மஞ்சள்காடு

மஞ்சள்காடு-1

01

தங்கம்.

அந்த மஞ்சள்காட்டில் வானும் மண்ணும் நாற்றிசைகளிலும் மேலும் கீழும் ஒரே தங்கம். 

“என்ன டைரக்டரே! எப்படி லொகேஷன்?” என்றார் புரொட்யூஸர்.

“இந்த மஞ்சள் காட்டிலேயே ஒரு ஃபுல் ஸாங் ஸீக்வன்ஸ் எடுத்துடலாம் சார்! அந்த அரண்மனையில் இண்டோர் எல்லாம் முடிச்சுடலாம். சுற்றி இருக்கற குடிசைகளில் ஹீரோ அம்மா-அப்பா கிராம ஸீன், அந்தத் திறந்தவெளில வில்லன் கொடுமை எல்லாம் முடிஞ்சுடும். ரெண்டு ஸாங்குக்கு மட்டும் ஜெர்மனி, கனடா போய் வந்துட்டோம்னா…” என்று இழுத்தார் டைரக்டர் எழில்மாறன்.

“ஆமா, என் செலவில் யூனிட் மொத்தமும் ஜெர்மனி, கனடா போகணுமாக்கும்? ஒண்ணும் வேண்டாம். இப்போ கனடால ஸ்ட்ரைக் வேற நடக்குது. எதுனாலும் இங்கே சுத்துவட்டாரத்திலேயே முடிக்கப் பாருங்கப்பா” என்றார் அந்தப் புரொடியூஸர் (பாவம்!).

“சரி சார், நாங்க இங்கேயே ஒரு வாரம் தங்கி, பேக்கிரவுண்ட் எல்லாம் ஷூட் பண்ணிட்டு வந்துடறோம். அப்புறம் ஸ்டுடியோ ஸீன்ஸ் முடிச்சுட்டு, ஹீரோ ஹீரோயினோட இங்கே வந்து ஸாங்ஸ் ஷூட் பண்ணிடலாம். ஒரே வாரம், அப்புறம் பொட்டுபொடி ஸீன் எல்லாம் என் அஸிஸ்டெண்ட் பார்த்துப்பான்” என்று சொன்ன எழில்மாறனை “நீயும் உன் அஸிஸ்டெண்ட்டும் நாசமாய்ப் போக” என்ற மாதிரிப் பார்வை பார்த்துவிட்டு “அதுக்கென்ன, தாராளமா தங்கி வேலையை முடிங்க. உங்க திறமை தெரிஞ்சுதானே உங்களை நம்ம படத்தில் போட்டேன்? என்னவோ, உங்களை நம்பிட்டேன்” என்றார் புரொடியூஸர்.

******

தமிழ்நாட்டின் வெற்றி டைரக்டர்களுள் ஒருவர் எழில்மாறன். பெரிய புரட்சிப் படம், மக்களைத் திருத்துகிறேன் பேர்வழி என்றெல்லாம் அவர் இறங்குவதேயில்லை. ஆறு பாட்டு, ஐந்து ஃபைட், நான்கு ஃபாமிலி செண்டிமெண்ட், மூன்று வில்லன்கள், இரண்டு ஹீரோயின், ஒரு தங்கை என்பது அவர் ஃபார்முலா. புராணக் கதையிலிருந்து சயின்ஸ் ஃபிக்ஷன் வரை  என்ன கதை கொடுத்தாலும் அவருடைய வெற்றி ஃபார்முலாவில் தயார் செய்த மசாலாவைத் தூவிப் படம் எடுத்துவிடுவார். எழில்மாறனின் படங்கள் எல்லாமே குறைந்தது சில்வர் ஜூபிலி கண்டிருக்கின்றன. அவர் பட ஹீரோக்கள் புரட்சிக் குயில், மிரட்சி திலகம் என்று ஏதேதோ பட்டம் வாங்கி, முதலமைச்சர் கனவு காண ஆரம்பிப்பார்கள். எழில்மாறனின் தயாரிப்பாளர்கள் எல்லோருமே அவருடைய பட்ஜெட்டைக் கேட்டு மிரளுவார்கள். ரிலீசானதும் வசூலைக் கேட்டு ஆனந்தத்தில் பிரமிப்பார்கள். அடுத்த படமும் அவர்தான் என்று காலில் விழுவார்கள்.

