Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-6

6

காரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தவன் மனதில் பல்வேறு குழப்பங்கள். எப்படி அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும்.? அம்மா அனாவஸ்யமாய் வெளியில் போகிறவரும் இல்லையே. சேகரனுக்கு பெண்கள் அவசியமின்றி வெளியே போய்வருவதென்பது பிடிக்காத விஷயம்.

வீட்டை நிர்வகிப்பதும் கணவனை பார்த்துக் கொண்டு அவன் முகம் கோணாமல் இருந்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலே போதும். என்ற அழுத்தமான எண்ணம் கொண்டவர்.

வித்யாவதியை மணந்து கொண்டதுமே கணவனின் குணம் லேசுபாசாய் புரிய…. அதை மிகமிக அழுத்தமாகவே தன் பேச்சினாலும் நடத்தையினாலும் மனைவிக்கு புரிய வைத்தார். 

மனைவியை சகமனுஷி என்றே நடத்தியதில்லை இதுவரை. அதற்கு அவரை குற்றம் சொல்வதற்குமில்லை. அவர் வளர்ந்த விதம் அப்படி.

அதிலும் அவர் வித்யாவதி மணமுடித்த சூழலும் நெருக்கடியும் அவருடைய ஈகோவுக்கு பெருத்த அடி.

சும்மாவே ஆடுவார் சலங்கையையும் கட்டிவிட்டால் ஆட்டத்துக்கு கேட்கவா வேண்டும். 

தான் என்ற அகங்காரமும் ஆண் என்ற மமதையும் அதிகமாகவே கொண்டவர். 

அஸ்வின் பிறந்ததுமே பெருமை .தோளில் தலை நிற்கவில்லை. ஆனாலும் அவருடைய நடத்தையில் எந்த மாற்முமில்லை. மனைவி என்ற அடிமையின் வேலை தானே இது என்பது போல் நடந்து கொண்டார். என்னவோ தானே மகனை படைத்து தனக்காகவே உலகத்திற்கு கொண்டு வந்துவிட்டாற் போன்றதொரு நினைப்பிலிருந்தார் 

அஸ்வின் வளரவளர அப்பாவின் குணாதிசயங்களை வெறுத்தான். தாயிடம் நெருக்கம் அதிகம். தாயினுடைய நிலைமை அவன் படிப்புக்காக வெளியே வந்தபோது இன்னமும் நன்றாகவே புரிந்தது. 

ஆனாலும் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைக் கைதிதான் அவன்.

வெளியுலகம் நிறைய மாற்றங்களை அவனுக்கு போதித்தது. 

அதிலும் தந்தையை மீறி இதழியலும் மாஸ் கம்யூனிகேஷனும் படிக்க ஆரம்பித்தபோதும் ….. சரி! மீடியாவுக்குள் நுழைந்த போதும் சரி…

தாயின் மறைமுக ஆதரவில்தான் தெளியவே செய்தான்.

அவனுடைய வேலை சேகரனுக்குப் பிடிக்கவேயில்லை. கேவலமான வேலை மரியாதையில்லாத வேலை என்று தடுக்கப் பார்த்தும் அவனோ பிடிவாதத்தில் சேகரனுக்கு சளைத்தவன் நானில்லை என்று காட்டினான்.

வண்டியோட்டியபடியே எத்தனையோ முறை அழைத்து விட்டான் அம்மாவின் நிலைமை அறிய. சேகரன் பொருட்படுத்தவேயில்லை. அத்தனை கால்களையும் ஒலிக்கவிட்டுப் புறந்தள்ளினார்.

நேராய் மருத்துவமனைக்குள்தான் நுழைந்தான் அஸ்வின்.

கட்டிலில் தலையில் முத்துப்போல வெள்ளை பேண்டேஜ் துணி கிரிடத்துடன் கண்மூடிக் கிடந்தவளைப் பார்க்கவே மனம் தவித்துப் போனது.

“ம்மா”

கண் மலர்த்தினாள் வித்யாவதி. ஆறடிக்கும் குறையாமல் ரோமானியச்சிற்பம் போல கட்டுமஸ்தான உடலோடு சிகை கலைந்தாலும் கம்பீரம் குலையாமல் நிற்பவனை கண்ணில் ஏந்தி மனப் பெட்டகத்தில் சேமித்துக் கொண்டார்.

‘என் பிள்ளை! நான் பெற்ற மகன்’கண்ணில் கர்வம் பாசத்தோடு வழிந்தது.




