Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-15

15

“காலையில் பதினோரு மணிக்கு எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது. நீ இந்த பைல்ஸை முருகேசன் ஆடிட்டரிடம் கொண்டு போய் கொடுத்து விடு” ஆதித்யன் நீட்டிய பைல்களை ஆச்சரியமாக பார்த்தாள். 

“கொடுப்பதற்கு முன்னால்   கணக்குகளை சரி பார்த்து விட்டு கொடு” என்ற விட்டு தந்தையிடம் திரும்பியவன் “நாம் மீட்டிங்கை கவனிக்கலாம் அப்பா. இந்த வேலையை மகிதா செய்யட்டும்” என்றான்.

“இவள் எல்லாமே தப்பும் தவறுமாக அல்லவா செய்வாள்?” சத்யேந்திரன் கேட்க மகிதாவிற்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. 

“அப்படி எத்தனை கணக்குகளை உங்களுக்கு தப்பு தப்பாக எழுதி தந்தேன்?” 

“சற்குணம் சாரிடம் கேட்டால் தெரிந்து விட்டு போகிறது” அலட்டாமல் பதில் சொன்னார்.

“என்னைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவையில்லை. இவ்வளவு சொன்ன பிறகு இந்த வேலையை நான் தான் பார்க்க போகிறேன். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” பைல்களுடன் உள்ளே போனவள் நின்று திரும்பி,” சம்பளம் ஒழுங்காக கொடுத்து விட வேண்டும்” என்றுவிட்டு போய்விட்டாள்.




 

சத்யேந்திரன் மகனை முறைத்தார்” உன்னை யார் அவளிடம் கொடுக்கச் சொன்னது?”

“இல்லைப்பா நமக்கு வேலை இருந்ததால்… நான் வேண்டுமானால் திரும்பவும் பைல்களை வாங்கி விடட்டுமா?”

“வேண்டாம் என்னால் முடியாது என்று அவளையே  திருப்பிக் கொண்டு வந்து கொடுக்க வைக்கிறேன்” வஞ்சகமாய் பேசியவரை கொஞ்சம் பயத்துடனேயே பார்த்தான் ஆதித்யன்.

சத்யேந்திரன் இப்படித்தான்… அவர் நினைத்தது நடக்க வேண்டும். இதே பிடிவாதத்தில்தான் வேண்டாம் என்ற மகிதாவை திருமணம் முடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். காதல் திருமணம் தான் உயர்ந்தது என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு மறுத்து புரிய வைக்கும் வேகம் அப்போது.

ஆனால் கணவனும் மனைவியும் பிரிந்து விட்ட பிறகும் மகிதா “நான் அன்றே சொன்னேனே இந்த திருமணம் சரி வராதென்று…” அவர் முகத்திற்கு நேராக கேட்டபோது குன்றியவர் இப்போது பதிலுக்கு பதில் கொடுக்க நினைக்கிறார்.

கணக்குகளை ஒருமுறை சரிபார்த்து விட்டு ஆதித்யன் சொன்ன ஆடிட்டர் முருகேசுவிடம் கொடுப்பதற்காக கிளம்பினாள் மகிதா. ஆசையுடன் ஆக்டிவாவை வருடி பார்த்துவிட்டு ஸ்டார்ட் செய்ய வேகமாக வாசல் புற ஜன்னலில் திவ்யாவின் தலை தெரிந்தது. இவள் வண்டியை எடுப்பதை அவள் குரோதத்துடன் பார்த்தபடி இருந்தாள். மகிதாவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது.

 யோசனையுடனே ஆடிட்டரின் அலுவலகத்தை நெருங்கியவள் அலுவலக வாசலிலேயே நின்றிருந்த ஆதித்யனை கேள்வியாக பார்த்தாள் .அவள் ஸ்கூட்டியை ஓட்டிக் கண்டு வருவதை தூரத்திலிருந்து ரசித்துப் பார்த்திருந்தவன் “அப்படியே உனக்கு பெர்பெக்ட்டாக பொருந்தி போகிறது மகி” என்றான்.

