Serial Stories தேர் கொண்டு வந்தவன்

தேர் கொண்டு வந்தவன் – 12

12

 

 

 

தயக்கமாக மாடி ஏறி வந்த  நர்மதாவின் விழிகள் ஆவலுடன் மாடி அறையை சுற்றி வந்தன .சற்று பெரிய அறைதான். சுற்றிலும் நிறைய ஜன்னல்கள் இருந்தன. ஓரமாக பெரிய மரக்கட்டில் கிடந்தது .சுவரை ஒட்டி ஒரு மர பீரோ .அதனருகே மர டேபிள் ஒன்று. இவை தவிர அந்த அறையில் வேறு எதுவும் இல்லை.

 

இது அவளது கணவனின் அறை. அவர்களது அறை .இந்த அறைக்குள் நுழைவதற்கு அவள் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிருந்தது .இதோ இப்போதும் மாடி ஏறிய  அவளை எதிர்பார்த்து கீழே கண்கொத்தி பாம்பாக சிலர் காத்து இருக்கின்றனர் .கணவனுடன் பேசிவிட்டு உடனே கீழே சென்று விடவேண்டும் என்று தான் நர்மதா நினைத்தாள்.உரிமையுடன் கணவனின் அறையில் தங்குவதற்கான நேரம் இன்னும் வரவில்லையென எண்ணினாள்.

 




மாதீரனும் அதனையே நினைத்தான் போலும் .” பத்தே நிமிடங்கள்தான் .உன்னிடம் சில விபரங்கள் பேசவேண்டும் .உட்கார் ”  என்றபடி கட்டிலுக்கு அடியில் இருந்து  அவளுக்கு அமரவென அவன் இழுத்துப் போட்ட அந்த ஆசனத்தை வியப்புடன் பார்த்தாள் நர்மதா.கட்டில் போன்ற அமைப்பில் இருந்த அது மிகச் சிறியதாக ஒருவர் அமரும் அளவுதான் இருந்த்து .ஆவலுடன் அதன்மேல் அமர்ந்து கொண்டு மெல்ல அந்தக் கட்டிலை வருடி பார்த்தாள்.

 

” இதனை குறுங்கட்டில் என்று சொல்வார்கள் .

இது பனை நாரால் பின்னப்பட்டு இருக்கிறது .உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

கை குழந்தைகளை படுக்க வைப்பதற்காக பயன்படுத்துவார்கள் .இந்த கட்டில் நான் சிறு குழந்தையாக இருக்கும்போது என்னை படுக்கவைத்த கட்டில் என்று அம்மா இதனை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .இப்போது நான் இதனை இதுபோல் உட்காருவதற்கு உபயோகித்துக் கொண்டிருக்கிறேன் ” 

 

மாதீரனின் விளக்கத்தில் நர்மதாவின் வயிற்றுக்குள் ஒரு குறுகுறுப்பு .அவள் கணவன் சிறு குழந்தையாக படுத்திருந்த இந்த கட்டிலில் இனி அவர்களுடைய மகன் படுப்பான் .வெளித்தெரியா நெகிழ்வுடன் தன் வயிற்றை வருடிக் கொண்டாள் அவள் .இதோ இப்போது இந்த குழந்தை விஷயத்தை இவனிடம் கூறவேண்டும்பேச வாய் திறந்த அவளுக்கு திடுமென வெட்கமும் , கூச்சமும் வந்து விட்டது .எப்படி இதனை அவனிடம் கூறுவது

 




திருமணமான நாள் முதல்  கருத்தொருமித்து இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதிகளெனில்  இந்த இனிய நிகழ்வை கணவனுடன் பகிர்ந்துகொள்வதில் மனைவிக்கு இவ்வளவு தயக்கம் இருந்திருக்காது .ஆனால் இவர்கள்தான் வித்தியாசமான தம்பதிகள் ஆயிற்றேதொண்டை வரளகுரல் திக்க தடுமாறினாள் நர்மதா.

 

” ஏதாவது சொல்ல வேண்டுமா ? ”  அவளை கூர்ந்தான் மாதீரன்.

