Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-2

02

ஶிவஃ ஶக்த்யா யுக்தோ யதி பவதி ஶக்தஃ ப்ரபவிதும்

ன சேதேவம் தேவோ ன கலு குஶலஃ ஸ்பன்திதுமபி|

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி

ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி|| 

அம்பிகையே! அனைத்துக்கும் மூலாதாரமானவளே ஒவ்வொரு நொடியும் உன் மேற்பார்வையில் தான் கடக்கிறது.சஷ்டியப்தபூர்த்தி முடிஞ்ச கையோட எங்களை எங்கேயோ எதுக்கோ அனுப்புறதும் நீதான்.எப்போதும் காத்தருள் தாயே!

பூஜையறையில் கைகூப்பி நிற்கும் மனைவி முத்துமீனாஷியை ஆதுரத்துடன் பார்த்தார் சந்தான பாண்டியன்.

புது மஞ்சள்கயிறு கழுத்தில் மினுமினுக்க, மூக்கில் ஒளிர்ந்த ஒற்றைக்கல் வைர மூக்குத்தி தீபச் சுடரில் டாலடிக்க, அவளழகு மேலும் மெருகேறியிருந்தது. 

புதுத்தாலியில் அப்படி என்னதான் இருக்குமோ? நாணச்சிவப்பில் பத்துவருடம் இளமையாகி விடுகிறார்கள் இந்தப் பெண்கள்.

“இன்னும் என்ன வேண்டுதல் மீனா? நீ ஆசைப்பட்டபடி இரண்டாவது தடவை உன் கழுத்தில தாலி கட்டியாச்சு. முதல் பெண்டாட்டி…. தயவில பத்துநாள் நிம்மதியா யார் தொந்தரவும் இல்லாம மலை வாசஸ்தலத்துக்கு போறோமே!” என்றார்.

அப்போதைக்குப் புன்னகைத்தாலும் காரில் ஏறினபிறகும் அவள் முகம் சற்று வாடியிருந்ததை உணர்ந்து மீண்டும் தான் கூறியதை உறுதிப்படுத்தினார் சந்தானபாண்டியன்.

“நான் சொன்னது காதில் விழலையா? என் முதல் பெண்டாட்டி தயவில் இந்த ரெண்டாவது பெண்டாட்டியைக் குஷிப்படுத்தப் போறேன். அப்புறம் என்ன கவலை உனக்கு?” என்றார்.

“என் பயமே உங்க முதல் பெண்டாட்டி மேலதான்” என்றாள் மீனா.

“அதுதான் முழுசா விடறதா சொல்லிட்டேனேம்மா!”

“எங்கே? பத்து நாளும் அந்த கண்ட்ரோல் தானே!”

“அட! இங்கே பார் மீனா! நான் அஃபீஷியலா ரிடையர் ஆகியாச்சு. இது முழுசும் பர்சனல் ட்ரிப். 35 வருஷ உழைப்புக்கு மரியாதை செய்யத்தான் இந்த ட்ரிப் நமக்கு அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அதுவும் கம்பெனிக்கு சொந்தமான அரண்மனையில… நமக்கு ராஜ மரியாதையோட..”

“பார்த்தீங்களா! உங்க முதல் மனைவி பிரதாபம் இனனும் தொடருதே!”

“ஹா! ஹா! ஏனோ மீனா இந்த பொறாமை? பிருந்தாவனமும் சந்தானபாண்டியனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ?”

மெல்லிய குரலில் அவர் பாட..

“அற்புதம் சார்! இன்னும் இரண்டு பாட்டு பாடினீங்கனா கேட்டுட்டே மலையேறிடலாம்” டிரைவர் மணி ரசித்து சொல்ல..

“ஏன் மணி! இதுக்கு முன்னாடி இந்த மஞ்சள் காட்டுக்கு வந்திருக்கியா?”

மீனா கேட்டதும் மணியின் முகம் ஒருகணம் ஒளிர்ந்தது.

“வந்திருக்கேன் மேடம்!” என்றவன் சந்தான பாண்டியனை அடிக்கண்ணால் பார்க்க அவரும் லேசாகக் கண்ணசைத்தார்.

அதைப் பார்க்காத மாதிரி வெளியே வேடிக்கைப் பார்த்தவள் மனசுக்குள் சிரித்துக்கொண்டாள்.

‘எனக்குத் தெரியாமல் ஏதோ சர்ப்ரைஸ் இருக்குமோ? மேலே போறதுக்குள்ளே கண்டுபிடிக்கிறேன்.’

