Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-27

(27)

முதலில் சிறிது அதிர்ந்தாலும் பின்பு காணாதது போல் அவர்களை கடந்து அறையுனுள் நுழைந்தாள் முகிலினி .ஏனெனில் இப்போது என்ன சொல்வாய்? என்பது போன்ற பார்வையுடன் இவளை பார்த்துக் கொண்டிருந்தான் யதுநந்தன் .

கண்டுகொள்ளாமல் மாற்று உடைகளுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் .வெளியே வந்த போது சௌம்யா இல்லை .யதுநந்தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான் .அவனை அணுகி பேசலாமென நடந்தாள் .நேற்று எல்லோர் முன்பும் உன்னை அப்படி அடித்தானே அவனுடனா பேச போகிறாய் ? என்று கேட்டது அவள் மனம் .கால்கள் தயங்கியது .

கணவன் மனைவிக்குள் ஈகோ இருக்க கூடாதும்மா .பாட்டியின் குரல் காதில் ஒலிக்க , தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு அவனை நெருங்கினான் .அவளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தவன் அவள் அருகில் நெருங்கவும் சட்டென எழுந்தான் .

” புதிதாக ஒரு தொழில் தொடங்கியிருக்கிறேன் .எனவே இங்கே அடிக்கடி வர முடியாது .இனி எதற்கும் என்னை எதிர்பார்க்காதே .நானும் காருண்யாவும் எப்போதும் பிஸியாக இருப்போம் .உனக்கு துணைக்கு ஒருவரை நியமித்துள்ளேன் .இப்போது அவர்கள் வந்துவிடுவார்கள்.

அவர்களை துணைக்கு வைத்துக்கொள் .இல்லையென்றால் எப்போது எங்கே போய் விழுவாயோ ? எதில் கை வைப்பாயோ ? என்று பயந்தபடி இருக்க வேண்டியிருக்கும் .இனி எதற்கும் என்னை தேடாதே .உன் வேலை உனக்கு .என் வேலை எனக்கு .பை ” என்றவன் ” யது ஒரு நிமிடம்” என்ற இவளது குரலை காதில் வாங்காமலேயே சென்றுவிட்டான் .

என்ன இது ? இப்படி போனால் எப்படி ? எனக்கு நிறைய விசயங்கள் பேச வேண்டியிருக்கிறதே .நிறைய தெளிவுகள் வேண்டியிருக்கிறதே .யாரிடம் கேட்பது ? மனமுடைந்து அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் .

இல்லை நேரிடையாக சௌம்யாவிடமே பேசிவிட வேண்டியதுதான் என எண்ணி அவள் அறைக்கு  சென்றால் சந்திரவதனாவும் அங்கேயேதான் இருந்தாள் .

” வாம்மா வா …என அவளை அழைத்த சந்திரவதனாவின் குரலில் நிறைய கேலி இருந்தது .

” ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க ? ” நேரடியாகவே கேட்டாள் முகிலினி .

.” என் மனைவி ரொம்ப அறிவாளின்னு பெருமை பீத்துனானே அந்த நந்து .எங்களை கண்டுபிடிக்கவே உனக்கு இவ்வளவு நாள் ஆகியிருக்கே .அதுவும் கன்னம் பழுத்த பிறகுதானே உன் மூளைக்கு உறைத்திருக்கிறது ” தெனாவட்டாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஆட்டியபடியே பேசினாள் .

” தப்புதான் உங்களை முதலிலேயே இனம் காணாதது என் தப்புதான் .இப்போதும் எனக்கு புரியவில்லை .ஏன் இப்படி செய்தீர்கள் ? “

“இது என் பிறந்த வீடு . உன் இடம் என் மகள் வாழ வேண்டியது .இங்கே எங்கள் இருவரை தவிர யாருக்கும் இடமில்லை .மரியாதையாக நீயாக விலகி சென்றுவிடு “

” உங்களுக்கு பைத்தியமா ? ஏற்கெனவே திருமணமான பெண்ணை யாராவது இப்படி நினைத்து பார்ப்பார்களா ?”,




சந்திரவதனா பற்களை கடித்தாள் .” காதல் கண்றாவி என்று இந்த கழுதை செய்த வேலையால் வந்த வினை இதெல்லாம் .ஆனால் முதலில் செய்த தப்பை இப்போது உணர்ந்துவிட்டாள் .அந்த கண்றாவிக்கெல்லாம் குட்பை சொல்லி விட்டு வந்து விட்டாள் .இனி நந்து என் மகளுக்குத்தான் .நீ மரியாதையாக ஒதுங்கி விடு “

” இல்லையென்றால் ….” இடையிட்டாள் முகிலினி .

” உயிரோடு இருக்க மாட்டாய் ” குரூரமாக ஒலித்தது சந்திரவதனாவின் குரல் .