 

இப்போது நர்மதாவினுள் அன்று அவன் திடுமென்று விடுமுறை ரத்தாகி ராணுவத்திற்கு கிளம்பியபோதுமுதல் நாள்தான் மணம் முடித்திருந்த மனைவியை திரும்பியும் பார்க்காமல் சென்றது நினைவு வந்தது .இரண்டு மாதங்களாக அவள் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த காட்சி அது.

 

” திரும்பிக்கூட பார்க்காமல் போனீர்களே ? ” உள்ளத்தின் கொதிப்பு வார்த்தைகளாய் வெளிவந்தது அவளுக்கு.

 

மாதீரன் மௌனமாய் அவளைப் பார்த்தான் .அவனுடைய மனமும் போராடிக் கொண்டுதான் இருந்தது.

 

நாநான்அன்று  காலை உன்னை சந்திரனுடன் பார்த்தேன் ” நான்கே வார்த்தைகள்தான் .அதுவும் திணறலுடன் தயக்கமாக வெளிப்பட்டவை .அந்த வார்த்தைகளுக்கு களிறொன்று ஆவேசத்துடன் தன்  தலையில் மிதித்தது போல் துடித்தாள் நர்மதா.

 

இப்படித்தான் நிறைத்திருந்தாயா நீ ? நீயேதானாநம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள்.

 

” எனக்கு திடீரென்று ராணுவத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டது .உன்னிடம் அதனை சொல்வதற்காக வீடு முழுவதும் உன்னைத் தேடி விட்டு காணாமல் ஊருக்குள் வந்தேன்.




நீங்கள் இருவரும் அவனுடைய வாழைத்தோப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தீர்கள் .என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன் ” 

 

மாதீரனின் மனக் கண்ணில் முகம் முழுவதும் சிரிப்பும் , உற்சாகமுமாக அவர்களிருவரும் பேசிக் கொண்டிருந்த அன்றைய காட்சி துளிப் பிசகாமல் இன்றும் வலம் வந்த்து.

 

எங்களை தவறாக நினைத்தீர்களா ? ” நர்மதாவின் குரல் நடுங்களாக  வெளிவந்தது.

 

மாதீரன்  நடந்துவந்து அமர்ந்திருந்தவளின் தலைமேல் தன் கையை பதித்துக் கொண்டான் .” உண்மையை சொல்ல வேண்டுமென்றால்அப்போது ஆமாம் .ஆனால் இப்போது இல்லை .உனக்கென்று நியாயங்கள் இருக்குமென்று தோன்றுகிறது ” சொல்லிவிட்டு ஆதரவு போல் அவள் உச்சந்தலையை அழுத்தினான்.

 

நர்மதா சடாரென்று அவன் கையிலிருந்து தன் தலையை தள்ளிக் கொண்டாள் . கனல் கற்றை ஒன்றை கண் வழி அவனுக்கு அனுப்பினாள் .

 

மாதீரன் பெருமூச்சுடன் தள்ளி நின்று கொண்டான் ” என்னுடைய சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது நர்மதா .நான் உனக்கு எல்லாவற்றையும் விளக்குகிறேன் ” என்றவனை கை உயர்த்தி நிறுத்தினாள்.

 

” உங்களுடைய சமாளிப்புகள் ,விளக்கங்கள் எனக்கு தேவை கிடையாது .அப்போது இருந்து இப்போது தீர்ந்துபோன உங்கள் சந்தேகத்திற்கான காரணங்கள் எனக்கு தெரியும் என்பதால் விளக்கங்கள் வேண்டாம் .ஆனால் உங்களுக்கு விளக்கங்கள் தர நான் கடமைப்பட்டிருக்கிறேன் .ஏனென்றால்  இது உங்கள் தங்கையின் வாழ்க்கை பிரச்சனை ” என்றவள் தன் பக்கத்து விளக்கங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

 




