தோட்டக் கலை

உங்கள் வீட்டில் கண்ணாடி தொட்டிகளிலும் பசுமையாய் செடி வளர்க்கலாம்!

பசுமை விரும்பிகள் சின்னதாய் தோட்டம் போட்டு அதற்கென நேரம் செலவழிப்பார்கள். நகரங்களில் வசிப்பவர்கள் இடம் இல்லையே என்று கவலைப்படுவதை விட இருக்கும் இடத்தில் தோட்டம் போடலாம். தாவரங்களை வளர்க்க மண் தொட்டிகள் மட்டுமே ஏற்றதல்ல கண்ணாடித் தொட்டிகளிலும் பசுமையாய் செடிகளை வளர்க்கலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.




நகர்புறங்களில் அதிக இடவசதி இல்லாதவர்கள் மீன்தொட்டி போன்ற கண்ணாடிப் பெட்டிகளிலும், குடுவைகளிலும் தோட்டம் அமைத்து பராமரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கான ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இந்த வகை செடிவளர்ப்பு ஆங்கிலத்தில் டேர்ரேரியம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இம்மாதிரித் தொட்டிகள் நீண்ட செவ்வக வடிவத்திலோ அல்லது சதுர வடிவத்திலோ அமைத்துக் கொள்ளலாம். நம்நாட்டில் இம்மாதிரியான கண்ணாடித் தோட்டம் அமைக்க தனித் தொட்டிகள் இல்லை. அதனால் மீன் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் தொட்டிகளையே இதற்கும் பயன்படுத்தலாம். கண்ணாடி தொட்டியின் அடிப்பாகம் இரும்பு அல்லது துத்தநாகத் தகட்டினால் செய்து கொள்ளலாம். இந்த தகட்டின் மேல் தார் பூசி விட்டால் துரு பிடிக்காது.

தொட்டியின் அடிப்பாகத்தில் குறைந்தது 5 செ.மீ உயரத்திற்கு மண் கலவை இருக்க வேண்டும். அதிக வேர்விட்டு உயரமாக வளரக் கூடிய செடிகளுக்கு 8-12 செ.மீ மண் தேவைப்படும். அந்த வகைச் செடிகளுக்கு மட்டும் அதிக மண் கலவையைக் கொடுக்கலாம். மண் கலவையானது நல்ல வடிகாலும் ஊட்டச் சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும். மண் கலவையை தொட்டியில் போடுவதற்கு முன் ஒரு வரிசை சிறிய கூழாங்கற்களைப் போட்டு அதன் மேல் மண் கலவையை போட்டால் வடிகால் நன்றாக இருக்கும். கூழாங்கற்களுக்கு பதில் மொசைக் சிப்ஸ்களையும் போடலாம். பின்னர் மண் கலவையை 5-10 செ.மீ உயரத்திற்கு நாம் அதில் வளர்க்கப் போகும் செடியின் அளவுக்கு தக்க வண்ணம் மண் கலவையைப் போட்டு அதில் நாம் தேர்ந்தெடுத்த செடிகளை பொருத்தமான இடத்தில் வைத்து மண் அணைக்க வேண்டும். உயரமான செடிகளைப் பின்னும் குட்டையான செடிகளை முன்பக்கத்திலும் நட வேண்டும். இடையே புல் தரையையும் அமைக்கலாம்.




கண்ணாடித் தொட்டிக்குள் செடி வளர தண்ணீரை செடிகளுக்குத் துல்லியமாக ஊற்ற வேண்டும். சாதாரண மண் தொட்டியில் இருக்கும் செடியின் அளவுக்குக் கூட கண்ணாடித் தொட்டியில் வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படாது. மூடியில்லாத தொட்டிகளுக்கு 10 நாளுக்கு ஒரு முறையும். மூடியுள்ள தொட்டிகளுக்கு 20 நாளுக்கு ஒரு முறையும் தண்ணீர் ஊற்றினால் போதும். இம்மாதிரி செடிகளை மூடி வைக்கவும் கூடாது. ஆவியாகும் நீர் கண்ணாடியின் மேல் படிந்திருந்தால் சரியான அளவு தண்ணீர் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். தண்ணீர் அதிக அளவில் ஊற்றிவிட்டால் தொட்டியின் மூடியை திறந்து வைத்துவிடலாம். இதனால் அதிக அளவில் இருக்கும் தண்ணீர் ஆவியாகிவிடும்.