” அன்று நீச்சல்குளத்தில் …”சிறு பயத்தோடு இழுத்தாள் முகிலினி .

” மரக்கிளை விழுந்ததையும் , ஷாக்கடித்ததையும் விட்டுவிட்டாயே ” நக்கலாக கேட்டாள் சந்திரவதனா .

அதிர்ந்தாள் முகிலினி .” ஏன் பெரியம்மா ? நான் உங்களுக்கு என்ன பண்ணினேன் .உயிரையே எடுக்கும் அளவு என்ன விரோதம் உங்களுக்கு என் மீது ” கண்ணீர் குரலில் கேட்டாள் .

” என்னடி பெரிய மாய்மாலம் பண்ணுற ? இது என் வீடு .சும்மா ரெண்டு தளுக்கு தளுக்கிட்டு எங்கேயோ பிறந்த நாயெல்லாம் இங்கே நுழைந்தால் நான் விட்டுடுவேனா ?சௌம்யா அந்த பயகிட்டயிருந்து விவாகரத்து வாங்க போகிறாள் .நந்துவை கல்யாணம் பண்ண போகிறாள் .நானும் , என் மகளும் இந்த வீட்டு எஜமானிகளாக அதிகாரம் செலுத்த போகிறோம் .பார்க்கிறாயா ?”

” கண்டிப்பாக இது நடக்காது .என் யது இதற்கு சம்மதிக்க மாட்டார் ” கத்தினாள் முகிலினி .

” பார்க்கிறாயா ? அவனை எப்படி சம்மதிக்க வைக்கிறேனென பாரேன் .”

” நா …நான் இதையெல்லாம் அவரிடம் சொல்ல போகிறேன் .உங்கள் துரோகங்களை அவரிடம் விளக்கி ….”

முகிலினி முடிக்கும் முன்பே உரத்து சிரித்தார்கள் தாயும் , மகளும் .

” முயற்சித்து பாரேன் .எங்களை பற்றி உன் புருசனிடம் சொல்லித்தான் பாரேன் ” சவால் விட்டனர் .

முகிலினிக்கு தெரியும் யதுநந்தன் நம்ப மாட்டான் .நேற்று கன்னத்தில் வாங்கிய அடியின் வலிச்சுவடுகள் இப்போதும் அவளுக்கு அதனை உணர்த்திக் கொண்டிருந்தன .

எவ்வளவு நடிப்பு .வந்த நாள் முதல் பாசத்தை கொட்டி தாலிச்செயின் வாங்கி தந்து …திடீரென அவளுக்குள் மின்னலடித்தது .

” அந்த மங்கலநாணுக்காக இவ்வளவும் செய்கிறீர்களா ? ” என்றாள் .

” அது உனக்கு எப்படி தெரியும் ?”, சந்திரவதனா உஷ்ணமான குரலில் கேட்டாள் .

” அப்போ அதற்காகத்தானா ? “

” அதற்காகவுந்தான் …” இப்போது அலட்சியம் அவள் குரலில் .

” சை …” வெறுத்துப் போய் முகிலினி திரும்ப ” முகில் குட்டிம்மா எங்கேம்மா போகிறாய் ? உன் யதுவிடம் எங்களை பற்றி சொல்ல போகிறாயா ?” போம்மா போ …” கிண்டலடித்தாள் சௌம்யா .

அதிர்ந்தாள் முகிலினி .இந்த “குட்டிம்மா” அவர்கள் இருவருக்கும் மட்டும் இடையேயான அந்நியோன்னியமான அழைப்பு ….

” இது எப்படி உங்களுக்கு …? “

” தெரிந்திருக்குமென நீயே யோசித்துக் கொள்ளேன் ” விசமமாக புன்னகைத்தாள் சௌம்யா .

அந்த சிரிப்பில் உடலெல்லாம் பற்றியெரிந்தது முகிலினிக்கு . அந்த இடத்திலிருப்பதே மூச்சடைப்பது  போல் தோன்ற , வேகமாக வெளியேறி தங்கள் அறைக்கு நடந்தாள் .

கடவுளே முருகா இந்த துரோகத்தை எப்படி என் யதுவுக்கு இனம் காட்டப் போகிறேன் ? எனக்கு ஒரு நல்ல வழி காட்டப்பா ..மனதிற்குள் இறைவனை தியானித்தபடி அறைவாயிலை அடைந்தவள் திகைத்தாள் .

அவர்கள் அறைக்கதவை திறந்து கொண்டு நிதானமாக வந்து கொண்டிருந்தாள் காருண்யா .இவளைக் கண்டதும் புன்னகைத்து ” ஹாய் காலை டிபன் சாப்பிட்டாச்சா ? ” என விசாரித்து விட்டு பதிலை கூட எதிர்பாராமல் சென்றுவிட்டாள் .