*****

தயாரிப்பாளர் கிளம்பியதும் “வின்செண்ட்…  காமிராமேனை வெச்சுக்கிட்டு இந்த ஏரியாவை முழுசா பார்த்துடு. இந்த மஞ்சள் காட்டுப் பரப்பைக் கதையிலேயே கொண்டுவர முடியுமான்னு கதாசிரியரோட டிஸ்கஸ் பண்ணிக்க. பேக்கிரவுண்ட் வெச்சுக்கிட்டு ஸ்டூடியோல ஷூட்டிங் செய்தா போதுமா, மொத்த யூனிட்டும் இங்கே வரணுமான்னு பாரு. நானும் ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி வெளியே புறப்பட்டார் எழில்மாறன்.

எங்கு பார்த்தாலும் அந்தக் காட்டுப் பகுதி முழுவதும் மஞ்சள் பூக்கள் பூத்துத் தங்கமயமாய்ச் செய்திருந்தன. பத்து நிமிடம் நடக்க வேண்டும் என்று எண்ணியிருந்த  எழில்மாறன் முக்கால் மணிநேரம் நடந்துவிட்டார். அப்போது ஒரு அருவி – மிகப் பெரிதும் இல்லாமல், சின்னஞ்சிறிதாகவும் இல்லாமல் – கன்னிப்பெண் துள்ளிக் குதிப்பதுபோல் பாய்ந்துகொண்டிருந்தது. அதன் அழகை ரசிக்கும்போதே எழில்மாறனின் மனது ‘இங்கே ஹீரோயினுடைய ஸோலோ ஸாங் வெச்சுடலாம்’ என்று யோசித்தது. திரும்ப எப்படித் தாங்கள் தங்கியிருந்த இடத்தை அடைவது என்ற கவலை அவருக்கு அதன்பிறகுதான் வந்தது. 

“ஐயாக்குப் பட்டணமோ?” திடீரென்று தனக்கு வெகு அருகில் கேட்ட குரலினால் திடுக்கிட்டுத் திரும்பினார் எழில்மாறன்.

முகம் முழுவதும் அம்மைத் தழும்புகளோடு, தலையில் முண்டாசோடு, சட்டை போடாமல், வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டி, கையில் கோலோடு நின்றுகொண்டிருந்தான் ஒருவன்.

“ஆமா” என்றார் எழில்மாறன் சற்றுப் பயந்தவராக.

“நினைச்சேன். எங்க இப்படி?” என்று கேட்டான் அவன்.

“இங்கே சினிமா எடுக்க…”

“அப்படிச் சொல்லுங்க, சினிமாக்காரவுகளா? சரி சரி…”

“ஏங்க, இங்கேர்ந்து அரண்மனைக்கு எப்படிப் போகணும்?”

அவன் முகம் கறுத்தது. “அங்கே நீங்க ஏன் போகணும்?” என்று கேட்டான்.

எழில்மாறனுக்கு லேசாகக் கோபம் வந்தது. “நாங்க அங்கேதான் தங்கியிருக்கோம்” என்றார்.

“அங்கே ஏனுங்க தங்கணும்? அடிவாரத்தில் பெரிய வீடிருக்கு. அங்கே தங்கிப் படம்புடிச்சுப் போவலாமே!” என்றான்.




 

“இந்தாங்க, உங்களால வழி சொல்ல முடியும்னா சொல்லுங்க, இல்லாட்டா வேணாம். அதுக்காக…”

“ஏன் கோவப்படறீய? ஏதோ எனக்குத் தெரிஞ்ச நல்லதைச் சொன்னேன், அவ்வளவுதான். ஒங்களுக்கு என்ன, அரமணைக்கு வழி காட்டணும், அம்புட்டுத்தானே? வாங்க, கூட்டிப் போறேன்” என்று முண்டாசை அவிழ்த்து உதறி முன்னால் நடந்தான் அவன். எழில்மாறன் பின்னால் சென்றார்.

சிறிதுநேரத்தில் தான் சரியான வழியில்தான் வந்துகொண்டிருக்கிறோம் என்ற தைரியம் வந்துவிட, அந்தக் கிராமத்தான்மீது கோபம் குறைந்தது அவருக்கு. “உங்க பேரென்ன? இந்த ஊர்தானா?” என்று விசாரித்தார்.

“முத்துவேலுங்க. நமக்கு அடிவாரக் கிராமமுங்க. இங்கே பளம் பறிக்கறது, இன்னும் சில மூலிகையெல்லாம் பறிச்சு விக்கறது” என்றான் அவன். 

“அந்த அரண்மனையில் ஏன் தங்க வேண்டாம்னு சொன்னீங்க?” என்று எழில்மாறன் அவராகவே கேட்டார்.

முத்துவேல் பேசாமல் சிறிதுதூரம் நடந்தான். பிறகு “பட்டணத்தாளுங்க இதையெல்லாம் நம்ப மாட்டீங்க” என்றான்.

