ithu oru kathal mayakkam Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-4

4

” நாம ஒண்ணு நெனைக்க தெய்வம் ஒண்ணு நெனைக்கும்னு சும்மாவா சொன்னாக “

” அதச் சொல்லு புள்ள இப்படி நடக்குமின்னு கனாவாது கண்டிருப்போமா ? “

 ” நம்ம கனாவை வுடுக்கா. அந்த புள்ள சுகந்தி கண்ட கனா என்னவாறது ? பாவம் வயசுப்புள்ள “

கேட்டுக் கொண்டிருந்த தாரிகாவினுள் திக்கென்றது.  இவர்கள் அந்த அத்தை மக ரத்தினத்தையா பேசுகிறார்கள் ? அவள் என்ன கனவு கண்டாளாம் ? எதேச்சையாக காதில் விழுந்த பேச்சின் மீது இப்போது முழு கவனத்தையும் வைத்தாள் .

” ம் …நம்ம சங்கரியம்மாவும்  பாவந்தேன்.  புகுந்த வீடு சரியில்லன்ன இங்கன அண்ணன் கிட்டக்க வந்து சேர்ந்துடலாம்னு பாத்தாக. இப்போ ஒண்ணியும் பண்ண முடியாம  அந்தாக்க கிடந்து முழிச்சிக்கிட்டிருக்காக “

” நம்ம முத்தாலம்மன்தான் அவுகளுக்கு ஒரு வழி காட்டோனும் “

வீட்டின் பின்புறம் கல் உரலில் ஏதோ தானியத்தை போட்டு இரு பெண்கள் ஆளுக்கு ஒரு உலக்கையை கையில் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி இடித்துக் கொண்டிருந்தனர். லயம் தவறாத அவர்களது இடித்தல் லாவகத்தை சன்னல் வழியாக பார்த்து ஆச்சரியப்பட்ட தாரிகா , அவர்களை அருகே போய் பார்க்கும் ஆவலுடன் போனாள். தங்களுக்கு பின்னால் வந்து நின்றவளை கவனிக்காமல் இரு பெண்களும் அன்று ஊருக்குள் நடந்த அதிசய நிகழ்வை பேசியபடி இருந்தனர் .

தாரிகாவிற்கு இப்போது ஒன்று புரிந்தது . ஊர் மக்களுக்கோ ,  குடும்பத்து ஆட்களுக்கோ இந்த திடீர் திருமணம் அவ்வளவு பிடித்தமானதாக இல்லை. ஆனாலும் ஊர் பெரியவரையும் , சின்னவரையும் மீற அவர்கள் தயாராக இல்லை .இதில் இந்த மயில்வாகனன் வேறு காதல் திருமணம் என்று பரப்பி வைத்திருக்கிறான். வந்த சுவடு காட்டாது மீண்டும் வீட்டிற்குள் வந்தாள் .

அவளுக்கென சுட்டப்பட்ட சோபாவில் இரண்டு மணி நேரங்களாக அமர்ந்தபடி இருக்கிறாள். வீட்டு ஆட்கள் எல்லோரும் அவரவர் வேலையென கலைந்து விட்டனர் . இந்த வீட்டில் தனக்கென ஒரு அறை ஒதுக்கி தருவார்களா என்ற சந்தேகம் அவளுக்கு வந்திருந்தது. அப்படி தனி அறை இல்லாமல் தன்னால் இருக்க முடியாதே …அவளுள் ஒரு தவிப்பு வந்திருந்தது .இடையை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த கனத்த பட்டு சேலையை முதலில் அவள் மாற்றவேண்டும் …

” என் ரூம் எங்கே இருக்கிறது ? ”  பின்வாசல் வழியாக ஓரமாக இருந்த அறைக்குள்  முதுகில் ஏதோ மூட்டைகளை சுமந்து வந்து இறக்கிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த மயில்வாகனனிடம் போய் கேட்டாள் .