“மைசூர் பேலஸ் மாதிரி ரொம்ப பெரிசா இருக்குமா?” என்று கேட்டாள்.

“அதான் நேரே பார்க்கப் போறீயே!” என்றார் சந்தானபாண்டியன்.

“ஓ…சஸ்பென்ஸா?”

“அப்படியே வச்சுக்க.”

“சரி. இப்ப அங்கே யாரெல்லாம் இருக்காங்க?”

“இதோ மலையடிவாரம் வந்தாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்தில உன் கேள்விக்கெல்லாம் விடை கிடைச்சிடும்.”




பாண்டியன் காட்டிய திசையைப் பார்த்து அயர்ந்து போனாள் மீனா.

இயற்கை அழகு அத்தனையும் இறைவன் இங்கேயே கொட்டிவிட்டான் போலும். மலைப்பாதையே அத்தனை ரம்யமாக இருந்தது.

“சார்! இந்தக் கடையில் டீ அருமையா இருக்கும். குடிக்கிறீங்களா?” மணி மலைப்பாதையோரம் இருந்த நடைபாதைக் கடையருகே காரை நிறுத்த…

“மஞ்சள்காட்டுக்கா போறீங்க? அந்திவேளையில எதுக்கு? காலையில் போகலாமே!” என்றவனைப் பார்க்கப் பைத்தியக்காரனைப் போலிருந்தான். அவன் கைகளைப் பற்றியபடி நின்றிருந்த அந்தச் சிறுமி விநோதமாக தலையசைத்து “போ! போ!” என்றாள்.

கார் மெல்லிய உறுமலோடு மேலேற அந்தி சாயும் வேளையில் வளைவுப் பாதையில் நின்று நகர மறுத்தது. ரேடியேட்டர் சூடாகி புகைவர ஆரம்பித்தது.

மெல்ல மெல்ல இருள்கவிய ஆரம்பிக்க, ரம்யமான சூழல் சட்டென அமானுஷ்யமாகக் கலவரமானாள் மீனா.

“என்னங்க இது? சகுனம் சரியில்லாம காட்டுதே.”

அவள் பதற…. 

*****

அதேநேரம்.

சென்னை ஜிம்கானா கிளப்பில் டென்னிஸ் பயிற்சியை முடித்துவிட்டு ஆசுவாசமாக இருக்கையில் சாய்ந்தவன் எதிரில் போய் நின்றாள் அவள்.

“ஆதி! நீ என்ன முடிவெடுத்திருக்க?”

“ஸ்வேதா! நான் சொன்னதில் எந்த மாற்றமுமில்லை. நேற்றே நான் சிஈஓ வா சார்ஜ் எடுத்தாச்சு”

“அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. அந்த அரண்மனை ப்ராஜெக்ட்…”

“கண்டிப்பா அதை நான் செய்வேன். அடுத்த வருஷம் ஹேலியாஸ் ரிசார்ட்ஸ் ஓபனிங்.”

சட்டென முகம் சோர்ந்தாள் அவள்.

“ப்ளீஸ் ஆதி. அதை ரீகன்சிடர் பண்ணு. என்னைத் தொந்தரவு செய்யாதேன்னு அரண்மனையிலிருந்து ஒரு உருவம் மிரட்டற மாதிரி கனவு வருது…”

“ரிலாக்ஸ் ஸ்வே! கனவுக்கெல்லாம் யாராவது பயப்படுவாங்களா? அமெரிக்காவில் படிச்சவ நீ! டோன்ட் பி ஸில்லி!”

“புரியாம பேசற ஆதி. ப்ராய்ட் தத்துவமெல்லாம் எனக்கும் தெரியும். இந்தக் கனவு தினம்தினம் வருது. ஒதுங்கிப் போகச் சொல்லுன்னு ஆங்காரமா கத்துது.”

“பார்! அதை என்கிட்ட அது சொல்ல வேண்டியது தானே! பயந்தாங்கொள்ளியைப் பயமுறுத்தற டம்மி பீஸுக்கு எதுக்கு இத்தனை பில்டப்?”

இனிப் பேசிப் பயனில்லை. எதைச் சொன்னாலும் ஆதி நம்பப் போவதில்லை.