உங்களால் சந்தேகமாக பார்க்கப்பட்ட சந்திரனும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம் .என்னை விட 2 வருடங்கள் சீனியர் அவர் .இருவரும் ஒரே பாடப்பிரிவு என்பதனால் எனக்கான நோட்ஸ்களை அவர்தான் தொடர்ந்து கொடுத்து உதவினார் .அதனால் எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்புணர்வு இருந்தது .நான் கல்லூரி இறுதி வருடத்தில் இருந்த போது சந்திரன் அவருடைய மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறிவிட்டார் .அதன் பிறகு எங்களுக்குள் எந்தத் தொடர்பும் கிடையாது .பிறகு அவரை இங்கே மாட்டுவண்டி பந்தயத்தின் போதுதான் பார்த்தேன் ” 

 

” அன்று பந்தயம் முடிந்ததும் நான் வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்கு வரும் வழியில் சந்திரனையும்சுமித்ராவையும் பார்த்தேன் .இருவரும் கொஞ்சம் மறைவாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் .நெருக்கமாக அவர்கள் நின்றிருந்த நிலை எனக்கு சந்தேகத்தை கொடுக்கசுவடு இல்லாமல் திரும்பி வராமல் அந்த சந்தேகத்தை உடனே தீர்த்துக்கொள்ள அவர்களிடமே சென்றேன் ” 

 

சொன்னபடி உன்னைப்போல் இல்லை நான் எனும் பார்வையை மாதீரன் மேல் போட்டாள் .அவன் குனிந்த தலையுடன்  கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக அவளுடைய பேச்சை கவனித்துக்கொண்டிருந்தான்.

 

” தாங்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். இரு ஊர்களுக்கும் இடையே இருந்த பகையால் எப்படி தங்கள் திருமணம் நடக்கப் போகிறதோ என்று கவலைப்பட்டனர் .தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயத்தில் தோற்றுக் கொண்டே இருக்கும் தங்கள் ஊரை அன்று எப்படியாவது ஜெயிக்க வைத்தால் கொஞ்சம் நிமிர்வாக  உங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வரலாம் என்று நினைத்து இருந்ததாக சந்திரன் சொன்னார்.” 

 




” அதனால்தான் குறுக்கு வழியிலாவது அந்த பந்தயத்தை ஜெயிக்க நினைத்திருக்கிறார் .அன்று சுமித்ரா அப்படி ஜெயிக்க நினைத்ததற்காக சந்திரனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். நான் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வீட்டிற்கு திரும்பினேன் .வீட்டிற்கு வந்ததுமே பஞ்சாயத்து கூடப் போகும் செய்தி தெரிந்தது” 

 

” இப்போது நான் பந்தயத்தில் உண்மையில் நடந்ததை உள்ளபடி சொன்னால் சந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு தண்டனை கொடுக்கப்படும் .குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாட்டு வண்டி பந்தயத்தில் அவர் காலம் வரை கலந்து கொள்ளவே கூடாது என்பது தண்டனையாமே .இந்த தண்டனை சந்திரனுக்கு கொடுக்கப்பட்டால் பிறகு இரு ஊர்களும் இணைவது என்பது நிச்சயம் இயலாததாகிவிடும். அதைத்தொடர்ந்து சுமித்ரா –  சந்திரனின் திருமணமும் கனவாக போய்விடும்.” 

 

” இவற்றையெல்லாம் நினைத்துதான் அன்று பஞ்சாயத்தில் இரு பக்கத்திற்கும் பாதகம் வராமல் யோசித்து எனது சாட்சியை சொன்னேன். ஆனால் அது இப்படி எனக்கே பாதகமாக மாறிவிடும் என்று நினைக்கவில்லை ” குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.

 

மாதீரன் மெல்ல தலையசைத்தான் . ” அன்று என்னை விட்டு அடுத்த ஒரு ஆணுக்கு சாதகமாக நீ சொன்ன சாட்சி என்னை மிகவுமே காயப்படுத்தியது .மறுநாள் கருப்பண்ணசாமி கோவிலில் வைத்து நீயும் சந்திரனும் பிரண்ட்ஸ் என்று சொன்னாய்…” 

 

” நண்பர்கள் என்று தானே சொன்னேன்  ? ” ஞாபகமூட்டுவது போல் அழுத்தமாக கேட்டாள் நர்மதா.