சடாரென திரும்பி இவளை பார்த்தவனின் கண்களில் கோபம் இருந்தது . இதற்கு ஏன் கோபம் …தாரிகா விழித்தாள் .

” பாதையில் நிற்காமல் ஒதுங்கி நில்லு ”  அவள் தோள் பற்றி தன் பக்கம் வேகமாக  இழுத்தான். அந்த இழுவையும் , அவனது முறைப்பும் தாரிகாவினுள் கோபம் கொடுக்க …இப்போது ஏன் தொடுகிறான் ?  தோளுதறி அவனது தொடுதலை விலக்கி தன்னிருப்பிலேயே நிற்க பாதங்களை தரையில் அழுத்த, மயில்வாகனன் சட்டென தன் வலதுகாலை  லேசாக நகர்த்தி அவள் பாதங்களுக்குள் கொடுத்து , அவள் வலுவை தளர்த்தி இழுத்தான்..




 தாரிகா பொத்தென அவன் மேல் மோதி தோளில் சரிந்தாள் .  வெளித் தெரியாமல் இரண்டு நொடிகளுக்குள் இவையனைத்தும் நடந்து விட , தன் தோள் சரிந்தவளை ஒரு கையால் அரவணைத்தபடி ” ம் …இப்போது போ மணி ” என்றான் யாரிடமோ .

அவனது அடாத செயலில் ஆத்திரமுற்று அவன் தோள்களை பிறாண்ட தன் விரல் நகங்களை கூர் பார்த்துக் கொண்டிருந்த தாரிகா இந்த விளிப்பில் அதிர்ந்து திரும்பிப் பார்க்க , ஓரக்கண்ணால் பரவசம் பொங்க இவர்களை பார்த்தபடி முதுகில் பாரம் சுமந்து கடந்து போனவன் மணி …சற்று முன் வாசலில் நின்று விசிலடித்தவன் .

” பாரம் சுமந்துட்டு நிற்கிறவனை மறிச்சிட்டு இப்படியா பாதையில் நிற்பாய் ?” கேட்டவனின் திருகிய மீசை நுனி மிகக்  கூர்மையாக இருந்தது . தொட்டால்  கத்தி போல் குத்துமோ …யோசனையுடன் பார்த்தபடி இருந்தவளுக்கு அந்த சந்தேகம் வந்தது.  அதெப்படி மீசை நுனி கூட இப்படி துல்லியமாக தெரிகிறது …குனிந்து தன்னை பார்த்தவள் அவன் உடலோடு உராய்ந்து நின்ற தன் கோலத்தில் அலறி விலகினாள். இதுதான் அந்த மணி அப்படி பார்த்து போனானா …? கூச்சம் பிடுங்கியது அவளை .

” எதற்கு என்னை அப்படி இழுத்தீர்கள் ? ”  கப்பென அவள் வாயை தன் அகன்ற கரத்தால் அழுத்தியவன் ” மெல்ல பேசு ” உறுமினான் .

எவ்வளவு திமிர் …மேலும் எகிற நினைத்தவளின் உச்சந்தலை மேல் தன் கை வைத்து அழுத்தினான் .பூமியினுள் புதைந்து விடுவோமோ என்ற பயம் வந்தது தாரிகாவிற்கு .

” வேலையாட்கள் ,  ஊரார்கள் முன்னால் படு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் .மீண்டும் நினைவுறுத்துகிறேன். நாம் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் விரும்பி காதலித்து திருமணம் செய்திருக்கிறோம் “

அடப்பாவி எந்தக் காதலன்டா இப்படி காதல் செய்வான் …தாரிகாவிற்கு கழுத்து வலிக்க ஆரம்பித்தது .விட்டு விடேன் என்பதாக விழியில் கெஞ்சலோடு அவனை பார்க்க , தலை மேலிருந்த அவன் கை சட்டென நகர்ந்து அவள் கழுத்தை இதமாக வருடி ஒரு விரைவோடு அவளை தன்புறம் இழுத்துக் கொண்டது .