“அச்சுப்பா..! “

“என்னம்மா இது ..எப்படி அடி பட்டுச்சு”

“ஒன்னுமில்லே அச்சுப்பா. இடிச்சுக்கிட்டேன்”

“இதை நம்பச் சொல்றீங்களா உண்மையை சொல்லுங்கம்மா “

” சாப்பிட்டியா அச்சு “

“ப்ச்! என்னாச்சு “

“ஒண்ணுமில்லேடா இடிச்சுக்கிட்டேன்”

“அப்பு.. எப்ப வந்தே “

அப்பத்தா நின்றிருந்தார். கையில் கூடையுடன்

“என்னாச்சி அப்பத்தா”

“அட! புருசன் பொஞ்சாதி விசயங்கண்ணு . விடு.விடு. புருசன் குணமறிஞ்சு நடக்க இன்னும் ஒங்கம்மாக்குத் தெரியலையே. நீக்குபோக்காத்தான் போகனும். அவந்தான் முசக்குட்டிக்கு மூணு காலுன்று நிப்பானே! ஏதுக்கு மல்லு கட்டணும் இப்படி இடி வாங்கணும்”

“அப்போ அப்பா அடிச்சிட்டாரா”

“இல்லே அப்பு! அப்படியாப்பட்ட கிராதகனா ஒங்கப்பன். கோவத்துலே தள்ளுனான் இவ விழுந்துட்டா நெத்தியிலே மேஸை இடிச்சுட்டு ரத்தமா கொட்டுனதும் அரக்கபரக்கன்னு தூக்கியாந்து சேர்த்தான் சேகரன்.”

“என்னம்மா இதெல்லாம்”

“எல்லாம் ஒன் கண்ணால விசயந்தான். ஒங்கப்பன் பக்கத்தூர்லே ஒரு பொண்ணைப் பாத்து ஒனக்குப் பேசிப்புட்டான். இவ நடுவாப்பிலே விழுந்து அந்தப் பொண்ணை கட்டக்கூடாதுன்றா. கேட்பானா ஒங்கப்பன்.? இன்னிக்கு ஒங்கம்மாவும் சரிக்கு சரியா நின்னா.  எம்பையனை கேட்காம எப்பிடி சம்மதம் சொல்லப் போச்சுன்னு. அவன் தாண்டவமாட இவ உடுக்கையடிக்க கோவத்துலே இழுத்துத் தள்ளி இதோ படுத்துக்கிட்டா”

அம்மாவின் கையை பிடித்து தன் கைக்குள்ளே பொதிந்து கொண்டான்.

“அந்தப் பொண்ணு எட்டாங்கிளாஸ் கூட தாண்டலைப்பா.. நீயோ மீடியாவுல இருக்கே. ஒரு இது வேண்டாமா அச்சுப்பா. கல்யாணங்கிறது மனசு ஒத்துப்போக வேணாமா இப்படி பொண்ணைக்கூட கண்ணுல காணாம எம்பையனுக்கு கட்ட வேண்டிய அவசரம் என்ன?”

“நான் பார்த்துக்க மாட்டேனாம்மா”

“அப்படியில்லே. ஊரைக்கூட்டி பந்தல்லே வச்சு உன்னை நெருக்கினா என்ன செய்வே நீயி?  பேசி முடிச்சாச்சுன்னதும் பயமாயிட்டுது அச்சுப்பா. எம்பிள்ளை வாழ்க்கையை காப்பாத்தறதுதான் முக்கியம்ன்னு பட்டுது அதா எதுத்து நின்னேன்.”

கொத்திச் செல்லவரும் வல்லூறுவிடமிருந்து குஞ்சைக் காப்பாற்றும் தாய்க்கோழியின் சீறல் தெரிந்தது வித்யாவதியின் பெருமூச்சில். 

தலையை கோதிக் கொண்டான் அஸ்வின்.அப்பாவின் மூர்க்ககுணம் தெரியும் தான். 

நிரல்யா பனிச்சாரலாய் மனதுள் மலர்ந்து நின்றாள்.

மெசேஜ் பார்த்ததுமே அவளிடம் கூட சரியாகச் சொல்லிக் கொள்ளவில்லை “அர்ஜெண்ட் சொந்த ஊருக்குப் போறேன் “என்று செய்தியை அனுப்பியதோடு சரி. அம்மாவின் கவலையே பந்தாடியது அவனை. அவன் நினைத்தாற் போலத்தான் ஏறக்குறைய நடந்து முடிந்து விட்டுள்ளது  .அம்மாவை நினைத்து கவலை ஒன்று மின்னல் ரேகையாய் உள்ளே ஓடியது. 

அவனுக்கு நினைவு தெரிந்து எந்த சுகமும் காணாதவள். வீடு வாசல் கோயில் இதுதவிர அவளுக்கு வெளியே ஒரு உலகமிருக்கிறது என்றாவது உணர்ந்திருக்கிறாளா என்று தெரியாது. அவளின் இறுக்கமான உணர்வுகளைத் துடைத்து விட்டாற் போலிருக்கும்  முகம் இளகி புன்னகைக் கீற்றைச் சிந்துவது அவனிடம்தான். 

அச்சுப்பா என்ற அழைப்பில் உயிரையே குழைத்திருப்பாள். 

தாயைத் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் தானும் நிருவும் வாழ்வதைக் கண்டு அம்மா சந்தோஷிக்க வேண்டும்.  வாழ்க்கையின் சுவாரஸ்யமான சுகங்களை சுவைகளை காட்டிவிட லேண்டும் என்று கொள்ளை ஆசை அவனுக்கு.