“என்ன, ஏதாவது ஆவி கதையா?” என்று சொல்லி லேசாகச் சிரித்தார் எழில்மாறன்.

அவனும் புன்னகைத்தான். “சொல்றேன், என்ன கதைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க!” என்று சொல்லித் தொடங்கினான்.

*****

ஐயா! நீங்க தங்கற அரமணையில பல நூறு வருசங்களுக்கு முன்னால ராசா பாரிவள்ளல் வசிச்சதா சொல்வாங்க. இது உண்மையான்னு தெரியாது, எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் ரகுநாத உடையாரைத்தான். அவர்தான் நூறு வருசம் மின்ன முதன்முதலில் பக்கத்துக் கிராமம் எதிலிருந்தோ வந்தாரு, காட்டில் மறைஞ்சிருந்த இந்த அரமணையைப் புதுப்பிச்சு அதிலே வாழ ஆரம்பிச்சாரு. அவர் பாரி ராசாவோட வம்சம்னு சொல்லிக்கிட்டாரு. மலையிலும் அடிவாரத்திலும் பல சொத்துகளைக் கையகப்படுத்திக்கிட்டு, இராசவம்சத்துக்கு உண்டான பரிவட்ட மரியாதைங்க, குத்தகைங்க எல்லாத்தையும் தானே எடுத்துக்கிட்டாரு! 

அவரை எதிர்த்தவங்க எல்லாரையும் அடக்க ஒரு படையே வெச்சிருந்தாரு! குதிரையில் நாலு பேர்  மின்னயும் நாலு பேர் பின்னையும் போக, அவரு நடுவில கோச்சு வண்டியில் வந்தாக்க, தூள் பறக்கும்! ஊரே நடுங்கும்! 

உடையாரைய்யவைப் பத்தி ஒண்ணு சொல்லணும். அவரு என்னதான் சனங்களைக் கொடுமைப்படுத்தினாலும், இந்த மலைமேலே இருக்கற ரணபத்ர காளியம்மனோட கோயில்ல வழிபடத் தவறவே மாட்டார். அவளுடைய பரம பக்தராயிருந்தார். ஆனா அவர் சந்ததிங்களோ, களுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதை!  கொஞ்சம் கொஞ்சமா வழிபாடு குறைஞ்சது, முப்பது வருசத்துக்கு மின்ன வாழ்ந்த விஜய சேதுபதி உடையாரோ, நாஸ்திகராவேயிருந்தார். ரொம்ப குணக்கேடும் கூட.

ஐயா சொல்ல மறந்திட்டன். ரகுநாத உடையார் காலத்தில அரமணைச் சேவுகத்துக்குன்னு அடிவாரத்திலேர்ந்து முப்பது குடும்பங்க மலைக்குப் போய் அரமணையைச் சுத்தி உடையார் கட்டிக் குடுத்த வீடுகள்ளயே வசிச்சாங்க. அந்தக் குடும்பங்கள்ள ஒரு குடும்பம் உடையார்கிட்ட ரொம்ப விசுவாசமான குடும்பம்… அவுக மகன் வெற்றிச் செல்வன்னு… வெளியூருக்குப் போய் கம்யூட்டர்லாம் படிச்சுப்போட்டு வந்த பய. இருந்தாலும் அவன் அப்பாரு அவனை அரமணையிலேயே வேலைக்குச் சேர்த்துவிட்டாக. 

எங்க விஜய சேதுபதி உடையாரய்யாவோட மகளைப் பார்த்ததில்லையே! அமுதவல்லி. தேவதை மாதிரி அழகு. பஞ்சவர்ணக் கிளியாட்டமா அரமணை முளுக்கப் பறந்து திரிவா. அவளுக்கு நம்ம வெற்றி மேலே ஆசை வந்து போச்சு. அவனுக்கும் இஷ்டந்தான். பின்னே கசக்குமா? ஆனா அவளை உடையாரய்யாவோட அக்கா மவன் இராஜசேகர உடையாருக்குக் கொடுக்கறதா சின்ன வயசிலேயே முடிவு பண்ணிருந்தாங்க. சின்னப் பிள்ளைங்க வரப் போற ஆபத்துப் புரியாம பளகிட்டிருந்துச்சுங்க.