 




” நண்பன் என்றாலுமே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை விட்டு அவனுக்கு சாதகமாக நீ பேசும் போதுஅதுவும் ஊர் முன்னால் பேசும்போதுஇந்த இடத்தில் என் மன நிலையும் நீ யோசித்துப் பார்க்கவேண்டும் நர்மதா .சுமித்ரா – சந்திரன் விஷயம் அப்போது எனக்குத் தெரியாது .பிறகு தெரியவந்தபோது…” 

 

” எங்கள் வீட்டிற்குள் இருக்காதே .வெளியே போ என்று போனிலேயே விரட்டினீர்கள் ” 

 

சுமித்ரா – சந்திரன் திருமணத்தை அவள் யாருக்கும் தெரியாமல் நடத்தி வைத்த விஷயம் தெரிந்ததும் வீட்டினர் அனைவரும் அவள் மேல் குத்து அம்புகளாய்  பாய்ந்தனர் .முனியாண்டி தனது மகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லபோன் நர்மதா கைக்கு வந்தது.

 

” அப்பா சொல்வது உண்மையா ? ” மிக அழுத்தமாக போனில் கேட்டது மாதீரனின் குரல்

 

” ஆமாம்ஆனால் ” முதல் ஒப்புக்கொடுத்தலுக்கு பின் அவளை தொடர்ந்து பேச அவன் அனுமதிக்கவே இல்லை.ஊருக்கு கிளம்பும் போது அவள் முகத்தையும் பார்க்காமல் விடைபெறும் வார்த்தைகளையும் சொல்லாமல் கிளம்பி சென்றவன்இப்போதும்

 

” தவறு செய்துவிட்டாய் .இனி எங்கள் வீட்டில் உனக்கு இடம் கிடையாது. வெளியே போஅநீதியாய் ஒரு தீர்ப்பை போனிலேயே வழங்கினான் .நடப்பதை 

நம்பமுடியாமல் உறைந்து போய் நின்றிருந்தாள் அவள்.

 




..அது ஆரம்ப அதிர்ச்சியில் பேசியது . நான் டில்லி சென்ற சில நாட்களிலேயே சுமித்ரா வீட்டைவிட்டு வெளியேறிப் போய் சந்திரனை திருமணம் முடித்துக் கொண்டாள் என்ற செய்தி எனக்கு வருகிறது .இந்த திருமணத்தின் மூலகாரணம் நீ என்று நம் வீட்டினர் சொல்கிறார்கள் .முத்தாச்சி சித்தி போனில் கதறுகிறார்கள்.உடனடியாக ஊர் திரும்ப முடியாத நிலை எனக்கு .உன்னிடம் போனில் பேசினேன் ” 

 

முகத்தை திருப்பிக்கொண்டு அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு

 கிளம்பி போனவன் .அதன் பிறகு போனில் கூட பேசாதவன்அன்று அவளுடன் பேச விரும்புவதாக தகவல் வர வீட்டின் பின்கட்டில் இருந்தவள் ஆவல் உடனேயே கூடத்து டெலிபோனிற்கு ஓடிவந்தாள் .என்னுடைய செல்போனிற்கு வந்திருக்கலாமே என்ற மனக்குறையுடனேயே வந்தாள். விளக்கங்கள் கேட்காமல் அவளுக்கான தீர்ப்பை வழங்கினான்  அவன்.

 

மாதீரனின் பேச்சு அப்போது நர்மதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மலங்க மலங்க விழித்தாள் .இவன் என்ன சொல்கிறான்நடுங்கிய அவள் கையில் இருந்து நழுவ இருந்த போனை சடையாண்டி வாங்கிகொண்டார்.

 

அவரிடமும் இதையேதான் மாதீரன் சொல்லியிருக்கவேண்டும்.”  வேண்டாம் மாது அங்கிருந்து எந்த முடிவும் எடுக்காதே .நீ லீவு கிடைத்ததும் கிளம்பி வா .பிறகு பேசிக் கொள்ளலாம் ” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார் .இது எதுவுமே மனதில் படாமல் ஒருமாதிரி ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள் நர்மதா.