அவள் முகம் வாடுவதைக் காணச் சகிக்காமல் அருகே வந்தவன் “பேபி! டோன்ட் வொர்ரி! மனத்தெளிவில்லாதவங்க தான் தானும் குழம்பி அடுத்தவங்களையும் குழப்பிடுவாங்க. நான் போற பாதை சரியானது. அந்த அரண்மனையில எந்த அமானுஷ்யமும் இல்லை. அந்த இடத்தைச் சமூக விரோதிகள் பயன்படுத்திக்கிறதுக்காக ஆவி பேய்னு கதை கட்டி விடறாங்க. இங்கே உள்ள இன்எஃபிஷியன்ட் ஃபெலோஸ் அந்த டிராமாவை நம்பிட்டாங்க. நீயும் அதையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆழ்மனசில ஸ்டோர் பண்ணி வச்சிருக்க… அதான் இந்த கனவு பீதி எல்லாம்.”

“ஆனா பத்து வருஷமா அந்த பிராப்பர்ட்டி அப்படியே கிடக்கு ஆதி!”

“யூஸ்லெஸ் ஃபெலோஸ்! போனவாரம் நான் அங்கே ஸ்டே பண்ணி அதை கெஸ்ட்ஹவுஸா ரெடி பண்ணியிருக்கேன். அங்கே தங்கி ரிஸார்ட்டை மங்களகரமா ஆரம்பிக்க சந்தான பாண்டியன் ஃபேமிலியை அனுப்பியிருக்கேன். ஸோ நோ ஃபியர் டியர்!”

அவளைச் சமாதானப்படுத்திவிட்டு நகர்ந்தான் ஆதித்யா.

ஆதித்யா?

கிரீன் ஹோம்ஸ் அண்ட் பிராப்பர்ட்டீஸீன் சிஈஓ. நாட்டின் நம்பர் ஒன் பி-ஸ்கூலில் எம்பிஏ முடித்து ஜெர்மனியில் மேல்படிப்பும் அமெரிக்கக் கம்பெனியில் வேலையும் பார்த்தவன்.

நகரின் பெயர்பெற்ற அடுக்ககங்கள் அத்தனையும் கிரீன் ஹோம்ஸ் கட்டியதாக இருந்தது ஒரு காலத்தில். சமீப காலமாக அதில் கொஞ்சம் சறுக்கல். அதன் நிறுவனர் சுரேந்தர் என்னென்னவோ முட்டி மோதியும் முன்னேற்றமேதுமில்லை. அதற்குக் காரணமென்னவோ யூத்ஃபுல் ஐடியாஸ் இல்லாததுதான் என்று ஆதித்யாவும், பாரிவள்ளல் பரம்பரை எனப் பீற்றும் மோகனராஜனிடம் அரண்மனையை வாங்கியதுதான் என்று அவர் மனைவி காயத்ரிவும் உறுதியாக நம்பினார்கள்.

ஒரு காரசாரமான விவாதத்தில் நிறுவனத்தை ஆறே மாதத்தில் தூக்கி நிறுத்துவதாக ஆதி சவால் விட… கம்பெனியின் சிஈஓவாக நியமிக்கப்பட்டான்.

அவன் பதவியேற்றதும் முதலில் கையிலெடுத்தது மஞ்சள்காடு பிராஜெக்ட். அதைச் சீர்செய்து ஹேலியஸ் ஹாலிடே ரிசார்ட்ஸ் கட்டுவதற்கான முதல்கட்ட முஸ்தீபுகள் ஆரம்பமாகிவிட்டன. டூ ஃபாஸ்ட், டூ வெல் என்பதே அவனது தாரக மந்திரம்.

அத்தை காயத்ரிவும் காதல் மனைவி ஸ்வேதாவும் அரண்மனை குறித்தான அபிப்ராய பேதங்களால் தடுமாறுவது அவனுடைய வேகத்தை மட்டுப்படுத்துகிறது.

எஸ்.பி என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் சந்தான பாண்டியன் ஃபேமிலியை ரிசார்ட்டில் தங்க வைப்பதுகூட  ஆதியின் வியாபார தந்திரங்களில் ஒன்று தான். அவர் மனைவி முத்துமீனாஷி நல்லவிதமாக சொன்னால் அததையும் ஸ்வேதாவும் நிம்மதியாவார்கள் அல்லவா? அதற்காகத்தான் ஒரு டீமை நிறுவி அவர்களைக் கவனிக்க வைத்திருக்கிறான்.

ஆனால் விதி வேறுவிதமாக நினைத்திருக்கிறதே!

அப்போது அவனுக்கு வந்த ஒரு ஃபோன்கால் அவனை நிலைகுலைய வைத்தது.