” டேய் இங்கே என்னடா வேடிக்கை …?போய் அடுத்த மூட்டையை கொண்டு வாங்கடா ” இப்போது அறைக்குள்ளிருந்து மணியோடு இன்னும் ஒருவன் வாசல் தாண்டும் போது இவர்களை வேடிக்கை பார்த்தபடி  மெல்ல நகர , இவர்களுக்காகத்தான் அந்த வருடலா …? அவர்கள் அப்பக்கம் போய் விட ,  கொஞ்சம் தைரியமாகவே தன் தோள் சுற்றியிருந்த அவனது கையை உதறி வேகமாக நடந்தாள்.

” உனக்கு ரூம் வேண்டாமா ? ” மெல்ல கேட்ட அவன் குரலில் வேகமாக திரும்பி பார்க்க , அவள்  உருவை மேலிருந்து கீழ் பார்வையால் வருடி ஒற்றை விரலால் அவள் சேலையை சுட்டி ” மாற்றவில்லை ? ” என்றான் .

உடன் கசகசப்பு  தோன்றிவிட்ட தன் உடலை சமாதானப்படுத்த ,  வேணும் …வேணுமென வேக வேகமாக தலையசைத்தாள் .

” அதோ அந்தப் படியேறி வலதுபுறம் திரும்பி மூன்றாவது அறை …”  மாடிப்படியைக் காட்டி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு துள்ளலுடன் படியேறிவிட்டாள் தாரிகா. அங்கேயே நிற்க …நிற்க எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பான் , அலட்சியமாக உதடு சுளித்தபடி தனது தனிமை சுதந்திரத்தை அனுபவிக்க வேகமாக அவன் சொன்ன அறைக் கதவை திறந்து போனாள் .




உள்ளே நுழைந்த்துமே அந்த அறையில் அந்த வாசத்தை உணர்ந்தாள். ஆண் வாசனை. ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த ஆணின் சட்டைகளும் , வேட்டிகளும் , துண்டும் அது ஒரு ஆணின் அறை என்பதை தெள்ளென சொல்ல ,  தாரிகாவிற்கு கோபம் வந்தது . யார் அறை இது …?  ஏதாவது ஒரு அறையை காட்டிவிடுவானா …? அவனிடமே சுடச்சுட கேட்கும் வேகத்தில் திரும்பினாள். அவளது இலக்கின் நாயகனே உள்ளே வந்து கொண்டிருந்தான் .

அவனை முறைத்தபடி நின்றவளின் விழிகள் திடுமென பயத்தில் தடுமாறின. மயில்வாகனன்  அறைக்குள் உரிமையோடு நுழைந்ததோடு கதவையும் மூடிக் கொண்டிருந்தான் .

” எ …என்ன செய்கிறீர்கள்.? ” தாரிகா மிரட்சியாய் கேட்டாள் .

 ” கதவை மூடிக் கொண்டிருக்கிறேன் ” அசராமல் பதில் சொன்னான் அவன் .

 ” எதற்கு …? இப்போது …ஏன் …? பட்டப்பகலில் இதென்ன அநியாயம் …?  முதலில் நீங்கள் ஏன் ரூமிற்குள் வந்தீர்கள் …? ” தாரிகாவின் இத்தனை கேள்விகளும் உச்சப்பட்ச அலறலில் இருந்தன .

மயில்வாகனன் அவளருகே வேகமாக வந்து அவள் இரண்டு இதழ்களையும் சேர்த்து அழுத்தி பிடித்தான். “எத்தனை தடவை சொன்னாலும் சத்தத்தை குறைக்கவே மாட்டாயா நீ?”

விழிகளை அகற்றி அவனை பயமாய் பார்த்தாள் .அந்தப் பய பார்வையில் அவனது விரல்களின் வலு குறைந்தது .” கையை எடுக்க போகிறேன்.  சத்தம் குறைத்து சாதாரணமாக பேச வேண்டும் ” எச்சரித்து விட்டு உதடுகளை விடுவித்தான் .

