Cinema Entertainment விமர்சனம்

மலைகோட்டை வாலிபன்- திரை விமர்சனம்

மலையாள சினிமாவில் பெரும் பொருட்செலவில், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘மலைகோட்டை வாலிபன்’. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஹரீஷ் பரேடி, தானிஷ் சைத், சோனாலி குல்கரனி, கதா நந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஷாந்த் பிள்ளை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலைக்கோட்டை வாலிபன் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.




மலைகோட்டை வாலிபன் (மோகன்லால்) என்கிற மல்யுத்த வீரன், அவனது ஆசான் அய்யனார் (ஹரிஷ் பேரடி)  மற்றும் ஆசானின் மகன் சின்னப்பையன் (மனோஜ் மோஸஸ்) ஆகிய மூவரும் ஒவ்வொரு ஊராக சுற்றித் திரிகிறார்கள். ஒரு மல்யுத்த வீரனான மலைகோட்டை வாலிபன் தான் செல்லும் இடங்களில் தனக்கு சவாலாக இருப்பவர்களை சண்டையிட்டு வெற்றி கொள்கிறான். சிறு சிறு மல்யுத்த வீரர்கள் முதல் டாராண்டினோ படத்தின் கதாபாத்திரங்களின் ஸ்டைலில் சண்டையிடும் வெள்ளைக்காரர்கள் மற்றும் வானத்தை தொடும் சக்திகொண்ட (ஒரு சர்ப்ரைஸ்)  வரை இதில் அடக்கம்.

“வெற்றிகளை சேர்த்துக் கொண்டு போவதே மலைக்கோட்டை வாலிபனின் விதி” என்று அவனது ஆசான் அய்யனார் அவனிடம் தொடர்ந்து கூறிவருகிறார். இந்தப் பயணத்தில் அவன் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள் முதலியவை கொஞ்சம் அதீதமான கற்பனை கலந்து ஹாலிவுட் கௌவ் பாய் ஸ்டைடில் சொல்லப்பட்டிருக்கும் கதையே மலைக்கோட்டை வாலிபன்.




நாட்டார் கதை

நாட்டார் கதைப்பாடல்களில் வரும் வீரம், சாகசம், துரோகம், சூழ்ச்சி, வீழ்ச்சி போன்ற அம்சங்களை மையமாக வைத்து ஒவ்வொரு காட்சிகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு கதைப்புத்தகம் படிப்பது போல் மலைக்கோட்டை வாலிபனின் சாதனைகள் மட்டுமே அடுத்தடுத்த நிகழ்வுகளாக முதல் பாதியில் இடம்பெறுகின்றன. கதை நடக்கும் இடம், காலம் ஆகியவை எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.

முந்தைய காட்சியில் இதுதான் படமாக இருக்கும் என்று யோசிக்கும் தருணத்தில் அடுத்த காட்சியில் புதிய திருப்பத்தை எடுக்கிறது கதை. வழக்கமான தொடக்கம் இடைவேளை முடிவு என்று படம் பார்த்து பழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு , இந்தப் படம் கொஞ்சம் சிதறலான அனுபவத்தையே கொடுக்கும். சொல்லப்போனால் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தான் மாறி வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் கூட ஏற்படலாம்.




இந்திய நிலத்தில் பல்வேறு நாட்டார் கதைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளாக இந்தக் கதைகள் மக்களிடம் வாய்மொழிக் கதைகளாக கடத்தப்பட்டு வருகின்றன. ஒரே கதைக்கு பல்வேறு தொடக்கம், முடிவு, திருப்புமுனைகள் இருக்கின்றன. இதில் எது நிஜம் என்று கண்டு பிடிப்பது சுலபமான காரியம் இல்லை. ஒரு கதை எத்தனை விதமாக நமக்கு சொல்லப்படுகிறதோ அவை எல்லாவற்றையும் நாம் கேட்டுகொள்வது மட்டும்தான் வரலாற்றை புதிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி.

இந்த தர்க்கத்தின் அடிப்படையில் தான் மலைகோட்டை வாலிபன் படத்தின் கதையை இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம். “இதுவரை நீங்கள் பார்த்தது எல்லாம் பொய். இனிமேல் நீங்கள் பார்க்கப் போவதுதான் நிஜம்” என்கிற வசனம் தான் படத்தின் கதாநாயகனான மலைக்கோட்டை வாலிபனை புரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே அலகு.