*****

“பத்ரி சார் உங்களுக்கு ஃபோன்!”

பாளையங்கோட்டை சிறையில் யாருக்கும் தெரியாமல் வார்டன் தன் ஃபோனை சிறைக்கைதி பத்ரியிடம் நீட்டினார்.

பத்ரி!!

இந்தப் பேரைக் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும்.

தனக்குச் சரி எனப் பட்டதை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செய்பவன். முரடன் மட்டுமல்ல மூர்க்கனும் கூட. ஆள் கடத்தல், கொள்ளை, அடிதடி என அவன் தொட்டுப் பார்க்காத துறையே கிடையாது. தடயம் இல்லாமல் கொலைகூடச் செய்பவன்.

எத்தனை வழக்கு போட்டாலும் அதை ஒன்றுமில்லாமலாக்கி வெளியே வருபவன். இம்முறை ஒரு அரசியல்வாதி மகளைக் கடத்த..

வெளியில் சொல்ல முடியாமல் ஏழெட்டு கேஸ் போட்டு ஏழு வருடம் வெளியில் வர முடியாதபடி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

ஆனால் பணமும் அதிகாரமும் பாதாளம் வரை பாயுமே.




இதோ! சிறையில் கூட எந்தச் சௌகர்யமும் குறையாமல் உல்லாச வாழ்க்கை. உபயம் – பணத்தாசை பிடித்த ஜெயிலர்களும் ஊழல் அரசியல்வாதிகளும்…

இப்போது கூட ஒரு பிரபல அரசியல்வாதியின் அல்லக்கையிடமிருந்துதான் ஃபோன். புதிதாக ஒரு அசைண்ட்மென்ட்…

வெளிநாட்டிலிருக்கும் ஒரு பெண்ணைக் கடத்தி இங்கே கொண்டு வர வேண்டுமாம்.

“யோவ்! வார்டன். அண்ணன்கிட்ட பேசியாச்சு. நான் இங்கேயிருந்து தப்பிக்கணும். ஏற்பாடு பண்ணு”

“சரிதான். இப்ப முன்ன மாதிரியில்லை பத்ரி. ஏஸி ரொம்ப ஸ்ரிக்ட். நீ தப்பிச்சாலும் கண்டுபிடிச்சு லாடம் கட்டிடுவார்.”

“உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறப்ப அவரால எதையும்…. முடியாதுடி. நான் சொல்றதைச் செய்… தப்பிச்சப்புறம் என்னை எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. நான் போற இடம் அப்படி.”

எப்படியாவது தப்பிச்சு  போயிடணும். போன தடவை ஜஸ்ட் மிஸ்…

அவன் பக்காவாகத் திட்டம் போட ஆரம்பித்தான்.

சிறையிலிருந்து தப்பிக்கும் வழி அது போகும் பாதை என வரைபடத்தில் குறிக்க…

பத்தடித் தூரத்தில் ஒரு பாதை தனியே பிரிந்து ஒரு மலையை நோக்கி வளைந்தது. அதிகப் போக்குவரத்தில்லாத அந்த மலைதான் டார்கெட்… அங்கு போய் கொஞ்சநாள் இருந்தால் அங்கிருந்து வெளிநாடு தான்..

வாரமொருமுறை காய்கறி மளிகை கொண்டுவரும் வேனை கரெக்ட் பண்ணனும்.

அவன் ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினான்.

*****

அதே நேரம் டைரக்டர் எழில்மாறன் எக்ஸ்ட்ராஸ் ஏற்பாடு செய்யும் கஜாவிடம் பத்து பேரை மறுநாள் சாங் காட்சிக்கு அனுப்பக் கேட்டிருந்தது என்னவாயிற்று எனக் கத்திக் கொண்டிருந்தார்.

“பத்து பேர் வந்திட்டாங்க சார்.”

“இங்கே வரலையே!”

“அடிவாரம் வரை பஸ்ல வந்திட்டாங்க. மலைக்கு எப்படி வர்றது?”

“இருய்யா… ஆடி கார் அனுப்புறேன். ஆளைப்பாரு. ஏதாவது வேனில் ஏத்திவிடுவியா?”

எழில்மாறன் டென்ஷனாக…

“சாயந்திர நேரமா இருக்கு. நாளை காலையில் ஏதாவது காய்கறி வேனில் ஏத்தி அனுப்புறேன் சார்.”

கஜா வேகமாக வந்துகொண்டிருந்த அந்த வேனைக் கைகாட்டி நிறுத்தினான்.




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!