ஆனால்…

நினைப்பதெல்லாம் நடந்து விடுமா? அவன் காதலுக்கு அம்மா பச்சைக் கொடி காட்டுவாளா? நேசத்தைப் பிடுங்கி நெருப்பில் போடுவாளா…

நாளை நடப்பது யாருக்குத் தெரியும்? 

மறுநாள் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வர

அப்பா ஆரம்பித்தார். 

“வற்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் அடுத்துவரும் முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணம் என்று “

அவரை முறைத்து விட்டு அவன் உள்ளே போக அவரோ அலட்டிக் கொள்ளாமல் நின்றார். 




சேகரனைப் பொறுத்தவரை குடும்பத்துக்கு ஏற்ற பெண். படிப்பு எட்டாங்கிளாஸ்தான். என்ன குறைந்து போய்விடும் வீட்டைப் பார்த்துகிட்டு புருஷனை பார்த்துக்கிட்டு,புள்ளைகளை பெத்துப்போட்டு அதுகளை மேய்க்க இந்தப் படிப்பு போதாதா? மகன் மீடியா மீடியா என்று சுற்றி காதல், கண்றாவி என்று குடும்பத்துக்கு ஆகாவழியாய் எவளையாவது இழுத்து வந்து விட்டால் என்னாவது?

அதிலும் இவர் பார்த்த பெண்ணுக்கு என்ன குறை?.  கோயில் சிலைமாதிரி  கொஞ்சம் கறுப்புதான். நாகரிகமாய் பேசத் தெரியாதுதான். என்ன குடி முழுகிப் போச்சு. 

ஆம்பளை சம்பாதிக்கணும் பொம்பளை வீட்டைப்பாத்துக்கிடணும். அதிலும் ஒரே பொண்ணு பிக்கல் பிடுங்கல் இல்லை. தோட்டம் துரவு காணி,, களத்துமேடுன்னு எல்லாத்துக்கும் ஏகபோக வாரிசு. பத்து பிள்ளை பெத்துப் போட்டாலும் உக்கார்ந்தே திங்கலாம். இதைவிட என்ன வேணும். 

நாயா பேயா அலைஞ்சாலும் இந்தமாதிரி ஐசுவரியம் வருமா? கனவுலேதான் கிடைக்குமா?

இதுமாதிரி பொண்ணுகதான் புருசனுக்கும் அடங்கி நடக்கும். கடைசி காலத்துலே மாமா மாமின்னு கஞ்சி ஊத்தி மரியாதையா அன்பா பார்த்துக்கிடும்.  இவனுக்கு என்ன தெரியும்.? இதெல்லாம். …

இவன் ஆத்தாவுக்கே தெரியலை எகிறிக்கிட்டு வரா? என்னா தைரியம்? இத்தினி வருசம் புள்ளைப்பூச்சியாட்டமா இருந்துட்டு எதித்து பேசுறா?  உடம்பு சரியாகட்டும். பேசின வாயை உடைச்சி தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்.

பொட்டச்சி மேலே கையை வைக்கக்கூடாதுன்னு பார்த்தா என்னா திமிரு பேச்சு பேசறா?

மகனை காப்பாத்தறாளாமா? எம்மவனுக்கு எது நல்லதுன்னு பெத்த அப்பனுக்கு தெரியாதா.? பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியுது.? கூமுட்டைச்சிறுக்கி. விராலு மீனு கணக்கா துள்ளுறா. சேகரன் கிட்டேயேவா? ஒட்ட நறுக்கிடமாட்டேன் ‘மீசையை முறுக்கி விட்டுக் கொண்டார்.

அஸ்வின் அப்பத்தாவிடமே நைச்சியமாய் பேசி பெண்ணின் விவரங்களை கறந்து கொண்டான். நேரிலேயே போய் இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா போகுது. யோசித்தவனுக்கு அதே சிறப்பானதாகத் தோன்ற புறப்பட்டு விட்டான். 

அஸ்வினின் கார் அந்த புளியமரத்தினோரம் மூச்சு விட்டு நின்றது 

“பருத்தியூர் வரவேற்கிறது என்ற போர்டு களத்துப்பக்கம் காட்டியது. களத்து மேட்டுக்குள் நுழைந்து போகணுமா …

யோசனையூடே காரை விட்டிறங்கி சாலையின் இருபுறமும் பார்க்க தூரத்தே டூவீலர் ஒன்று வருவது தெரிந்தது.   நெருங்கியதும் அதனை நிறுத்துவதற்கு கைகாட்டினான் அஸ்வின். 

டூவீலரில் வந்தவனிடம் விவரம் கேட்க அவன் சொன்னவைகளைக் கேட்டு அதிர்ச்சியில் சிலையாய் சமைந்தான் அந்த சானல் ரிப்போர்ட்டர். 




What’s your Reaction?
+1
6
+1
14
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!