இப்படி போகிறவள் , வருகிறவளுக்கெல்லாம் ரூம் லாக்கிங் நம்பரை கொடுப்பதற்கு எதற்கு அதனை செட் செய்ய வேண்டும் ? மனதிற்குள்ளாக பொறுமியபடி அமர்ந்திருந்தாள் .ஏனோ அறைக்குள்ளிருக்கும் பாதுகாப்பு உணர்வு வரவில்லை .பொது இடத்தில் அமர்ந்திருப்பது போன்றே தோன்றியது .

கதவு தட்டப்பட்டது .அதுதான் இந்த வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் நம்பரை கொடுத்து வைத்திருக்கிறாரே என் அருமை கணவர் .பிறகு என்ன அனுமதி வேண்டிக் கிடக்கிறது .எரிச்சலுடன் ரிமோட்டில் எண்களை அழுத்திவிட்டு
வாங்க என்றாள் .

முத்தரசி வந்தாள் .” அம்மா ஐயா யாரையோ வரச் சொல்லியிருந்தாங்களாம் .அவுங்க உங்களை பார்க்கனும்னு சொல்றாங்க “

உனக்கு துணைக்கு ஒரு ஆள் என்ற யதுநந்தனின் பேச்சு நினைவு வர இப்போது என்ன காரணத்திற்கு எனக்கு துணை ஆள் தேவைப்படுகிறதோ ? முதலில் அந்த ஆளை விரட்டி விட்டு வருகிறேன் வேகமாக எழுந்து கீழே சென்றாள் .

அங்கே காத்துக் கொண்டிருந்த ஆளைக் கண்டதும் தன்னை மறந்து கை விரித்தாள் .” வைஷ்ணவி …” உணர்ச்சி பெருக்கில் லேசாக கண்ணீர் கூட வந்துவிட்டது .

ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்ட வைஷ்ணவியின் நிலைமையும் அதுதான் என்பது அவள் தொண்டையை லேசாக செருமிக் கொண்டதில் தெரிந்தது .

” ஏய் நீ எப்படியடி இங்கே …? ” என்றாள் முகிலினி .

“, என்னடி மறந்துவிட்டாயா ? சார்தானே அன்று எங்களுக்கு ஒரு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைத்தார் .இவ்வளவு நாட்களாக நானும் என் கணவரும் சாரிடம் தான் வேலை பார்க்கிறோம் .இங்கு இல்லை கர்நாடகாவில் .இப்போது எங்கள் இருவருக்கும் வேலையை இங்கே மாற்றிவிட்டார் .உன்னோடு துணைக்கு இருக்கும் வேலை எனக்கு , ஆபீஸ் வேலை அவருக்கு “




” ஓ …” என அவள் கூறியதை உள்வாங்கிக் கொண்ட முகிலினி அன்று இருவருக்கும் திருமணம் முடித்து வைத்ததோடு ஒதுங்கிவிடவில்லை .இன்று வரை அவர்களுக்கு வேலையும் கொடுத்து பராமரித்தும்  வந்திருக்கிறான் கணவன் என பெருமையாக எண்ணிக் கொண்டாள் .

தோழிகள் இருவரும் கை கோர்த்தபடி அவர்கள் அறைக்கு வந்தனர் .” மிக அழகாக இருக்கிறதடி  உனது அறை .ரசனையோடு வடிவமைத்திருக்கிறாய் .உனக்குதான் அதிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு உண்டே ” என்றாள் வைஷ்ணவி .

அறை வடிவமைப்பு சௌம்யாவினுடையது என சொல்ல மனமின்றி தலையாட்டி வைத்தாள் முகிலினி .

” இந்த நம்பர் லாக் கூட நல்ல ஐடியா .நம் அனுமதியின்றி வேறு யாரும் நுழைய முடியாது பாரேன் ” என்றாள் .

ஆமாமாம் …அந்த எண்ணத்தில் அமைக்க பட்டதுதான் .ஆனால் என்னை தவிர மற்ற எல்லோரும் உள்ளே வருகிறார்கள் என எண்ணியபடி ” இது அவருடைய யோசனைதான் ” என்றாள் .

பிறகு தங்களது சிறு வயது கதைகளை பேசியபடி இருந்தனர் .இருவருக்குமாக அறைக்கே கொண்டு வரப்பட்ட உணவை தனக்கு முன்பு தட்டில் பரிமாறிக் கொண்டு அவசரமாக உண்ட வைஷ்ணவியை யோசனையுடன் நோக்கினாள் முகிலினி .

” அது ஒன்றுமில்லைடி ரொம்ப பசித்ததா .அதுதான் ” என்று பதிலளித்தவள் இப்போது எழுந்து கை கழுவி விட்டு வந்து முகிலினிக்கு பரிமாறி தட்டினை நீட்டினாள் .சிறு நெருடலுடன் தோழியை பார்த்தபடி உண்ண துவங்கினாள் முகிலினி.




What’s your Reaction?
+1
20
+1
11
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!