 

பிறகு ஒவ்வொருவராக மாதீரனுடன் போனில் பேசி முடித்த பிறகு அனைவரும்  அவளை பார்த்த பார்வை தூக்கில் தொங்க விடும் குற்றவாளிக்கானதாக இருந்தது. நர்மதா உள்ளே சென்று தனது பெட்டியை எடுத்துக்கொண்டு தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் யாரும் அவளை தடுக்கவில்லை.

 




இதோ இன்றுவரை அவனுடைய தங்கைக்கு வீட்டை எதிர்த்து ஊர் பகையை தாண்டி திருமணம் முடித்து வைத்த கோபம்தான் கணவனுக்கு .தான் கொடுக்கும் விளக்கத்தில் அது தெளிவாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தாள் நர்மதா .ஆனால் அதற்கும் முந்தைய அவனுடைய சந்தேகமான மனது இப்போதுதான் அவளுக்கு தெரிந்திருக்கிறது.

 

கண்ணாடி பளபளப்புடன் தன்னை நிமிர்ந்து பார்த்த நர்மதாவின் பார்வையை சந்தித்த மாதீரன் ” என் பக்க விளக்கங்களையும் கேள் நர்மதா ” என்றபடி ஆதரவானதோர் அணைப்பிற்கான எண்ணத்துடன் அவள் அருகே வர நர்மதா வேகமாக எழுந்து நின்றாள்.

 

” உங்கள் விளக்கங்கள் எனக்கு தேவையில்லை .என்னுடைய செயலுக்கான தீர்ப்பை நீங்கள் முன்பே சொல்லி விட்டீர்கள் .இப்போது இங்கே என்னை மறுபடியும் வரவைத்ததற்கான காரணம் என்னகாரணமில்லாமல் எதையும் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும் .உங்கள் தேவையை சொன்னீர்களானால் அதனை நிறைவேற்றி விட்டு நான் என் வழியில் போய்க் கொண்டே இருப்பேன்.” 

 

மாதீரன் பெருமூச்சுவிட்டான் ” இந்தக் குடும்பத்தின் மூத்த மகன் – மருமகள் எனும் நிலையில் நம்மை சிந்திப்பதை சிறிது தள்ளிவைத்துவிட்டு குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம் .அந்த வகையில் திருமணம் முடிந்த கையோடு வாழாமல் நம் வீட்டிற்கே திரும்பி இருக்கும் சுமித்ராவின் வாழ்க்கையை சரி படுத்துவதற்கான ஏற்பாடுகளில் நாம் இறங்க வேண்டும் ” 

 

” நான் தலையிட்டு முடித்து வைத்த திருமணம் .அது தோல்வியில் முடிய விடமாட்டேன் .இங்கே வரும்போதே சுமித்ராவின் வாழ்விற்கான கவலையுடன்தான் வந்திருக்கிறேன் .நிச்சயம் சந்திரனுடன் பேசி அவர்கள் இருவரையும் மீண்டும் வாழவைக்க முயற்சி செய்வேன் ” 

 

” முயற்சி செய்வோம் ” உன்னுடன் என்னையும் இணைத்துக் கொள் என்ற மாதிரி நீண்ட கையை கவனிக்காதது போல் மாடிப்படி இறங்கத் துவங்கினாள் நர்மதா

 




 

கீழே இறங்கி வந்து தன்னுடைய இடத்தில் படுத்துக்கொண்டாள் .முகம் முழுவதும் மறைத்து போர்வையை மூடியிருந்த சுமித்ரா மெல்ல போர்வையை விலக்கி பார்த்தாள்.

 

” அண்ணன் என்ன சொன்னார் ? ” ஆவல் மிதந்த அவள் கேள்விக்கு பதிலாக 

” போய் படுத்து நன்றாக தூங்கு என்று சொன்னார் ” என்று விட்டு திரும்பி படுத்து கொண்டாள் நர்மதா.

 

 

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!