கணவனின் மகிழ்ச்சியை தலையசைத்து ஏற்றுக் கொண்டவள் “திவ்யா வருத்தமாக இருந்தாள்” என்றாள்.

“சீக்கிரமே சரி செய்து விடலாம் .உள்ளே வா” என்றவன் ஆடிட்டர் அலுவலகத்தில் இவளை அறிமுகப்படுத்தினான்.”என் மனைவி சார் .கொஞ்ச நாட்கள் உங்களிடம் ட்ரெய்னிங் எடுக்கட்டும் .பிறகு தனியாக அவளுக்கு அலுவலகம் போட்டுக் கொடுக்க நினைத்திருக்கிறேன்”

“அட உங்களுக்கு இருக்கும் தொழிலுக்கு மேடம் தனியாக வேலை பார்க்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது சார்?”

“எனது தொழில் என்னுடையது.என் மனைவிக்கு என்று தனி அடையாளம் வேண்டாமா?. அவள் படித்த படிப்பை வீணாக்க கூடாதில்லையா ?ஆறு மாசம் நீங்கள் ட்ரைனிங் கொடுங்கள்”

 மகிதா நெகிழ்வாக கணவனை பார்த்தாள். வீட்டிற்குள் அடைத்து வைக்கப் பார்க்கிறான் என்று தவறாக நினைத்து விட்டோமே வருந்தினாள்.

“ட்ரைனிங் என்றால் நான் சற்குணம் சாரிடமே எடுத்துக் கொள்வேனே” 

“அவர் ஆபீஸ் நம் வீட்டில் இருந்து கொஞ்சம் தூரம். அத்தோடு அங்கே அந்த ரவீந்தர் இருக்கிறான். அவன் முகத்தைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை”

“அவனுக்காக பயந்து அங்கே போக வேண்டாம் என்கிறீர்களா? அவன் பிள்ளை பூச்சி. ஒரு தட்டு தட்டினால் சுருண்டு போய் ஓரமாக விழுவான்” 

“சொன்னேனே தூரம் என்று… மற்றபடி அவன் விஷயம் நமக்கு வேண்டாம். அவனும் நம் பக்கம் தலையிட மாட்டான் என்று நினைக்கிறேன்”

“அந்த அளவு மிரட்டி வைத்திருக்கிறீர்கள்?”

“அவனைப் பார்த்தாலே அன்று உன்னை காபி சாப்பிட கூப்பிட்ட போது, வரமாட்டாள் என்று உனக்காக அவன் பேசினானே, அது தான் நினைவிற்கு வருகிறது. அன்றே அவன் கழுத்தை நெரிக்க வேண்டும் போல் இருந்தது. இப்போது…”

அவன் சொன்ன விதத்தில் வந்த சிரிப்பை அடக்க பாடுபட்டாள் மகிதா.ரவீந்தர் அவளுக்கு ஒரு பொருட்டில்லை என்பது ஆதித்யனுக்கு நன்றாகவே தெரியும்.ஆனாலும் இது பொசசிவ்னஸ்!?;

இந்த வகை ஆபத்தற்ற இயல்பான அதிகார உரிமைகளை ஒவ்வொரு பெண்ணும் தன்னுடையவனிடம் இருந்து எதிர்பார்க்கவே செய்கிறாள் மனதிற்குள் ரசிக்கவும் செய்கிறாள்.

ரோஜா மொட்டாக மலர்ந்து விட்ட இதழ்களுடன் “கிளம்பட்டுமா ?”என்றாள்.

” இன்னொரு வேலை இருக்கிறது. வா” ஆதித்யன் பைக்கில் முன்னால் செல்ல அவனை ஸ்கூட்டரில் தொடர்ந்தாள். ஆதித்யன் கூட்டி சென்ற இடம் ஒரு நகைக்கடை.

“எனக்கு வேண்டாம் ” மறுத்தவளை “நிச்சயம் உனக்கில்லை” என்றான்.

” இப்போதுதான் ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருக்கிறேன். இன்னமும் நகையும் உனக்கே என்றால்…சாரிம்மா, அந்த அளவு என்னிடம் பணம் இல்லை “கிண்டலாகச் சொன்னவனை செல்லமாக முறைத்தாள்.