தனது விதி தன்னை எங்கு அழைத்துச் சென்றாலும் அதை மலைக்கோட்டை வாலிபன் எதிர்கொள்ள வேண்டும். அவனது விதி அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் விருப்பு வெறுப்புகளால் திட்டமிடப்படுகின்றன. சிலர் அவனை பழிவாங்கத் துடிக்கிறார்கள், அவன் மரணத்தை நோக்கிச் செல்லும் வகையில் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனால் மலைகோட்டை வாலிபனைப் பொறுத்தவரை தன் விதி என்னவென்பதை தானே தீர்மானித்துக் கொள்ளும் இடத்தில் தான் இருக்கிறான். அதனால் தான் அவன் “நீங்கள் இதுவரை பார்த்தவை எல்லாம் பொய். இனிமேல் பார்க்கப் போவது மட்டுமே நிஜம்“ என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறான்.

படத்தில் என்ன ப்ளஸ்?

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது ஓவ்வொரு படத்திலும் கதைசொல்லும் கட்டமைப்புகளை உடைத்துக் கொண்டே போகிறார். இந்த முறை வெஸ்டர்ன் பாணியுடன் கலந்து மிகை எதார்த்த காட்சிகள் உருவாக்கி ஒரு புதுவிதமான திரையனுபவத்தை அளித்திருக்கிறார்.

இப்படியான ஒரு கதையை தனது உருவத்தால் மிக இயல்பாக நம்ப வைக்கிறார் மோகன்லால். ஒரு மல்யுத்த வீரருக்கான ஆஜானுபாகுவான உடல் மோகன்லாலிடம் இருக்கிறது. அதே நேரத்தில் அவரது சண்டைக் காட்சிகள் அனைத்தும் கற்பனைக்கு மீறியவையாக இருந்தாலும் ஒரு விதமான நளினத்துடன் கட்டமைக்கப்பட்டிருப்பது நம்பகத் தன்மையைக் கூட்டுகின்றன. அவ்வளவு பெரிய உடல் உள்ள ஒரு மனிதர், ஒரு சிறு கம்பின் துணையுடன் காற்றில் பறப்பதை பார்வையாளர்களாகிய நம்மால் ஏற்றுகொள்ள முடிகிறது.




ஹரிஷ் பரேடியின் கதாபாத்திரம் கதையை நகர்த்தும் அம்சங்களுடம் அமைந்திருக்கின்றன. தானிஷ் சைத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் மலைக்கோட்டை வாலிபனை பழிவாங்கும் எண்ணத்துடன் வருகிறது. மிகவும் தனித்துவமான குணாம்சம் உடல்மொழி, முகபாவனைகளை தானிஷ் சைத் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மிக நுட்பமாக நம்மை ஒரு பழமையான கதையில் இருப்பது போல் உணரவைக்கிறார். கதாபாத்திரங்களை விட அவர்களைச் சுற்றி இருக்கும் பொருட்களின் பிரம்மாண்டத்தை அவர் முதன்மைப்படுத்துகிறார். இதனால் பார்வையாளர்கள் தான் எவ்வளவு பெரிய உலகத்தில் இருக்கிறோம் என்பதை கிரகித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் கேமரா இந்த அடிப்படையில் பொறுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புகள் பெரும்பாலும் ஹாலிவுட் வெஸ்டர்ன் படங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.

குறை

இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு கதையாடல், வடிவ ரீதியாக இன்னும் சரியாக கையாளப்பட வேண்டிய நெருக்கடி இந்தப் படத்தில் அதிகம் இருக்கிறது. ஒரு நெடுங்கதை சொல்லப்படும்போது அது பலவித நுண்மையான அழகியல் மற்றும் கவித்துவத்தால் மட்டுமே முழுமை பெற முடியும். அப்படி நுண்மையான அழகியல் இந்தப் படத்தில் இல்லாமல் இருப்பதே, படத்தையோ அல்லது இயக்குநர் சொல்லவரும் கருத்தையோ நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ள சிக்கலானதாக மாற்றுகிறது.

எனினும், மலைக்கோட்டை வாலிபன், திரைப்படங்களில் தொன்மையான கதைகளை நவீன முறையில் எடுத்துரைக்க பல கதவுகளை திறந்து வைத்துள்ளது.




What’s your Reaction?
+1
11
+1
8
+1
1
+1
3
+1
0
+1
1
+1
4
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!