” ம் …இப்போது ஒவ்வொன்றாக கேள் “

என்ன கேட்பது …முதலில் கேட்ட கேள்விகள் எதுவுமே நினைவில் வராமல்  முதலில் விழித்து பின் ஞாபகம் கோர்த்து , ” ஏன் ரூமிற்குள் வந்தீர்கள் ? ” என்றாள் .

இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு அவளை உற்று பார்த்தபடி ” இது என் ரூம் ” தகவல் தந்தான் அவன்.

தாரிகாவினுள்  மலைப்பாறை உருளல்கள் .” உங்க ரூமை எதற்காக எனக்கு காட்டுனீங்க ? “

 ” இங்கேயெல்லாம் புருசன் பொண்டாட்டிக்கு தனித்தனி ரூம் தரமாட்டாங்க.” அழுத்தமான அவனது பேச்சு அவளுள் திக்கிட்டது .

” உங்களோடு சேர்ந்து ஒரே ரூமிலா நானும் தங்கனும் ? ” மீண்டும் தன் சந்தேகம் தீர்த்துக் கொள்ள முயன்றாள் .

” அதென்ன பட்டப்பகல் அநியாயம் ? ”  அவளது முதல் சந்தேகம் தீர்க்காமல் அடுத்த கேள்விக்கு தாவியிருந்தான் அவன் .

 ” அ ….அது ..வ..வந்து …ப..பகலில் …வ…வந்து …”  தாரிகாவிற்கு வேர்த்து கொட்ட தன் தோளில் கிடந்த துண்டை நீட்டினான் .




” துடைத்துக் கொள் “

” வேண்டாம் ”  முகம் சுளித்து தலையசைத்தாள் .இவ்வளவு நேரமாக அதே துண்டை தன் முகம் துடைக்க அவன் பயன்படுத்தியதை பார்த்திருந்தாள். அதிலேயே நானுமா….?

” புருசன் பொண்டாட்டிக்கு நடுவில் உனது எனதென்ற கவனம் அவசியமற்றது …” அவனது அறிவுறுத்தல் தோளில் கிடந்த துண்டிற்கா …?  நின்று கொண்டிருக்கும் அறைக்கா …? அல்லது …மேலே யோசிக்க தாரிகாவிற்கு பயமாக இருந்தது. என் அறை எனப் பேசியதற்குத்தான் அப்போது அப்படி முறைத்தானா …?

” பட்டப்பகலிலும், நட்ட நடு இரவிலும் இனி இதுதான் நமது அறை ”  அறையை சுற்றி ஒற்றை விரலாட்டி விட்டு அறை வாசலுக்கு நடந்தான் .

”  இந்த அறைக்கு வெளியே நின்று கொண்டு என் அறை என் ஊர் என் வீடு போன்ற பேச்சுக்களை தவிர்த்து விடு .பிறகு பட்டப்பகலிலும்  இப்படி கதவை பூட்ட வேண்டியது வரும் “

சொல்லியபடி அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே போய்விட்டான். இவனது பேச்சில் எந்த உள்ளர்த்தமும் இருக்கிறதா …மண்டையை உடைத்து யோசித்தபடி அறைக்கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தவள் முகம் குன்றினாள் .

வெளியே நடை வராண்டாவில் நின்று இங்கேயே  பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரேஸ்வரி . இவளை பார்த்ததும் …

 ”  இருட்டும் வரை கூட பொறுக்க முடியாமல்    பட்டப்பகலில் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் …சீச்சி …” முகத்தை சுளித்தபடி காறி உமிழாத குறையாக போனாள் .

தாரிகா உடல் கூசி  நின்றாள் .அன்று இரவு அலங்காரம் சுமந்து நின்ற அதே அறை அவளுக்கு ஆவேசத்தை தந்தது.




What’s your Reaction?
+1
16
+1
21
+1
1
+1
1
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!