“திவ்யாவிற்கு?” கேட்டவளுக்கு தலையசைத்தான்.

” அவளுக்கே தான்.பாவம் அவள் கல்யாணத்திற்கு கூட நாம் எதுவும் செய்யவில்லை. இப்போது பிறந்தநாள் பரிசாக நகை வாங்கி தரலாம்”




இருவருமாக உள்ளே சென்று 12 பவுனில் ஆரமும் நெக்லஸும் தேர்ந்தெடுத்தனர்.

“சார் இரண்டு நாட்களாக லட்சக்கணக்கில் பணத்தை தூக்கி எறிகிறாரே !எங்கிருந்து வருகிறது?”

“தொழிலில் எனக்கே எனக்கென்று கிடைத்த பணம்” பெருமிதமாக சொன்னான்.

“அதெப்படி உங்களுக்கு மட்டுமாக?”

“நம் கடைக்கு உரிய மரங்களை கேரளாவிலிருந்து தான் மொத்தமாக வாங்குவது. அங்கே ஒரு நண்பன் மூலமாக பழைய கால அரண்மனை ஒன்றின் பர்னிச்சர்களை ஏலம் விடுவதாக அறிந்தேன். அதனை ஏலம் எடுக்கலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். அப்பாவிற்கு அதில் அவ்வளவாக விருப்பமில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தவே அதில் லாபம் வருமென்று எனக்கு தோன்றவில்லை. நீ விரும்புவதால் அதற்குரிய செலவுகளை நீயாகவே செய்து ஏலம் எடுத்துப்பார். வருகிற லாபத்தையும் நீயே வைத்துக் கொள் என்று அந்த  தொழிலிலிருந்து விலகிக் கொண்டார்.நான் எனது டிகிரி சர்டிபிகேட்டை பேங்கில் காட்டி பெர்சனல் லோன் போட்டு அந்த பர்னிச்சர்களை ஏலத்திற்கு எடுத்தேன். அவற்றை பாலிஷ் செய்து நவீன ஐடியாக்களோடு சில மாறுதல்கள் செய்து இன்ஸ்ட்டா பேஸ்புக் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் விற்பனைக்கு வைத்தேன். ஒரே மாதத்தில் எல்லாமே விற்று விட்டது. நான் வாங்கிய லோன் போக லாபமாக மட்டுமே வந்த தொகை 20 லட்சங்கள்”

உற்சாகமாக தனது தொழில் விபரங்களை பகிர்ந்து கொண்டவனை மகிழ்வாய் பார்த்திருந்தாள்.

“அப்பாவிடம் பணத்தை கொடுத்த போது நான் முன்பே சொன்னதுதான்.உன் இஷ்டம் போல் செலவு செய்து கொள் என்று விட்டார்.அதில் தான்…” என்றபடி நகை பெட்டியை காட்டினான். அவன் கைப்பற்றி குலுக்கி வாழ்த்துக்கள் சொன்னால் மகிதா.

“இப்போது தொழிலில் புது ஐடியா கிடைத்திருக்கிறது. தொழிலின் ஒரு பாகமாக இதையே செய்யலாமா? என்று அப்பாவும் நானும் யோசித்து வருகிறோம்”. அவன் பைக்கிலும் அவள் ஸ்கூட்டரிலுமாக அருகருகே பயணித்தபடி பேசிக் கொண்டே வீடு வந்தனர்.

வீட்டிற்குள் இருந்து எட்டிப் பார்த்த திவ்யா முகத்தை தூக்கிக்கொண்டு தன் அறைக்குள் போய் கதவை பட்டென்று அடித்து பூட்டி கொண்டாள்.

அன்று இரவு மகிதா திவ்யாவின் அறைக் கதவை தட்டிய போது சிறிது நேரம் கழித்து கதவை திறந்தவள் “உனக்கு கொஞ்சம் கூட டீசன்சி கிடையாதா?” என கத்தினாள்.




What’s your Reaction?
+1
65
+1
30
+1
2
+1
1
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!