ஒரு நாள் உடையாரய்யாவுக்கு விசயம் தெரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன? உங்க சினிமாக்கள்ளே வர மாதிரி வெற்றியை ஆள்வெச்சு அடிச்சாரு. அவங்க குடும்பத்தை மிரட்டினாரு. அதுக்கெல்லாம் அவன் படிஞ்சு வரலைன்னதும், அவன் வீட்டையே ஒருநாள் ராத்திரி எரிச்சுப்பிட்டாரு. தட்டிக்கேட்ட சுத்துவீட்டுக்காரங்களையும் எரிச்சுப்பிட்டாரு! அரமணையைச் சுத்தியுள்ள இடம்பூராவும் எரிஞ்சுபோச்சு!

அப்புறம் நடந்தது உங்க சினிமாக்கள்ளே வராதது! எல்லைமீறிட்ட உடையாருக்கு அம்பிகையே தண்டனை கொடுத்துட்டா! ஒருநாள் காலையில பார்த்தா, அரமணையில ஒருத்தர்கூட உசிரோட இல்லை! அம்மனுடைய சூலம் வந்து அத்தனைபேரையும் பழிவாங்கிடுச்சு! அம்பிகையோட கோபத்தில் அவ முகத்தில் வியர்வை உண்டாச்சு. அதில் அவ மஞ்சள் இளகிப் பூமியில் விளுந்தது. நெருப்பால் பட்டுப்போன பூமியில் அவளுடைய மேனி மஞ்சள் பட்டதும் இந்த மஞ்சள் பூக்காடு உருவாச்சு.

இந்த மஞ்சள் காடு, வனபத்ரகாளியுடைய ராஜ்ஜியம். தினமும் இராத்திரி அம்பாள் வேட்டைக்கு வருவா. அப்போ யாரும் வெளியே வரக் கூடாது. வந்தா, அவளுடைய சூலம் எங்கிருந்தாலும் தேடிவந்து அவங்களை அடிச்சுடும். அதேமாதிரி, அரமணையில் யாரும் தப்புப் பண்ணக் கூடாது! அப்பவும் அவ கோபத்துக்கு ஆளாக வேண்டியதுதான்!




******

முத்துவேல் பேசிக் கொண்டே போக, சுவாரசியமாகக் கதை கேட்டுக் கொண்டே நடந்தார் எழில்மாறன். இதுபோன்ற கிராமத்துக் கதைகளெல்லாம் அவருக்குப் புதிதல்ல. பல கதைகள் கேட்டிருக்கிறார்.

அரண்மனைக்கு அருகில் வந்துவிட்டார்கள்.

திடீரென்று எதிரில் நடந்துவந்த அந்தப் பெண்ணைக் கண்டதும் சற்றுத் திடுக்கிட்டுத்தான் போனார். இளம் வயது. இருபது, இருபத்திரெண்டுக்குள்தான் இருக்கும். பச்சைநிறத்தில் பட்டுப் பாவாடையும் மஞ்சள்நிறத் தாவணியும் அணிந்திருந்தாள். அவரை மிகவும் தெரிந்தவள்போல, தலையாட்டிச் சிரித்துக்கொண்டே கடந்து போய்விட்டாள்.

“யார் இந்தப் பொண்ணு?” என்று முத்துவேலைக் கேட்டார்.

“பொண்ணா? ஆருங்க பொண்ணு?” என்றான் அவன்.

“இந்தோ இப்பப் போச்சுதே.”

“நான் பார்க்கலீங்களே!” என்றான் அவரை ஏற இறங்கப் பார்த்தவாறே.

எழில்மாறன் குழம்பினார். “இப்பப் போச்சுதேப்பா! பச்சைப் பாவாடையும் மஞ்சள் தாவணியும் போட்டுக்கிட்டு…” என்று நாலாபுறமும் பார்த்தார்.

முத்துவேல் அவரை வியப்புடன் பார்த்தான். “ஐயா! நீங்க கொடுத்து வெச்சவருங்க! அது அம்பிகையாத்தான் இருக்கணும். உங்க கண்ணுக்குக் காட்சி கொடுத்திருக்கா. பாவி, என் கண்ணுக்குப் படலீங்களே!” என்றான் வருத்தத்துடன்.

எழில்மாறனை அதிர்ச்சி தாக்கியது. 

அது… அது அம்பாளா? என்ன தெய்வீகமான அழகு! என்ன சிரிப்பு!

இருந்தும் ஏனோ அந்த உருவத்தின்மீது அவருக்குப் பக்தி வரவில்லை. அம்பிகை என்று தோன்றவேயில்லை.

திடீரென்றுதான் நினைவு வந்தது.

“அமுதவல்லி. தேவதை மாதிரி அழகு. பஞ்சவர்ணக் கிளியாட்டமா அரமணை முளுக்கப் பறந்து திரிவா.”




What’s your Reaction?
+1
15
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!