரு நாளும் அவள் மிராசுதாரிடம் நேருக்கு நேர் நின்று பேசியதில்லை .உயரமாக , கறுப்பாக , முறுக்கு மீசையும் , கணீர் குரலுமாக இருப்பவரை எப்போதும் கொஞ்சம் பயத்துடனேயே பார்ப்பாள் .அவரை தாத்தா என்ற பார்வை பார்க்க அவளுக்கு திணறலாக இருந்தது.

” என் அம்மாவின் குடும்பம் இங்கே இருப்பதை தெரிந்து கொண்டுதான் இந்த ஊருக்கு என்னை கூட்டி வந்தீர்களா டாக்டர் ? “

” ம். உன் அம்மாவின் வேண்டுகோள் இது. அதனை நாங்கள் நிறைவேற்றினோம் “

” இதையெல்லாம் முன்பே என்னிடம் சொல்லியிருக்கலாமே டாக்டர் …? “

” ம் …”  என்றானே தவிர மேற்கொண்டு எந்த விளக்கமும் கொடுக்க கணநாதன் தயாராயில்லை .தனது நடையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தான் .

மதுரவல்லிக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது .அதென்ன எப்போதும் ஒழுங்கான பதில் சொல்லாமல் தான் தோன்றித்தனமாகவே நடந்து கொள்வது ?

எழுந்து போய் அவன் சட்டையை பிடித்து உலுக்கலாம் போல் அவளுக்கு ஆத்திரம் வந்தது.  அதை செயல்படுத்தியும் இருப்பாள். ஆனால் அதற்குள் வாசலில் ” டாக்டர் ” எனும் அழைப்பு .

அவனது பேஷன்டுகள் வரிசையாக வர ஆரம்பிக்க கணநாதன் அவர்களோடு ஐக்கியமாகி விட்டான்.  யார் யாரையோ எதை எதையோ எதிர்பார்த்திருந்த  மதுரவல்லி நினைத்தது நடக்காமல்  அங்கே சோபாவிலேயே தூங்க ஆரம்பித்து விட்டாள் .

மதுரவல்லியை தேடி மிராசுதார் வீட்டிலிருந்து ஒருவரும் வரவில்லை .




What’s your Reaction?
+1
27
+1
15
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
24 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!