வளர்க்கும் தாவரங்கள்

டிராகிவா வகை, போடோ கார்பஸ், போலிசியா வகை, டைபன் பேக்கியா வகை, நெப்ரோவிப்பிவஸ் வகைகள் , அஸ்பராகஸ் மற்றும் கண்ணபடிக் கள்ளி போன்ற தாவரங்கள் கண்ணாடியில் வளர்ப்பதற்கு ஏற்றது. அடியாண்டம், பொண்ணாங்கன்னி வகை, ஐரிசின், ஒபியோ, போன்புல், குளோரோ, சாபசோனியா, சாபலிய, பெப்ரோமியா வகைகள், ஆப்ரிகன் வைலட், சப்பாத்திக் கள்ளி வகை மற்றும் கற்றாழை வகைகளும் வளர்க்கலாம். செலாஜி நெல்லா, ஹெல்க்கின், பிட்டோனியா, சாக்கிபிராகா, டெரிஸ், கவரோட்பி, வல்லாரை, டைக்கொண்டிரியா மற்றும் சடம் வகை தாவரங்கள் கண்ணாடித் தொட்டியில் வளர்ப்பதனால் அழகு அதிகரிக்கும்.

நீர் தாவரங்கள்

மண் கலவையைப் போட்டு செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக மீன் வளர்ப்பது போன்றே தண்ணீர் ஊற்றி நிரப்பிவிட்டு பலவிதமான நீர் வாழ் தாவரங்கள் வளர்க்கலாம். அழகான இலைகளைக் கொண்ட நீர் வாழ் தாவரங்கள் உள்ளன. நீர் வாழ் செடிகளை சிறிய சிறிய அழகிய பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரங்களில் நட்டு தண்ணீருக்குள் வைத்துவிடலாம். தொட்டியில் உள்ள மண்ணில் செடியை நடாமல் இதுபோல் சிறிய பாத்திரங்களில் நட்டு தொட்டிக்குள் வைப்பதால் நாம் வேண்டும் போது செடிகளை இடம் மாற்றி புதுப்புது அமைப்பை ஏற்படுத்தலாம். வாலிஸ்நேரியா, பூம்பா ஹைடிரில்லா, அமேசான் ஸ்வார்டு, நீருக்குள் அமிழ்ந்திருக்கும் அல்லி, சால் வீரியா, அகாயத் தாமரை, அரைக் கீரை முதலிய செடிகள் நீரில் மிதந்து கொண்டிருக்கும். அல்லியும் , ஆரையும் நீரில் மிதந்து கொண்டிருந்தாலும் அதன் வேர்கள் தொட்டியின் அடியில் உள்ள மண்ணில் தான் இருக்கும். ஆனால் மண்ணில் இறங்காமல் தண்ணீரின் மேல்பாகத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். தண்ணீர் அசைவினால் இச்செடிகள் அங்கும் இங்கும் நகர்ந்து இடம்மாறி கொண்டிருப்பதே ஒரு தனி அழகுதான்.




கண்ணாடித் தொட்டிகள் போல் கண்ணாடி பாட்டில்களிலும் தோட்டம் அமைக்கலாம். ஆனால் பாட்டில்களில் தோட்டம் அமைப்பது என்பது கடினமான வேலையாகும். பாட்டிலின் வாய் குறுகலாகவும், அடிப்பாகம் பெரியதாகவும் இருப்பதினால் செடிகளை உள்ளே வைப்பதும் எடுப்பதும் சிரமமாக இருக்கும். ஆனால் அந்த சிறிய வாய் வழியே செடிகளை உள்ளே தள்ளி அவை பாட்டிலை முழுவதுமாக அடைக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை பார்த்தால் எல்லோரும் ஆச்சரியப் படுவார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!